என் மலர்
விளையாட்டு
- இங்கிலாந்து வீரர்கள் ஒரேயொரு நெட் செசனில் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்.
- ஜோ ரூட் மட்டும் பேட்டிங் பயிற்சி மேற்கொண்ட நிலையில் பீட்டர்சன் இங்கிலாந்து அணி மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த மூன்று போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
இந்தியாவுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்துள்ள இங்கிலாந்து, இந்தியாவின் சூழ்நிலை மற்றும் இந்தியாவை அவமரியாதை செய்துவிட்டது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர கெவின் பீட்டர்சன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். ஒருநாள் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை என்ற செய்தியை கேட்டு பீட்டர்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியின்போது ரவி சாஷ்திரி "நான் கேள்வி பட்டதில் இருந்து, ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து ஒரேயொரு நெட் செசனில் மட்டுமே ஈடுபட்டுள்ளது. நீங்கள் கடினமான முறையில் தயாராகவில்லை என்றால், நீங்கள் போட்டியின் முடிவை நோக்கி செல்ல முடியாது" எனத் தெரிவித்தார்.
இதற்கு கெவின் பீட்டர்சன் பதில் அளித்து கூறுகையில் "நானும் ரவி சாஷ்திரியும், இங்கிலாந்து வீரர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரமாக பயிற்சி எடுத்திருப்பார்கள் என பேசிக் கொண்டிருந்தோம். நாக்பூர் போட்டிக்கு முன்னதாக ஒரேயொரு பயிற்சி செசன் மட்டும் எடுத்துள்ளனர். அதன்பிறகு பயிற்சி மேற்கொள்ளவில்லை. ஜோ ரூட் மட்டும் வலைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். நீங்கள் ஆசிய கண்டத்திற்குள் விளையாட வந்துவிட்டு, பயிற்சி எடுக்க மாட்டேன் என்ற தவறுடன் வர முடியாது.
ஒரு தொடரில் எந்த விதமான பயிற்சியும் இன்றி சிறப்பாக விளையாடுவேன் எனும் ஒரு விளையாட்டு வீரர் கிடையாது. அது ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி.
மிகவும் வருத்தமாக இருக்கிறது. முதல் போட்டியில் இருந்து இங்கிலாந்து பயிற்சி மேற்கொள்வில்லை என்பதை கேட்டு திடுக்கிட்டு போனேன். முற்றிலும் திகைத்துப் போனேன்" என்றார்.
மேலும், தனது எக்ஸ் பக்க பதிவில் "அனுபவியுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் இது சிறந்த நேரம். கோல்ஃப் விளையாடுங்கள். இங்கிலாந்திற்காக விளையாடுவதை மிகவும் ரசிக்கவும். ஆனால், கிரிக்கெட் கூற்றுப்படி ரன்கள் குவிப்பதற்கு பணம் பெறுகிறீர்கள். கிரிக்கெட் போட்டிகளை வெல்ல பணம் பெறுகிறீர்கள். கோல்ஃப் விளையாட பணம் பெறவில்லை. இது கோல்ஃப் தொடர் அல்ல. இது கிரிக்கெட் தொடர்.
இங்கிலாந்து அணிக்காக போட்டியில் அனைத்தையும் கொடுத்துள்ளேன். இதனால் இங்கிலாந்துக்கு புறப்படக்கூடிய விமானத்தில் ஏறுவேன் என சொல்லக்கூடிய ஒரு வீரர் கூட இல்லை. ஜோ ரூட் மட்டும் சொல்லலாம். ஏனென்றால் அவர் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து அணி வெற்றிக்காக சிறந்த பங்களிப்பை கொடுத்தோம் எனக்கூற ஒரு வீரர் கூட இல்லை. இது எனக்கு வர்த்தமாக இருக்கிறது" என்றார்.
- 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.
- இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்களுடன் அவர்களது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து செல்ல அனுமதி கிடையாது என தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐயின் புதிய பயணக் கொள்கை இந்தப் போட்டியுடன் முதல் முறையாக அமலுக்கு வருகிறது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
- இந்தியா உள்பட 3 அணிகளுக்கு பயிற்சி போட்டி இல்லை.
- பாகிஸ்தான் உள்பட 5 அணிகள் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதற்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடருக்கான பயிற்சி போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பயிற்சி போட்டியில் விளையாடவில்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய 5 அணிகள் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றனர்.
