என் மலர்
உலகம்
- பிரதமர் மோடி அமீரகத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான பார்த் மார்ட் என்ற வணிக மையத்தை திறந்துவைத்தார்.
துபாய்:
வளைகுடா நாடுகளுடன் பெட்ரோலிய பொருட்களுக்கு அப்பாலும் வணிக உறவினை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பாரத் மார்ட் என்னும் புதுமையான வணிக மையத்தை துபாயில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதில் ஐக்கிய அரபு எமிரேட்சின் துணை அதிபர் மற்றும் பிரதமரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கலந்துகொண்டார்.

இதற்கான பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது பல்வேறு வகையான தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த இது ஓர் ஒருங்கிணைந்த வர்த்தக தளமாக செயல்படும்.
சுமார் 1 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டிருக்கும் இந்த பாரத் மார்ட், கிடங்கு, சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் வசதிகளை ஒருங்கே கொண்டிருக்கும். கனரக இயந்திரங்கள் முதல் அன்றாட தேவைக்கான எளிய பொருட்கள் வரை சகலமானதையும் இங்கே பெறலாம்.
- உதவியாளர், தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை அலுவலக பணிக்கு பயன்படுத்தினார்
- இணையவழியாக கிரிப்டோகரன்சிகளை திருட வட கொரியா பலமுறை முயன்றுள்ளது
கடந்த நவம்பர் மாதம், தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் யோல் (Yoon Suk Yeol), 3-நாள் சுற்று பயணமாக இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது அவர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கையும் சந்தித்து பேசினார்.
யூன், இங்கிலாந்து சென்ற காலகட்டத்தில் அவரின் முக்கிய உதவியாளரின் மின்னஞ்சல்களை வட கொரியா "ஹேக்கிங்" செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிபரின் உதவியாளர், தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை அலுவலக பணிக்கு பயன்படுத்திய போது அதை வட கொரியா ஹேக் செய்தது. இந்த ஹேக்கிங் மூலம், அதிபர் யூனின் பயண அட்டவணையையும், அதிபர் அனுப்பிய செய்திகளையும் வட கொரியா களவாடியுள்ளது.
ஆனால், ஹேக்கிங் மூலம் என்னென்ன தகவல்கள் களவு போனது எனும் விவரத்தை தென் கொரிய அரசு இதுவரை வெளியிடவில்லை.
தென் கொரிய அதிபரின் உதவியாளர் குழுவை சேர்ந்த ஒருவரின் மின்னஞ்சல் கணக்குகளை வட கொரியா ஹேக்கிங் செய்திருப்பது இதுதான் முதல்முறை.
வட கொரியா, தனது நாட்டின் ராணுவ மற்றும் அணு ஆயுத தேவைகளுக்கான பணத்திற்காகவும், தென் கொரியாவின் அரசாங்க ரகசியங்களை தெரிந்து கொள்ளவும், தென் கொரியா மீது நீண்ட காலமாக பல வழிமுறைகளை கையாண்டு சைபர் தாக்குதல் நடத்தி வருகிறது. அணு ஆயுத பரிசோதனைகளுக்கு தேவைப்படும் பணத்திற்கு, இணையவழியாக கிரிப்டோகரன்சிகளை திருடுவதை வட கொரியா பல முறை முயன்றுள்ளது.
தென் கொரிய அதிபர் இங்கிலாந்து செல்லும் முன்னரே ஹேக்கிங் குறித்து கண்டறியப்பட்டு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இது குறித்து தென் கொரியா தெரிவித்தது.
- ஆர்க்டிக் பிரதேசங்களில் பனிப்பாறைகள் முற்றிலும் குறைந்து விட்டது
- ரிங்க்ட் சீல் உயிரினங்கள் முன்பு போல் அதிகம் கடற்கரைக்கு வருவதில்லை
ஆர்க்டிக் கடல் பகுதியில் வாழும் அரிய வகை உயிரினத்தை சேர்ந்தவை, பனிக்கரடிகள். இவை சுமார் 30 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியவை.
ஆர்க்டிக் கடற்கரையோர பகுதிகளில் காணப்படும் "ரிங்க்ட் சீல்" (ringed seal) எனும் உயிரினங்களையும், பெலுகா திமிங்கிலங்கள், ஆர்க்டிக் மான்கள் உள்ளிட்டவைகளையும் வேட்டையாடி உண்டு பனிக்கரடிகள் வாழ்கின்றன.
