என் மலர்
உலகம்
- போர் இரண்டரை மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது.
- காசாவில் நிவாணர பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் இரண்டரை மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலியானதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா கூறும்போது, "காசா பகுதி முழுவதும் நேற்று இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் ஒரே நாளில் சுமார் 100 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்" என்றார்.
காசாவில் நிவாணர பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இதுகுறித்து ஐ.நா. குழந்தைகள் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரசல் கூறும்போது, "தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்த குழந்தைகள், அடிப்படை தேவையான தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பாதுகாப்பான தண்ணீர் இல்லாமல் வரும் நாட்களில் பல குழந்தைகள் இறக்க நேரிடும்" என்றார்.
- போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்தனர்
- குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும் என்றார் விவேக்
அமெரிக்காவில் அடுத்த வருடம் நவம்பர் மாத காலகட்டத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் (Joe Biden) மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trmup) தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
கடந்த 2020ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்படும் நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க சட்டத்தின்படி தேசத்துரோகமாக கருதப்படும் இந்த செயலுக்கு தூண்டுதலாக டிரம்ப் செயல்பட்டதாக அவர் மீது கொலராடோ (Colorado) மாநில நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து கொலராடோ நீதிமன்றம், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு டிரம்பிற்கு தடை விதித்துள்ளது. அந்நாட்டு தேர்தல் முறைப்படி குடியரசு கட்சியின் "பிரைமரி" (primary) தேர்தல் எனப்படும் முதல்நிலை வாக்குப்பதிவில் டிரம்பின் பெயர் வாக்குச்சீட்டில் இருக்க கூடாது என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ய உள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் பிற வேட்பாளர்களில் ஒருவரான இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி, "இதை சட்டவிரோதமான நடவடிக்கையாக பார்க்கிறேன். இது அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். டிரம்ப் பெயர் வாக்குச்சீட்டில் இடம் பெறாமல் இருந்தால் நானும் போட்டியிலிருந்து விலகுவேன். இதே போன்று குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என எக்ஸ் சமூகவலைதளத்தில் தனது அதிகாரபூர்வ கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இது ஒரு புறமிருக்க, தேர்தலில் கொலராடோ ஜனநாயக கட்சிக்கே அதிக சாதகமானது என்பதால் டிரம்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பும் மேல்முறையீடும் பெரிதாக தேர்தல் முடிவில் மாறுதலை ஏற்படுத்தாது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
- சர்வதேச மனித ஒற்றுமை தினம் என்பது வேற்றுமையில் நமது ஒற்றுமையைக் கொண்டாடும் நாளாகும்.
- ஒற்றுமையின் முக்கியத்துவத்தைப் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இந்நாளில்.
நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் என்பது மக்கள் மற்றும் பூமியை மையமாகக் கொண்டது. மேலும் உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டது. வறுமை, பசி மற்றும் நிலையான வளர்ச்சி, நல்வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள புதிய முயற்சிகளை வகுப்பதில் இந்த நாள் கவனம் செலுத்துகிறது.
டிசம்பர் 20, 2002 அன்று ஐக்கிய நாடுகள் பொது சபையால் உலகளாவிய வறுமையை போக்க உலக ஒற்றுமை நிதியம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பிப்ரவரி 2003-ல் ஐநா வளர்ச்சித் திட்டத்தின் அறக்கட்டளை நிதியின் ஒரு பகுதியாக மாறியது. அதன் நோக்கம் வறுமையை ஒழிப்பது மற்றும் வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் ஏழ்மையான பிரிவுகளில் மனித மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதாகும்.
22 டிசம்பர் 2005 அன்று, பொதுச்சபை தீர்மானத்தின் மூலம், 21-ஆம் நூற்றாண்டில் மக்களிடையே உள்ள உறவுகளுக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய அடிப்படை மற்றும் உலகளாவிய மதிப்புகளில் ஒன்றாக ஒற்றுமையை அடையாளம் கண்டது, இதனை தொடர்ந்து உலகில் உள்ள பல கலாச்சாரங்களில் சமத்துவம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்வதில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை மக்கள் மற்றும் நாடுகளுக்கு வலியுறுத்த டிசம்பர் 20-ம் தேதியை சர்வதேச மனித ஒற்றுமை தினமாக அறிவித்தது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA).

