என் மலர்tooltip icon

    உலகம்

    • அலெக்சி நவால்னி சந்தேகத்திற்கு இடமான சூழலில் சிறையில் உயிரிழந்தார்
    • ரஷிய மக்களை எச்சரிக்கும் அதிபருடன் டிரம்ப் கரம் கோர்க்க விரும்புகிறார் என்றார் நிக்கி

    கடந்த வாரம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென் கரோலினா மாநிலத்தில் ஆற்றிய உரையில், அமெரிக்காவை தலைமையாக கொண்டு செயல்படும் நேட்டோ (NATO) உறுப்பினர் நாடுகள் அந்த அமைப்பிற்கு அளிக்க வேண்டிய தங்களின் நிதி பங்களிப்பை அளிக்காத பட்சத்தில் அந்நாடுகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால் அதில் தலையிட மாட்டேன் என தெரிவித்தார்.

    இவரது கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ரஷியாவில், அதிபர் புதினை தீவிரமாக எதிர்த்து வந்த அலெக்சி நவால்னி (Alexei Navalny) சந்தேகத்திற்கு இடமான சூழலில் சிறையில் உயிரிழந்தார்.

    இப்பின்னணியில், அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட குடியரசு கட்சியின் சார்பில் ஆதரவு கோரி வரும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு போட்டியாக களம் இறங்கி உள்ள தென் கரோலினா மாநில முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, டிரம்பை விமர்சித்து உரையாற்றினார்.

    அப்போது நிக்கி தெரிவித்ததாவது:

    தங்கள் பங்களிப்பை தராதவர்களை புதின் தாக்கினால் தடுக்க மாட்டேன் என கூறியதன் மூலம் அந்த கணமே புதினின் கரத்தை டிரம்ப் வலுப்படுத்தி விட்டார்.

    தனக்கு உள்ள அரசியல் எதிரிகளை கொல்ல துணியும் புதினை போன்ற ஒருவருடன் டிரம்ப் கை கோர்த்து கொள்கிறார்.

    அமெரிக்க ஊடகவியலாளர்களை சிறை பிடிக்கும் ஒருவரின் பக்கம் டிரம்ப் நிற்க முயல்கிறார்.

    "என்னை எதிர்த்தால் உங்களுக்கும் இதுதான் (நவால்னியின் மரணம்) கதி" என தன் நாட்டு மக்களை எச்சரிக்கும் ஒருவருடன் நட்பாக இருக்க முயல்கிறார்.

    இதுவரை நவால்னியின் மரணம் குறித்து டிரம்ப் கருத்து எதுவும் கூறவில்லை. ஏனென்றால், அவர் தற்போது மீதுள்ள பல வழக்குகளில் கவனமாக உள்ளார்.

    இவ்வாறு ஹாலே கூறினார்.

    அடுத்த வாரம், தென் கரோலினா மாநிலத்தில் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்பும், ஹாலேவும் ஒருவரையொருவர் நேரடியாக எதிர்த்து களம் இறங்கி வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.

    • நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது- டிரம்ப்.
    • டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வானால் பல விசயங்கள் பற்றி நான் கவலைப்படுகிறேன்- ஹாலே

    அமெரிக்காவில் இந்த வருடம் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் யார்? என்பதில் டொனால்டு டிரம்ப்- நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவி வருகிறது.

    இந்த நிலையில் நான் அதிபரானால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டணியை வலுப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நிக்கி ஹாலே கூறியதாவது:-

    டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வானால், பல விசயங்கள் பற்றி நான் கவலைப்படுகிறேன். அவற்றில் ஒன்றுதான் மற்ற நாடுகள் இடையிலான கூட்டணி.

    நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், நேட்டோ உடனான கூட்டணியை மட்டும் வலுப்படுத்த மாட்டேன். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுடன் உடனான கூட்டணியையும் வலுப்படுத்துவேன். எங்களுடன் அனைவரையும் சேர்த்துக் கொள்வோம். இது அமெரிக்காவின் அதிக நண்பர்களை பற்றியது. குறைப்பதை பற்றி அல்ல."

    இவ்வாறு நிக்கி ஹாலே தெரிவித்தார்.

    முன்னதாக,

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. தங்களுடைய ஆயுத இருப்புகள் குறைந்து வருவதால் நேட்டோ உதவி செய்ய வேண்டும் என உக்ரைன் கேட்டிருந்தது. இதுதொடர்பாக டொனால் டிரம்ப் அளித்த ஒன்றில் அவர் கூறியதாவது:

    ஒரு பெரிய நாட்டின் அதிபர் என்னிடம் நாங்கள் நேட்டோ அமைப்பிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காத நிலையில் ரஷியா எங்களை தாக்கினால் நீங்கள் எங்களை காப்பீர்களா? என கேட்டார்.

     நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது. இன்னும் சொல்ல போனால் இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என ரஷியாவிடம் கூறிவிடுவேன். நிதி பங்களிப்பில் உங்கள் பங்கை நீங்கள் செலுத்தியாக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தேன்.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

    • மார்க் என்பவர் 32.43 அமெரிக்க டாலர் மதிப்பிற்கு சாப்பிட்டுள்ளார்.
    • ஆனால் 10 ஆயிரம் அமெரிக்க டாலரை டிப்ஸாக கொடுத்துள்ளார்.

    அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் மார்க் என்பவர் இரவு சாப்பாடு சாப்பிட சென்றுள்ளார். உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் ஆர்டர் செய்துள்ளார்.

    சாப்பிட்டு முடித்த உடன் பெரும்தொகையை டிப்ஸ் ஆக வழங்க முடிவு செய்துள்ளார். சாப்பிட்டு முடித்தபின், ஊழியர் பில் கொடுத்துள்ளார். அதில் டிப்ஸ் ஆக ஒரு பெரும்தொகையை குறிப்பிட்டுள்ளார்.

    அந்த பெரும்தொகை ஊழியர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. அந்த நபர் 32.43 அமெரிக்க டாலர் மதிப்புக்கு (இந்திய பணமதிப்பில் 2700 ரூபாய்) சாப்பிட்டுள்ளார். ஆனால் டிப்ஸாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் 8.3 லட்சம் ரூபாய்) வழங்கியுள்ளார்.

    வழக்கமாக 15 முதல் 25 சதவீதம் வரை டிப்ஸ் பெறுவோம். ஆனால், இந்த நன்றியுணவர்வுக்கு அளவே இல்லை என ஊழியர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர். ரெஸ்டாரன்ட் உரிமையாளர், அப்போது வேலையில் இருந்த 9 பேருக்கு அந்த தொகையை பிரித்து கொடுத்துள்ளார்.

    இதற்கிடையே டிப்ஸ் கொடுத்த மார்க் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் இந்த டிப்ஸ் வழங்கிய பில்லை போஸ்ட் செய்து "நான் அழுகிறேன், நீ அழுகிறாய், நாம் அனைவரும் அழுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இவ்வளவு தொகையை டிப்ஸ் கொடுப்பதாக எழுதியுள்ளீர்கள். தவறாக எழுதி விட்டீர்களா? என ரெஸ்டாரன்ட் மானேஜர் மார்க்கிடம் கேட்டுள்ளார்.

    அதற்கு அவர் இல்லை. நான் தெரிந்துதான் எழுதியுள்ளேன். எனது நண்பர் சமீபத்தில் இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கு இந்த நகரில்தான் நடந்தது. இது அவரது நினைவாக என்று தெரிவித்துள்ளார்.

    • இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது- ஆஸ்திரேலியா பிரதமர்.
    • நான் பார்த்ததில் இது மிகப்பெரிய மோதல்- போலீஸ் அதிகாரி.

    பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா அருகில் உள்ளது பப்புவா நியூ கினியா தீவு. இந்த பகுதியை சுற்றி ஏராளமான தீவுகள் உள்ளன.

    பப்புவா நியூ கினியா தீவில் அதிக அளவில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். நேற்று பழங்குடியினரைச் சேர்ந்த இரண்டு குழுவினருக்கு இடையில் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    "இந்த சண்டை அந்த தீவின் எங்கா மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. நான் பார்த்ததில் இது மிகப்பெரிய மோதல்" என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    "பப்புவா நியூ கினியாவில் இருந்து வந்துள்ள இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது" என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

    மேலும், "பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்பிற்காக போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கணிசமான ஆதரவுகளை அளித்து வருகிறோம்" என்றார்.

    பசிபிக் கடலில் உள்ள ஏராளமான தீவுகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் இன்னும் மனிதத் தொடர்பில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார்கள்.

    இதே எங்கா மாகாணத்தில் கடந்த வரும் நடைபெற்ற மோதலில் 60 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    • நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணர்வு.
    • சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    ஆப்கானிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தானிம் மசார் இ சரீஃப் என்ற நகரத்தில் இன்று மாலை 4.50 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இதன் ரிக்டர் அளவ 5.1 ஆக பதிவாகியுள்ளது.

    இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள இந்தியாவின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் பொது மக்கள் பீதியமடைந்துள்ளனர்.

