search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australian PM"

    • 45 வயதாகும் ஜோடி ஹேடன் எனும் பெண்ணுடன் நட்புடன் இருந்தார் அதிபர்
    • "மகிழ்ச்சியான இந்த தருணத்தை அனுபவிக்க விரும்புகிறோம்" என்றார் அல்பானீஸ்

    ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், 60 வயதாகும் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese).

    கடந்த 2019ல் ஆஸ்திரேலியாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் (Australian Labor Party) தலைவராக பொறுப்பேற்ற அந்தோணி, 2022ல் ஆஸ்திரேலிய பிரதமராக பதவி ஏற்றார்.

    அந்தோணி அல்பானீஸ், தற்போது 45 வயதாகும் ஜோடி ஹேடன் (Jodie Haydon) எனும் பெண்ணுடன் நீண்ட காலமாக நட்புடன் இருந்தார்.

    2019ல் அந்தோணி அல்பானீஸ், ஜோடி ஹேடன் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர்.

    இந்நிலையில், ஜோடி ஹேடனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அந்தோணி அறிவித்தார்.

    பதவியில் உள்ள போது திருமணம் செய்து கொள்ளும் முதல் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணியாவார்.

    சமூக வலைதளங்களில் இது குறித்து இருவரும் பதிவிட்டுள்ளனர்.

    "நீண்ட ஆலோசனைக்கு பிறகு இதற்கு தயாரானேன். எப்பொழுது, எங்கே திருமணம் எனும் விவரங்கள் குறித்து நாங்கள் இருவரும் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம். தற்போது இந்த மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க விரும்புகிறோம்" என அந்தோணி தெரிவித்துள்ளார்.

    நேற்று பிப்ரவரி 14, காதலர் தினத்தையொட்டி இருவரும், ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பர்ரா (Canberra) நகரில் இத்தாலியன் அண்ட் சன்ஸ் எனும் புகழ் பெற்ற உணவகத்தில் விருந்துண்டு மகிழ்ந்தனர்.


    வலைதளங்களில் வெளியான இருவரது புகைப்படங்களில், ஜோடி ஹேடன் அணிந்திருக்கும் நிச்சயதார்த்த மோதிரம், அல்பானீஸ் பிரத்யேகமாக வடிவமைத்தது.

    பல துறைகளை சேர்ந்த அமைச்சர்களும், கட்சியின் தலைவர்களும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் (Christopher Luxon), "உங்கள் இருவருக்கும் எனது மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.

    அந்தோணி, இதற்கு முன்னர், 2000-வது ஆண்டு கார்மல் டெப்புட் (Carmel Tebbutt) என்பவரை திருமணம் செய்தார். 2019ல் இருவரும் பிரிந்தனர்.

    அவர்கள் இருவருக்கும் 23-வயதில் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 41 உயிர்களை மீட்க 17 நாட்களாக பெரும் போராட்டம் நடந்தது
    • ஆஸ்திரேலிய பேராசிரியரின் ஒத்துழைப்புக்கு பெருமை அடைவதாகவும் அல்பனீஸ் தெரிவித்தார்

    உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தின் உத்தரகாசி (Uttarakashi) மாவட்டத்தில் எண் 134 தேசிய நெடுஞ்சாலையில் (NH-134) சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அதன் நுழைவாயிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.

    இவர்களை மீட்கும் பணியை போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கம் முடுக்கி விட்டது.

    சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொழில்நுட்ப ஆலோசனைக்கு சுரங்க கட்டுமான மேலாண்மையில் நிபுணரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் ஆர்னால்ட் டிக்ஸ் என்பவரின் உதவியும் பெறப்பட்டது. மீட்பு பணிக்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்த பெரிய இயந்திரத்தில் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட கோளாறினால் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

    இதன் காரணமாக எலி வளை சுரங்க தொழிலாளர்களை (rat hole miners) கொண்டு, இயந்திர உதவி இல்லாமல், துளையிட்டு மீட்கும் முயற்சி நடைபெற்றது.

    சிறப்பான முறையில் செயல்பட்ட இவர்களின் தடையில்லா உதவியினால், நேற்று மாலை 07:05 மணியளவில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, சுமார் 17 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் நல்லவிதமாக முடிவுக்கு வந்தது.


    மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருடனும் பிரதமர் மோடி தொலைபேசி வழியாக உரையாடி வாழ்த்து தெரிவித்தார்.

    பல உயிர்களை காப்பாற்றும் மிக பெரிய பொறுப்பில் ஓய்வின்றி உழைத்து தங்களின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் மீட்க உதவிய அனைவருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தனது பாராட்டுக்களை அவரது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    "வியத்தகு சாதனை. மீட்பு பணியில் ஈடுபட்டவர்களின் அற்புதமான சாதனை இது. அனைவருக்கும் பாராட்டுக்கள். களத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டு பேராசிரியர் நல்கிய ஒத்துழைப்பு குறித்து நாங்கள் பெருமிதம் அடைகிறோம்" என தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் க்ரீன் இந்திய முயற்சிகளை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 2100 வருடத்திற்குள் 95 சதவீத டுவாலு நீருக்கடியில் சென்று விடும்
    • டுவாலு நாட்டிற்கு ஆஸ்திரேலியா ராணுவ பாதுகாப்பு அளிக்கும்

    பசிபிக் கடற்பகுதியில் உள்ளது டுவாலு (Tuvalu) எனும் பவழப்பாறைகள் நிரம்பிய சிறு தீவுகளை உள்ளடக்கிய நாடு. இங்கு சுமார் 12 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

    அதிகரிக்கும் உலக வெப்பமயமாதல், டுவாலுவுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது. உயரமான அலைகளாலும், கடல்நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருவதாலும் அங்கு வாழும் மக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறி வந்தது.

