என் மலர்tooltip icon

    உலகம்

    • இம்ரான் கான் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது.
    • தேர்தல் முடிவு மாற்றப்பட்டதாக இம்ரான் கான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக இம்ரான் கான் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தவறு நடந்துள்ளன. அதற்கு பொறுப்பேற்று தனது பதவியை அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராவல்பிண்டியின் முன்னாள் கமிஷனரான லியாகத் அலி சத்தா, இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் பத்திரிகையாளர்களின் பேசினார். அப்போது "தோல்வியடைந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்களாக மாற்றப்பட்டனர்.

    நடந்த அனைத்து தவறுகளுக்கும் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தலைமை நீதிபதி முழுவதுமாக இதில் ஈடுபட்டார்கள்.

    இதற்கு பொறுப்பு ஏற்றுக் கொண்ட லியாகத் அலி சத்தா தனது அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார். மேலும், நாட்டின் முதுகில் குத்துவது தன்னை தூங்க விடாது என்றார். நீதிக்கு எதிரான இந்த செயலுக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும். அதேபோல் மற்றவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த அரசியல் தலைவர்களுக்கான எந்த தவறான செயல்களில் ஈடுபடாதீர்கள் என்பதுதான் என்னுடையே வேண்டுகோள்" எனத் தெரிவித்துள்ளார்.

    அதிகாரியின் இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தான் நாட்டில் கடந்த 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், முடிவுகள் அறிவிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. இம்ரான் கானின் தெஹ்ரிக்-ரீ-இன்சாப் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றதாகவும், முடிவுகள் மாற்றப்பட்டதாகவும், அக்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

    அதன்பின் சனிக்கிழமை இறுதியாக அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. மேலும் பொதுத்தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெற்றோம் என அறிவித்தார்.

    இதற்கிடையே நவாஸ் ஷெரீப் நாங்கள்தான் வெற்றி பெற்றோம் என போட்டியாக அறிவித்தார். அத்துடன் பிலாவல் பூட்டோ உடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஷெரீப் முடிவு செய்தார்.

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கான் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    • ரஷியாவில் எதிர்க்கட்சி தலைவர் மரணம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அதிபர் புதினுக்கு அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    வாஷிங்டன்:

    ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இதற்கிடையே, நேற்று அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

    நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அலெக்சி நவால்னி மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ரஷிய அதிபர் புதினின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நவால்னியின் மரணத்தில் சந்தேகம் வலுத்துவருகிறது. இதற்கு புதின் தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும் என தெரிவித்தார்.

    உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள அதிபர் புதினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    • முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 136 சதவீதம் அதிகம்.
    • போட்டியை எதிர்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

    அமெரிக்க கார்ப்பரேட்களில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் Nike, 2024 ஆண்டை ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் துவங்கியுள்ளது.

    கடந்த மாதத்தில் மட்டும் 82 ஆயிரத்து 307 பேரை பணிநீ்கம் செய்வதாக அறிவித்து இருந்தது. இது அதற்கும் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 136 சதவீதம் அதிகம் ஆகும். இதோடு 2009 நிதி நெருக்கடி துவங்கியதில் இருந்து ஜனவரி மாத வாக்கில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பணிநீக்க நடவடிக்கையாக அமைந்தது.

    பெருந்தொற்று காலக்கட்டத்தில் அதிகளவில் ஆட்களை பணியமர்த்தியது மற்றும் வேறு பிரிவுகளில் முதலீடு செய்வது உள்ளிட்டவைகளை பணிநீக்கத்திற்கு காரணமாக Nike நிறுவனம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் Nike Inc. நிறுவனம் 2 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறது. பணிநீக்கத்தால் செலவீனங்களை குறைப்பதன் மூலம் சரிந்து வரும் விற்பனை மற்றும் போட்டியை எதிர்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

    இந்த முறை ஆட்குறைப்பு நடவடிக்கையில் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • நியூயார்க் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அதிகாரி அல்லது இயக்குனராக பணியாற்ற டிரம்புக்கு 3 ஆண்டுகள் தடை விதிப்பதாகவும் அறிவித்தார்.
    • குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் இந்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

    நியூயார்க்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். இவர் மீது பாலியல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    மேலும் தொழில் அதிபரான டிரம்ப் வங்கி மற்றும் நிதி அமைப்புகளிடம் கடன் வாங்குவதற்காக தனது சொத்து மதிப்புகளை மோசடியாக உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நியூயார்க் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. தன் மீதான குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தார்.

