என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • PM SHRI திட்டத்தில் கையெழுத்து போட்டால் 30 நிமிடங்களில் நிதியை விடுவிக்கச் சொல்கிறேன்" என அமைச்சர் தெரிவித்தார்.
    • நாடு முழுவதும் தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்றே சொல்லுவேன்” என அமைச்சர் சொன்னார்.

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களிடம் சமர்ப்பித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

    இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "கல்வி நிதி விடுவிப்பு தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை டெல்லியில் சந்தித்தபோது, "மும்மொழிக் கொள்கையை ஏற்பதில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறீர்கள்? கல்வியில் இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறீர்கள். நாடு முழுவதும் தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்றே சொல்லுவேன்" எனச் சொன்னார்.

    இவ்வளவு உத்வேகமாக பேசிவிட்டு, "PM SHRI திட்டத்தில் கையெழுத்து போடுங்கள்.. 30 நிமிடங்களில் நிதியை விடுவிக்கச் சொல்கிறேன்" எனத் தெரிவித்தார். இதைத்தான் நமது முதலமைச்சர் 'BLACK MAIL' எனக் கூறுகிறார்" என்று தெரிவித்தார்.

    • சென்னை கோட்டைக்கு செல்வதற்கு வேலூர் கோட்டையில் இணைந்திருக்கிறோம்.
    • இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

    வேலூர் மாவட்டம், கோட்டை மைதானத்தில் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மண்டல மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்திலேயே இளைஞர்கள் அதிகமுள்ள இயக்கம் அதிமுகதான். கோட்டையில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்பும் கூட்டம் இது.

    சென்னை கோட்டைக்கு செல்வதற்கு வேலூர் கோட்டையில் இணைந்திருக்கிறோம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும். 100 இளைஞர்களை தாருங்கள் உலகத்தையே மாற்றி காட்டுகிறேன் என விவேகானந்தர் கூறினார்.

    எம்ஜிஆர் காலத்திலும், புரட்சித்தலைவி காலத்திலும் சரி அதிமுக யாரையும் நம்பி இருந்ததில்லை. அதிமுக இயக்கம் மக்களையும், தொண்டர்களையும் மட்டுமே நம்பி இருக்கிறது.

    பெண்கள் தன்னை அப்பா என்று அழைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிக் கொள்கிறார். எதிர்க்கட்சியாக இருந்தபோது Go back என்ற ஸ்டாலின், தற்போது வெல்கம் மோடி என்கிறார்.

    அதிமுகவுக்கு கூட்டணி வேறு, கொள்கை வேறு; கொள்கையே இல்லாத கட்சி திமுக. அதிமுகவைப் பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை.

    2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது திமுக.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.
    • ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்து ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கவுள்ளார். இச்சமூதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த "ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்" நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் , அறிமுக இயக்குனர் "பிளாக் ஷீப்" கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.

    இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படத்திற்கு ஆண் பாவம் பொல்லாதது என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ரியோராஜ் மண்டைக்குள் பல பெண்கள் சித்திரவதை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு, சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு, என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.

    ரியோ ராஜ் ஸ்வீட் ஹார்ட் மற்றும் நிறம் மாறும் உலகில் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.
    • ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

    மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.

    இந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் IPL போட்டிகள்:

    மார்ச் 23: சி.எஸ்.கே. Vs மும்பை இந்தியன்ஸ்

    மார்ச் 28: சி.எஸ்.கே. Vs பெங்களூரு

    ஏப்ரல் 05: சி.எஸ்.கே. Vs டெல்லி

    ஏப்ரல் 11: சி.எஸ்.கே. Vs கொல்கத்தா

    ஏப்ரல் 25: சி.எஸ்.கே. Vs ஹைதராபாத்

    ஏப்ரல் 30: சி.எஸ்.கே. Vs பஞ்சாப்

    மே 12 : சி.எஸ்.கே. Vs ராஜஸ்தான்

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் IPL போட்டிகள்:

