என் மலர்
உலகம்
- ரஷிய போர்க்கப்பல் மீது உக்ரைன் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் அழிந்தது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
கீவ்:
உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.
மேலும் ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, உக்ரைனின் விமானப்படைத் தளபதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் 26 அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 03.47 மணிக்கு உக்ரைனிய விமானிகள் ரஷிய கடற்படையின் நோவோசெர்காஸ்க் என்ற பெரிய போர்க் கப்பலை அழித்தனர். ரஷியாவின் கடற்படை சிறியதாகி வருகிறது. விமானப்படை விமானிகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
- நான் தந்தையானதும் விடுமுறைகளை குறித்த பார்வை மாறியது என்றார் பில் கேட்ஸ்
- வேலையை கடந்து ஒரு உலகம் உள்ளது என்றார் பில் கேட்ஸ்
கணினிகளுக்கான ஆபரேடிங் சிஸ்டம் எனப்படும் "இயங்கு முறைமை" தயாரிப்பதில் முன்னணியில் உள்ள அமெரிக்க நிறுவனம், மைக்ரோசாஃப்ட் (Microsoft). இதன் நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates), உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவர்.
தனது சிறு வயது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை மனம் திறந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் பில் கேட்ஸ்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
எனது சிறு வயதில் வார இறுதி விடுமுறைகளை குறித்து எனக்கு பெரிய எண்ணம் இருந்ததில்லை. ஆனால், வயது அதிகரித்த போது அவற்றின் மகத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். குறிப்பாக, நானும் ஒரு தந்தையானதும் விடுமுறைகளை குறித்த எனது பார்வையில் மாற்றம் ஏற்பட்டது. எனது குழந்தைகளின் வளர்ச்சியை காணும் பொழுது வேலையை கடந்தும் ஒரு உலகம் உள்ளது என்பதை முழுவதுமாக உணர தொடங்கினேன். வரவிருக்கும் ஆண்டிலிருந்து விடுமுறை நாட்களை அனுபவிக்க துவங்குங்கள். வேலையை கடந்து வாழ்க்கையின் செழுமையை உணர்ந்து கொள்ள அது உதவும். அது அடுத்து வரும் காலங்களில் வரும் சவால்களை எதிர்கொள்ள மிகவும் பயனுடையதாக அமையும்.
இவ்வாறு பில் பதிவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் இன்போசிஸ்-சின் (Infosys) நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தி (Narayana Murthy) இந்திய இளைஞர்கள், வார விடுமுறைகளை குறைத்து கொண்டு ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க தயாராக வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
அவரது கருத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.
மத்திய, மாநில அரசுத்துறை அலுவலகங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை, 5 நாட்கள்(40 மணி நேரம்) மட்டுமே ஊழியர்களுக்கு வேலை நாட்கள். ஒரு சில தனியார் நிறுவனங்களில் மட்டுமே இதே நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.
பிற தனியார் நிறுவனங்களில் திங்கள் முதல் சனி வரை, 6 நாட்கள் (48 மணி நேரம்), ஊழியர்கள் பணி செய்ய வேண்டும். எனவே நாராயண மூர்த்தி தெரிவித்த "70-மணி-நேர வார வேலை நாட்கள்" என்பது வேலை-வாழ்க்கை சமநிலையை (work-life balance) நலிவடைய செய்யும் என்பதே பல உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இப்பின்னணியில், பில் கேட்ஸின் விடுமுறை செய்தியை சமூக வலைதளங்களில் ஒப்பிட்டு பயனர்கள் விமர்சிக்கின்றனர்.
- கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
- சனிக்கிழமை முதல் நேற்று வரை நடந்த இடைவிடாத துப்பாக்கி சண்டையில் பலர் உயிரிழப்பு.
மத்திய நைஜீரியா நாட்டின் பிளாட்டு (Plateau) மாநிலத்தின் போக்கோஸ் பகுதியில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இந்த இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. நூற்றுக்கணகானவர்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர்.
போக்கோஸ் பகுதியில் தொடங்கிய இந்த சண்டை பக்கத்து மாநிலமாக பார்கின்வாடி வரை பரவியது. இந்த மோதலில் முதலில் 16 பேர் மட்டுமே இறந்ததாக நேற்று முன்தினம் அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. ஆனால் சனிக்கிழமை முதல் நேற்று வரை நடந்த இடைவிடாத துப்பாக்கி சண்டையில் இதுவரை 113 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதல் காட்டு மிராண்டித்தனமானது. மிருகத்தனமானது. நியாயமற்றது என அம்மாநில கவர்னர் காலேப் முல்ட்வாஸ் தெரிவித்துள்ளார். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க அரசு நடவடிக்கை .எடுக்கும் என கவர்னரின் செய்தி தொடர்பாளர் கியாங் லரே தெரிவித்துள்ளார்.