    இந்த நிலையில் நிதி மோசடி வழக்கில் நியூயார்க் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. நீதிபதி ஆர்தர் எங்கோரோன் அளித்த தீர்ப்பில் கடன் வாங்குவதற்காக சொத்து மதிப்புகளை மோசடியாக உயர்த்தி காட்டியதற்காக டிரம்ப் அபராதமாக 364 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி) செலுத்த வேண்டும் என்றும் நியூயார்க் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அதிகாரி அல்லது இயக்குனராக பணியாற்ற டிரம்புக்கு 3 ஆண்டுகள் தடை விதிப்பதாகவும் அறிவித்தார்.

    இவ்வழக்கில் டிரம்பின் மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோருக்கும் தலா 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக செலுத்த உத்தரவிட்டு உள்ளார். அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று டிரம்ப் வக்கீல்கள் தெரிவித்தனர்.

    குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் இந்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான கட்சி வேட்பாளர் தேர்தலில் அவர் முன்னிலையில் உள்ளார். அவருக்கு கட்சியில் அமோக ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
    • பூமியில் இருந்து 190 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

    பாகிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது.

    இன்று அதிகாலை 12.57 மணி அளவில் பூமியில் இருந்து 190 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    அதில், "ரிக்டரில் 4.7 அளவிலான நிலநடுக்கம் 17-02-2024 அன்று 00.57.09 மணிக்கு பூமியில் இருந்து 190 கிலோமீட்டர்கள் ஆழத்தில் பாகிஸ்தானில் உணரப்பட்டது," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • பொருளாதாரம் நலிவடைவதால் ரஷிய மக்கள் போர்நிறுத்தம் கோரி வருகின்றனர்
    • அலெக்சி நாவல்னிக்கு 19-வருட-கால சிறை தண்டனை அளிக்கப்பட்டது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2-வது வருடத்தை எட்ட உள்ள நிலையில், ஐ.நா. அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் போரை நிறுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டது.

    இரு நாடுகளிலும் பொருளாதாரம் பெரிதும் நலிவடைந்துள்ளதால் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முன்னெடுத்த சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு அந்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் இது ஒரு முக்கிய அம்சமாக பொதுமக்கள் கருதலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    மீண்டும் அதிபராக விரும்பும் புதின், தன்னை எதிர்க்கும் தலைவர்களை தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இப்பின்னணியில், ரஷிய அதிபரை விமர்சித்து வந்த அந்நாட்டின் பிரதான எதிர்கட்சி தலைவரான அலெக்சி நாவல்னி (Alexei Navalny), அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, 19-வருட கால சிறை தண்டனை அளிக்கப்பட்டு, ரஷிய சிறைச்சாலைகளிலேயே மிகவும் மோசமானதாக கருதப்படும் ஆர்க்டிக் பீனல் காலனி (Arctic penal colony) சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், யமலோ-நெனெட்ஸ் மாவட்ட (Yamalo-Nenets) சிறைத்துறை, தற்போது 47 வயதாகும் அலெக்சி நாவல்னி, சிறையில் மயக்கமடைந்ததாகவும், அவசர மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவரை காப்பாற்ற போராடியும், சிகிச்சை பலனின்றி அலெக்சி உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

    அலெக்சி நாவல்னியின் உயிரிழப்புக்கான காரணம் தற்போது வரை சரிவர தெரியவில்லை.

    நாவல்னியின் வழக்கறிஞர் லியோனிட் சோலோவ்யோவ் இத்தகவல் குறித்து விளக்கமளிக்க மறுத்து விட்டார்.

