என் மலர்
உலகம்
- ஈரானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின.
- குண்டுவெடிப்பில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.
ஈரானின் கெர்மான் பகுதியில் உள்ள முன்னாள் தளபதி சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், "ஈரானின் கெர்மன் நகரில் ஏற்பட்ட கொடூரமான குண்டுவெடிப்பு சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது."
"இந்த கடினமான சூழ்நிலையில், ஈரான் அரசு மற்றும் பொது மக்களிடம் எங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். எங்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் காயமுற்றோர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருடனேயே உள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.
- நான்சான் நகரின் மீது மியான்மர் ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் சீன மக்கள் காயமடைந்தனர்.
- சீனர்கள் தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
பீஜிங்:
மியான்மரின் வடக்கில் ராணுவம் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையே ஆயுத மோதல்கள் அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து அதிகரித்து வருகின்றன. அண்டை நாடான சீனா போர் நிறுத்தத்திற்கான அழைப்பைக் கோரியது.
இதற்கிடையே, சீனாவின் நான்சான் நகரின் மீது மியான்மர் ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் ஏராளமான சீன மக்கள் காயமடைந்தனர்.
மியான்மரின் ஆளும் ஆட்சிக் குழுவிற்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையிலான சண்டையின்போது பீரங்கி குண்டுகள் வீசப்பட்டதில் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீனர்கள் தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் கூறுகையில், வடக்கு மியான்மர் மோதலில் தொடர்புள்ள அனைத்து தரப்பினரும் உடனடியாக விரோதத்தை நிறுத்திவிட்டு, எல்லையில் அமைதி காக்கவும். அமைதிக்கு ஊறு விளைவிக்கும் மோசமான சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவித்தார்.
- மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று நேபாள நாட்டிற்கு சென்றார்.
- நேபாள அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
புதுடெல்லி:
இரண்டு நாள் பயணமாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று நேபாள நாட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், நேபாள நாட்டின் அதிபர் ராம் சந்திர பவுடெல் மற்றும் பிரதமர் புஷ்ப கலம் தாஹல் ஆகியோரை வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்தார்.

இரு நாடுகளிடையே நீர் மின்சக்தி, டிஜிட்டல் பணப்பரிமாற்றம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி அடுத்த 10 ஆண்டுகளில் நேபாளத்தில் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் முறைகள் குறித்த ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையெழுத்திடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 62 வயதான பெண் நீதிபதி தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்
- நீதிமன்ற மார்ஷல் ஒருவர் காயத்திற்கு சிகிச்சை பெறுகிறார்
லாஸ் வேகாஸ் நகரில், ஓரு தாக்குதல் வழக்கில் கைதானவர் டியோப்ரா ரெட்டன் (30).
உடல் ரீதியான கடுமையாக தாக்குதல் நடத்தியதற்காகவும், அத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான உடல் சீர்கேடு உருவானதாலும், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிவேடா நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
விசாரணை நிறைவுற்ற நிலையில், நீதிபதி மேரி கே ஹால்தஸ் எனும் 62 வயதான பெண் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
ரெட்டன் தன் குற்றத்தை ஒப்பு கொண்டதால் அவருக்கு சிறை தண்டனை வழங்கும் தனது தீர்ப்பை நீதிபதி படித்து கொண்டிருந்தார். ரெட்டனின் வக்கீல் தனது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை எழுப்பிய போது, அதனை நீதிபதி மேரி மறுத்தார்.
இதில் கடுமையாக கோபம் கொண்ட ரெட்டன், நீதிபதி அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன் உள்ள மேசையின் மீது அவரை அடிக்க பாய்ந்தார். அந்த மேசையில் இருந்த கொடி சின்னங்கள் கீழே விழுந்தன. இதையடுத்து அங்குள்ளவர்களில் 3 பேர் ரெட்டனை மடக்கி பிடித்தனர்.
காயங்கள் ஏதும் இல்லையென்றாலும் நீதிபதி மேரியின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்ற மார்ஷல்கள் எனப்படும் பாதுகாவலர்களில் ஒருவருக்கும் இந்த சம்பவத்தில் காயம் ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் முழுவதும் நீதிமன்ற கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது. அக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முன்னர் பதிவாகியிருந்த தாக்குதல் வழக்குகளுடன் இந்த வழக்கும் ரெட்டன் மீது பதிவாகியுள்ளது.
