என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஹாரி புரூக்கை பின்னுக்கு தள்ளி ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறினார்.
    • நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 867 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார் .

    துபாய்:

    டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 895 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டதால், சக வீரரான ஹாரி புரூக்கை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

    ஹாரி புரூக் 876 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 867 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார் .

    ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 5வது இடத்தில் உள்ளார். இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 6வது இடத்திலும் உள்ளார்.

    இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் 4வது இடத்திலும் , ரிஷப் பண்ட் 9-வது இடத்திலும் , சுப்மன் கில் 16-வது இடத்திலும், விராட் கோலி 20வது இடத்திலும், ரோகித் சர்மா 30-வது வது இடத்திலும் உள்ளனர்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அணி அதிரடியில் மிரட்டியது.

    இறுதியில், தமிழ் தலைவாஸ் 60- 29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

    மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 41-37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. மேலும் பாட்னா பைரேட்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஏற்கனவே அரியானா ஸ்டீலர்ஸ், யுபி யோதாஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2022 ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணி 3-வது முறையாக கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது.
    • குணா திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

    2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.

    அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை தட்டிச் சென்றார்.

    மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கால்பந்து உலக கோப்பையை வென்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, FIFA உலகக்கோப்பை இன்ஸ்டா பக்கத்தில் "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல" என்ற வரிகளோடு இளையராஜா பாடலை வெளியிட்டுள்ளனர்.

    கமல் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அண்மையில் மலையாளத்தில் வெளியான 'மஞ்சுமேல் பாய்ஸ்' திரைப்படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியிருந்தனர். இதனையடுத்து இந்த பாடல் உலகம் முழுவதும் கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • எல்லா மாற்றங்களையும் நான் பார்த்துள்ளேன்.
    • ராகுல் டிராவிட் அணியில் இருந்து விடைபெற்றுள்ளார். சச்சின் தெண்டுல்கர் விடைபெற்றுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனதும், ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    ஓய்வு பெற்ற அஸ்வின் வீரர்கள் அறையில் கடைசியாக உணர்ச்சிவசப்படும் வகையில் சக வீரர்களுடன் பேசினார்.

    அப்போது அஸ்வின் கூறியதாவது:-

    உண்மையைச் சொன்னால், குழு கூட்டத்தில் பேசுவது எளிது. நான் அதை வெளிப்படுத்தவில்லை என்றாலும், இது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட தருணம். ரோகித் சர்மாவுக்கு நன்றி, விராட் கோலிக்கு நன்றி, கவுதம் கம்பீருக்கு நன்றி. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

    இந்த தொடரில் விளையாடுவதற்காக முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளதாக உணர்கிறேன். எல்லா மாற்றங்களையும் நான் பார்த்துள்ளேன். ராகுல் டிராவிட் அணியில் இருந்து விடைபெற்றுள்ளார். சச்சின் தெண்டுல்கர் விடைபெற்றுள்ளார்.

    நான் சொல்வது உண்மை தோழர்களே, ஒவ்வொருவருக்கும் நேரம் வரும். இது உண்மையான என்னுடைய நேரம். நான் இதை முழுமையாக ரசித்தேன். நான் சிறந்த நட்பை கட்டமைத்தேன். குறிப்பான கடந்த 4 முதல் 5 வருடங்களில். அன்புடன் விளையாடி வரும் என்னுடைய சில சக வீரர்களை விட்டுச் செல்கிறேன்.

    கடந்த நான்கு ஆண்டுகளில் கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் உறவை நான் எவ்வளவு மதிக்கிறேன் என்பதையும், ஒரு வீரராக அவர்களை எவ்வளவு மதிக்கிறேன் என்பதையும் உணர்ந்திருக்கிறேன். எனக்கு ஒரு நல்ல நேரம் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    மேலும், நான் வீடு திரும்ப விமானத்தில் செல்வேன். ஆனால் மெல்போர்னில் நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறீர்கள் என்பதைப் பார்க்க நான் காத்திருப்பேன். உங்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • ரஹானே இன்னும் ஓய்வு பெறவில்லை என்று ரோகித் சமாளித்தார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டி மழையால் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இதனையயடுத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் ரோகித்திடம் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த ரோகித், "நாங்கள் எப்போதும் நண்பர்களாக இருப்போம். இந்திய அணியில் இல்லாவிட்டாலும் நாங்கள் கண்டிப்பாக சந்திப்போம். ரஹானே மும்பையில் இருப்பதால் அடிக்கடி அவரை பார்ப்பேன். புஜாரா ராஜ்கோட்டில் உள்ளதால் அவரை அடிக்கடி சந்திக்க முடிவதில்லை என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே புஜாராவும் ரஹானேவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை என்பதை ரோகித் உணர்ந்தார்.