    • ராணுவத்திற்கு இதுவரை குறைந்த அளவே சுவிட்சர்லாந்து செலவு செய்தது
    • ஐரோப்பிய கண்டத்தில் இருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுவிட்சர்லாந்து இணையவில்லை

    முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து, எந்த அணியிலும் சேராமல் நடுநிலை வகித்து வந்தது. இரண்டாம் உலக போர் முடிந்த பிறகும் உலகில் நடைபெற்ற போர்களில், சுவிட்சர்லாந்து எந்த நாட்டிற்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

    இதனால் அந்நாடு உலக நாடுகளில் "நியூட்ரல்" சுவிட்சர்லாந்து என அழைக்கப்பட்டது.

    அமைதியை விரும்பும் நாடாக போரில் ஈடுபடாமல் தொடர்ந்து இருந்து வந்ததால், ராணுவத்திற்கு இதுவரை சுவிட்சர்லாந்து மிக குறைந்த அளவே செலவு செய்து வந்தது.

    சமீப சில வருடங்களாக உலகில் நடைபெறும் போர்களினால் அதிகரித்துள்ள அமைதியின்மை பல நாடுகளுக்கு போர் குறித்த சித்தாந்தங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த போர்கள் சுவிட்சர்லாந்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சுவிட்சர்லாந்தின் ராணுவ அமைச்சர் வயோலா அம்ஹர்ட் (Viola Amherd) தெரிவித்ததாவது:

    அடுத்த 4 வருடங்களில் ராணுவ செலவினங்களுக்கான பட்ஜெட் 19 சதவீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளது.

    கடந்த 30 வருடங்களாக ராணுவ செலவினங்களை குறைத்து வந்துள்ளதால் நாட்டின் ராணுவத்தின் வலிமை குறைந்துள்ளது. இழந்த வலிமையை மீட்டு எடுக்க சில ஆண்டுகளாகும்.

    அடுத்த 12 வருடங்களில் ராணுவம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்த உள்ளோம். இந்த அணுகுமுறை தற்போதுதான் முதல்முறையாக கடைபிடிக்கப்படுகிறது.

    இவ்வாறு வயோலா கூறினார்.

    ஐரோப்பிய கண்டத்தில் இருந்தாலும், 27 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தில்  (European Union) சுவிட்சர்லாந்து இணையவில்லை.

    அதிகமாக ஒதுக்கவுள்ள நிதியால், ரேடார் அமைப்புகளை மேம்படுத்துதல், குறைந்த தூர ஏவுகணைகளை உருவாக்குதல், ராணுவ டேங்குகளை அதிகரித்தல், சைபர் தாக்குதலை எதிர்கொள்ளும் கட்டமைப்பை உருவாக்குதல் என பல திட்டங்களை சுவிட்சர்லாந்து செயல்படுத்த உள்ளது.

    முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களில் நடுநிலைமை வகிக்க முடிந்த சுவிட்சர்லாந்திற்கு, ரஷிய-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆகிய 2 போர்களால் நாட்டின் எதிர்கால திட்டங்களையே மாற்ற நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

    • தாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
    • மசோதா நிறைவேற்றப்பட்டதால் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏதென்ஸ்:

    உலகம் முழுவதும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அவர்கள் தாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும், தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான நாடுகள் இதனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கவில்லை.

    இந்த நிலையில் கிரீஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு 176 உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த சட்டத்தின் மூலம் ஒரே பாலினத்தை சேர்ந்த ஜோடியினர் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை தத்தெடுக்கவும் உரிமை வழங்கப்படுகிறது.

    இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏதென்ஸ் நகர வீதிகளில் அவர்கள் ஆடிப்பாடி கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஒருவருக்கொருவர் இனிப்புகளை கொடுத்து மகிழ்ந்தனர். இது தொடர்பாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் அமைப்பின் தலைவர் ஸ்டெல்லா பெலியா கூறும் போது, "இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் ஆகும்" என்று தெரிவித்தார்.

    இந்த திருமணத்துக்கு ஆர்த்த டாக்ஸ் கிறிஸ்தவ நாடுகளில் ஒன்றான கிரீஸ் முதன் முதலாக ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர்களின் பெற்றோர் இந்தியாவில் அச்சத்தில் உள்ளதாக அஜய் தெரிவித்தார்
    • தாக்குதல்களை தடுக்க ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் என்றது வெள்ளை மாளிகை

    கடந்த சில வாரங்களில் அமெரிக்காவில், அடுத்தடுத்து இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நிகழ்ச்சிகள் நடப்பது உலகெங்கும் உள்ள இந்தியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    கடந்த ஜனவரியில் ஜியார்ஜியா மாநில லித்தொனியாவில், விவேக் சாய்னி எனும் மாணவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

    பிப்ரவரி மாத தொடக்கத்தில் சையத் மசாஹிர் அலி எனும் இந்தியாவை சேர்ந்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் தாக்கப்பட்டார்.

