என் மலர்
விளையாட்டு
- ஸ்டீவ் ஸ்மித்- க்ரீன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தனர்.
- இறுதியில் ஆஸ்திரேலிய அணி 38.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மெல்போர்ன்:
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகின்றன. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று காலை மெல்போர்ன் நகரில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் பர்ட்லெட் பந்து வீச்சில் வெஸ்ட்இண்டீஸ் திணறியது. அவரது பந்தில் அத்தானாஸ் (5 ரன்), கிரீவ்ஸ் (1), கேப்டன் ஷாய்ஹோப் (12) ஹாட்ஜ் (11), ஆகியோர் அவுட் ஆனார்கள். இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 59 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது.
இதனையடுத்து ரோஸ்டன் சேஸ்- கீசி கார்டி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். இருவரும் அரை சதம் விளாசினார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது. ரோஸ்டன் சேஸ் 59 ரன்னிலும் கீசி கார்டி 88 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் 4 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய இங்கிலிஸ் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஸ்டீவ் ஸ்மித்- க்ரீன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 38.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி 4-ந் தேதி நடக்கிறது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சமர் ஜோசப்பின் சிறப்பான பந்து வீச்சால் சமநிலையில் முடிந்தது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 வடிவிளான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அடுத்து நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் சமர் ஜோசப்பின் அபார பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்த சமர் ஜோசப்பின் உரிமை ஒப்பந்தத்தை தற்போது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் சர்வதேச ரிட்டைனர் ஒப்பந்தமாக மேம்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் காரணமாக சர்வதேச அளவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச சம்பளம் சமர் ஜோசப்புக்கும் கிடைக்கும்.
அத்துடன் இந்த ஒப்பந்தத்தால் வரும் காலங்களில் வெஸ்ட் இண்டீஸ்க்காக நிறைய போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைக்கும். அதே போல 2024 டி20 உலகக் கோப்பையில் அவருடன் சேர்ந்து வேலை செய்ய உள்ளதாக பயிற்சியாளர் டேரன் சமி அறிவித்துள்ளார்.
- ரோகித் சர்மா 14 ரன்னும், சுப்மன் கில் 34 ரன்னும் ஆட்டமிழந்தனர்.
- பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார்.
விசாகப்பட்டினம்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 14 ரன்களிலும், சுப்மன் கில் களம் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயஸ் அய்யர் 27 ரன்களிலும் அவுட்டானார்.
இந்நிலையில், பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் தனது 2வது சதத்தை அடித்து அசத்தினார். தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 63 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது.
- ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்மிழந்து ஏமாற்றம் அளித்தார்.
- ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் சுப்மன் கில் 34 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்டில் விளையாடிய ஜடேஜா, கேஎல் ராகுல், முகமது சிராஜ் ஆகியோர் இந்த டெஸ்டில் இடம் பெறவில்லை.
ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஜேக் லீச், மார்க் வுட் இடம் பெறவில்லை. சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம் பிடித்தனர்.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் 15 ஓவர் வரை விக்கெட் இழக்கவில்லை. இதனால் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 18-வது ஓவரில் ரோகித் சர்மா 41 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பஷீர் அறிமுக போட்டியிலேயே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது இந்தியா 40 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து சுப்மன் கில் களம் இறங்கினார். இவர் ஜெய்ஸ்வால் உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் சுப்மன் கில் 46 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 89 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் 30-வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரிகள் விளாசி அரைசதம் கடந்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 31 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.
ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
- இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
- முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இந்திய அணியில் ரஜத் படிதார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ரஜத் படிதார் இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார்.
இந்திய அணி விவரம்:-
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யர், ரஜத் படிதார், பரத், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல், அஸ்வின், பும்ரா, முகேஷ் குமார்.
இங்கிலாந்து அணி விவரம்:-
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், ஹார்ட்லி, ஃபோக்ஸ், அகமது, பாஷீர், ஆண்டர்சன்
- சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் விளையாடி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகிவிட்டது.
- என் மேல் அன்பு காட்டுவது மனதிற்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது.
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் விளையாடி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. உலக கிரிக்கெட்டில் எத்தனையோ சாதனைகளை தனக்கு சொந்தமாக மாற்றியவர் சச்சின் டெண்டுல்கர்.
