என் மலர்
உலகம்
- ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராக திகழ்ந்தவர் அலெக்சி நவால்னி
- விஷத்தின் சுவடுகளை அழிக்க முயல்வதாக நவால்னியின் மனைவி குற்றம் சாட்டினார்
இவ்வருடம் ரஷியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
ரஷிய அரசியலில் தனக்கு போட்டியாளர்கள் உருவாகாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர் அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin).
புதினை தீவிரமாக விமர்சித்து வந்தவர், அலெக்சி நவால்னி (Alexei Navalny). ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராகவும் நவால்னி திகழ்ந்தார்.

நவால்னி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 19 வருடங்களுக்கும் அதிகமான சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், நவால்னி, சிறைச்சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் திடீரென உயிரிழந்தார்.
சிறை வளாகத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அவசர மருத்துவ உதவியாளர்கள் விரைந்து வந்து அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு நல்ல மாற்றாக நவால்னியை கருதி வந்த அந்நாட்டு மக்களில் பலரும், உலகின் பல அரசியல் தலைவர்களும், நவால்னியின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாகியும், அலெக்சி நவால்னியின் உடல் தற்போது வரை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
ரசாயன பரிசோதனைக்காக நவால்னியின் உடல் பாதுகாக்கப்படுவதாகவும், 2 வாரங்களுக்கு பிறகுதான் உடலை வழங்க முடியும் என்றும் அவரது தாயாரிடம் ரஷிய அரசு தெரிவித்துள்ளது.

நவால்னியின் உடல் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதையும் ரஷிய அரசு சொல்ல மறுத்து வருகிறது.
இது குறித்து நவால்னியின் மனைவி, யூலியா நவால்னயா (Yulia Navalnaya), "எனது கணவரை ரஷிய அதிபர் புதின் கொன்று விட்டார். அலெக்சியின் உடலில் உள்ள "நோவிசாக்" எனும் நரம்பு மண்டலத்தை தாக்க கூடிய அபாயகரமான விஷத்தின் தடயம் அவரது உடலில் இருந்து முழுவதுமாக விலகும் வரை உடலை வெளியே வழங்காமல் இருக்க அரசு முயல்கிறது," என குற்றம் சாட்டினார்.
அலெக்சியின் மரண செய்தி வெளியானதும் அவரது உடலை பெற சிறைச்சாலைக்கு சென்ற அவரது தாயாரையும், வழக்கறிஞரையும், உடலை பார்க்க விடாமல் சிறை அதிகாரிகள் தடுத்து விட்டனர்.
அலெக்சி விட்டு சென்ற பணிகளை தொடர போவதாக அவரது மனைவி யூலியா நேற்று உறுதிபட தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- போர் காரணமாக உணவு, தண்ணீர் மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் காசா மக்கள் தவித்து வருகிறார்கள்.
- ஐ.நா.வின் நிவாரண குழுக்கள் சார்பில் உணவுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் மக்களுக்கு போதுமானதாக இல்லை.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நான்கு மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் தாக்குதலில், காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போர் காரணமாக உணவு, தண்ணீர் மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் காசா மக்கள் தவித்து வருகிறார்கள்.
ஐ.நா.வின் நிவாரண குழுக்கள் சார்பில் உணவுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அது காசா மக்களுக்கு போதுமானதாக இல்லை. இந்த நிலையில் உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றஞ்சாட்டபட்டுள்ளது.
வடக்கு காசாவில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்கள் உணவை வாங்குவதற்காக வரிசையில் காத்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்தபடி ஓடினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். சிறுவர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் ஆகியவற்றால் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என ஐ.நா. எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.வின் குழந்தைகள் நிறுவனம் கூறும்போது, "ஊட்டச்சத்து நெருக்கடியின் விளிம்பில் காசா பகுதி உள்ளது. வடக்கு காசாவில் நிலைமை மோசமடைந்துள்ளது. வாரக்கணக்கில் அனைத்து மனிதாபிமான உதவிகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 15 சதவீதம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு காசாவில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 5 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசர நிலை திட்ட தலைவர் மைக் ரியாக் கூறும்போது, "பசி மற்றும் நோய் ஒரு கொடிய கலவையாகும். பசியுள்ள, பலவீன மான மற்றும் ஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளான குழந்தைகள் நோய்வாய் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.இது ஆபத்தானது மற்றும் சோகமானது மற்றும் நம் கண்களுக்கு முன்பாக நடக்கிறது" என்றார்.
- பெண் 12 முறை கருச்சிதைவு அடைந்ததாகவும், பிரசவத்தின் மூலம் 5 குழந்தைகள் இருப்பதாகவும் ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
- மோசடிக்கு கூட்டாளி ஒருவரும் உதவி செய்துள்ளார்.
