என் மலர்
உலகம்
- துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய மாணவன் தற்கொலை செய்து கொண்டான்
- உடனடியாக சட்டங்களை இயற்றுவது உணர்ச்சிகரமான தீர்வு என்றார் விவேக்
அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது, அயோவா (Iowa) மாநிலம்.
இம்மாநில தலைநகரான டெஸ் மாயின்ஸ் (Des Moines) நகரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெர்ரி உயர் நிலை பள்ளி (Perry High School).
நேற்று காலை இங்கு நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு மாணவர் உயிரிழந்தார்; 5 பேர் காயமடைந்தனர். அதில் ஒருவர் அப்பள்ளி தலைமை ஆசிரியர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய டைலன் பட்லர் (Dylan Butler) எனும் 17 வயது மாணவர் தன்னை தானே சுட்டு கொண்டு உயிரிழந்தான்.
அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கிய இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தற்போது வரை இதற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
சில வருடங்களாக அமெரிக்காவில் பள்ளி வளாகங்களில் இது போன்று நடைபெறும் துப்பாக்கிச் சூடுகளும் அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
கடந்த 2023ல், அமெரிக்காவில், பள்ளி வளாகங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 82 என தரவுகள் தெரிவிக்கின்றன. இவற்றில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் அடங்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 37 ஆகும்.
பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் மனநல நிபுணர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இத்தகைய சம்பவங்களை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட ஆதரவு தேடி வரும் விவேக் ராமசாமி, இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து தெரிவித்ததாவது:
துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது எதிர்வினையாகும். இப்பிரச்சனை அடிப்படையில் மனநலம் சம்பந்தப்பட்டது.
சமூகத்தில் உள்ள ஆழமான பிரச்சனைகளே இதற்கு காரணம்; துப்பாக்கிகளின் எண்ணிக்கை அல்ல. பிரச்சனையின் வேர் வரை சென்று அதை தீர்க்க முனையாமல் இருப்பது தவறான அணுகுமுறை.
ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் உடனடியாக ஒரு சட்டமியற்றுவதும் நாங்களும் ஏதோ செய்து விட்டோம் என கூறுவதும் வெறும் உணர்ச்சிகரமான தீர்வு.
இன்றோ, நாளையோ "துப்பாக்கிகளை தடை செய்யுங்கள்" எனும் கூக்குரல் அதிகரிப்பதை பார்க்கத்தான் போவீர்கள்.
"காரணமின்றி செயல்படுதல்" எனும் நோய் நமது சமூகத்தின் இதயம் மற்றும் உயிரிலும் கலந்து விட்டது.
இவ்வாறு விவேக் கூறினார்.
இப்பகுதிக்கு அருகே நடைபெறுவதாக இருந்த தனது பிரச்சார கூட்டத்தை இச்சம்பவத்தினால் அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களுக்கான பிரார்த்தனை கூட்டமாக விவேக் ராமசாமி மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் வணிக கப்பல் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
- கடத்தப்பட்ட கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
மொகடிஷு:
ஆப்பிரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் வணிக கப்பல் (எம்.வி. லிலா நார்போல்க்) கடத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.
இது குறித்து தகவலறிந்த இந்திய கடற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கப்பலில் லைபீரியாவின் கொடி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், கடத்தப்பட்ட கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சென்னை, கடத்தப்பட்ட கப்பலை நோக்கி நிலைமையை சமாளிக்க நகர்ந்து வருகிறது என தெரிவித்தார்.
மேலும், இந்தியக் கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம் கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. அப்பகுதியில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த நிலைமையும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. நட்பு நாடுகளுடன் இணைந்து இப்பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- பிணைக்கைதிகளை மீட்கும்வரை போர் தொடர்ந்து நடைபெறும்.
- இஸ்ரேல் குடிமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், உள்ளூர் அமைப்புகள் மூலம் காசா நிர்வகிக்கப்படும்.
இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் காசா பகுதியின் போருக்குப் பிந்தைய நிர்வாகத்திற்கான தனது திட்டத்தை முன்வைத்தார்.
போர் முடிவடைந்த பின்னர் பாலஸ்தீன பகுதியை ஹமாஸ் அல்லது இஸ்ரேல் ஆளப்போவதில்லை. கடந்தாண்டு அக்டோபர் 7-ந்தேதி பிடித்துச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளை மீட்டெடுக்கும் வரை, ஹமாஸின் ராணுவ மற்றும் ஆளும் திறன்களை சிதைத்து, எஞ்சியிருக்கும் ராணுவ அச்சுறுத்தல்களை அகற்றும் வரை போர் தொடரும்.
ஹமாஸ் கட்டுப்படுத்தாத வகையில், இஸ்ரேல் குடிமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், உள்ளூர் அமைப்புகள் மூலம் காசா நிர்வகிக்கப்படும்.
போரின் இலக்குகள் அடையப்பட்ட பிறகு காசா பகுதியில் இஸ்ரேலியர்களின் நடமாட்டம் இருக்காது. ஆனால் இஸ்ரேல் அப்பகுதிக்குள் செயல்படும் திறனை தக்க வைத்துக் கொள்ளும்.
காசாவில் வாழும் மக்கள் பாலஸ்தீனியர்கள். எனவே பாலஸ்தீனிய அமைப்புகள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக விரோத நடவடிக்கைகளோ அச்சுறுத்தல்களோ இருக்காது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் அமைப்பு நிர்வாகத்தில் அமர்த்தப்படும்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று மத்திய கிழக்கு பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இந்த திட்டத்தை முன்வைத்துள்ளார்.
- வடகொரியாவின் தாக்குதலுக்கு தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சியோல்:
வடகொரியா-தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
தங்களை சீண்டினால் அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்று தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு சமீபத்தில் வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் தென் கொரியாவின் யோன் பியோங் தீவுப்பகுதியை குறிவைத்து இன்று காலை பீரங்கி மூலம் குண்டுகளை வீசி வடகொரியா திடீர் தாக்குதல் நடத்தியது. 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் யோன் பியோங் தீவுக்கு அருகே இருநாட்டிற்கும் இடையேயான பாதுகாக்கப்பட்ட மண்டலமான கடல்பகுதியில் விழுந்தன. தாக்குதலையடுத்து தீவுப் பகுதியில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி தென்கொரிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பீரங்கி தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பை தென்கொரியா அதிகரித்து உள்ளது. வடகொரியாவின் தாக்குதலுக்கு தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இது கொரிய தீபகற்பத்தில் அமைதியை அச்சுறுத்தும் ஆத்திரமூட்டும் செயல்.
இந்த அதிகரித்து வரும் நெருக்கடிக்கு வட கொரியா முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம், மேலும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அவர்களை கடுமையாக வலியுறுத்துகிறோம்.
எங்கள் ராணுவம் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. மேலும் வட கொரியாவின் ஆத்திர மூட்டல்களுக்கு பதிலளிக்கும் வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- ஹெச்1-பி விசா நடைமுறை இந்தியர்களுக்கு பெரிதும் பயனளித்தது
- கள்ளத்தனமாக வருபவர்களுக்கு வசதி செய்திருக்கிறோம் என்கிறார் மஸ்க்
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு உள்ளே நுழைபவர்களை தடுக்க எல்லைகளை பலப்படுவது உள்ளிட்ட பல முயற்சிகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. அதே போல், சட்டரீதியாக அனுமதி பெற்று அங்கு கல்வி பயிலவும், பணியாற்றவும் வருபவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்து பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
உலகின் பல நாடுகளிலிருந்து அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு, குடியுரிமை இல்லாமல், அயல்நாட்டு பணியாளராக மட்டுமே நீண்ட காலம் அமெரிக்காவில் பணி புரிய வாய்ப்பளித்து வருவது ஹெச்1-பி விசா (H1-B visa) நடைமுறை.
