என் மலர்tooltip icon

    உலகம்

    • வங்காள தேசத்தில் நாளை 12 வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது
    • அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    வங்க தேசத்தில் நாளை 12 வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 350 நாடாளுமன்ற தொகுதிகளில் 50 தொகுதிகள் அரசால் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 300 தொகுதிகளுக்கு நாளை(ஜன.7) தேர்தல் நடைபெறுகிறது

    90 பெண்கள், 79 சிறுபான்மையர் உட்பட 1,970 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். ஆளும் கட்சியான அவானி லீக் கட்சி சார்பில் 266 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியான ஜாட்டியா கட்சி 265 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த தேர்தல் ஆளும் கட்சியான அவானி லீக் கட்சிக்கும், எதிர்கட்சியான ஜாட்டியா கட்சிக்கும் இடையேயான போட்டியாக கருதப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. தற்போது செயல்பட்டு வரும் அரசின் தலைமையில் தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக வங்க தேசத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால், கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத புத்த மதம்-இந்து மதம்-கிறிஸ்துவ மதத்தின் ஐக்கிய கூட்டமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வங்க தேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரி காஜி ஹபிபுல் அவால், நம்பகத்தன்மை நிறைந்த தேர்தலில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த தேர்தல் தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் காலை 8 மணிக்கு தொடங்கி, வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்கும் வரை  நடைபெரும் என தெரிவித்தார். மேலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.
    • இன குழு பெருமையை சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

    நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினரின் ஆரவார பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 170 ஆண்டுகளில் நியூசிலாந்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் மைபி கிளார்க். 21 வயதான இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பி. ஆனார். மௌரி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.

    எம்.பி.யாக தேர்வான பிறகு நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார் மைபி கிளார்க். உரையின் போது மௌரி இனத்தின் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றான ஹக்கா செய்தது அரங்கத்தை அதிர செய்தது. போர், வெற்றி, ஒற்றுமை, இன குழு பெருமை என எல்லாவற்றையும் சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

     


    அந்த வகையில் நியூசிலாந்தின் இளம் பெண் எம்.பி. வெற்றி முழக்கமிட்டு பேசியது பாராளுமன்றத்தை அதிர வைத்தது. தொடர்ந்து பேசிய அவர், "நான் உங்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன்.. ஆனாலும் நான் உங்களுக்காகவே வாழ்வேன்," என்று தெரிவித்தார்.

    ஆக்லாந்து மற்றும் ஹாமில்டன் இடையே உள்ள ஹன்ட்லி என்ற சிறு நகரத்தில் வசிக்கும் மைபி கிளார்க் தனது மௌரி இனத்தின் லூனார் காலண்டரின் படி குழந்தைகளுக்கு தோட்டத்துறை சார்ந்த கல்வியை கற்பித்து வருகிறார். எம்.பி. என்ற பதவியை தாண்டி இவர் தன்னை மௌரி மொழியை காப்பாற்றவும், அதனை உலகறிய செய்யவும் நோக்கமாக கொண்டிருக்கிறார்.




    • ஜப்பான், ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்
    • ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்

    தஜிகிஸ்தான் நாட்டில் சனிக்கிழமை காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்த தகவலின் படி, தஜிகிஸ்தானில் காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ஆழம் 80 கிலோ மீட்டராக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தது. இருப்பினும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்படவில்லை என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    ஜப்பான், ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

    • வயதானதால் பைடனால் வேகமாக செயல்பட முடியவில்லை என பத்திரிகைகள் விமர்சித்தன
    • டிரம்ப் வென்றால் ஜனநாயகம் தோற்று விடும் என்றார் பைடன்

    இவ்வருடம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களம் இறங்கி உள்ளனர்.

    தற்போது 81 வயதாவதால் ஜோ பைடனால் பிரசாரங்களை வேகமாக முன்னெடுத்து செல்ல முடியவில்லை என்றும் டிரம்பை காட்டிலும் செயலாற்றுவதில் பைடன் பின் தங்கி இருப்பதாகவும் சில பத்திரிகைகள் விமர்சித்து வந்தன.