இந்நிலையில் தனது பெயர் பொறித்த ஜெர்சி அணிந்து ஸ்கூட்டரில் சென்ற ரசிகரை சச்சின் சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் சச்சின் பகிர்ந்துள்ளார்.
என் மேல் அன்பு காட்டுவது மனதிற்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது. எதிர்பார்க்கபடாத இடங்களில் இருந்து கிடைக்கும் அளவற்ற அன்பு வாழ்க்கைக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
அந்த வீடியோவில், சச்சின் காரில் எங்கேயோ சென்று கொண்டிருந்தபோது, முன்னால் பைக்கில் சச்சின் பெயருடன் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிந்து கொண்டு ரசிகர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த சச்சின் அந்த ரசிகரை சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக பின் தொடர்ந்து சென்று அவரை நிறுத்தி விமான நிலையத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டார்.
சச்சினை பார்த்த உடன் அந்த ரசிகர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார். உங்களிடம் பேசி அறிமுகமாக வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு. உங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கூறினார். மேலும் சச்சின் அந்த ரசிகரை ஹெல்மெட் அணிந்து சென்றதற்கு வாழ்த்துக்கள். நல்ல முடிவு என்று கூறினார். மேலும் அந்த ரசிகர் சச்சினில் புகைப்படங்களை தனது டைரியில் வைத்திருந்ததை எடுத்து காட்டினார்.
அதை பார்த்த சச்சின் அந்த ரசிகருக்கு ஒரு ஆட்டோகிராபையும் போட்டுக் கொடுத்தார். பிறகு இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது அந்த ரசிகர் என் வாழ்நாளில் என்னுடைய கடவுளை நான் நேரில் பார்த்து விட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார். நீங்கள் என்னுடைய ஜெர்சியை அணிந்து கொண்டிருந்தீர்கள். அதை பார்த்தது தான் நான் உங்களை நிறுத்தினேன் என்று கூறி அந்த ரசிகருக்கு சப்ரைஸ் அளித்தார்.
மேலும் அந்த வீடியோவில் நான் காரில் சீட் பெல்ட் அணிந்து இருக்கிறேன். அவன் ஹெல்மெட் அணிந்திருக்கிறார். இதேபோன்று போக்குவரத்து விதியை நாம் அனைவரும் பாலோ செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
- அஸ்வின் தற்போது வரை 96 போட்டிகளில் விளையாடி 496 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- அஷ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால் குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 முதல் 8 விக்கெட்டுகள் வரை எடுத்தால் 5 சாதனைகளை படைப்பார். அஸ்வின் தற்போது வரை 96 போட்டிகளில் விளையாடி 496 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நாளை போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரரான பகவத் சந்திரசேகரின் (95 விக்கெட்டுகள்) சாதனையை அஸ்வின் (93 விக்கெட்டுகள்) முறியடிப்பார்.
4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 97 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஏற்படுத்துவார். முன்னதாக இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் அனில் கும்ப்ளே 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை கடந்த 2006 -ம் ஆண்டு கைப்பற்றினார்.
அஷ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிவிட்டால் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த 9-ஆவது வீரர் என்ற சாதனையை அவர் ஏற்படுத்துவார்.
இதேபோன்று இந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் 5 விக்கெட்டுகளை அஸ்வின் (தற்போது வரை 34 முறை) கைப்பற்றினால் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே (35 முறை) சாதனை தகர்ப்பார்.
7 விக்கெட்டுகளை கைப்பற்றினால் இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2-வது வீரர் அஸ்வின்(93) ஆவார். முதல் இடத்தில் ஆண்டர்சன் (139 விக்கெட்டுகள்) உள்ளார்.
8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை எடுத்த கும்ப்ளேவை (350) பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை அஸ்வின்(343) பிடிப்பார்.
- முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட காயத்தால் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் விலகினர்.
- இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
மும்பை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ளது.
முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட காயத்தால் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் விலகினர். இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியிலும் ஜடேஜா விலக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை.
இவரை தவிர மற்றொரு வீரரான முகமது சமி காயம் காரணமாக முதல் 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவது தகவல் வெளியாகி உள்ளது.
- 17-வது ஐ.பி.எல். டி20 போட்டிக்கான அட்டவணை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
- 27 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை பதிவு செய்வதற்கு சமர் ஜோசப் முக்கிய பங்காக இருந்தவர்.
