என் மலர்
உலகம்
- திருட வந்த கும்பலில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர்
- இச்சம்பவங்களால் பலர் வாழ்வாதாரத்தையே இழக்கின்றனர் என்றார் ராமிரெஸ்
கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகர எல்லைக்கு அருகே உள்ளது காம்ப்டன் (Compton).
காம்ப்டனில் மெக்சிகோவிலிருந்து வந்த குடும்பத்தை சேர்ந்த ரூபென் ராமிரெஸ் ஜுனியர் என்பவர் "ரூபென்'ஸ் பேக்கரி அண்ட் மெக்சிகன் ஃபுட்" எனும் ஒரு கடை நடத்தி வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர் கடையின் முன் திடீரென 100க்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு கும்பல் கடையை சூறையாட வந்தது. அக்கும்பலில் சிலர் ஒரு வெள்ளை நிற கியா (Kia) காரால் கண்ணாடி கதவு மீது மீண்டும் மீண்டும் மோதி கடையை உடைத்தனர்.
கடைக்குள் நுழைந்த அந்த கும்பல் சூறையாடியது. அவர்கள் தங்கள் இஷ்டம் போல் அங்குள்ள அலமாரிகளை உடைத்து உணவு பண்டங்களையும் வேறு சில பொருட்களையும் பெருமளவில் கொண்டு சென்றனர்.

அதில் முக்கியமாக பெருமளவு இறைச்சிகளும், மளிகை பொருட்களும், லாட்டரி டிக்கெட்டுகளும் இருந்தன.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால், ராமிரெசுக்கு சுமார் $70 ஆயிரம் இழப்பு ஏற்பட்டது.
இதை தவிர, கடையை மீண்டும் சுத்தப்படுத்தி அங்கிருந்த கண்ணாடி துகள்களை அகற்றவும் நீண்ட நேரமானது.
இது குறித்து ராமிரெஸ் தெரிவித்ததாவது:
ஆங்காங்கு இது போல் சிறு சம்பவங்களை கண்டிருந்தாலும், என் கடையில் நடந்தது போல் ஒரு சூறையாடலை இதற்கு முன் கண்டதில்லை. கண்காணிப்பு கேமிரா படக்காட்சிகளை காவல்துறையினர் காட்டினார்கள். அவர்களில் ஒருவரையும் நானோ என் குடும்பத்தினரோ இதற்கு முன் கண்டதில்லை. காம்ப்டன் காவல்துறை மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் காவல்துறை கண்டிப்பாக குற்றவாளிகளை கண்டு பிடிப்பார்கள் என நம்புகிறோம். பிரெட் செய்வதற்கான உபகரணங்களையும் அந்த கும்பல் சேதப்படுத்தி விட்டது. எங்கள் முதல் குறிக்கோள் கடையை மீண்டும் முன்னர் இருந்த நிலைக்கு கொண்டு செல்வதுதான். எங்கள் குடும்பம் மீள எத்தனை நாட்களாகும் என தெரியவில்லை. இது போன்ற சம்பவங்களால் பலர் வாழ்வதாரத்தையே இழக்கின்றனர். ஆனால், இதுவரை யாரும் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.
- பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டாலும், பலர் ஹமாஸ் வசம் உள்ளனர்
- பெய்ரூட்டில் ஹமாஸின் முக்கிய தலைவர் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார்
கடந்த 2022 அக்டோபர் 7 அன்று, பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1200க்கு மேற்பட்டவர்களை கொன்று, சுமார் 240 பேர்களை பணயக்கைதிகளாக கொண்டு சென்றது.
இதற்கு பதிலடியாக, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்த இஸ்ரேல், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள அவர்கள் நிறைந்திருக்கும் பகுதியான பாலஸ்தீன காசா மீது போர் தொடுத்தது.
85 நாட்களை கடந்து நடைபெறும் இப்போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட பல நாடுகள் முயற்சித்தாலும், இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதில் தீவிரமாக உள்ளது.
பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டாலும் பலர் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர்.
கடந்த செவ்வாய் அன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவரான சலே அல் அரவ்ரி (Saleh al-Arouri) மற்றும் பல தலைவர்கள் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டது என நம்பப்படுகிறது.
இதனால், கத்தார் மற்றும் எகிப்து மூலம் இஸ்ரேலுடன் முன்னெடுத்த சமாதான பேச்சுவார்த்தைகளிலிருந்து ஹமாஸ் விலகி விட்டது.
