என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் இந்த சீசனின் முதல் போட்டியில் மோதுகின்றன.
    • புகைப்படம், வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஐ.பி.எல். துவக்க விழாவை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாட இருக்கின்றன.

    விரைவில் ஐ.பி.எல். தொடர் துவங்க இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் அதற்கான பயிற்சியை துவங்கியுள்ளன. இது தொடர்பாக அந்தந்த அணிகள் சார்பில் புகைப்படம், வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.


     

    அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஐ.பி.எல். தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னை வந்தடைந்தார். இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

    பதிவில் புகைப்படத்துடன் ரவீந்திர ஜடேஜாவை குறிக்கும் வகையில் 'ராஜா இங்கு கைப்பற்ற இருக்கிறார்,' என தலைப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் ரவீந்திர ஜடேஜாவின் புகைப்படமும் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • கார்லோஸ், ஜானிக் சின்னர் ஆகியோர் காலிறுதியில் வென்றனர்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே

    மோதினார். இதில் மெத்வதேவ் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார். இதில் கார்லோஸ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் நாட்டின் ஜிரி லெஹெகாவுடன் மோதினார். இதில் சின்னர் 6-3, 6-3 என கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் சின்னரும், கார்லோசும் மோத உள்ளனர்.

    • இது மல்யுத்தம் அல்லது வேறு எந்த தனிப்பட்ட விளையாட்டு இல்லை.
    • அந்த தொடரில் யுவராஜ் சிங் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    2011 ஒருநாள் உலகக் கோப்பையை எம்எஸ் டோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த உலகக் கோப்பை தனி ஒருவரால் பெற்றதில்லை என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது மல்யுத்தம் அல்லது வேறு எந்த தனிப்பட்ட விளையாட்டு இல்லை. ஒருவரால் ஒரு போட்டியை வெல்ல முடியாது. அந்த தொடரில் யுவராஜ் சிங் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் ரன்களை எடுத்தார். ஜாகீர் கான் 21 விக்கெட்டுகளை எடுத்தார். கம்பீர் 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ல் ரன்களை அடித்தார். டோனி 2011 இறுதிப் போட்டியில் ரன்களை அடித்தார்.

    எனவே இது ஒரு அணி வெற்றியாகும். பேட்டர்களில் குறைந்தது மூன்று பேர் ஃபார்மில் இருக்க வேண்டும். குறைந்தது இரண்டு பந்து வீச்சாளர்களாவது விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கிறது. அது ஒரு டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 ஆக கூட இருக்கலாம். ஒரு வீரரால் உங்கள் போட்டிகளை வெல்ல முடியாது.

    இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

    இதே போல ஒருவரால் மட்டுமே வெற்றி கிடைக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர டோனிக்கு எதிரான பல கருத்துக்களை கம்பீர் கூறியுள்ளார்.

    • சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை, இந்தோனேஷியாவின் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா உடன் பலப்பரீட்சை நடத்தியது.
    • 16-21, 15-21 என்ற செட் கணக்கில் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா இணையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினர்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரவில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டமான ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை, இந்தோனேஷியாவின் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா உடன் பலப்பரீட்சை நடத்தியது.

    இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை 16-21, 15-21 என்ற செட் கணக்கில் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா இணையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினர்.

    • 2015-ல் பும்ராவை மும்பை விடுவிக்க விரும்பிய போது அதை ரோகித் நிராகரித்தார்.
    • இதேபோல 2016-ல் பாண்ட்யாவை மும்பை விடுவிக்க விரும்பிய போது அதையும் ரோகித் நிராகரித்தார்.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துவிட்டன. 17-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 22-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். கோப்பையை அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தலா 5 தடவை கைப்பற்றியுள்ளன. சென்னை அணிக்கு டோனியும், மும்பை அணிக்கு ரோகித் சர்மாவும் 5 முறை கோப்பையை பெற்றுக் கொடுத்தனர்.

    இந்த ஐ.பி.எல் . சீசனில் மும்பை அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இல்லை. அவரை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்து மும்பை இந்தியன்ஸ் ஆகியவை அணிக்காக ஆடிய விக்கெட் கீப்பர் பார்தீவ் படேல் மனம் திறந்து உள்ளார்.

    பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை மும்பை அணி விடுவிக்க விரும்பிய போது அவர்களுக்கு ஆதரவாக ரோகித் சர்மா இருந்தார் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்த்தீவ் படேல் கூறியதாவது:- 

    ரோகித் சர்மா எப்போதுமே வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார். அதற்கு மிகப்பெரிய உதாரணம், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆவார்கள். பும்ரா 2014-ம் ஆண்டு முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார். 2015-ல் அவர் முதல் சீசனை விளையாடிய போது சிறப்பாக அமையவில்லை.

    இதனால் அவரை விடுவிக்க மும்பை அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அந்த வீரர் பிரகாசிப்பார். இதனால் அவரை அணியில் தொடர்ந்து வைத்து இருக்க வேண்டும் என்று பும்ராவுக்கு ஆதரவாக ரோகித் சர்மா தெரிவித்தார். அதற்கான பலனை நாங்கள் அடுத்த சீசனில் பார்த்தோம். பும்ரா அபாரமாக பந்து வீசினார்.

    இதே நிலைதான் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் இருந்தது. 2015-ல் இணைந்தார். 2016-ல் அவருக்கு மோசமாக இருந்தது. அவரை நீக்க மும்பை அணி விரும்பியது. அப்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக ரோகித்சர்மா செயல்பட்டார்.

    இவ்வாறு பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

    குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல்லில் அறிமுகமானபோது ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியில் இருந்தது. குஜராத்துக்கு கேப்டன் ஆனார். குஜராத் அணி முதல் சீசனிலேயே கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை நுழைந்தது. தற்போது இந்த சீசனில் அங்கிருந்து மீண்டும் மும்பை அணிக்கு மாற்றமாகி கேப்டனாக பணியாற்ற உள்ளார்.

    • இங்கிடிக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரை வாங்கி உள்ளது.
    • ஆஸ்திரேலிய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகிறது. 23-ந் தேதி இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரும் டெல்லி அணி வீரருமான லுங்கி இங்கிடி விலகி உள்ளார். இவருக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கை டெல்லி அணி வாங்கியுள்ளது. இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். 

    இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் 1 பவுண்டரி விளாசினார்.

    டெல்லி அணியில் இருந்து ஏற்கனவே ஹாரி ப்ரூக் சொந்த காரணங்களுக்காக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது

    • கோழிக்கோடு அணி தனது கடைசி ஆட்டத்தில் அகமதாபாத்தை 17-ந் தேதி எதிர் கொள்கிறது.
    • பெங்களூரு அணி கடைசி ஆட்டத்தில் மும்பையுடன் நாளை மோதுகிறது.

    சென்னை:

    3-வது பிரைம் கைப்பந்து 'லீக்' போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதன் 'சூப்பர் 5' சுற்றுக்கு நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபென்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், மும்பை மீட்டியார்ஸ், டெல்லி டூபான்ஸ், கோழிக்கோடு ஹீரோஸ் ஆகியவை தகுதி பெற்றன.

    'சூப்பர் 5' சுற்று கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்களூர்- கோழிக்கோடு அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கோழிக்கோடு அணி 18-16, 16-14, 8-15, 11-15, 15-10 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றது.

    கோழிக்கோடு அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே மும்பையை 3-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. டெல்லியிடம் தோற்று இருந்தது.

    கோழிக்கோடு அணி தனது கடைசி ஆட்டத்தில் அகமதாபாத்தை 17-ந் தேதி எதிர் கொள்கிறது.

    பெங்களூர் அணிக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது. அந்த அணி ஏற்கனவே டெல்லியிடம் தோற்று இருந்தது. அகமதாபாத்தை வென்று இருந்தது. பெங்களூரு அணி கடைசி ஆட்டத்தில் மும்பையுடன் நாளை மோதுகிறது.

    முன்னதாக நடந்த ஆட்டத்தில் மும்பை அணி 15-8, 13-15, 7-15, 16-14, 15-13 என்ற செட் கணக்கில் போராடி நடப்பு சாம்பியன் அகமதாபாத்தை வீழ்த்தியது. மும்பை அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது. அகமதாபாத் அணி 2-வது தோல்வியை தழுவியது.