இத்தாலியை சேர்ந்த பார்பரா ஐயோலே என்ற 50 வயதான பெண் ஒருவர் கடந்த 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்ப நாடகமாடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல், இணையத்தில் பேசு பொருளாகி வருகிறது.
பார்பரா மாநில அரசு வழங்கிய மகப்பேறு உதவித்தொகைகளை பெறுவதற்காகவும், வேலையில் இருந்து ஓய்வு பெறுவதற்காகவும் இதுபோன்று நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்காக அவர் போலி மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். அவர் 12 முறை கருச்சிதைவு அடைந்ததாகவும், பிரசவத்தின் மூலம் 5 குழந்தைகள் இருப்பதாகவும் ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது இந்த மோசடிக்கு கூட்டாளி ஒருவரும் உதவி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- சமமான வாய்ப்புகளை உறுதி செய்ய இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது
- இவ்வருட கருப்பொருள் "இடைவெளிகளை நிரப்புதல், கூட்டணிகளை உருவாக்குதல்" ஆகும்
1995ல் ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் சமூக வளர்ச்சிக்கான உச்சி மாநாடு (Summit for Social Development) நடைபெற்றது.
இந்த உச்சி மாநாட்டின் முடிவில் "கோபன்ஹேகன் பிரகடனம்" (Copenhagen Declaration) மற்றும் செயல் திட்டம் (Programme of Action) உருவானது. இது வறுமை, வேலையின்மை மற்றும் பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்தது.
பிறகு 2007ல், "உலக சமூக நீதிக்கான தினம்" (World Day of Social Justice) முதன்முதலில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அறிவிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் பிப்ரவரி 20 அன்று "உலக சமூக நீதிக்கான தினம்" அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாள், சமூக நீதியை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் அவர்களின் விருப்பம் போல் லட்சியங்களை அடைய வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த தினம், சமூக நீதிக்கான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அலசவும், எஞ்சியிருக்கும் சவால்களை அடையாளம் காணவும், சமூக அமைதியை நிலைநாட்ட தேவைப்படும் கூட்டு முயற்சிகள் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கும் சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைவருக்கும் ஒரு வாய்ப்பாகும்.

2024 வருடத்திற்கான உலக சமூக நீதி தின கருப்பொருள் (theme) "இடைவெளிகளை நிரப்புதல், கூட்டணிகளை உருவாக்குதல்" (Bridging Gaps, Building Alliances) என்பதாகும்." உலகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.
சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும், பாகுபாடுகளையும், சமத்துவமின்மையையும் எதிர்த்து போராடவும் இந்த நாளில் நாம் உறுதியேற்போம்.
அனைவருக்கும் நியாயமான உலகத்தை உருவாக்க இது ஒரு வாய்ப்பாகும்.
- கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஹவுதி கிளர்ச்சியார்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
- முதன்முறையாக ஊழியர்கள் கப்பலை விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் காசா மீது ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ்க்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியார்கள் செங்கடலில் செல்லும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து பதிலடி கொடுத்து வருகிறது. இருந்த போதிலும் நேற்று செங்கடலில் வந்து கொண்டிருந்த ஒரு கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியுள்ளனர். இதனால் கப்பலில் இருந்து ஊழியர்கள் வெளியேறிய நிலையில், அந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அமெரிக்கா நாடான பெலீஸ் நாட்டின் கொடியுடன் ரூபிமார் கப்பல் சென்று கொண்டிருந்த போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறிய வகை வணிக கப்பலான ரூபிமாரில் இருந்த பணியாளர்கள் உடனடியான பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போர்க்கப்பல் மற்றும் வணிக கப்பலை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கப்பலில் இருந்து பணியாளர்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த கப்பல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பகுதியில் உள்ள உரிமையாளரால் பதிவு ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹவுதி செய்தி தொடர்பாளர் கூறுகையில் "அடையாளம் தெரியாக இங்கிலாந்து கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் கப்பல் முற்றிலுமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- பிரபோவோவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.
- புதிய தலைமையுடன் பணியாற்ற விரும்புகிறேன்.
