என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று தொடங்கின.
- முக்கியத் தலைவர்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.
டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின.
அதன்படி டெல்லியில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இறுதிகட்ட முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் (AAP) ஐந்து முக்கியத் தலைவர்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.
இவர்களில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் முக்கிய அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் அடங்குவர்.

தோல்வியடைந்த AAP-யின் முக்கியத் தலைவர்கள் விவரம்:
அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லியில் கடந்த 2013, 2015 மற்றும் 2020 ஆகிய தேர்தல்களில் ஆம் ஆத்மி சார்பில் போட்டடியிட்டு கட்சியை வெற்றி பெற செய்த அரவிந்த் கெஜ்ரிவால் நடைபெற்று முடிந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியை தழுவினார்.
மணீஷ் சிசோடியா: டெல்லியின் முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான சிசோடியா, ஜங்புராவில் பா.ஜ.க. வேட்பாளர் தர்விந்தர் சிங் மர்வாவிடம் தோல்வியடைந்தார். கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்சிலிருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், இந்த முறை தேர்தலுக்காக ஜங்புரா தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார்.
சவுரப் பரத்வாஜ்: முக்கிய ஆம் ஆத்மி கட்சி தலைவரான திரு. பரத்வாஜ், 2013 இல் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றார், ஆனால் இந்த முறை பா.ஜ.க.-வின் ஷிகா ராயிடம் தோல்வியை தழுவினார். இவரது தொகுதி ஆம் ஆத்மிக்கு பாதுகாப்பான இடமாகக் கருதப்பட்டது, எனினும், இங்கு பா.ஜ.க. வெற்றி பெற்று அந்த நிலையை மாற்றியது.
துர்கேஷ் பதக்: ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட அமைப்புகள், அரசியல் விவகாரக் குழு மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினரான திரு. பதக், டெல்லியின் ராஜிந்தர் நகர் தொகுதியில் பா.ஜ.க.-வின் உமாங் பஜாஜிடம் தோல்வியடைந்தார். திரு. பதக் 2022 இல் நடந்த இடைத்தேர்தலில் அந்த இடத்தை வென்றார். இந்த முறை அவர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் தோல்வியடைந்தார்.
சத்யேந்திர ஜெயின்: ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவரும் டெல்லி முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெயின், டெல்லியின் ஷகூர் பஸ்தி தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை போட்டியிட்டு தோல்வியடைந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராக இருந்த திரு. ஜெயின், 2022 இல் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் பா.ஜ.க.வின் கர்னைல் சிங்கிடம் தோல்விய தழுவினார்.
- எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர்.
- தமிழகத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் சுமார் 20 விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே பாரம்பரிய இடத்தில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் பதட்டம் அடைந்த ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இருந்த போதிலும் அதில் 2 படகுகளை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சுற்றி வளைத்தனர். அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற படகுகளையும் விரட்டியடித்தனர்.
இது எங்கள் நாட்டு எல்லை, இந்த பகுதியில் மீன்பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூறிய அவர்கள் எல்லை தாண்டியதாக ஜான் போஸ் மற்றும் சுதன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். அந்த படகுகளில் இருந்த ஜான் போஸ் (வயது 39), அந்தோணி இஸ்ரோஸ் (20), நிலாகரன் (44), நிகிதன் (16), ஜேசு பூங்காவனம் (42), அந்தோணி சந்தியா (19), கார்லோஸ் (21), நிஷாந்த் (38), டூவிஸ்டன் (21), அய்யாவு அந்தோணி டிமக் (34),
மற்றும் சுதன் என்பவரது படகில் இருந்த அருளானந்தம் (43), கெலஸ்டின் (55), அந்தோணி ஆரோன் (38) என மொத்தம் 14 மீனவர்களையும் சிறைபிடித்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை இரணத்தீவு கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாகவும், எல்லைதாண்டி மீன் பிடித்ததாகவும் இலங்கை நீரியல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 70-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அதிலும் கடந்த மாதம் 25-ந்தேதி ஒரே நாளில் 34 பேரை கைது செய்தனர். இதனை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த 34 பேரில் 32 பேரை இலங்கை அரசு விடுதலை செய்தது. ஆனால் அவர்களுக்கு பல லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கைது நடவடிக்கை சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசு ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து செல்லும் இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை துறைமுகத்தில் நிறுத்தியுள்ளனர்.
