என் மலர்tooltip icon

    உலகம்

    • டாலர் குறியீடு தெரிந்ததே தவிர அது எந்த நாட்டுடையது என்பது குறிப்பிடப்படவில்லை
    • தனது தவறை ஒப்பு கொண்ட நிறுவனம் நஷ்ட ஈடு தர சம்மதித்தது

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சான் பிரான்சிஸ்கோ நகரை மையமாக கொண்டு இயங்கும் வாடகை விடுதிகள் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதள நிறுவனம், ஏர்பிஎன்பி (Airbnb).

    2008ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், உலகெங்கும் வீடுகள், அபார்ட்மென்ட்கள், மற்றும் பயணியர் விடுதிகளை தங்குவதற்காக தேடும் பயனர்களுக்கு அவை குறித்த தகவல்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. தங்கள் இடங்களை வாடகைக்கு விட விரும்புபவர்கள் ஏர்பிஎன்பியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில நாட்களுக்கு தங்க விரும்புபவர்கள் ஏர்பிஎன்பி (Airbnb) மூலம் அந்த இடங்களை முன்பதிவு செய்து உபயோகிக்க முடியும்.

    ஆஸ்திரேலியாவிலும் இந்நிறுவனத்தில் இணையதள வழியாக பதிவு செய்து தங்கள் இடங்களை வாடகைக்கு விடுகிறார்கள். அவற்றை பயன்படுத்த டாலர்களில் ஏர்பிஎன்பி கட்டணம் வசூலித்து வந்தது.

    ஒரு சில இடங்கள் குறித்த வாடகை கட்டணம் பயனாளிகளுக்கு டாலர் முறையில் வசூலிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்நிறுவன இணையதளத்தில் டாலருக்கான குறியீடு தெரிந்ததே தவிர அது ஆஸ்திரேலிய டாலரா அல்லது அமெரிக்க டாலரா என்பதை குறிப்பிடவில்லை.

    இதனால், மதிப்பில் குறைந்த ஆஸ்திரேலிய டாலரில் கட்டணம் இருக்கும் என பதிவு செய்த பல பயனாளிகள் அதிக மதிப்புடைய அமெரிக்க டாலரில் கட்டணம் செலுத்தும்படி ஆனது.

    இதையடுத்து, ஏர்பிஎன்பி நிறுவனத்தின் மீது ஆஸ்திரேலிய மத்திய நீதிமன்றத்தில், நுகர்வோர்களுக்கான அரசாங்கத்தின் "ஆஸ்திரேலிய வர்த்தக போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்" வழக்கு தொடுத்தது. தங்கள் தரப்பில் தவறு நடந்திருப்பதை அந்நிறுவனம் ஒத்து கொண்டது.

    2018 ஜனவரி மாதத்திலிருந்து 2021 ஆகஸ்ட் மாதம் வரையான காலகட்டத்தில் சுமார் 63,000 வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் தந்து அதிக கட்டணம் வசூலித்ததற்காக நீதிமன்றம் 15 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை அபராதமாக விதித்துள்ளது. தனது தவறை ஒத்து கொண்ட ஏர்பிஎன்பி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தரவும் சம்மதித்துள்ளது.

    தற்போது 1 அமெரிக்க டாலர் இந்திய ரூபாயில் 83 எனவும், 1 ஆஸ்திரேலிய டாலர் இந்திய ரூபாயில் 56 எனவும் மதிப்பிடப்பட்டு உலகளவில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • எதிர் கட்சியின் ஒத்துழைப்புடன் ஆளும் கட்சி இந்த மசோதாவை வெற்றி பெற செய்தது
    • நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது எங்கள் கடமை என்றார் மேக்ரான்

    பல ஆண்டுகளாக அல்ஜீரியா, மொராக்கோ, போர்ச்சுகல், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்குள் சட்டவிரோத அகதிகளாக தரைவழியாகவும், கடல் வழியாகவும் நீண்ட தூர ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு மக்கள் உள்ளே நுழைவது தொடர்கதையாகி வருகிறது.

