என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முகமது சமி மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
    • இந்திய அணியினருடன் இணைந்து முகமது சமி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற 22-ந் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக நீண்ட நாட்களாக அணியில் இல்லாமல் இருந்த முகமது சமி மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்காக தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியினருடன் முகமது சமி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    • வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார்.
    • வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் தற்போது வரை வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.

    கடந்தாண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தது அடுத்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    மாணவர்கள் போராட்டத்திற்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார். பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் தற்போது வரை வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.

    இதனிடையே கிட்டத்தட்ட ரூ.3 கோடி மதிப்பிலான செக் மோசடியில் ஈடுபட்டதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் உட்பட 4 பேர் மீது IFIC வங்கி புகார் அளித்திருந்தது.

    இதுதொடர்பான வழக்கில் ஷகிப் அல் ஹசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து டாகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு வங்கதேசம் திரும்பாத ஷகிப் அல் ஹசன், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    • சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை கேப்டன் ஆக்கியது நியாயமே இல்லை.
    • சஞ்சு சாம்சன் பாவம் இன்னும் எவ்வளவு ரன்கள் தான் அடிப்பார்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பார்மில் இல்லாமல் தவிர்த்து வரும் சுப்மன் கில் இந்திய அணியில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    இந்நிலையில், சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை கேப்டன் ஆக்கியது நியாயமே இல்லை என்று முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் சாம்பியன்ஸ் ட்ராஃபி ஸ்குவாட் தேர்வு குறித்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் கூறியதாவது:

    சுப்மன் கில்லை திடீரென துணை கேப்டன் என்று சொல்கிறார்கள். 6, 35, 16, 4 என்பது அவருடைய கடைசி இன்னிங்ஸ்களின் ஸ்கோர். பெரிய அணிகளுக்கு எதிராக அவர் பெரியளவில் அசத்தியதில்லை. அப்படிப்பட்ட நிலையில் அவரைத் துணைக் கேப்டனாக நியமிக்க வேண்டிய காரணம் என்ன?

    நல்லவேளை ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் பாவம் இன்னும் எவ்வளவு ரன்கள் தான் அடிப்பார். என்ன இது பைத்தியக்காரத்தனமா இருக்கு.. ஒன்னுமே புரில எனக்கு.. சஞ்சு சாம்சனுக்கு ஆதரவே தர மாட்டிக்கிறீங்களே

    சுப்மன் கில்லுக்கு ஏன் இவ்வளவு ஆதரவு கொடுக்கிறீர்கள். சாம்சன் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து சாய் சுதர்சன் இருக்கிறார். அதே போல இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். சஞ்சு சாம்சனை நான் விக்கெட் கீப்பராக அல்லாமல் பேட்ஸ்மேனாகவே தேர்வு செய்ய ஆதரவு கொடுப்பேன்.

    கில் என்ன செய்தாலும் நீங்கள் ஆதரவு கொடுக்கிறீர்கள். ஆனால் சாம்சன், சுதர்சன், இசான் கிசான், நிதிஷ் ரெட்டி போன்ற வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை?

    ஆஸ்திரேலிய மண்ணில் நிதிஷ்குமார் ரெட்டி சிறப்பாக விளையாடியதால் ஹீரோ போல காண்பித்தீர்கள். தற்போது இத்தொடரில் தகுதி இருந்தும் தேர்வு செய்யாத நீங்கள் அவரை திடீரென கீழே போட்டுள்ளீர்கள்.

    சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை கேப்டன் ஆக்கியது நியாயமே இல்லை. ஸ்குவாடில் பும்ரா இருக்கும்போது அவர்தான் அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை.
    • சூரியகுமார் யாதவ் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு அங்கமாக இருந்தார்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால்

    சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் இடம்பெறாதது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, "சூரியகுமார் யாதவ் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு அங்கமாக இருந்தார். ஆனால் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது.

    அவர் ஒரு ஓவருக்கு 9 ரன்கள் முடிக்கக்கூடிய ஒரு 360 டிகிரி வீரர். சூர்யா அணியில் இருந்திருந்தால் ஒரு X-பேக்டராக இருந்திருக்கும். மிடில் ஆர்டரில் ஒரு முக்கியமான வீரரை இந்தியா இழந்துள்ளது. அவர் ஒரு கேம் சேஞ்சர்" என்று தெரிவித்துள்ளார். 