உலகம் முழுவதும் சில ஆண்டுகளாக நிகழும் பருவகால மாற்றங்களால் ஆர்க்டிக் பனிப்பிரதேசத்தில் "பனி உருகல்" அதிக தீவிரமடைந்துள்ளது.
ஆண்டுக்காண்டு உலக வெப்பமயமாதல் (global warming) அதிகரிப்பதால் பனிப்பாறைகள் குறைந்து வருகின்றன.
கோடை காலங்களில் பல ஆர்க்டிக் பிரதேசங்களில் பனிப்பாறைகள் முற்றிலும் குறைந்து விட்டது.

இதனால் "ரிங்க்ட் சீல்" உயிரினங்கள், கரைக்கு வருவதில்லை.
இதன் தொடர்ச்சியாக, பனிக்கரடிகள் தங்கள் உணவு தேவைக்கு கடற்கரையோரம் கிடைக்கும் பறவைகளின் முட்டைகள், கனிகள், புற்கள் ஆகியவற்றை உண்டு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பனிக்கரடிகள் உடல் எடை கணிசமாக குறைந்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஒரு வளர்ந்த ஆண் பனிக்கரடி, 600 கிலோகிராம் வரை எடையுள்ளவை.
இதன் காரணமாக பனிக்கரடிகள் விரைவில் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும், பனிக்கரடிகளின் இனமே அழிந்து விடும் அபாயம் உள்ளதாகவும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
1980களில், கட்டுப்பாடின்றி வேட்டையாடியதால் பனிக்கரடிகளின் எண்ணிக்கை குறைந்தது. பல சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு பின் பனிக்கரடிகளை வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து அதிகரித்த அந்த உயிரினம், தற்போது உலக வெப்பமயமாதலால் அதிகரிக்கும் "பனி உருகல்" காரணமாக உணவுக்கு வழியின்றி தவிப்பதால், மீண்டும் அழியும் அபாயத்தில் உள்ளது.
- பெரும்பாலான மருத்துவமனைகளின் இணைய கட்டமைப்பில் தாக்குதல் நடந்தது
- தாக்குதலை நடத்தியவர்கள், 1,30,000 பவுண்டுகள் பணயத்தொகையாக கேட்டனர்
ஐரோப்பிய கண்டத்தின் தென்கிழக்கில் உள்ள நாடு ருமேனியா (Romania). இதன் தலைநகரம் புசாரெஸ்ட் (Bucharest).
இங்குள்ள மருத்துவமனைகளில், நோயாளிகளின் விவரங்கள், மென்பொருள் கட்டமைப்பின் வழியே மருத்துவர்களுக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்படும்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று பிடஸ்டி குழந்தைகள் மருத்துவமனையில் (Pitesti Pediatric Hospital) துவங்கி அந்நாட்டின் பெரும்பாலான மருத்துவமனைகளின் இணையவழி கட்டமைப்பில் சைபர் தாக்குதல் நடந்துள்ளது.
தாக்குதல் நடத்தி பல நோயாளிகளின் தரவுகளை திறந்து பார்க்க முடியாதவாறு சைபர் குற்றவாளிகள் "லாக்" செய்து விட்டனர்.
தரவுகளை "அன்லாக்" செய்ய, தாக்குதலை நடத்தியவர்கள் 1,30,000 பவுண்டு பணயத்தொகையாக கேட்டனர். இந்த தொகை முழுவதும் பிட்காயின்களாக வழங்கப்பட வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
தற்போது வரை 25 மருத்துவமனைகள் இத்தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து தேசிய சைபர் பாதுகாப்பு ஆணையம் (National Cyber Security Directorate) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
தாக்குதலை நடத்திய "வைரஸ்" மென்பொருளை கண்டுபிடித்த சைபர் துறையினர், இதை நிகழ்த்திய கும்பல் குறித்து தற்போது வரை கண்டறியவில்லை.
தாக்குதல் நடத்தியவர்கள் கேட்கும் தொகையை மருத்துவமனைகள் தாங்களாகவே தனிப்பட்ட முறையில் வழங்கி விட வேண்டாம் என்று பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பை கருதி மருத்துவமனைகளுக்கான இணையவழி தொடர்பு தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது.