    சமீப சில வருடங்களாக பிரான்ஸில் இவ்வாறு உள்ளே நுழையும் அகதிகளால் பல்வேறு உள்நாட்டு சிக்கல்கள் எழுந்தன. கட்டுக்கடங்காமல் அகதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக சட்டம் இயற்ற வேண்டும் என அந்நாட்டு அரசியல் தலைவர்கள் விவாதித்து வந்தனர்.

    இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிற்கு வரும் அகதிகள் குறித்த புலம் பெயர்வோர் சட்டத்தில் கடுமையான மாற்றங்களை கொண்டு வரும் வகையில் மசோதாவை வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவை பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரானின் ரெனய்ஸான்ஸ் கட்சி (Renaissance party) மற்றும் எதிர்கட்சி தலைவரும் தீவிர வலதுசாரி சிந்தனையாளருமான மரின் லெ பென் (Marine Le Pen) சார்ந்த நேஷனல் ரேலி (National Rally) ஆகிய இரு கட்சிகளுமே ஒருமித்து கொண்டு வந்திருக்கின்றன.

    மேக்ரானின் கட்சிக்குள்ளேயே இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர் இதனை பொருட்படுத்தவில்லை.

    விரைவில் சட்ட அந்தஸ்து பெற உள்ள இந்த மசோதாவின்படி புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரை கொண்டு வருவது கடினமாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதும் தாமதமாகும்.

    குடிமகன்கள் வேறு, அகதிகள் வேறு என பாகுபாடு காட்டும் இதன்படி சட்டபூர்வமாக குடியேறுவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை கடினமாகி உள்ளது.

    மரின் லெ பென் வரவிருக்கும் புதிய சட்டத்தை, தங்கள் சித்தாந்தத்திற்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.

    இது குறித்து பேசிய மேக்ரான், "நாட்டில் புலம் பெயர்பவர்களால் பிரச்சனை இருப்பது உண்மைதான். இதனால் உள்நாட்டில் அமைதியின்மை தோன்ற கூடிய நிலை இருந்தது. அதனை தடுக்க வேண்டியது அரசின் கடமை. வெள்ளம் போல் உள்ளே நுழையும் அகதிகளை தடுக்கும் கவசமாக இந்த சட்டம் அமையும்" என தெரிவித்தார்.

    ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் அகதிகளுக்கு உறுப்பினர் நாடுகளின் எல்லைக்கருகே மையம் அமைக்கவும், நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படும் அகதிகளை உடனுக்குடன் அவரவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பவும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள் ஒரு ஒப்பந்தத்தை சில தினங்களுக்கு முன் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

    2027ல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அகதிகள் பிரச்சனை வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக இருக்கும் என மேக்ரான் கருதுவதால் தன் நாட்டு மக்களை ஈர்க்கும் வகையில் விரைவாக இந்த சட்டத்தை கொண்டு வர முயல்கிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • எக்ஸ் தளம் முடங்கியதால் பயனாளர்கள் அவதியடைந்தனர்.
    • சிக்கல் வெளிவந்த சில நிமிடங்களில் #XDown டிரெண்டானது.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமா எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார்.

    எக்ஸ் தளத்தை உலக தலைவர்கள் முதல் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் இன்று காலை முதல் எக்ஸ் சமூக வலைத்தளம் செயலிழந்தது. இதனால் பயனாளர்கள் அவதியடைந்து வந்தனர்.

    எக்ஸ் தளத்தின் உள்ளே பயனாளர்களுக்கு பக்கங்கள் காண்பித்தாலும், அதில் யாருடைய பதிவுகளும் காட்டப்படவில்லை. பின்தொடர்தல் (Follow), உங்களுக்காக (For you) உள்பட அனைத்து தாவல்களும் தகவல்கள் இல்லாமல் காலியாக இருந்தன. பயனர்கள் தங்களின் பதிவுகளை உருவாக்கலாம் பதிவிடலாம். ஆனால், அந்த பதிவுகள் யாரும் பார்க்க முடியாத நிலையில் இருந்தது. சிக்கல் வெளிவந்த சில நிமிடங்களில் #XDown டிரெண்டானது.

