என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இலங்கை அணி டி20 உலக கோப்பையை வென்ற போது அந்த அணியில் இடம் பிடித்திருந்தவர்.
    • 13 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடி வந்தவர்.

    இலங்கையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான திரிமன்னே கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    34 வயதாகும் திரிமன்னே இலங்கையில் உள்ள அருணாநாதபுரம் என்கிற பகுதியில் காரில் நண்பர்களுடன் யாத்திரைக்கு சென்றபோது எதிரே வந்த லாரியின் மீது அவரது கார் மோதி இருக்கிறது. இதனால் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இலங்கை அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு அறிமுகமான லஹிரு திரிமன்னே இதுவரை அந்த அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகள், 127 ஒருநாள் போட்டிகள் மற்றும் 26 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். மூன்று வகையான இலங்கை அணியிலும் இடம்பெற்று விளையாடி வந்த திரிமன்னே கடந்த 2014-ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலக கோப்பையை வென்ற போது அந்த அணியில் இடம் பிடித்திருந்தவர். அதோடு மட்டுமில்லாமல் இரண்டு முறை இலங்கை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் போதும் அந்த அணியில் இடம் பிடித்து விளையாடி இருந்தார்.

    கடந்த 13 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடி வந்த அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எவ்வித போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் இருந்த வேளையில் கடந்த ஜூலை மாதம் தான் ஓய்வினையும் அறிவித்திருந்தார்.

    ரிஷப் பண்டிற்கு அடுத்து தற்போது திரிமன்னே மிகவும் மோசமான விபத்தினை சந்தித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரபல ஆஸ்திரேலியா வீரர் ஆண்ட்ரு சைமன்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • வாட்சன் தலைமை பயிற்சியாளராக இருக்க இதுவரை யாருக்கும் வழங்காத தொகை கொடுக்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தது.
    • பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்கான குயட்டா கிளாடியட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக வாட்சன் இருக்கிறார்.

    கராச்சி:

    கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிய பிறகு பயிற்சியாளர், கேப்டன் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டனர். அதன் பிறகு அந்த அணிக்கு நிரந்தர தலைமை பயிற்சியாளராக யாரும் நியமிக்கப்படவில்லை. முகமது ஹபீஸ் தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான ஷேன் வாட்சன் புதிய தலைமை பயிற்சிளாராக நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின.

    வாட்சன் தலைமை பயிற்சியாளராக இருக்க இதுவரை யாருக்கும் வழங்காத தொகையாக ஆண்டுக்கு ரூ.16½ கோடி சம்பளமாக கேட்டதாகவும், அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்து விட்டாலும் கூட இறுதி முடிவை எடுக்க வாட்சன் தயங்குவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் அணியினருடன் அதிக நேரம் செலவிட வேண்டியது இருப்பதாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்வதாலும், வாட்சன் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் காலஅவகாசம் எடுத்து கொள்வதாக தெரிகிறது. தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்கான குயட்டா கிளாடியட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக வாட்சன் இருக்கிறார்.

    • முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.

    பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த 23-ம் தேதி துவங்கியது. ஐந்து அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

    லீக் பிரிவின் கடைசி போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே குவித்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது.

    லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3-வது இடத்திலும் உள்ளன. முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

     


    இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை (மார்ச் 15) நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மார்ச் 17-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். 

    • ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
    • இத்தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் அன்டோன்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 24-22 என முதல் செட்டைக் கைப்பற்றினார். 2வது செட்டை 21-11 என சென் இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது சுற்றில் பின்தங்கி இருந்த லக்ஷயா சென் கடுமையாக போராடினார்.

    இறுதியில், லக்ஷயா சென் 24-22, 11-21, 21-14 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    • ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தென் கொரியாவின் செ யங்குடன் மோதினார்.

    இதில் பிவி சிந்து 19-21, 11-21 என நேர் செட்களில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றவர். எம்.ஐ-ல் ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவியை நீட்டிக்க வேண்டும்
    • ஹார்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும்.