- ஆதிக்க மனப்பான்மை உடைய இஸ்ரேல் தகுந்த தண்டனை பெறும் என ஈரான் எச்சரித்துள்ளது
- 1980களின் தொடக்கத்திலிருந்தே ஈரான்-சிரியா உறவிற்கு முசாவி பாடுபட்டவர்
கடந்த அக்டோபர் 7 அன்று, பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், 80 நாட்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பினருக்கு உதவும் நாடுகளையும், அவர்களுக்கு உதவும் அமைப்புகளையும் எதிரியாக கருதும் இஸ்ரேலிய ராணுவ படை (IDF) சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு வெளியேயும் தாக்குதலை நடத்தியது.
இது குறித்து தொலைக்காட்சியில் அறிவித்த ஈரான் அரசு, "டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் ஜெய்னபியா (Zeinabiyah) மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானிய புரட்சி படை பிரிவை (Iran's Revolutionary Guard Corps) சேர்ந்த மூத்த ஆலோசகர் சையத் ராசி முசாவி (Sayyed Razi Mousavi) கொல்லப்பட்டார். ஆதிக்க மனப்பான்மை உடைய இஸ்ரேல் நடத்திய இந்த குற்ற செயலுக்கு அந்நாடு தகுந்த தண்டனையை பெறும்" என எச்சரித்துள்ளது.
முசாவி, ஈரானுக்கும் சிரியாவிற்கும் இடையே ராணுவ உறவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர். இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் நட்பு நாடுகளை ஒன்றுபடுத்தும் "ஆக்ஸிஸ் ஆஃப் ரெஸிஸ்டன்ஸ்" (Axis of Resistance) அமைப்பில் பலரை ஒன்றுபடுத்துவதில் முக்கிய பங்காற்றியவர்.
1980களின் தொடக்கத்திலிருந்து ஈரானுக்கும் சிரியாவிற்கும் இடையே புரட்சி படையின் நடவடிக்கைகளை நிர்வகிப்பதில் நீண்ட அனுபவம் உடையவர் முசாவி என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இஸ்ரேலின் டமாஸ்கஸ் தாக்குதல் மற்றும் அதன் தொடர்ச்சியாக முசாவி கொல்லப்பட்டதன் விளைவாக இஸ்ரேல்-ஹமாஸ் போர், மேலும் சில நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக பல உலக நாடுகள் அச்சம் தெரிவித்தன.
- பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல்.
- அக்கட்சியின் பெண்கள் பிரிவு தேசிய செயலாளராக உள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் பொதுத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 266 இடங்கள் மற்றும் 4 மாகாண சட்டபேரவைக்கான 600 இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என், இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப், மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இத்தேர்தலில் முதன்முதலாக இந்து சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது பெயர் சவீரா பிரகாஷ். கைபர் பக்துன்காவின் புனர் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் (PK-25) பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரது தந்தை ஓம் பிரகாஷ் ஓய்வு பெற்ற மருத்துவர்.
சவீரா பிரகாஷ் கடந்த ஆண்டு கைபர் பக்துன்காவின் அபோதாபாத் சர்வதேச மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்தார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புனர் மாவட்ட பெண்கள் பிரிவு பொது செயலாளராக உள்ளார். பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பொது இடங்களில் ஐந்து சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சவீரா பிரகாஷ் அளித்துள்ள பேட்டியில் "தனது தந்தையின் வழியை பின்பற்றி பின் தங்கிய மக்களுக்காக பணியாற்றுவேன். பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் பாடுபடுவதற்காகவும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளேன்" தெரிவித்துள்ளார்.
- நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள்.
- போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின்போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேர் கைது.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராணுவ ஆதரவுடன் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேரை கைது செய்து பின்னர் மன்னிப்பு கிடைத்து சமீபத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.
- பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.
துருக்கியில் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி அன்று அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.
துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின.

இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியாவிலும் எதிரொலித்தது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின.
இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.
இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட அந்த இருநாடுகளுக்கும் உலக நாடுகள் அனைத்தும் உதவிக்கரம் நீட்டின. அதன்படி இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் இரு நாடுகளையும் சேர்ந்த மீட்பு குழுக்களுடன் இணைந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

இதன்பலனாக நிலநடுக்கம் ஏற்பட்ட பல நாட்களுக்கு பிறகும் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஏராளமானோர் மீட்கப்பட்டனர்.
நிலநடுக்கத்தால், சுமார் 14 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 60,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. 2023-ம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில், அதி பயங்கர சம்பவமாக துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கருதப்படுகிறது.