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது. 17-வது ஐ.பி.எல். டி20 போட்டிக்கான அட்டவணை இதுவரை அறிவிக்கப்படவில்லை. பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) போட்டி அட்டவணையை அறிவிக்க முடியாமல் இருக்கிறது.
இந்த ஐபிஎல் சீசனில் கழற்றி விடப்பட்ட வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தற்போதைய நாயகனாக வலம் வரும் சமர் ஜோசப்பை ஆர்சிபி அணி வாங்குவதற்கு திட்டம் தீட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024-ம் ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியால் ஏலம் எடுக்கப்பட்ட டாம் கரண் காயம் காரணமாக விளையாடமுடியாத சூழல் இருப்பதால் அவருக்கு பதிலாக ஜோசப்பை எடுக்க ஆர்சிபி திட்டம் தீட்டியுள்ளது.
27 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை பதிவு செய்வதற்கு சமர் ஜோசப் முக்கிய பங்காக இருந்தவர். அவர் அந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ரோகித் சர்மா ஒரு ஜாம்பவான் வீரர் என்பதில் சந்தேகமில்லை.
- முதல் போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்காது.
லண்டன்:
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் இந்தியா தோல்வியடைந்திருக்காது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய டெஸ்ட் அணி விராட் கோலியின் கேப்டன்சியை பெரிதும் இழந்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்காது. ரோகித் சர்மா ஒரு ஜாம்பவான் வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் தற்போது செயலிழந்து விட்டதாக உணர்கிறேன்.
மேலும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மிகமிக சராசரியாக இருந்ததாக நான் கருதுகிறேன். களத்தில் அவர் சரியான திட்டங்களை தீட்டியதாகவோ அல்லது பந்து வீச்சு மாற்றங்களில் முனைப்புடன் இருந்ததாகவோ எனக்கு தெரியவில்லை.
என்று வாகன் தெரிவித்தார்.
- நான் எப்போதும் கோலி பேட்டிங் செய்யும் போது வலைகளுக்குப் பின்னால் இருந்து கவனித்து வருகிறேன்.
- குறிப்பாக பேட்டிங் செய்யும் போது அவரது கால் நகருவது மற்றும் உடல் அசைவுகளை நான் கவனிக்கிறேன்.
விசாகப்பட்டினம்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
இதனை தொடர்ந்து இரு அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் விராட் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. மேலும் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா காயம் காரணமாக விலகி உள்ள நிலையில் அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் ஆகியோர் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.
இதனால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட ராஜத் பட்டிதாருக்கு இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி போல பேட்டிங் செய்ய கற்றுக் கொண்டிருக்கிறேன் என பட்டிதார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எப்போதும் கோலி பேட்டிங் செய்யும் போது வலைகளுக்குப் பின்னால் இருந்து கவனித்து வருகிறேன். குறிப்பாக பேட்டிங் செய்யும் போது அவரது கால் நகருவது மற்றும் உடல் அசைவுகளை நான் கவனிக்கிறேன். இந்த விஷயங்களை கற்று எனது பேட்டிங்கில் சேர்க்க முயற்சிக்கிறேன்.
உள்நாட்டு சுற்றுகளில் பல இந்திய வீரர்களுடன் நான் விளையாடியுள்ளேன். கடந்த இரண்டு தொடர்களில் இருந்து ராகுல் சாருடன் உரையாடி வருகிறேன். நான் ரோகித் பாயுடன் அதிகம் பேசவில்லை. ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் நான் அவருடன் பேட்டிங் பற்றி பேச நேர்ந்தது. வலைகளில் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இவை அனைத்தும் எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
என்று படிதார் கூறினார்.
- இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
- விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார்.
இந்தியா -இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ்.பாரத் ஆந்திர கிரிக்கெட் சங்கத்தால் கவுரவிக்கப்பட்டார்.
அவர் தனது சொந்த ஊர் மைதானத்தில் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியதால் கௌரவிக்கப்பட்டுள்ளார். சொந்த ஊர் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மாநிலத்தின் இரண்டாவது கிரிக்கெட் வீரர் பரத் ஆவார்.

விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார். 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி நடந்தபோது, அந்த போட்டியில் கே.எஸ்.பாரத் பால் யாயாக (Ball boy) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு முன்னர் இரு ஆந்திர வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். அவர்கள் விஹாரி, எம்எஸ்ஏகே பிரசாத் ஆகியோர் ஆவர்.