    இந்தியன் பிரீமியர் லீக் போட்டிவருகிற 22 முதல் மே- 26 வரை நடைபெறுகிறது.இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி 2024-க்கு முன் அந்த அணியில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.மும்பை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹார்திக் பாண்டியாவைகேப்டனாக நியமித்து உள்ளது.

    ஐபிஎல் பட்டத்தை வென்றவர் ரோஹித் சர்மா. இந்த அறிவிப்பிற்கு பிறகு எம்.ஐ.ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கேப்டனை மாற்றும் உரிமையாளரின் முடிவை கண்டித்தனர்.இதே போல் முன்னாள் இந்திய மற்றும் எம்.ஐ ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கும் கருத்து தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-

    ரோஹித் சர்மா 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றவர். எம்.ஐ-ல் ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவியை நீட்டிக்க வேண்டும். மேலும் ஹார்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும்.

    தற்போது ரோஹித் இந்திய அணியை வழிநடத்தி சிறப்பாக விளையாடி வருகிறார்.ரோஹித் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கிறார், இன்னும் சிறப்பாக விளையாடுகிறார்.ஐபிஎல் 2024 -க்கு முன் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய எம்ஐ முடிவு கண்டிக்கதக்கது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.
    • மெத்வதேவ் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவை தோற்கடித்தார்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், இங்கிலாந்தின் பென் ஷெல்டனுடன் மோதினார். இதில் சின்னர் 7-6 (7-4), 6-1 என கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் மெத்வதேவ், ஹோல்ஜர் ரூனேவும் மோத உள்ளனர்.

    • மும்பை - தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் விளையாடினார்
    • அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 95 ரன்கள் எடுத்தார்

    இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற 2-வது தேசிய போட்டியின் போது முதுகு வலி ஏற்பட்டதாக ஷ்ரேயாஸ் ஐயர் தொடரின் மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து விலகினார்.

    பின்னர், மும்பை - தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் விளையாடினார். அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 95 ரன்கள் எடுத்தார்.

    அதன் பிறகு, ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் மோதின. அப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    அப்போட்டியின் 4 மற்றும் 5-ம் நாட்களில், முதுகு வலி காரணமாக ஷ்ரேயாஸ் விளையாடவில்லை. முதுகு வலி காரணமாக கடந்த ஆண்டு அவர் அறுவை சிகிக்சை செய்திருந்தார்.

    இந்நிலையில், முதுகு வலி காரணமாக வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ், முதல் சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருது பெற்றார்.
    • ஜெய்ஸ்வால் இந்த தொடரில் 2 இரட்டை சதம் உள்பட மொத்தம் 712 ரன்கள் குவித்தார்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இந்த தொடரில் 2 இரட்டை சதம் அடித்தார். 5 டெஸ்டில் மொத்தம் 712 ரன்கள் குவித்தார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்து அணி கடைபிடித்து வருகிறது. நியூசிலாந்து முன்னாள் கேப்டன் மெக்கலம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இது பேஸ்பால் யுக்தி என அழைக்கப்படுகிறது.

    இதற்கிடையே, ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடியதற்காக எங்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும் என இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்திருந்தார்.

    அவரது இந்த மட்டமான கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டிவி வர்ணனையாளருமான நாசர் உசேன், ஜெய்ஸ்வால் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளர்ப்பில் இருந்தே ஆக்ரோஷமாக ஆடுவதை கற்றுக் கொண்டார் என தக்க பதிலடி கொடுத்தார்.

    இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், எங்கள் அணியில் ரிஷப் பண்ட் என்று ஒருவர் இருக்கிறார். அவரது அதிரடியான ஆட்டத்தை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். ஒருவேளை ரிஷப் பண்ட் விளையாடுவதை பென் டக்கெட் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை என்றார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக ஜெய்ஸ்வால் முதல் முறையாக வாய் திறந்துள்ளார். அவர் கூறியதாவது:

    நான் அதைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்தேன். கடந்த 9 மாதத்தில் என்னுடைய பேட்டிங் முன்னேற்றத்துக்கு கேப்டன ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்தான் காரணம்.

