என் மலர்
உலகம்
- தங்கள் வலைதளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய பணம் பெற்றது அய்லோ
- பாதிப்புக்கு உள்ளானவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து தகவல்கள் எதுவும் இல்லை
வயது முதிர்ந்தவர்கள் காணும் வீடியோக்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய இணையதளங்கள் நடத்தும் நிறுவனங்கள் பல அமெரிக்காவில் உள்ளன. அவற்றில் "அய்லோ ஹோல்டிங்க்ஸ்" (Aylo Holdings) எனும் நிறுவனமும் ஒன்று.
அய்லோ, தங்களின் "போர்ன் ஹப்" (Pornhub) எனும் இணையதளத்தில் இத்தகைய உள்ளடக்கம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் அமைத்து அவர்களிடம் பணம் பெற்று, அந்த வீடியோக்களை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு விளம்பர வருவாய் ஈட்டி வருகிறது.
அத்தகைய நிறுவனங்களில் ஒன்றான "கேர்ள்ஸ் டூ போர்ன்" எனும் வீடியோ பதிவேற்றம் செய்யும் நிறுவனத்துடன் அய்லோ ஹோல்டிங்க்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது. அவர்கள் பதிவேற்றம் செய்த வீடியோக்களை பயனர்கள் காணும் விதமாக தங்களின் போர்ன் ஹப் வலைதளத்தில் பரப்பி வந்தது.
ஆனால், "கேர்ள்ஸ் டூ போர்ன்" நிறுவனம், பெண்களை சட்டவிரோதமாக கடத்தி, மிரட்டி, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக தகாத வீடியோக்களை எடுத்து போர்ன் ஹப் உட்பட பல இணையதளங்களில் பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்நிறுவனத்தின் சட்டவிரோத செயல் குறித்து சில பெண்கள் புகார் அளித்ததால், வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
விசாரணையில் சம்மதமில்லாமல் எடுக்கப்பட்ட வீடியோ படங்கள் என தெரிந்தும், 2017லிருந்து 2020 வரை கேர்ள்ஸ் டூ போர்ன் நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ. 83 லட்சம் ($1,00,000) வரை பணம் பெற்று போர்ன் ஹப் வீடியோக்களை பரப்பியதும், அதன் மூலம் விளம்பர வருவாயாக சுமார் ரூ. 6 கோடிகள் ($7,64,000) வரை ஈட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பல பெண்கள் போர்ன் ஹப் நிறுவனத்திற்கு புகார் அனுப்பியிருந்தும் அவற்றை அந்நிறுவனம் உதாசீனப்படுத்தியது.
இவ்வழக்கு விசாரணையில் ப்ரூக்ளின் நீதிமன்றம், அமெரிக்க அரசாங்கத்திற்கு போர்ன் ஹப், சுமார் ரூ. 15 கோடி ($1.8 மில்லியன்) வரை அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதற்கு சம்மதித்துள்ள போர்ன் ஹப், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் தனித்தனியே இழப்பீடு வழங்கவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்கவும், புகார்களை உடனுக்குடன் கவனித்து தீர்வளிக்க கண்காணிப்பாளர் ஒருவரை தங்கள் வலைதளம் சார்பாக நியமிக்கவும் ஒப்பு கொண்டுள்ளது. ஆனால் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் எத்தனை பேர் என்பதும் அவர்களுக்கு எவ்வளவு தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது என்பது குறித்தும் தகவல்கள் இல்லை.
ஆனால், பெண்களுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு காரணமான ஒரு நிறுவனத்திற்கு இது போதுமான தண்டனையே அல்ல என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.
- கோவிலுக்கு வரும் மக்களை காயப்படுத்துவதற்காகவும், வன்முறை பயத்தை உருவாக்குவதற்காகவும் வெறுப்பூட்டும் வாசகங்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன. நெவார்க் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோவில் சுவற்றில் எழுதப்பட்ட வாசகங்களுடனான புகைப்படங்களை இந்து- அமெரிக்கன் அறக்கட்டளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
கோவிலின் பல சுவர்களில் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் மக்களை காயப்படுத்துவதற்காகவும், வன்முறை பயத்தை உருவாக்குவதற்காகவும் இந்த வெறுப்பூட்டும் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கலாம் என்று அந்த அமைப்பு கூறி உள்ளது.