    பின்னர் பேசிய அவர், "நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஹானே இன்னும் ஓய்வு பெறவில்லை. நீங்கள் என்னைக் கொன்றுவிடுவீர்கள். புஜாராவும் ஓய்வு பெறவில்லை. உங்களின் கேள்வியால் தான் இப்படி பதில் கூறி விட்டேன்.

    இந்த நேரத்தில், மூவரும் இந்திய அணியில் இல்லை, ஆனால் அஸ்வின் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் ரஹானே மற்றும் புஜாரா இந்திய அணிக்கு திரும்பி வரக்கூடும். அவர்களுக்கான கதவு எப்போதும் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலியா, அமெரிக்க ஓபரை சின்னர் கைப்பற்றினார்.
    • பிரெஞ்ச், விம்பிள்டன் ஓபனை அல்காரஸ் கைப்பற்றினார்.

    டென்னிஸ் போட்டிகளில் மிகவும் உயரியதாக பார்க்கப்படுவது ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகும். ஆண்டுதோறும் இந்த நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும்.

    ஆஸ்திரேலியா ஓபன்

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் சின்னர், ருப்லேவ், ஜோகோவிச், பிரிட்ஸ், ஸ்வெரேவ், அல்காரஸ், கர்காஸ், மெட்வதேவ் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

    ருப்லேவ்-ஐ சின்னர் 3-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ஜோகோவிச் 3-1 என பிரிட்ஸை வீழ்த்தினார். ஸ்வெரேவ் அல்காரசை வீழ்த்தினார். மெட்வெதேவ் ஐந்து செட்கள் போராடி கர்காசை வீழ்த்தினார்.

    அரையிறுதியில் ஸ்வெரேவை் மெட்வெதேவ் கடும் போராட்டத்திற்கு பின் 3-2 என்ற செட் கணக்கில் வென்றார். ஜோகோவிச்சை 3-1 என சின்னர் விழ்த்தினார்.

    மெட்வெதேவ்- சின்னர் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். இதில் சின்னர் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    பிரெஞ்ச் ஓபன்

    மே-ஜூன் மாதங்களில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபனில் காலிறுதி போட்டிகளில் டிமிட்ரோவை 3-0 என சின்னர் எளிதாக வென்றார். ஸ்வெரேவ் 3-0 என டி. மினாயுரை வீழ்த்தினார். அல்காரஸ் டிசிட்சிபாசை 3-0 என வீழ்த்தினார். ஜோகோவிச் காயம் காரணமாக வெளியேறியதால் ரூட் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் ரூட்டை ஸ்வெரேவ் 3-1 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி போட்டியில் அல்காரஸ் 3-2 என கடும் போராட்டத்திற்குப் பின் சின்னரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    ஸ்வெரேவ்- அல்காரஸ் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். இறுதிப் போட்டி ஐந்து செட்கள் வரை நீடித்தது. இறுதியாக அல்காரஸ் 6-3, 2-6, 7-5, 6-1, 6-2 (3-2) என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    விம்பிள்டன் ஓபன்

    ஜூன்- ஜூலை மாதங்களில் நடைபெற்ற விம்பிள்டன் ஓபன் காலிறுதி போட்டிகளில் அல்காரஸ் 3-1 என டி.பாலை வீழ்த்தினார். மெட்வெதேவ் 3-2 என சின்னரை வீழ்த்தினார். பிரிட்ஸை 3-2 என முசெட்டி வீழ்த்தினார். டி. மினாயுர் காயம் காரணமாக வெளியேற ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    அரையிறுதியில் முசெட்டியை 3-0 என ஜோகோவிச் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் மெட்வெதேவை 3-1 என அல்காரஸ் வீழ்த்தினார்.

