என் மலர்
நீங்கள் தேடியது "ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி"
- 2012-ம் ஆண்டு முதல் இவ்விரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் 5 ஆட்டங்களில் இந்தியாவும், ஒரு ஆட்டத்தில் இத்தாலியும் வென்றுள்ளன.
ஐதராபாத்:
16-வது பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது.
வீராங்கனை நவ்னீத் கவுர் இந்த போட்டிக்கான தகுதி சுற்று ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் முறையே இங்கிலாந்து, இத்தாலியும், 'பி' பிரிவில் இந்தியா, ஸ்காட்லாந்தும் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தன. இந்த போட்டியில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் இரு தகுதி சுற்றிலும் (சாண்டியாகோ, ஐதராபாத் சுற்று) 4-வது இடம் பிடிக்கும் அணிகளில் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் அணியும் நேரடியாக தகுதி பெறும்.
இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் அரைஇறுதியில் இந்தியா- இத்தாலி அணிகள் சந்திக்கின்றன.
சலிமா டேடே தலைமையிலான இந்திய அணி லீக்கில் 2 வெற்றி (உருகுவே. வேல்சுக்கு எதிராக). ஒரு டிராவுடன் (ஸ்காட்லாந்துடன்) 7 புள்ளிகள் பெற்றது. இதேபோல் 7 புள்ளிகள் எடுத்த ஸ்காட்லாந்தை கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் பின்னுக்கு தள்ளிய இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்ததுடன், தரவரிசை முன்னிலை அடிப்படையில் உலகக் கோப்பை வாய்ப்பையும் உறுதி செய்தது.
உலக தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இந்திய அணி தனது வெற்றி உத்வேகத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. சூப்பர் பார்மில் இருக்கும் முன்கள வீராங்கனை நவ்னீத் கவுர் 4 கோல்கள் அடித்து நடப்பு தொடரில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இத்தாலி அணி ஒரு தோல்வி (இங்கிலாந்துக்கு எதிராக), ஒரு வெற்றி (ஆஸ்திரியா). ஒரு டிராவுடன் (தென்கொரியாவுடன்) 4 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடத்தை பெற்றது. தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள அந்த அணி பெடெரிகா கார்ட்டாவின் தாக்குதல் ஆட்டத்தையே அதிக நம்பி இருக்கிறது. அவர் இதுவரை 3 கோல் அடித்து இருக்கிறார்.
இந்திய அணிக்கு உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் ஆடுவது கூடுதல் பலமாகும். 2012-ம் ஆண்டு முதல் இவ்விரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் இந்தியாவும், ஒரு ஆட்டத்தில் இத்தாலியும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. அதனால் இன்றயை ஆட்டத்திலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் சூர்ட் மரினே கூறுகையில்,'உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவது இந்த அணிக்கு ஒரு முக்கியமான மைல்கல். நடப்பு தொடரில் வீராங்கனைகள் இதுவரை செயல்பட்ட விதத்திற்கு நிறைய பாராட்டுகளை பெற தகுதியானவர்கள். லீக் சுற்றில் நமது வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதே நேரத்தில் எங்கள் மனநிலை தெளிவாக உள்ளது. உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவதற்காக மட்டும் நாங்கள் இங்கு வரவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து முன்னேற்றம் காண்பதுடன், சாம்பியன் பட்டத்தை வெல்லவும் விரும்புகிறோம். அரைஇறுதி ஆட்டம் மற்றொரு பெரிய சவாலாகும். அதனை நாங்கள் முழு கவனத்துடனும், தீவிரத்துடனும் அணுகுவோம். எங்கள் திட்டத்தை சரியாக அமல்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்' என்றார்.
- ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
- லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
சான்டியாகோ:
10-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) சிலி தலைநகர் சான்டியாகோவில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. டிசம்பர் 10-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்து, முன்னாள் சாம்பியன்கள் தென்கொரியா, ஜெர்மனி, கடந்த முறை (2022) 4-வது இடம் பெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
இதில் இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கடந்த முறை 2-வது இடம் பிடித்த ஜெர்மனி, பெல்ஜியம், கனடா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
தொடக்க நாளான இன்று நடைபெறும் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவுடன் மோதுகிறது. அதிகபட்சமாக 2013-ம் ஆண்டு 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி முதல்முறையாக கோப்பையை வெல்லும் நோக்குடன் பிரீத்தி தலைமையில் களம் இறங்குகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆசிய ஜூனியர் கோப்பையை வென்று இருக்கும் இந்திய அணி, கனடாவுக்கு எதிரான முந்தைய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருப்பதால் இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் பிரீத்தி கருத்து தெரிவிக்கையில், 'நாங்கள் இந்த போட்டியில் மிகுந்த உறுதியுடனும், கவனத்துடனும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த போட்டிக்காக நாங்கள் தீவிரமாக தயாராகி இருக்கிறோம். அதனை களத்தில் செயல்திறனாக மாற்றுவதில் ஆர்வமாக உள்ளோம். தொடக்க ஆட்டத்தில் கனடாவுக்கு எதிராக நாங்கள் ஆடுவது இந்த போட்டி தொடரில் உத்வேகத்தை உருவாக்க நல்ல வாய்ப்பாகும்' என்றார்.
இந்திய பயிற்சியாளர் துஷர் கண்டேகர் கூறுகையில், 'உலகக் கோப்பை போட்டிக்காக எங்களது வீராங்கனைகள் கடுமையாக பயிற்சி எடுத்துள்ளனர். சவாலை எதிர்கொள்ள மனதளவிலும் நன்றாக தயாராகி உள்ளனர். ஒவ்வொரு எதிரணியையும் நாங்கள் மதிக்கிறோம். வெற்றியோடு தொடங்குவதை எதிர்நோக்கியுள்ளோம்' என்றார்.
இந்திய அணி வருமாறு:- குஷ்பூ, மாதுரி கின்டோ, நீலம், பிரீத்தி (கேப்டன்), ஜோதி சிங், ரோப்னி குமாரி, மஹிமா டேட், மஞ்சு கோர்சியா, ஜோதி சாத்ரி, ஹினா பனோ, சுஜாதா குஜூர், ருதுஜா பிசல், சாக்ஷி ராணா, மும்தாஸ் கான், அன்னு, தீபிகா சோரெங், டிபி மோனிகா தோப்போ, சுனிலிதா தோப்போ.
இந்திய அணிக்குரிய இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.
- இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 8-0 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்தது.
- இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பெல்ஜியத்தை சந்திக்கிறது.
சான்டியாகோ:
10-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சிலி தலைநகர் சான்டியாகோவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் நெதர்லாந்து, முன்னாள் சாம்பியன்கள் தென்கொரியா, ஜெர்மனி மற்றும் இந்தியா உள்பட 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
இதில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் கடந்த முறை 2-வது இடம் பிடித்த ஜெர்மனியுடன் மோதியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீராங்கனைகள் அன்னு 11-வது நிமிடத்திலும், ரோப்னி குமாரி 14-வது நிமிடத்திலும் அடித்த கோலால் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. ஆனால் இந்த நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஜெர்மனி வீராங்கனைகள் சோபியா 17-வது நிமிடத்திலும், லாரா புத் 21-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பி சமநிலையை உருவாக்கினர். 24-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை மும்தாஜ் கான் அடித்த கோலால் மீண்டும் இந்தியா முன்னிலையை தனதாக்கியது. அதன் பிறகு ஆக்ரோஷமாக ஆடிய ஜெர்மனி அணி அடுத்தடுத்து 2 கோல் அடித்தது. அந்த அணியின் லாரா புத் (36-வது நிமிடம்), கரோலின் (38-வது நிமிடம்) ஆகியோர் இந்த கோலை அடித்தனர்.
அதன் பின்னர் இரு அணிகளும் மேலும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி ஜெர்மனியிடம் வீழ்ந்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய ஜெர்மனி அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அந்த அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் (0-6) தோற்று இருந்தது. முதலாவது ஆட்டத்தில் கனடாவை எளிதில் (12-0) தோற்கடித்து இருந்த இந்திய அணிக்கு இது முதல் தோல்வியாகும்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 8-0 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்தது. மற்ற ஆட்டங்களில் நெதர்லாந்து 6-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவையும், ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் சிலியையும், இங்கிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும், அமெரிக்க அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் தோற்கடித்தன.
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பெல்ஜியத்தை சந்திக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