சர்வதேச மனித ஒற்றுமை தினம் என்பது வேற்றுமையில் நமது ஒற்றுமையைக் கொண்டாடும் நாளாகும். சர்வதேச உடன்படிக்கைகளுக்கு தங்கள் கடமைகளை மதிக்க அரசாங்கங்களுக்கு நினைவூட்டும் நாளாக இருக்கிறது. ஒற்றுமையின் முக்கியத்துவத்தைப் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இந்நாளில்.
சர்வதேச மனித ஒற்றுமை தினத்தின் கருப்பொருள் என்பது வளரும் நாடுகளில் கலாச்சார சமத்துவம், மனித மற்றும் சமூக மேம்பாட்டையும், நீதியையும் மேம்படுத்துவதை மையமாக கொண்டதாகும்.
- கடந்த தேர்தல் தோல்வியின் காரணமாக அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
- மேல்முறையீடு செய்யும் வகையில் ஜனவரி 4-ந்தேதி வரை தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த முறை நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான போட்டியில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார். ஏற்கனவே அதிபர் பதவியில் இருந்து 2-வது முறையாக போட்டியிட்ட அவர், ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார்.
இருந்த போதிலும் டொனால்டு தனது தோல்வியை ஏற்க மறுத்து வந்தார். அவரது ஆதரவாளர்களும் டொனால்டு டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்தனர். மேலும், அமெரிக்க பாராளுமன்றத்தில் நுழைந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் டொனால்டு டிரம்பிற்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வகையில் கொலராடோவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்க தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவில், டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேலும், குடியரசு கட்சி சார்பில் யார் வேட்பாளர் என்பதற்கான தேர்தல் நடைபெறும்போது, வாக்குச்சீட்டில் அவரது பெயர் இடம் பெறக்கூடாது. ஒருவேளை பெயர் இடம் பெற்றாலும் அவருக்கு வாக்களித்திருந்தால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனத் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும் அதிபருக்கான முக்கியமான தேர்தலில் தடைவிதிக்கப்படவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்துள்ள டொனால்டு தரப்பினர், மேல்முறையீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேல்முறையீடு செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- நவம்பர் 25லிருந்து கருத்தடை மாத்திரைகளை எடுத்து கொள்ள தொடங்கினார்
- சிடி ஸ்கேன் பரிசோதனையில் மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது
இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் (East Midlands) பிராந்தியத்தில் உள்ளது லின்கன்ஷையர் (Lincolnshire) பகுதி. இங்கு தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தவர், 16-வயதான பள்ளிச்சிறுமி லேலா கான் (Layla Khan).
சுமார் 3 வாரங்களுக்கு முன்பு லேலாவிற்கு மாத விடாய் கால வயிற்று வலி தொடங்கியது. அவரது தோழிகள் வலியை குறைப்பதற்கு கருத்தடை மாத்திரை எடுத்து கொள்ள ஆலோசனை கூறினார்கள்.
நவம்பர் 25லிருந்து லேலாவும் கருத்தடை மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்ள துவங்கினார்.
டிசம்பர் 5 காலகட்டத்தில் லேலாவிற்கு வயிற்று வலியுடன் தலைவலியும் சேர்ந்து கொண்டது. அந்த வார இறுதியில் அவர் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை வாந்தி எடுக்க தொடங்கினார்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினர் க்ரிம்ஸ்பி (Grimsby) பகுதியில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். "ஸ்டமக் பக்" (stomach bug) என பொதுவாக அழைக்கப்படும் வைரஸ் தாக்குதலில் வரும் இரைப்பை குடல் அழற்சி (viral gastroenteritis) நோயால் லேலா தாக்கபப்ட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட லேலாவின் நிலை மறு நாள் மோசமடைய தொடங்கி, வலியில் அலற தொடங்கினார். மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் முனைந்த போது நடக்க கூட இயலாமல் குளியலறையில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, அருகிலிருந்த "டயானா, பிரின்சஸ் ஆஃப் வேல்ஸ்" மருத்துவமனைக்கு லேலாவை அவர் தாயாரும், உறவினரும் காரில் கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் லேலாவிற்கு மூளையில் ரத்த கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
டிசம்பர் 13 அன்று, ஹல் ராயல் மருத்துவமனையில் அக்கட்டியை அகற்ற லேலாவிற்கு மூளை அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் துரதிர்ஷ்டவசமாக மூளைச்சாவு அடைந்து விட்டார்.