    இறுதிப் போட்டியில் அல்காரஸ்- ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினர். இதில் அல்காரஸ் 3-0 என எளிதாக வீழ்த்தினார்.

    அமெரிக்க ஓபன்

    ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் முதல் காலிறுதியில் ஸ்வெரேவை 3-1 என பிரிட்ஸ் வீழ்த்தினார். 2-வது காலிறுதியில் டிராபர் 3-0 என டி மினாயுரை வீழ்த்தினார். 3-வது காலிறுதியில் தியாஃபோ 3-1 என டிமிட்ரோவை வீழ்த்தினார். 4-வது காலிறுதியில் 3-1 என மெட்வெதேவை 3-1 என சின்னர் வீழத்தினார்.

    அரையிறுதியில் தியாஃபோவை 3-2 என பிரிட்ஸ் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் டிராப்பரை 3-0 என சின்னர் வீழ்த்தினார்.

    இறுதிப் போட்டியில் சின்னரை 3-0 என எளிதாக பிரிட்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    நான்கு கிராண்ட்ஸ்லாம்களில் சின்னர் ஆஸ்திரேலியா ஓபன், அமெரிக்க ஓபரை வென்றார். அல்காரஸ் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் ஓபனை கைப்பற்றினார்.

    • 3 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
    • 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கொண்டதாகும்.

    இந்த தொடரின் முதல் 3 போட்டிகள் முடிவில் ஒரு போட்டியில் இந்தியாவும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த போட்டி டிரா ஆனதால் இந்திய அணி, கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று, 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஆக வேண்டும். 2-2 என டிரா செய்தால் கூட, இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு குறைந்துவிடும்.

    அதாவது, 2-2 என்ற கணக்கில், தொடர் சமன் ஆனால், அடுத்து ஆஸ்திரேலியா, இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவுகளை எதிர்நோக்கி, இந்தியா காத்திருக்கும் நிலை ஏற்படும்.

    2-2 என சமன் ஆனால், இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கட்டாயமாக ஒரு வெற்றியைப் பெற்றாக வேண்டும். இந்த தொடர் இலங்கை மண்ணில்தான் நடைபெறும்.

    ஒருவேளை, ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுவார்கள்.

    • அஸ்வின் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • உறவே என் ஆசை உறவே என்ற பாடலை வைத்து வீடியோவை ஒன்றை அஸ்வின் வெளியிட்டுள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் 3 டெஸ்ட் போடிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.

    இந்த போட்டியுடன் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கிரிக்கெட்டை மையமாக கொண்ட லப்பர் பந்து படத்தில் இடம் பெற்ற உறவே என் ஆசை உறவே என்ற பாடலை வைத்து வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் கட்டியணைத்தது மட்டுமின்றி பயிற்சி செய்யும் வீடியோவும் இடம் பெற்றுள்ளது. மேலும் ரகானே, புஜாரா ஆகியோரும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    லப்பர் பந்து படம் வெளியாகிய போது இந்த படத்தை அஸ்வின் புகழ்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பிரிஸ்பேனில் நாங்கள் 450 ரன்கள் அடித்துள்ளோம்.
    • இந்தியாவை 260 ரன்னில் கட்டுப்படுத்தியுள்ளோம்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற பிங்க்-பால் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் பிரிஸ்பேனில் மோதின. ஆனால் பிரிஸ்பேனில் ஐந்து நாட்களும் விட்டுவிட்டு மழை பெய்ததால் பெரும்பாலான நேரம் வீணானது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

    ஒரு கட்டத்தில் இந்தியா பாலோ-ஆன் ஆகும் நிலை ஏற்பட்டது. பும்ரா- ஆகாஷ் தீப் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்து பாலோ-ஆன் ஆவதை தவிர்த்தது. இதனால் இந்தியாவை தொடர்ந்து பேட்டிங் செய்ய வைத்து நெருக்கடி கொடுக்க முடியாத நிலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டது.