இது இந்தியாவில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மிகவும் பயனளித்து வந்தது.
ஹெச்1-பி விசா எண்ணிக்கைக்கும் அரசு உச்சபட்ச அளவை நிர்ணயித்துள்ளது.
கடந்த 2020 ஜூலை மாதம், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புது விசா வழங்கலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
தற்போதைய ஜோ பைடன் அரசு விசா வழங்கலில் கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை.
இந்நிலையில், சுமார் 7 லட்சத்திற்கும் மேல் திறமை வாய்ந்த பணியாளர்கள் அமெரிக்காவிற்கு வர காத்திருக்கும் நிலையில், 85 ஆயிரத்திற்கு மேல் ஹெச்1-பி விசா வழங்கப்படாது என உச்சவரம்பை அமெரிக்கா நிர்ணயித்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அதே போன்று, முன்னாள் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரின் ஆட்சிகளிலும் தற்போது ஜோ பைடனின் ஆட்சியிலும் சட்டவிரோதமாக உள்ளே நுழைபவர்களின் எண்ணிக்கை குறித்து ஒப்பிட்டு தகவல் வெளியானது.
அதன்படி, கடந்த ஆட்சிகளில் 98,000 என இருந்த சட்டவிரோதமாக உள்ளே நுழைவோரின் எண்ணிக்கை தற்போதைய அதிபர் பைடன் காலத்தில் 2,42,000 என உயர்ந்துள்ளது.
இந்த விவரங்களை ஒப்பிட்டு உலகின் நம்பர் 1 கோடீசுவரரும் டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் விமர்சித்துள்ளார்.
அதில் மஸ்க் தெரிவித்திருப்பதாவது:
திருட்டுத்தனமாகவும், சட்டவிரோதமாகவும் அமெரிக்காவிற்கு உள்ளே நுழைவது மிக எளிதாக உள்ளது. ஆனால், சட்டரீதியாக உள்ளே நுழைய விரும்புபவர்களுக்கு அது மிக கடினமாக்கப்பட்டுள்ளது.
நாம் சட்டபூர்வ வழிமுறைகளை கடினமாக்கி, சட்டவிரோத வழிகளை எளிதாக்கி விட்டோம்.
இது அசல் பைத்தியக்காரத்தனம்.
பைடனின் நிர்வாகம் கள்ளத்தனமாக வருபவர்களுக்குத்தான் வசதி செய்து கொடுத்துள்ளது என தரவுகள் உறுதிபடுத்தி உள்ளன.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- செங்கடலில் சர்வதேச கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
- தாக்குதல் தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போரில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் ஆதரவாளர்களாக செயல்படுகிறார்கள். இதையடுத்து செங்கடலில் இஸ்ரேலில் இருந்து செல்லும் கப்பல் மற்றும் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தாக்குதலை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. செங்கடலில் அமெரிக்க போர் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசும் ஏவுகணை மற்றும் டிரோன்களை இடைமறித்து அழித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான 12 நாடுகள் கொண்ட கூட்டுப்படைகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் இல்லையென்றால் ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் எச்சரிக்கையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிராகரித்து அடிபணிய மறுத்துள்ளனர். அவர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களுடன் ஆளில்லா படகு ஒன்றை அனுப்பினர். அமெரிக்கா கடற்படை மற்றும் செங்கடலில் பயணித்த வணிகக் கப்பல்கள் இருந்த 2 மைல்கள் பகுதிக்குள் அந்த ஆளில்லா டிரோன் படகு வெடித்தது. இதில் எந்த சேதமும் அல்லது உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க கடற்படை தெரிவித்தது.
- கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள பலகை மீது பிரதமர் மோடிக்கு எதிராக வாசகம் எழுதப்பட்டிருந்தது.
- இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியா:
காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள், வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதில் இந்து கோவில், இந்திய தூதரகம் உள்ளிட்டவை மீது தாக்குதல் நடத்தப்பட்டன. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு இந்தியா, அமெரிக்கா கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்த நிலையில் கலிபோர்னியாவில் இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் ஹேவார்டில் பகுதியில் விஜய் ஷெராவாசி என்ற இந்து கோவில் உள்ளது.