    இதை தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் பைடன் இறங்கி உள்ளார்.

    சுமார் 250 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை எதிர்த்து ஜார்ஜ் வாஷிங்டன், பென்சில்வேனியா மாநிலத்தில் வேலி ஃபோர்ஜ் (Valley Forge) எனும் பகுதியில் அமெரிக்க படைகளை ஒருங்கிணைத்த இடத்திலேயே தனது முதல் உரையை ஜோ பைடன் தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    முன்னாள் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார். அவர் நமது ஜனநாயகத்தை தியாகம் செய்ய துணிந்து விட்டார்.

    அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தாக்குதல் நடந்ததற்கு அவர்தான் முழு பொறுப்பு.

    தன்னை எதிர்ப்பவர்கள் மீது விஷம் கக்குகிறார். அமெரிக்கர்களின் ரத்தம் விஷமாகி விடுமென அவர் கூறுவது நாஜிக்களின் ஜெர்மனியை நினைவு படுத்துவது போல் உள்ளது.

    ஆக்ரமிப்பு எண்ணம் கொண்ட வட கொரிய அதிபருடனும், ரஷிய அதிபருடனும் டிரம்ப் ஒட்டி உறவாடுகிறார்.

    டிரம்ப் வென்று அவர் உறுதியளிக்கும் எதிர்காலம் தோன்றினால் அங்கு ஜனநாயகம் தோற்று விடும். உங்கள் சுதந்திரம் உங்கள் வாக்குச்சீட்டில்தான் உள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

    அமெரிக்க ஜனநாயகத்தை நான் கட்டி காப்பேன் என உறுதி கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு தரப்பும் பிரசாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கி விட்ட நிலையில், வரும் வாரங்களில், தேர்தல் களம் சூடு பிடிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ளார்.
    • ஒருவேளை தடைவிதிக்கப்பட்டால், அமெரிக்கா வரலாற்றில் இது முதல் முறையாகும்.

    2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிட முடியுமா என்பதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

    கொலராடோவின் உச்சநீதிமன்றம், ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் போட்டியிட டிரம்புக்கு தடைவிதித்தது. ஜனவரி 6, 2021 அன்று, அமெரிக்க பாராளுமன்றம் மீதான தாக்குதலின் காரணமாக கொலராடோ உச்ச நீதிமன்றம் இந்த தடையை பிறப்பித்தது.

    இதனை எதிர்த்து டொனால்டு டிரம்ப் சார்பில் அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. டிரம்ப் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் மூன்று நீதிபதிகளை நியமித்துள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாய்மொழி வாதங்களை கேட்பதாக தெரிவித்துள்ளது.

    அதேபோல் 77 வயதான டிரம்பின் பெயர், மாநிலத்தின் முதன்மை வாக்குச்சீட்டில் தோன்றுவதைத் தடுக்கும் மைனின் உயர் தேர்தல் ஆணையர் எடுத்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.

    குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருக்கும் டிரம்பின் வழக்கறிஞர்கள், ஜனநாயகக் கட்சியின் மைனே வெளியுறவுச் செயலர் ஷென்னா பெல்லோஸ் அளித்த தீர்ப்பை ரத்து செய்யுமாறு மைனே உயர் நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர் "ஒருதலைப்பட்சமான முடிவெடுப்பவர்" என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    • விமானத்தில் 171 பயணிகள், 6 விமான பணியாளர்கள் பயணித்தனர்.
    • உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதால் அசம்பாவிதம் நடைபெறவில்லை.

    அலாஸ்கா விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் "737-9 MAX" விமானம் போர்ட்லேண்டில் இருந்து ஒண்டாரியோவுக்கு (கலிபோர்னியா) 171 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் புறப்பட்டது.

    விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் நடுப்பக்கத்தில் உள்ள வெளியேறும் கதவு திடீரென திறந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பயங்கரமான காட்சியை சில பயணிகள் செல்போனில் பதிவு செய்தனர்.