இதில் ஏராளமான படகுகள் இயக்கப்படாமல் பழுதான நிலையில் உள்ளது. மேலும் அந்த படகுகளை தங்களது வாழ்வாதாரம் கருதி விடுவிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. அதற்கு மாறாக தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் 29-ந்தேதி எல்லைதாண்டியதாக கைதான 4 மீனவர்கள் சென்ற விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த படகு, அதில் இருந்த வலைகள், ஜி.பி.எஸ். கருவி, எந்திரங்கள், நங்கூரம் உள்ளிட்ட உபகரணங்களை ரூ.20 லட்சத்து 42 ஆயிரத்திற்கு இலங்கை அரசு நேற்று ஏலம் விட்டுள்ளது. இந்த தகவல் தமிழக மீனவர்கள் தலையில் இடியாய் இறங்கியுள்ளது.
- நிலநடுக்கம் 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.
- சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கரீபியன் தீவு கடலில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவாகி உள்ளது. ஹோண்டுராஸ் வடக்கில் உள்ள கேமன் தீவுகளின் கடற்கரையில் இருந்து சுமார் 209 கிலோமீட்டர்கள் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.
நிலநடுக்கம் தொடர்பான விவரங்களை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் காரணமாக அமெரிக்க அட்லாண்டிக் அல்லது வளைகுடா கடற்கரைகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை.
எனினும், போர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிக்கையில், கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், பகாமாஸ், பெலிஸ், ஹைட்டி, கோஸ்டா ரிகா, பனாமா, நிகரகுவா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் மையப்பகுதியில் இருந்து 620 மைல்களுக்குள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட "அபாயகரமான சுனாமி அலைகள்" ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
- எஸ்.ஏ.20 லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
- இதில் எம்.ஐ.கேப் டவுன் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
ஜோகன்னஸ்பெர்க்:
எஸ்.ஏ.20 லீக் தொடர் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்கில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், எம் ஐ கேப் டவுன் அணியும் மோதின.
இதில் எம்.ஐ.கேப் டவுன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்நிலையில், தனது அணி இறுதிப்போட்டியை எட்டியதால் தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் தனது திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் பெடிங்ஹாமுக்கு சனிக்கிழமையான நேற்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் தனது அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை அடுத்து, தனது திருமணத்தை மறுநாளுக்கு ஒத்தி வைத்தார்.
- காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக திறப்புவிழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
- அப்போது பேசிய அவர், இந்திய அரசுக்கு எதிராகப் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.
புவனேஸ்வர்:
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக திறப்புவிழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டில் உள்ள எல்லா நிறுவனங்களையும் தன்வசப்படுத்துகிறது. இதனால் நாங்கள் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக மட்டுமின்றி, இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. உள்நோக்கத்துடன் ராகுல் காந்தி பேசியுள்ளார் என பா.ஜ.க. விமர்சனம் செய்தது.
இதற்கிடையே, ஒடிசாவின் ஜர்சுகுடா மாவட்ட கலெக்டரிடம் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் அமைப்புகளின் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ராகுல் காந்தி தேச விரோத கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கருத்துகள் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளன. அவர்மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ராகுல் காந்திக்கு எதிராக ஜர்சுகுடா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக கவுகாத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், போலந்தின் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4 என முதல் செட்டை வென்றார். இரண்டாவது செட்டை ஹர்காக்ஸ் 7-6 (7-5) என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை அல்காரஸ் 6-3 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதுகிறார்.
- முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்தது.
புலவாயோ:
ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மெக் பிரின் 90 ரன்னும், மார்க் அடைர் 78 ரன்னும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 7 விக்கெட்டும், நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிக் வெல்க் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய முசாராபாணி 47 ரன் எடுத்து அவுட்டானார்.
அயர்லாந்து சார்பில் மெக் கார்த்தி 4 விக்கெட்டும், மெக் பிரின் 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பால்பிரின் 66 ரன்னும், லார்கன் டக்கர் 58 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் மீதம் 2 நாள் உள்ள நிலையில் 254 ரன்கள் எடுத்தால் ஜிம்பாப்வே அணியும், 7 விக்கெட் எடுத்தால் அயர்லாந்து அணியும் வெற்றி பெறும் என்பதால் இப்போட்டியின் முடிவை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
- மில்கிபூர் தொகுதிக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
- அங்கு சமாஜ்வாதி மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவியது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்கு அயோத்தி மாவட்டத்தின் மில்கிபூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அவதேஷ் பிரசாத் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பைசாபாத் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி.யானார்.
இதையடுத்து, மில்கிபூர் தொகுதிக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. சமாஜ்வாதி சார்பில் அவதேஷ் பிரசாதின் மகன் அஜித் பிரசாத், ஆளும் பா.ஜ.க. சார்பில் சந்திரபானு பஸ்வான் ஆகியோர் களமிறங்கினர்.