இது தொடர்பாக நெவார்க் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று இந்து கோவில் குறிவைக்கப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில் அமெரிக்காவிலும் அண்டை நாடான கனடாவிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் பிரிவினைவாத உணர்வைத் தூண்ட முயற்சிக்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் நடவடிக்கைகளால் இந்த சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
- துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாட்டிற்கு சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறக்கம்.
- இந்தியர்களில சிலர் புகார் தெரிவித்ததால் மனித கடத்தல் சம்பவமாக இருக்கும் என அதிகாரிகள் சந்தேகம்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் விமான நிலையத்தில் இருந்து 303 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு மத்திய அமெரிக்க நாடானா நிகாரகுவா நாட்டிற்கு ருமேனியாவின் பிரபலமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது.
பிரான்ஸ் எல்லைப்பகுதியில பறந்தபோது, விமானத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் கிழக்கு பிரான்ஸில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
அப்போது விமானத்தில் இருந்த சிலர் தாங்கள் மனித கடத்தல் கும்பலால் அவதிக்குள்ளாகியுள்ளோம் என அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் பிரான்ஸ் அதிகாரிகள் உடனடியாக விமானத்தை மீண்டும் பறக்க விடாமல் தடுத்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தினர். 303 பேர் ஒரே விமானத்தில் சென்றதால், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இந்திய தூதரகத்தின் விரிவான விசாரணைக்குப் பின் அவர்கள் மனித கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்டவர்களா? என்பது தெரியவரும்.
இவர்கள் அனைவரும் மத்திய அமெரிக்காவுக்கு பயணம் செய்து அதன்பின் சட்டவிரோதமாக அமெரிக்கா அல்லது கனடாவுக்கு செல்ல முயற்சி மேற்கொள்ள நினைத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
விமான நிலையத்தில் விமான தரையிறங்கியதும் இந்தியர்கள் அனைவரும் இரவு முழுவதும் அங்கேயே தங்கியுள்ள நிலையில், மீண்டும் செல்வதுற்கு அனுமதி கிடைக்காமல் அங்கேயே இருந்து வருகிறார்கள்.
வெளிநாட்டினர் பிரான்ஸ் நாட்டிற்குள் வந்தபிறகு, அந்நாட்டின் எல்லை போலீசாரால் நான்கு நாட்களுக்கு அவர்கள் செல்ல வேண்டிய நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தி வைக்க முடியும்.
- இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
- ஜாமீன் வழங்கக் கோரி இம்ரான் கான் மனு தாக்கல்.
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பொது தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தனது சொந்த ஊரான மியான்வாலி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக ஊழல் வழக்கு மற்றும் அரசு ரகசியங்களை கசியவிட்டது உள்பட இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து இம்ரான் கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி இம்ரான் கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன் படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள இம்ரான் கான், தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார்.
- சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தியது.
- இஸ்ரோவுக்கு ஐஸ்லாந்தின் உயரிய விருதான லீப் எரிக்சன் லூனார் விருது வழங்கப்பட்டது.
ஹுசாவிக்:
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி அன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் பகுதியில் தரையிறங்கி இந்திய மக்கள் அனைவரையும் பெருமையடையச் செய்தது. இந்தச் சாதனைக்கு பிறகு உலகின் முன்னணி நாடுகள் இஸ்ரோ உடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.
இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிக்காக ஐஸ்லாந்தின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம் இஸ்ரோ நிறுவனத்தைக் கவுரவித்துள்ளது.
இஸ்ரோவுக்கு 2023-லீப் எரிக்சன் லூனார் என்ற உயரிய விருதை வழங்கியது. இதனை இஸ்ரோ சார்பில் ஐஸ்லாந்துக்கான இந்திய தூதர் ஷியாம் பெற்றுக்கொண்டார். இந்த விருதை வழங்கியதற்காக ஐஸ்லாந்துக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் நன்றி தெரிவித்தார்.
- ரஷிய படைகள் தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
- அடுக்குமாடிக்குடியிருப்பின் மேல்தளம் தீப்பிடித்து எரிந்தது.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. ஆனாலும் இன்னும் சண்டை ஓய்ந்த பாடில்லை. ரஷிய படைகள் தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. அவர்களை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போரிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு அருகே சோலாமியன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மீது இன்று ரஷியா ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் மேல்தளம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
- இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது.
- போர்க்கப்பல் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நவீன வசதிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சோமாலியா:
அரபிக்கடல் பகுதியில் கடந்த 14-ந்தேதி மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி. ரூன் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினார்கள்.