இந்த கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள பலகை மீது பிரதமர் மோடிக்கு எதிராக வாசகம் எழுதப்பட்டிருந்தது. மேலும் காலிஸ்தான் வாழ்க என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்து கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் எக்ஸ் வலை தளத்தில் கூறும்போது, இந்த சம்பவம் இந்திய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சியாளர்களுக்கு எதிராக விரைவான விசாரணை மற்றும் உடனடி நடவடிக்கைக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது,
- திருடியவன் பணத்தை எடுத்து கொண்டு பையை டான் நதியில் வீசியுள்ளான்
- பையில் இருந்த கிரெடிட் கார்டில் 1993 வருடம் குறிப்பிடப்பட்டிருந்தது
வட கிழக்கு ஸ்காட்லேண்டு பகுதியில் உள்ள நகரம், அபர்டீன் (Aberdeen).
அபர்டீனில் வசிப்பவர் 81 வயதாகும் ஆட்ரி ஹே (Audrey Hay). சுமார் 30 வருடங்களுக்கு முன் இவரது பணியிடத்தில் இவரின் விலை உயர்ந்த கைப்பை திருடு போனது. பறி போன அவர் பையில் அப்போது சுமார் 200 பவுண்ட் பணம் இருந்தது.
ஆட்ரி காவல்துறையிடம் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினரின் தேடலில் கைப்பை கிடைக்கவில்லை.
திருடியவன் அந்த பையை டான் நதியில் (River Don) வீசி உள்ளான்.
கடந்த செவ்வாய் அன்று மெய்சி கூட்ஸ் (Maisie Coutts) எனும் 11-வயது சிறுமி தான் வளர்க்கும் நாயுடனும், பெற்றோருடனும் டான் நதிக்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கரை ஒதுங்கியிருந்த ஒரு பையை கண்டார். அதில் பேனாக்கள், சில்லறை நாணயங்கள், உதட்டு சாயம், ஆபரணங்கள், சாவி, சில மாத்திரைகள் என பல பொருட்கள் இருந்தன.
அதில் இருந்த சில கிரெடிட் கார்டுகளில் 1993 வருடம் குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்பையின் மேலே இருந்த சில அடையாளங்கள் மற்றும் உள்ளே இருந்த பொருட்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உரிமையாளரை தேட தொடங்கினார் அந்த சிறுமி.
தனது நீண்ட தேடலில் அப்பையின் உரிமையாளரான ஆட்ரியை கண்டு பிடித்தார் மெய்சி. உடனே அவரை தொடர்பு கொண்டு அப்பையை அவரிடமே சேர்த்தார்.

இது குறித்து ஆட்ரி, "நான் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்கள் ஆகியும் அது அப்படியே உள்ளது. நான் தொலைத்த ஒரே பை இதுதான்" என தெரிவித்தார்.
"சமூக வலைதளங்களின் தாக்கமும், பயன்பாடும் நம்ப முடியாததாக இருக்கிறது" என மெய்சியின் தாயார் கூறினார்.
மெய்சியின் நேர்மைக்கும், உரிமையாளரிடம் பொருளை ஒப்படைக்க அவர் எடுத்த முயற்சிகளுக்கும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
- நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஈவ் பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 31-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- குழந்தைகளுக்கு எஸ்ரா, எசேக்கியேல் என அவர்களின் பெற்றோர் பெயர் சூட்டி உள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதி பில்லி ஹம்ப்ரே-ஈவ். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஈவ் பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 31-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இரவு 11.48 மணிக்கு அவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
பின்னர் 40 நிமிட இடைவெளியில் அவருக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அடுத்தடுத்த ஆண்டில் இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த குழந்தைகளுக்கு எஸ்ரா, எசேக்கியேல் என அவர்களின் பெற்றோர் பெயர் சூட்டி உள்ளனர்.
