என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • போட்டியின் 4-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.
    • முதல் போட்டியில் மதுரை பாந்தர்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கோவை:

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. போட்டியின் 4-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் மதுரை பாந்தர்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    • ஒரு பாகிஸ்தான் செய்தி தொகுப்பாளர் அப்ரிடி இறந்துவிட்டதாக அறிவிப்பதைக் காணலாம்.
    • சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ சரிபார்க்கப்பட்டது.

    பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இறந்துவிட்டதாகக் கூறும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

    அந்த வீடியோவில், ஒரு பாகிஸ்தான் செய்தி தொகுப்பாளர் அப்ரிடி இறந்துவிட்டதாக அறிவிப்பதைக் காணலாம். இருப்பினும், அது குறித்து உண்மைச் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, அது உண்மையல்ல என்று தெரியவந்தது.

    வீடியோவில் உள்ள படங்கள் மற்றும் பிற கூறுகள் AI ஆல் உருவாக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டது.

    ஷாஹித் அப்ரிடி உண்மையில் ஆரோக்கியமாக இருப்பதாகவும்,சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ உண்மைக்குப் புறம்பானது என்றும் உண்மைச் சரிபார்ப்புக் குழு தெளிவுபடுத்தியது. 

    • நார்வே செஸ் தொடரில் குகேஷ் 3-வது இடம் பிடித்துள்ளார்.
    • அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    நார்வே செஸ் தொடரில் அந்நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    இறுதிச்சுற்று போட்டியில் கார்ல்சனை விட அதிக புள்ளிகளைப் பெறவேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து விளையாடிய குகேஷ், செய்த பெரிய தவறால் அவர் 3-வது இடத்திற்குச் சென்றார்.

    10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்தார். கருவானா 15.5 புள்ளிகளுடன் 2-வது இடமும், குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தனர்.

    இந்நிலையில், நார்வே செஸ் தொடரில் 3-வது இடம் பிடித்த குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 2025-ம் ஆண்டு நார்வே செஸ் போட்டியில் 14.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த நமது வீரர் டி.குகேஷ் குறித்து பெருமை கொள்கிறோம். குறிப்பிடத்தக்க திறமை மற்றும் உறுதியுடன், இந்தியாவின் செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக குகேஷ் தொடர்ந்து பிரகாசித்து வருகிறார் என பதிவிட்டுள்ளார்.

    • தைவான் தடகள ஓபன் போட்டிகள் சீன தைபேவில் நேற்று தொடங்கியது.
    • முதல் நாளில் இந்திய அணி 6 தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.

    சீன தைபே:

    நடப்பு ஆண்டுக்கான தைவான் தடகள ஓபன் போட்டிகள் சீன தைபேவில் நேற்று தொடங்கியது.

    இதில், 100 மீட்டர் மகளிர் தடை ஓட்ட போட்டியில் இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி 12.99 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். ஜப்பான் வீராங்கனைகள் 2-வது மற்றும் 3வது இடம் பிடித்துள்ளனர்.

    பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பூஜா வரலாற்று சாதனயாக பந்தய தூரத்தை 4.11.65 நிமிடத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

    பெண்களுக்கான 100 மீட்டர் ரிலே தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் சுதீக்ஷா வத்லூரி, அபிநயா ராஜராஜன், சிநேகா எஸ்எஸ், நித்யா காந்தே ஆகியோர் இணைந்த அணி தங்கம் வென்றது.

    ஆண்களுக்கான 100 மீட்டர் ரிலே தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் குரீந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜுர், மணிகண்டா ஹாப்லிதார், ஆம்லான் போர்கோஹெய்ன் ஆகியோர் இணைந்த அணி தங்கம் வென்றது.

    ஆண்களுக்கான மும்முறை தாண்டுதலில் முன்னாள் ஆசிய சாம்பியன் அப்துல்லா அபுபக்கர் தங்கம் வென்றார்.

    ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் தேஜஸ் சிர்சே தங்கம் வென்றார்.

    தைவான் தடகளப் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 6 தங்கம் வென்று அசத்தியது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் ஆண்கள் இரட்டையரில் பிரிட்டன் ஜோடி தோல்வி அடைந்தது.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-ஜோ சாலிஸ்பரி ஜோடி, அர்ஜென்டினாவின் ஹொரெசியோ ஜெபெல்லோஸ்-ஸ்பெயினின் மார்செல் கிரனோலர்ஸ் ஜோடியுடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய ஹொரெசியோ-மார்செல் ஜோடி 6-0, 6-7 (5-7), 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.

    • ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.
    • ஐ.சி.சி. மே மாத சிறந்த வீராங்கனை விருதை தென் ஆப்பிரிக்காவின் சோலி டைரான் வென்றார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

    அதன்படி, மே மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர்ப்பட்டியலை ஐ.சி.சி. அறிவித்தது.

    அதில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் பிரண்டன் மெம்முல்லன் (ஸ்காட்லாந்து), மிலிண்ட் குமார் (அமெரிக்கா) மற்றும் முகமது வாசீம் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை யு.ஏ.இ. அணியின் கேப்டன் முகமது வாசீம் வென்றுள்ளார்.

    இதேபோல், மே மாத சிறந்த வீராங்கனை விருதை தென் ஆப்பிரிக்காவின் சோலி டைரான் வென்றுள்ளார்.

    • நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திருச்சி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்தது.

    கோவை:

    டிஎன்பிஎல் 2025 சீசனின் 3-வது லீக் போட்டி கோவையில் நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது.

    வாசீம் அகமது 32 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாபர் ஜமால் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஆர். ராஜ்குமார் அதிரடியாக ஆடி 16 பந்தில் 30 ரன்கள் விளாசினார்.

    நெல்லை அணி சார்பில் சோனு யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 21 பந்தில் 41 ரன் குவித்தார். சந்தோஷ் குமார் 45 ரன்னில் அவுட்டானார். ஹரீஷ் 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், நெல்லை ராயல் கிங்ஸ் 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    • முதல் செட்டை 6(5)-7(7) என கடும் போராட்டத்திற்குப் பின் கோகோ காஃப் இழந்தார்.
    • பின்னர் சூப்பர் கம்பேக் கொடுத்து 2ஆவது மற்றும் 3ஆவது செட்டை கைப்பற்றினார்.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் சபலென்காவும், 2ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃபும் பலப்பரீட்சை நடத்தினர்.

    முதல் செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இதனால் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சபலென்கா 7(7)- 6(5) என முதல் செட்டை கைப்பற்றினார்.

    2ஆவது செட்டில் கோகோ காஃப் அபாரமாக விளையாடினார். கோகோ காஃப் ஆட்டத்திற்கு சபலென்காவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 5-2 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 6-2 என 2ஆவது செட்டை எளிதாக கைப்பற்றினார்.

    இதனால் ஆட்டம் 3ஆவது செட்டிற்கு நீடித்தது. சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் இந்த செட்டிலும் காஃப் ஆதிக்கம் செலுத்தினார். கோகோ காஃப் 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 5-3 என முன்னிலைப் பெற்றார். 9ஆவது கேம்-ஐ சபலென்கா கைப்பற்றினார். இதனால் காஃப் 5-4 என முன்னிலைப் பெற்றிருந்தார்.

    10ஆவது கேமிற்கான சர்வீஸை காஃப் தொடங்கினார். இந்த கேம் "ஏஸ்" வரை சென்றாலும் காஃப் கைப்பற்றினார். இதனால் 2-1 {6(5)-7(7), 6-2, 6-4} என அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    • வாசீம் அகமது 32 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஜாஃபர் ஜமால் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்தார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 3ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி திருச்சி கிராண்ட் சோலாஸ் அணியின் சுஜய் சிவசங்கரன், ஜெயராமன் சுரேஷ் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுஜய் சிவசங்கரன் 12 ரன்னிலும், ஜெயராமன் சுரேஷ் குமார் 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    3ஆவது விக்கெட்டுக்கு வாசீம் அகமது உடன் ஜாஃபர் ஜமால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. வாசீம் அகமது 32 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சய் யாதவ் 8 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

    5ஆவது விக்கெட்டுக்கு ஜமால் உடன் ராஜ்குமார் ஜோடி சேர்ந்தார். ஜாஃபர் ஜமால் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது திருச்சி அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆர். ராஜ்குமார் அதிரடியாக 16 பந்தில் 30 ரன்கள் விளாச திருச்சி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.

    திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி:-

    ஜெயராமன் சுரேஷ் குமார், வாசீம் அகமது, சுஜய் சிவசங்கரன், U முகிலேஷ, சஞ்சய் யாதவ், ஜாஃபர் ஜமால், ஜெகதீசன் கவுசிக், ஆர். ராஜ்குமார், பி. சரவண குமார், அதிசயராஜ் டேவிட்சன், செல்வ குமாரன்.

