என் மலர்
உலகம்
- பெத்லகேம் நகரில் "சர்ச் ஆஃப் தி நேடிவிட்டி" ஏசுநாதர் பிறந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ளது
- சுற்றுலா பயணிகள் ஓட்டல் முன்பதிவுகளை ரத்து செய்து விட்டனர்
இன்று ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25 என்பதால் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஆனால், இவ்வருடம் ஏசுநாதர் அவதரித்த தலமாக கருதப்படும் பெத்லகேம் (Bethlehem) நகரில் கொண்டாட்டங்கள் இல்லை.
கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலின் வடக்கு பகுதி மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க உறுதியெடுத்து அந்த அமைப்பினரின் மையமான காசா முனை (Gaza Strip) பகுதியில் பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் 20,424 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்த போரின் தாக்கம் பாலஸ்தீன கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலும் பிரதிபலிக்கிறது.
ஜெருசேலமிற்கு தெற்கே உள்ள நகரம் பெத்லகேம். ஆண்டுதோறும் பெத்லகேம் நகரில் உள்ள நட்சத்திர விடுதிகளிலும் ஓட்டல்களிலும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும். ஆனால், இம்முறை சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளது. தெருக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

பெத்லகேம் நகரில் வசிப்பவர்களின் வருவாய் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ளதால் அம்மக்கள் தற்போது பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஏசுநாதர் பிறந்ததாக கருதப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள "சர்ச் ஆஃப் தி நேடிவிட்டி" (Church of the Nativity), வழக்கமாக மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கும்.

ஆனால், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு குறைந்த அளவே மக்கள் வந்துள்ளனர்.
போர் தொடங்கியதிலிருந்தே பெத்லகேம் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவுகள் சுற்றுலா பயணிகளால் ரத்து செய்யப்பட்டன. அனைத்து விடுதிகளிலும் அறைகள் காலியாக உள்ளன. கிறிஸ்துமஸ் மரங்கள், சிலுவைகள், மேரி சிலைகள் உட்பட பல பொருட்கள், வாங்குவதற்கு ஆட்களின்றி கடைகளில் வைக்கப்பட்டுள்ளன.
"அமைதிக்கான தூதர்" பிறந்த ஊரில் வாழும் மக்களுக்கு இஸ்ரேல்-ஹமாஸ் போர் விரைவில் முடிந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதே பிரார்த்தனையாக உள்ளது.
- உக்ரைன் நாட்டுக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.
- ரஷியாவுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன.
மாஸ்கோ:
ரஷியா கடந்த ஆண்டு தனது அண்டை நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது போர் தொடுத்தது. அந்த போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து மிகப்பெரிய பாதிப்புகளை ரஷியா ஏற்படுத்தி உள்ளது. என்றாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து பதிலடி தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள்.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷிய படைகள் கணிசமான இடத்தை தங்கள் வசம் கைப்பற்றி வைத்துள்ளன. என்றாலும் உக்ரைனை இது வரை ரஷியாவால் பணிய வைக்க இயலவில்லை. உக்ரைன் நாட்டுக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.

இதன் காரணமாக ரஷியாவால் முழுமையாக போரை முடிக்க இயலவில்லை. இந்த நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷியாவுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன.
இதையடுத்து உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபர் புதின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதை அவர் இதுவரை அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை. மிக ரகசியமாக அவர் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.
உக்ரைனுக்கும் தனக்கும் நெருக்கமாக இருக்கும் சிலர் மூலம் போர் நிறுத்தம் செய்ய கடந்த செப்டம்பர் மாதம் புதின் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக மீண்டும் அவர் போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது.
- கடந்த ஒரு வாரத்தில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 15 பேர் பலி.
- பாலஸ்தீனத்தில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்
காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வடக்கு, தெற்கு, மத்தியப் பகுதி என காசாவின் அனைத்து பகுதியிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் சொல்கிறது.
தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக நேருக்கு நேர் தரைவழியில் சண்டையிட்டு வருவதால் ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதுவரை 154 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
கடந்த வாரத்தில் மட்டும் 15 வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. தெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உளள் மகாஜி அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக காசா சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் குறைந்தது 60-க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 15 வீரர்களை இழந்ததையடுத்து, மிகவும் அதிகப்படியான விலை என இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேற்கு கரையில் உள்ள பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகிறது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு எகிப்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், 240 பேர் பிணைக்கைதிகளை பிடித்துச் சென்றனர். தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசாவின் தெற்கு பகுதியை குறிவைத்து கண்மூடித்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியது. தற்போது காசா முழுவதும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 20,400 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
- கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது.
- கிறிஸ்துமஸ் தொடர்பாக, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.
உலகம் முழுவதும் மிகவும் ரசிக்கப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் ஒன்றாகும். இந்த நாள் மகிழ்ச்சியையும் அன்பையும் குறிக்கிறது. எந்த மதத்தைப் பின்பற்றினாலும், அனைவராலும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் அன்று, மக்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள், மேலும் அந்த நாள் மக்களின் வாழ்க்கையிலிருந்து எதிர்மறை மற்றும் இருளை அகற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் கடவுளின் மகனாகக் கருதும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இயேசு பாவிகளை இரட்சிக்க பூமிக்கு மனிதனாக வந்தார் என்று கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். இருப்பினும், "இயேசு பிறந்த நாளாக டிசம்பர் 25ஐ பைபிள் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை; மாறாக, இயேசுவின் தாயான மரியா, இறைவனிடமிருந்து ஒரு சிறப்பு குழந்தையைப் பெறுவார் என்று கூறப்பட்டது.

அன்னை மேரி இந்த தீர்க்கதரிசனத்தை மார்ச் 25 அன்று பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 25 அன்று, இயேசு பிறந்தார் என்றும் கருதப்படுகிறது. இந்த தேதிகள் பாரம்பரியமானவை; இயேசு எப்போது பிறந்தார் என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியாது.
இதைப்போல நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கிறிஸ்துமஸ் உண்மைகள்:
•"Dashing through the snow" என்பது ஜிங்கிள் பெல்ஸ் கிறிஸ்துமஸ் பாடலின் முதல் வரி அல்ல. அவரது தேவாலயத்தில் நடந்த நன்றி விழாவின் போது, ஜேம்ஸ் லார்ட் பியர்பான்ட் "One Horse Open Sleigh" என்ற தலைப்பில் ஒரு பாடலை இயற்றி அதை நிகழ்த்தினார். இன்றும் நன்கு அறியப்பட்ட கிறிஸ்துமஸ் கரோலாக இருக்கும் இந்தப் பாடல், 1857 இல் இப்போது பாடப்படும் தலைப்பின் கீழ் மீண்டும் வெளியிடப்பட்டது.

•ஜெர்மனியின் இளவரசர் ஆல்பர்ட் தனது மனைவி விக்டோரியா தி கிரேட்டுக்கு வசந்த காலத்தையும் பசுமையையும் கொண்டு வர விரும்பினார். அதற்கு அவரிடமிருந்து கிடைத்த பரிசு இந்த மரம். அப்போதுதான் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் தொடங்கியது.
•பாதிரியார் நிக்கோலஸ் அடிமைப்படுத்தப்பட்ட பெண்களை விடுவிப்பதற்காகப் போராடினார். மேலும் தனது பரம்பரை சொத்து அனைத்தையும் பின்தங்கியவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார். ஏனெனில் அந்த நேரத்தில், அவரது நடத்தை பற்றிய வார்த்தை பரவலாகப் பேசப்பட்டது. பின்னர் டச்சுக்காரர்கள் அவருக்கு "சின்டர் கிளாஸ்" என்று பெயரிட்டனர். அதிலிருந்து இப்போது பெயர் "சாண்டா கிளாஸ்" என மாற்றப்பட்டுள்ளது.