    ஒகையோ மாநிலத்தில் நிர்வாக மேலாண்மை பட்டம் படித்து வந்த இந்தியாவை சேர்ந்த ஸ்ரேயஸ் ரெட்டி பெனிகேரி உயிரிழந்தார்.

    இந்திய அமெரிக்க சமூகத்திற்கான தலைவர் அஜய் ஜெயின் புடோரியா இது குறித்து தெரிவித்ததாவது:

    வெவ்வேறு சம்பவங்களில் பல இந்திய மாணவர்கள் உயிரிழப்பது, இந்தியர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை கோடிட்டு காட்டுகிறது. கல்லூரிகளும், காவல்துறையும் இணைந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய சம்பவங்களினால் மாணவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும், இந்தியாவில் மிகுந்த மன வருத்தத்திலும் அச்சத்திலும் உள்ளனர். அவர்களின் கவலையை போக்கும் வகையில் அனைத்து கட்டமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு ஜெயின் கூறினார்.

    இது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கான வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்ததாவது:

    இனம், மதம், பாலினம் உள்ளிட்ட எந்த காரணங்களுக்காகவும் வன்முறை சம்பவங்கள் நடப்பதை அமெரிக்கா ஒரு போதும் சகித்து கொள்ளாது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், அமெரிக்காவில் தங்கி படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிபர் ஜோ பைடன் தீவிரமாக உள்ளார்.

    மாநில அரசுகளுடனும், உள்ளூர் நிர்வாகத்துடனும் மத்திய அரசு கலந்தாலோசித்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்கள் செயலுக்கு பொறுப்பேற்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    இவ்வாறு கிர்பி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளமையை நீட்டிக்க எஜியாவோ உதவுவதாக நம்பப்படுகிறது
    • கழுதை தோலுக்கு அதிக விலை கிடைப்பதால் திருட்டும் அதிகரித்துள்ளது

    சீனாவில், கழுதை தோலில் உள்ள ஜெலட்டின் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் ஒரு அரிய வகை பண்டைய மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளதால் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் கழுதைகள் களவாடப்படுவது அதிகரித்துள்ளது.

    உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், இளமையை நீட்டிக்கவும், தூக்கமின்மையை போக்கவும், குழந்தை பாக்கியத்தை அதிகரிக்கவும் உதவும் "எஜியாவோ" (Ejiao) எனும் மருந்திற்காக, கழுதைகளின் தோல்களை வேக வைத்து, அதில் பல பொருட்களை சேர்த்து பொடியாகவும், மாத்திரையாகவும், மருந்தாகவும் சீனாவில் விற்கப்படுகிறது.

    இந்திய கிராமங்களில் கோழி, ஆடு, மாடு, எருமை வளர்ப்பில் பலர் ஈடுபடுவது தொன்று தொட்டு நடைபெறுகிறது. அதே போல் பல ஆப்பிரிக்க நாடுகளில் குடிநீர், உணவு, பெரும் சுமை தூக்குவது உள்ளிட்ட பல வேலைகளுக்கு கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    உலகின் 53 மில்லியன் கழுதைகளில் 3ல் 2 பங்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளன.

    கழுதை தோலுக்கு அதிக விலை கிடைப்பதால், அவற்றை பலர் களவாடுவது அதிகரித்துள்ளது.

    திருடு போகும் கழுதைகளின் எலும்புக்கூடுகள் ஆங்காங்கே கண்டறியப்படுவதாக கழுதைகளின் உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.


    1990களில் சீனாவில் 11 மில்லியனாக இருந்த கழுதைகளின் எண்ணிக்கை 2021 காலகட்டத்தில் 2 மில்லியனுக்கும் கீழே குறைந்து விட்டது. இதையடுத்து, சீன நிறுவனங்கள், தங்கள் தோல் தேவைக்கு ஆப்பிரிக்க நாடுகளை சார்ந்துள்ளன.