    நெல்லை ராயல் கிங்ஸ் அணி:-

    அருண் கார்த்திக், அஜிதேஷ் குருசாமி, என்.எஸ். ஹரிஷ், ரிதிக் ஈஸ்வரன், சோனு யாதவ், பி.எஸ். நிர்மல் குமார், முகமது அட்னாம் கான், சச்சின் ரதி, வள்ளியப்பன் யூதீஸ்வரன், இம்மானுவேல் செரியன், எம். உதய் குமார்.

    • சுப்மன் கில்லை இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக நியமித்தது சரியான நகர்வு என நினைக்கிறேன்.
    • ஐபிஎல் தொடர் முழுவதும் குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர் எவ்வாறு வழி நடத்தினார் என்பதை பார்க்க வேண்டும்.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கேப்டனாக அறிமுகமாகும் முதல் தொடரே அவருக்கு சவாலானதாக அமைந்துள்ளது. இங்கிலாந்து சீதோஷ்ண நிலையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி எவ்வாறு விளையாடும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே வெளிநாட்டு மண்ணில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடியது கிடையாது என்ற விமர்சனமும் எழும்பியது.

    இந்த நிலையில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சுப்மன் கில் சரியான நபர் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறுகையில் "சுப்மன் கில்லை இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக நியமித்தது சரியான நகர்வு என நினைக்கிறேன். ஐபிஎல் தொடர் முழுவதும் குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர் எவ்வாறு வழி நடத்தினார் என்பதை பார்க்க வேண்டும். அவருடைய தலைமைத்துவம் சிறப்பானதாக உள்ளது. பேட்டராகவும், கேப்டனாகவும் இருந்தால் தலைமைத்துவம் நன்றாக இருக்கும் என்பது என்னை பொறுத்தவரையில் முக்கியமான விசயம். நீங்கள் ரன்கள் சேர்க்க வேண்டும். சுப்மன் கில் அதை செய்து கொண்டிருக்கிறார். இது சரியான நேரம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • முதல் 8 போட்டிகளும் கோவையில் நடைபெறுகின்றன.
    • முடிவடைந்த 2 போட்டிகளிலும் சேஸிங் அணி வெற்றி பெற்றுள்ளது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 3ஆவது போட்டி கோவையில் இன்று நடைபெறுகிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நெல்லை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி:-

    ஜெயராமன் சுரேஷ் குமார், வாசீம் அகமது, சுஜய் சிவசங்கரன், U முகிலேஷ, சஞ்சய் யாதவ், ஜாஃபர் ஜமால், ஜெகதீசன் கவுசிக், ஆர். ராஜ்குமார், பி. சரவண குமார், அதிசயராஜ் டேவிட்சன், செல்வ குமாரன்

    நெல்லை ராயல் கிங்ஸ் அணி:-

    அருண் கார்த்திக், அஜிதேஷ் குருசாமி, என்.எஸ். ஹரிஷ், ரிதிக் ஈஸ்வரன், சோனு யாதவ், பி.எஸ். நிர்மல் குமார், முகமது அட்னாம் கான், சச்சின் ரதி, வள்ளியப்பன் யூதீஸ்வரன், இம்மானுவேல் செரியன், எம். உதய் குமார்

    • ஆர்சிபி அணிக்காக ஹேசில்வுட் விளையாடினார்.
    • பஞ்சாப் அணியில் இங்கிலிஷ் இடம் பிடித்திருந்தார்.

    ஐபிஎல் 2025 சீசன் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. மே மாதம் 25ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இதனால் போர் ஏற்படும் சூழல் உருவானது.

    இதன்காரணமாக ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. 10ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 17ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.

    இதனால் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் தேசிய அணிக்கு விளையாட செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (ஜூன் 11ஆம் தேதி தொடக்கம்) விளையாடுவதற்கு தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டதால் இரு அணி வீரர்களும் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    மார்கிராம், ரபாடா, ஸ்டார்க் உள்ளிட்ட வீரர்கள் பிளேஆஃப் சுற்றில் விளையாடவில்லை. அதேவேளையில் பிளேஆஃப் சுற்றுக்குக்கு முன்னேறிய ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்த ஹேசில்வுட் மற்றும் பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருந்த இங்கிலிஷ் ஆகியோர் இறுதிப் போட்டி வரை விளையாடினர்.

    இறுதிப் போட்டி ஜூன் 3ஆம் தேதி முடிவடைந்த நிலையில் ஜோஷ் இங்கிலிஷ் புறப்பட்டார். ஹெசில்வுட் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் புறப்பட்ட்டார். இந்த நிலையில் இருவரும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இணைந்துள்ளனர்.

    ×