search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அபுதாபியில் முதல் இந்து கோவில்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
    X

    அபுதாபியில் முதல் இந்து கோவில்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

    • கோவிலை கட்டுவதற்கு துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
    • ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரக பகுதிகளை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அபுதாபி:

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றார். அங்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து இரு நாடுகள் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் அபுதாபியில் நடந்த அஹ்லன் மோடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமீரக வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.

    இன்று பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராக மோடி கலந்துகொள்கிறார்.

    அதன்பின் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவிலான சுவாமி நாராயண் கோவிலை இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு முதல் முறையாக சென்றபோது அங்கு வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக கோவில் கட்ட மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    இதை ஏற்றுக்கொண்டு இந்து கோவில் கட்டுவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அனுமதி அளித்தது.கோவிலை கட்டுவதற்கு துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

    கோவிலின் கட்டுமான பணிகள் மற்றும் நிர்வகிக்க குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த பிஏபிஎஸ் என்ற ஆன்மிக அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அபுதாபியின் ரக்பா பகுதி அருகே அல் முரைக்கா பகுதியில் சில ஆண்டுகளாக கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் பணிகள் கடந்த மாதம் முடிந்தது.

    இரும்பு, கம்பிகள் இல்லாமல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மற்றும் பளிங்கு கற்களை கொண்டு பாரம்பரிய இந்து கோவிலாக கட்டப்பட்டுள்ளது. கட்டிட உறுதிக்காக சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரக பகுதிகளை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 1,000 ஆண்டுகளாகும். அபுதாபி இந்து கோவில் வளாகம் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.700 கோடியில் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இதில் கோவில் கட்டிடம் மட்டும் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ளது. இதில் மிகப்பெரிய கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கூட்டங்கள் நடத்தும் பகுதி மற்றும் 5 ஆயிரம் பேர் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியுடன் 2 சமூக அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    வளாகத்தின் அருகே 53 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கார் நிறுத்தப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,200 கார்கள் மற்றும் 30 பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ளலாம். கூடுதலாக ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 2 தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இன்று காலை கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது. தொடர்ந்து மாலை கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி கலந்துகொண்டு கோவிலை திறந்து வைக்கிறார். அங்கு நடக்கும்பூஜைகளில் கலந்து கொள்கிறார்.

    Next Story
    ×