இணையவழி தொடர்பில் உள்ள "ஸ்கேனிங் மெஷின்" உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு இதனால் முற்றிலும் செயலிழந்து விட்டது.
இதையடுத்து, அனைத்துவிதமான மருத்துவ ஆலோசனைக்கான தகவல்களையும் மருத்துவர்கள் காகிதம் மற்றும் பேனா மட்டுமே உபயோகித்து பரிமாறி கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
- தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை.
ஜகார்த்தா:
உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடு இந்தோனேசியா. 20 கோடி வாக்காளர்களை கொண்ட அங்கு இன்று அதிபர் தேர்தல் நடந்தது. மேலும் பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடந்தது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. மக்கள் காலையிலேயே வாக்குசாவடி மையங்களில் குவிந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.
தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதிபர் தேர்தலில் மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை.
பாதுகாப்புத்துறை மந்திரியாக பிரபோலோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண கவர்னர்களான அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.
தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். எந்த வேட்பாளர்களுக்கும் 50 சதவீத வாக்கு கிடைக்காவிட்டால் 2-வது சுற்றுத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்.
கருத்து கணிப்புகளில் பாதுகாப்பு மந்திரி பிரபோலோ வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 52 சதவீத வாக்குகள் பெறுவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இவர் தற்போதைய அதிபரின் ஆதரவை பெற்றவர் ஆவார். துணை அதிபர் பதவிக்கு அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை ஓட்டுப் பதிவு முடிந்ததும் அதில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்படுகின்றன.
- ஏ.சி. அல்லது ஹீட்டரில் இருந்து விஷவாயு கசிந்து 4 பேரும் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
- 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் சுஜித் ஹென்றி(வயது38). இவரது மனைவி அலைஸ் பிரியங்கா(37). இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பணிபுரிந்து வந்தனர். சுஜித் ஹென்றி பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அலைஸ் பிரியங்காவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கணவன்-மனைவி இருவரும் தங்களது மகன்கள் நோவா மற்றும் நாதன் ஆகியோருடன் கலிபோர்னியாவில் சான்மேட்டியோ பகுதியில் வசித்து வந்தார்கள்.
விடுமுறை கிடைக்கும் போது சொந்த ஊருக்கு வந்து சென்றிருக்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அலைஸ் பிரியங்காவுக்கு, கேரளாவில் உள்ள அவரது தாய் போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
இதனால் கலிபோர்னியாவில் உள்ள தங்களது உறவினர் ஒருவருக்கு போன் செய்து, அலைஸ் பிரியங்கா வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியிருக்கிறார். அதன்படி அவர்களும், அங்கு சென்றனர். அங்கு வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது.
எவ்வளவு அழைத்தும் யாரும் கதவை திறக்க வில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், அது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர்.
அப்போது அங்கு சுஜித் ஹென்றி, அவரது மனைவி அலைஸ் பிரியங்கா மற்றும் அவர்களது 2 மகன்கள் உள்ளிட்ட 4 பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். ஏ.சி. அல்லது ஹீட்டரில் இருந்து விஷவாயு கசிந்து 4 பேரும் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
ஆனால் சுஜித் ஹென்றி, அலைஸ் பிரியங்கா ஆகிய இருவரின் உடலிலும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்தன. மேலும் அவர்களது வீட்டில கைத்துப்பாக்கி ஒன்றும் கிடந்துள்ளது. இதனால் சுஜித் ஹென்றி தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்காலம் என்று கருதப்படுகிறது.
ஆனால் குழந்தைகளின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் எதுவும் இல்லை. ஆகவே அவர்களது மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. கணவன்-மனைவி இருவரின் உடலிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் இருப்பதால், அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுத்து கொலை செய்துவிட்டு, அவர்களும் உயிரை மாய்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவில் குழந்தைகள் எப்படி இறந்தன என்பது தெரியவரும். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பூட்டிய வீட்டுக்குள் இறந்துகிடந்த சம்பவம் கலிபோர்னியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோவிலை கட்டுவதற்கு துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரக பகுதிகளை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அபுதாபி:
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றார். அங்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து இரு நாடுகள் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் அபுதாபியில் நடந்த அஹ்லன் மோடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமீரக வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
இன்று பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராக மோடி கலந்துகொள்கிறார்.
