என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக ஸ்மித் 29, ஜோஸ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
- இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 4 விக்கெட்டும் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 281 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டீஸ் 101, அசலங்கா 78, நிஷான் மதுஷ்கா 51 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ ஷாட், டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறியது.
மேத்யூ ஷாட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 9 ரன்னில் ஹெட் 18 ரன்னிலும் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனை தொடர்ந்து கேப்டன் ஸ்மித் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலிஸ் பொறுப்புடன் விளையாடினர். ஜோஸ் 22 ரன்களிலும் ஸ்மித் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2 -0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 4 விக்கெட்டும் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றனர்.
- இந்த போட்டியில் பாபர் அசாம் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான்- பாபர் அசாம் களமிறங்கினர்.
ஃபக்கர் ஜமான் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷகீல் 8 ரன்னில் வெளியேறினார். பேட்டிங்கில் சொதப்பி வரும் பாபர் அசாம் இந்த போட்டியில் 29 ரன்னில் அவுட் ஆகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் அவர் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
குறைந்த போட்டியில் விளையாடி 6000 ரன்கள் கடந்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார். அந்த பட்டியலில் பாபர் அசாம், ஹசிம் அம்லா 123 போட்டிகளில் விளையாடி 6000 ரன்களை கடந்துள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக விராட் கோலி (136 போட்டிகள்), கனே வில்லியம்சன் (139 போட்டிகள்), டேவிட் வார்னர் (139 போட்டிகள்), ஷிகர் தவான் (140 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.
- சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் பென் சியர்ஸ் இடம் பெற்றிருந்தார்.
- பென் சியர்ஸ்-க்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டது.
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அணியில் இருந்து முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகி வருகின்றனர்.
அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸ் தொடை எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக ஜேக்கப் டஃபியை நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.
- முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை.
- 2-வது ஒருநாள் போட்டியில் குசல் மெண்டீஸ் 101 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா, நிஷான் மதுஷ்கா ஆகியோர் களமிறங்கினர். நிசங்கா 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசல் மெண்டீஸ், மதுஷ்காவுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர்.
இருவரும் அரை சதம் கடந்தனர். மதுஷ்கா 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கமிந்து மெண்டீஸ் 4 ரன்னில் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
இதனையடுத்து குசல் மெண்டீஸ் உடன் கேப்டன் அசலங்கா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய குசல் சதம் விளாசி அசத்தினார். அவர் 101 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 281 ரன்கள் எடுத்தது. அசலங்கா 78 ரன்களுடனும் ஜனித் லியனகே 32 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
- சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எட்டு அணிகள் இடம்பெற்றுள்ளன.
- எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்-இன் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் எட்டு அணிகள் இரு பிரிவுகளின் கீழ் விளையாடுகின்றன. க்ரூப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. க்ரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தொடரில் விளையாடும் அணிகள் தங்களது வீரர்களின் பட்டியலை ஏற்கனவே ஐ.சி.சி.-யிடம் சமர்பித்து இருந்தன. இந்த நிலையில், அணிகள் தங்களது வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை சமீபத்தில் தான் சமர்பித்தன. அந்த வகையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் எட்டு அணிகளின் வீரர்கள் இறுதிப் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
நியூசிலாந்து:
மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), மார்க் சாம்ப்மென், கேன் வில்லியம்சன், வில் யங், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், வில்லியம் ஓ ரூர்க், லாக்கி ஃபெர்குசன், பென் சீயர்ஸ், மேட் ஹென்றி.
பாகிஸ்தான்:
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர், கேப்டன்), பாபர் அசாம், ஃபகார் ஜமான், தையப் தாஹிர், குஷ்தில் ஷா, உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), கம்ரான் குலாம், சவூத் ஷகீல், சல்மான் ஆஹா, பஹீம் அஷ்ரப், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாகீன் அஃப்ரிடி.
வங்கதேசம்:
நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (கேப்டன்), மெஹதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), சவுமியா சர்கா, தவ்ஹித் ஹ்ரிடோய், தன்சித் ஹசன், மஹ்மதுல்லா, முஷ்ஃபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஜேக்கர் அலி (விக்கெட் கீப்பர்), பர்வேஸ் ஹொசைன் எமோன் (விக்கெட் கீப்பர்), ரிஷாத் ஹொசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, நஹித் ராணா, நசும் அகமது, தன்சிம் ஹசன் சகிப்.
ஆஸ்திரேலியா:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜேக் பிரேசர்-மெக்கர்க், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஆரோன் ஹார்டி, க்ளென் மேஸ்வெல், சீன் அபோட், பென் துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா, ஆடம் ஜாம்பா.
இங்கிலாந்து:
ஜாஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கட், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், ஷகிப் மஹ்மூத், மார்க் வுட்.