    இந்நிலையில், எக்ஸ் தளம் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது.

    • சிறைக்கு சென்ற போது சிம்மன்ஸிற்கு வயது 22 தான் என்பது குறிப்பிடத்தக்கது
    • சிம்மன்ஸ் இழந்த வருடங்களை யார் தருவார் என பயனர்கள் விமர்சிக்கிறார்கள்

    அமெரிக்காவின் தென்மத்திய மாநிலம் ஓக்லஹாமா (Oklahama).

    1975 காலகட்டத்தில் இம்மாநில தலைநகரமான ஓக்லஹாமா சிட்டியின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் நடந்த கொள்ளை முயற்சியில் கேரலின் சூ ராஜர்ஸ் (Carolyn Sue Rogers) என்பவர் கொலை செய்யப்பட்டர். இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் (Glynn Simmons) எனும் இளைஞர் மற்றும் டான் ராபர்ட்ஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    சிம்மன்ஸ், குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில், தான் லூசியானா (Louisiana) மாநிலத்தில் இருந்ததாகவும், இந்த கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென்றும் கூறி வந்தார்.

    ஆனால், நீதிமன்றம் அவருக்கும், அவருடன் கைது செய்யப்பட்ட டான் ராபர்ட்ஸிற்கும், மரண தண்டனை வழங்கியது. சில ஆண்டுகளில் மரண தண்டனை சிறை தண்டனையாக மாற்றப்பட்டது.

    அப்போது சிம்மன்ஸிற்கு வயது 22 என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், கடந்த ஜூலையில் இவ்வழக்கு மறுவிசாரணைக்கு வந்தது.

    தற்போது இந்த வழக்கில் ஓக்லஹாமா மாவட்ட நீதிமன்றம், சிம்மன்ஸ் குற்றமற்றவர் என கூறி தண்டனையை ரத்து செய்தது.

    இதை தொடர்ந்து சிம்மன்ஸ் விடுதலை செய்யப்பட்டார்.

    அமெரிக்க நீதிமன்ற வரலாற்றிலேயே "குற்றச்செயலிலிருந்து விடுபட்டவர்களின் தேசிய பட்டியலில்" (National Registry of Exonerations) மிக நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தவராகிறார் க்ளின் சிம்மன்ஸ்.

    கடந்த 2008ல் ஒரே ஒரு முறை பரோலில் வெளியே வந்தார் சிம்மன்ஸ்.

    ஓக்லஹாமா மாநில குற்றவியல் சட்டத்தின்படி தவறாக குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெற்றவர்கள் சுமார் ரூ.1 கோடியே 75 லட்சம் ($1,75,000) வரை இழப்பீட்டு தொகை பெற முடியும்.

    தற்போது கல்லீரல் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் சிம்மன்ஸ் குற்றமே செய்யாமல் 48 வருட கால சிறை தண்டனை அனுபவித்ததை குறித்து, "பொறுமைக்கும் மன உறுதிக்கும் இது ஒரு பாடம். நடக்காது என யார் கூறினாலும் நம்பாதீர்கள்; ஏனென்றால் நடக்க வேண்டியது நடக்கும் " என தெரிவித்தார்.

    சமூக வலைதளங்களில் சிம்மன்ஸ் விடுதலை குறித்து கருத்து தெரிவிக்கும் பயனர்கள், "அவர் இழந்த வருடங்களை யார் தருவார்கள்?" என விமர்சித்து வருகின்றனர்.

    • இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியதால் சுமார் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
    • ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

    இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. கடந்த இரண்டரை மாதங்களாக போர் நீடித்து வருகிறது.

    இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் வடக்கு காசா சீர்குலைந்துள்ளது. பழைய நிலைக்கு வர அது நீண்ட காலம் எடுக்கும். காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு உலகின் பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    பாலஸ்தீன மக்களை காப்பாற்றுவதற்காக உடனடியான போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வருகின்றனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில எப்படியாவது போர் நிறுத்த தீர்மானத்தை நிறைவேற்றிட முயற்சி செய்து வருகிறது.

    இதற்கிடையே இஸ்ரேல் ராணுவம் காசாவை அழிக்க நினைக்கிறது. ஒரு இனத்திற்கு எதிராக இனப்படுகொலை செய்கிறது என போர்க்கொடி எழுந்துள்ளது.

    ஆனால், காசாவில் இருந்து இனிமேல் இஸ்ரேல் மண்ணுக்கு ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்யும்வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    ஆயுத உதவி செய்து வரும் அமெரிக்காவும் போர் நிறுத்தம் தேவை என இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுறித்து இமானுவேல் மேக்ரான் கூறுகையில் "பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதை, காசாவை தரைமட்டமாக்குவது என பொருள் கொள்ளக்கூடாது" என்றார்.

    அதேவேளையில் "இஸ்ரேல் இந்த பதிலடி தாக்குதலை நிறுத்த வேண்டும். ஏனென்றால், இந்த தாக்குதல் பொருத்தமானது அல்ல. அனைத்து உயிர்களும் ஒரே மதிப்பிலானவை. அவர்களை நாங்கள் பாதுகாக்கிறோம். தன்னை பாதுகாத்து கொள்வதும், பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதும் இஸ்ரேலுடைய உரிமை. பொதுமக்களை பாதுகாப்பதற்கு மனிதாபிமான போர் நிறுத்தம் வழிவக்கும்" என்றார்.

    இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.

    அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

    • அடுத்த மாதம், மற்றொரு சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளது.
    • வருகிற ஜனவரி மாதம் முதல் ஓராண்டுக்கு இம்முடிவு அமலில் இருக்கும்.

    கொழும்பு:

    இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு வருகின்றன. அவை இலங்கை துறைமுகங்களில் நின்றுகொண்டு, ஆய்வுப்பணியில் ஈடுபடுகின்றன. அடுத்த மாதம், மற்றொரு சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளது. அதற்காக இலங்கை அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், எந்த வெளிநாட்டு உளவு கப்பலையும் இலங்கை கடல் எல்லைக்குள் வர அனுமதிப்பது இல்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. வருகிற ஜனவரி மாதம் முதல் ஓராண்டுக்கு இம்முடிவு அமலில் இருக்கும்.

    கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் தங்கள் உளவு கப்பல்களை நிறுத்திய அனைத்து வெளிநாடுகளுக்கும் இம்முடிவை தெரிவித்து விட்டதாக இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி தெரிவித்தார்.

    • கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
    • அமெரிக்கா- தென்கொரியா பகுதிகளை தாக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

    அமெரிக்கா- தென்கொரியா இடையிலான உறவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், இரண்டு நாடுகளின் போர் ஒத்திகை, கொரியா தீபகற்பத்தில் இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை ஆகியவை தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வடகொரியா நினைக்கிறது.

    இதனால் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அணுஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் "ஹ்வாசோங்-18" ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையாக பார்க்கப்படுகிறது.

    வடகொரியாவில் இருந்து அமெரிக்காவின் ஒரு பகுதியை துல்லியமாக இலக்கு நிர்ணயித்து தாக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

    அதேவேளையில் கடந்த ஆண்டில் இருந்து வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அணுஆயுத ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவோம் என தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஆனால் வடகொரியா செயல்படும் அணுசக்தி ஏவுகணைகளை பெறவில்லை. மேலும், முதலில் அணுஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில், வடகொரியா அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளால் தாக்கப்பட்டிருக்கிறது என வெளிநாட்டு வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால் கடந்த ஐந்து மாதங்களில் முதன்முறையாக திங்கட்கிழமை ஏவுகணை சோதனை நடத்தி, அமெரிக்கா- தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது.

