என் மலர்tooltip icon

    உலகம்

    • 2022 ஜனவரி முதல் 4 பேரும் கண்காணிக்கப்பட்டு வந்தனர்
    • பெரிய திட்டத்திற்கு அவர்கள் தயார்படுத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது

    இஸ்ரேல் நாட்டின் மொசாட் (Mossad) உளவு துறையுடன் தொடர்பு கொண்டு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் உட்பட 4 பேருக்கு ஈரானில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    ஆள் கடத்தல், அச்சுறுத்துதல், வாகனங்கள் மற்றும் வீடுகளை எரித்தல், மொபைல் போன்களை திருடுதல் உட்பட பல குற்றங்களில் இவர்கள் இஸ்ரேலுக்காக ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஈரான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    "ஈரானுக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்ட 4 பேர்களுக்கு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2022 ஜனவரி மாதம் முதல் நால்வரும் ஈரான் உளவு துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். மே மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மிக பெரிய திட்டத்திற்காக இஸ்ரேலால் தயார் செய்யப்பட்டனர்" என ஈரான் நீதிமன்ற செய்திகளை வெளியிடும் மிசான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டனை பெற்ற நால்வர் - வஃபா ஹனாரெ, அரம் ஒமாரி, ரஹ்மான் பர்ஹாசோ மற்றும் நசிம் நமாசி (பெண்) ஆவர்.

    கடந்த பல மாதங்களாக, தங்கள் நாட்டிற்குள் சதி வேலைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதாக ஈரான் குற்றம் சாட்டி வந்ததும், அந்த குற்றச்சாட்டுக்களை இஸ்ரேல் ஒப்பு கொள்ளவோ, மறுக்கவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • தீவில் சிறிதும் பெரிதுமாக 56 தீவுகளை உள்ளடக்கி உள்ளது.
    • நிலநடுக்கம் கடலுக்கு கீழ்10 கி,மீ மற்றும் 40 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானது.

    ஜப்பான் மற்றும் ரஷியா இடையே உள்ள குரில் தீவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த தீவு ஜப்பானிய தீவான ஹொக்கைடோவின் வடக்கு பசிபிக் பெருங்கடலில் இருந்து ஓகோட்ஸ்க் கடலை பிரிக்கும் ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தின் தெற்கு முனை வரை நீண்டு உள்ளது.

    இத்தீவில் சிறிதும் பெரிதுமாக 56 தீவுகளை உள்ளடக்கி உள்ளது. இந்த நிலையில் குரில் தீவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உண்டானது. நிலநடுக்கம் கடலுக்கு கீழ்10 கி,மீ மற்றும் 40 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    • 100 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு பெற்ற முதல் பெண்மணி
    • 268 பில்லியன் டாலர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை நிர்வகித்து வருகிறார் மேயர்ஸ்

    அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் வணிக, பொருளாதார, பங்கு சந்தை ஊடகம், ப்ளூம்பர்க் (Bloomberg). இந்நிறுவனம், உலகின் முன்னணி கோடீசுவரர்களை, அவர்களின் நிகர சொத்து மதிப்பை வைத்து உருவாக்கும் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம்.

    இப்பட்டியலின்படி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஃபேஷன் ஆடை மற்றும் ஒப்பனை துறையில் முன்னணியில் உள்ள லோரியல் (L'Oreal) நிறுவனத்தின் தலைவரான, 70 வயதாகும் ஃப்ரான்காய் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் (Francoise Bettencourt Meyers), 100 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு பெற்ற முதல் பெண்மணியாக இடம் பிடித்துள்ளார்.

    மேயர்ஸ், உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ள 268 பில்லியன் டாலர் நிறுவனமான லோரியல் தலைமை பொறுப்பை அவரது இரு மகன்களுடன் நிர்வகித்து வருகிறார்.

    கிறித்துவ மக்களின் புனித நூலான பைபிள் குறித்து 5 பாகங்கள் மற்றும் கிரேக்க கடவுள் குறித்தும் புத்தகங்கள் எழுதியுள்ள மேயர்ஸ், பல மணி நேரங்கள் இடைவிடாது பியானோ வாசிக்கும் திறன் படைத்தவர்.

    2017ல் தன் தாயிடமிருந்து லோரியல் நிர்வாக பொறுப்பை ஏற்ற மேயர்ஸ், இன்று வரை திறம்பட நிர்வகித்து வருகிறார்.