அதன்பின் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவிலான சுவாமி நாராயண் கோவிலை இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு முதல் முறையாக சென்றபோது அங்கு வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக கோவில் கட்ட மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்டு இந்து கோவில் கட்டுவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அனுமதி அளித்தது.கோவிலை கட்டுவதற்கு துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
கோவிலின் கட்டுமான பணிகள் மற்றும் நிர்வகிக்க குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த பிஏபிஎஸ் என்ற ஆன்மிக அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அபுதாபியின் ரக்பா பகுதி அருகே அல் முரைக்கா பகுதியில் சில ஆண்டுகளாக கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் பணிகள் கடந்த மாதம் முடிந்தது.
இரும்பு, கம்பிகள் இல்லாமல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மற்றும் பளிங்கு கற்களை கொண்டு பாரம்பரிய இந்து கோவிலாக கட்டப்பட்டுள்ளது. கட்டிட உறுதிக்காக சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரக பகுதிகளை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 1,000 ஆண்டுகளாகும். அபுதாபி இந்து கோவில் வளாகம் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.700 கோடியில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இதில் கோவில் கட்டிடம் மட்டும் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ளது. இதில் மிகப்பெரிய கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கூட்டங்கள் நடத்தும் பகுதி மற்றும் 5 ஆயிரம் பேர் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியுடன் 2 சமூக அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வளாகத்தின் அருகே 53 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கார் நிறுத்தப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,200 கார்கள் மற்றும் 30 பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ளலாம். கூடுதலாக ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 2 தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது. தொடர்ந்து மாலை கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி கலந்துகொண்டு கோவிலை திறந்து வைக்கிறார். அங்கு நடக்கும்பூஜைகளில் கலந்து கொள்கிறார்.
- கடந்த வருடம், புளோரிடா மாநிலத்திற்கு பெசோஸ் குடி பெயர்ந்தார்
- வாஷிங்டனில் பங்கு விற்கும் வருவாயில் 7 சதவீதம் வரி செலுத்த வேண்டும்
1994ல் அமெரிக்காவில் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) உருவாக்கிய நிறுவனம், அமேசான் (Amazon).
2021ல் இந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து ஜெப் பெசோஸ் விலகினார். பெசோஸ் விலகியதை தொடர்ந்து ஆண்டி ஜாசி (Andy Jassy) தலைமை செயல் அதிகாரியாக அமேசானை நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது 60 வயதாகும் ஜெப் பெசோஸ், தன் வசமிருந்த அமேசான் நிறுவன $4 பில்லியன் மதிப்புடைய பங்குகளை விற்று விட்டார்.
கடந்த வருடம், பெசோஸ், வாஷிங்டன் மாநிலத்திலிருந்து புளோரிடா மாநிலத்திற்கு குடி பெயர்ந்தார்.
வாஷிங்டன் மாநிலத்தில் $250,000 மதிப்பிற்கு மேல் நிறுவனத்தின் பங்குகளை விற்றால், அதற்கு 7 சதவீதம் மாநில வரி செலுத்த வேண்டும். ஆனால், புளோரிடா மாநிலத்தில் பங்குகள் விற்பனையில் ஈட்டும் வருவாய்க்கு மாநில வரி கட்ட தேவையில்லை.
இதன் மூலம் $280 மில்லியன் மதிப்பிலான தொகையை பெசோஸ் சேமிக்க முடியும்.
2021ல் தனது பங்குகளில் கணிசமானவற்றை விற்ற பெசோஸ், தற்போது பெருமளவு மீண்டும் விற்றுள்ளார். தனது பங்குகளை விற்பனை செய்த நிலையிலும் அமேசானின் பிரதான பங்குதாரராக ஜெப் பெசோஸ் உள்ளார். அவரது நிகர மதிப்பு சுமார் $190 பில்லியனுக்கும் மேல் உள்ளது.
1994ல் நியூயார்க் நகரில் இருந்து சியாட்டில் நகருக்கு செல்லும் ஒரு பயணத்தின் போது பெசோஸ், இணையதளம் வழியாக புத்தகங்களை வாங்கவும், விற்கவும் ஒரு நிறுவனத்தை தொடங்க எண்ணி உடனடியாக செயல்பட தொடங்கினார்.
