என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது.
    • நியூசிலாந்து அணி தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    சிலெட்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி இன்று சிலெட் நகரில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக மக்முதுல் ஹசன் ஜாய், ஜாகீர் ஹசன் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினார்கள்.

    12 ரன்னில் ஜாகீர் ஹசன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த கேப்டன் நஜ்முல் அதிரடியாக விளையாடினார். அவர் 35 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 3 சிக்சர் 2 பவுண்டரி அடங்கும். அடுத்து வந்த மொமினுல் ஹக் நிதானமாக விளையாடி 37 ரன்னில் வெளியேறினார்.

    ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹசன் ஜாய் அரை சதம் விளாசினார். அவர் சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 86 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது. ஷோரிஃபுல் இஸ்லாம் 13 ரன்னிலும் தைஜுல் இஸ்லாம் 8 ரன்களிலும் ஆடி வருகின்றனர். நியூசிலாந்து அணி தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

    • 2025 சாம்பியன்ஸ் கோப்பை பொதுவான இடமாக கருதப்படும் துபாயில் நடத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஐஸ்லாந்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

    ஐசிசியின் சாம்பியன் டிராபி தொடர் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரின் புள்ளி பட்டியலில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளன.

    ஆனால் இன்னும் பாகிஸ்தானில் பாதுகாப்பு சூழ்நிலைகள் திருப்தியளிக்காத காரணத்தால் இந்தியா அந்நாட்டுக்கு சென்று விளையாடுவதற்கு தயக்கம் காட்டும். குறிப்பாக இருநாட்டுக்கும் இடையே நிலவும் தற்போதைய எல்லை பிரச்சினையும் விரிசலும் இதே போல நீடிக்கும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்திய அரசு அனுமதி கொடுக்காது என்று தெரிய வருகிறது.

    அதன் காரணமாக 2025 சாம்பியன்ஸ் கோப்பை பொதுவான இடமாக கருதப்படும் துபாயில் நடத்தப்படும் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அல்லது 2023 ஆசிய கோப்பை தொடரை போலவே பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் அந்நாட்டிலும் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பொதுவான இடமான துபாயிலும் நடைபெறும் என்று தெரிய வருகிறது.

    இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஐஸ்லாந்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறிய ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம், நாங்கள் பின்வாங்குபவர்கள் அல்ல. 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதற்கான எங்களின் ஏலத்தை இன்று வெளியிட்டுள்ளோம். முடிவு குறித்து ஐசிசி-யின் இயக்குனர் கிரேக் பார்க்லே என்ன சொல்கிறார் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறியது.

    • பல காரணங்களுக்காக மும்பை அணிக்கு மீண்டும் வந்த உணர்வு மிகவும் சிறப்பானது.
    • இறுதியாக எனது முழு கிரிக்கெட் பயணமும் தொடங்கிய இடத்துக்கு திரும்பி வந்துள்ளேன்.

    மும்பை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. இதற்கான வீரர்களின் மினி ஏலம் வருகிற 19-ந் தேதி துபாயில் நடக்கிறது.

    இதற்கிடையே அணிகளில் தக்க வைக்கப்படும் வீரர்கள் மற்றும் கழற்றி விடப்படும் வீரர்களின் விவரங்களை அந்தந்த அணி நிர்வாகங்கள் அறிவித்தது.

    குஜராத் அணி கேப்டனான ஹர்த்திக் பாண்ட்யாவை வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இதன்மூலம் மும்பை அணியில் ஹர்த்திக் பாண்ட்யா மீண்டும் இணைந்துள்ளார்.

    மும்பை அணிக்கு திரும்பியது தொடர்பாக ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி வந்துள்ளேன். பல காரணங்களுக்காக மும்பை அணிக்கு மீண்டும் வந்த உணர்வு மிகவும் சிறப்பானது. அவர்கள் என்னை 2013-ம் ஆண்டு முதல் கவனித்து வருகிறார்கள். இறுதியாக எனது முழு கிரிக்கெட் பயணமும் தொடங்கிய இடத்துக்கு திரும்பி வந்துள்ளேன். அவை என் வாழ்வின் முக்கியமான பகுதியாக இருந்தன.

    நான் என் வீட்டுக்கு திரும்பியது போல் உணர்கிறேன். நாம் ஒரு அணியாக வரலாற்றை உருவாக்கினோம். மீண்டும் ஒருமுறை மும்பை அணி வீரர்களுடன் சில அற்புதமான தருணங்களை உருவாக்க எதிர்பார்த்து இருக்கிறேன். மும்பை அணியில் மீண்டும் விளையாட ஆவலுடன் உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் கூறும் போது, குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரசிகர்கள், அணி மற்றும் நிர்வாகத்துக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அணியின் ஒரு பகுதியாக இருப்பதும், அதை வழிநடத்துவதும் ஒரு முழுமையான கவுரவமாகும். எனது குடும்பத்தினருக்கும், எனக்கும் ஒரு வீரராகவும், தனிநபராகவும் கிடைத்த அன்பு, ஊக்கத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    குஜராத் அணியுடனான நினைவுகளும், அனுபவங்களும் என் இதயத்தில் என்றென்றும் ஒரு சிறப்பு இடத்தை பிடிக்கும். மறக்க முடியாத பயணத்துக்கு நன்றி" என்றார்.

