என் மலர்tooltip icon

    உலகம்

    • ஜப்பானிய மக்கள் தொகை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது
    • ஜப்பானில் அனைத்து துறைகளிலும் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது

    கிழக்கு ஆசியாவில் வடமேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடு, ஜப்பான்.

    உலக பொருளாதாரத்தில், உள்நாட்டு மொத்த உற்பத்தி (Gross Domestic Product) அடிப்படையில், ஜப்பான், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகளுக்கு பிறகு 3-ஆம் இடத்தில் இருந்து வந்தது.

    ஆனால், கடந்த சில வருடங்களாக பல சிக்கல்களால் ஜப்பானின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது.

    தற்போது, ஜப்பானிலிருந்து வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வ தகவல்களின்படி, ஜப்பானிய பொருளாதாரம், கடந்த ஆண்டை விட 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இருந்தும், இதுவரை தக்க வைத்திருந்த 3-ஆம் இடத்திலிருந்து நகர்ந்து, 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதன் மூலம், ஜெர்மனி, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.

    அதிகாரபூர்வ தகவல்களின் அடிப்படையில், அமெரிக்க டாலர் மதிப்பில் 2023க்கான ஜப்பானிய ஜிடிபி, $4.2 டிரில்லியன் எனும் அளவில் உள்ளது. $4.5 டிரில்லியன் எனும் மதிப்பில் ஜெர்மனி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    ஒரு தசாப்தத்திற்கு முன் 2-வது இடத்தை சீனாவிடம் பறி கொடுத்தது ஜப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.

    2022 மற்றும் 2023 ஆண்டுகளில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய "யென்" (Yen) கரன்சியின் மதிப்பு முறையே 18 சதவீதம் மற்றும் 7 சதவீதம் என சரிந்தது.

    ஜப்பானின் மத்திய ரிசர்வ் வங்கியான பேங்க் ஆஃப் ஜப்பான் (Bank of Japan), வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளதால், கரன்சியின் மதிப்பு பெரிதும் குறைந்தது.


    மேலும், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாட்டு பொருளாதாரமும் ஏற்றுமதியை சார்ந்தவை.

    "சூரியன் முதலில் உதிக்கும் பூமி" (Land of Rising Sun) என அழைக்கப்படும் ஜப்பானில், அண்மைக்காலமாக, மக்கள் தொகை எண்ணிக்கை குறைவதாலும், வயதானவர்கள் அதிகரிப்பதாலும், தம்பதியர் குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பாததாலும், அனைத்து துறைகளிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தி பெரிதும் குறைந்துள்ளது.

    இந்த சூழ்நிலையில், அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையாலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளாலும், இந்தியா, இந்த தசாப்தத்திற்குள் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து 3-ஆம் இடத்தை பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    • டிரம்பின் நடவடிக்கைகளை யூகிக்க முடியாது என்றார் புதின்
    • நேட்டோ குறித்த டிரம்பின் பார்வையில் நியாயம் உள்ளது என்றார் புதின்

    உலகிலேயே பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில், இவ்வருட நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இம்முறை, ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

    அயல்நாடுகளுடன் உள்ள அமெரிக்காவின் உறவு நிலை குறித்து அதிபர் பைடனும், டிரம்பும் நேரெதிர் சித்தாந்தங்களை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மற்றொரு வல்லரசு நாடான ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin), அந்நாட்டின் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள தேர்தல் மற்றும் அதிபர் வேட்பாளர்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு புதின் பதிலளித்ததாவது:

    இரண்டாம் முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபராவதை விட ஜோ பைடன் வருவதையே ரஷியா விரும்பும்.

    பைடன் நீண்ட அனுபவம் உடையவர் மட்டுமல்ல; அவர் நடவடிக்கைகள் எளிதில் யூகிக்க கூடியவை. அவர் அந்த காலத்து அரசியல் சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகள் கொண்டவர்.