- விவோ மீது 62 ஆயிரம் கோடி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு பதிவாகி உள்ளது
- தூதரக வழி உதவிகள் கிடைக்க நாங்கள் துணை நிற்போம் என சீனா தெரிவித்தது
இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள் நிதி முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகாரில் அவற்றை சில ஆண்டுகளாக இந்தியா கண்காணித்து வருகிறது.
இந்தியாவில் மொபைல் போன் விற்பனையில் முன்னணியில் உள்ள பிராண்டுகளில் ஒன்று, விவோ (Vivo). இந்நிறுவனம், சீனாவை மையமாக கொண்டு இயங்குகிறது.
நேற்று முன் தினம், விவோ இந்தியாவின் அதிகாரிகளில் சீனாவை சேர்ந்த தற்காலிக தலைமை செயல் அதிகாரி ஹாங் சுகுவான் (Hong Xuquan), தலைமை நிதி அதிகாரி ஹரிந்தர் தஹியா மற்றும் ஆலோசகர் ஹேமந்த் முஞ்சால் ஆகிய மூவரை பண மோசடி தடுப்பு சட்டத்தில் (PMLA) அமலாக்க துறை கைது செய்தது.
வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் இந்தியாவிலிருந்து ரூ. 62,476 கோடி சட்டவிரோதமாக சீனாவிற்கு விவோ பரிமாற்றம் செய்ததாக கூறப்படும் இவ்வழக்கில் முன்னரே 4 பேர் கைது செய்யப்பட்டது குறிப்படத்தக்கது. இந்திய பொருளாதார இறையாண்மையை குலைக்கும் வகையில் சட்டவிரோதமாக லாபம் ஈட்டியதாக இவர்கள் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தனது நாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இந்தியாவில் தூதரக வழி பாதுகாப்பை வழங்க போவதாக சீனா தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் (Mao Ning), "நாங்கள் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம். சீன நிறுவனங்களின் சட்டபூர்வமான உரிமைகளையும் நலனையும் உறுதிப்படுத்த சீனா ஆதரவளிக்கும். ஆனால், ஒருதலை பட்சமாக சீன நிறுவனங்களின் மீது மட்டும் நடவடிக்கைகள் எடுக்கும் போக்கை இந்தியா கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என தெரிவித்தார்.
- ஏர்பஸ் அளித்த விருந்தில் 2600 ஊழியர்கள் பங்கேற்றனர்
- பல்வேறு அசைவ உணவுகளும், ஐஸ்கிரீம் வகைகளும் பரிமாறப்பட்டன
ஐரோப்பாவை மையமாக கொண்டு செயல்படும் முன்னணி விமான தயாரிப்பு பன்னாட்டு நிறுவனம், ஏர்பஸ் (Airbus). பயணிகள் போக்குவரத்து, ராணுவம் மற்றும் விண்வெளி பயன்பாட்டிற்கு விமானங்களை தயாரிக்கும் ஏர்பஸ், உலகிலேயே முன்னணி ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டிலும் கிளை உண்டு.
பிரான்ஸில் உள்ள தனது நிறுவன ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தளிக்க முடிவு செய்தது ஏர்பஸ் அட்லான்டிக். இந்த விருந்தில் சுமார் 2,600 ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்த விருந்து, மேற்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள லொய்ர்-அட்லான்டிக் (Loire-Atlantique) பிராந்தியத்தில் மாண்டார்-டி-ப்ரெடான் (Montoir-de-Bretagne) பகுதியில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் சொந்த உணவகத்தில் வழங்கப்பட்டது.
விருந்தில் பல்வேறு உயர்தர அசைவ உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகள் பரிமாறப்பட்டன.
ஆனால், உயர்தரமான உணவு வகைகள் வழங்கப்பட்ட இதில் பங்கேற்ற 24 மணி நேரத்தில் சுமார் 700 பணியாளர்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அத்துடன் அவர்களுக்கு தலைவலி, வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட உபாதைகளும் சேர்ந்து கொண்டன.
பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு குடல் அழற்சி நோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்நாட்டு சுகாதார துறைக்கு இச்சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டு, அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து ஏர்பஸ் செய்தி தொடர்பாளர், "நாங்கள் விருந்தளித்த ஒவ்வொரு உணவு வகையின் மாதிரியையும் வைத்துள்ளோம். விசாரணைக்கு சுகாதார துறையுடன் ஒத்துழைக்கிறோம். விசாரணை நிறைவடைய சில நாட்கள் ஆகலாம் என நினைக்கிறோம்" என தெரிவித்தார்.
- கடந்த 14-ந் தேதி பிரான்ஸ் நாட்டின் வெட்ரி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
- பயணிகள் அனைவரும் 3 நாட்களாக விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர்.