    ஹர்த்திக் பாண்ட்யா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பிறகு கடந்த ஆண்டு புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த அவர் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

    குஜராத் அணி தனது முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ்- அமெரிக்காவில் நடக்கிறது.
    • 20 ஓவர் கிரிக்கெட் வடிவில் இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நேற்று அளித்த ஒரு பேட்டியில், 'உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றதால் இதயமே நொறுங்கி போய்விட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், வலிமையான அணியாக இருந்தும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது இன்னும் வேதனையாக உள்ளது. ஆனால் நமது வீரர்கள் அதில் இருந்து கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறி செல்ல வேண்டும். இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விரைவில் பார்க்கப்போகிறேன். அது 50 ஓவர் உலகக் கோப்பையாக இருப்பது கடினம். ஏனெனில் இதற்கு அணியை மீண்டும் கட்டமைக்க வேண்டும்.

    ஆனால் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்- அமெரிக்காவில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பட்டம் வெல்வதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. ஏனெனில் 20 ஓவர் கிரிக்கெட் வடிவில் இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கிறது. எனவே 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கடுமையான போட்டியாளராக இருக்கும்' என்றார்.

    மேலும் ரவிசாஸ்திரி, 'உலகக் கோப்பையை எளிதில் வென்று விட முடியாது. இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட ஒரு உலகக் கோப்பையை கையில் ஏந்த 6 உலகக் கோப்பை தொடர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. உலகக் கோப்பையை வெல்ல இறுதிப்போட்டிக்குரிய நாள் சிறப்பாக அமைய வேண்டும். இறுதிப்போட்டிக்கு முன்பாக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படாது' என்றும் குறிப்பிட்டார்.

    • பும்ரா, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அமைதி தான் சில நேரங்களில் சிறந்த பதிலாக அமையும் என பதிவிட்டிருந்தார்.
    • எதற்காக இப்படி வைத்துள்ளார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    இந்நிலையில் காலையில் இருந்து ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வந்தது. அது என்னவென்றால் மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அமைதி தான் சில நேரங்களில் சிறந்த பதிலாக அமையும் என பதிவிட்டிருந்தார்.

    எதற்காக இப்படி வைத்துள்ளார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். சில ரசிகர்கள் உலகக் கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாம்பியன் டிராபி இருக்கும் என்பதை தான் இப்படி கூறுகிறார் என தெரிவித்து வந்தனர்.

    இந்த குழப்பம் முடிவுக்கு வருவதற்குள் மேலும் ஒரு குழப்பத்தை பும்ரா ஏற்படுத்தி உள்ளார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தை unfollow செய்துள்ளார். இதற்காக தான் அவர் அப்படி ஒரு ஸ்டோரியை வைத்துள்ளாரா என சந்தேகங்கள் எழுந்துள்ளது.

    மேலும் அவர் சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணியும், கேமரூன் கிரினை பெங்களூர் அணியும் வாங்கியதாக அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் நாடு திரும்புகிறார்கள்.
    • நான்கு வீரர்கள் அணியுடன் இணைய உள்ளனர்.

    இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    இன்று 3-வது போட்டி கவுகாத்தியில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த 6 வீரர்களை ஆஸ்திரேலியா ரிலீஸ் செய்துள்ளது.

    உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் இங்லிஸ், அபோட் ஆகியோர் ஆஸ்திரேலியா திரும்புகிறார்கள். இன்றைய போட்டி முடிவடைந்த பின்னர் அவர்கள் சொந்த நாடு திரும்புவார்கள்.

    ஏற்கனவே ஆடம் ஜாம்பா, சுமித் ஆகியோர் ஆஸ்திரேலிய புறப்பட்டு விட்டனர்.

    உலகக் கோப்பையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த டிராவிஸ் ஹெட் மட்டுமே டி20 அணியில் நீடிக்கிறார்.

    பென் மெக்டெர்மொட், ஜோஷ் பிலிப், பென் திவார்ஷுய்ஸ், கிறிஸ் கிரீன் அணியுடன் இணைய இருக்கிறார்கள்.

    • பார்முலா 4 கார்பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • டிக்கெட்டுகள் பெற விரும்புவோர் பேடிஎம் இன்சைடரில் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடட் ஆகியவை இணைந்து நடத்தும் ரேசிங் சர்க்யூட் பார்முலா-4 கார் பந்தயம் சென்னையில் வருகிற டிசம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் இரவு போட்டியாக நடத்தப் பட உள்ளது.தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது.