    இன்று நடைபெறும் ஆட்டத்தில் அகமதாபாத்-டெல்லி அணிகள் மோதுகின்றன. சூப்பர் 5 சுற்றில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.

    இதில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாடும். 2-வது 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதும்.

    • ஒரு காலிறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கை இகா ஸ்வியாடெக் டென்மாரிக்கின் கரோலின் வோஸ்னியாக்கி உடன் மோதினார்.
    • முதல் செட்டை 6-4 என இகா ஸ்வியாடெக் கைப்பற்றினார்.

    கலிபோர்னியா:

    இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு காலிறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கை இகா ஸ்வியாடெக் டென்மாரிக்கின் கரோலின் வோஸ்னியாக்கி உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-4 என இகா ஸ்வியாடெக் கைப்பற்றினார். இதையடுத்து நடைபெற்ற 2வது செட்டில் 1-0 என ஸ்வியாடெக் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக கரோலின் வோஸ்னியாக்கி வெளியேறினார். இதன் மூலம் ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப் சீனாவின் யுவான் யுஇ உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோகோ காப் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் யுவான் யுஇ-யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உங்கள் முடிவில்லாத ஆதரவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    • நீங்கள் கால்பந்தில் ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்கியுள்ளீர்கள்.

    ஆஸ்திரேலிய தொழில்முறை கால்பந்து வீரர் ஜோசுவா ஜான் கேவல்லோ. இவர் ஏ லீக் மென் கிளப் அடிலெய்டு யுனைடெட்டின் மத்திய மிட்பீல்டராக விளையாடுகிறார். இவர் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார்.

    ஏனென்றால் இவர் தனது திருமணம் குறித்த தகவலை எக்ஸ் தள பதிவில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் யாருமே இல்லாத கிளப் அடிலெய்டு யுனைடெட் ஆடுகளத்தில் தனது வருங்கால பார்ட்னரிடம் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக முட்டிக்கால் போட்டு ப்ரபோஸ் செய்தார். உடனே லெய்டன் வெட்கத்துடன் முகத்தை மூடி கொண்டார்.

    மேலும் என் வருங்கால மனைவியுடன் இந்த ஆண்டு தொடங்குகிறது. இந்த ஆச்சரியத்தை ஏற்படுத்த உதவிய அடிலெய்டு யுனைடெட் நிறுவனத்திற்கு நன்றி. 

    உங்கள் முடிவில்லாத ஆதரவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் கால்பந்தில் ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்கியுள்ளீர்கள். இது சாத்தியம் என்று நான் கனவிலும் நினைக்காத ஒன்று. மேலும் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் உண்மையாக வாழ ஊக்குவித்தேன்.

    இந்த சிறப்பு தருணத்தை ஆடுகளத்தில் பகிர்ந்து கொள்வது சரியாக இருந்தது.

    இவ்வாறு எக்ஸ் தளத்தில் கூறினார்.

    ஆண்கள் கால்பந்து வீரர்கள் மறைமுகமாக ஓரினசேர்க்கையாளராக இருந்த போதிலும் வெளிப்படையாக அறியப்பட்ட ஒரே ஓரினச்சேர்க்கையாளர் கேவல்லோ ஆவார். 

    • 23-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.
    • முதல் பாதியில் இன்டர் மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளைச் சேர்ந்த கிளப் அணிகளுக்கு இடையேயான கான்காகாஃப் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நாஷ்வில்லே அணி மற்றும் இண்டர் மியாமி அணிகள் மோதின.

    இந்த போட்டியில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    ஃபுளோரிடாவில் தொடங்கிய இப்போட்டியில், 7-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் போட முயற்சித்தார். ஆனால் பந்து கோல் கம்பத்துக்கு சற்று மேல் நோக்கி சென்றது. எனினும், மியாமியின் மற்றொரு வீரர் லூயிஸ் சுவாரஸ் 8-வது நிமிடத்தில் மெஸ்ஸி பாஸ் செய்து கொடுத்த பந்தை கோல் ஆக மாற்றினார்.

