search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Junior World Cup Hockey"

    • இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 8-0 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்தது.
    • இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பெல்ஜியத்தை சந்திக்கிறது.

    சான்டியாகோ:

    10-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சிலி தலைநகர் சான்டியாகோவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் நெதர்லாந்து, முன்னாள் சாம்பியன்கள் தென்கொரியா, ஜெர்மனி மற்றும் இந்தியா உள்பட 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    இதில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் கடந்த முறை 2-வது இடம் பிடித்த ஜெர்மனியுடன் மோதியது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீராங்கனைகள் அன்னு 11-வது நிமிடத்திலும், ரோப்னி குமாரி 14-வது நிமிடத்திலும் அடித்த கோலால் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. ஆனால் இந்த நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஜெர்மனி வீராங்கனைகள் சோபியா 17-வது நிமிடத்திலும், லாரா புத் 21-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பி சமநிலையை உருவாக்கினர். 24-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை மும்தாஜ் கான் அடித்த கோலால் மீண்டும் இந்தியா முன்னிலையை தனதாக்கியது. அதன் பிறகு ஆக்ரோஷமாக ஆடிய ஜெர்மனி அணி அடுத்தடுத்து 2 கோல் அடித்தது. அந்த அணியின் லாரா புத் (36-வது நிமிடம்), கரோலின் (38-வது நிமிடம்) ஆகியோர் இந்த கோலை அடித்தனர்.

    அதன் பின்னர் இரு அணிகளும் மேலும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி ஜெர்மனியிடம் வீழ்ந்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய ஜெர்மனி அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அந்த அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் (0-6) தோற்று இருந்தது. முதலாவது ஆட்டத்தில் கனடாவை எளிதில் (12-0) தோற்கடித்து இருந்த இந்திய அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 8-0 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்தது. மற்ற ஆட்டங்களில் நெதர்லாந்து 6-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவையும், ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் சிலியையும், இங்கிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும், அமெரிக்க அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் தோற்கடித்தன.

    இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பெல்ஜியத்தை சந்திக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×