    கொரோனா காலகட்டத்தில் ஒப்பனை பொருட்களுக்கான தேவை குறைந்திருந்தாலும், சில மாதங்களிலேயே விற்பனையை பல மடங்கு உயர்த்தி காட்டினார், மேயர்ஸ்.

    தற்போது உலகின் முன்னணி கோடீசுவரர்களில் 12வது இடத்தை பிடித்துள்ளார் மேயர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    சேனல், யூனிலீவர், ரெவ்லான் என இத்துறையில் பல போட்டி நிறுவனங்கள் இருந்தாலும், ஒப்பனை, சரும பாதுகாப்பு, சிகை பாதுகாப்பு, சிகை நிறம் கூட்டுதல் மற்றும் ஆண்கள் ஒப்பனை என பல கிளைகளில் விற்பனையை விஸ்தரித்து நம்பர் 1 இடத்தில் லோரியல் நிறுவனத்தை மேயர்ஸ் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    1909ல் மேயர்ஸின் தாத்தா யூகின் ஷுயல்லர் (Eugene Schueller) என்பவர், தான் கண்டுபிடித்த தலை சாயத்தை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம், லோரியல் இன்று உலகெங்கும் கொடி கட்டி பறக்கிறது.

    • கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள், இந்து கோவில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
    • இதனால் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே பகுதியில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சதீஷ் குமார். இவர் சர்ரே பகுதியில் உள்ள லட்சுமி நாராயண் கோவில் தலைவராக உள்ளார்.

    இந்தநிலையில் சதீஷ் குமாரின் மூத்த மகன் வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.

    அவர்கள் 14 ரவுண்டுகள் சுட்டனர். இதில் இந்த கோவில் நிர்வாகியின் மகன் வீடு சேதடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து தீவிரவாத விசாரணை நடந்து வருகிறது.

    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள், இந்து கோவில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    சர்ரேரில் உள்ள லட்சுமி நாராயண் கோவில் மீது மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் கோவில் நிர்வாகியின் மகன் வீடு மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதனால் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக சதீஷ் குமார் கூறும்போது, "எனது மகன் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளது. இதை காலிஸ்தான் ஆதரவாளர்கள் செய்தார்களா? அல்லது மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் செய்ததா? என்பதை என்னால் கூற முடியாது. போலீஸ் விசாரணையில் தாக்குதல் நடத்தியது யார் என்பது தெரிய வரும் என்றார்.

    • சமீபத்தில் கொலராடோ மாகாண கோர்ட்டு டொனால்டு டிரம்புக்கு தடைவிதித்தது.
    • அரசாங்கத்தின் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதலை அமெரிக்க அரசியலமைப்பு பொறுத்துக் கொள்ளாது.

    கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தூண்டியதாக டிரம்ப் மீது பல்வேறு மாகாண கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. சமீபத்தில் கொலராடோ மாகாண கோர்ட்டு அளித்த தீர்ப்பில், அந்த மாகாணத்தில் டிரம்ப், அதிபருக்கான குடியரசு கட்சி முதன்மை தேர்தலில் போட்டியிட தடைவிதித்தது.

    இந்த நிலையில் மற்றொரு மாகாணத்தில் டிரம்ப் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மைனே மாகாண செயலாளர் ஷென்னர் பெல்லோஸ் கூறும்போது, "குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் மைனே மாகாணத்தில் டிரம்ப் போட்டியிட தடைவிதிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதலை அமெரிக்க அரசியலமைப்பு பொறுத்துக் கொள்ளாது. பாராளுமன்ற வன்முறைகள், டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலும், ஆதரவுடன் நிகழ்ந்துள்ளன" என்றார்.

    • இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள 21 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு.
    • சுமார் 9 ஆயிரம் குழந்தைகள் இந்த சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர்.

    2023-ம் ஆண்டு முடிவடைந்து 2024-ம் பிறக்க இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளது. உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்க உள்ளன. நாளைமறுதினம் முதல் உலக நாடுகள் ஒவ்வொன்றாக புத்தாண்டை வரவேற்கும். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தீவுகள் புத்தாண்டை வரவேற்கும்.

    இந்தியா ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டை கொண்டாட இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் அரைமணி நேரம் கழித்து புத்தாண்டு பிறக்கும். இந்த நிலையில் பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காபந்து (caretaker) பிரதமர் அன்வாருல் ஹக் கக்கர் தடைவிதித்துள்ளார்.

     இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் "பாலஸ்தீனத்தின் துயரமான சூழ்நிலையை மனதில் வைத்து, நமது பாலஸ்தீன சகோதர, சகோதரிகளுக்கு ஒற்றுமையை காட்ட, புத்தாண்டு தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு கடுமையான தடைவிதிக்கப்படும்.

     விதிமுறை அனைத்தையும் மீறி இஸ்ரேல் படை 21 ஆயிரம் பாலஸ்தனீர்களை கொன்று குவித்துள்ளது. இதில் 9 ஆயிரம் குழந்தைகள் அடங்குவர். அப்பாவி குழந்தைகள் படுகொலை, காசா மற்றும் மேற்கு கரையில் ஆயுதமின்றியுள்ள பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களையும், முஸ்லிம் உலகத்தையும் கவலையைில் ஆழ்த்தியுள்ளது " என்றார்.

    • ஒரு வாரம் இடைக்கால போர் நிறுத்தம் காரணமாக சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
    • 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் சுமார் 23 லட்சம் பாலஸ்தீனர்கள் வசித்து வருகிறார்கள். இஸ்ரேல் தாக்குதலால் சுமார் 85 சதவீத மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி முகாமில் தங்கியுள்ளனர்.

    வடக்கு காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் தங்க இடமின்றி அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்திய போதிலும், போர் நிறுத்தப்படவில்லை.

    இந்த நிலையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பினர் எச்சரித்துள்ளனர். அதேவேளையில் காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரின் அச்சுறுத்தல் இஸ்ரேலுக்கு இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை தாக்குதல் தொடரும். இன்னும் மாதம் கணக்கில் போர் நீடிக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.

      இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    சுமார் ஒரு வாரம் போர் இடைநிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் அமைப்பினர் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவித்தனர். ஒரு பிணைக்கைதிக்கு 3 பாலஸ்தீனர்கள் என்ற அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை இஸ்ரேல் விடுதலை செய்தது.

    • உடல்நலக் குறைவு காரணமாக விஜயகாந்த் உயிரிழந்தார்.
    • இவரது உடல் அஞ்சலிக்காக தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். இவருக்கு திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலதரப்பட்டோரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், விஜயகாந்த் மறைவுக்கு இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

     


    இது தொடர்பன முகநூல் பதிவில், "உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.

    விஜயகாந்த் மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மனிதர். விஜயகாந்துடன் பல முறை ஏற்பட்ட சந்திப்பின் போது அவருடைய எண்ணங்களிலும் செயல்களின் ஊடாகவும் அவர் ஒரு போற்றப்படக் வேண்டிய தலைவர் என்பதை தான் அறிந்தேன்.

    எவருக்கும் அஞ்சாது மக்களுக்காக உடனுக்குடன் சேவையை செய்யும் அரசியல் தலைவர்.

    மேலும் இலங்கை மக்கள் மீது அதீத அன்பு கொண்ட இவர். இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்களுக்காக பல உதவிகளை செய்துள்ளார்.

    பாமர மக்களுக்கு விருந்தோம்பல் செய்வதில் ஈடு இணையற்றவர்

    இவருடைய இழப்பு தமிழக மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும்.

    நடிகர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    • 8 பேரின் குடும்பத்தினர் பிரதமர், உள்துறை அமைச்சர் தலையீட்டை கோரினர்
    • புதிய தண்டனையின் விவரம் குறித்து இரு அரசுகளும் தகவல் தெரிவிக்கவில்லை

    அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் (Qatar) அல் தஹ்ரா (Al Dahra) எனும் தனியார் நிறுவனத்தில் பணியாற்ற சென்ற இந்திய கப்பற்படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் 8 பேர் அந்நாட்டில் பணியாற்றி கொண்டே இஸ்ரேல் நாட்டிற்கு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கத்தார் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    அதிகாரிகளின் குடும்பத்தினரும், உறவினரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி கடிதங்கள் எழுதினர்.

    இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி குற்றம் சாட்டப்பட்ட 8 பேரின் குடும்பத்தினர் இந்திய அரசிடம் கண்ணீர் மல்க பலமுறை கோரிக்கை வைத்தனர். அவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பலர் இத்தீர்ப்பை கத்தார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதற்கு இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வந்தனர்.

    இம்மாத தொடக்கத்தில் கத்தாருக்கான இந்திய தூதர் சிறையில் அடைக்கப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார்.

    கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது தூதரும், அதிகாரிகளின் குடும்பத்தினரும் நேரில் அங்கு சென்றிருந்தனர்.