    வீரர்களின் அறையில் ரோகித் சர்மா இருப்பது மிகவும் நன்மையாகும். அவரது தலைமையின் கீழ் விளையாடியது சிறப்பாக இருந்தது. அவரிடம் இருந்து நான் நிறைய கற்று வருகிறேன். நான் இந்த இருவரிடமும் நிறைய பேசி இருக்கிறேன். அவர்களது ஆலோசனை பெரிதும் உதவியது என தெரிவித்தார்.

    • ஐபிஎல் 2023 சீசனின் முடிவில் டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2024 சீசனில் விளையாட போகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனையொட்டி தாமதமாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்த நிலையில் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அவர் பேட்டிங் செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    ஐபிஎல் 2023 சீசனின் முடிவில் டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு பெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2024 சீசனில் விளையாட போகிறேன் என்று அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக என் மீது அன்பை பொழியும் ரசிகர்களுக்கு நான் அளிக்கும் பரிசு இது என்று அப்போது அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் கேப்டன் டோனியின் ஓய்வு குறித்து தென் ஆப்ரிக்க அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருது தெரிவித்துள்ளார்.

    அதில், இந்த ஐபிஎல் தொடர் தான் டோனியின் கடைசி தொடராக இருக்குமோ? அதை யார் அறிவார். டோனி ஒரு டீசல் எஞ்சினை போன்றவர். அது எப்படி முடிவில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறதோ அப்படியே டோனியும் இருக்கிறார். அவர் என்ன ஒரு அற்புதமான வீரர். என்ன ஒரு அற்புதமான கேப்டன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த போட்டியில் அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் எம்மா நவாரோவுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 3-6, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் எம்மாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் எம்மா நவாரோ, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதுகிறார்.

    • விதர்பா 2வது இன்னிங்சில் 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • மும்பை அணியின் தனுஷ் கோடியான் 4 விக்கெட் வீழ்த்தினர்.

    மும்பை:

    ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவருகிறது. இதில் மும்பை, விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 75 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா 46 ரன்னும், லால்வாணி 37 ரன்னும் எடுத்தனர்.

    விதர்பா சார்பில் யாஷ் தாகூர், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் எடுத்தார்.

    மும்பை சார்பில் தவால் குல்கர்னி, தனுஷ் கோட்யான், ஷாம்ஸ் முலானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி 2வது இன்னிங்சில் 418 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷீர் கான் 136 ரன்னும், ஷ்ரேயஸ் அய்யர் 95 ரன்னும், ரகானே 73 ரன்னும், ஷம்ஸ் முலானி 50 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    விதர்பா சார்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டும், யாஷ் தாகூர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 538 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. 4வது நாள் ஆட்டத்தில் விதர்பா அணி நிதானமாக ஆடியது.

    அதர்வா டைட் 32 ரன்னும், துருவ் ஷோரே 28 ரன்னும், அமன் மொகாடே 32 ரன்னும், யாஷ் ரதோட் 7 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    5-வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன், அக்ஷய் வடேகர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. 90 ரன்கள் சேர்த்த நிலையில் கருண் நாயர் 74 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து ஆடிய வடேகர் அரை சதமடித்தார்.

    நான்காம் நாள் முடிவில் விதர்பா 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. வடேகர் 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில, இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. பொறுமையாக ஆடிய விதர்பா வீரர்கள் உணவு இடைவேளை வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

    வடேகர் சதமடித்து 102 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹர்ஷ் துபே 67 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், விதர்பா அணி 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி

    42-வது முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது முஷீர் கானுக்கும், தொடர் நாயகன் விருது தனுஷ் கோடியானுக்கும் அளிக்கப்பட்டது.

    ×