•கோகோ கோலா நிறுவனம் முதலில் சான்டாவின் படத்தை வெளியிட்டபோது, அது கொஞ்சம் பயமாக இருந்தது. எனவே, 1931 ஆம் ஆண்டில், ஒரு ஓவியரான ஹாடன் சன்ட்ப்லோம் என்பவரை பத்திரிகை விளம்பரங்களில் பயன்படுத்துவதற்காக சான்டாவின் ஓவியத்தை கோகோ கோலா நிறுவனம் உருவாக்கியது. அவர் மகிழ்ச்சியான சாண்டாவை சித்தரிக்கிறார்.
•கிறிஸ்துமஸின் போது நாம் பரிசுகளை வழங்குவதற்கான காரணம், மூன்று ஞானிகள் இயேசுவுக்கு வழங்கிய பரிசை அடையாளப்படுத்துவதாகும். கிறிஸ்துமஸின் போது பரிசு வாங்குவதை விட பரிசு கொடுப்பதே அதிகமாக பேசப்படுகிறது.

எனவே, கிறிஸ்துமஸ் நாளில் மக்கள் வாழ்த்துகள் கூறுவதை விட நன்றிகளையும் பரிசுகளையும் பகிர்ந்து கொள்வதே உண்மையான அடையாளம்.
- எக்ஸ் தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் எலான் மஸ்க்.
- பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார்.
எக்ஸ் தளத்தில் இதுபோன்று பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் எலான் மஸ்க்.
இந்நிலையில், எலான் மஸ்க், "எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எலான் மஸ்க் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:-
எக்ஸ் செயலி மூலம் பிறருக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
இறுதி ஒப்புதல் வந்த பிறகு அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கார் ரேஸ்களை மையமாக கொண்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் வின் டீசல்
- தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் என்னை பணிநீககம் செய்தனர் என்றார் அஸ்டா
கார் பந்தயங்களை மையக்கருவாக வைத்து 2001ல் வெளியான ஹாலிவுட் திரைப்படம், தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ் (The Fast and the Furious). இத்திரைப்படம் உலகெங்கும் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் பல பாகங்கள் தொடர்ந்து வெளிவந்தன.
இத்திரைப்படத்தில் இணை கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றவர், வின் டீசல் (Vin Diesel). இவர் ஒன் ரேஸ் புரொடக்ஷன்ஸ் (One Race Productions) எனும் பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
வின்னின் அலுவலகத்தில் பணி புரிந்தவர் அஸ்டா ஜொனாஸ்ஸன் (Asta Jonasson) எனும் பெண்.
வின் டீசல் மீது அஸ்டா பாலியல் குற்றம் சாட்டி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது புகாரில் அஸ்டா தெரிவித்திருப்பதாவது:
ஒன் ரேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் போது, அட்லான்டா மாநிலத்தில் ஒரு நட்சத்திர ஓட்டல் அறையில் வின் டீசல் என்னிடம் முறையற்று நடக்க முயன்றார். நான் மறுத்து சம்மதம் தெரிவிக்காத போதிலும் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். அங்குள்ள ஒரு குளியலறையை நோக்கி நான் பயந்து, அலறி கொண்டே ஓடினேன். ஆனால் வின் டீசல் என்னை விடாமல் பலவந்தமாக பாலியல் ரீதியாக தாக்கினார். அது மட்டுமில்லாமல் என் முன்னிலையில் ஆபாசமாக நடந்து கொண்டார். தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் என்னை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
9 நாட்களே வேலையில் இருந்த ஒரு பணியாளர் 13 வருடங்களுக்கு முன் நடந்ததாக கூறும் இந்த புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என வின் டீசல் தெரிவிப்பதாக அவரது வழக்கறிஞர் ப்ரையன் ஃப்ரீட்மேன் தெரிவித்துள்ளார்.