கட்டுப்பாடுகளுக்கு பெயர் பெற்ற அமெரிக்காவில், நீதிமன்றத்திலேயே ஒரு பெண் நீதிபதி மீது நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது.
- பேட் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை 9-ந்தேதி வரை கோர்ட்டு நிறுத்தி வைத்தது.
- தற்போது கிரிக்கெட் பேட் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் உத்தரவை உறுதி செய்தது.
பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கிடையே பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறையில் உள்ள முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாய் கட்சி தலைவரான இம்ரான் கான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த 2 மனுக்களை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
இந்த நிலையில் இம்ரான் கான் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி அக்கட்சி சின்னமான கிரிக்கெட் பேட் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தெக்ரிக்-இ-இன்சாப்பின் உட்கட்சி தேர்தலில் சட்ட விதிமுறைகளை மீறியதாக சின்னத்தை ரத்து செய்தது.
இதை எதிர்த்து பெஷாவர் ஐகோர்ட்டில் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி வழக்கு தொடர்ந்து உள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் முடிவை 9-ந்தேதி வரை கோர்ட்டு நிறுத்தி வைத்தது.
கோர்ட்டின் இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்தது. அதில் தீர்ப்பளித்த கோர்ட்டு, கிரிக்கெட் பேட் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் உத்தரவை உறுதி செய்தது. தேர்தல் ஆணையத்தின் முந்தைய உத்தரவு பிராந்திய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.
பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாக் கட்சிக்கு ஆதரவாக வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. தேர்தல் ஆைணயம் அதன் அரசியல் அமைப்பு தேர்தல் செயல்முறையை தொடங்கு மாறு அறிவுறுத்தப்படுகிறது என்று கோர்ட்டு தீர்ப்ப ளித்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் தலைவர் கோஹர்கான் கூறும்போது,
தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்.
பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலை கட்சி புறக்கணிக்கும் எந்த வாய்ப்பும் இல்லை. எங்களுக்கு கிரிக்கெட் மட்டையை ஒதுக்க முடியாவிட்டால், எங்களுக்கு வேறு சின்னம் தருமாறு சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் கேட்போம் என்றார்.
- 5000 சிறு செயற்கை கோள்களை விண்வெளியில் செலுத்தியுள்ளது.
- ஸ்பேஸ்எக்ஸ் நடவடிக்கை எடுத்திருப்பது சட்டவிரோதம் என வழக்கறிஞர் கூறினார்.
கடந்த 2002ல் அமெரிக்காவை சேர்ந்த கோடீசுவரரான எலான் மஸ்க், கலிபோர்னியா மாநிலத்தில் தொடங்கிய நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX).
செயற்கை கோள் தயாரிப்பு, விண்வெளியில் செயற்கை கோள்களை நிலைநிறுத்துதல், விண்வெளி ஆராய்ச்சி, தொலை தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், அதிவேக இணையவழி சேவைக்காக ஃபால்கன் (Falcon) எனும் ராக்கெட்டுகள் மூலம் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கை கோள்களை செலுத்துவதில் முன்னணியில் உள்ளது.
இதுவரை, இந்நிறுவனம் 5000 சிறு செயற்கை கோள்களை விண்வெளியில் செலுத்தியுள்ளது.
கடந்த 2022ல் ஸ்பேஸ்எக்ஸ் பணியாளர்கள் பலர், பணியிடத்தில் நிலவும் அசாதாரண சூழலை குறித்தும், எலான் மஸ்கின் பொதுவெளி நடவடிக்கைகள் குறித்தும் விமர்சித்து ஸ்பேஸ்எக்ஸ் உயர் அதிகாரி க்வைன் ஷாட்வெல் (Gwynne Shotwell) என்பவருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
அதில் மஸ்கின் நடத்தை, நிறுவனத்தின் பரந்த நோக்கங்களுக்கு எதிராக "கவனத்தை திசைதிருப்பும் இடையூறு" என குறிப்பிட்டிருந்தனர்.