அந்த கப்பலில் ஊழியர்கள் உள்பட 18 பேர் இருந்தனர். அதில் பயணம் செய்த மாலுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவருக்கு உதவி செய்வதற்காக இந்திய கடற்படை கப்பல் உதவி கோரப்பட்டது.

இதையடுத்து இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா நாட்டுக்கு செல்வது தெரிய வந்தது. உடனே இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் கொல்கத்தா அந்த பகுதிக்கு சென்று கடத்தப்பட்ட கப்பலை இடைமறித்தது. இதனால் கடற்கொள்ளையர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்த மாலுமியை விடுவித்தனர். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடற்கொள்ளையர்களை தடுக்கும் நடவடிக்கையில் இந்தியா தீவிரம் காட்டி உள்ளது. ஏடன் வளைகுடா பகுதியில் 2-வது போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.கொச்சி கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நவீன வசதிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பொதுமக்கள் நடத்திய போராட்டங்களால் இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
- இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த கூட்டத்தில் தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கொழும்பு:
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு அரசியலையும் மாற்றி அமைத்தது. பொதுமக்கள் நடத்திய போராட்டங்களால் இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையடுத்து அவர் நாட்டில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீளுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் இலங்கையில் வசித்து வரும் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ் கட்சி தலைவர்களுடன் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான நில உரிமைகள் வழங்குதல், நல்லிணக்கம், மீன்பிடி தொடர்பாக சட்டங்களை அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், அவர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
- சிறந்த மாணவராகவும் திகழ்ந்து வந்தார்.
- டேவிட் கோசாக் ஏன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை.
ஐரோப்பிய நாடான செக்குடியரசு நாட்டின் தலைநகரான பராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.நேற்று இந்த பல்கலைக்கழகத்தில் புகுந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த நவீனரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவியை சுடுவது போல சுட்டார்.
இதனால் உயிருக்கு பயந்த மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சிலர் வகுப்பறை கதவுகளை மூடிக்கொண்டனர். பலர் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அந்த பல்கலைக்கழகத்தை சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்தநிலையில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரும் இந்த சம்பவத்தில் உயிர் இழந்தார். அவர் தனக்குதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது போலீசார் சுட்டுக்கொன்றனரா? என்பது தெரியவில்லை.
போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் டேவிட் கோசாக் (வயது 24) என்பதும், அந்த பல்கலைக்கழக மாணவர் என்பதும் தெரியவந்தது. இவர் மீது போலீசில் எந்த குற்ற வழக்குகளும் இல்லை. சிறந்த மாணவராகவும் திகழ்ந்து வந்தார். அவர் சட்டப்பூர்வமாக பல துப்பாக்கிகள் வைத்து இருந்தார். மேலும் நிறைய வெடிமருந்துகளும் வைத்து இருந்தார்.
துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு பராக் நகருக்கு மேற்கே சொந்த ஊரான ஹோக் டவுனில் தனது தந்தையை கொன்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி இருக்கிறது.
டேவிட் கோசாக் ஏன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பு எதுவும் இல்லை என அந்நாட்டு மந்திரி விடராகுசன் தெரிவித்துள்ளார். செக் குடியரசு நாட்டை பொறுத்தவரை இது போன்ற துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியது கிடையாது. முதன் முறையாக இந்த பெரிய அளவிலான தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தொடரந்து சண்டை நடைபெற்று வருவதால் காசா மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி.
- போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்திய போதிலும், அதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்து வருகின்றன.
ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவைத் தொடர்ந்து தெற்கு காசாவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா ஏறக்குறைய முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் பலத்த சண்டை நடைபெற்று வருகிறது.
இதனால் பாலஸ்தீன மக்கள் கடும் சோதனையை சந்தித்து வருகின்றனர். தங்குவதற்கு இடமில்லாமல், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
இந்த நிலையில் கனடா நாட்டினரின் உறவினர்கள் காசா பகுதியில் இருந்து, எங்கள் நாட்டில் குடியேற தற்காலிக விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கனடா தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காசாவில் இருந்து வெளியேற நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் ஜனவரி 9-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் குடிவரவு மந்திரி மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை 660 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், நிரந்தமாக வசித்து வருபவர்கள், அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகளை காசாவில் இருந்து அழைத்து வர அரசு கவனம் செலுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுடைய பெற்றோர்கள், குழந்தைகள், பேரக்குழந்கைள் போன்றோரின் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்புடையதாக இருந்தால் மூன்று வருடங்கள் விசா வழங்கப்படும்.