    இந்த நிலையில் தூண்டப்பட்டால் எதிரிகள் மீது அணுஆயுத தாக்குதலை நடத்த தயங்கமாட்டோம் என்பதுதான் எங்களது கொள்கை என கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். மேலும், ஹ்வாசோங்-18 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதால், அதில் ஈடுபட்டவர்களை பாராட்டியுள்ளார்.

    வடகொரியா கடந்த ஆண்டு அணு ஆயுதம் பயன்படுத்தும் வகையிலான சட்ட திருத்தம் கொண்டு வந்தது. அதில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைக சோதனை நடத்தியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அணுஆயுதங்கள் சுமந்து சென்று தாக்குதல் நடத்துபவையாகும்.

    அணுஆயுதங்களை பயன்படுத்துவதின் முடிவு கிம் ஜாங் உன் அரசு முடிவுக்கு வருவதாக இருக்கும் என அமெரிக்கா மற்றும் தென்கொரியா தொடர்ந்து எச்கரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமராக பதவி வகித்த 3 ஆட்சிக்காலங்களிலும் ராணுவத்தினரால் வீட்டிற்கு அனுப்பப்பட்டேன்.
    • தங்களது சொல்பேச்சு கேட்கும் அரசை ராணுவம் கொண்டு வந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பினார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்தவர்களுடன் நவாஸ் ஷெரீப் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமராக நான் பதவி வகித்த 3 ஆட்சிக்காலங்களிலும் ராணுவத்தினர் தலையீட்டால் வீட்டிற்கு அனுப்பப்பட்டேன்.

    பாகிஸ்தானின் பொருளாதாரம் இந்தளவுக்கு சீரழிய காரணம் இந்தியா அல்ல. ஏன் அமெரிக்காவோ, ஆப்கன் கூடஅல்ல.

    நமது காலில் நாமே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டோம். 2018-ல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை அகற்றிவிட்டு, தங்களது சொல்பேச்சு கேட்கும் அரசை, ராணுவம் கொண்டு வந்ததால், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அரசியல் சாசனத்தை ராணுவம் மீறியபோது அதனை நீதிபதிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிரதமர் என வரும்போது பதவி நீக்கத்திற்கு ஒப்புதல் கொடுத்தனர். பாராளுமன்றத்தைக் கலைக்கும் செயலுக்கு ஒப்புதல் அளித்தனர் என தெரிவித்தார்.

    • விடுவிக்கப்பட்ட மாலுமியை இந்திய போர்க்கப்பல் மீட்டு, சிகிச்சைக்காக ஓமனுக்கு அனுப்பி வைத்தது.
    • கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்கிறது என்றும் கடற்படை தெரிவித்தது.

    அரேபியன் கடல் பகுதியில் மால்டா நாட்டு கொடியுடன் சென்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். இதற்கிடையே கடத்தப்பட்ட கப்பலில் மாலுமி ஒருவர் காயம் அடைந்தார். அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டது. இதையடுத்து அந்த மாலுமியை கடற்கொள்ளையர்கள் விடுவித்தனர்.

    இதற்கு இந்திய கடற்படை போர்க்கப்பல் உதவியது. விடுவிக்கப்பட்ட மாலுமியை இந்திய போர்க்கப்பல் மீட்டு, சிகிச்சைக்காக ஓமனுக்கு அனுப்பி வைத்தது. கடத்தப்பட்ட கப்பல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அந்த கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்கிறது என்றும் கடற்படை தெரிவித்தது.

    • குடும்ப உறவினரை சமன் திருமணம் செய்து கொள்ள மறுத்தார்
    • சமன், தன் ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்

    இத்தாலி (Italy) நாட்டில் பொலோக்னா (Bologna) நகருக்கு அருகே நொவெல்லாரா (Novellara) பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த சமன் அப்பாஸ் (18) தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    2020ல் உறவுக்கார ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு சமனை அவர் குடும்பத்தினர் வற்புறுத்தி வந்துள்ளனர். அதை அவர் மறுத்ததால் ஏற்பட்ட சச்சரவின் விளைவாக அந்நாட்டு அரசிடம் புகலிடம் தேடிய சமன், ஒரு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.