- போர் 635 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது
- உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக யெகேத்ரினா தெரிவித்துள்ளார்
கடந்த 2022 பிப்ரவரி மாதம், தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ரஷியா ஆக்ரமித்தது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன், ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. அமைதிக்கான முயற்சிகளை பல உலக நாடுகள் முன்னெடுத்தாலும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அவற்றை ஏற்கவில்லை.
இரு தரப்பிலும் பலத்த கட்டிட சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டாலும், போர் 635 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
போரினால் ரஷியாவில் உயிரிழப்பு மட்டுமல்லாது உள்நாட்டு பொருளாதாரமும் நலிவடைந்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
போருக்கு காரணமான புதினுக்கு எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகிறது.
போருக்கு பிறகு ரஷியாவில் நடைபெறும் முதல் தேர்தலாக அடுத்த வருடம் மார்ச் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
போருக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்களில் "யெகேத்ரினா டன்ட்ஸோவா" (Yekaterina Duntsova) எனும் பெண் சுயேட்சை அரசியல்வாதியும் ஒருவர். இவர் முன்னாள் தொலைக்காட்சி ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் புதினுக்கு எதிராக போட்டியிட யெகேத்ரினா வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், ரஷிய தேர்தல் ஆணையம் அவரது மனுவில் நூற்றுக்கும் மேற்பட்ட தவறுகள் உள்ளதாக காரணம் காட்டி மனுவை நிராகரித்தது. அந்நாட்டு தேர்தல் சட்டப்படி, ஆதரவாளர்களின் கையெழுத்தை பெற வேண்டிய அடுத்த கட்டத்திற்கு யெகேத்ரினா செல்வதை தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை மூலம் முடக்கியுள்ளது.
இந்த முடிவை எதிர்த்து ரஷிய உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக யெகேத்ரினா தெரிவித்துள்ளார்.
தன்னை எதிர்ப்பவர்களை திட்டமிட்டு முடக்கும் புதினின் செயல்களுக்கு தேர்தல் ஆணையமும் துணை போவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- 20 இந்திய பணியாளர்களுடன் சென்ற இஸ்ரேலுக்குச் சொந்தமான வணிக கப்பலை திடீரென டிரோன் தாக்கியது.
- இந்த டிரோன் ஈரானில் இருந்து ஏவப்பட்டது என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.
வாஷிங்டன்:
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் மங்களூரு நோக்கி லைபீரியா நாட்டு கொடியுடன் எம்.வி. செம் புளூட்டோ என்ற சரக்கு கப்பல் வந்து கொண்டிருந்தது. இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய இந்திய பெருங்கடல் பகுதியில் குஜராத் வெராவத் நகரில் இருந்து சுமார் 200 மைல் தூரத்தில் வந்து கொண்டிருந்த போது அந்தக் கப்பல் மீது திடீரென டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் கப்பலில் தீப்பற்றியது. உடனடியாக அந்த தீ அணைக்கப்பட்டது. இதில் கப்பலின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. டிரோன் தாக்குதலின் போது கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்துக் கொண்டதாக தகவல் வெளியானது. பின்னர் தான் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது.
அந்த சரக்கு கப்பலில் 21 இந்திய பணியாளர்கள் மற்றும் ஒரு நேபாளி ஆகியோர் இருந்தனர்.அரபிக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நடந்த இந்த தாக்குதல் இந்தியாவை குறிவைத்து நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், ஏமனில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த டிரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காசா விவகாரத்தில் ஈரான் அளித்து வரும் ஆதரவினால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி வரும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பாட்டில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று ஈரான் கூறி வந்தாலும் கள நிலவரம் இதுவாகவே உள்ளது. இந்திய பணியாளர்களுடன் வந்த சரக்கு எண்ணெய் கப்பலை தாக்கிய டிரோன் ஈரானில் இருந்து தான் ஏவப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
செங்கடலுக்கு அப்பால் வணிக கப்பல் போக்குவரத்துக்கு விரிவடைவதை விரும்பாமல் ஈரான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருந்து வருகிறார்கள்.
செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கிச் செல்லும் கப்பல்களை தாக்குவோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து தொடர்ந்து நடுக்கடலில் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அந்தக் கடற்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல்மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்த கப்பலை மீட்க இந்திய கடலோர படைக்குச் சொந்தமான விக்ரம் கப்பல் அங்கு விரைந்துள்ளது. கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்டு நாளை மும்பை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
- கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணம்.
- கடந்த ஒரு மாதத்தில் உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஜெனீவா:
உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம் ஆகியுள்ளது.
இந்தியாவில் கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது.
கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் உலக அளவில் 8,50,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 28 நாட்கள் கால கட்டத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் குறைந்துள்ளது எனவும் கூறியுள்ளது.
- இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன.
- வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
நெவார்க் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோயில் சுவற்றில் இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நெவார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து இருக்கிறது. "கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம்."
"மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க நெவார்க் காவல் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறோம்," என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் தெரிவித்து உள்ளது.
- பாகிஸ்தானில் 2 சதவீதம் பேர் மட்டுமே இந்து மதத்தை சேர்ந்தவர்கள்
- மனிஷாவின் சகோதரிகளும் சகோதரனும் மருத்துவ கல்வி பயில்கின்றனர்
1947ல் ஒன்றுபட்ட இந்தியா சுதந்திரமடைந்த போது இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவானது.
இந்தியாவில் மதசார்பின்மை கடைபிடிக்கப்படுகின்றது. ஆனால், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு நாடாகும். அங்கு 96.47 சதவீதம் மக்கள் இஸ்லாமிய மதத்தவர்கள்; 2.14 சதவீதம் பேர் மட்டுமே இந்துக்கள்.
இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் முதல் பெண் துணை காவல்துறை கண்காணிப்பாளர் (DSP) பதவிக்கு 26 வயதான இந்து மதத்தை சேர்ந்த பெண் மனிஷா ரொபேடா (Manisha Ropeta) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தனது இந்த அரிய சாதனை குறித்து பேசிய மனிஷா, "பெண் என்னதான் கடினமாக படித்தாலும் மருத்துவப்பணி அல்லது ஆசிரியை பணியில் மட்டுமே செல்ல முடியும் என்பதை சிறு வயது முதலே நான் கேட்டு வந்துள்ளேன். காவல்துறையிலும், நீதிமன்றங்களிலும் பெண்கள் பணியாற்ற கூடாது எனும் நம்பிக்கையை தகர்ப்பதே எனது லட்சியமாக இருந்தது. பல குற்றங்களில் பாதிக்கப்படுவது பெண்ணினம்தான். சமுதாயத்தில் உள்ள பெண்களை காக்கும் விதமாக ஒரு பெண் பாதுகாவலர் தேவை என நினைத்ததால் காவல்துறையில் சேர்ந்தேன். நான் கடந்து வந்த பாதை எளிதானதாக இல்லையென்றாலும் எனக்கு பலரும் ஊக்கம் அளித்தனர்" என கூறினார்.
சிந்து மாகாணத்தின் ஜேக்கபாபாத் பகுதியை சேர்ந்த ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் மனிஷா. மனிஷாவிற்கு 3 சகோதரிகளும் 1 சகோதரரும் உள்ளனர். அவரது தந்தை இறந்ததும், அவரது தாயார், தனது குழந்தைகளுடன் கராச்சி நகருக்கு இடம்பெயர்ந்தார்.
