என் மலர்
நீங்கள் தேடியது "National Sports Competition"
- பேட்மிண்டன், ஹாக்கி, டென்னிஸ், கபடி, உள்பட 32 வகையான போட்டிகள் இடம் பெறுகிறது.
- இந்த போட்டியில் 393 வீரர், வீராங்கனைகளை கொண்ட தமிழக அணி 31 விளையாட்டுகளில் களம் காணுகிறது.
டேராடூன்:
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பிப்ரவரி 14-ந் தேதி வரை நடக்கிறது. டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்த்வானி, ருத்ராபூர், ஷிவ்புரி, நியூதெக்ரி ஆகிய 7 நகரங்களில் 18 நாட்கள் அரங்கேறும் இந்த போட்டியில் 38 அணிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இதில் தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், ஆக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல், கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கபடி, கோ-கோ உள்பட 32 வகையான போட்டிகள் இடம் பெறுகிறது. களரிப்பட்டு, யோகாசனம், மல்லர்கம்பம், ரேப்டிங் ஆகியவை காட்சி போட்டியாக நடைபெறுகிறது.
இந்த போட்டியில் 393 வீரர், வீராங்கனைகளை கொண்ட தமிழக அணி 31 விளையாட்டுகளில் களம் காணுகிறது. பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கர், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோர் இந்த போட்டியை தவறவிடுபவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெறும் கோலாகல தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். போட்டியை தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
கடந்த தேசிய விளையாட்டு 2023-ம் ஆண்டு கோவாவில் 5 நகரங்களில் நடந்தது. இதில் மராட்டியம் 82 தங்கம் உள்பட 230 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது.
- நேற்றுடன் தடகள போட்டிகள் நிறைவு பெற்றன.
டேராடூன்:
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் தடகளத்தில் தமிழக வீராங்கனைகள் 1 தங்கம், 2 வெள்ளி பதக்கம் பெற்றனர். 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் வித்யா 58.11 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கமும், ஸ்ரீவா் தனி 59.86 விநாடிகளில் கடந்து வெள்ளியும் வென்றனர். உயரம் தாண்டுதலில் கோபிகாவுக்கு (1.78 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
நேற்றுடன் தடகள போட்டிகள் நிறைவு பெற்றன. தடகளத்தில் தமிழகத்துக்கு 5 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 19 பதக்கம் கிடைத்தது.
ஆதர்ஷ்ராம் (உயரம் தாண்டுதல்), பவித்ரா (போல் வால்ட்), பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), ஆகியோர் தங்கம் வென்று இருந்தனர். ஆண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் கிடைத்தது.
ரீகன், பரணிகா (போல்வால்ட்), வித்யா (400 மீட்டர் ஓட்டம்), மணவ் 110 மீட்டர் (தடை தாண்டுதல்), ஸ்ரீராம் (நீளம் தாண்டுதல்), ராகுல் (200 மீட்டர்), சலாகுதீன் (டிரிபிள் ஜம்ப்) ஆகியோர் வெள்ளிப் பெற்று இருந்தனர். ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஆட்டத்திலும் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
கிரிதரணி (100 மீட்டர் ஓட்டம்), நித்யா (100 மீட்டர் தடை தாண்டுதல்) நிதின் (200 மீட்டர்), தீபிகா (ஹெப்டத்லான்) ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்று இருந்தனர்.
நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 24 தங்கம், 30 வெள்ளி, 30 வெண்கலம் ஆக மொத்தம் 84 பதக்கம் பெற்று பதக்கப்பட்டியலில் தொடர்ந்து 6-வது இடத்தில் நீடிக்கிறது.
சா்வீசஸ் 65 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் என 114 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், மராட்டியம் 50 தங்கம், 62 வெள்ளி, 63 வெண்கலம் என 175 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், அரியானா 39 தங்கம், 45 வெள்ளி, 56 வெண்கலம் என 140 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
- டிரையத்லான் பந்தயத்தில் தமிழகத்தில் தங்கப்பதக்கம் கிடைத்தது.
- கர்நாடகா 27 தங்கம் உள்பட 88 பதக்கத்துடன் 4-வது இடத்தில் உள்ளது.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய போட்டியில் தமிழக அணிக்கு ஒரு தங்கம் உள்பட 3 பதக்கம் கிடைத்தது.