இப்பின்னணியில், கத்தார் பிரதமர் மொஹமத் பின் அப்துல்ரஹ்மான் அல் தனி (Mohammed bin Abdulrahman Al Thani), நேற்று தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பணய கைதிகளின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அவர்களிடம், "பணய கைதிகளின் குடும்பத்தினரின் துன்பத்தை புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், பெய்ரூட் நகர தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்துவது கடினமாக உள்ளது" என அல் தனி தெரிவித்தார்.
- இந்திய அறிவியல் கழகத்தில் பிஹெச்டி பட்டம் பெற்றவர் அஞ்சனா தேவி
- இந்திய மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி குறைவு என்றார் அஞ்சனா தேவி
கர்நாடக மாநிலத்தில் உள்ளது இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science).
1991ல் கர்நாடகாவின் மங்களூர் பல்கலைக்கழகத்தில் (Mangalore University) அறிவியல் பட்டம் பெற்றவர் அஞ்சனா தேவி (55). இவர் இந்திய அறிவியல் கழகத்தில் பிஹெச்டி (Ph.D) பட்டமும் வெற்றிகரமாக படித்து முடித்தார்.
தற்போது ஜெர்மனியில் பேராசிரியராக பணியாற்றும் அஞ்சனா தேவி, அங்குள்ள ட்ரெஸ்டன் (Dresden) பகுதியில் உள்ள லெய்ப்னிஸ் மையத்தில் (Leibniz Institute) "மெட்டீரியல் கெமிஸ்ட்ரி" எனப்படும் "பொருள் வேதியியல்" துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அறிவியல் கழகத்திலிருந்து ஜெர்மனியில் இத்தகைய பொறுப்பில் நியமிக்கப்படும் முதல் நபர் எனும் பெருமையை பேரா. அஞ்சனா பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலியை போன்று அடுத்த சிலிக்கான் வேலியாக ஜெர்மனி உருவாகி வருகிறது. இந்திய மாணவர்களுக்கு ஜெர்மனியில் பல வாய்ப்புகள் உள்ளன. இங்கு பெரும் வளர்ச்சிக்கான சூழல் நிலவுகிறது. குறிப்பாக செமிகண்டக்டர் துறையில் முதுநிலை கல்விக்கு இங்கு வாய்ப்புகள் அளவுக்கு அதிகமாக உள்ளன. இங்குள்ள பல பல்கலைக்கழகங்கள் இந்திய பல்கலைக்கழகங்களுடன் பல்வேறு கல்வி திட்டங்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு வருகின்றன. இந்திய மாணவர்களுக்கு கல்வியில் தியரி (theory) எனப்படும் கோட்பாட்டு அறிவு அதிகம்; ஆனால், பிராக்டிகல் (practical) எனப்படும் செயல்முறை பயிற்சி குறைவு. ஆய்வுக்கூட அனுபவமும் உலக நாடுகளுடன் ஒப்பிட்டால் குறைவு. ஆனால், சுதந்திரமாக சிந்திக்கவும், செயல்படவும் அயல்நாட்டு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மென்பொருள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தாமல், ஆராய்ச்சி படிப்பிலும் இந்திய மாணவர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என பல வருடங்களாக கல்வியாளர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
- 61 வயதாகும் ஜோடி ஃபாஸ்டர் பட தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர்
- ஜென் இசட்டிடம் ஒரு அலட்சிய போக்கு இருந்து வருகிறது என்றார் ஜோடி
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு கதாநாயகியாக உருவெடுத்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர், ஹாலிவுட் நடிகை ஜோடி ஃபாஸ்டர் (Jodie Foster).
தற்போது 61 வயதாகும் ஜோடி ஃபாஸ்டர், திரைப்பட தயாரிப்பாளராகவும் வெற்றி அடைந்தார்.