தென் ஆப்பிரிக்கா:
தெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, ராஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ரியான் ரிக்கெல்டன் (விக்கெட் கீப்பர்), ஹென்றிச் க்ளாசென் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், வியான் முல்டர், கார்பின் போஷ், ககிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ், தப்ரைஸ் ஷம்சி, லுங்கி நிகிடி.
ஆப்கானிஸ்தான்:
ஹஸ்மத்துல்லா ஷாகிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா, செடிகுல்லா அடல், இப்ராகிம் ஜட்ரான், ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), குலப்தீன் நயிப், அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, ரஷித் கான், நங்கெய்லியா கரோட்டி, பசல்ஹக் ஃபரூக்கி, பரீத் அகமது மாலிக், நூர் அகமது, நவீத் ஜத்ரான்.
- சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது.
- இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாடுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மார்ச் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 2.24 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 19.45 கோடி வழங்கப்படும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத் தொகை 1.12 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 9.72 கோடி வழங்கப்படுகிறது. அரையிறுதி சுற்றில் தோல்வியை தழுவும் ஒவ்வொரு அணிக்கும் 5.6 லட்சம் அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4.86 கோடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை 6.9 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 60 கோடி ஆகும்.
க்ரூப் சுற்று போட்டிகளில் ஒவ்வொரு அணியும் பெறும் வெற்றிக்கு (ஒரு போட்டி) 34 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30 லட்சம் வழங்கப்படும். ஐந்து மற்றும் ஆறாவது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு 3.5 லட்சம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 3 கோடி வழங்கப்படுகிறது. ஏழு மற்றும் எட்டாவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா 1.4 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1.2 கோடி வழங்கப்படும்.
2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட இருக்கிறது. வருகிற 19-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது. இந்தப் போட்டி வருகிற 20-ம் தேதி நடைபெற இருக்கிறது.
- 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
வதோதரா:
பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது. முதலாவது ஆண்டில் மும்பை இந்தியன்சும், 2-வது சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மகுடம் சூடின.
இந்த நிலையில் 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி வரை நடக்கும் இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் மோதி அதில் வெற்றி காணும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும்.
பெங்களூரு (கர்நாடகா), லக்னோ (உத்தரபிரதேசம்), மும்பை (மராட்டியம்), வதோதரா (குஜராத்) ஆகிய நகரங்களில் மொத்தம் 22 ஆட்டங்கள் நடைபெறுகிறது. பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பை மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் பெற்றுள்ளது.
இதையொட்டி ஒவ்வொரு அணியும் சில வீராங்கனைகளை கழற்றி விட்டு, புதிய வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்து பட்டை தீட்டியுள்ளன. அந்த வகையில் தமிழகத்தின் இளம் விக்கெட் கீப்பர் கமலினியை ரூ.1.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்ட்ராகர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் அவருக்கு பதிலாக ஜூனியர் உலகக்கோப்பையில் கலக்கிய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் பருனிகா சிசோடியாவை ரூ.10 லட்சத்துக்கு மும்பை நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதே சமயம் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சதம் உள்பட 309 ரன்கள் சேர்த்து தொடர்நாயகியாக ஜொலித்த கோங்காடி திரிஷாவை ஏலத்தில் யாரும் சீண்டவில்லை. உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக ஏலம் நடந்ததால் திரிஷாவின் திறமையை யாரும் அறிந்திருக்கவில்லை. எந்த வீராங்கனையாவது காயமடைந்ததால் அவருக்கு பதிலாக திரிஷாவை இழுக்க வாய்ப்புள்ளது.
மற்றபடி டெல்லி அணியில் கேப்டன் மெக்லானிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, அலிஸ் கேப்சி, அனபெல் சுதர்லாண்ட், மரிஜானே காப், அருந்ததி ரெட்டி, குஜராத் அணியில் ஹர்லீன் தியோல், பெத் மூனி, லாரா வோல்வார்ட், கேப்டன் ஆஷ்லி கார்ட்னெர், டியான்ட்ரா டோட்டின், தனுஜா கன்வார், மும்பை அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஹெய்லி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, அமெலியா கெர், நாட் சிவெர், நடினே டி கிளெர்க், சாய்கா இஷாக், பெங்களூரு அணியில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ரிச்சா கோஷ், எலிஸ் பெர்ரி, டேனி வியாட், ரேணுகா சிங், ஸ்ரேயங்கா பட்டீல், ஜார்ஜியா வேர்ஹாம், உ.பி. அணியில் கேப்டன் தீப்தி ஷர்மா, சமாரி அட்டப்பட்டு, தாலியா மெக்ராத், சினெலி ஹென்றி, சோபி எக்லெஸ்டோன், ராஜேஸ்வரி கெய்க்வாட் என எல்லா அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகளுக்கு பஞ்சமில்லை. அதனால் யார் கை ஓங்கும், எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பதை இப்போதே கணிப்பது கடினம். இருப்பினும் மும்பை, பெங்களூரு, டெல்லி அணிகளுக்கு கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு சற்று தூக்கலாக தெரிகிறது.