இந்தியா ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருவதால், பயிற்சி ஆட்டங்களில் விளையாட வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதேபோல ஆஸ்திரேலியாவும் தற்போது இலங்கையுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருவதால் அந்த அணியும் பயிற்சி போட்டியில் விளையாடவில்லை.
பிப்ரவரி 16-ந் தேதி நியூசிலாந்தும் ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதுகின்றனர். பாகிஸ்தான் அணி பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் என்ற பெயரில் 3 அணிகளாக களமிறங்குகிறது.
அதன்படி 14-ந் தேதி நடக்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சதாப் கான் தலைமையில் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் களமிறங்குகிறது. அதனை தொடர்ந்து 17-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முகமது ஹுரைராவும், துபாயில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் முகமது ஹாரிஸ் கேப்டனாக செயல்படுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
- பாபர் அசாம் சமீப காலமாக பேட்டிங்கில் தடுமாறி வருகிறார்.
- தற்போது நடைபெறும் முத்தரப்பு தொடரிலும் பாபர் அசாம் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம். அவர் சமீப காலங்களாக பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். இதனால் ஒரு டெஸ்ட் தொடரில் அவர் அணியில் இடம் பெறவில்லை. அதனை தொடர்ந்து பின்னர் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பிடித்து விளையாடினார். ஒரு சில போட்டிகளில் மட்டுமே அரை சதம் கடந்தார்.
மற்ற போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். தற்போது முத்தரப்பு தொடரிலும் அவர் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக 10 ரன்னிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 23 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் தன்னை கிங் என அழைக்காதீர்கள் எனவும் தான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லை எனவும் பாபர் அசாம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தயவுசெய்து என்னை கிங் என்று அழைப்பதை நிறுத்துங்கள். நான் கிங் இல்லை. நான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லை. இப்போது எனக்கு புதிய ரோல் உள்ளன. நான் கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை பார்க்க வேண்டும்.
என பாபர் அசாம் கூறினார்.
பாபர் அசாம் கடைசியாக ஆகஸ்ட் 30, 2023 அன்று முல்தானில் நேபாளத்திற்கு எதிராக சர்வதேச சதம் (131 பந்துகளில் 151 ரன்கள்) விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாங்கள் சாம்பியனாக சாதனைப் படைக்க சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு செல்கிறோம்.
- முன்பை விட தற்போது எங்களிடம் வலுவான வேகப்பந்து வீச்சுத்துறை இருக்கிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் கோலாகலமாக துவங்குகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் எதிர்கொள்கிறது. இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வரும் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்தியா உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து நாங்கள் கோப்பையை தட்டி தூக்குவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் சாம்பியனாக சாதனைப் படைக்க சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு செல்கிறோம். இந்தத் தொடரில் விளையாடும் அனைத்து 8 அணிகளுமே சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தகுதியானவர்கள். அவர்கள் அனைவருமே தரமான அணிகள். எங்கள் அணியில் வெற்றிப் பெறுவதற்கான திறன் இருப்பதாக நான் நம்புகிறேன்.
எனவே யாரும் எக்ஸ்ட்ரா அழுத்தத்தை உணர வேண்டிய அவசியமில்லை. அனைத்து அணிகளும் தங்களுடைய திறமைகளை நம்பிச் சாம்பியனாக வர விரும்புவார்கள். அந்த வகையில் எங்களுடைய தலையெழுத்தில் அல்லா என்ன எழுதியிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது.
எங்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வீரர்களின் திறன் மீது எனக்கு மகிழ்ச்சி. எங்கள் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் தனியாளாகப் போட்டியை வென்றுக் கொடுக்கும் திறமையைக் கொண்டவர்கள்.
முன்பை விட தற்போது எங்களிடம் வலுவான வேகப்பந்து வீச்சுத்துறை இருக்கிறது. அதே போல விரல் ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக எங்களிடம் சமநிலையைப் பொருந்திய அணி இருக்கிறது. எனவே எந்த அணியையும் எந்த நேரத்திலும் எங்களால் வீழ்த்த முடியும்.
என்று கூறினார்.
- கே.எல். ராகுல் தான் எங்கள் முதன்மை விக்கெட் கீப்பர்.
- இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை அணியில் சேர்க்க முடியாது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. இந்த 3 போட்டிகளிலும் ரிஷப் பண்ட் அணியில் இடம் பெறவில்லை. கேஎல் ராகுல் தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
இதனால் வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பண்ட் களமிறங்குவாரா அல்லது கேஎல் ராகுல் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இந்நிலையில் இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை அணியில் சேர்க்க முடியாது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கே.எல். ராகுல் தான் எங்கள் முதன்மை விக்கெட் கீப்பர். ரிஷப் பந்துக்கு வாய்ப்பு கிடைக்கும், ஆனால் தற்போது கே.எல் தான் சிறப்பாக செயல்படுகிறார். இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை அணியில் சேர்க்க முடியாது.
கே.எல்.ராகுலை 6-வது பேட்ஸ்மேனாக களமிறக்கி, அக்சர் படேலை ஏன் அவருக்கு முன் களமிறக்குகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கம்பீர் கூறியதாவது, முதல் 5 வீரர்களும் வலது கை பேட்ஸ்மேன்களாகதான் இருக்க வேண்டுமா என்ன? எங்களுக்கு புள்ளி விவரங்கள் பெரிதில்லை. யார் சிறப்பாக செயல்படுவார்கள் என அணி நினைக்கிறதோ அவர்கள் களமிறக்கப்படுவார்கள்.
அந்தந்த நேரத்தில் யார் அதிக ரன்கள் அடிக்கிறார்கள் என்றே பார்க்கிறோம். அக்ஸர் 2 போட்டிகளிலும் நன்றாகவே ஆடினார்.
மேலும், விக்கெட் எடுக்கும் வீரர் ஒருவர் அணியில் தேவைப்பட்டது. வருண் சக்கரவர்த்தி அதற்குச் சரியான தேர்வாக இருப்பார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு நீண்ட எதிர்காலம் உள்ளது. ஆனால் 15 பேர் கொண்ட அணியில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க இயலாது.
என கவுதம் கம்பீர் கூறினார்.
- மகளிர் பிரீமியர் லீக் போட்டி நாளை தொடங்கி மார்ச் 15-ந்தேதி வரை நடக்கிறது.
- 13-ந்தேதி எலிமினேட்டர் ஆட்டமும், மார்ச் 15-ந்தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.
வதோதரா:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டியை 2023-ல் அறிமுகப்படுத்தியது. முதல் சீசனில் மும்பை இந்தியன்சும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
3-வது மகளிர் பிரீமியர் லீக் போட்டி நாளை (14-ந் தேதி) தொடங்குகிறது. மார்ச் 15-ந்தேதி வரை இந்தப் போட்டிகள் வதோதரா, பெங்களூரு, லக்னோ, மும்பை, ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது.
இதில் நடப்பு சாம்பியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியாஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாடும். 2-வது, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதும். 11-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. 13-ந்தேதி எலிமினேட்டர் ஆட்டமும், மார்ச் 15-ந்தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.
வதோதராவில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு-குஜராத் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.
- டி20 தொடருக்கான சிறந்த பீல்டர் விருதை துருவ் ஜூரேல் வென்றார்.
- ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மும்பை:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில் ஒவ்வொரு தொடரிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. சார்பில் 'இம்பேக்ட் பீல்டர்' விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் சிறந்த பீல்டருக்கான விருதை ஷ்ரேயாஸ் ஐயர் தட்டிச் சென்றார். இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் இந்த விருதினை அவருக்கு வழங்கினார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
டி20 தொடருக்கான சிறந்த பீல்டர் விருதை துருவ் ஜூரேல் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- என்ன நடந்தாலும் ரசிகர்கள் ரஜத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
- ரஜத்துடன் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்.
ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் இன்று அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஆர்சிபியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். ஆர்சிபி அணியில் நீங்கள் விளையாடிய விதம், வளர்ந்து வந்த விதம் எல்லாம் உங்களை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தியா முழுவதுமுள்ள ஆர்சிபி ரசிகர்கள் உங்களது விளையாட்டை ரசித்துள்ளார்கள்.
உங்களுக்கு உதவியாக நான் உள்பட ஆர்சிபி வீரர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம். இது மிகப்பெரிய பொறுப்பு. நான் இதைப் பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளேன். ஃபாப் டு பிளெஸ்ஸி கடந்த சில வருடங்கள் செய்துள்ளார். தற்போது, இந்தப் பொறுப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது கவுரமாக கருதுகிறேன். உங்களுக்காக மகிழ்கிறேன் ரஜத். சரியான இடத்துக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். மேலும் நீங்கள் வலுவடைவீர்கள் என நம்புகிறேன்.