    மார்ச் 31 : மும்பை Vs கொல்கத்தா

    ஏப்ரல் 7 : மும்பை Vs பெங்களூரு

    ஏப்ரல் 17: மும்பை Vs ஐதாராபாத்

    ஏப்ரல் 20: மும்பை Vs சென்னை

    ஏப்ரல் 27: மும்பை Vs லக்னோ

    மே 6       : மும்பை Vs குஜராத்

    மே 15     : மும்பை Vs டெல்லி

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் IPL போட்டிகள்:

    ஏப்ரல் 2   : பெங்களூரு Vs குஜராத்

    ஏப்ரல் 10 : பெங்களூரு Vs டெல்லி

    ஏப்ரல் 18 : பெங்களூரு Vs பஞ்சாப்

    ஏப்ரல் 24 : பெங்களூரு Vs ராஜஸ்தான்

    மே 3        : பெங்களூரு Vs சென்னை

    மே 13      : பெங்களூரு Vs ஐதாராபாத்

    மே 17      : பெங்களூரு Vs கொல்கத்தா

    குவாலிபியர் 1 போட்டி மே 20 ஆம் தேதியும் எலிமினேட்டர் போட்டி மே 21 ஆம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. குவாலிபியர் 2 போட்டி மே 23 ஆம் தேதியும் ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்களோ அல்லது காணொலியோ இருந்தால் அதையும் பதிவிடலாம்.

    நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, புகார்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனரின் எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்தியாக தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தங்கள் புகார்களை 9445257000 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம் என மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார்.

    புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்களோ அல்லது காணொலியோ இருந்தால் அதையும் பதிவிடலாம் என மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    • நிவின்பாலி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
    • இப்படத்தில் நிவின் பாலி ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார்.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நிவின் பாலி. இவர் சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் போதிய வரவேற்பை மக்களிடம் பெறவில்லை. கடந்த ஆண்டு வெளியான வருஷங்களுக்கு சேஷம் திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். படத்தில் சிறுது நேரம் வந்தாலும் அது மக்களிடையே பெரியளவில் கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் நிவின் பாலி கம்பேக் கொடுக்க வேண்டும் என மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

    இந்த நிலையில் நிவின்பாலி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு மல்டிவெர்ஸ் மன்மதன் என பெயரிட்டுள்ளனர். இப்படமே இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் நிவின் பாலி ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார்.

    இப்படத்தை ஆதித்யன் சந்திரசேகர் எழுதி இயக்குகிறார். நிவன் பாலி அவரது நிறுவனமான பாலி ஜூனிய பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் ஒரு பான் இந்தியன் திரைப்படமாக உருவாகிறது. மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. திரைப்படத்தை பற்றிய மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் நிவின் பாலி புடல் எடையை குறைத்து ஒரு பக்கா மாஸான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதுக்கு மக்கள் பெரும் அதரவை கொடுத்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐபிஎல் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
    • ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

    இந்நிலையில், ஐ.பி.எல். 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

    மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 

    குவாலிபியர் 1 போட்டி மே 20 ஆம் தேதியும் எலிமினேட்டர் போட்டி மே 21 ஆம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. குவாலிபியர் 2 போட்டி மே 23 ஆம் தேதியும் ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக போட்டிகள் நடைபெறும்- அகமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு, லக்னோ, முலான்பூர், டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் என பத்து இடங்களுடன் கவுகாத்தி மற்றும் தரம்சாலாவிலும் இந்த முறை ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற உள்ளது.

    • தேசிய கல்விக் கொள்கை மற்றும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து அறிக்கை.
    • தமிழகத்தை பொறுத்த வரைக்கும் இரு மொழிக் கொள்கை தான் பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது.

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ளாதவரை அதற்கான நிதியை வழங்க முடியாது என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.

    தமிழகத்தை பொறுத்த வரைக்கும் இரு மொழிக் கொள்கை தான் பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது. அப்படி இருக்கும் பொழுது முன் மொழி கல்வியை கட்டாயப்படுத்துவது நிச்சயமாக ஏற்புடையதல்ல.