அவ்வாறு உருவான அமேசான், இன்று இணையவழி சில்லறை வணிகத்தில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக அமேசான் நிறுவன பங்குகள் அமெரிக்க பங்கு சந்தையில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
- எத்தனை ஏவுகணைகள் வீசப்பட்டன. எவ்வளவு தூரம் பறந்தன போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. தென் கொரியா, அமெரிக்காவின் எச்சரிக்கைகளை கண்டு கொள்ளாமல் சோதனை நடத்துகிறது. சமீபத்தில் தென் கொரியாவுக்கு எதிராக போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று வடகொரியா அதிபர் தெரிவித்தார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.
வடகொரியா தனது வடகிழக்கு கடற்பகுதியில் கப்பலில் இருந்து பல ஏவுகணைகளை வீசியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்தது. மேலும் கிழக்கு கடற்கரை நகரமான பொன்சானின் வடகிழக்கு கடல்பகுதியில் கண்டறியப்பட்ட ஏவுகணைகளை தென்கொரியா, அமெரிக்க ராணுவங்கள் ஆய்வு செய்து வருவதாக தென் கொரியா கூட்டுப்படை தலைவர்கள் தெரிவித்தனர். எத்தனை ஏவுகணைகள் வீசப்பட்டன. எவ்வளவு தூரம் பறந்தன போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
- பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ பிரதமர் பதவிக்கு போட்டியில்லை என அறிவிப்பு.
- நவாஸ் ஷெரீப் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்.
பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கான தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது.
இந்த நிலையில் ஸ்திரதன்மையான அரசியலை உருவாக்கி பாகிஸ்தானை காப்பாற்ற நாவஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ ஆகியோர் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தனர். மேலும் சில கட்சிகளை தங்களது கூட்டணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் யார் பிரதமர் போன்ற விவாதம் கிளம்பியது. இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ மற்றும் அவரது தந்தை சர்தாரி ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. மந்திரி சபையிலும் இடம் பெற போவதில்லை. வெளியில் இருந்து நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், அவரது சகோதரரான ஷெபாஸ் ஷெரீப்-ஐ பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளார். அதேவேளையில் நாவஸ் ஷெரீப் அவரது மகளை பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராகவும் பரிந்துரை செய்துள்ளார்.
இதை கூட்டணி கட்சிகள் ஏற்றக்கொண்டால், பாகிஸ்தான் நாட்டின் அடுத்த பிரதமாக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்பார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளுக்கு நவாஸ் ஷெரீப் நன்று தெரிவித்துள்ளா். இந்த முடிவால் பாகிஸ்தான் நெருக்கடியில் இருந்து வெளியே வரும் என நம்புவதாக தெரிவித்தார்.
- பிரதமர் மோடி "அஹ்லன் மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
- இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி அபுதாபியில் இந்திய சமூகத்தினர் கலந்து கொள்ளும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்தார். சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இத்துடன் யு.பி.ஐ. ரூபே கார்டு சேவையை இருவரும் இணைந்து அறிமுகம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி. டெல்லி அபு தாபி வளாகத்தில் பயின்று வரும் முதல் பேட்ச் மாணவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். பிறகு அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி "அஹ்லன் மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிரதமர் மோடியை காண ஏராளமான இந்திய சமூகத்தினர் இந்த மைதானத்திற்கு அதிகளவில் வருகை தந்தனர். மைதானத்திற்குள் பிரதமர் மோடி நுழைந்த போது இந்திய சமூகத்தினர் மோடி, மோடி என கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக 700 நடன கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இன்று அபுதாபியில் நீங்கள் வரலாற்றை உருவாக்கி இருக்கின்றீர்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நீங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்துள்ளீர்கள். ஆனாலும், அனைவரின் இதயமும் இணைந்தே இருக்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க மைதானத்தில் ஒவ்வொருத்தரின் இதய துடிப்பும் மற்றும் சுவாசத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவு நீடிக்கட்டும் என்றே சொல்கிறது."

"நான் எனது குடும்ப உறுப்பினர்களை காண இங்கு வந்துள்ளேன். நீங்கள் பிறந்த இடத்தின் மண்வாசனை மற்றும் 140 கோடி மக்களின் தகவலை கொண்டு வந்திருக்கிறேன். அந்த தகவல் என்னவென்றால், 'பாரதம் உங்களால் பெருமை கொள்கிறது' என்பதே ஆகும்."