கடந்த சில வருடங்களாக ரஜத் ஒரு வீரராக சிறப்பாக முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கும் விளையாடியுள்ளார். அவரது பேட்டிங் தரம் பல மடங்கு முன்னேறியுள்ளது. மாநில அணியையும் நன்றாக வழிநடத்தியுள்ளார்.
ரஜத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் நல்லதாக நடக்க ரஜத்துக்கு வாழ்த்துகள்.
என்ன நடந்தாலும் ரசிகர்கள் ரஜத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஒரு அணியாக நாம் அவருடன் இருக்க வேண்டும். ரஜத்துடன் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்.
என விராட் கோலி கூறியுள்ளார்.
- கடந்த சில சீசன்களாக ஆர்சிபி அணியின் கேப்டனாக டூ பிளெஸ்சிஸ் வழிநடத்தி வந்தார்.
- மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை.
பெங்களூரு:
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2025 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை தக்க வைத்தது.
சில சீசன்களாக ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்ட டூ பிளெஸ்சிசை கழற்றி விட்டது. அவரை நடந்து முடிந்த ஐ.பி.எல். ஏலத்தில் டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை.
எனவே விராட் கோலி அல்லது ரஜத் படிதார் இருவரில் ஒருவரையே பெங்களூரு அணி நிர்வாகம் கேப்டனாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
- இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, வலுவான தென் கொரியாவை சந்திக்கிறது.
கியாங்டா:
ஆசிய கலப்பு அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள கியாங்டாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதன் 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் மக்காவை எதிர்கொண்டது.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 என்ற கணக்கில் மக்காவை தோற்கடித்து கால்இறுதியை உறுதி செய்தது.
சதீஷ், லக்ஷயா சென், மாள்விகா பான்சோத் ஆகியோர் ஒற்றையரிலும், சிராக் ஷெட்டி- எம்.ஆர். அர்ஜூன், திரிஷா ஜாலி- காயத்ரி ஆகிய ஜோடியினர் இரட்டையரிலும் இந்தியாவுக்கு நேர் செட்டில் வெற்றியை தேடித்தந்தனர். இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, வலுவான தென் கொரியாவை சந்திக்கிறது.
- 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது.
- நேற்றுடன் தடகள போட்டிகள் நிறைவு பெற்றன.
டேராடூன்:
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் தடகளத்தில் தமிழக வீராங்கனைகள் 1 தங்கம், 2 வெள்ளி பதக்கம் பெற்றனர். 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் வித்யா 58.11 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கமும், ஸ்ரீவா் தனி 59.86 விநாடிகளில் கடந்து வெள்ளியும் வென்றனர். உயரம் தாண்டுதலில் கோபிகாவுக்கு (1.78 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
நேற்றுடன் தடகள போட்டிகள் நிறைவு பெற்றன. தடகளத்தில் தமிழகத்துக்கு 5 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 19 பதக்கம் கிடைத்தது.
ஆதர்ஷ்ராம் (உயரம் தாண்டுதல்), பவித்ரா (போல் வால்ட்), பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), ஆகியோர் தங்கம் வென்று இருந்தனர். ஆண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் கிடைத்தது.
ரீகன், பரணிகா (போல்வால்ட்), வித்யா (400 மீட்டர் ஓட்டம்), மணவ் 110 மீட்டர் (தடை தாண்டுதல்), ஸ்ரீராம் (நீளம் தாண்டுதல்), ராகுல் (200 மீட்டர்), சலாகுதீன் (டிரிபிள் ஜம்ப்) ஆகியோர் வெள்ளிப் பெற்று இருந்தனர். ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஆட்டத்திலும் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
கிரிதரணி (100 மீட்டர் ஓட்டம்), நித்யா (100 மீட்டர் தடை தாண்டுதல்) நிதின் (200 மீட்டர்), தீபிகா (ஹெப்டத்லான்) ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்று இருந்தனர்.
நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 24 தங்கம், 30 வெள்ளி, 30 வெண்கலம் ஆக மொத்தம் 84 பதக்கம் பெற்று பதக்கப்பட்டியலில் தொடர்ந்து 6-வது இடத்தில் நீடிக்கிறது.
சா்வீசஸ் 65 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் என 114 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், மராட்டியம் 50 தங்கம், 62 வெள்ளி, 63 வெண்கலம் என 175 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், அரியானா 39 தங்கம், 45 வெள்ளி, 56 வெண்கலம் என 140 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.