இதை தொடர்ந்து புகார் அளித்த பணியாளர்களில் 8 பேரை ஸ்பேஸ்எக்ஸ் பணிநீக்கம் செய்துள்ளது.
விமர்சனம் செய்ததால் தங்களை முறைகேடாக பணிநீக்கம் செய்ததாக அவர்கள் அமெரிக்காவின் தேசிய பணியாளர் நல வாரியத்திடம் புகாரளித்தனர்.
"எந்தவித விருப்பு வெறுப்புமின்றி நிறுவனத்தின் குறிக்கோளை நிலைநாட்டவும், சக பணியாளர்களின் நலன் குறித்தும், பணியிட சூழல் வசதியை மேம்படுத்த வலியுறுத்தியும் முறையிட, பணியாளர் நல சட்டப்படி ஊழியர்களுக்கு எல்லாவித உரிமைகளும் இருந்த போதிலும் அதனை பயன்படுத்தியவர்களுக்கு எதிராக ஸ்பேஸ்எக்ஸ் நடவடிக்கை எடுத்திருப்பது சட்டவிரோதம்" என பணியாளர்களின் வழக்கறிஞர் டெபோரா லாரன்ஸ் தெரிவித்தார்.
இதனையடுத்து, நல வாரியத்தின் வழக்கறிஞருடன் ஸ்பேஸ்எக்ஸ் தரப்பு வழக்கறிஞர்கள் விவாதிப்பார்கள். இதில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்தடுத்த நீதிமன்ற வழக்குகளை எலான் மஸ்க் சந்திக்க நேரிடும்.
பணிநீக்கம் சட்டவிரோதம் என உறுதியானால், ஸ்பேஸ்எக்ஸ் மீண்டும் அவர்களை பணியில் சேர்த்து கொள்ளவும், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
- செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் நடத்தி வருகிறது.
- கப்பல்களை தாக்கி அதில் உள்ள மாலுமிகள் உள்ளிட்டோரை சிறைப்பிடிக்கவும் செய்கின்றனர்.
ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் அறிவித்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்க்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சி குழு செங்கடலில் செல்லும் சர்வதேச கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் அமெரிக்கா செங்கடலில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது. டிசம்பர் 19-ந்தேதியில் இருந்து 23 தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர்.
கடந்த ஒருசில தினங்களுக்கு முன் கப்பல் மீது தாக்குதல் நடத்த வந்த ஹவுதியின் மூன்று படகுகளை அமெரிக்க கப்பற்படை தாக்கி அழித்தது. இதில் 10 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர். கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுப்போம் என ஹவுதி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்த வேண்டும். இல்லையெனில் ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அறிவித்துள்ளன.

தாக்குதல் தொடர்ந்தால் எந்தவிதமான பதிலடியில் ஈடுபடும் என்பது குறித்து அமெரிக்காவின் உயர்அதிகாரி விரிவாக தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடம் இருந்து ஹவுதி கிளார்ச்சியாளர்கள் மற்றொரு எச்சரிக்கையை எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்று இணைந்துள்ளன.
- ஈரான் முன்னாள் தளபதி சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது.
- குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
ஈரானில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கெர்மான் பகுதியில் உள்ள ஈரான் முன்னாள் தளபதி சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது.
சுலைமானின் நினைவு நாளை அனுசரிக்க ஏராளமானோர் கூடிய நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
- புது விதிமுறைகள் இம்மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது
- புதிய விதிகளால் 1,40,000 பேர் வருவது குறைய கூடும் என அரசு கணித்துள்ளது
இங்கிலாந்தில் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு அரசு பல புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
அதில் முக்கிய அம்சமாக கல்வி கற்க அங்கு செல்லும் மாணவர்கள், இனி பெற்றோர் உட்பட தங்கள் குடும்ப உறுப்பினர்களை தங்களுடன் அழைத்து செல்லவோ, நுழைந்த பிறகு அவர்களை அங்கு வரவழைத்து தங்களுடன் தங்க வைத்து கொள்ளவோ அனுமதி கிடையாது. முதுநிலை ஆராய்ச்சி பட்டங்கள் மற்றும் அரசு நிதியுதவியுடன் பெறப்படும் பட்டங்கள் ஆகியவற்றை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் இந்தியர்கள் உட்பட அனைத்து மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக முனைந்துள்ளது.