தனது நடிப்பிற்காக இரண்டு முறை உலக புகழ் பெற்ற ஆஸ்கார் விருதுகளை வென்றவர், ஜோடி ஃபாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக ஹாலிவுட்டில் செயலாற்றி வரும் ஜோடி ஃபாஸ்டர், தற்போதைய ஜென் இசட் (Gen Z) எனப்படும் 90களின் பிற்பகுதியிலிருந்து 2000 முற்பகுதி வரை பிறந்த ஆண்கள் மற்றும் பெண்களுடன் பணியாற்றுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
"ஜென் இசட் இளைஞர்களுடன் பணியாற்றுவது பல நேரங்களில் பெரிய தொந்தரவாக உள்ளது. நேரம் காப்பதில் அவர்களுக்கு ஒரு அலட்சிய போக்கு இருந்து வருகிறது. போட்ட திட்டப்படி பணியாற்ற வர வேண்டிய நேரத்திற்கு வராமல் அலட்சியமாக காரணம் சொல்கின்றனர். அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால், ஏகப்பட்ட தவறுகள் இருக்கின்றன. அனுப்பும் முன்பாக சரிபார்க்கவில்லையா என கேட்டால், அதை காலவிரயம் என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். நாங்கள் வளர்ந்து போது எங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட முழு சுதந்திரம் அளிக்கப்படவில்லை. திரைப்படத்துறையில் கலைஞர்களாக வர விரும்பும் தற்கால இளைஞர்கள் தங்களின் சொந்த படைப்புகளையே கொண்டு வர முயற்சிக்க வேண்டும்" என ஜோடி தெரிவித்தார்.
- ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு முதற்கட்ட பதிலடி கொடுக்கப்பட்டது.
- பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதி யில் இஸ்ரேல், டிரோன் தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் ஷேக்சலே-அல்-அரூரியை கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது. அதன் படி இஸ்ரேலின் மெரோன் விமான கட்டுப்பாட்டு தளம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இது குறித்து ஹிஸ்புல்லா இயக்கம் கூறும்போது, ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு முதற்கட்ட பதிலடி கொடுக்கப்பட்டது. 62 வகை ஏவுகணைகளை வீசி மெரோன் விமான கட்டுப்பாட்டு தளம் தாக்கப்பட்டது என்று தெரிவித்தது.
இந்த தாக்குதலால் ஓடு பாதை சேதம் அடைந்தது என்றும் மெரோன் வான் கட்டுப்பாட்டு தளத்தில் இருந்து இஸ்ரேலிய விமானப்படையால் போர் விமானங்கள் இயக்க முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
- காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.
- சில காலம் எடுக்கும் ஹமாஸ் அமைப்பினர் தளபதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.
காசா:
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் மூன்று மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ஆட்சி செய்து வரும் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.
முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், தற்போது மத்திய, தெற்கு காசாவிலும் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகளை முற்றிலும் அழித்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறும்போது, வடக்கு பகுதியில் ஹமாசின் ராணுவ கட்டமைப்பை அழிக்கும் பணியை முடித்து விட்டோம்.
தற்போது மத்திய மற்றும் தெற்கு காசாவில் ஹமாஸ் அமைப்பை அழிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சில காலம் எடுக்கும் ஹமாஸ் அமைப்பினர் தளபதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.
மத்திய காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளனர். தெற்கு காசாவில் கான்யூனுஸ் நகரில் பெரிய நகர்ப்புற நிலப்பரப்பில் சுரங்கப்பாதைகள் உள்ளன. மத்திய, தெற்கு காசாவில் ஹமாசை அழித்து ராணுவம், வேறு வழிகளில் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வடக்கு காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 8 ஆயிரம் பேர் கொல்லப் பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தெற்கு காசாவின் கான்யூ னிஸ் நகரில் ஒரு குடியிருப்பு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் பலியானார்கள்.
- விடுமுறைக்காக ஜமைக்கா சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் பழுது ஏற்பட்டது.
- கடந்த 3 மாதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானம் இரண்டு முறை பழுதாகியுள்ளது.
ஒட்டாவா:
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஜமைக்கா நாட்டிற்குச் சென்றிருந்தார். பயணம் முடிந்து ஜனவரி 4-ம் தேதி அவர் கனடா திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஜனவரி 3-ம் தேதி அவரது விமானத்தை தயார் செய்வதற்காக அதை பரிசோதித்த பராமரிப்புக் குழுவினர், விமானத்தில் பழுது இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து பழுதை சரிசெய்வதற்கான குழுவுடன் மற்றொரு விமானம் ஜமைக்கா சென்றது. பழுது பார்க்கப்பட்டதும் இரு விமானமும் கனடா திரும்பின. கடந்த ௩ மாதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானம் இரண்டு முறை பழுதாகியுள்ளது.
ஏற்கனவே, ஜி20 மாநாட்டுக்காக இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மாநாடு முடிந்து திரும்புகையில் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
- தேர்தலை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார்.
டாக்கா:
அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தொடர்ந்து 4-வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடுதழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். மேலும், பொதுத்தேர்தல் நடைபெறும் சூழலில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு மற்றும் தேர்தல் செயலி செயலிழப்பு ஆகியவற்றுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தனது வாக்கை இன்று பதிவுசெய்தார். அப்போது பேசிய அவர், இந்த நாட்டில் ஜனநாயகம் தொடர வேண்டும் என தெரிவித்தார்.
- அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
- அங்கு 4-வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்கா:
அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தொடர்ந்து 4-வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவிய பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதற்கு ஆளும் கட்சி மறுப்பு தெரிவித்ததால், முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கருதி அவர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கலீதா ஜியா ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சிட்டகாங், காசிபூர் நகரில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்ட 5 பள்ளிக்கூடங்களுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். கடந்த 16 மணி நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறியதாக தீயணைப்பு சேவை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத்தேர்தல் நடைபெறும் சூழலில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு மற்றும் தேர்தல் செயலி செயலிழப்பு ஆகியவற்றுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் அங்கு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
- மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட இணைய தளங்கள் செயலிழந்து பல மணி நேரம் முடங்கின.
- தேசிய தகவல் தொழில்நுட்ப மையம் இந்தச் சிக்கலை தீர்க்க தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மாலி:
மாலத்தீவின் அதிபர், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் செயலிழந்து, பல மணி நேரம் முடங்கின.
அரசாங்கத்தின் உயர்மட்ட இணைய தளங்கள் வேலை செய்யாததற்கான காரணங்கள் கண்டறியப்படாமல் இருந்து வந்தது. தேசிய தகவல் தொழில்நுட்ப மையம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் இந்தச் சிக்கலை தீர்க்க தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாலத்தீவு அரசாங்கத்தின் முடங்கிய இணைய தளங்கள் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகின.
- வங்காள தேசத்தில் நாளை 12 வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது
- அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
வங்க தேசத்தில் நாளை 12 வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 350 நாடாளுமன்ற தொகுதிகளில் 50 தொகுதிகள் அரசால் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 300 தொகுதிகளுக்கு நாளை(ஜன.7) தேர்தல் நடைபெறுகிறது
90 பெண்கள், 79 சிறுபான்மையர் உட்பட 1,970 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். ஆளும் கட்சியான அவானி லீக் கட்சி சார்பில் 266 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியான ஜாட்டியா கட்சி 265 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த தேர்தல் ஆளும் கட்சியான அவானி லீக் கட்சிக்கும், எதிர்கட்சியான ஜாட்டியா கட்சிக்கும் இடையேயான போட்டியாக கருதப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. தற்போது செயல்பட்டு வரும் அரசின் தலைமையில் தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக வங்க தேசத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால், கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத புத்த மதம்-இந்து மதம்-கிறிஸ்துவ மதத்தின் ஐக்கிய கூட்டமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வங்க தேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரி காஜி ஹபிபுல் அவால், நம்பகத்தன்மை நிறைந்த தேர்தலில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த தேர்தல் தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் காலை 8 மணிக்கு தொடங்கி, வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்கும் வரை நடைபெரும் என தெரிவித்தார். மேலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
- நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.
- இன குழு பெருமையை சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.
நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினரின் ஆரவார பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 170 ஆண்டுகளில் நியூசிலாந்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் மைபி கிளார்க். 21 வயதான இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பி. ஆனார். மௌரி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.
எம்.பி.யாக தேர்வான பிறகு நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார் மைபி கிளார்க். உரையின் போது மௌரி இனத்தின் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றான ஹக்கா செய்தது அரங்கத்தை அதிர செய்தது. போர், வெற்றி, ஒற்றுமை, இன குழு பெருமை என எல்லாவற்றையும் சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

அந்த வகையில் நியூசிலாந்தின் இளம் பெண் எம்.பி. வெற்றி முழக்கமிட்டு பேசியது பாராளுமன்றத்தை அதிர வைத்தது. தொடர்ந்து பேசிய அவர், "நான் உங்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன்.. ஆனாலும் நான் உங்களுக்காகவே வாழ்வேன்," என்று தெரிவித்தார்.
ஆக்லாந்து மற்றும் ஹாமில்டன் இடையே உள்ள ஹன்ட்லி என்ற சிறு நகரத்தில் வசிக்கும் மைபி கிளார்க் தனது மௌரி இனத்தின் லூனார் காலண்டரின் படி குழந்தைகளுக்கு தோட்டத்துறை சார்ந்த கல்வியை கற்பித்து வருகிறார். எம்.பி. என்ற பதவியை தாண்டி இவர் தன்னை மௌரி மொழியை காப்பாற்றவும், அதனை உலகறிய செய்யவும் நோக்கமாக கொண்டிருக்கிறார்.