    • செகானி என்ற கொரில்லாவிற்கு சிசேரியன் மூலமாக குட்டி கொரில்லா பிறந்துள்ளது.
    • நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு முன்னதாக பிறந்த இந்த கொரில்லாவுக்கு ஜமீலா என பெயர் வைத்துள்ளனர்.

    அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஃபோர்ட் வொர்த் உயிரியல் பூங்காவில் (Fort Worth Zoo) கர்ப்பமாக இருந்த செகானி என்ற கொரில்லாவிற்கு சிசேரியன் மூலமாக குட்டி கொரில்லா பிறந்துள்ளது.

    பிரீக்ளம்ப்சியா என்பது கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் தீவிர ரத்த அழுத்த நிலையால் செகானி என்ற கொரில்லா பாதிக்கப்பட்டிருந்தால் தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையில் இந்த 'குட்டி' கொரில்லா பிறந்தது.

    நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு முன்னதாக பிறந்த இந்த கொரில்லாவுக்கு ஜமீலா என பெயர் வைத்துள்ளனர். தற்போது செகானி மற்றும் ஜமீலா ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஃபோர்ட் வொர்த் உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது. 

    • மெட்ரோவை விரிவுபடுத்த தொழிலாளர்கள் சுரங்கப்பாதை தோண்டினர்
    • 23,680 சதுர அடி அளவில் ஏற்பட்ட இந்த பள்ளத்தால் 7 பேர் உயிரிழந்தனர்

    உலகிலேயே பரப்பளவில் 5-வது இடத்தில் உள்ள பெரிய நாடு, பிரேசில் (Brazil). இதன் தலைநகரம் பிரெசிலியா (Brasilia).

    2007 ஜனவரி மாத காலகட்டத்தில் பிரேசில் நாட்டின் சா பாலோ (Sao Paulo) நகரின் பின்ஹெரோ (Pinheiros) பகுதியின் சுற்றுப்புறத்தில், மெட்ரோ அமைப்பை விரிவுபடுத்துவதற்காக தொழிலாளர்கள் சுரங்கப்பாதை தோண்டிக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பூமி உள்வாங்கி அங்கு மிக பெரும் பள்ளம் ஏற்பட்டது.

    இதனை சற்றும் எதிர்பாராத அப்பகுதி வழியாக நடந்து சென்ற பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் இந்த பெரும் பள்ளத்தில் விழுந்தனர்.


    23,680 சதுர அடி அளவில் ஏற்பட்ட இந்த பள்ளம், ஒரு மினி பஸ், 7 வீடுகள் மற்றும் பொதுமக்களில் சுமார் 200 பேர் என உள்ளே இழுத்து கொண்டது. பல லாரிகள் ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்தன.

    இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

    விபத்திற்கு காரணமானவர்கள் என கட்டுமான நிறுவனங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.


    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மார்கோஸ் டி லிமா போர்டா (Marcos de Lima Porta) தீர்ப்பை அறிவித்தார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    இவ்வளவு பெரிய கட்டுமானத்தில் தாங்கி பிடிக்கும் தூண்கள் உருவாக்க வேண்டும் என வல்லுனர்கள் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், செயலை விரைவாக முடித்தாக வேண்டும் என்கிற ஒரே நோக்கில் அவசரகதியில் கட்டுமானத்தை மேற்கொண்டவர்கள் பணியாற்றி உள்ளார்கள். அதனால் இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்திற்கும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கும் அவர்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி கூறினார்.

    தனது தீர்ப்பில் ரூ.4,00,96,84,875.00 ($48.3 மில்லியன்) நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ள நீதிபதி, மெட்ரோ நிறுவன அதிபர், ஒரு பொறியாளர், கட்டிட ஆய்வாளர் உட்பட 6 பேரும், 6 நிறுவனமும் இந்த அபராதத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் 2018ல் உயிரிழந்து விட்டார். ஆனாலும், அவரது வாரிசுகள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அரிசி மானிய வழக்கில் சிறை தண்டனை பெற்றார் சின்வத்ரா
    • மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் சின்வத்ராவின் தண்டனையை 1 ஆண்டாக குறைத்தார்

    தென்கிழக்கு ஆசியாவில், இந்தோசீன தீபகற்பத்தில் உள்ள நாடு, தாய்லாந்து. இதன் தலைநகரம், பாங்காக் (Bangkok).

    தாய்லாந்தில், 2001 முதல் 2006 வரை பிரதமராக இருந்த தக்சின் சினவத்ரா (Thaksin Shinawatra) மீது அரிசி மானிய திட்டத்தில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் தக்சினுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க, தக்சின், 2008ல் தாய்லாந்தை விட்டு வெளியேறி, 15 ஆண்டுகள் அயல்நாடுகளில் தங்கி இருந்தார்.

