என் மலர்
உலகம்
- பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
- சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பாதுகாப்பு வளையத்தை மீறி நேற்று ஒரு மர்ம கார் வெள்ளை மாளிகை நோக்கி வந்தது. திடீரென அந்த காரை ஓட்டி வந்தவர் வெள்ளை மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற நுழைவு வாயில் மீது பயங்கரமாக மோதினார்.
இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். இது தற்செயலாக நடந்த விபத்தா?அல்லது சதி செயலில் ஈடுபடும் வகையில் அவர் காரை மோதினாரா? என்பது தொடர்பாக அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த போது அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெள்ளை மாளிகையில் இல்லை. அவர் வெளியூரில் சுற்றுப்பயணத்தில் இருந்தார்.
வெள்ளை மாளிகையில் இது போன்ற அத்துமீறல்கள் அவ்வப்போது நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டு பராக் ஒபாமா அதிபராக இருந்த போது ராணுவ வீரர் ஒருவர் வெள்ளை மாளிகை புல்வெளி பகுதியில் சட்டைப்பையில் கத்தியுடன் நுழைந்து பரபரப்பாக்கினார்.
இதன் தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகை வேலியை அளந்த ஒருவர் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் ஹமாஸ்க்கு ஆதரவாக ஹிஸ்புல்லா செயல்பட்டு வருகிறது.
- லெபனானின் தெற்குப் பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. மூன்று மாதங்களை கடந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் லெபனான் தெற்குப் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று சொகுசு காரில் சென்ற ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதியை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹிஸ்புல்லா தளபதி விஸ்ஸாம் அல்-டவில் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது.
லெபனானின் தெற்குப் பகுதியில் ரகசியமாக செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா குழுவின் தளபதியாக செயல்பட்டு வந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இது ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆத்திரமூட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல்- காசா இடையிலான சண்டை மத்திய கிழக்கு போராக விரிவடையும் என அச்சம் நிலவுகிறது.
அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். ஏழு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டதன் காரணமாக சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 23 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 23 லட்சம் மக்கள் தொகை கொண்ட காசாவில் இருந்து சுமார் 85 சதவீதம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
- சுற்றுலா சென்ற 30-க்கும் மேற்பட்டோர் மினி பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
- முந்திச் செல்லும்போது விபத்து ஏற்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பிரேசில் நாட்டின் வடகிழக்கு மாநிலம் பாஹியா. இந்த மாநிலத்தின் வடக்கு கடற்கரை நகரான குவாராஜூபாவில் உள்ள கடற்கரைக்கு ஒரு மினி பேருந்தில் பலர் சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஜாக்கோபினா நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சயோ ஜோஸ் டோ ஜேக்குயூப் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி பேருந்து வந்து கொண்டிருக்கும்போது, லாரி ஒன்று திடீரென மினி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 25 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஜாக்கோபினா நகராட்சி மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
முந்திச் செல்லும்போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்தோனேசியாவில் உள்ள தலாட் தீவுகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2.18 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்தோனேசியா தீவுகளில் நிலநடுக்கம் என்பது வழக்கமான ஒன்றதாகிவிட்டது. அடிக்கடி அங்குள்ள தீவுகள் அதிர்ந்த வண்ணமே உள்ளன.
- கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில், பொங்கல் கலாச்சார விழா கொண்டாடப்பட்டது
- 1500 பரத கலைஞர்கள் கலந்துகொண்ட பரத நாட்டிய நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
இலங்கையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் ஜன.6-ம் தேதி பொங்கல் விழா தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவில் முதல் நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி ஜன.6-ம் தேதி காலை 10 மணிக்கு திரிகோணமலை, சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்சியில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா எம்.பி. டத்தோ ஸ்ரீமுருகன் சரவணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில் இலங்கை அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் நந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து, பொங்கல் கலாச்சாரா விழா இன்று(ஜன.8) கொண்டாடப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில், திரிகோணமலை ஹிந்து கல்லூரி மைதானத்தில் இந்த விழாவானது நடைபெற்றது.கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில், பொங்கல் கலாச்சார விழா கொண்டாடப்பட்டது
இந்நிகழ்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு 1,008 பானையில் பொங்கல் வைத்தனர். அதனை தொடர்ந்து, 1500 பரத கலைஞர்கள் கலந்துகொண்ட பரத நாட்டிய நிகழ்சி நடைபெற்றது. வண்ண கோலமிட்டு ஏராளமான பெண்கள் கலந்துகொண்ட இந்த பொங்கல் கலாச்சார விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
- அமெரிக்க கடன் சுமை தற்போது $34 ட்ரில்லியனை தாண்டி விட்டது
- இந்திய மதிப்பில் அமெரிக்க கடன், சுமார் ரூ.2,82,68,62,00,00,00,000.00 ஆகும்
நியூயார்க் நகரை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு நிதி நிறுவனம், ஜேபி மோர்கன் (JP Morgan).