டிரையத்லான் பந்தயத்தில் தங்கப்பதக்கம் கிடைத்தது. ஆகாஷ், பெருமாள்சாமி, வாமன், ஆர்த்தி, கீர்த்தி ஆகியோர் அடங்கிய அணி கலப்பு தொடரில் 1 மணி 59 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதல் இடத்தை பிடித்தது.
யோகாசான போட்டியில் பெண்களுக்கான ஆர்டிஸ்டிக் அணிகள் பிரிவில் நிவேதா, கீத்திகா, வைஷ்ணவி, ரோகிணி, காயத்ரி ஆகியோர் கொண்ட தமிழக அணி வெண்கல பதக்கம் பெற்றது. இதே போல யோகானம் ரித்மிக் ஜோடி பிரிவில் நிவேதா-அபிராமி ஜோடி வெண்கல பதக்கம் பெற்றது.
கடந்த 29-ந்தேதி தொடங்கிய தேசிய விளையாட்டு போட்டி இன்று முடிவடைகிறது. நேற்றைய போட்டியின் முடிவில் தமிழக அணி 25 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலம் ஆக மொத்தம் 73 பதக்கம் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. சர்வீசஸ் 56 தங்கம், 34 வெள்ளி, 31 வெண்கலம் ஆக மொத்தம் 121 பதக்கத் துடன் முதல் இடத்தில் உள்ளது.
மராட்டியம் 38 தங்கம் உள்பட 138 பதக்கத்துடன் 2-வது இடத்திலும், அரியானா 34 தங்கம் உள்பட 106 பதக்கத்துடன் 3-வது இடத்திலும், கர்நாடகா 27 தங்கம் உள்பட 88 பதக்கத்துடன் 4-வது இடத்திலும் உள்ளன.
- 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த விளையாட்டு திருவிழா மீண்டும் அரங்கேறுகிறது.
- இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கிறார்.
ஆமதாபாத்:
இந்தியாவில் கவுரவமிக்க போட்டிகளில் ஒன்றான தேசிய விளையாட்டு 1924-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட இந்த போட்டி பின்னர் நடைமுறை சிக்கல் காரணமாக சில சமயங்களில் குறிப்பிட்ட காலத்துக்குள் நடைபெறவில்லை. கடைசியாக 35-வது தேசிய விளையாட்டு 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றது. அதன் பிறகு தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்ட இந்த போட்டியை நடத்த போதிய வசதியின்றி கோவா ஒதுங்கியது.
இந்த நிலையில் 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய 6 நகரங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை நடக்கிறது. 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த விளையாட்டு திருவிழா மீண்டும் அரங்கேறுகிறது. குஜராத் மாநிலம் இந்த போட்டியை நடத்துவது இதுவே முதல்முறையாகும். ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கிறார்.
இதில் நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து உள்பட 36 விளையாட்டுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவை அறிமுக போட்டியாக இடம் பெறுகின்றன. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஒலிம்பிக் மற்றும் உலக போட்டியில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா ஆகியோர் காயம் காரணமாக விலகி விட்டனர். அதேநேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு (மணிப்பூர்), குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா (அசாம்), நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ், தடகள வீராங்கனைகள் டுட்டீ சந்த், ஹிமா தாஸ், அன்னு ராணி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் களம் காணுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருந்து 380 வீரர், வீராங்கனைகள் 30 பந்தயங்களில் திறமையை வெளிப்படுத்தும் ஆவலில் உள்ளனர்.
தேசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் கடந்த வாரம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. உலக டேபிள் டென்னிஸ் போட்டி இந்த சமயத்தில் நடக்க இருப்பதால் தனியாக முன்கூட்டியே நடத்தப்பட்டது. கபடி, ரக்பி, நெட்பால், லான் பவுல்ஸ் ஆகிய போட்டிகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. சைக்கிளிங் பந்தயம் மட்டும் டெல்லியில் நடத்தப்படுகிறது.
இந்த போட்டிகளை தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
கடைசியாக (2015) நடந்த தேசிய விளையாட்டில் சர்வீசஸ் 91 தங்கம் உள்பட 159 பதக்கங்கள் குவித்தது முதலிடத்தை பிடித்திருந்தது. கேரளா (54 தங்கம் உள்பட 162 பதக்கங்கள்) 2-வது இடமும், அரியானா (40 தங்கம் உள்பட 107 பதக்கங்கள்) 3-வது இடமும் பிடித்தன. தமிழக அணி (16 தங்கம், 16 வெள்ளி, 20 வெண்கலம்) 8-வது இடத்தை பெற்றது.