இதேபோன்ற சுவாரசியமான சம்பவம் குரேஷியா நாட்டிலும் அரங்கேறி உள்ளது. அங்கு ஒரு பெண்ணுக்கு டிசம்பர் 31-ந்தேதி இரவு 11.59 மணிக்கு ஒரு பெண் குழந்தையும், 2 நிமிடம் கழித்து ஜனவரி 1-ந்தேதி 12.01 மணிக்கு மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
- வழக்கை விசாரித்த கத்தார் கோர்ட்டு, கடந்த அக்டோபர் 26-ந்தேதி, 8 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.
- 8 பேருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்திய கடற்படையில் அதிகாரிகளாக பணியாற்றிய ஓய்வுபெற்ற 8 பேர் மேற்கு ஆசிய நாடான கத்தாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். வேறு நாட்டுக்காக தங்களது நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக 8 பேரையும் கத்தார் கடற்படை கைது செய்தது.
இந்த வழக்கை விசாரித்த கத்தார் கோர்ட்டு, கடந்த அக்டோபர் 26-ந்தேதி, 8 பேருக்கும் மரண தண்டனை விதித்தது. அதற்கு எதிராக அவர்களுடைய குடும்பத்தினர், கத்தார் மேல்முறையீட்டு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கில், மரண தண்டனையை சிறை தண்டனையாக குறைத்து, மேல்முறையீட்டு கோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டது.8 பேருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து கத்தார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய 8 இந்தியர்களின் வக்கீல்கள் குழுவுக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
- உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் நடத்தி வரும் நிலையில் வடகொரியா உதவி செய்து வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு.
- எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுத உற்பத்தியை அதிகரிக்க கிம் ஜாங் உன் முடிவு.
வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நீண்ட காலம் அணுஆயுதம் தொடர்பாக மோதல் இருந்து வருகிறது. தென்கொரியா உடன் அமெரிக்கா இணைந்து கொரியா தீபகற்பத்தில் போர் பயிற்சி மேற்கொள்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது வடகொரியாவை ஆத்திரமூட்டச் செய்துள்ளது.
இதனால் தங்களுடைய ஆயுத பலங்களை அதிகரிக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முடிவு செய்துள்ளார். தற்போது உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை லாஞ்சர்களை ரஷியாவுக்கு வழங்கியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவலின்படி வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அமெரிக்கா தங்களை கண்காணித்து வருவது நாட்டின் பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனக் கருதும் கிம் ஜாங் உன், ஏவுகணைகளை செலுத்தும் மொபைல் லாஞ்ச் வாகனங்களை இன்னும் அதிக அளவில் தயாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மொபைல் லாஞ்ச் வாகனம் மூலம் வடகொரியாவின் எந்த பகுதியில் இருந்து ஏவுகணைகைளை செலுத்த முடியும். கடந்த வாரம் ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை முற்றிலும் அழித்து விடுங்கள் என உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொக்கிஷமான வாளை கூர்மையாக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
அணுஆயுதங்களைத்தான் பொக்கிஷமான வாள் என கிம் ஜாங் உன் குறிப்பிட்டுள்ளார் என வடகொரியா- அமெரிக்கா மோதல் தொடர்ந்து கண்காணித்து வரும் உலக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
- பயணிகள் ரெயில் மீது மற்றொரு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
- ரெயில் பயணிகளின் பல பெட்டிகள் தரம் புரண்டதால் பலர் காயம்
இந்தோனேசியாவின் முக்கியமான தீவுகள் ஒன்றான ஜாவாவில் இன்று இரண்டு ரெயில்கள் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகரின் கிழக்கு மாகாணமான சுரபயாவில் இருந்து பாண்டுங் நோக்கி சென்ற ரெயில், சிகாலெங்காவில் இருந்து படாலராங் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் மீது பயங்கரமாக மோதியது.
இந்த ரெயில் விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இதில் குறைந்தது 3 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.