இந்நிலையில், அங்கு பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பா.ஜ.க.வின் சந்திரபானு பஸ்வான் 61,710 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
மில்கிபூர் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிரதமர் மோடி, அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
- இதுவரை 21 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது
- போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர். அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.
கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மேலும் விடுவிக்கப்பட உள்ள ஒஹட் பென் அமி, இலி ஷராபி, ஆர் லிவி ஆகிய 3 பிணைக்கைதிகளின் பெயர் பட்டியலை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டது. இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களில் 183 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.
இந்நிலையில், தெய்ர்-அல்-பலா நகரில் பிணைக்கைதிகளை விடுதலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் இடத்திற்கு தன்னார்வல அமைப்பான ரெட் கிராஸ் அமைப்பின் மீட்பு வாகனங்கள் வந்து சேர்ந்தன. மேலும் அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.
அதேசமயம், முகமூடி அணிந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் பலர் துப்பாக்கிகளுடன் அங்கு கூடினர். அதன்பின், ஒரு வெள்ளை நிற வாகனத்தில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் 3 இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் அழைத்து வந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு தற்காலிக மேடையில் நிற்க வைத்தனர். தொடர்ந்து பிணைக்கைதிகளிடம் மைக்கை கொடுத்து பேசுமாறு கூறினர்.
இவ்வாறு பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் பொதுவெளியில் பேச வைத்தது இதுவே முதல் முறையாகும். இதைத் தொடர்ந்து 3 பிணைக்கைதிகளையும் ரெட் கிராஸ் தன்னார்வலர்களிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தனர்
- முதலில் ஆடிய எம்.ஐ.கேப் டவுன் அணி 181 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 105 ரன்னில் ஆல் அவுட்டானது.
கேப் டவுன்:
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் நடந்தது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது. எலிமின்னேட்டர் 2 சுற்றில் பார்ல் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப் டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அந்த அணியின் எஸடரூசியன் 39 ரன்னும், பிரேவிஸ் 38 ரன்னும், ரிக்கல்டன் 33 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 18.4 ஓவரில் 105 ரன்னில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் ஏபெல் 30 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் எம்.ஐ.கேப் டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
எம்.ஐ.கேப் டவுன் சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட், ஜார்ஜ் லிண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் ஆஸ்திரேலிய வீரர் டி மினார் அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெற்றார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், இத்தாலி வீரர் மேட்டி பெல்லூசி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டி மினார் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- டெல்லி சட்டசபை தேர்தலில் 48 இடங்களைப் பிடித்து பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
- இந்த வெற்றியை பா.ஜ.க. பெரிய அளவில் கொண்டாடி வருகிறது.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபைத் தேர்தலில் 48 இடங்களைப் பிடித்த பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை பா.ஜ.க. பெரிய அளவில் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க. தொண்டர்களுடன் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள பிரதமர் மோடி அக்கட்சியின் தலைமை அலுவலகம் சென்றார். அங்கு தொண்டர்களுக்கு மத்தியில் பேசியதாவது:
இந்தியாவில் பல மாநிலங்களில் பா.ஜ., ஆட்சிகள் மீண்டும் தேர்வு செய்யப்படுகின்றன. இதற்கு பா.ஜ.க. செய்த வளர்ச்சி பணிகள் மட்டுமே காரணம்.
மோடியின் வாக்குறுதிகள் என்பது வளர்ச்சிக்கானது. நடுத்தர மக்கள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் முடிவு கட்டி வருகிறது. அக்கட்சிகளின் திட்டங்கள் மற்றும் ஓட்டுவங்கியை திருடுகிறது. காங்கிரசுடன் கைகோர்க்கும் கட்சிகளுக்கு முடிவு நெருங்கிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
ஜாதி எனும் விஷத்தை காங்கிரஸ் நாடு முழுதும் பரப்பி வருகிறது.
தேர்தல்களில் அக்கட்சி தோல்வி அடைவதுடன் மட்டும் அல்லாமல், கூட்டணி கட்சிகளையும் தோற்கடிக்கிறது.
இனிமேலும் காங்கிரசை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. 6 தேர்தல்களில் எதிலும் அக்கட்சி வெற்றி பெறவில்லை. பூஜ்ஜியம் எடுப்பதில் அக்கட்சி ஹாட்ரிக் சாதனை படைத்து உள்ளது. ஊழலுக்கு எதிரானவர்கள் ஊழலில் திளைத்து வருகின்றனர் என தெரிவித்தார்.