    இந்நிலையில் இன்று, கத்தார் நீதிமன்றம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்திருப்பதாகவும், குறைந்த தண்டனையே வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு துறை அறிவித்துள்ளது.

    புதிய தண்டனையின் விவரம் குறித்து இதுவரை இரு நாட்டு அரசாங்கங்களும் தெரிவிக்கவில்லை.

    • இங்கிலாந்தில் எல்பி ரெகார்டுகளின் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது
    • ஹெச்எம்வி (HMV) ஷோரூமில் புதிய தலைமுறையினரும் அதிகம் வாங்குகின்றனர்

    திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பிரபல பாடகர்களின் ஆல்பங்கள் 1970-80களில் எல்பி ரெகார்ட் (LP Record) எனப்படும் வட்டவடிவ கிராமபோன் தட்டுக்களில் பதிவாகி விற்கப்பட்டு வந்தது. 1990களிலும், பிறகு 2000 தசாப்த தொடக்கங்களிலும் கேசட் (cassette) வடிவிற்கு வரவேற்பு அதிகம் இருந்தது.

    அதற்கு பிந்தைய காலகட்டத்தில் இசைப்பிரியர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் கணினி மற்றும் மொபைல் போன்களில், "ஸ்ட்ரீமிங்" செய்யப்பட்ட பாடல்களை நேரடியாக பதிவிறக்கம் செய்து கேட்க முடிந்தது.

    இதனால் அனைத்து வடிவ இசைத்தட்டுக்களும் விற்பனையாவது குறைய தொடங்கி, அவற்றை தயாரிப்பதும் படிப்படியே நின்று போனது.


    இந்நிலையில், இங்கிலாந்தில் சமீப காலங்களில் எல்பி ரெகார்டுகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.

    எல்பி ரெகார்டுகளை விற்பனை செய்பவர்களின் கூட்டமைப்பு (British Phonographic Industry trade group), கடந்த வருடத்தை காட்டிலும் 11.7 சதவீதம் - சுமார் 60 லட்சம் (5.9 மில்லியன்) - எல்பி ரெகார்டுகள் விற்றிருப்பதாக தெரிவித்தது.

    அதிக விற்பனையான ரெகார்டுகளில், புகழ் பெற்ற அமெரிக்க பாடகி டேலர் ஸ்விஃப்ட்-டின் (Taylor Swift) 1989 ஆல்பம், ரோலிங் ஸ்டோன்ஸ் (Rolling Stones) குழுவினரின் ஹேக்னே டயமண்ட்ஸ் (Hackney Diamonds) ஆல்பம் ஆகியவை முன்னணியில் உள்ளன.

    இசை ரசிகர்களின் கேட்கும் முறையில், ஐந்தில் ஒரு பங்கு, கணினி மற்றும் இணையவழியில் இருந்தாலும், "எல்பி", "கேசட்", மற்றும் "சிடி" விற்பனை பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வேகம் பிடித்துள்ளது.

    சேகரித்து வைத்து கொண்டு மீண்டும் மீண்டும் கேட்கும் வசதி இருப்பதாலும், "ஸ்ட்ரீமிங்" இசையை விட மிக துல்லிய இசை வடிவத்தை கேட்க முடிவதாலும் இசைப்பிரியர்கள் இவற்றில் ஆர்வம் செலுத்துவதாக சொல்லப்படுகிறது.

    லண்டன் நகரின் ஆக்ஸ்போர்டு தெருவில், சுமார் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட ஹெச்எம்வி (HMV) ரெகார்டு ஷோ ரூம், புதிய தலைமுறையினரும் எல்பி மற்றும் கேசட்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளது.


    விற்பனையில் புது பாடல்கள் மட்டுமின்றி பழைய பாடல்களும் அதிகம் விரும்பப்படுகின்றன.

    மென்பொருள் வடிவில் இல்லாமல் எளிதில் கையாளப்பட கூடிய வடிவில் இருப்பதால் இசைப்பிரியர்கள் சிடி போன்றவற்றை அதிகம் வாங்குவது ஒரு வரவேற்கதக்க மாற்றம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த மாற்றம் பிற நாடுகளுக்கும் பரவலாம் என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • விலங்கியல் மொழியில் பைசே, அரபைப்மா கைகாஸ் என அழைக்கப்படுகிறது
    • வளர்ச்சி பெற்ற பைசே சுமார் 12 அடி நீளமும், 20 கிலோகிராம் எடையும் கொண்டவை

    பிரேசில், கொலம்பியா, பெரு மற்றும் பல தென் அமெரிக்க நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் மழைக்காடுகள், அமேசான் (Amazon). மத்திய தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா (Bolivia) நாட்டிலும் இது சுமார் 4 சதவீதம் உள்ளது.