புதிய விதிமுறைகள் இம்மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் எனவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
"மக்களுக்கு இங்கிலாந்து அரசு அளித்த வாக்குறுதியின்படி எல்லைகளை பலப்படுத்துவது, அகதிகள் வருகையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டோம். கல்வி கற்க "விசா" பெற்று கொண்டு வரும் பலர், பிறகு இங்கேயே பணி தேடி, இங்கிலாந்திலேயே தங்கி விடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய வழிமுறை மூலம் சுமார் 1,40,000 பேர் இங்கிலாந்து வருவது குறைய கூடும்" என இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், "இன்றிலிருந்து இங்கிலாந்தில் கல்வி பயிலும் பெரும்பாலான அயல்நாட்டு மாணவ மாணவியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவது முடியாது. 2024 தொடங்கியதுமே இங்கிலாந்து மக்களுக்கு நாங்கள் பணியாற்ற தொடங்கி விட்டோம்" என பதிவிட்டுள்ளார்.
2019லிருந்து தங்கள் குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்திற்கு அழைத்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை 930 சதவீதம் அதிகரித்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- ரஷியா ஏவும் பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.
- மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.
கீவ்:
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினார்.
இதுதொடர்பாக, உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவு மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினேன். இந்தியா-உக்ரைன் இடையிலான அரசு ஆணையத்தின் முதல் கூட்டத்தை எதிர்காலத்தில் நடத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.
- மொத்த பணிநீக்கங்களில் 70 சதவீதம் பேர் அமெரிக்காவில் பணி இழந்தனர்
- அக்சென்சர் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது
முன்னர் எந்த வருடங்களிலும் இல்லாத அளவு, கடந்த 2023ல் பல தனியார் துறைகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கூகுள், மைக்ரோசாஃப்ட், வெரிசான், காக்னிசன்ட் போன்ற பன்னாட்டு மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப பெருநிறுவனங்களிலும், ஸ்டார்ட் அப் எனப்படும் புதியதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களிலும் இந்த சூழல் நிலவியது.
உலகம் முழுவதும் சுமார் 2.6 லட்சம் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் அமெரிக்காவில் வேலையிழந்தவர்கள். மொத்த பணிநீக்கங்களில் 70 சதவீதம் (1.79 லட்சம் பேர்) அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
16,400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இந்தியா 2-ஆம் இடத்தில் உள்ளது.
13,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு ஜெர்மனி 3-ஆம் இடத்தில் உள்ளது.
11,100 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு சுவீடன் 4-ஆம் இடத்திலும், 9400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இங்கிலாந்து 5-ஆம் இடத்திலும் உள்ளது.
இந்தியாவில், கடந்த 2023 டிசம்பர் மாதம் மட்டுமே 1000 பணியாளர்கள் பேடிஎம் (Paytm) நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அமெரிக்க-அயர்லாந்து நாடுகளை மையமாக கொண்ட மென்பொருள் பெருநிறுவனமான அக்சென்சர் (Accenture) 19,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியது.
இணையதள கல்வி நிறுவனமான பைஜு'ஸ் (Byju's) சுமார் 4 ஆயிரம் பணியாளர்களையும், இணைய வணிக வர்த்தக நிறுவனமான அமேசான் 500 பணியாளர்களையும் நீக்கியது.
கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு உலகம் முழுவதும் தோன்றியுள்ள மந்தமான பொருளாதார சூழல், அதிகரிக்கும் விலைவாசியினால் மக்களிடம் சேமிப்பு குறைதல், தொழில்நுட்ப சேவைக்கான தேவை குறைவு, உலகளாவிய போர் சூழல், பணியாளர்களுக்கான கட்டுக்கடங்காத சம்பள உயர்வு உள்ளிட்ட பல காரணங்கள் நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கை கூறப்படுகின்றன.