    பார்முலா 4 கார்பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் தெற்காசியாவின் முதல் பார்முலா 4 சர்வதேச இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் பார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் இரவு நேர கார் பந்தயங்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

    டிக்கெட்டுகள் பெற விரும்புவோர் பேடிஎம் இன்சைடரில் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கிராண்ட் ஸ்டான்ட் ரூ.1000, பிரீமியம்-ரூ.4 ஆயிரம், கோல்டு ரூ.7 ஆயிரம், பிளாட்டினம் ரூ.10,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

    • 2008-ம் ஆண்டு அறிமுக தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.
    • பின்னர் பல்வேறு காரணங்களால் அவர்கள் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

    உலகளவில் நடைபெறும் டி20 லீக்கில் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் மிகவும் பிரபலமானது. சுமார் இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்தத் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் இடம் பிடித்து விளையாடுவார்கள்.

    கோடிக்கணக்கில் பணம் கொட்டிக்கொடுப்பதாலும், மைதானம் நிறைந்து காணப்படும் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதாலும், ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

    2008-ம் ஆண்டு முதன்முதலாக ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடங்கப்பட்டது. தொடக்க சீசனில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். தன்வீர் சோஹைல், உமர் குல், கம்ரான் அக்மல் போன்ற வீரர்கள் விளையாடினார்கள்.

    அதன்பின் எல்லையில் தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் கிடையாது என்று இந்திய அரசு முடிவு செய்தது. அரசியல் பதற்றம்காரணமாக அது தொடர்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ள.

     அதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தொடங்கியது. இருந்தபோதிலும், பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்பது குறித்து தங்களது விருப்பதை தெரிவித்து வருவது வழக்கம்தான்.

    அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலியும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹசன் அலி கூறுகையில் "ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் போட்டியில் விளையாட விரும்புகிறார்கள். நானும் அங்கே சென்று விளையாட விரும்புகிறேன். உலகத்தில் உள்ள மிகப்பெரிய லீக்கில் ஐபிஎல் லீக்கும் ஒன்று. எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவானும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், "ஐபிஎல் போட்டியில் விளையாட முடியவில்லை என்பதை குறித்து பாகிஸ்தான் வீரர்கள் கவலையடையக் கூடாது" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    • ஹர்திக் தன்னுடைய ஒரிஜினல் அணியான மும்பைக்கு திரும்ப வேண்டும் என எங்களிடம் தெரிவித்தார்.
    • பாண்ட்யா முடிவை நாங்கள் மதிக்கிறோம்.

    அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணிக்கு திரும்பி உள்ளார். புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா தனது ஒரிஜினல் அணியான மும்பை இந்தியன்க்கு செல்ல விருப்பம் தெரிவித்ததாக குஜராத் அணியின் இயக்குனர் விக்ரம் சோலங்கி தெரிவித்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குஜராத் அணியின் முதல் கேப்டனான ஹர்திக், இரண்டு சீசனிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் தன்னுடைய ஒரிஜினல் அணியான மும்பைக்கு திரும்ப வேண்டும் என எங்களிடம் தெரிவித்தார்.

    அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம். மேலும் அவரது எதிர்கால முயற்சிகளில் அவர் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • இதனையடுத்து இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

    ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடரில் பங்கேற்ற இலங்கை அணி, தொடர் தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது. குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் 55 ரன்கள் மற்றுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

    மோசமான ஆட்டத்தை இலங்கை அணியினர் வெளிப்படுத்தியதால் இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது. இந்த முடிவை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க அறிவித்தார்.

    இதனால் இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதனால் அடுத்தாண்டு இலங்கையில் நடைபெற இருந்த ஆடவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.

    இந்நிலையில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரனசிங்கேவை பதவிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது.
    • இரு அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி நாளை நடக்கிறது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20-யில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது.

    இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டி கவுதாத்தியில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்மித், ஜோஸ் இங்கிலீஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால், ருதுராஜ் தொடக்கம் சிறப்பாக உள்ளது. 

    மிடில் ஆர்டரில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் பக்கபலமாக உள்ளனர். பினிசிங்கில் ரிங்கு சிங் அதிரடி காட்டுகிறார். அவர் நேற்று நடந்த போட்டியில் 9 பந்தில் 31 ரன்கள் விளாசினார்.

    நாளை இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் முதல் வெற்றியை ருசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

    • இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி அணிகள் முன்னேறின.
    • இதில் 2-0 என்ற கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    மலாகா:

    கிரிக்கெட்டில் உலகக்கோப்பையைப் போன்று டென்னிஸில் டேவிஸ் கோப்பை போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை ஸ்பெயினில் இந்த தொடர் நடைபெற்றது.

    இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி அணிகள் முன்னேறின. இதில் 2-0 என்ற கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இறுதிப்போட்டியில் இத்தாலி வீரரான ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை 6-3 6-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

    1976-ம் ஆண்டுக்கு பிறகு இத்தாலி அணி டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×