    ஆனால், டொனால்ட் டிரம்ப் அவ்வாறு அல்ல; டிரம்பை பிறரால் புரிந்து கொள்ளவோ அல்லது அவரது நடவடிக்கைகளை யூகிக்கவோ முடியாது.

    இருப்பினும், அமெரிக்காவில் யார் அதிபராக பதவி ஏற்றாலும் அவர்களுடன் ரஷியா இணைந்து பணியாற்ற முடியும்.

    நேட்டோவில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து டிரம்ப் கொண்டிருக்கும் சிந்தனைகளில் நியாயம் உள்ளது. ஆனால், முடிவு செய்ய வேண்டியது அமெரிக்காவின் பொறுப்பு.

    பைடனின் உடல்நலம் குறித்து கருத்து தெரிவிக்க நான் டாக்டர் அல்ல. அவரது உடலாரோக்கியம் குறித்து நான் பேசுவது முறையாக இருக்காது.

    2021ல் சுவிட்சர்லாந்து நாட்டில் பைடனை நான் சந்தித்த போது அவர் நலமாகத்தான் இருந்தார்.

    இவ்வாறு புதின் கூறினார்.

    • 45 வயதாகும் ஜோடி ஹேடன் எனும் பெண்ணுடன் நட்புடன் இருந்தார் அதிபர்
    • "மகிழ்ச்சியான இந்த தருணத்தை அனுபவிக்க விரும்புகிறோம்" என்றார் அல்பானீஸ்

    ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், 60 வயதாகும் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese).

    கடந்த 2019ல் ஆஸ்திரேலியாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் (Australian Labor Party) தலைவராக பொறுப்பேற்ற அந்தோணி, 2022ல் ஆஸ்திரேலிய பிரதமராக பதவி ஏற்றார்.

    அந்தோணி அல்பானீஸ், தற்போது 45 வயதாகும் ஜோடி ஹேடன் (Jodie Haydon) எனும் பெண்ணுடன் நீண்ட காலமாக நட்புடன் இருந்தார்.

    2019ல் அந்தோணி அல்பானீஸ், ஜோடி ஹேடன் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர்.

    இந்நிலையில், ஜோடி ஹேடனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அந்தோணி அறிவித்தார்.

    பதவியில் உள்ள போது திருமணம் செய்து கொள்ளும் முதல் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணியாவார்.

    சமூக வலைதளங்களில் இது குறித்து இருவரும் பதிவிட்டுள்ளனர்.

    "நீண்ட ஆலோசனைக்கு பிறகு இதற்கு தயாரானேன். எப்பொழுது, எங்கே திருமணம் எனும் விவரங்கள் குறித்து நாங்கள் இருவரும் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம். தற்போது இந்த மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க விரும்புகிறோம்" என அந்தோணி தெரிவித்துள்ளார்.

    நேற்று பிப்ரவரி 14, காதலர் தினத்தையொட்டி இருவரும், ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பர்ரா (Canberra) நகரில் இத்தாலியன் அண்ட் சன்ஸ் எனும் புகழ் பெற்ற உணவகத்தில் விருந்துண்டு மகிழ்ந்தனர்.


    வலைதளங்களில் வெளியான இருவரது புகைப்படங்களில், ஜோடி ஹேடன் அணிந்திருக்கும் நிச்சயதார்த்த மோதிரம், அல்பானீஸ் பிரத்யேகமாக வடிவமைத்தது.

    பல துறைகளை சேர்ந்த அமைச்சர்களும், கட்சியின் தலைவர்களும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் (Christopher Luxon), "உங்கள் இருவருக்கும் எனது மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.

    அந்தோணி, இதற்கு முன்னர், 2000-வது ஆண்டு கார்மல் டெப்புட் (Carmel Tebbutt) என்பவரை திருமணம் செய்தார். 2019ல் இருவரும் பிரிந்தனர்.