    கடந்த 2021ல், தனது ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த சமன், வீட்டில் இருந்த தனது பாஸ்போர்ட்டை எடுத்து கொள்ள அங்கு சென்றார். அப்போது மீண்டும் திருமண சர்ச்சை ஏற்பட்டது. அவர் பெற்றோர் சமனின் ஆண் நண்பரை மருமகனாக ஏற்க மறுத்தனர்.

    அன்றிலிருந்து சமன் திடீரென மாயமானார். ஆண் நண்பர் இது குறித்து காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் அவர்கள் சமனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முற்பட்டனர்.

    ஆனால், சமனின் பெற்றோர் தங்கள் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.

    அப்பகுதியில் இருந்த வீடியோ காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று கையில் மண்வெட்டி, கடப்பாரை, பக்கெட் உள்ளிட்டவைகளுடன் 5 பேர் அவ்வீட்டை விட்டு வெளியே சென்று சுமார் 3 மணி நேரம் கழித்து திரும்புவது தெரிய வந்தது.

    காவல்துறையினரின் தேடலில் ஒரு வருடம் கழித்து சமனின் உடல் ஒரு பாழடைந்த பண்ணை வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடலில் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டிருந்தது.

    இவ்விவகாரத்தில் கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்த இத்தாலி அரசின் கோரிக்கைக்கு இணங்க பாகிஸ்தானிலிருந்த சமனின் தந்தையும், பிரான்சில் இருந்த சமனின் மாமாவும் இத்தாலிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். தாயார் வேறு எங்கோ தப்பி ஓடி விட்டார்.

    குடும்பத்தினரிடம் காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில், சமனின் பெற்றோர், தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள மறுத்த மகளை கொலை செய்ய திட்டம் தீட்டினர். சமனின் கழுத்தை அவளது மாமா நெரித்து கொலை செய்துள்ளார்.

    இவ்வழக்கில் தந்தைக்கும் தாய்க்கும் ஆயுள் தண்டனையும், கொலை செய்த சமனின் மாமாவிற்கு 14 வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கியது இத்தாலி நீதிமன்றம். இதனிடையே தாயாரை காவல்துறை தேடி வருகிறது.

    • பிணைக்கைதிகள் விடுவிப்பதற்கான போர் நிறுத்தம் செய்ய தயாராக இருப்பதாக இஸ்ரேல் தகவல்.
    • உயர்மட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஹமாஸ் தலைவர் எகிப்பு செல்ல இருக்கிறார்.

    ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்பதற்காக காசாவில் 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதில் 90-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

    இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். போர் நிறுத்தத்துக்கு பிறகு இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 129 பிணைக்கைதிகள் உள்ள நிலையில் காசாவில் மீண்டும் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வருகிறது.

    காசாவில் இருந்து மேலும் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக 2-வது மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் தெரிவித்தார்.

    இந்த நிலையில் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று எகிப்துக்கு செல்கிறார்.

    .இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்கா முட்டுக்கட்டை போடுவதால் நிறைவேற முடியாத நிலையில் இருந்து வருகிறது.

    • போர் இரண்டரை மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது.
    • காசாவில் நிவாணர பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் இரண்டரை மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

    இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலியானதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

    இதுகுறித்து சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா கூறும்போது, "காசா பகுதி முழுவதும் நேற்று இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் ஒரே நாளில் சுமார் 100 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்" என்றார்.

    காசாவில் நிவாணர பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

    இதுகுறித்து ஐ.நா. குழந்தைகள் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரசல் கூறும்போது, "தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்த குழந்தைகள், அடிப்படை தேவையான தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பாதுகாப்பான தண்ணீர் இல்லாமல் வரும் நாட்களில் பல குழந்தைகள் இறக்க நேரிடும்" என்றார்.

    ×