குதூகலமாக கிறிஸ்துமஸ் கொண்டாட நினைத்த லேலா குடும்பம் அவரை இழந்த சோகத்தில் தவிக்கிறது.
லேலாவின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். அவை 5 உயிர்களை காத்ததாக லேலாவின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.
தக்க சமயத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனையை பெறாமல் பிறர் பரிந்துரையில் மருந்துகள் உட்கொள்வதில் அதிக ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
- ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போர், 2½ மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
- காசாவில் உடனடி போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
காசா:
பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போர், 2½ மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் மும்முனை தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். இதற்கிடையே காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. நேற்று இரவு காசா முனை பகுதி முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்ட தாகவும், இதில் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே காசாவில் ஹமாஸ் அமைப்பின் மிகப் பெரிய சுரங்கப் பாதையை கண்டு பிடித்து உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இந்த சுரங்கப்பாதை 4 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். ஹமாஸ் அமைப்பினரி டம் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 100-க்கும் மேற்பட்டோர் இருக்கும் நிலையில் மூன்று, வயதான ஆண் பிணைக் கைதிகளின் வீடியோவை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டது.
அதில், "அவர்கள் தங் களை விரைவில் மீட்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து பேசினர். பிணைக் கைதிகளின் வீடியோவை வெளியிட்ட தற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்து உள்ளது. மருத் துவ சிகிச்சை தேவைப்படும் அப்பாவி, வயதானவர்களின் குடும்பங்களுடன் ஹமாஸ் நடத்தும் கொடூரமான குற்ற செயல்களை இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காசாவில் உடனடி போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2015 முதல் 2021 வரையிலான காலகட்டம் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது
- "முதல் குடும்பம்" அலட்சியமாக இருந்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகள், 42 வயதான ஆஷ்லி பைடன் (Ashley Biden).
சமூக ஆர்வலராகவும், ஆடை வடிவமைப்பு கலைஞராகவும் உள்ள ஆஷ்லி, பல சமூக நல தொண்டுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார். இது மட்டுமின்றி, டெலாவேர் மாநில நீதி மையத்தில் (Delaware Center for Justice) கிரிமினல் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து ஆஷ்லி பைடன் அமெரிக்க அரசுக்கு வருமான வரி பாக்கியாக ரூ.4 லட்சத்திற்கு ($5000) மேல் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த டிசம்பர் 1 அன்று, பிலடெல்பியா கவுன்டி பகுதியில் உள்ள பென்சில்வேனியா மாநில வருவாய் துறை, ஆஷ்லிக்கு இது குறித்து தகவல் அனுப்பியது.
ஒபாமா அதிபராக இருந்த போது துணை அதிபராக ஜோ பைடன் இருந்த 2015 ஜனவரி 1 தொடங்கி, பைடன் அதிபராக பதவி ஏற்கும் சில தினங்களுக்கு முன்பு 2021 ஜனவரி 1 வரையுள்ள காலகட்டம் இதில் கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது வரை இது குறித்து ஆஷ்லி பைடன் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
2023 டிசம்பர் 7 அன்று ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடன் (Hunter Biden) மீதும் வரி ஏய்ப்பு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"பணக்காரர்களும் உயர்ந்த இடங்களில் தொடர்பு வைத்துள்ளவர்களும் தாங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சரியான பங்கை செலுத்துவதில்லை என ஜோ பைடன் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால் அவரது இரு குழந்தைகளும் வருமான வரி செலுத்தவில்லை. மிக அலட்சியமாக அமெரிக்காவின் முதல் குடும்பமான பைடன் குடும்பம் இருந்துள்ளது" என பைடன் எதிர்ப்பாளர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
- நிலநடுக்கத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர்; பல வீடுகள் இடிந்து விழுந்தன
- ட்சாய், ஆங்கிலத்திலும், எளிமையான சீன மொழியிலும் பதிவிட்டுள்ளார்
நேற்று மதியம், சீனாவின் வடமேற்கு எல்லையில் கிங்காய்-திபெத் பீடபூமி (Qinghai-Tibet plateau) பிராந்தியத்தில் கான்சு-கிங்காய் (Gansu-Qinghai) எல்லைக்கருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை 118க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பல வீடுகள் இடிந்து விழுந்தன.
