என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மேக்ஸ்வெல் 104 ரன்களுடனும் (48 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்), விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
    • இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார்.

    கவுகாத்தி:

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 222 ரன்கள் குவித்தது.

    பின்னர் மெகா இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 68 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இந்த நெருக்கடியான சூழலில் களம் கண்ட ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், தனக்கே உரிய பாணியில் மட்டையை நாலாபுறமும் சுழட்டினார்.

    கடைசி இரு ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய அக்ஷர் பட்டேலின் ஓவரில் 22 ரன் எடுத்தனர். இதையடுத்து கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 21 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. அந்த பந்தை மேக்ஸ்வெல் நேர்பகுதியில் சர்வ சாதாரணமாக பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

    மேக்ஸ்வெல் 104 ரன்களுடனும் (48 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்), விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். மேலும் ஆட்டநாயகன் விருதை அவரே பெற்றார்.

    இந்நிலையில் ரோகித் சர்மாவின் சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்தார். மேக்ஸ்வெல்லுக்கு இது 4-வது சதமாக பதிவானது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவரான இந்திய வீரர் ரோகித் சர்மாவின் (4 சதம்) சாதனையும் சமன் செய்தார்.

    மேலும் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 47 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியர்களின் அதிவேக சதத்தை சமன் செய்தார். ஏற்கனவே ஆரோன் பிஞ்ச், ஜோஷ் இங்லிஸ் தலா 47 பந்தில் சதம் அடித்திருந்தனர்.

    • மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா உலக வில்வித்தை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
    • இந்திய வீராங்கனை 16 வயதான ஷீதல் தேவி ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா உலக வில்வித்தை தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி பெண்களுக்கான காம்பவுண்ட் ஓபன் பிரிவில் இந்திய வீராங்கனை 16 வயதான ஷீதல் தேவி 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.

    சமீபத்தில் நடந்த பாரா ஆசிய விளையாட்டில் 2 தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் அவர் 2 இடங்கள் முன்னேறி 'நம்பர் ஒன்' அரியணையை அலங்கரிக்கிறார்.

    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    சான்டியாகோ:

    10-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) சிலி தலைநகர் சான்டியாகோவில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. டிசம்பர் 10-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்து, முன்னாள் சாம்பியன்கள் தென்கொரியா, ஜெர்மனி, கடந்த முறை (2022) 4-வது இடம் பெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    இதில் இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கடந்த முறை 2-வது இடம் பிடித்த ஜெர்மனி, பெல்ஜியம், கனடா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    தொடக்க நாளான இன்று நடைபெறும் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவுடன் மோதுகிறது. அதிகபட்சமாக 2013-ம் ஆண்டு 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி முதல்முறையாக கோப்பையை வெல்லும் நோக்குடன் பிரீத்தி தலைமையில் களம் இறங்குகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆசிய ஜூனியர் கோப்பையை வென்று இருக்கும் இந்திய அணி, கனடாவுக்கு எதிரான முந்தைய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருப்பதால் இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் பிரீத்தி கருத்து தெரிவிக்கையில், 'நாங்கள் இந்த போட்டியில் மிகுந்த உறுதியுடனும், கவனத்துடனும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த போட்டிக்காக நாங்கள் தீவிரமாக தயாராகி இருக்கிறோம். அதனை களத்தில் செயல்திறனாக மாற்றுவதில் ஆர்வமாக உள்ளோம். தொடக்க ஆட்டத்தில் கனடாவுக்கு எதிராக நாங்கள் ஆடுவது இந்த போட்டி தொடரில் உத்வேகத்தை உருவாக்க நல்ல வாய்ப்பாகும்' என்றார்.

    இந்திய பயிற்சியாளர் துஷர் கண்டேகர் கூறுகையில், 'உலகக் கோப்பை போட்டிக்காக எங்களது வீராங்கனைகள் கடுமையாக பயிற்சி எடுத்துள்ளனர். சவாலை எதிர்கொள்ள மனதளவிலும் நன்றாக தயாராகி உள்ளனர். ஒவ்வொரு எதிரணியையும் நாங்கள் மதிக்கிறோம். வெற்றியோடு தொடங்குவதை எதிர்நோக்கியுள்ளோம்' என்றார்.