உலகளாவிய பொருளாதார நிலைமை மேலும் சரிவடைந்தால், பணிநீக்கங்கள் இவ்வருடமும் தொடர்வது மட்டுமின்றி அதிகரிக்கலாம் என மனித வள நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
- "இம்மர்சிவ் கேம்ஸ்" விளையாட்டுக்களில் குழந்தைகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்
- மெய்நிகர் தொழில்நுட்ப விளையாட்டுக்களில் எச்சரிக்கை தேவை என்றார் காவல் ஆணையர்
சமீப சில வருடங்களாக இணையதளத்தில், "விஆர்" (VR) எனப்படும் மெய்நிகர் உண்மை (Virtual Reality) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனர்கள் விளையாடும் பல விளையாட்டுக்கள் பிரபலமடைந்துள்ளன.
வீட்டிற்கு வெளியே செல்லாமல் குழுந்தைகளால் விளையாட முடியும் என்பதால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதற்கு தேவையான ஹெட்செட் போன்ற உபகரணங்களை வாங்கி தந்து ஊக்குவிக்கின்றனர்.
மெடாவெர்ஸ் (Metaverse) எனப்படும் வளர்ந்து வரும் இத்தொழில்நுட்பத்தில், தொலைதூரத்தில் உள்ள ஒருவருடனோ அல்லது பலருடனோ, அல்லது ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழியாகவோ, குழந்தைகளால் விளையாட முடிகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் 16 வயது சிறுமி ஒருவர் இதற்கான உபகரணங்களுடன் தனது வீட்டில் இருந்தபடியே "இம்மர்சிவ் கேம்ஸ்" (immersive games) எனப்படும் "மூழ்கடிக்கும் விளையாட்டு" வகைகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினார்.
மெடா (Meta) நிறுவனத்தின் (முன்னர் ஃபேஸ்புக்) "ஹொரைசான் வேர்ல்ட்ஸ்" (Horizon Worlds) எனப்படும் அந்த மெய்நிகர் விளையாட்டில் "அவதார்" (avatar) எனப்படும் அவரை போன்றே தோற்றமுடைய மெய்நிகர் வடிவத்துடன், பல இடங்களில் இருந்து பலர் தங்கள் அவதார் உருவங்களுடன் விளையாடி வந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பிற அவதார்கள் (அதனை இயக்குபவர்களால்) அச்சிறுமியின் அவதார் மீது பாலியல் தாக்குதல் நடத்தியது.
சிறுமி மீது நேரடியான பாலியல் தாக்குதல் நடக்கவில்லை என்றாலும் மெய்நிகரில் நடைபெற்ற "கூட்டு பாலியல் தாக்குதல்" அச்சிறுமிக்கு உணர்வுபூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அச்சிறுமியின் குடும்பத்தினர், இங்கிலாந்து காவல்துறையிடம் இது குறித்து புகாரளித்தனர். காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இவ்விளையாட்டு தளம் குறித்து முன்னரே இது போன்ற புகார்கள் சில முறை எழுப்பபட்டும், சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள இங்கிலாந்து உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி (James Cleverly), "இது போன்ற தாக்குதல்களை குறைத்து மதிப்பிடாமல் தீவிரமாக நாம் பார்க்க வேண்டியது அவசியம்" என தெரிவித்துள்ளார்.
"வேலி இல்லாத மெய்நிகர் விளையாட்டுகளில் தாக்குதலை நடத்த இரை தேடும் மிருகங்கள் போல் பல விஷமிகள் அதிகம் வர வாய்ப்புள்ளதால், இவற்றை தடுக்கும் விதமாக சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்" என இங்கிலாந்து காவல் துறை தலைவர் "இயான் க்ரிஷ்லி" (Ian Critchley) தெரிவித்துள்ளார்.
வெளியில் விளையாட சென்றால் மட்டும்தான் ஆபத்து என எண்ணி வீட்டிற்கு உள்ளே குழந்தைகள், நவீன தொழில்நுட்பங்களை பயனபடுத்தும் போது அவர்களின் விளையாட்டுக்களை பெற்றோர் கண்காணிக்காமல் இருப்பது தவறு என இணையதள வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.