"2015-இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக வந்த நினைவு இன்றும் என் மனதில் அப்படியே இருக்கிறது. மூன்று தசாப்தங்களுக்கு பிறகு ஒரு இந்திய பிரதமர் ஐக்கிய அரபு அமீரகம் வருவது அப்போது தான் முதல் முறையாக இருந்தது. மேலும் தந்திர உலகமும் எனக்கு புதிதான ஒன்று. விமான நிலையத்தில் அன்றைய பட்டத்து இளவரசரும், இன்றைய அதிபருமான அவரது சகோதரர்கள் ஐந்து பேரும் என்னை வரவேற்றனர். அவர்களின் கண்களில் இருந்த பிரகாசத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்த வரவேற்பு எனக்கானது மட்டுமல்ல 140 கோடி இந்தியர்களுக்கானது."

"கடந்த பத்து ஆண்டுகளில் ஏழாவது முறையாக ஐக்கிய அரபு அமீரகம் வருகிறேன். சகோதரர் ஷேக் முகமது பின் ஜாயத் என்னை வரவேற்க இன்று விமான நிலையம் வந்திருந்தார், இது அவரை சிறப்பான ஒருவராக மாற்றுகிறது. அவரை நான்கு முறை இந்தியாவுக்கு வரவேற்ற வாய்ப்பு நமக்கு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சில நாட்களுக்கு முன்பு கூட அவர் குஜராத் வந்திருந்தார். அவருக்கு நன்றி தெரிவிக்க லட்சக்கணக்கானோர் வீதிகளில் கூடியிருந்தனர்."
"ஐக்கிய அரபு அமீரகம் எனக்கு மிகப்பெரிய விருது- தி ஆர்டர் ஆஃப் ஜாயத் வழங்கி இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இந்த கௌரவம் எனக்கானது மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களான உங்களுக்குமானதும் கூட. 2015-ம் ஆண்டு அபுதாபியில் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் சார்பாக நான் அவரிடம் வைத்தேன், அவர் உடனே அதற்கு அனுமதி கொடுத்தார். தற்போது இந்த கோவிலை பிரமாண்டமாக திறப்பதற்கான நேரம் வந்துவிட்டது," என்று தெரிவித்தார்.
- பணி நேரம் முடிந்ததும் ஊழியர்கள் செல்போனை அணைத்து வைக்கலாம்
- மின்னஞ்சலை பார்க்கும்படி இனி ஊழியர்களை நிறுவனங்கள் கட்டாயப்படுத்த முடியாது
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் செனட் (Senate) மற்றும் பிரதிநிதிகளின் சபை (House of Representatives) என இரு அவைகள் உள்ளன.
செனட் சபை, அந்நாட்டு ஊழியர்களின் நலன் கருதி "ரைட் டு டிஸ்கனெக்ட்" (Right to Disconnect) எனும் "தொடர்பு அறுக்கும் உரிமை" குறித்து சட்டம் இயற்றியது.
இச்சட்டத்தின்படி, ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், தங்கள் பணி நேரத்தை முடித்த ஊழியர்களை, நிறுவன அதிகாரிகள் செய்தி, மின்னஞ்சல் மற்றும் செல்போன் அல்லது வேறு எந்த வகையிலும் தொடர்பு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று, பணிக்கான நேரம் முடிந்ததும் ஊழியர்கள் தங்கள் செல்போன்களை அணைத்து வைத்து கொள்வதும் அவர்களின் உரிமை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) இந்த சட்டத்திற்கு பெரும் ஆதரவு வழங்கியுள்ளார்.

இச்சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அந்தோனி அல்பானீஸ், "24 மணி நேர பணிக்காக ஊதியம் வாங்காத ஒருவர் பணி நேரம் முடிந்தும் தொடர்பில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என கூறினார்.
மென்பொருள், தகவல் தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் பணிக்கான நேரம் முடிந்து ஊழியர்கள் சென்ற பிறகும், தங்கள் மின்னஞ்சலை அவ்வப்போது பார்த்து அலுவல் குறித்த முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
தாங்கள் தேவையற்று அழைக்கப்படுவதாக பணியாளர்கள் உணர்ந்தால் நிறுவன மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும். அதில் தீர்வு காணப்படவில்லை என்றால், பணியாளர் நல ஆணையத்திடம் முறையிடலாம்.
இச்சட்டத்திற்கு புறம்பாக ஊழியர்களை அழைக்கும் நிறுவனங்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