    இந்திய அணி வருமாறு:- குஷ்பூ, மாதுரி கின்டோ, நீலம், பிரீத்தி (கேப்டன்), ஜோதி சிங், ரோப்னி குமாரி, மஹிமா டேட், மஞ்சு கோர்சியா, ஜோதி சாத்ரி, ஹினா பனோ, சுஜாதா குஜூர், ருதுஜா பிசல், சாக்ஷி ராணா, மும்தாஸ் கான், அன்னு, தீபிகா சோரெங், டிபி மோனிகா தோப்போ, சுனிலிதா தோப்போ.

    இந்திய அணிக்குரிய இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.

    • தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு.
    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் ஓய்வு கேட்டுள்ளார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இந்த தொடர் முடிவடைந்தவுடன் தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள், டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது.

    இந்தத் தொடர் டிசம்பர் 10-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒயிட்-பால் தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புவதாக பிசிசிஐ-க்கு விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனால் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, 3 சதங்கள் விளாசியதுடன் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இருந்தபோதிலும் கோப்பையை வெல்ல முடியாததால் மிகுந்த கவலை அடைந்தார்.

    விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஆஸ்திரேலியா தொடரின்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார். 

    • முதல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், அடுத்த 36 பந்தில் 102 ரன்கள் விளாசினார்.
    • சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த 9-வது இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆவார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 222 ரன்கள் குவித்தது. என்றபோதிலும் மேக்ஸ்வெல் சதத்தால் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கெய்க்வாட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். அவர் 57 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்சர்கள் அடங்கும். 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    முதல் 21 பந்தில் 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் அதன்பின் 36 பந்தில் 102 ரன்கள் விளாசினார்.

    நேற்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் பல சாதனைகள் படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    சர்வதேச டி20 போட்டியில் ஒரு இந்திய வீரரின் 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்னதாக சுப்மன் கில் 126 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    கடைசி 3 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் நேற்று 52 ரன்கள் குவித்தார். இது 2-வது அதிகபட்சமாகும். இதற்கு முன் யுவராஜ் சிங் 54 ரன்கள் விளாசியுள்ளார்.

    சர்வதேச டி20 போட்டியில் சதம் விளாசிய 9-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    • இறுதிவரை போராடிய மேக்ஸ்வெல் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ருதுராஜ் அதிரடியாக விளையாடிய சதம் அடித்தார். அவருக்கு அடுத்தப்படியாக சூர்யகுமார் 39 ரன்களும் திலக் வர்மா 31 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 222 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து கடுமையான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான ஹெட் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஆரோன் ஹார்டியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4.2 ஓவரில் 47 ரன்கள் குவித்த இந்த ஜோடியை அர்தீப்சிங் பிரித்தார். ஆரோன் ஹார்டி 16 ரன்னில் அவுட் ஆனார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் 18 பந்தில் 35 ரன்கள் குவித்த ஹெட்டும் பெவிலியன் திரும்பினார்.

    அடுத்து இங்கிலீஸ் 6 ரன்னிலும் ஸ்டோய்னிஸ் 17 ரன்னிலும் டிம் டேவிட் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் அரை சதம் அடித்து அசத்தினார். கடைசி வரை போராடிய மேக்ஸ்வெல் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

    இறுதி வரை போராடிய ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. இதனால் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

    • ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
    • ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சர்ட்சன், பெரன்டார்ஃப் மற்றும் ஆரோன் ஹார்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், தொடரின் மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது.

    இரு அணிகளிடையேயான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் டக் அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். இவர் 57 பந்துகளில் 123 ரன்களை குவித்தார். திலக் வர்மா சிறப்பாக ஆடி 31 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் கேன் ரிச்சர்ட்சன், பெரன்டார்ஃப் மற்றும் ஆரோன் ஹார்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • முதல் 2 டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    கவுகாத்தி:

    மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் இடம் பெறவில்லை. திருமணம் நடைபெற உள்ளதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தீபக் சாஹர் அணியில் இணைந்துள்ளார்.

    • இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் டி20 தொடரில் விளையாடுகின்றன.
    • இந்த தொடரின் முதல் இரு போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    கவுகாத்தி:

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், கவுகாத்தியில் இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    இதையடுத்து, இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

    • டி20 உலகக்கோப்பை வருவதற்கு குறைந்த காலங்கள் மட்டுமே இருக்கிறது.
    • டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது.

    2024 டி20 உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மாதான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-

    டி20 உலகக்கோப்பை வருவதற்கு குறைந்த காலங்கள் மட்டுமே இருக்கிறது. அதற்கு நீங்கள் சற்று அனுபவத்துடன் செல்ல வேண்டும். அத்தொடரில் இந்திய அணியை வழி நடத்தும் பொறுப்பை ஒரு அனுபவமிக்கவரிடம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். நீண்டகாலமாக விளையாடி வரும் அவருக்கு சூழ்நிலைகளை சமாளிப்பது, அழுத்தத்தை கையாள்வது போன்ற அம்சங்களில் அனுபவம் இருக்கிறது.

    டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது. எனவே ஒன்று நீங்கள் ரோகித் சர்மாவுடன் செல்ல வேண்டும். அல்லது ஹர்திக் பாண்ட்யா காயத்திலிருந்து எந்தளவுக்கு குணமடைந்து வருகிறார் என்பதை பார்த்து முடிவெடுக்க வேண்டும். ஆனாலும் உலகக்கோப்பைக்கு முன்பாக பாண்ட்யா அதிகப்படியான போட்டிகளில் விளையாடியிருக்க மாட்டார். எனவே அந்த முடிவும் பின்னடைவாகவே இருக்கும்.

    என்று கூறினார்.

    • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது.
    • நியூசிலாந்து அணி தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    சிலெட்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி இன்று சிலெட் நகரில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக மக்முதுல் ஹசன் ஜாய், ஜாகீர் ஹசன் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினார்கள்.

    12 ரன்னில் ஜாகீர் ஹசன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த கேப்டன் நஜ்முல் அதிரடியாக விளையாடினார். அவர் 35 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 3 சிக்சர் 2 பவுண்டரி அடங்கும். அடுத்து வந்த மொமினுல் ஹக் நிதானமாக விளையாடி 37 ரன்னில் வெளியேறினார்.

    ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹசன் ஜாய் அரை சதம் விளாசினார். அவர் சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 86 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது. ஷோரிஃபுல் இஸ்லாம் 13 ரன்னிலும் தைஜுல் இஸ்லாம் 8 ரன்களிலும் ஆடி வருகின்றனர். நியூசிலாந்து அணி தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

    • 2025 சாம்பியன்ஸ் கோப்பை பொதுவான இடமாக கருதப்படும் துபாயில் நடத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஐஸ்லாந்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

    ஐசிசியின் சாம்பியன் டிராபி தொடர் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரின் புள்ளி பட்டியலில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளன.

    ஆனால் இன்னும் பாகிஸ்தானில் பாதுகாப்பு சூழ்நிலைகள் திருப்தியளிக்காத காரணத்தால் இந்தியா அந்நாட்டுக்கு சென்று விளையாடுவதற்கு தயக்கம் காட்டும். குறிப்பாக இருநாட்டுக்கும் இடையே நிலவும் தற்போதைய எல்லை பிரச்சினையும் விரிசலும் இதே போல நீடிக்கும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்திய அரசு அனுமதி கொடுக்காது என்று தெரிய வருகிறது.

    அதன் காரணமாக 2025 சாம்பியன்ஸ் கோப்பை பொதுவான இடமாக கருதப்படும் துபாயில் நடத்தப்படும் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அல்லது 2023 ஆசிய கோப்பை தொடரை போலவே பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் அந்நாட்டிலும் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பொதுவான இடமான துபாயிலும் நடைபெறும் என்று தெரிய வருகிறது.

    இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஐஸ்லாந்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறிய ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம், நாங்கள் பின்வாங்குபவர்கள் அல்ல. 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதற்கான எங்களின் ஏலத்தை இன்று வெளியிட்டுள்ளோம். முடிவு குறித்து ஐசிசி-யின் இயக்குனர் கிரேக் பார்க்லே என்ன சொல்கிறார் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறியது.

    ×