என் மலர்
உலகம்
- காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
- இதுவரை காசாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
காசா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். வான் வழியாக சரமாரியாக குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால் தினமும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவு உயிர் துறந்து வருகின்றனர். சாவு எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கி விட்டது.
இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள விமான நிலையங்களை பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
லாஸ்ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். கையில் பதாகைகள் ஏந்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். திடீரென இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. விமான நிலைய நுழைவு வாயிலை அவர்கள் முற்றுகையிட்டனர்.
விமான நிலையத்துக்கு செல்லும் ரோட்டில் கட்டிட குவியல்கள், மரக்கிளைகள், தடுப்புகள் போன்றவற்றை போட்டு அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனை தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரி ஒருவரை அவர்கள் தாக்கினார்கள். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் கைது செய்தனர். 45 நிமிடங்களுக்கு பிறகு விமான நிலையத்தை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த போராட்டத்தால் விமானங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. விமான பயணிகள் பத்திரமாக உள்ளனர். அவர்களை மீட்க 2 பஸ்களை பாதுகாப்பு படையினர் அனுப்பி வைத்தனர்.
இதே போல நியூயார்க்கில் உள்ள ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்திலும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் அவர்கள் கையில் பதாகையுடன் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து போலீசார் 26 பேரை கைது செய்தனர்.
- சவானா தனது காதலன் மேத்யூவுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பொருட்களை வாங்க சென்றுள்ளார்.
- காருக்குள் உடல் அழுகியநிலையில் இரண்டு சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஆண்டோனியோ நகரை சேர்ந்தவர் சவானா நிக்கோல் சோடோ (வயது 18). அதே பகுதியை சேர்ந்த இசைக்கலைஞரான மேத்யூ குரேரா (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிவீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது தனது தாயுடன் சவானா போனில் பேசி வந்துள்ளார்.
இதனிடையே சவானா கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான சவானாவுக்கு இந்த மாத இறுதியில் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் தேதி குறித்திருந்தனர்.
இந்தநிலையில் சவானா தனது காதலன் மேத்யூவுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பொருட்களை வாங்க சென்றுள்ளார். அதன்பின்பு இருவரும் வீடு திரும்பவில்லை.
பதறிபோன அவர்களுடைய பெற்றோர்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம் காதல்ஜோடியை வலை வீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான சாலையில் கார் ஒன்று சந்தேகத்தை கிளப்பும் வகையில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அந்த கார், மாயமான குரேரா பெயரில் பதிவாகி இருந்தது தெரிந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த காரை சோதித்தனர். அப்போது காருக்குள் உடல் அழுகியநிலையில் இரண்டு சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் சவானா மற்றும் அவருடைய காதலன் குரேரா என தெரிந்தது. உடல்கள் அழுகியநிலையில் இருந்ததால் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பதை போலீசாரால் உறுதியாக கூற முடியவில்லை.
உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாயமான இளம் காதல்ஜோடி இறந்தநிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
- எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷியாவில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என புதின் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐந்து நாள் சுற்றுப் பயணமாக ரஷியா சென்றுள்ளார். ரஷியா சென்ற அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்று அளிக்கப்பட்டது. பின்னர் ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறுித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். அப்போது இந்திய பிரதமர் மோடி ரஷியாவுக்கு வருமாறு புதின் அழைப்பு விடுத்தார்.
"எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷியாவில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்" என ஜெய்சங்கரிடம் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்த பிறகு ஜெய்சங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி- ரஷிய அதிபர் புதின் ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெறும் வருடாந்திர உச்சி மாநாட்டில் சந்திப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா- ரஷியா இடையிலான உறவு எல்லாவற்றிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு மோடியின் முக்கியமான உத்தரவாதம் மோடியின் கொள்கைதான். இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக மோடி எடுக்கும் கடினமான முடிவு என்னை அடிக்கடி ஆச்சர்யப்படுத்தும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் இந்திய மக்களின் நலன் ஆகியவற்றில் மோடி எடுக்கும் கடினமான முடிவு சில நேரங்களில் என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

இந்திய பிரதமர் மோடியை, நாட்டின் பாதுகாப்பு, மக்கள் நலன் ஆகிவற்றிற்கு எதிராக ஒரு முடிவை கட்டாயப்படுத்தி, மிரட்டி அல்லது வலுக்கட்டாயமாக எடுக்க வைக்க முடியும் என்று என்னால் கற்பனை செய்த கூட பார்க்க முடியவில்லை. அதுபோன்ற நெருக்கடி மோடிக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியும் என புதின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், ரஷியாவின் பெயரை குறிப்பிடாமல் ஒருமனதாக பிரகடனம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்திய பிரதமர் மோடிக்கு புதின் நன்றி தெரிவித்திருந்தார்.
- அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
- இலவசமாக பயன்பெற நினைப்பதாக தெரிவித்துள்ளது.
சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு சேவையை உருவாக்கிய ஒபன்ஏ.ஐ. மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு எதிராக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
இரு நிறுவனங்களும் தங்களின் லட்சக்கணக்கான செய்திகளை எவ்வித அனுமதியும் இன்றி பயிற்சிக்காக பயன்படுத்தி இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. தங்களது ஏ.ஐ. சாட்பாட் கொண்டு நிறுவனங்கள் நியூயார்க் டைம்ஸ்-இன் முதலீடுகளில் இருந்து இலவசமாக பயன்பெற நினைப்பதாக மேலும் தெரிவித்துள்ளது.
ஊடகத்துறையில் நியூயார்க் டைம்ஸ் செய்துள்ள முதலீடுகளை எவ்வித அனுமதியோ அல்லது கட்டணமோ செலுத்தாமல் இரு நிறுவனங்களும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பதாக நியூயார்க் டைம்ஸ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
- வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அங்கு ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாஸ்கோ:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷியாவுக்கு சென்றார். மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய மந்திரி ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார். அப்போது இருதரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாடுகளின் உறவுகள், குறிப்பாக வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாட்டு மந்திரிகளும் விவாதிக்க உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின்போது மந்திரி ஜெய்சங்கர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கும் செல்கிறார்.
#WATCH | External Affairs Minister Dr S Jaishankar meets Russian Foreign Minister Sergey Lavrov at the Russian MFA Reception House in Moscow. They will also hold bilateral talks.
— ANI (@ANI) December 27, 2023
(Source: Russian MFA) pic.twitter.com/fXUaBZCZgb
- விண்ணில் சீறிபாய்ந்து சென்ற லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
- அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன. லாங் மார்ச்-11 ராக்கெட் 20.8 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும், 58 மெட்ரிக் டன் எடையும் கொண்டது.
இது குறைந்த புவி சுற்றுப்பாதை அல்லது சூரிய-ஒத்திசைவு சுற்றுப் பாதைக்கு செயற்கைக் கோள்களை கொண்டு செல்லும் திறன் கொண்டது.
விண்ணில் சீறிபாய்ந்து சென்ற லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ராக்கெட் திசை மாறி விண்ணில் இருந்து பூமியை நோக்கி வந்தது. ராக்கெட்டின் பூஸ்டர்கள், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது. இதனால் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்புக்கு தகுதியற்றவர்.
- அவருடைய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் டிரம்ப் பெயர் இடம் பெறாது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான பாராளுமன்ற வன்முறை வழக்கில் தீர்ப்பளித்த கொலராடோ மாகாண நீதிமன்றம் அவர் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறியது. மேலும் கொலராடோ மாகாணத்தில் அவருடைய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் டிரம்ப் பெயர் இடம்பெறாது. அப்படி இடம் பெற்றிருந்தால் வாக்குகள் எண்ணப்படாது என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் டிரம்புக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகளை சுற்றி கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு விசாரணை குறித்த விளக்கத்தை அவர்கள் வெளியிடவில்லை.
- 10 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தாக்குதலை நடத்தியுள்ளனர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்.
- F-18 போர் விமானம் இந்த தடுப்பு நடவடிக்கையில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய டிரோன்கள், ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.
செங்கடல் பகுதியில் சென்ற கப்பல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். இதையடுத்து அமெரிக்க ராணுவப் படைகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு ஏவுகணை, டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

10 மணி நேர கால இடைவெளியில் 12 டிரோன்கள், மூன்று கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் இரண்டு தரைவழி தாக்குதல் ஏவுகணைகளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.
- காசாவில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
- ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போர் பல மாதங்கள் நீடிக்கலாம் என இஸ்ரேல் சொல்கிறது.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2 மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. போர் விமானங்கள் மூலம் குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை வீச்சு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் காசாவுக்குள் இஸ்ரேல் தரைப்படையும் தாக்குதல் நடத்துகிறது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், அதன்பின் தனது தாக்குதலை விரிவுபடுத்தியது. மத்திய, தெற்கு, காசாவிலும் குண்டுகள் வீசப்படுகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், அப்பாவி பொதுமக்கள் என பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. காசா முனை பகுதி முழுவதும் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதால் மக்கள் உயிர் பயத்தில் இருக்கிறார்கள்.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய காசாவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய காசா பகுதியில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகர்ப்புற அகதிகள் முகாம்களில் தரைவழி தாக்குதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, தெற்கு காசாவை தொடர்ந்து மத்திய காசாவிலும் தரைவழி தாக்குதல் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால் போர் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் ராணுவ தலைவர் ஹெர்சி ஹலேவி கூறும்போது, ஹமாஸ் மீதான போர் இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கலாம். ஹமாஸ் அமைப்பை தகர்ப்பதில் குறுக்குவழிகள் எதுவும் இல்லை. உறுதியான மற்றும் தொடர்ச்சியான சண்டைகள் மட்டுமே நடக்கின்றன. நாங்கள் ஹமாசின் தலைமையை அழிப்போம். அதற்கு சில மாதங்கள் எடுக்கலாம் என்றார்.
