search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    புதினின் கரத்தை வலுப்படுத்துகிறார் டிரம்ப் - நிக்கி ஹாலே குற்றச்சாட்டு
    X

    புதினின் கரத்தை வலுப்படுத்துகிறார் டிரம்ப் - நிக்கி ஹாலே குற்றச்சாட்டு

    • அலெக்சி நவால்னி சந்தேகத்திற்கு இடமான சூழலில் சிறையில் உயிரிழந்தார்
    • ரஷிய மக்களை எச்சரிக்கும் அதிபருடன் டிரம்ப் கரம் கோர்க்க விரும்புகிறார் என்றார் நிக்கி

    கடந்த வாரம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென் கரோலினா மாநிலத்தில் ஆற்றிய உரையில், அமெரிக்காவை தலைமையாக கொண்டு செயல்படும் நேட்டோ (NATO) உறுப்பினர் நாடுகள் அந்த அமைப்பிற்கு அளிக்க வேண்டிய தங்களின் நிதி பங்களிப்பை அளிக்காத பட்சத்தில் அந்நாடுகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால் அதில் தலையிட மாட்டேன் என தெரிவித்தார்.

    இவரது கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ரஷியாவில், அதிபர் புதினை தீவிரமாக எதிர்த்து வந்த அலெக்சி நவால்னி (Alexei Navalny) சந்தேகத்திற்கு இடமான சூழலில் சிறையில் உயிரிழந்தார்.

    இப்பின்னணியில், அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட குடியரசு கட்சியின் சார்பில் ஆதரவு கோரி வரும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு போட்டியாக களம் இறங்கி உள்ள தென் கரோலினா மாநில முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, டிரம்பை விமர்சித்து உரையாற்றினார்.

    அப்போது நிக்கி தெரிவித்ததாவது:

    தங்கள் பங்களிப்பை தராதவர்களை புதின் தாக்கினால் தடுக்க மாட்டேன் என கூறியதன் மூலம் அந்த கணமே புதினின் கரத்தை டிரம்ப் வலுப்படுத்தி விட்டார்.

    தனக்கு உள்ள அரசியல் எதிரிகளை கொல்ல துணியும் புதினை போன்ற ஒருவருடன் டிரம்ப் கை கோர்த்து கொள்கிறார்.

    அமெரிக்க ஊடகவியலாளர்களை சிறை பிடிக்கும் ஒருவரின் பக்கம் டிரம்ப் நிற்க முயல்கிறார்.

    "என்னை எதிர்த்தால் உங்களுக்கும் இதுதான் (நவால்னியின் மரணம்) கதி" என தன் நாட்டு மக்களை எச்சரிக்கும் ஒருவருடன் நட்பாக இருக்க முயல்கிறார்.

    இதுவரை நவால்னியின் மரணம் குறித்து டிரம்ப் கருத்து எதுவும் கூறவில்லை. ஏனென்றால், அவர் தற்போது மீதுள்ள பல வழக்குகளில் கவனமாக உள்ளார்.

    இவ்வாறு ஹாலே கூறினார்.

    அடுத்த வாரம், தென் கரோலினா மாநிலத்தில் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்பும், ஹாலேவும் ஒருவரையொருவர் நேரடியாக எதிர்த்து களம் இறங்கி வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.

    Next Story
    ×