என் மலர்tooltip icon

    விளையாட்டு

    Womens Hockey World Cup | பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தகுதி சுற்று: அரைஇறுதியில் இந்தியா-இத்தாலி இன்று மோதல்
    X

    Women's Hockey World Cup | பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தகுதி சுற்று: அரைஇறுதியில் இந்தியா-இத்தாலி இன்று மோதல்

    • 2012-ம் ஆண்டு முதல் இவ்விரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் 5 ஆட்டங்களில் இந்தியாவும், ஒரு ஆட்டத்தில் இத்தாலியும் வென்றுள்ளன.

    ஐதராபாத்:

    16-வது பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது.

    வீராங்கனை நவ்னீத் கவுர் இந்த போட்டிக்கான தகுதி சுற்று ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் முறையே இங்கிலாந்து, இத்தாலியும், 'பி' பிரிவில் இந்தியா, ஸ்காட்லாந்தும் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தன. இந்த போட்டியில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் இரு தகுதி சுற்றிலும் (சாண்டியாகோ, ஐதராபாத் சுற்று) 4-வது இடம் பிடிக்கும் அணிகளில் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் அணியும் நேரடியாக தகுதி பெறும்.

    இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் அரைஇறுதியில் இந்தியா- இத்தாலி அணிகள் சந்திக்கின்றன.

    சலிமா டேடே தலைமையிலான இந்திய அணி லீக்கில் 2 வெற்றி (உருகுவே. வேல்சுக்கு எதிராக). ஒரு டிராவுடன் (ஸ்காட்லாந்துடன்) 7 புள்ளிகள் பெற்றது. இதேபோல் 7 புள்ளிகள் எடுத்த ஸ்காட்லாந்தை கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் பின்னுக்கு தள்ளிய இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்ததுடன், தரவரிசை முன்னிலை அடிப்படையில் உலகக் கோப்பை வாய்ப்பையும் உறுதி செய்தது.

    உலக தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இந்திய அணி தனது வெற்றி உத்வேகத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. சூப்பர் பார்மில் இருக்கும் முன்கள வீராங்கனை நவ்னீத் கவுர் 4 கோல்கள் அடித்து நடப்பு தொடரில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

    இத்தாலி அணி ஒரு தோல்வி (இங்கிலாந்துக்கு எதிராக), ஒரு வெற்றி (ஆஸ்திரியா). ஒரு டிராவுடன் (தென்கொரியாவுடன்) 4 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடத்தை பெற்றது. தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள அந்த அணி பெடெரிகா கார்ட்டாவின் தாக்குதல் ஆட்டத்தையே அதிக நம்பி இருக்கிறது. அவர் இதுவரை 3 கோல் அடித்து இருக்கிறார்.

    இந்திய அணிக்கு உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் ஆடுவது கூடுதல் பலமாகும். 2012-ம் ஆண்டு முதல் இவ்விரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் இந்தியாவும், ஒரு ஆட்டத்தில் இத்தாலியும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. அதனால் இன்றயை ஆட்டத்திலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் சூர்ட் மரினே கூறுகையில்,'உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவது இந்த அணிக்கு ஒரு முக்கியமான மைல்கல். நடப்பு தொடரில் வீராங்கனைகள் இதுவரை செயல்பட்ட விதத்திற்கு நிறைய பாராட்டுகளை பெற தகுதியானவர்கள். லீக் சுற்றில் நமது வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதே நேரத்தில் எங்கள் மனநிலை தெளிவாக உள்ளது. உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவதற்காக மட்டும் நாங்கள் இங்கு வரவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து முன்னேற்றம் காண்பதுடன், சாம்பியன் பட்டத்தை வெல்லவும் விரும்புகிறோம். அரைஇறுதி ஆட்டம் மற்றொரு பெரிய சவாலாகும். அதனை நாங்கள் முழு கவனத்துடனும், தீவிரத்துடனும் அணுகுவோம். எங்கள் திட்டத்தை சரியாக அமல்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்' என்றார்.

    Next Story
    ×