    இதுகுறித்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டதும், அவர் உடனடியாக விமானத்தை போர்ட்லேண்டில் அவசரமாக தரையிறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

    என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதன்பின் தகவலை பகிர்ந்து கொள்கிறோம் என அலாஸ்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    விமானம் 16,325 அடி உயரத்தில் பறக்கும்போது இந்த சம்பவம் நடைபெற்றதாக கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

    விமானத்தின் வெளியேறும் கதவு விமானத்தில் இருந்து முற்றிலும் விலகி தனியாக சென்றதாக விமானத்தில் இருந்த சில பயணிகள் தெரிவித்தனர்.

    அலாஸ்காவுக்கு இந்த விமானம் கடந்த அக்டோபர் 1-ந்தேதி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 11-ந்தேதியில் இருந்து அலாஸ்கா வணிக பயன்பாட்டிற்கு ஈடுபத்தி வந்துள்ளது.

    • 2717 அடி உயரம் கொண்ட புர்ஜ் கலிஃபாதான் தற்போது உலகின் உயரமான கட்டிடம்
    • ஜெட்டா டவரின் 157-வது தளத்தில் மிக பெரிய பார்வையாளர் அரங்கம் அமைய உள்ளது

    மேற்கு ஆசியாவில் உள்ள மத்திய கிழக்கு நாடு, ஐக்கிய அரபு அமீரகம் (UAE). இதன் தலைநகரம் அபு தாபி (Abu Dhabi). அமீரகத்தில் உள்ள முக்கிய நகரம், துபாய்.

    துபாய் நகரில், 2717 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா (Burj Khalifa) உள்ளது. 2004ல் கட்ட தொடங்கப்பட்ட இது 2009ல் கட்டி முடிக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்து பலர் தினமும் இதை காண துபாய்க்கு சுற்றுலா வருகின்றனர்.


    இந்நிலையில், "உலகின் உயரமான கட்டிடம்" எனும் அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேற்கு ஆசியாவில் உள்ள மற்றொரு அரபு நாடான சவுதி அரேபியாவில், செங்கடல் பகுதியில் உள்ள துறைமுக நகரம் ஜெட்டா (Jeddah).

    ஜெட்டாவின் வடக்கே, ஜெட்டா எகனாமிக் சிடி (Jeddah Economic City) எனும் திட்டத்தின்படி உருவாகும் நகர மேம்படுத்தலில் கிங்க்டம் டவர் என்றும் அழைக்கப்படும் ஜெட்டா டவர் (Jeddah Tower) கட்டப்பட்டு வருகிறது. இதுவரை உலகில் இல்லாத கட்டிடக்கலை வேலைப்பாடுகள் மற்றும் நுணுக்கங்களுடன் இது கட்டப்பட்டு வருகிறது.

    சவுதி அரேபிய இளவரசர் அல்-வலீத் பின் தலால் (Al-Waleed bin Talaal) மிகவும் தீவிரமாக முன்னெடுத்துள்ள இத்திட்டத்திற்காக இக்கட்டிடத்தை வடிவமைத்தவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தை சேர்ந்த ஏட்ரியன் ஸ்மித் (Adrian Smith) எனும் கட்டிட வடிவமைப்பாளர்.

    புர்ஜ் கலிஃபா கட்டிடத்தையும் வடிவமைத்த ஆர்க்கிடெக்ட் ஏட்ரியன் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைவழிமுறைகளை கையாண்டு இது உருவாக்கப்பட்டு வருகிறது.

    இதன் 157-வது தளத்தில் சுமார் 100 அடி விட்டத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து வானையும், ஊரையும் ரசிக்கும் வகையில் ஒரு அரங்கம் அமைய உள்ளது.