    பொலிவியாவை ஒட்டிய அமேசான் நீர்நிலைகளில் மீன்பிடி தொழில் செய்து வந்தவர் கில்லர்மோ ஒட்டா பாரம். இவரது வலையில் முன்னெப்போதும் இல்லாத அரிய வகை மீன் சிக்கியது.

    வழக்கத்தில் பைசே (paiche) என அழைக்கப்படும் இம்மீன், விலங்கியல் மொழியில் அரபைப்மா கைகாஸ் (Arapaipma gigas) என அழைக்கப்படுகிறது.


    நன்னீர் (freshwater) மீன் வகைகளில் மிக பெரிய மீனான இது சுமார் 4 மீட்டர் (12 அடி) வரை நீளமும் 200 கிலோகிராம் நீளமும் உடையது.

    எப்பொழுதும் அதிக பசியுடன் இருக்கும் பைசே, கூட்டம் கூட்டமாக வரும் பிற சிறிய மீன் வகைகளை உண்டு விடும். பைசேவிற்கு அஞ்சி பிற மீன் வகைகள், வேறு நீர்நிலைகளை தேடி ஓடி விடுகின்றன.

    இவ்வகை மீன்கள் இருக்கும் இடங்களில் பிற வகை மீன்கள் வாழ்வது அரிதாவதால் உயிரியல் ஏற்றத்தாழ்வுக்கு இவை காரணமாவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


    பொலிவியா நீர்நிலையில் இந்த மீன் வந்த காலகட்டம் குறித்து சரிவர தகவல்கள் இல்லை. பெரு நாட்டில் உள்ள மீன் பண்ணைகளில் உற்பத்தியாகி இங்கு வந்திருக்கலாம் என தெரிகிறது.

    பைசேவிற்கு அதன் வாழ்நாளில் வருடத்திற்கு சராசரியாக 10 கிலோ வரை எடை கூடிக்கொண்டே போகும். பல சிறிய பற்களை கொண்டிருந்தாலும் அவை கூரானதாக இருக்காது. ஆனாலும், பிரன்ஹா (piranha) போன்ற ஆபத்தான மீன் வகைகளை பைசே கடித்து தின்று விடும்.

    அரிதான பைசேவின் இனம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக உயிரியல் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    அவ்வப்போது சுவாசத்திற்காக நீருக்கு மேலே தோன்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், பைசே அமைதியான நீர்நிலைகளை விரும்புகின்றன. அங்கு வரும் போது இவை பிடிபடுவது சுலபமாகிறது.


    ஆரம்பத்தில் இவ்வகை மீன் ஆபத்தானது என நினைத்து பிடிக்க அஞ்சிய மீன்பிடி தொழிலாளர்கள், இவற்றிற்கு பெருகி வரும் தேவைக்காக தேடி பிடிக்கின்றனர்.

    • காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இதுவரை காசாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    காசா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். வான் வழியாக சரமாரியாக குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால் தினமும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவு உயிர் துறந்து வருகின்றனர். சாவு எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கி விட்டது.

    இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள விமான நிலையங்களை பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    லாஸ்ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். கையில் பதாகைகள் ஏந்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். திடீரென இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. விமான நிலைய நுழைவு வாயிலை அவர்கள் முற்றுகையிட்டனர்.

    விமான நிலையத்துக்கு செல்லும் ரோட்டில் கட்டிட குவியல்கள், மரக்கிளைகள், தடுப்புகள் போன்றவற்றை போட்டு அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனை தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரி ஒருவரை அவர்கள் தாக்கினார்கள். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் கைது செய்தனர். 45 நிமிடங்களுக்கு பிறகு விமான நிலையத்தை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த போராட்டத்தால் விமானங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. விமான பயணிகள் பத்திரமாக உள்ளனர். அவர்களை மீட்க 2 பஸ்களை பாதுகாப்பு படையினர் அனுப்பி வைத்தனர்.

    இதே போல நியூயார்க்கில் உள்ள ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்திலும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் அவர்கள் கையில் பதாகையுடன் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து போலீசார் 26 பேரை கைது செய்தனர்.

    ×