இந்த நிலையில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
- டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரம் அருகே பயங்கர சத்தம் கேட்டதாக தூதரக அதிகாரி தகவல்.
- டெல்லி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, கடிதம் ஒன்றை கண்டு பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே பயங்கர வெடி சத்தம் கேட்டதாக, தூதரக அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக மோப்ப நாய்களுடன் டெல்லி போலீசார், வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது காலியான நிலத்தில் கொடியுடன் சுற்றப்பட்ட கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலின் துணை தூதர் ஒஹாத் நகாஷ் கெய்னர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் "5 மணிக்குப் பிறகு சில நிமிடங்களில் தூதரகத்திற்கு அருகே வெடிச்சத்தம் கேட்டது. தூதரக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எங்களுடைய பாதுகாப்பு குழு டெல்லி போலீசாருடன் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது" எனத் தெரித்துள்ளார்.
இதற்கிடையே பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என இந்தியா செல்ல இருக்கும இஸ்ரேல் நாட்டினருக்கு அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்தியாவில் மக்கள் அதிகமாக கூடும் மால்கள், மார்க்கெட்கள் போன்ற இடங்களை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். ரெஸ்டாரன்ட், ஓட்டல், பப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டினர் என அடையாளப்படுத்தும் போன்ற அடையாளங்களை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் வெளிநாட்டு அமைச்சகம் "இஸ்ரேல் பாதுகாப்பு குழுவுடன் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளது.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 140 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
- அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.
- நாங்கள் முறையான திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளோம்.
கடந்த 2014, மார்ச் 8-ம் தேதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக காணாமல் போயிருக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 370-ஐ கண்டுபிடிக்க புது திட்டம் உள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். லண்டனில் உள்ள ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நடைபெற்ற விரிவுரையில் புதிய வகை தேடலின் மூலம் பத்து நாட்களில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என்று வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மற்றும் விமானியான பேட்ரிக் பெல்லி தெரிவித்தனர்.
"நாங்கள் முறையான திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளோம். எங்களிடம் திட்டம் உள்ளது.. இந்த பகுதி மிகவும் சிறியது, புதிய வகை வழிமுறைகளை கையாளும் போது பத்து நாட்கள் வரை ஆகலாம். ஆனால், இது விரைவில் நிறைவுபெறும் வகையில் இருக்கும். எம்.எச். 370 பாகங்கள் கண்டுபிடிக்கும் வரை, அதற்கு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது," என ஜீன்-லுக் மார்சண்ட் தெரிவித்தார்.
- 46 சதவீதம் பேர், குடும்பங்களின் நிதி நிலைமை மோசமடைந்ததாக தெரிவித்தனர்
- அனைத்தும் நன்றாக உள்ளது என ஜோ பைடன் பதிலளித்தார்
அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
அமெரிக்க பொருளாதாரத்தை தற்போதைய அதிபர் ஜோ பைடன் சரிவர கையாளாததால் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன.
இதன் காரணமாக கருத்து கணிப்புகளில் ஜோ பைடனுக்கு ஆதரவு குறைய தொடங்கியது. சுமார் 14 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே ஜோ பைடன் பொருளாதாரத்தை சரியாக கையாளுவதாக தெரிவித்தனர். மக்கள் தொகையில் சுமார் 46 சதவீத மக்கள் பைடனின் ஆட்சிமுறை அவர்கள் குடும்பங்களின் நிதி நிலைமையை மோசமடைய செய்ததாக தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வெள்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க அதிபர் புறப்பட்ட போது அவரிடம் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து கேட்கப்பட்டது.
"2024ல் நுழையவிருக்கும் அமெரிக்க பொருளாதாரம் எவ்வாறு உள்ளது?" என பைடனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பைடன், "அனைத்தும் நன்றாக உள்ளது. நீங்கள் நன்றாக பாருங்கள். செய்திகளை சரியான முறையில் வெளியிட தொடங்குங்கள்" என தெரிவித்தார்.
சில மாதங்களாகவே அதிபர் ஜோ பைடன் ஊடகங்கள் தனது நிர்வாகத்தில் உள்ள எதிர்மறை செய்திகளில் கவனம் செலுத்தி நேர்மறை செய்திகளை இருட்டடிப்பு செய்வதாக குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.