    பள்ளிகளுக்கு பெற வேண்டிய நிதியை பெற முடியாமல் இருப்பது, நமது மாணவர்களுக்கு தான் பெரிய இழப்பாகும். மாணவர்களின் கல்வியும் மிக முக்கியம். மாணவர்களுக்கும், பள்ளிக்கும் தேவையான நிதி உதவியும் மிக முக்கியம்.

    எனவே மத்திய அரசும், தமிழக அரசும் கலந்தாலோசித்து இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும். "மாற்றான் போக்கு எண்ணத்தோடு" மத்திய அரசு செயல்படுவது மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சுங்கச் சாவடியில் பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
    • சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.

    தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த 'பாஸ்டேக்' முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    இதன்படி, வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் பாஸ்டேக் விதிமுறைகளில் மத்திய அரசு அமைப்பான இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இவை நாளை(பிப்ரவரி 17) முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, வாகனங்கள் சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ, ஹாட் லிஸ்டில் இருந்தாலோ, குறைந்த இருப்பைக் கொண்டிருந்தாலோ சுங்கச் சாவடியில் பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.

    மேலும் ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு பாஸ்டேக், ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டாலோ அல்லது செயலற்ற நிலையில் இருந்தாலோ பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.

    பாஸ்டேக் இந்த இரண்டு நிபந்தனைகளையுமே பூர்த்தி செய்யவில்லை என்றால் "எரர் கோட் 176" உடன் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும். மேலும் அத்தைகைய வாகனத்திற்கு சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.

    எனவே பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பே பாஸ்டேக்கில் போதிய பணயிருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

    மேலும் பயனர் விவரங்களை அவ்வப்போது பதிவு செய்து அதனை உறுதி செய்துகொள்ள வேண்டும். சுங்கச்சாவடிகளை அடைவதற்கு முன்பு, பாஸ்டேக் நிலையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

    • ஒரே குடும்பதப்தை சேர்ந்த சாராய வியாபாரிகள் தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர்.
    • சாராய வியாபாரியான முனுசாமியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை அருகே முட்டம் பகுதியில் 2 வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலைக்குள் மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகிய 3 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர், அவர்களிடம் முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா? அல்லது சாராய விற்பனையை தடுத்ததால் அரங்கேற்றப்பட்ட கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தில், ஒரே குடும்பதப்தை சேர்ந்த சாராய வியாபாரிகள் தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர்.

    இந்நிலையில், சாராய வியாபாரியான முனுசாமியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.
    • சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கரை தேடி வந்தது.

    பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரினி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் கடந்தாண்டு தொடக்கத்தில் 'கட்சி சேர' என்ற பாடலை இசையமைத்து பாடி வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது.

    அதைத்தொடர்ந்து சாய் அபயங்கர் 'ஆசை கூட' என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இணையத்தில் மிகப் பெரிய வைரல் ஆனது.

    இந்த இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதனால் சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கரை தேடி வந்தது.

    இந்நிலையில், கட்சி சேரா, ஆசை கூட வரிசையில் சாய் அபயங்கரின் 3 ஆவது இண்டிபெண்டண்ட் பாடலான 'சித்திர புத்திரி' பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த ஆல்பத்தில் பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி நடனமாடியுள்ளார். இப்பாடலும் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இப்பாடல் யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    சமீபத்தில் நேர்காணலில் கலந்துக் கொண்ட சாய் அபியங்கர் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார் அவர் கூறியதாவது " எனக்கு திரைப்படங்கள் பார்ப்பது பிடிக்கும். அவ்வப்போது என் நண்பர்களோடு திரைப்படங்கள் பார்ப்பேன். சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. மேலும் ஒரு மலையாள திரைப்படத்திற்கு இசையமைக்கிறேன். என் பாடலை கேட்டு நடிகர் சிம்பு அழைத்து பாராட்டினார்." என கூறீனார்.