    தோல்வியை சந்திக்க இருந்த இந்தியா போட்டியை டிரா செய்தது. போட்டி டிரா ஆன உத்வேகத்துடன் மெல்போர்னில் நடைபெற இருக்கும் 4-வது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்வோம் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

    இந்த நிலையில் பிரிஸ்பேன் போட்டி டிரா ஆனது எங்களுக்குதான் உத்வேகம் என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    உத்வேகம் (momentum) பற்றி நான் ஒருபோதும் பயந்தது கிடையாது என சொல்ல முடியாது. ஆனால் உண்மையிலேயே அது பற்றி கவலைப்பட மாட்டேன். இந்த வாரத்தில் இருந்து (பிரிஸ்பேன் டெஸ்ட்) நாங்கள் ஏராளமானவற்றை எடுத்துச் செல்ல முடியும் என நினைக்கிறேன்.

    பிரிஸ்பேன் டெஸ்டில் எங்களுக்கு இரண்டு சிறந்த பார்ட்னர்ஷிப் கிடைத்தது. புதிய ஆடுகளத்தில் 450 (445) ரன்கள் சேர்த்தோம். பின்னர் இந்தியாவை 250 (260) ரன்களில் கட்டுப்படுத்தினோம். கண்டிசன் பேட்டிங்கிற்கு சற்று கூடுதலாக ஒத்துழைப்பு கொடுத்தபோதிலும் இதைச் செய்தோம். இப்படி மெல்போர்னுக்கு எடுத்துச் செல்ல எங்களுக்கு ஏராளமான விசயங்கள் உள்ளது.

    அஸ்வின் எல்லா காலங்களிலும் சிறந்த வீரர்களில் ஒருவர்

    அஸ்வின் ஓய்வு அறிவித்த நேரம் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் உலகம் முழுவதும் ஒரு அற்புதமான வீரராக இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. அவர் அளவிற்கு நீண்ட காலத்திற்கு தலைசிறந்த ஸ்பின்னர் (finger spinners) அதிக அளவில் இருந்ததில்லை. அஸ்வின் அனைத்து காலங்களிலும் தலைசிறந்த வீரர்களில் ஒருவர்.

    அவர் சிறந்த போட்டியாளர். ஆஸ்திரேலியாவிலும், இந்தியாவிலும் அவருக்கு எதிராக நாங்கள் மிகப்பெரிய அளவில் மோதியுள்ளோம். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு எங்கள் வீரர்கள் அறையில் இருந்து மிகப்பெரிய மரியாதை.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    • 2010-ம் ஆண்டு ஒருநாள், டி20 போட்டியிலும் 2011-ம் ஆண்டில் டெஸ்ட்டிலும் அறிமுகமானார்.
    • இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் விளையாடி உள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் 3 டெஸ்ட் போடிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    அவர் இந்திய அணிக்காக 14 ஆண்டுகளாக விளையாடி உள்ளார். 2010-ம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள், டி20 போட்டியிலும் டெஸ்ட்டில் 2011-ம் ஆண்டிலும் அறிமுகமானார்.

    2010 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி வென்றதில் அஸ்வினின் பந்துவீச்சுக்கு முக்கியப் பங்கு வகித்தது. அந்தத் தொடரில் 13 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த சாதனையே அவர் இந்திய கிரிக்கெட் அணியிலும், சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட முக்கிய பங்காக அமைந்தது.

    இவர் 2011-ம் ஆண்டு இந்திய ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார். மேலும் 2016-ம் ஆண்டு சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பிசிசிஐ விருதை வென்றவர். 

    2013-ம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசி பந்தில் இங்கிலாந்து வெற்றி பெற 6 ரன்கள் தேவை. கடைசி பந்தை அஸ்வின் ஒரு ரன் கூட கொடுக்காமல் வீசி அணியை வெற்றி பெற வைப்பார். அந்த போட்டியில் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும்.

    பந்து வீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் கபில் தேவ், மனோஜ் பிரபாகர் வரிசையில் இந்தியாவின் தலைசிறந்த பவுலிங் ஆல்ரவுண்டராகத் அஸ்வின் திகழ்ந்தார்.

    2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் மறக்க முடியாத ஒரு போட்டியாகும். அந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார். இந்த போட்டியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த தொடரே அவரின் கடைசி டி20 போட்டி ஆகும்.

