என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மும்பை அணியில் மீண்டும் விளையாட ஆவலுடன் உள்ளேன்- ஹர்த்திக் பாண்ட்யா
    X

    மும்பை அணியில் மீண்டும் விளையாட ஆவலுடன் உள்ளேன்- ஹர்த்திக் பாண்ட்யா

    • பல காரணங்களுக்காக மும்பை அணிக்கு மீண்டும் வந்த உணர்வு மிகவும் சிறப்பானது.
    • இறுதியாக எனது முழு கிரிக்கெட் பயணமும் தொடங்கிய இடத்துக்கு திரும்பி வந்துள்ளேன்.

    மும்பை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. இதற்கான வீரர்களின் மினி ஏலம் வருகிற 19-ந் தேதி துபாயில் நடக்கிறது.

    இதற்கிடையே அணிகளில் தக்க வைக்கப்படும் வீரர்கள் மற்றும் கழற்றி விடப்படும் வீரர்களின் விவரங்களை அந்தந்த அணி நிர்வாகங்கள் அறிவித்தது.

    குஜராத் அணி கேப்டனான ஹர்த்திக் பாண்ட்யாவை வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இதன்மூலம் மும்பை அணியில் ஹர்த்திக் பாண்ட்யா மீண்டும் இணைந்துள்ளார்.

    மும்பை அணிக்கு திரும்பியது தொடர்பாக ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி வந்துள்ளேன். பல காரணங்களுக்காக மும்பை அணிக்கு மீண்டும் வந்த உணர்வு மிகவும் சிறப்பானது. அவர்கள் என்னை 2013-ம் ஆண்டு முதல் கவனித்து வருகிறார்கள். இறுதியாக எனது முழு கிரிக்கெட் பயணமும் தொடங்கிய இடத்துக்கு திரும்பி வந்துள்ளேன். அவை என் வாழ்வின் முக்கியமான பகுதியாக இருந்தன.

    நான் என் வீட்டுக்கு திரும்பியது போல் உணர்கிறேன். நாம் ஒரு அணியாக வரலாற்றை உருவாக்கினோம். மீண்டும் ஒருமுறை மும்பை அணி வீரர்களுடன் சில அற்புதமான தருணங்களை உருவாக்க எதிர்பார்த்து இருக்கிறேன். மும்பை அணியில் மீண்டும் விளையாட ஆவலுடன் உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் கூறும் போது, குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரசிகர்கள், அணி மற்றும் நிர்வாகத்துக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அணியின் ஒரு பகுதியாக இருப்பதும், அதை வழிநடத்துவதும் ஒரு முழுமையான கவுரவமாகும். எனது குடும்பத்தினருக்கும், எனக்கும் ஒரு வீரராகவும், தனிநபராகவும் கிடைத்த அன்பு, ஊக்கத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    குஜராத் அணியுடனான நினைவுகளும், அனுபவங்களும் என் இதயத்தில் என்றென்றும் ஒரு சிறப்பு இடத்தை பிடிக்கும். மறக்க முடியாத பயணத்துக்கு நன்றி" என்றார்.

    ஹர்த்திக் பாண்ட்யா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பிறகு கடந்த ஆண்டு புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த அவர் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

    குஜராத் அணி தனது முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×