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பொர்னில் நடந்து வருகின்றன. தற்போது 4வது சுற்று போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீரரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் ஹ்யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-1 என கைப்பற்றிய ஸ்வரேவ் இரண்டாவது செட்டை 2-6 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா 6-1, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் செர்பிய வீராங்கனை ஒல்காவை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • கோ கோ உலகக் கோப்பை போட்டியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

    புதுடெல்லி:

    கோ கோ உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணிகள் அணி மற்றும் பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    கோ கோ உலகக்கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

    இந்நிலையில், கோ கோ உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அசாத்திய திறமை, உறுதி மற்றும் குழுவாக செயல்பட்டு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள். இந்தியாவின் பழமையான பாரம்பரிய விளையாட்டை, இந்த வெற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. நாட்டில் உள்ள கணக்கிட முடியாத இளம் விளையாட்டு வீரர்களுக்கு இது உந்துதலாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

    • 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

    கோலாலம்பூர்:

    இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது.

    இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் நிக்கி பிரசாத் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 13.2 ஓவரில் வெறும் 44 ரன்களில் சுருண்டது.

    இந்தியா சார்பில் பருனிகா சிசோடியா 3 விக்கெட்டும், ஜோஷிதா மற்றும் ஆயுஷி சுக்லா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 45 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 4.2 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 47 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்திய அணி அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 21ம் தேதி மலேசியாவை எதிர்கொள்கிறது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் வென்றார்.

    சிட்னி:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, ரஷியாவின் மிரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் மோதினார். இதில் முதல் செட்டை 5-7 என இழந்த கோகோ காப் அடுத்த இரு செட்களை 6-2, 6-1 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 123 ரன்னில் சுருண்டது.

    முல்தான்:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

    இதன் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பனிமூட்டம் காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது.

    முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 41.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 230 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சாத் ஷகீல் 84 ரன்கள் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ், வாரிகன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 25.2 ஓவரில் 137 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வாரிகன் 31 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 5 விக்கெட், சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தினர்.

    93 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் 2வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஷான் மசூத் அரை சதம் கடந்து 52 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 157 ரன்களில் ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வாரிகன் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் களமிறங்கியது. அலிக் அத்தான்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 55 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 127 ரன் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 5 விக்கெட்டும், அப்ரார் அகமது 4 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது சஜித் கானுக்கு அளிக்கப்பட்ட்டது.

    • நீரஜ் சோப்ரா பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    • ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தொடர்ச்சியாக இரு பதக்கங்கள் வென்ற 3வது இந்தியர் ஆவார்.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு நடந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் 2வது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் பிரிவில் தொடர்ச்சியாக இரு பதக்கங்கள் வென்ற 3-வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.

    இந்நிலையில், தடகள வீரரான நீரஜ் சோப்ரா-ஹிமானி ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது என சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    திருமணம் தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், எனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளேன். இந்த தருணத்தில் எங்களை ஒன்றிணைத்த ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.


    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடந்து வருகின்றன.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், செக் நாட்டின் ஜிரி லெஹெகா உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரிட்டனின் ஜாக் டிராபர் உடன் மோதினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 7-5, 6-1 என முன்னிலை பெற்றார். அப்போது டிராபர் போட்டியில் இருந்து விலகியதால் அல்காரஸ் வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • கோ கோ உலகக் கோப்பை 2025 இறுதிப்போட்டியில் இந்திய அணி, நேபாளம் அணியுடன் மோதியது.
    • 54-36 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி கோ கோ உலகக் கோப்பையை வென்றது.

    தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் கோ கோ உலகக் கோப்பை 2025 இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் இந்திய அணி, நேபாளம் அணியுடன் மோதியது.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய அணி 54-36 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி கோ கோ உலகக் கோப்பையை வென்றது.

    முன்னதாக கோ கோ உலகக் கோப்பை பெண்கள் இறுதிப்போட்டியில் நேபாளத்தை 78-40 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    கோ கோ உலகக்கோப்பையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிகளைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

    ×