இந்தோனேசியாவில் சில நாட்களுக்கு முன்புதான் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பெரும்பான்மை வாக்குகளை பெற்ற பிரபோவோ சுபியாண்டோ அந்நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர், "அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததற்கு இந்தோனேசிய மக்கள் மற்றும் அதிபராக தேர்வாகி இருக்கும் பிரபோவோ சுபியாண்டோவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில், புதிய தலைமையுடன் பணியாற்ற விரும்புகிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த இந்தோனேசிய அதிபர் தன்னை வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
"எங்களது தேர்தல் குறித்த உங்களின் வாழ்த்து செய்திக்கு நன்றி பிரதமர் மோடி. இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான உறவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் உங்களின் உணர்வை நான் புரிந்து கொள்கிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- சிறைச்சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நவால்னி உயிரிழந்தார்
- கணவரை கொன்றவர்களின் முகங்களை உலகிற்கு காட்டுவேன் என்றார் யூலியா
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் விமர்சகரும், ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராகவும் கருதப்பட்ட அலெக்சி நவால்னி (Alexei Navalny) பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 19 வருடங்களுக்கும் மேலாக நீண்டகால சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு வடகிழக்கே, சுமார் 1200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்ப் (Kharp) நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வருடம் ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிறைச்சாலையில் நவால்னி உயிரிழந்தார். சிறைச்சாலை வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மயங்கி விழுந்தவர், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அலெக்சி நவால்னியின் திடீர் மரணம் அவரது ஆதரவாளர்களையும், உலகெங்கும் உள்ள அரசியல் தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா (Yulia Navalnaya) இது குறித்து தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:
3 தினங்களுக்கு முன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் என் கணவர், அலெக்சி நவால்னியை கொன்று விட்டார்.
கிட்டத்தட்ட 3 வருடங்களாக பல்வேறு துன்புறுத்தல்களை சிறையில் அனுபவித்து வந்த அலெக்சி சிறையிலேயே உயிரிழந்தார்.
அவர் விட்டு சென்ற பணிகளை நான் தொடர்ந்து செய்வேன்.
அலெக்சிக்காக நாம் செய்ய கூடியது மேலும் தீவிரமாகவும், மேலும் வேகத்துடனும் போராடுவதுதான்.
போர், ஊழல், அநீதி, சுதந்திரமில்லாத தேர்தல், கருத்து சுதந்திர முடக்கம், நாட்டில் நிலவும் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராக அவர் முன்னெடுத்த போராட்டத்தை நாம் மேலும் வலுப்பெற செய்து போராட வேண்டும்.
எனது கணவரை கொன்றவர்களை நான் வெளியுலகிற்கு காட்டுவேன். அவர்களின் முகங்களையும், பெயர்களையும் உலகம் பார்க்குமாறு நாம் காட்டுவோம்.
இவ்வாறு யூலியா கூறினார்.
யூலியா நவல்னயா, பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அலெக்சி நவால்னியின் தாயிடமோ, வழக்கறிஞரிடமோ அவரது உடலை வழங்க ரஷிய அரசு மறுத்து விட்டது.
- பிரதமர் பதவியில் யார் அமர்வது என்பதில் இழுபறி நிலவுகிறது
- 2 வருடங்கள் என்னை பிரதமராக்க ஆதரவு தருவதாக கூறினார்கள் என்றார் பூட்டோ
பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தானில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் பிலாவல்-பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP), முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சி (PTP) மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (PML) ஆகிய கட்சிகள் களமிறங்கியதால் மும்முனை போட்டி நிலவியது.
இதில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (PTP) கட்சியை சேர்ந்த பல சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். ஆனால், இத்தேர்தல் முடிவுகளில் எவருக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
தற்போது வரை பிரதமர் பதவியில் யார் அமர்வது என்பதில் இழுபறி நிலவுகிறது.
தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கூட்டணி அமைத்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ ஜர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் ஷரீஃபும் ஆட்சியமைப்பது குறித்து தீவிரமாக கலந்தாலோசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சிந்து மாகாணத்தில், தட்டா நகரில் பிலாவல் பூட்டோ உரையாற்றினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
முதல் 3 வருடங்கள் அவர்கள் தரப்பில் பிரதமராக ஒத்து கொண்டால், மீதம் 2 வருடங்களுக்கு நான் பிரதமராக முடியும் என என்னிடம் தெரிவித்தனர்.
ஆனால், இந்த திட்டத்திற்கு நான் சம்மதிக்கவில்லை.
எனக்கு இவ்வாறு பிரதமர் ஆவதில் ஒப்புதல் இல்லை.
நான் பிரதமராக வேண்டுமென்றால் பாகிஸ்தான் மக்கள் என்னை நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என கூறி விட்டேன்.
அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் நலனை மறந்து மக்கள் நலன் குறித்து சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு பிலாவல் கூறினார்.