போட்டிக்கான பரிசுத்தொகை விவரம் அறிவிக்கப்படவில்லை. என்றாலும் கடந்த ஆண்டில் பட்டம் வென்ற அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.3 கோடியும் வழங்கப்பட்டது. அதே பரிசுத்தொகையே இந்த முறையும் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'இந்த முறை நிறைய உள்நாட்டு வீராங்கனைகள் இந்த போட்டிக்கு தயாராகி வருவது இந்திய பெண்கள் அணியின் கேப்டன் என்ற முறையில் உற்சாகம் அளிக்கிறது. சர்வதேச வீராங்கனைகளுடன் இணைந்து விளையாடும் வாய்ப்ைப பெற்றுள்ள அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். இதன் மூலம் இந்திய அணி வலுவடையும்' என்று குறிப்பிட்டார்.
வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. பெங்களூரு ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி காயத்தால் அவதிப்படுவதால் தொடக்க ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி பெற்றுள்ளன. போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.
- குடும்பத்தினரை வீரர்கள் உடன் அழைத்து செல்லலாம்.
- மூத்த வீரர் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியாவிலும், ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இந்திய அணிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் 45 நாட்களுக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது மட்டும் இரண்டு வாரங்கள் குடும்பத்தினரை வீரர்கள் உடன் அழைத்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடக்கிறது. இந்தத் தொடர் 19 நாட்கள் நடப்பதால் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து செல்ல முடியாது. இந்த நிலையில் இந்திய அணி மூத்த வீரர் ஒருவர் தனது குடும்பத்தை சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் போது உடன் அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.
தனது குடும்பத்திற்கு விதிவிலக்கு அளிக்க முடியுமா என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதை கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. இதுகுறித்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும்போது, இந்த சுற்றுப் பயணத்திற்கு வீரர்கள் தங்கள் மனைவிகளை உடன் அழைத்து வர வாய்ப்பில்லை.
இதில் விதிவிலக்கு கேட்டு மூத்த வீரர்களில் ஒருவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரிடம் கொள்கை முடிவு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சுற்றுப்பயணம் ஒரு மாதத்திற்கும் குறைவானது என்பதால், வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் செல்ல அனுமதி இல்லை. ஒருவேளை விதிவிலக்குகள் அளிக்கப்பட்டால் கிரிக்கெட் வாரியம் எந்த செலவையும் ஏற்காது. சம்பந்தப்பட்ட வீரர்தான் முழு செலவுகளையும் ஏற்க வேண்டி இருக்கும்.
ஆனால் எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது வீரர்களுடன் குடும்பத்தினர் இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தனர். கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்த மூத்த வீரர் யார்? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
- ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.
- ஆர்.சி.பி. அணி கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.
ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் வசதி, ரைட் டு மேட்ச் விதிமுறை உள்பட பல மாற்றங்கள் கடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தின் போது கொண்டுவரப்பட்டது. அந்த வகையில், ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இதுவரையிலான ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக ரிஷப் பண்ட் உருவெடுத்தார். இவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, ஐ.பி.எல். 2025 தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிமுக போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்.) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணிகள் மோதும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஆர்.சி.பி. அணி தனது புதிய கேப்டனாக ரஜத் பட்டிதரை அறிவித்தது.
ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக போட்டிகள் நடைபெறும்- அகமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு, லக்னோ, முலான்பூர், டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் என பத்து இடங்களுடன் கவுகாத்தி மற்றும் தரம்சாலாவிலும் இந்த முறை ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஜனவரி 12-ம் தேதி பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா வெளியிட்ட தகவல்களில் ஐ.பி.எல். 2025 போட்டிகள் மார்ச் 23-ம் தேதி தொடங்கும் என்று தெரிவித்து இருந்தார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தரவரிசையில் 2-ம் இடம் பிடித்தவரும், போலந்து வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 7-5 என எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரரான மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், பிரான்சின் ஹெர்பர்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-4 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தரவரிசையில் 6-ம் இடம் பிடித்தவரும், அமெரிக்க வீராங்கனையுமான ஜெசிகா பெகுலா, ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் 4-6 என முதல் செட்டை இழந்த அலெக்சாண்ட்ரோவா அடுத்த இரு செட்களை 6-1, 6-1 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜெசிகா பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.