    அவர்கள் இருவருக்கும் 23-வயதில் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அரசு, தனியார் நிறுவனங்கள் கேன்சர் தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன
    • விரைவில் தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு வரும் என்றார் புதின்

    உலகெங்கும் மனிதகுலத்தை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்று நோய் எனப்படும் "கேன்சர்" (cancer).

    உலகம் முழுவதும் அரசு-சார்ந்த மற்றும் அரசு-சாரா பல அமைப்புகள் கேன்சருக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல கோடிகளை செலவழித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    கடந்த வருடம், இங்கிலாந்து அரசு, ஜெர்மனி நாட்டை அடிப்படையாக கொண்ட பயோஎன்டெக் (BioNTech) எனும் நிறுவனத்துடன், 2030க்குள் 10 ஆயிரம் நோயாளிகள் பயன்படும் வகையில் கேன்சர் மருத்துவ ஆராய்ச்சி செய்து கொள்ள ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், எதிர்கால தொழில்நுட்பம் குறித்து ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உரையாற்றினார். அதில் ரஷிய ஆராய்ச்சியாளர்கள் கேன்சருக்கான மருந்து கண்டுபிடிப்பில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து பேசினார்.

    அப்போது அவர் அறிவித்ததாவது:

    எங்கள் ஆராய்ச்சியாளர்கள் கேன்சருக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கி விட்டார்கள். தனிப்பட்ட வகையில் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் அவை பொதுபயன்பாட்டுக்கு விரைவில் வரும் என நம்புகிறேன்.

    இவ்வாறு புதின் தெரிவித்தார்.

    எந்த வகை புற்று நோயை தடுக்க இந்த தடுப்பூசி செயல்படும் என்பதையும், எவ்வாறு நோயாளிகளின் உடலில் செயல்படும் எனும் விவரங்களையும் புதின் தெரிவிக்கவில்லை.

    ஹ்யூமன் பேபிலோமா வைரஸ் (Human Papilloma Virus) எனப்படும் வைரஸ் தாக்குதல் மூலம் பலவகையான கேன்சர் நோய் உருவாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

    இந்த ஹெச்.பி.வி. தாக்குதலுக்கு எதிராக தற்போது 6 உரிமம் பெற்ற தடுப்பூசிகள் உள்ளன.

    கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக ரஷியா "ஸ்புட்னிக்" (Sputnik) எனும் தடுப்பூசியை கண்டுபிடித்து அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது.

    • பிரபோவோ சுபியாண்டே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
    • அதிபர் தேர்தலில் பிரபோவோ 57 முதல் 59 சதவீதம் வரை வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தோனேசியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாதுகாப்பு மந்திரி பிரபோவோ சுபியாண்டோ முன்னாள் மாகாண கவர்னர்கள் அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவியது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் உடனே ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் பிரபோவோ சுபியாண்டே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

    இந்நிலையில் அதிபர் தேர்தலில் பிரபோவோ 57 முதல் 59 சதவீதம் வரை வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதன் மூலம் அவர் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார். அதே வேளையில் தேர்தல் முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பிரபோவோ, தனது வெற்றி அனைத்து இந்தோனேசியர்களின் வெற்றியாகும் என்றார்.

    • பிரதமர் மோடி அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைத்தார்.
    • பிரதமர் மோடி அதிபர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியை சந்தித்தார்.

    இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைத்த பிரதமர் மோடி அங்கிருந்து கத்தார் தலைநகர் தோஹா சென்றடைந்தார்.

    கத்தார் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி மற்றும் ஷேக் தமிம் பின் அல் தானி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.


    இது குறித்த எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி, "பிரதமர் ஷேக் தமிம் பின் அல் தானியுடன் சிறப்பான சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது இந்தியா மற்றும் கத்தார் இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.