    2022-ம் ஆண்டுக்கு பிறகு டி20 இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2023-ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் டெஸ்ட் போட்டியில் மட்டுமே தொடர்ந்து விளையாடி வந்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக அளவில் அதிவேகமாக 250, 300, 350 விக்கெட்களைக் குவித்தவர் அஸ்வின். இந்தியர்களில் 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500 விக்கெட்களை அதிவேகமாகக் குவித்தவரும் அவரே. 37 முறை 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

    டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்கள், 14 அரை சதங்களை அடித்துள்ளார். நான்கு போட்டிகளில், சதமும் அடித்து ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். வேறெந்த இந்தியரும் இந்தச் சாதனையை நிகழ்த்தியதில்லை.

    டெஸ்ட் போட்டிகளில் 11 முறை தொடர்நாயகன் விருதை அஸ்வின் வென்றிருக்கிறார். இலங்கையின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனுடன் இந்த உலக சாதனையை அவர் பகிர்ந்துள்ளார்.

    • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.
    • அவருக்கு சக வீரர்கள் பிரியா விடை கொடுத்தனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் 3 டெஸ்ட் போடிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.

    3-வது டெஸ்ட் போட்டி டிரா என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஓய்வு அறிவித்த அஸ்வினுக்கு இந்திய வீரர்கள் மரியாதை செலுத்தினர். 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடாவில்லை. இருந்தாலும் அவரை மைதானத்துக்கு வரவழைத்து சக வீரர்களுக்கு மத்தியில் அவர் நடந்து சென்றார். பின்னர் இதனை ஏற்பாடு செய்த கேப்டன் ரோகித் சர்மாவை கட்டியணைத்து நன்றி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நீங்கள் எண்ணற்ற சந்தோஷங்களையும் பெருமையையும் இந்தியாவுக்கு கொடுத்துள்ளீர்கள்.
    • இந்திய அணியின் லெஜெண்டாக எப்போதும் நீங்கள் நினைவு கூரப்படுவீர்கள்.

    இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இந்நிலையில் அவரது ஓய்வுக்கு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    அஸ்வின் குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:- 

    பெர்த் டெஸ்டின்போதே அஷ்வினின் ஓய்வு குறித்து நான் அறிந்து கொண்டேன். பிங்க் பால் டெஸ்ட் வரையாவது விளையாடுமாறு கேட்டு கொண்டேன். இந்தியா இதுவரையில் பார்க்காத ஒரு மேட்ச் வின்னர் அஸ்வின் என கூறினார்.

    விராட் கோலி கூறியதாவது:- 

    நான் உங்களுடன் 14 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். ஓய்வை அறிவிக்கப்போகிறேன் என நீங்கள் இன்று என்னிடம் சொன்னபோது உணர்ச்சிவப்பட்டு, நாம் சேர்ந்து விளையாடிய நாட்களை நினைவு கூர்ந்தேன். இந்திய அணியின் வெற்றிகளுக்கு நீங்கள் செய்த பங்கு, உங்கள் கிரிக்கெட் திறனுக்கு ஈடு இணையே இல்லை. இந்திய அணியின் லெஜெண்டாக எப்போதும் நீங்கள் நினைவு கூரப்படுவீர்கள் என கூறினார்.

    கவுதம் கம்பீர் கூறியதாவது:-


    ஒரு இளம் பந்துவீச்சாளராக இருந்து, நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக நீங்கள் வளர்ந்ததை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. அடுத்த தலைமுறை பவுலர்கள் "அஸ்வினால்தான் நான் பவுலர் ஆனேன்" என சொல்வார்கள் என்பது எனக்கு தெரியும். உன்னை மிஸ் பண்ணுவேன் தம்பி என கூறினார்.

    சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-


    கிரிக்கெட் பந்தை வைத்து நீங்கள் செய்யும் அற்புதங்களும், தெளிவான சிந்தனையும், டெஸ்ட் கிரிக்கெட் மீதான அபரீத அன்பும் என்றும் எங்கள் உள்ளங்களில் நிலைத்திருக்கும். நீங்கள் எண்ணற்ற சந்தோஷங்களையும் பெருமையையும் இந்தியாவுக்கு கொடுத்துள்ளீர்கள். அடுத்த அத்தியாயத்திற்கு வாழ்த்துக்கள் என கூறினார்.

    தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-


    சிறந்த விளையாட்டை சிறப்பாக விளையாடினீர்கள். உங்களுடன் விளையாடிதில் பெருமையடைகிறேன். நிச்சயமாக தமிழ்நாடு வீரர்களுள் மிகச் சிறந்தவர் என கூறினார்.  

    ×