    திட்டமிட்டபடி இது கட்டி முடிக்கப்பட்டால், 3281 அடி உயரம் கொண்ட ஜெட்டா டவர்தான் உலகின் முதல் "1 கிலோமீட்டர் உயர கட்டிடம்" எனும் புகழை பெறும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 200 காளைகள் வாடிவாசல் வழியாக திறந்தி விடப்படுகிறது.
    • செந்தில் தொண்டமான் மற்றும் மலேசிய எம்.பி. சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரபலமானது. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இந்த ஜல்லிக்கட்டு அமைந்துள்ளதாக கருதப்படும்.

    உலகமெங்கும் தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசித்து வருகிறார்கள். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், இலங்கையில் ஜல்லிக்கட்டு போன்றவை இதுவரை நடத்தப்பட்டது இல்லை.

    இந்த நிலையில் திருகோணமலையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் வழிகாட்டுதலில் போட்டியை நடத்த முயற்சி மேற்கொண்டனர். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பமானது. வாடிவாசல் வழியாக காளைகளை சீறிப்பாய, மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடித்தனர்.

    சிறந்த மாடுகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது.

    இலங்கை வரலாற்றிலேயே முதல்முறையாக தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முயற்சியில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    200 காளைகள் வாடிவாசல் வழியாக சீறப்பாய இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த போட்டியை செந்தில் தொண்டமான் மற்றும் மலேசிய எம்.பி. சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    • கோல்டன்டூடுல் நாய்கள் வளர்ப்பவர்களிடம் அதிக விசுவாசம் கொண்டவை
    • வங்கி தரப்பிலிருந்து அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது

    அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில் உள்ளது பிட்ஸ்பர்க் (Pittsburgh) நகரம்.

    பிட்ஸ்பர்க் நகரத்தில் வசித்து வருபவர்கள் 34 வயதாகும் க்ளேட்டன் லா (Clayton Law) மற்றும் அவரது குடும்பத்தினர். இவர்கள் செசில் (Cecil) என பெயரிட்ட கோல்டன்டூடுல் (Goldendoodle) வகை நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். செசிலுக்கு 7 வயதாகிறது.

    கடந்த டிசம்பர் மாதம், லா, தனது வீட்டை சுற்றி புதிய வேலி அமைக்க விரும்பினார். இதற்காக தனது வங்கி கணக்கிலிருந்து $4000 கரன்சி நோட்டுக்களை எடுத்து வந்தார். அப்பணத்தை தம்பதியினர் தங்கள் சமையலறை மேடையின் மீது வைத்து விட்டு வேறு ஏதோ ஒரு வேலையில் மும்முரமாக இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக செசில், அந்த ரூபாய் நோட்டுக்கள் முழுவதையும் தின்று விட்டது.

    செசில் உண்ட பிறகே ஓடி வந்து அதை கண்ட லா குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர். இழந்த பணத்திற்காகவும், தங்கள் செல்ல பிராணியின் உடல்நலத்திற்காகவும் ஒரே சமயத்தில் அவர்கள் கவலைப்பட தொடங்கினர்.

    க்ளேட்டனின் மனைவி, கேரி உடனடியாக கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டார். நாயின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் இல்லாத வரை அச்சப்பட வேண்டாம் என மருத்துவர் கூறியதை அடுத்து இழந்த பணம் குறித்து யோசித்தனர்.

    கேரி, இணையதளத்தில் "பணத்தை நாய் சாப்பிட்டால் என்ன செய்வது?" என கேட்டு மீட்கும் வழிமுறைகளை தேட தொடங்கினார்.

    வங்கியை தொடர்பு கொண்டு லா சம்பவத்தை தெரிவித்தார். வங்கி அதிகாரிகள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினர்.

    சில மணி நேரம் கடந்ததும் சில கரன்சி நோட்டுக்களை செசில் வாந்தி எடுத்தது; சிலவற்றை உடலிலிருந்து கழிவில் வெளியேற்றியது.

    மிகுந்த சகிப்புத்தன்மையுடன் கிடைத்த கரன்சிகளை எடுத்து சுத்தப்படுத்தி எண்ணி பார்த்ததில் சுமார் $3,550 கரன்சிகள் அவர்களுக்கு மீண்டும் கிடைத்தது.