    மேலும் சாய் அபியங்கர் சிம்பு நடிக்கும் STR49 மற்றும் STR51 ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அரசு பள்ளிகளை மேம்படுத்த பிஎம். ஸ்ரீ என்ற திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மொழி அரசியல் செய்து வருகின்றனர்.

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதி என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மும்மொழி கொள்கையை, அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதி

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு என்பது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்காக திட்டங்களை வகுக்கவும், கொள்கைகளை உருவாக்கவும் மோடி அரசுக்கு மக்கள் அதிகாரம் வழங்கியிருக்கிறார்கள். அதன்படியே மோடி அரசு பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் வகுத்து வருகிறது அதில் ஒன்றுநான் புதிய தேசிய கல்விக் கொள்கை

    புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, அரசு பள்ளிகளை மேம்படுத்த பிஎம். ஸ்ரீ என்ற திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக 'ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்.எஸ்.ஏ) மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம். ஆனால், திட்டத்திற்கான நிதி மட்டும் என்று திமுக அரசு கேட்கிறது. திட்டத்தை செயல்படுத்தினால் தான் சட்டப்படி நிதி வழங்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறி இருக்கிறார். இதை வழக்கம்போல திரித்து, மொழி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவினர் செய்து வருகின்றனர்.

    புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க சொல்வது, இந்தி திணிப்பு. என்றும் மும்மொழி கொள்கை திணிப்பு என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர். இது அப்பட்டமான பொய். புதிய தேசிய கல்விக் கொள்கையில், இந்தி மொழி எங்கும் திணிக்கப்படவில்லை. தாய்மொழி, ஆங்கிலம், அதற்கு அடுத்து மாணவர்கள் விரும்பும் மொழி என்றுதான் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நெலுங்கு கன்னடம் மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் கோடிக்கணக்கில் வசிக்கிறார்கள். மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் அவர்கள், தங்கள் தாய்மொழியை கற்க முடியும். அந்த வாய்ப்பை திமுக அரசு ஏன் மறுக்கிறது? அப்படி மறுப்பது, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்லவா?

    மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று திரும்பத் திரும்ப திமுக அரசு கூறுகிறது அதன் மூலம் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை இல்லாமல் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சிக்கின்றனர்.

    தமிழகத்தில் பல பத்தாண்டுகளாகவே மும்மொழி கொள்கைதான் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் தவிர, தனியார் பள்ளிகள் அனைத்திலும் மும்மொழி கொள்கை இருக்கிறது. சி.பி.எஸ்.இ பள்ளிகள் அனைத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றும் பள்ளிகள் தான். முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட திமுகவினர் நடத்தும் பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தான். திமுகவினர் நடத்தும் பள்ளிகளின் மூன்றாவது மொழியாக இந்தி தான் இருக்கிறது. சில பள்ளிகளில் நான்காவது மொழியாக சமஸ்கிருதம், பிரெஞ்சு ஜெர்மன் போன்ற மொழிகளையும் வைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உருது மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால், பட்டியலின் பழங்குடியின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரும் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மும்மொழி கொள்கை கூடாது என்கிறது திமுக அரசு. இது. ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் செயல் அல்லவா! அரசு ஒரு கொள்கையை உருவாக்கினால், அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரு கொள்கை, அரசு பள்ளி மாணவர்களுக்கு கொள்கை என இருந்தால் எப்படி சமத்துவம் உருவாகும்! சமூக நீதி கிடைக்கும்?

    குறைந்தபட்சம் திமுகவினர். தங்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளிலாவது இரு மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும். அதன் பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். பணம் இருப்பவர்கள் மூன்றாவது மொழியை கற்க வசதிகளை ஏற்படுத்தி விட்டு ஏழ மாணவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பை, மத்திய அரசு உருவாக்கிக் கொடுத்தாலும், அதை தடுப்பது சமுக அநீதி இதை மறைப்பதற்காக மத்திய அரசு மீது பழி போட்டு மொழி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முன்னெடுக்க நினைத்தால். அது இனி வெற்றி பெறாது. இதனை உணர்ந்து தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும். மும்மொழிக் கொள்கையை, அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    ×