தேர்தல் முறையாக நடைபெறவில்லை என இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
- ஐஐடி சென்னை மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், 3 பேருடன் உருவாக்கியது பெர்ப்லெக்சிடி
- 300 சதவீதம் ஊதிய உயர்வு ஆச்சரியம் அளிப்பதாக அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்
இணையவழி உள்ளடக்க தேடலில் உலகின் முன்னணி தேடல் இயந்திரம் (search engine) அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் "கூகுள் தேடல் இயந்திரம்".
கடந்த 2022 இறுதியில் தோன்றிய "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்" (Artificial Intelligence) எனும் "செயற்கை நுண்ணறிவு" தொழில்நுட்பம், கூகுள் நிறுவன தேடல் இயந்திரத்திற்கு சவாலாக இருந்து வருகிறது.
செயற்கை நுண்ணறிவு துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT) முன்னாள் மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் 3 பேர் இணைந்து 2022ல் உருவாக்கிய நிறுவனம், பெர்ப்லெக்சிடி. இந்நிறுவனத்தின் தேடல் இயந்திரம், "பெர்ப்லெக்சிடி ஏஐ" (Perplexity AI).
பெர்ப்லெக்சிடி நிறுவனத்தில் பணியாற்ற கூகுள் நிறுவன "தேடல்" (search) பிரிவை சேர்ந்த ஊழியர் ஒருவர், கூகுள் மேலதிகாரிகளிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.
ஆனால், அந்த ஊழியருக்கு கூகுள், அவர் வாங்கி வரும் ஊதியத்தை விட 300 சதவீதம் அதிகம் வழங்கி அவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்டது.

ஒரு பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்து கொண்ட அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மேலும் கூறியதாவது:
செயற்கை நுண்ணறிவு துறையில் இல்லாமல் தேடல் துறை பணியாளராக இருந்தும் எங்களிடம் பணியாற்ற விரும்பிய நபரை கூகுள் மிக அதிக தொகையை ஈடாக தந்து, தக்க வைத்து கொண்டது.
இது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
பணிநீக்கங்களை பொறுத்தவரையில் மென்பொருள் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள்தான் குறி வைக்கப்படுவதாக தெரிகிறது.
இவ்வாறு அரவிந்த் தெரிவித்தார்.
கடந்த 2023 ஜனவரி மாதம் சுமார் 12 ஆயிரம் ஊழியர்களையும், சில தினங்களுக்கு முன் 1000 ஊழியர்களையும் கூகுள் நீக்க போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இப்பின்னணியில், 300 சதவீத ஊதிய உயர்வு அளித்து ஒருவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்ட செய்தியை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.
- இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனத்தில் 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்
- பிணைக்கைதிகளை விடுவிக்கா விட்டால் தாக்குதல் தீவிரமடையும் என்றார் அமைச்சர்
கடந்த அக்டோபர் மாதம் பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், தெற்கு இஸ்ரேல் பகுதியில் அதிரடியாக நுழைந்து பல இஸ்ரேலியர்களை கொன்று, பலரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவ படை (Israeli Defence Forces), ஹமாஸ் அமைப்பினர் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதியில் அவர்களை தேடித்தேடி அழித்து வருகிறது.
130 நாட்களை கடந்து போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனத்தில் 28,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்தது.
பிணைக்கைதிகளை விட வேண்டுமானால் நிரந்தர போர்நிறுத்தம் வேண்டும் என ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் போர்நிறுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த இஸ்ரேல், பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருக்கு கெடு விதித்திருக்கிறது.
இஸ்ரேலி கேபினெட் அமைச்சர் பென்னி கான்ட்ஸ் (Benny Gantz) இது குறித்து தெரிவித்ததாவது:
மார்ச் 10 அல்லது 11 காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் மாதம் தொடங்கும்.
ரம்ஜான் தொடங்கும் முன் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்கா விட்டால், பாலஸ்தீன ரஃபா (Rafah) பகுதியில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம்.
அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்த அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் பேசவுள்ளோம்.
இது தீவிரமான நடவடிக்கைதான்.
ஹமாஸ் அமைப்பினருக்கு 2 வாய்ப்புகள் உள்ளன – அவர்கள் பிணைக்கைதிகளை விடுவித்து விட்டு சரணடையலாம். இதன் மூலம் காசா மக்களும் ரம்ஜான் கொண்டாட முடியும். இல்லையென்றால், தீவிர தாக்குதலை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அலெக்சி நவால்னி சந்தேகத்திற்கு இடமான சூழலில் சிறையில் உயிரிழந்தார்
- ரஷிய மக்களை எச்சரிக்கும் அதிபருடன் டிரம்ப் கரம் கோர்க்க விரும்புகிறார் என்றார் நிக்கி
கடந்த வாரம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென் கரோலினா மாநிலத்தில் ஆற்றிய உரையில், அமெரிக்காவை தலைமையாக கொண்டு செயல்படும் நேட்டோ (NATO) உறுப்பினர் நாடுகள் அந்த அமைப்பிற்கு அளிக்க வேண்டிய தங்களின் நிதி பங்களிப்பை அளிக்காத பட்சத்தில் அந்நாடுகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால் அதில் தலையிட மாட்டேன் என தெரிவித்தார்.