மனிஷாவுடன் உடன் பிறந்தவர்கள் அனைவரும் மருத்துவ கல்வி பயின்று வருகின்றனர். மனிஷாவும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுதி ஒரே ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் இடத்தை தவற விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிந்து மாகாண பொது சேவைகளுக்கான ஆணையம் நடத்தும் தேர்வுகளில் 468 தேர்வாளர்களில் 16-வது இடத்தை பிடித்து காவல்துறையில் இந்த உயர் பதவிக்கு வந்தவர் மனிஷா.
- தங்கள் வலைதளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய பணம் பெற்றது அய்லோ
- பாதிப்புக்கு உள்ளானவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து தகவல்கள் எதுவும் இல்லை
வயது முதிர்ந்தவர்கள் காணும் வீடியோக்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய இணையதளங்கள் நடத்தும் நிறுவனங்கள் பல அமெரிக்காவில் உள்ளன. அவற்றில் "அய்லோ ஹோல்டிங்க்ஸ்" (Aylo Holdings) எனும் நிறுவனமும் ஒன்று.
அய்லோ, தங்களின் "போர்ன் ஹப்" (Pornhub) எனும் இணையதளத்தில் இத்தகைய உள்ளடக்கம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் அமைத்து அவர்களிடம் பணம் பெற்று, அந்த வீடியோக்களை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு விளம்பர வருவாய் ஈட்டி வருகிறது.
அத்தகைய நிறுவனங்களில் ஒன்றான "கேர்ள்ஸ் டூ போர்ன்" எனும் வீடியோ பதிவேற்றம் செய்யும் நிறுவனத்துடன் அய்லோ ஹோல்டிங்க்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது. அவர்கள் பதிவேற்றம் செய்த வீடியோக்களை பயனர்கள் காணும் விதமாக தங்களின் போர்ன் ஹப் வலைதளத்தில் பரப்பி வந்தது.
ஆனால், "கேர்ள்ஸ் டூ போர்ன்" நிறுவனம், பெண்களை சட்டவிரோதமாக கடத்தி, மிரட்டி, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக தகாத வீடியோக்களை எடுத்து போர்ன் ஹப் உட்பட பல இணையதளங்களில் பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்நிறுவனத்தின் சட்டவிரோத செயல் குறித்து சில பெண்கள் புகார் அளித்ததால், வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
விசாரணையில் சம்மதமில்லாமல் எடுக்கப்பட்ட வீடியோ படங்கள் என தெரிந்தும், 2017லிருந்து 2020 வரை கேர்ள்ஸ் டூ போர்ன் நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ. 83 லட்சம் ($1,00,000) வரை பணம் பெற்று போர்ன் ஹப் வீடியோக்களை பரப்பியதும், அதன் மூலம் விளம்பர வருவாயாக சுமார் ரூ. 6 கோடிகள் ($7,64,000) வரை ஈட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பல பெண்கள் போர்ன் ஹப் நிறுவனத்திற்கு புகார் அனுப்பியிருந்தும் அவற்றை அந்நிறுவனம் உதாசீனப்படுத்தியது.
இவ்வழக்கு விசாரணையில் ப்ரூக்ளின் நீதிமன்றம், அமெரிக்க அரசாங்கத்திற்கு போர்ன் ஹப், சுமார் ரூ. 15 கோடி ($1.8 மில்லியன்) வரை அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதற்கு சம்மதித்துள்ள போர்ன் ஹப், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் தனித்தனியே இழப்பீடு வழங்கவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்கவும், புகார்களை உடனுக்குடன் கவனித்து தீர்வளிக்க கண்காணிப்பாளர் ஒருவரை தங்கள் வலைதளம் சார்பாக நியமிக்கவும் ஒப்பு கொண்டுள்ளது. ஆனால் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் எத்தனை பேர் என்பதும் அவர்களுக்கு எவ்வளவு தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது என்பது குறித்தும் தகவல்கள் இல்லை.
ஆனால், பெண்களுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு காரணமான ஒரு நிறுவனத்திற்கு இது போதுமான தண்டனையே அல்ல என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.