    "இந்தியா-கத்தார் உறவை மேம்படுத்தும் விதமாக கத்தார் பிரதமர் ஷேக் தமிம் பின் அல்தானி மற்றும் கத்தாரின் நிதி அமைச்சரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பின் போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி என பல்வேறு துறைகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது," என மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

    • ரஷிய போர்க்கப்பல் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்தது.

    கீவ்:

    உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.

    ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.

    இந்நிலையில், ரஷியாவின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், பிப்ரவரி 14 அன்று உக்ரைன் படையினர் கருங்கடலில் ரஷிய கடற்படையின் போர்க்கப்பலை அழித்தனர் என தெரிவித்துள்ளது.

    • அபுதாபியின் முதல் இந்து கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
    • கோவில் மட்டும் தரைதளத்துடன் சேர்ந்து 2 தளங்களாக 55,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

    அபுதாபி:

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அபுதாபிக்குச் சென்ற அவர் நேற்று மாலை 'அஹ்லன்' மோடி என்ற தலைப்பில் நடைபெற்ற பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர்.

    தொடர்ந்து, அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றினார்.

    இதற்கிடையே, துபாயில் 3-வது நாளாக நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கவுரவ விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பேசினார். இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

    இந்நிலையில், பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

    கோவில் மட்டும் தரைதளத்துடன் சேர்ந்து 2 தளங்களாக 55,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களைப் பார்வையிட்டு அங்கு நடைபெற்ற பூஜையிலும் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார்.

    • பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அமீரகம் சென்றுள்ளார்.
    • அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைக்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி அபுதாபியில் இந்திய சமூகத்தினர் கலந்து கொண்ட பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    இதைத் தொடர்ந்து இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான பாரத் மார்ட் வணிக மையத்தை திறந்து வைத்தார். இதோடு, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார்.

    • நைஜீரிய மக்களின் பிரதான உணவு தானியம் அரிசி
    • அஃபாஃபாடாவை ஆலை அதிபர்கள் தூக்கி எறிந்து வந்தனர்

    கினியா வளைகுடா பகுதியில் உள்ள ஆப்பிரிக்க நாடு, நைஜீரியா. இதன் தலைநகரம், அபுஜா (Abuja).

    நைஜீரியா முழுவதும் விலைவாசி உயர்வு மக்களை பெரிதும் வாட்டி வருகிறது.

    அந்நாட்டு மக்களின் பிரதான உணவு தானியம், அரிசி.

    உயர்ந்து வரும் அரிசி விலையின் காரணமாக, அந்நாட்டு மக்கள் அரிசி ஆலைகளில் முன்னர் ஒதுக்கப்பட்டு வந்த அஃபாஃபாடா (afafata) எனும் தடியான, சமைக்க கடினமான அரிசி வகையை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

    சில வருடங்களுக்கு முன், அஃபாஃபாடா அரிசியை, அரிசி ஆலை அதிபர்கள் மீன்களுக்கு உணவிட பயன்படுத்துபவர்களிடம் மட்டுமே குறைந்த விலைக்கு விற்று வந்தனர்; சில நேரங்களில் விற்காமல் தூக்கி எறிவார்கள்.

    ஆனால், தற்போது அங்கு நிலைமை மாறி வருகிறது.

    ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளதால், மீன் பண்ணை வைத்திருந்தவர்களுக்கு இப்போது அஃபாஃபாடா கிடைப்பது அரிதாகி வருகிறது.

    உலகளாவிய பொருளாதார மந்தநிலை, எரிபொருளுக்கான மானியத்தை அதிபர் போலா டினுபு (Bola Tinubu) ரத்து செய்தது, "நைரா" (Naira) எனும் அந்நாட்டு கரன்சி மீதான பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நைஜீரியாவில் உணவு பண்டங்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    பல மாநிலங்களில், விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தினர்.

    கடந்த 2 மாதங்களில் நைஜீரியாவில் விலைவாசி 2 மடங்காகி உள்ளது.