இவரது கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ரஷியாவில், அதிபர் புதினை தீவிரமாக எதிர்த்து வந்த அலெக்சி நவால்னி (Alexei Navalny) சந்தேகத்திற்கு இடமான சூழலில் சிறையில் உயிரிழந்தார்.
இப்பின்னணியில், அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட குடியரசு கட்சியின் சார்பில் ஆதரவு கோரி வரும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு போட்டியாக களம் இறங்கி உள்ள தென் கரோலினா மாநில முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, டிரம்பை விமர்சித்து உரையாற்றினார்.
அப்போது நிக்கி தெரிவித்ததாவது:
தங்கள் பங்களிப்பை தராதவர்களை புதின் தாக்கினால் தடுக்க மாட்டேன் என கூறியதன் மூலம் அந்த கணமே புதினின் கரத்தை டிரம்ப் வலுப்படுத்தி விட்டார்.
தனக்கு உள்ள அரசியல் எதிரிகளை கொல்ல துணியும் புதினை போன்ற ஒருவருடன் டிரம்ப் கை கோர்த்து கொள்கிறார்.
அமெரிக்க ஊடகவியலாளர்களை சிறை பிடிக்கும் ஒருவரின் பக்கம் டிரம்ப் நிற்க முயல்கிறார்.
"என்னை எதிர்த்தால் உங்களுக்கும் இதுதான் (நவால்னியின் மரணம்) கதி" என தன் நாட்டு மக்களை எச்சரிக்கும் ஒருவருடன் நட்பாக இருக்க முயல்கிறார்.
இதுவரை நவால்னியின் மரணம் குறித்து டிரம்ப் கருத்து எதுவும் கூறவில்லை. ஏனென்றால், அவர் தற்போது மீதுள்ள பல வழக்குகளில் கவனமாக உள்ளார்.
இவ்வாறு ஹாலே கூறினார்.
அடுத்த வாரம், தென் கரோலினா மாநிலத்தில் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்பும், ஹாலேவும் ஒருவரையொருவர் நேரடியாக எதிர்த்து களம் இறங்கி வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.
- நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது- டிரம்ப்.
- டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வானால் பல விசயங்கள் பற்றி நான் கவலைப்படுகிறேன்- ஹாலே
அமெரிக்காவில் இந்த வருடம் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் யார்? என்பதில் டொனால்டு டிரம்ப்- நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் நான் அதிபரானால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டணியை வலுப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிக்கி ஹாலே கூறியதாவது:-
டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வானால், பல விசயங்கள் பற்றி நான் கவலைப்படுகிறேன். அவற்றில் ஒன்றுதான் மற்ற நாடுகள் இடையிலான கூட்டணி.
நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், நேட்டோ உடனான கூட்டணியை மட்டும் வலுப்படுத்த மாட்டேன். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுடன் உடனான கூட்டணியையும் வலுப்படுத்துவேன். எங்களுடன் அனைவரையும் சேர்த்துக் கொள்வோம். இது அமெரிக்காவின் அதிக நண்பர்களை பற்றியது. குறைப்பதை பற்றி அல்ல."
இவ்வாறு நிக்கி ஹாலே தெரிவித்தார்.
முன்னதாக,
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. தங்களுடைய ஆயுத இருப்புகள் குறைந்து வருவதால் நேட்டோ உதவி செய்ய வேண்டும் என உக்ரைன் கேட்டிருந்தது. இதுதொடர்பாக டொனால் டிரம்ப் அளித்த ஒன்றில் அவர் கூறியதாவது:
ஒரு பெரிய நாட்டின் அதிபர் என்னிடம் நாங்கள் நேட்டோ அமைப்பிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காத நிலையில் ரஷியா எங்களை தாக்கினால் நீங்கள் எங்களை காப்பீர்களா? என கேட்டார்.

நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது. இன்னும் சொல்ல போனால் இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என ரஷியாவிடம் கூறிவிடுவேன். நிதி பங்களிப்பில் உங்கள் பங்கை நீங்கள் செலுத்தியாக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தேன்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.