பலர் உயிரை காத்து கொள்ள பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
சீன அரசு, மீட்பு பணிகளை விரைவாக துவங்கியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், பாதிக்கப்பட்டோருக்கு புகலிடம் மற்றும் உடனடி நிவாரணம் கிடைக்க ஒருங்கிணைந்த முயற்சிக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான தைவான் நாட்டின் முதல் பெண் அதிபர், ட்சாய் இங்-வென் (Tsai Ing-Wen), சீனாவில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அத்துடன் சீனாவிற்கு தேவையான உதவிகளை வழங்க தைவான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ட்சாய் ஆங்கிலத்திலும், எளிமையான சீன மொழியிலும் இரங்கலை பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பதிவில், "நிலநடுக்கத்தில் தங்களின் உயிருக்கு உயிரானவர்களை இழந்து வாடும் சீனர்களுக்கு எனது இதயபூர்வமான இரங்கலை தெரிவிக்கிறேன். உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ள அனைவருக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். விரைவில் நிலைமை சீரடையும் என நாங்கள் நம்புகிறோம். கடினமான இயற்கை பேரிடர் மீட்பு பணியில் சீனாவிற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க தைவான் தயாராக உள்ளது" என தெரிவித்தார்.
சுயாட்சி பெற்ற நாடாக தன்னை தைவான் அறிவித்தாலும், சீனா அந்நாட்டின் மீது முழு உரிமை கொண்டாடி வருகிறது.
சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்து வரும் நிலையில், சீனா தனது உரிமையை நிலைநாட்ட தைவானின் வான்வெளியிலும், நீர்பரப்பிலும், தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரித்து வந்தது.
ஆனால், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு, தைவான் அதிபர் உதவிக்கரம் நீட்டுவதை அரசியல் விமர்சகர்கள் வரவேற்றுள்ளனர்.
2008ல் சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்தில் (Sichuan province) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சுமார் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அப்போதும் தைவான், சீனாவிற்கு நேசக்கரம் நீட்டி தன் நாட்டிலிருந்து நிபுணர் குழுவை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
- செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம்- ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
- டிரோன்கள், ஏவுகணைகளை வீசி கப்பல் மீது தாக்குதல்.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக உள்ளனர். இதையடுத்து செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்தனர். அதன்படி செங்கடல் பகுதியில் சென்ற வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினர். டிரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது. இதில் 10 நாடுகளை இணைத்து படையை உருவாக்கி செங்கடலில் கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின், பக்ரைனில் கூறியதாவது:-
செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு சர்வதேச சவாலாகும். இதற்கு புதிய பன்னாட்டு பாதுகாப்பு முயற்சியை அறிவித்துள்ளோம்.
இதற்கான பணியில் அமெரிக்காவுடன் இங்கிலாந்து, பக்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் இணையும். சில நாடுகள் கூட்டு ரோந்து பணியை நடத்தும். மற்றவை தெற்கு செங்கடல் மற்றும் ஏமன் வளைகுடாவில் உளவுத்துறை ஆதரவை வழங்கும்
இவ்வாறு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
- கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்தது.
- தீப்பிழம்பு ஆரஞ்சு நிறத்தில் வெளியேறி வருகிறது
ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை நேற்று இரவு ஆக்ரோஷத்துடன் வெடிக்க தொடங்கி தீப்பிழம்பை கக்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில் நேற்று வெடித்து சிதறியுள்ளது.
தீப்பிழம்பு ஆரஞ்சு நிறத்தில் வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பு காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு ரெய்க்ஜாவிக் தீபகற்பகத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. எரிமலை வெடிப்புக்கு முன்பாக நிலநடுக்கம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசியது
- விமானம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மெதுவாக நகர தொடங்கியது
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடு அர்ஜென்டினா (Argentina). இதன் தலைநகரம் ப்யூனோஸ் அயர்ஸ் (Buenos Aires).