    வரிசை எண்கள் (சீரியல் நம்பர்கள்) சேதமடையாத கரன்சிகள் அவர்களுக்கு வங்கியில் மாற்றி தரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, கிட்டத்தட்ட இழந்த தொகையில் பெரும் பகுதி அவர்களுக்கு திரும்ப கிடைத்தது.

    இத்தனை போராட்டங்களுக்கு பிறகும் லா தம்பதியினருக்கு செசில் மீதான அன்பு குறையவில்லை.

    சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரவியதை தொடர்ந்து "நாய்க்கு இவ்வளவு விலையுயர்ந்த உணவா?" என பயனர்கள் கிண்டல் செய்து பதிவிடுகின்றனர்.

    • கரீபியன் தீவுகளுக்கு குடும்பத்துடன் விடுமுறை கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
    • குட்டி விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள் விபத்து நடந்துள்ளது.

    ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் ஜெர்மனியில் பிறந்தவர். இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் குட்டி விமானத்தில் பயணம் செய்தார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கரீபியன் கடல் பகுதியில் நடந்துள்ளது.

    தி குட் ஜெர்மன் (The Good German) என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். 2008-ல் ஆக்ஷன்-காமெடி படமான ஸ்பீடு ரேஸர் (Speed Racer) படத்தில் நடத்தியிருந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடற்படை அதிகாரிகள், மீனவர்கள், கடல் நீருக்கு அடியில் சென்று தேடும் வீரர்கள் உள்ளிட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டு நான்கு உடல்களை மீட்டுள்ளனர்.

    ஆலிவர், அவரது மகள்கள் மதிதா (10), அன்னிக் (12) மற்றும் விமான என நான்கு பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விமானம் பெகுய்யா என்ன சிறிய தீவில் இருந்து செயின்ட் லூசியா புறப்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    ஆரம்ப காலத்தில் டி.வி. தொடரில் நடித்தது பிரபலமானார். அதன்பின் ஆலிவர் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    • கடந்த மாதமும் இதுபோன்று ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் பலி.
    • தேர்தலை புறக்கணித்துள்ள எதிர்க்கட்சிகள் மீது அரசாங்கம் குற்றச்சாட்டு.

    வங்காளதேசம் நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஜேஸ்சோர் நகரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ரெயிலில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்து மளமளவென நான்கு பெட்டிகளில் பரவியது.

    இதனால் பயணிகள் அலறி அடித்து வெளியேறினர். இருந்த போதிலும் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நாளை வங்காளதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறிவரும் எதிர்க்கட்சியினர் இதுபோன்ற தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம் இதுபோன்று நடைபெற்ற ரெயில் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். அப்போது போலீசார் மற்றும் அரசு எதிர்க்கட்சியான வங்காளதேசம் தேசியவாத கட்சி மீது குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அதேவேளையில் வங்காளதேச தேசியவாத கட்சி குற்றச்சாட்டை மறுத்திருந்தது. ஆளும்கட்சியின் அடக்குமுறைக்கு சாக்குபோக்கான குற்றச்சாட்டு எனவும் தெரிவித்திருந்தது.

    வங்காளதேசத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசினா ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடந்த வருடம் போராட்டம் செய்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

    • தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றம்.
    • தீர்மானத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் எதிர்ப்பு.

    பாகிஸ்தான் நாட்டில் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பொது தேர்தல் நடத்துவதற்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதுதொடர்பாக ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில், பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற இருந்த பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க கோரும் தீர்மானத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை மந்திரி முர்தாசா சோலங்கி எதிர்ப்பு தெரிவித்தனர்.

     


    தீர்மானத்தின் படி பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான குளிர்காலம் நிலவுவதால், மக்கள் வாக்களிக்க அதிக எண்ணிக்கையில் வர முடியாத சூழல் ஏற்படலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    திட்டமிட்டப்படி பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.

    ×