பாரீஸ்:
துபாயில் இருந்து மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவுக்கு 303 இந்தியப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் கடந்த 14-ந் தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டின் வெட்ரி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
இந்த விமானம் மூலம் மனித கடத்தல் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வந்ததையடுத்து பிரான்ஸ் அதிகாரிகள் இந்த விமானத்தைத் தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேசி வருவதாகவும், இந்திய பயணிகளுக்கு உரிய வசதிகள் வழங்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்தது.
மேலும், இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டது. இந்நிலையில், பயணிகளிடம் விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், பயணிகள் இன்று முதல் தங்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியானது. பயணிகள் அனைவரும் 3 நாட்களாக விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். இன்று அந்த விமானம் புறப்பட்டு சென்றது.
- சுமார் 20 வருட காலத்திற்கு பிறகு தலிபான், ஆட்சியை கைப்பற்றியது
- பெண்ணிய சிந்தனையாளர்களின் எதிர்ப்பை தலிபான் புறக்கணித்தது
ஆப்கானிஸ்தானில் 1996 முதல் தலிபான் அமைப்பினர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
ஆனால், 2001ல் அமெரிக்க ராணுவம் அவர்களை ஆட்சியிலிருந்து தூக்கியடித்ததும், அவர்கள் பலவீனமடைந்திருந்தனர்.
கடந்த 2021ல் அமெரிக்க படைகள் அந்நாட்டை விட்டு வெளியேறின. தொடர்ந்து தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
சுமார் 20 வருடகாலம் கடந்து ஆட்சியை கைப்பற்றிய தலிபான் அந்நாட்டு மக்களுக்கு; குறிப்பாக பெண்களுக்கு, பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தலிபானின் புதிய சட்டங்களின்படி பெண் குழந்தைகள் கல்வி கற்பது ஆறாம் வகுப்புடன் நிறுத்தப்படும். இதற்கு பல உலக நாடுகளும் பெண்ணிய சிந்தனையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் அவற்றை ஆப்கானிஸ்தான் புறக்கணித்தது.
இந்நிலையில், பதின் வயதுகளில் 6-ஆம் வகுப்பை முடிக்கவுள்ள பல சிறுமிகள் இத்துடன் தங்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு முடிந்து போவதை எண்ணி அழுகின்றனர்.
கடந்த வாரம், இது குறித்து ஐ.நா. சபையின் சிறப்பு தூதர் ரோசா ஒடுன்பயேவா (Roza Otunbayeva), "ஒரு தலைமுறையை சேர்ந்த பெண்களின் கல்வி கற்கும் வாய்ப்பு, ஒவ்வொரு நாள் கடக்கும் நிலையில் பறிக்கப்படுகிறது" என கவலை தெரிவித்தார்.
ஏழாம் வகுப்பிற்கு செல்வோம் என நம்பியிருந்த பல மாணவிகள் தங்கள் கல்வியே முடிவடைவதால், எதிர்காலம் குறித்த அச்சத்திலும், தாங்கள் சாதிக்க நினைத்தவற்றை இனி அடைய முடியாத துக்கத்திலும் அழுகின்றனர் என தெரிய வந்துள்ளது.
- ரஷிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் வழிகாட்டுதலால் ஜனவரி 7ல் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வந்தது
- ரஷியாவை நினைவுபடுத்தும் அனைத்தையும் உக்ரைன் அழித்து வருகிறது
கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் தாக்குதல் நடத்தி ஆக்ரமித்தது. ஆனால், இதற்கு அடிபணியாத உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.
இரு தரப்பிலும் பலத்த உயிரிழப்புகள் மற்றும் கட்டிட சேதங்கள் நிகழ்ந்துள்ளன. 665 நாட்களை கடந்து போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக உக்ரைன் முக்கிய முடிவு எடுத்துள்ளது.
உக்ரைன் மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பண்டிகை கொண்டாடுவது ரஷிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் வழிகாட்டுதலின்படியே நடந்து வந்தது. அதனால் அவர்கள் ரோமானிய கால ஜூலியன் கேலண்டரின்படி ஜனவரி 7 அன்றுதான் கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்தனர்.
ஆனால், கடந்த ஜூலை மாதம் உக்ரைன் அரசு, ரஷியாவை எதிர்க்கும் விதமாக கிரிகோரியன் கேலண்டரின்படி உலகம் முழுவதும் கொண்டாடும் டிசம்பர் 25 அன்றே கிறிஸ்துமஸ் கொண்டாட முடிவெடுத்தது.
இதன்படி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கத்தை மாற்றி முதல்முறையாக உக்ரைன் மக்கள் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.
ரஷிய ஆக்கிரமிப்பிற்கு பிறகு, ரஷியாவை நினைவுபடுத்தும் தெருப்பெயர்களை நீக்குவதையும், அந்நாட்டுடன் தொடர்புள்ள புராதன கலைச்சின்னங்களை அகற்றுவதையும் உக்ரைன் தீவிரமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.