    வழக்கமாக, அந்நாட்டு நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வாங்கும் 50 கிலோ அரிசி மூட்டை தற்போது சுமார் ரூ.4400 ($53) எனும் மதிப்பில் விற்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு விற்கப்பட்ட விலையை விட 70 சதவீதம் அதிகம் என்பதால் பெரும்பாலான மக்களால் தரமான அரிசியை வாங்க முடியவில்லை.

    • பிரதமர் மோடி அமீரகத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான பார்த் மார்ட் என்ற வணிக மையத்தை திறந்துவைத்தார்.

    துபாய்:

    வளைகுடா நாடுகளுடன் பெட்ரோலிய பொருட்களுக்கு அப்பாலும் வணிக உறவினை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் பாரத் மார்ட் என்னும் புதுமையான வணிக மையத்தை துபாயில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதில் ஐக்கிய அரபு எமிரேட்சின் துணை அதிபர் மற்றும் பிரதமரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கலந்துகொண்டார்.

    இதற்கான பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.

    இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது பல்வேறு வகையான தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த இது ஓர் ஒருங்கிணைந்த வர்த்தக தளமாக செயல்படும்.

    சுமார் 1 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டிருக்கும் இந்த பாரத் மார்ட், கிடங்கு, சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் வசதிகளை ஒருங்கே கொண்டிருக்கும். கனரக இயந்திரங்கள் முதல் அன்றாட தேவைக்கான எளிய பொருட்கள் வரை சகலமானதையும் இங்கே பெறலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உதவியாளர், தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை அலுவலக பணிக்கு பயன்படுத்தினார்
    • இணையவழியாக கிரிப்டோகரன்சிகளை திருட வட கொரியா பலமுறை முயன்றுள்ளது

    கடந்த நவம்பர் மாதம், தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் யோல் (Yoon Suk Yeol), 3-நாள் சுற்று பயணமாக இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது அவர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கையும் சந்தித்து பேசினார்.

    யூன், இங்கிலாந்து சென்ற காலகட்டத்தில் அவரின் முக்கிய உதவியாளரின் மின்னஞ்சல்களை வட கொரியா "ஹேக்கிங்" செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதிபரின் உதவியாளர், தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை அலுவலக பணிக்கு பயன்படுத்திய போது அதை வட கொரியா ஹேக் செய்தது. இந்த ஹேக்கிங் மூலம், அதிபர் யூனின் பயண அட்டவணையையும், அதிபர் அனுப்பிய செய்திகளையும் வட கொரியா களவாடியுள்ளது.

    ஆனால், ஹேக்கிங் மூலம் என்னென்ன தகவல்கள் களவு போனது எனும் விவரத்தை தென் கொரிய அரசு இதுவரை வெளியிடவில்லை.

    தென் கொரிய அதிபரின் உதவியாளர் குழுவை சேர்ந்த ஒருவரின் மின்னஞ்சல் கணக்குகளை வட கொரியா ஹேக்கிங் செய்திருப்பது இதுதான் முதல்முறை.

    வட கொரியா, தனது நாட்டின் ராணுவ மற்றும் அணு ஆயுத தேவைகளுக்கான பணத்திற்காகவும், தென் கொரியாவின் அரசாங்க ரகசியங்களை தெரிந்து கொள்ளவும், தென் கொரியா மீது நீண்ட காலமாக பல வழிமுறைகளை கையாண்டு சைபர் தாக்குதல் நடத்தி வருகிறது. அணு ஆயுத பரிசோதனைகளுக்கு தேவைப்படும் பணத்திற்கு, இணையவழியாக கிரிப்டோகரன்சிகளை திருடுவதை வட கொரியா பல முறை முயன்றுள்ளது.

    தென் கொரிய அதிபர் இங்கிலாந்து செல்லும் முன்னரே ஹேக்கிங் குறித்து கண்டறியப்பட்டு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இது குறித்து தென் கொரியா தெரிவித்தது.

    ×