இதனால் எத்தனை பேர் கனடாவிற்கு வருவார்கள் எனத் தெரியாது. ஆனால் நூற்றுக்கணக்கில் இருக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களை காசாவில் இருந்து வெளியேற்றுவது மிகவும் கடினமானது என்றார்.
அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் குழந்தைகள் முதல் முதியோர் வரை சுமார் 240 பேர் பிணைக்கைதிகளை விடித்துச் சென்றுள்ளனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டு பிடித்துச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 127 பேர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர்.
- பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
- துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்.
செக் குடியரசு தலைநகரான பராகுவேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
துப்பாக்கி சூடு நடைபெற்றதை அடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். திடீர் துப்பாக்கி சூட்டில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் வேறு யாரும் துப்பாக்கியுடன் இல்லை என்பதை உள்துறை மந்திரி உறுதுப்படுத்தி இருக்கிறார்.
- டாலர் குறியீடு தெரிந்ததே தவிர அது எந்த நாட்டுடையது என்பது குறிப்பிடப்படவில்லை
- தனது தவறை ஒப்பு கொண்ட நிறுவனம் நஷ்ட ஈடு தர சம்மதித்தது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சான் பிரான்சிஸ்கோ நகரை மையமாக கொண்டு இயங்கும் வாடகை விடுதிகள் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதள நிறுவனம், ஏர்பிஎன்பி (Airbnb).
2008ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், உலகெங்கும் வீடுகள், அபார்ட்மென்ட்கள், மற்றும் பயணியர் விடுதிகளை தங்குவதற்காக தேடும் பயனர்களுக்கு அவை குறித்த தகவல்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. தங்கள் இடங்களை வாடகைக்கு விட விரும்புபவர்கள் ஏர்பிஎன்பியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில நாட்களுக்கு தங்க விரும்புபவர்கள் ஏர்பிஎன்பி (Airbnb) மூலம் அந்த இடங்களை முன்பதிவு செய்து உபயோகிக்க முடியும்.
ஆஸ்திரேலியாவிலும் இந்நிறுவனத்தில் இணையதள வழியாக பதிவு செய்து தங்கள் இடங்களை வாடகைக்கு விடுகிறார்கள். அவற்றை பயன்படுத்த டாலர்களில் ஏர்பிஎன்பி கட்டணம் வசூலித்து வந்தது.
ஒரு சில இடங்கள் குறித்த வாடகை கட்டணம் பயனாளிகளுக்கு டாலர் முறையில் வசூலிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்நிறுவன இணையதளத்தில் டாலருக்கான குறியீடு தெரிந்ததே தவிர அது ஆஸ்திரேலிய டாலரா அல்லது அமெரிக்க டாலரா என்பதை குறிப்பிடவில்லை.
இதனால், மதிப்பில் குறைந்த ஆஸ்திரேலிய டாலரில் கட்டணம் இருக்கும் என பதிவு செய்த பல பயனாளிகள் அதிக மதிப்புடைய அமெரிக்க டாலரில் கட்டணம் செலுத்தும்படி ஆனது.
இதையடுத்து, ஏர்பிஎன்பி நிறுவனத்தின் மீது ஆஸ்திரேலிய மத்திய நீதிமன்றத்தில், நுகர்வோர்களுக்கான அரசாங்கத்தின் "ஆஸ்திரேலிய வர்த்தக போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்" வழக்கு தொடுத்தது. தங்கள் தரப்பில் தவறு நடந்திருப்பதை அந்நிறுவனம் ஒத்து கொண்டது.
2018 ஜனவரி மாதத்திலிருந்து 2021 ஆகஸ்ட் மாதம் வரையான காலகட்டத்தில் சுமார் 63,000 வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் தந்து அதிக கட்டணம் வசூலித்ததற்காக நீதிமன்றம் 15 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை அபராதமாக விதித்துள்ளது. தனது தவறை ஒத்து கொண்ட ஏர்பிஎன்பி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தரவும் சம்மதித்துள்ளது.
தற்போது 1 அமெரிக்க டாலர் இந்திய ரூபாயில் 83 எனவும், 1 ஆஸ்திரேலிய டாலர் இந்திய ரூபாயில் 56 எனவும் மதிப்பிடப்பட்டு உலகளவில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.