    அதனைத் தொடர்ந்து, 23-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் இன்டர் மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    இரண்டாம் பாதியிலும் மியாமி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில், மியாமி வீரர் ராபர்ட் டெய்லர் தலையால் அபாரமாக கோல் அடித்தார்.

    கோல் அடிக்க முடியாமல் திணறி வந்த நாஷ்வில்லே அணி, 80-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. ஆனால் முக்தார் அடித்த அந்த கோல் ஆப் சைட் கோல் என அறிவிக்கப்பட்டது.

    இறுதியாக 90+3 நிமிடத்தில் நாஷ்வில்லே அணிக்கு கோல் கிடைத்தது. அந்த அணியின் சாம் சுர்ரிட்ஜ் முதல் கோலை பதிவு செய்தார்.

    ஆட்டநேர முடிவில் இன்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் நாஷ்வில்லேவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.   

    • டெல்லி அணியால் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அணி வீரர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    • குடும்பத்தை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை.

    டெல்லி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த சீசனில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக கம்பேக் கொடுக்கவுள்ளார். நேற்று முதல் டெல்லி பயிற்சி முகாமில் இணைந்த ரிஷப் பண்ட், தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் டெல்லி அணியால் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக், வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

     

    ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். டெல்லி அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்ட போது, இந்த சீசனில் விளையாட ஆர்வமாக இருந்தேன். ஆனால் சூழ்நிலை வேறு மாதிரி அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து பின் வாங்கியதற்கு சொந்த காரணங்களை கூற வேண்டும் என்று நினைத்ததில்லை. கடந்த மாதம் எனது பாட்டி மறைந்துவிட்டார். சிறு வயதில் இருந்து எனது பாட்டியின் வீட்டில் வளர்ந்தவன், அவர் எப்போதும் எனக்கு ஒரு தூண் போல் நம்பிக்கை அளித்தவர்.

    இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அபுதாபியில் இருந்து புறப்படும் போது தான் பாட்டியின் உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனால் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தேன். தற்போது எங்களிடம் இருந்து பாட்டி மறைந்துவிட்டார். இதனால் எனது குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழலில் உள்ளேன்.

    குடும்பத்தை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதே சரியான முடிவாக கருதுகிறேன். என்னிடம் இன்னும் பல ஆண்டு கால கிரிக்கெட் மீதமிருப்பதால், வரும் காலங்களில் நிச்சயம் விளையாடுவேன். இந்த கடினமான சூழலில் எனக்கு ஆதரவாக இருந்த இங்கிலாந்து நிர்வாகம் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் இரண்டுக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன்.

    என்று ஹாரி ப்ரூக் கூறினார்.

    • இலங்கை அணி டி20 உலக கோப்பையை வென்ற போது அந்த அணியில் இடம் பிடித்திருந்தவர்.
    • 13 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடி வந்தவர்.

    இலங்கையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான திரிமன்னே கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    34 வயதாகும் திரிமன்னே இலங்கையில் உள்ள அருணாநாதபுரம் என்கிற பகுதியில் காரில் நண்பர்களுடன் யாத்திரைக்கு சென்றபோது எதிரே வந்த லாரியின் மீது அவரது கார் மோதி இருக்கிறது. இதனால் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இலங்கை அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு அறிமுகமான லஹிரு திரிமன்னே இதுவரை அந்த அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகள், 127 ஒருநாள் போட்டிகள் மற்றும் 26 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். மூன்று வகையான இலங்கை அணியிலும் இடம்பெற்று விளையாடி வந்த திரிமன்னே கடந்த 2014-ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலக கோப்பையை வென்ற போது அந்த அணியில் இடம் பிடித்திருந்தவர். அதோடு மட்டுமில்லாமல் இரண்டு முறை இலங்கை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் போதும் அந்த அணியில் இடம் பிடித்து விளையாடி இருந்தார்.

    கடந்த 13 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடி வந்த அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எவ்வித போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் இருந்த வேளையில் கடந்த ஜூலை மாதம் தான் ஓய்வினையும் அறிவித்திருந்தார்.

    ரிஷப் பண்டிற்கு அடுத்து தற்போது திரிமன்னே மிகவும் மோசமான விபத்தினை சந்தித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரபல ஆஸ்திரேலியா வீரர் ஆண்ட்ரு சைமன்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    ×