மிகப்பெரும் நிதி முதலீட்டு ஆலோசனை மற்றும் நிதி சேவைகள் ஆகியவற்றில் நீண்ட அனுபவம் மிக்க இந்நிறுவனம், உலக நாடுகளின் நிதி நிலவரம் குறித்து அவ்வப்போது கருத்துக்கள் வெளியிடுவது வழக்கம்.
அமெரிக்க கடன் சுமை தற்போது $34 ட்ரில்லியன் ($34 trillion) தொகையை தாண்டி விட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,82,68,62,00,00,00,000.00 ஆகும்.
"2030-ஆம் ஆண்டிற்குள் கடனுக்கான வட்டி தொகையை மட்டுமே கணக்கிட்டால் அது அமெரிக்காவின் மொத்த வருமானத்தை விட பல மடங்கு அதிகமாக பெருகி விடும்" என அமெரிக்க பட்ஜெட் அலுவலகம் சமீபத்தில் தெரிவித்தது.
2024-ஆம் ஆண்டிற்கான அமெரிக்காவின் எதிர்கால நிதி நிலை குறித்து ஜேபி மோர்கன் கருத்து வெளியிட்டுள்ளது.
அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மலை போல் குவிந்திருக்கும் அமெரிக்க கடன் சுமை "தண்ணீரில் கொதிக்கும் தவளை" நிலையை போன்று உள்ளது.
பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. கடன் சுமையை சமாளிக்க மேலும் பெரும் நிதி தேவைப்படுகிறது. ஆனால், அரசு தொடர்ந்து கடன் வாங்குவதை நிறுத்தவில்லை.
அரசு எடுக்கும் ஒவ்வொரு நிதி ஊக்க நடவடிக்கைகளும், கடன் சுமையை தாங்க முடியாமல் வெடிக்கும் நிலையை நோக்கி நாட்டை கொண்டு செல்கிறது. அந்த நிலைமையும் ஒரு நாள் வெடித்து விடும்.
இவ்வாறு ஜேபி மோர்கன் தெரிவித்துள்ளது.
கொதிக்கும் தண்ணீரில் போடப்பட்ட தவளை அதை உடனே உணர்ந்து கொண்டால் வெளியே குதித்து தப்பி விடலாம். ஆனால், அது உணர தாமதித்தால், சிறுக சிறுக வெந்து, தப்பிக்க முடியாமல் உயிரிழக்கும்.
அதே போன்று ஒரு நெருக்கடியான நிலையில் தவறை உணர்ந்து உடனடியாக செயலாற்ற வேண்டியவர்கள் செயலாற்ற தவறினால் அந்த நெருக்கடி வளர்ந்து, மீண்டும் மீளவே முடியாத அளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
இந்நிலை நிர்வாக மேலாண்மையில், "தண்ணீரில் கொதிக்கும் தவளை நிலை" என குறிப்பிடப்படும்.
- கூகுள் டூடுலில் இரண்டரை நிமிட யூடியூப் வீடியோ வெளியிடப்பட்டது.
- கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார்.
ஸ்டீபன் ஹாக்கிங் என்ற ஒரு பெயர் உலகில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்றாகும். அவரது பெயர் பொதுவாக சக்கர நாற்காலியில் இருக்கும் ஒரு நபரின் படங்களுடன் நினைவுப்படுத்தப்படுகிறது. ஆனாலும் அவரின் சாதனைகளை எண்ணிபார்க்கும் போது அவரின் இயக்கமின்மை அவரை ஒருபோதும் நிறுத்தவில்லை என்பது புரியும்.