    தற்போது வரை எஜியாவோ உற்பத்திக்கு எத்தனை கழுதைகள் களவாடப்பட்டன எனும் சரியான புள்ளிவிவரம் வெளியிடப்படவில்லை.

    2013ல் $3.2 பில்லியனாக இருந்த எஜியாவோவிற்கான சந்தை மதிப்பு, 2020ல் $7.8 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது மேலும் உயர்ந்தால், கழுதை இனத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், கழுதை தோல் ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என ஆப்பிரிக்க நாடுகளில் விலங்கின ஆர்வலர்கள் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.

    • பிரதமர் மோடிக்கு கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி விருந்தளித்தார்.
    • கத்தார் பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்ட பிரதமர் மோடியை தூதரக அதிகாரிகள் வழியனுப்பினர்.

    தோஹா:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு கத்தார் சென்றார். அங்கு அவர் கத்தார் பிரதமரும், வெளியுறவு மந்திரியுமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை சந்தித்துப் பேசினார்.

    வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேற்கு ஆசியாவின் சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து ஆலோசித்தனர். பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து மோடிக்கு கத்தார் பிரதமர் இரவு விருந்து அளித்து உபசரித்தார்.

    இதற்கிடையே, கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் அகமது அல் தானியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

    இந்நிலையில், கத்தார் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். அவரை தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

    • ஜப்பானிய மக்கள் தொகை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது
    • ஜப்பானில் அனைத்து துறைகளிலும் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது

    கிழக்கு ஆசியாவில் வடமேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடு, ஜப்பான்.

    உலக பொருளாதாரத்தில், உள்நாட்டு மொத்த உற்பத்தி (Gross Domestic Product) அடிப்படையில், ஜப்பான், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகளுக்கு பிறகு 3-ஆம் இடத்தில் இருந்து வந்தது.

    ஆனால், கடந்த சில வருடங்களாக பல சிக்கல்களால் ஜப்பானின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது.

    தற்போது, ஜப்பானிலிருந்து வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வ தகவல்களின்படி, ஜப்பானிய பொருளாதாரம், கடந்த ஆண்டை விட 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இருந்தும், இதுவரை தக்க வைத்திருந்த 3-ஆம் இடத்திலிருந்து நகர்ந்து, 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதன் மூலம், ஜெர்மனி, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.

    அதிகாரபூர்வ தகவல்களின் அடிப்படையில், அமெரிக்க டாலர் மதிப்பில் 2023க்கான ஜப்பானிய ஜிடிபி, $4.2 டிரில்லியன் எனும் அளவில் உள்ளது. $4.5 டிரில்லியன் எனும் மதிப்பில் ஜெர்மனி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    ஒரு தசாப்தத்திற்கு முன் 2-வது இடத்தை சீனாவிடம் பறி கொடுத்தது ஜப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.

    2022 மற்றும் 2023 ஆண்டுகளில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய "யென்" (Yen) கரன்சியின் மதிப்பு முறையே 18 சதவீதம் மற்றும் 7 சதவீதம் என சரிந்தது.

    ஜப்பானின் மத்திய ரிசர்வ் வங்கியான பேங்க் ஆஃப் ஜப்பான் (Bank of Japan), வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளதால், கரன்சியின் மதிப்பு பெரிதும் குறைந்தது.


    மேலும், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாட்டு பொருளாதாரமும் ஏற்றுமதியை சார்ந்தவை.

    "சூரியன் முதலில் உதிக்கும் பூமி" (Land of Rising Sun) என அழைக்கப்படும் ஜப்பானில், அண்மைக்காலமாக, மக்கள் தொகை எண்ணிக்கை குறைவதாலும், வயதானவர்கள் அதிகரிப்பதாலும், தம்பதியர் குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பாததாலும், அனைத்து துறைகளிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தி பெரிதும் குறைந்துள்ளது.

    இந்த சூழ்நிலையில், அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையாலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளாலும், இந்தியா, இந்த தசாப்தத்திற்குள் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து 3-ஆம் இடத்தை பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    ×