    கடந்த 2023ல் மீண்டும் நாடு திரும்பினார்.

    தாயகம் திரும்பிய தக்சினுக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், தக்சின் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சிறையிலிருந்து 6 மாதங்கள் மருத்துவமனையிலேயே காவலில் வைக்கப்பட்டிருந்தார்.


    தக்சினின் உடல்நல குறைபாடு காரணமாக அவருக்கு விதிக்கப்பட்ட 8-ஆண்டுகால சிறை தண்டனையை, தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் (Maha Vajiralongkorn), 1 ஆண்டாக குறைத்தார்.

    இதனை தொடர்ந்து தக்சின் சினவத்ராவுக்கு சிறப்பு பரோல் வழங்கி அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து, தற்போது 76 வயதாகும் தக்சின் இன்று பரோலில் விடுதலை செய்யப்பட்டார்.

    பாங்காக் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த தக்சின் தனது காரில் புறப்பட்டு சென்றார். தக்சினை அவரது மகள் பெடோங்டார்ன் சினவத்ரா (Paetongtarn Shinawatra) வரவேற்று தங்கள் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.


    தக்சின், 2 முறை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார்.

    தாய்லாந்தில் நடைபெறும் பிரதமர் சிரெத்தா தவிசின் (Srettha Thavisin) தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு, தக்சின் குடும்பத்தார் பின்புலமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இதுவரை 28,000 பேருக்கும் மேல் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் தெரிவித்தது
    • ஹமாசிடமிருந்து ஏமாற்றும் கோரிக்கைகளை தவிர எதுவும் வரவில்லை என்றார் நேதன்யாகு

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க, இஸ்ரேல் நடத்தி வரும் போர், 4 மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    இடையில், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக 7 நாட்கள் போர் நிறுத்தப்பட்டது.

    அதன் பிறகு இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதலை தொடர்ந்தது.

    இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 28,000 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது.

    இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினர் வசம் மீதம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதிகளை மீட்கவும், மீண்டும் போர்நிறுத்தத்தை கொண்டு வரவும், எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் தலையீட்டில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் ஹமாஸ் அமைப்பினர் நிரந்தர போர்நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

    இவற்றை ஏற்க இஸ்ரேல் மறுத்து விட்டது.

    இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினருடன் நடைபெற்ற போர்நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து ஏமாற்றும் கோரிக்கைகளை தவிர வேறு எதுவும் வரவில்லை. அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது.

    மேற்கொண்டு போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் செல்லாது.

    பாலஸ்தீனியர்களுக்கு தனிநாடு அந்தஸ்து தொடர்பான சர்வதேச ஆணைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது.

    பாலஸ்தீனத்தை ஒருதலைபட்சமாக அங்கீகரிப்பதை எனது தலைமையிலான இஸ்ரேல் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும்.

    முன்நிபந்தனைகள் இல்லாமல் இரு தரப்புக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே ஒரு பயனுள்ள ஏற்பாட்டை செய்ய முடியும்.

    இவ்வாறு நேதன்யாகு கூறினார்.

    • கடும் நிதி நெருக்கடியால் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது
    • உக்ரைனுக்கு உதவ மறுப்பது நியாயமற்ற செயல் என பைடன் கூறினார்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில், தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் போரிட்டு வருகிறது.

    போர் தொடங்கி 2 வருடங்களை நெருங்கும் நிலையில், இரு தரப்பிலும் இதுவரை பலத்த சேதங்கள் நிகழ்ந்துள்ளது.

    பல உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை உள்ளிட்ட அமைப்புகளின் போர் நிறுத்த கோரிக்கைகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து விட்டார்.

    இந்நிலையில், உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ராணுவ உதவியை பெருமளவு வழங்கி வந்த அமெரிக்காவில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளிப்பதற்கு அந்நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் தரவில்லை.

    இப்பின்னணியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), டெலாவேர் (Delaware) மாநில தேவாலய கூட்டத்தை முடித்து வரும் போது உக்ரைன் விவகாரம் குறித்து பேட்டியளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    நான் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் (Volodymyr Zelensky) தொலைபேசியில் உரையாடினேன். உக்ரைனுக்கு தேவைப்படும் நிதியை வழங்க வழி ஏற்படுத்தப்படும் என அவருக்கு நம்பிக்கை தெரிவித்தேன்.

    அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் உக்ரைன் ராணுவத்திற்கு உதவிட மறுப்பது அறிவற்ற செயல் மட்டுமல்ல; நியாயம் இல்லாததும் கூட.

    நான் இதற்காக உறுப்பினர்களோடு போராடி, உக்ரைனுக்கு தேவைப்படும் தளவாடங்கள் கிடைக்க வழிவகை செய்வேன்.

    அமெரிக்க உதவி இல்லாவிட்டால், உக்ரைன் மேலும் பல பிராந்தியங்களை ரஷியா வசம் இழக்க நேரிடும் என்பதை நாம் நினவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு பைடன் கூறினார்.

    முன்னதாக, உக்ரைனுக்கான ராணுவ உதவி குறித்து விவாதிக்காமல் இரண்டு வாரங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டதற்கு பைடன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    போர் தொடங்கிய காலகட்டத்திலிருந்து மனிதாபிமான உதவி, நிதியுதவி மற்றும் ராணுவ உதவி எனும் வகையில் $75 பில்லியனுக்கும் மேல் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

    • ராணுவத்தில் தற்போது தேவைக்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே வீரர்கள் உள்ளனர்
    • பெண்கள், சீருடையில் உள்ள போது தோள்களில் விழாதவாறு வைத்து கொள்ளலாம்

    கிழக்காசிய நாடான ஜப்பானில், மக்கள் தொகை வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் பல துறைகளில் பணியாற்றுவதற்கு போதிய இளைஞர்கள் இல்லாமல் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) குறைந்து, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடு எனும் நிலையிலிருந்து 4-வது நிலைக்கு ஜப்பான் தள்ளப்பட்டது. மேலும், ராணுவத்தில் சேர்வதற்கும் போதுமான அளவு இளைஞர்கள் பல்வேறு காரணங்களால் ஆர்வம் காட்டுவதில்லை.

    ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, நாட்டின் தேவைக்கு 10 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே உள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவித்தது.

    குறைந்த ஊதியத்தினால் இளம் வயது ஆண்களும், பாலியல் துன்புறுத்தல் அச்சங்களால் பெண்களும் ராணுவத்தில் சேர தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியது.

    இந்நிலையில், ராணுவத்தில் இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் பல கட்டுப்பாடுகளை நீக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.

    அதில் ஒன்றாக, வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து, இனி ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் சற்று நீளமான முடி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    இனி புதிய வீரர்கள், தலையின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் குறைவாகவும், மத்தியில் நீளமாகவும் வைத்து கொள்ளலாம்.

    பெண்கள், சீருடையில் உள்ள போது தோள்களில் விழாத அளவிற்கும், ஹெல்மெட் அணியும் போது தடையாக இல்லாதவாறும், நீளமாக வைத்து கொள்ளலாம்.

    சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை சமாளிக்க அனைத்து வழிமுறைகளையும் ஜப்பான் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    "அனைத்து துறைகளிலும் பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவும் காலகட்டத்தில் தனியார் துறையுடன் போட்டியிட்டு இளைஞர்களை ஈர்க்கும் நிலையில் உள்ளோம்" என பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா (மினொரு Kihara) தெரிவித்தார்.

    • ஈரானில் மிகப்பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடு நடக்கும் சம்பவம் அரிதானது.
    • இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசு ஊழியர் ஒருவர் மூன்று பேரை சுட்டுக்கொலை செய்தார்.

    ஈரானில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஏ.கே. 47 ரக துப்பாக்கி மூலம் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியதில் அவனுடைய தந்தை உள்ளிட்ட 12 உறவினர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    ஈரானில் உள்ள மத்திய மாகாணம் கெர்மன். இங்குள்ள பர்யாப் கவுன்ட்டியில் உள்ள புறநகரின் கிராமம் ஒன்றில் குடும்ப பிரச்சனை காரணமாக, நடந்த சண்டையின் உச்சக்கட்டமாக இந்த துபாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

    உறவினர்கள் மற்றும் தந்தை ஆகியோரை வெறித்தனமாக சுட்டுக்கொலை செய்துள்ளார். பின்னர் பாதுகாப்புப்படையினர் அந்த நபரை சுற்றி வளைத்து துப்பாக்கியல் சுட்டு கொலை செய்துள்ளனர்.

    ஈரானில் மிகப்பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்வது மிகவும் அரிதானது. அங்கே வேட்டையாடுவதற்கு மட்டும் மக்களுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்படுகிறது.

    இரண்டு வருடத்திற்கு முன்னதாக அரசு நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு மூன்று முறை கொலை செய்தார். பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

    ×