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8, 1942 இல் பிறந்தார். அண்டவியல், கோட்பாட்டு இயற்பியல் துறைகளில், குறிப்பாக கருந்துளைகள் மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் ஆகியவற்றில் அவர் செய்த அற்புதமான பணிகளுக்காக அவர் பரவலாக அங்கீகரிக்கப்பட்டார்.

ஹாக்கிங்கிற்கு 21 வயதில் ஒரு அரிய நரம்பியல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது அவரது உடலை படிப்படியாக செயலிழக்கச் செய்தது. உடலை கிட்டத்தட்ட உடலை அசைக்க முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இருந்தபோதிலும், அவர் தனது கல்விப் பணியைத் தொடர்ந்தார். ஆக்ஸ்போர்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும்,கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் இருந்து முனைவர் பட்டமும் பெற்றார்.
பிக் பேங் கோட்பாட்டின் மூலம் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய நமது புரிதலுக்கு ஹாக்கிங் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார். அவரது அறிவியல் சாதனைகளுக்கு மேலதிகமாக, ஹாக்கிங் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் அறிவியலின் தொடர்பாளராகவும் இருந்தார்.

அவர் எழுதிய பல்வேறு புத்தகங்கள் விற்பனையில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன. அறிவியல் மற்றும் சமூகத்தில் ஹாக்கிங்கின் தாக்கம் அளப்பரியது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார். அவர் ராயல் சமுதாயத்தின் (சொசைட்டி) சக உறுப்பினராகவும், பல மதிப்புமிக்க அறிவியல் நிறுவனங்களின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
ஹாக்கிங் தனது 76வது வயதில் மார்ச் 14, 2018 அன்று காலமானார். ஸ்டீபன் ஹாக்கிங்கின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் டூடுலில் இரண்டரை நிமிட யூடியூப் வீடியோவை வெளியிட்டது. அதில் கணினியால் உருவாக்கப்பட்ட அவரது குரல் இடம்பெற்றிருக்கிறது.
- போலியோ தடுப்பு முகாமிற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையினர் சென்றனர்
- காயமடைந்தவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பாகிஸ்தானில் சமீப சில மாதங்களாக நாடு முழுவதும் ஆங்காங்கே பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், தற்கொலை படை தாக்குதல்களும் நடைபெறுகின்றன.
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துங்க்வா பிராந்தியம் (Khyber Pakhtunkhwa province). இங்குள்ள பஜவுர் (Bajaur) மாவட்டத்தின் மெஹ்முந்த் பகுதியில், போலியோ நோய் தடுப்புக்காக தடுப்பூசி செலுத்தும் முகாம் ஒன்று நடைபெற இருந்தது.
இதற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையினர் நியமிக்கப்பட்டனர்.
இப்பணிக்காக சுமார் 25 காவல்துறையினரை ஏற்றி கொண்டு சென்ற காவல்துறை டிரக் ஒன்றின் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் சுமார் 5 காவல்துறையினர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த காவல்துறையினர் பஜவுர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எதிர்பாராத இந்த குண்டு வீச்சு சம்பவத்தினால், அப்பகுதியில் நடைபெறுவதாக இருந்த போலியோ தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டது.
"இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களால் காவல்துறையினரின் மன உறுதியும் முனைப்பும் எந்த வகையிலும் குறைந்து விடாது" என கைபர் பக்துங்க்வா பிராந்திய காபந்து முதல்வர் அர்ஷத் ஹுசைன் ஷா தெரிவித்தார்.
இன்னும் சில தினங்களில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியும், பயங்கரவாத தாக்குதல்களும் அடுத்து வரும் ஆட்சிக்கு சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- பேரா. மைக்கேல் மர்மாட், இங்கிலாந்தின் புகழ் பெற்ற "ஸர்" பட்டம் பெற்றவர்
- தங்களை காக்க போதுமான வசதி இல்லாததால் 10,62,334 பேர் உயிரிழந்துள்ளனர்
பல்வேறு உயர்கல்வி ஆராய்ச்சிகளுக்காக செயல்படும் பல்கலைக்கழகமான யுசிஎல் (UCL) எனும் யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ளது.