    தலைநகரமான ஃபுனாஃபுயுட்டி (Funafuti) பகுதி, 50 சதவீதம் விரைவில் நீரில் மூழ்கி விடும் என்றும் 2100 வருடத்திற்குள் 95 சதவீத நாடு நீருக்கடியில் சென்று விடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    தற்போது டுவாலு கடல் மட்டத்தை விட 15 அடி உயரத்தில் மட்டுமே இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதும் நின்று விட்டது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் (Anthony Albanese) டுவாலு மக்களுக்கு ஆஸ்திரேலியாவில் புகலிடம் அளிக்கும் ஒப்பந்தம் ஒன்றை டுவாலு பிரதமர் காசியா நாடானோ (Kausea Natano) உடன்  கையெழுத்திட்டுள்ளார். மேலும், டுவாலு நாட்டிற்கு ராணுவ பாதுகாப்பையும் ஆஸ்திரேலியா அளிக்க ஒப்பு கொண்டுள்ளது.

    ஆண்டுதோறும் டுவாலு நாட்டு குடிமக்கள் 300 பேருக்கு ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து, வேலை செய்ய அனுமதி அளிக்கும் விசா வழங்கப்பட உள்ளது.

    ஃபலேபிலி சங்கமம் (Falepili Union) என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், பசிபிக் கடற்பகுதி நாடுகளுடன் ஆஸ்திரேலியா செய்து கொள்ளும் ஒரு முக்கிய ஒப்பந்தமாகும்.

    • ஆஸ்திரேலியாவில் கோவில்கள் தாக்கப்படுவதால் இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
    • இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர், இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கோவில்களை அவமதிப்பதும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், பாதுகாப்பு குறித்த அச்சமும் நிலவுகிறது.

    இந்நிலையில், இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். டெல்லியில் உள்ள ஐதராபதாத் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து இருவரும் பேசினர்.

    மேலும், ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீதான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடி கூறினார். இதற்கு பதிலளித்த ஆஸ்திரேலிய பிரதமர், இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். இத்தகவலை செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் மோடி தெரிவித்தார்.

    ஆஸ்திரேலியா நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான மந்திரிசபையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    கான்பெர்ரா:
     
    151 இடங்களைக் கொண்ட ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான தொழிற்கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

    தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புக்களை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    இந்நிலையில், பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான புதிய மந்திரிசபையில் அந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்புத்துறை மந்திரியாக லின்டா ரெய்னால்ட்ஸ், வெளியுறவுத்துறை மற்றும் மகளிர் நலத்துறை மந்திரியாக மரிசே பய்னே உள்பட மொத்தம் 7 பெண்களுக்கு மந்திரிகளாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களின் மூலம் அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்றடையும் என்று நம்புவதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். #AustralianElections #ScottMorrison
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர்.
    கடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோதும் உள்கட்சி பூசல் தொடர்ந்தது. முதலில் நடந்த ஓட்டெடுப்பில் தப்பிய அவருக்கு, மீண்டும் எதிர்ப்பு வலுத்ததால் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அப்போது பிரதமருக்கான  போட்டியில் இருந்து டர்ன்புல் விலகினார். ஸ்காட் மாரிசன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். ஸ்காட் மாரிசனுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாததால், பாராளுமன்ற தேர்தல் வரை அவருக்கு சிக்கல் இல்லை.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று அறிவித்துள்ளார்.



    இந்த தேர்தலில் லிபரல் கட்சியின் தேர்தல் பிரசார யுக்தி மற்றும் தேர்தல் வாக்குறுதிகளைப் பொருத்து அந்த கட்சி ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்குமா? என்பது தெரியவரும். பருவநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக எதிரொலிக்கும்.

    “அடுத்த மூன்று ஆண்டுகள் மட்டுமல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியர்கள் வளமாக வாழும் வகையில் நாட்டின் வலுவான பொருளாதாரத்தை இந்த தேர்தல் தீர்மானிக்கும். உலகின் மிகச்சிறந்த நாட்டில் நாம் வாழ்கிறோம். ஆனால், உங்களின் வருங்கால பாதுகாப்பு வலுவான பொருளாதாரத்தையே சார்ந்துள்ளது” என பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டு போடாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் ஒருசில வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க வருவதில்லை. கடைசியாக நடந்த பொதுத்தேர்தலில் 95 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. #AustralianElections #ScottMorrison

    ×