கடந்த சில நாட்களாக கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் கடும் புயல் வீசி வருகிறது. மணிக்கு சுமார் 150 கிலோமீட்டர் வேக புயலால் அங்கு உயிரிழப்பு 14-ஐ கடந்துள்ளது. பல இடங்களில் கட்டிட சேதங்களும், மின்சார தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்புயல், அங்குள்ள ஏரோபார்க் நியூபெரி (Aeroparque Jorge Newbery) விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விமானத்தையும் தாக்கியது. இத்தாக்குதலில் அந்த விமானம் காற்றின் அதிவேகத்தால் நகர தொடங்கி, நிறுத்தப்பட்டிருந்த திசைக்கு எதிராக மெதுவாக நகர்ந்து சென்றது.
அப்போது அங்கு விமானத்தில் பயணிகள் ஏறவும் இறங்கவும் பயன்படுத்தப்படும் படிக்கட்டு, சரக்கு கொண்டு செல்லும் ஒரு வாகனம் உட்பட பலவற்றில் அந்த விமானம் மோதியது. இதில் விமானத்திற்கு ஓரளவு சேதம் ஏற்பட்டது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
- மத்திய அரசுக்கே சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதாக நீதிமன்றங்கள் தெரிவித்தன
- புதிய சட்டத்தின்படி அகதிகளை மீண்டும் எல்லையில் கொண்டுவிட நீதிபதி உத்தரவிட முடியும்
வாழ்வாதாரத்தை தேடி அமெரிக்காவின் அண்டை நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக மிக நீண்ட, ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவது பல ஆண்டுகளாக தொடர்கதையாகி வருகிறது.
சமீப சில வருடங்களாக இவர்களால் பல்வேறு உள்நாட்டு சிக்கல்கள் தோன்றுவதால் சட்டவிரோதமாக உட்புகுவதை தடுக்க அங்கு அரசியல் தலைவர்கள் விவாதிக்கிறார்கள். தேர்தல்களில் இப்பிரச்சனை வாக்குகளை ஈர்க்கும் ஒரு முக்கிய அம்சமாக முன்வைக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் 31 அன்று, 2023 நிதியாண்டில் மட்டும் சுமார் 6 லட்சம் அகதிகள் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்து எல்லை பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை பாதுகாப்பு துறை தெரிவித்தது.
அமெரிக்க மத்திய அரசின் சட்டப்படி இவ்வாறு உள்ளே நுழைவது குற்றமாக கருதப்பட்டாலும், அமெரிக்க குடியுரிமை நீதிமன்றங்களில் சிவில் வழக்காகவே இவை விசாரிக்கப்படுகின்றன. மேலும், இது குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளதாக அந்நாட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன.
இந்நிலையில், அகதிகளை தடுக்கும் விதமாக தென்மத்திய மாநிலமான டெக்ஸாஸ், கடுமையான சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.
இப்புதிய சட்டத்தினபடி உள்ளூர் காவல்துறை அதிகாரிகளே அகதிகளை கண்டறிந்து கைது செய்யலாம். கடும் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக கருதப்படும் இதற்கு நீண்டகால சிறை தண்டனையும், சுமார் ரூ.1.50 லட்சத்திற்கும் ($2000) மேல் அபராதம் விதிக்கப்படும். மேலும், டெக்ஸாஸ் நீதிமன்ற நீதிபதிகள் அந்த அகதிகளை மீண்டும் எல்லைக்கு அப்பால் கொண்டு சென்று விட உத்தரவிட முடியும். மீண்டும் நுழைய முயல்பவர்களுக்கு 20 வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
குடியரசு கட்சியை சேர்ந்த டெக்ஸாஸ் கவர்னர் க்ரெக் அப்பாட் (Greg Abbott), "இச்சட்டம் பேரலையாக மெக்சிகோ மற்றும் அண்டை நாடுகளிலிருந்து டெக்ஸாஸ் எல்லை வழியாக அகதிகள் வருவதை தடுக்கும்" என தெரிவித்தார்.
அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இச்சட்டம் விவாத பொருளாக மாறும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.