"ஸர்" (Sir) பட்டம் பெற்ற பேரா. மைக்கேல் மர்மாட் (Prof. Sir Michael Marmot) தலைமையில் "இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஈக்விடி" எனும் உலக மக்களின் சுகாதார ஆராய்ச்சி மையம் இங்கு செயல்படுகிறது.
இங்கிலாந்து மக்களின் வாழ்நாள் குறித்து பேரா. மைக்கேல் பல தரவுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
2011-ஆம் வருடத்திற்கு பிறகு இங்கிலாந்தில் அகாலமாக உயிரிழந்தவர்களில் பலருக்கு வறுமை, அரசின் சிக்கன நடவடிக்கைகள், கோவிட் பெருந்தொற்று ஆகியவையே மரணத்திற்கு காரணமாக இருந்தது.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏழை மக்கள் புற்று நோய், இருதய நோய்கள் மற்றும் பிற நோய்களில் இருந்து தங்களை காத்து கொள்ள முடியாமல் இறக்கின்றனர்.
2011லிருந்து 2019 வரையிலான காலத்தில் 10,62,334 பேர் சிகிச்சை பெற தேவையான பொருளாதார வசதி இல்லாததால் அகாலமாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் பொருளாதார ரீதியில் வளமையான 10 சதவீதம் பேர் வசிக்கும் இடங்களில் வாழ்ந்திருந்தால் அகால மரணம் ஏற்பட்டிருக்காது.
2020ல் மட்டும் 1,51,615 அகால மரணங்கள் நிகழ்ந்தன. இதில் பெரும்பாலானவை கோவிட் பெருந்தொற்றால் விளைந்தவை.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேரா. மைக்கேல் மர்மாட், "ஏழ்மையாகவும் சுகாதாரமற்றதாகவும் நம் நாடு மாறி வருகிறது. இங்கு பணக்காரகர்ளால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடிகிறது. தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள்; ஆனால், வசதி குறைவால் அவர்களால் தங்களை காத்து கொள்ள முடியாமல், அவர்களின் ஆயுட்காலம் குறைகிறது. இது அவர்கள் குற்றமில்லை. அரசியல்வாதிகள்தான் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை தர வேண்டும்; ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வதில்லை" என தெரிவித்தார்.
"ஹெல்தி லைஃப் இயர்ஸ்" (healthy life years) எனப்படும் ஆரோக்கிய குறைபாடுகள் ஏதும் இன்றி மனிதர்கள் வாழும் காலகட்டத்தின் அளவு குறைந்து கொண்டே வருவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
- இந்திய திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் விடுமுறையை கழிக்க அங்கு சென்றனர்
- சீன பயணத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது
தெற்கு ஆசியாவில், இந்திய கடலில் உள்ள தீவு நாடு, மாலத்தீவு (Maldives). சொகுசு ஓட்டல்களும் சுற்றுலா விடுதிகளும் நிறைந்த சுமார் 1,192 சிறு தீவுகள் இங்குள்ளன. இந்நாட்டின் வருவாயில் பெரும்பகுதி இந்திய சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது.
இந்திய கிரிக்கெட் மற்றும் திரை பிரபலங்கள் விடுமுறையை கழிக்க, அங்கு சென்று இயற்கை காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளும், தேனிலவு கொண்டாடுவோர்களும் மாலத்தீவிற்கு குவிகின்றனர்.
அரசியல் ரீதியாக இந்திய-மாலத்தீவு உறவு நீண்ட காலமாக சுமூகமாக இருந்தது.
கடந்த 2023ல், அங்கு நடந்த தேர்தலில் அப்போதய அதிபர் இப்ராஹிம் மொஹமத் தோல்வியடைந்து, எதிர்கட்சியை சேர்ந்த முகமத் முய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது 45 வயதாகும் முய்சு, சீன நட்புறவை விரும்புபவர். பதவியேற்றதும் மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவத்தின் சிறு குழுவை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டார்.
சில தினங்களுக்கு முன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு சென்று அங்குள்ள இயற்கை காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அங்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார். இப்பதிவுகளுக்கு எதிராக மாலத்தீவின் 3 அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை எழுப்பியிருந்தனர்.
இந்தியா முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து அந்த மூவரையும் முய்சு இடைநீக்கம் செய்ய வேண்டி வந்தது.
இந்நிலையில் நேற்று, அதிபர் முய்சு, தனது மனைவி சஜிதா மொஹமத் உடன் சீனாவிற்கு 5-நாள் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.
இந்திய உறவிலிருந்து விலக்கி, மாலத்தீவை தனது மறைமுக கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள விரும்பும் சீனாவின் முயற்சியாக இவையனத்தும் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
- இரு நாட்டு உறவுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி இருக்கிறது.
- இந்தியர்கள் நியாயமான கோபத்தில் உள்ளனர்.
மாலே:
பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சத்தீவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். ஆழ்கடலில் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டார். இதையடுத்து தனது பயண அனுபவம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்கள் தெரிவித்து இருந்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து இருந்தார்.
இதனை விமர்சிக்கும் வகையில் மாலத்தீவு மந்திரிகள் மரியம் ஷியூனா, மல்சா ஷரீப், அப்துல்லா மஹ்சூம் மஜீத் ஆகிய 3 பேரும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். சுற்றுலாவை பொறுத்தவரை மாலத்தீவுடன் இந்தியா போட்டியிட முடியாது என்பது போன்ற கருத்துகளை தெரிவித்தனர். இது இரு நாட்டு உறவுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி இருக்கிறது.
மந்திரிகளின் இந்த கருத்துக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு இந்தியா தரப்பில் விளக்கமும் கேட்கப்பட்டது. இது மாலத்தீவு அதிபர் முகமது முய்சுக்கு நெருக்கடியை கொடுத்தது.

மந்திரிகளின் கருத்து அரசின் கருத்து இல்லை என்றும் அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை தெரிவித்த 3 மந்திரிகளையும் சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் மாலத்தீவின் முன்னாள் துணை சபாநாயகரும் தற்போதைய எம்.பி.யுமான ஈவா அப்துல்லா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
#WATCH | On Maldives MP's post on PM Modi's visit to Lakshadweep, Maldives MP and Former Deputy Speaker, Eva Abdullah says "It is absolutely critical that the Government of Maldives distanced itself from the comments by the minister. I know that the government has suspended the… pic.twitter.com/RzgitjAfos
— ANI (@ANI) January 7, 2024
கருத்துக்கள் மீதான சீற்றம் புரிகிறது. இந்தியர்கள் நியாயமான கோபத்தில் உள்ளனர். இந்த கருத்துக்கள் மூர்க்கத்தனமானது. வெட்கக் கேடானது. இந்திய மக்களிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்கு திரும்பி வாருங்கள் என இந்திய மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தேர்தலை நியாயமான முறையில் நடத்த ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவ வேண்டும்- எதிர்க்கட்சி
- ஆளும் அவாமி லீ கட்சி தலைமையிலான அரசாங்கம் அதனை ஏற்கவில்லை.
வங்காளதேசம் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 50 சதவீத இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதனால் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காளதேச நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.
300 இடங்களில் 264 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்டபோது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதன் கூட்டணி கட்சியான ஜதியா கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் மொத்தம் 350 தொகுதிகள் உள்ளன. இதில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே 300 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். ஆனால் ஒரு வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலை நியாயமான முறையில் நடத்த ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவ வேண்டும். அதன் தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆளும் அவாமி லீ கட்சி தலைமையிலான அரசாங்கம் அதனை ஏற்கவில்லை.
இதனால் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மேலும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைவருமான கலீதா ஜியா (வயது 78) வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்ட 5 பள்ளிக்கூடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது.
இந்த பதற்றத்துக்கு மத்தியில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. எனவே தேர்தலை அமைதியான முறையில் நடத்த நாடு முழுவதும் போலீசார், ராணுவத்தினர் என சுமார் 7½ லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.






