என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பிசிசிஐ-யின் செயலாளராக அமித் ஷாவின் மகன் பதவி ஏற்க இருக்கும் நிலையில், கார்த்தி சிதம்பரம் டுவிட்டரில் எழுப்பிய கேள்விக்கு, டுவிட்டர்வாசிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் போட்டியிடுகின்றனர்.

    இருவரும் நேற்று மனுதாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

    அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில், முன்னாள் உள்துறை மந்திரியான ப.சிதம்பரத்தின் மகனும், தற்போதைய பாராளுமன்ற எம்.பி.யும் ஆன கார்த்தி சிதம்பரம், அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எனது தந்தை காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணி ஆட்சியில் உள்துறை மந்திரியாக இருந்தபோது, நான் பிசிசிஐ-யின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தால், தேசியவாதம் பேசக்கூடியவர்கள், எப்படி எதிர்வினையாற்றிருப்பார்கள்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதற்கு கார்த்தி சிதம்பரம் டென்னிஸ் சங்கத்தில் பல்வேறு பதவிகள் வகித்ததை ஞாபகப்படுத்தி டுவிட்டர்வாசிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை எதிரொலியாக, சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    இங்கிலாந்தில் கடந்த மே முதல் ஜூலை மாதம் வரை நடந்த 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 241 ரன்கள் சேர்த்தன.

    இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்து சமநிலை வகித்தன. இதனை அடுத்து இறுதிப்போட்டியில் இரு அணிகளும் அடித்த பவுண்டரிகள் கணக்கிடப்பட்டு அதில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு கடும் விமர்சனம் கிளம்பியது.

    இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தற்போது உள்ள சூப்பர் ஓவர் முறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இனிமேல் சூப்பர் ஓவரில் சமநிலை ஏற்பட்டால் பவுண்டரி அடிப்படையில் வெற்றி முடிவு செய்யப்படமாட்டாது. அதாவது ஐ.சி.சி. 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும். அதேநேரத்தில் போட்டியில் தெளிவான முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் தொடரும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
    பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலி பாரதிய ஜனதா கட்சியில் சேர இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில் கங்குலி வந்தால் வரவேற்பதாக அமித் ஷா கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கடந்த சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

    அவர்கள் இருவரும் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகுதான் இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி தேர்வாக இருக்கும் தகவல் வெளியானது.

    பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தலையிட்டதால்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி தேர்வானார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் கங்குலி விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து விடுவார் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக தகவல் பரவியது.

    இதுபற்றி கங்குலியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் எதையும் தெரிவிக்க மறுத்து விட்டார். அதே சமயத்தில் மத்திய மந்திரி அமித்ஷா இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. கிரிக்கெட் சங்க தலைவராக யார் வர வேண்டும் என்று நான் முடிவு செய்ய முடியாது. கிரிக்கெட் சங்க தேர்தல் விதிகளின் அடிப்படையில் கங்குலி அந்த பதவிக்கு வந்துள்ளார்.

    நான் கிரிக்கெட் விளையாட்டுடன் கடந்த பல ஆண்டுகளாக தொடர்பு வைத்துள்ளேன். எனவே கங்குலி என்னை சந்தித்துப் பேசியதில் எந்த தவறும் இல்லை. நாங்கள் அரசியல் பேசவில்லை.

    மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு கங்குலியிடம் நான் பேரம் பேசியதாக தகவலை பரப்புகிறார்கள். நான் அத்தகைய பேரம் எதையும் பேசவில்லை. அதே சமயத்தில் கங்குலி விரும்பி வந்தால் அவரை வரவேற்று சேர்த்துக்கொள்ள பா.ஜ.க. தயாராக உள்ளது.

    அமித் ஷா


    அவருக்கு மட்டுமல்ல.... இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்வது என்னவென்றால், பாரதிய ஜனதா கட்சிதான் தாங்கள் சேருவதற்கு சிறந்த கட்சியாகும். இதை செய்ய நான் தயங்க மாட்டேன். இதுதான் என் வேலை.

    மேற்கு வங்க தேர்தலுக்காகவே கங்குலியை நாங்கள் தேடுவதாக சொல்வது தவறு. எந்த பிரபலமும் இல்லாமலேயே அங்கு 18 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் அமோக வெற்ற பெறுவோம்.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போதும் கங்குலியை சேர்க்க பா.ஜனதா முயற்சி செய்தது.
    புரோ கபடி லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் டெல்லி - பெங்களூர் அணிகளும் மற்றொரு போட்டியில் பெங்கால்- மும்பை அணிகளும் மோத உள்ளனர்.
    அகமதாபாத்:

    7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் ‘பிளேஆப்’ சுற்று ஆட்டங்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது.

    ‘எலிமினேட்டர் 1’ ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் 48-45 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதாவையும், மும்பை அணி 46-38 என்ற கணக்கில் அரியானா ஸ்டீலர்சையும் தோற்கடித்தன. இந்த வெற்றி மூலம், பெங்களூர், மும்பை அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. தோல்வியால் உ.பி.யோதா, அரியானா அணிகள் வெளியேற்றப்பட்டன.

    நேற்றைய ஆட்டங்களில் பவன்குமார் (பெங்களூர்) 20 புள்ளியும், அபிஷேக் (மும்பை) 16 புள்ளியும், அர்ஜூன் தேஷ்வால் (மும்பை) 15 புள்ளியும், விகாஸ் கண்டோலா (அரியானா) 13 புள்ளியும், ரிஷாங்க் தேவதிகா (உ.பி.) 11 புள்ளியும், ஸ்ரீகாந்த் ஜாதவ் (உ.பி.), பிரசாந்த்குமார் ராய் (அரியானா) தலா 9 புள்ளியும் எடுத்தனர்.

    இன்று ஓய்வு நாளாகும். அரை இறுதி ஆட்டங்கள் நாளை (16-ந்தேதி) நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் அரைஇறுதியில் தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த சீசனில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அரைஇறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றது. ஜோகீந்தர் நர்வால் தலைமையிலான அந்த அணி 15 ஆட்டத்தில் வெற்றி பெற்று 4 ஆட்டத்தில் தோற்றது. 3 போட்டி ‘டை’ ஆனது. மொத்தம் 85 புள்ளிகள் பெற்றது.

    டெல்லி அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்தப்போட்டி தொடரில் இரு அணிகளும் மோதிய 2 ஆட்டத்தில் டெல்லி ஒரு முறை வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டம் 39-39 என்ற கணக்கில் ‘டை’ ஆனது. டெல்லியில் நடந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி 33-31 என்ற கணக்கில் வென்றது.

    டெல்லி அணியில் நவீன்குமார் (270 புள்ளிகள்), சந்திரன் ரஞ்சித் (114 புள்ளி), விஜய் (56 புள்ளி), ரவீந்தர் பஹல் (59 புள்ளி), கேப்டன் ஜோகீந்தர் நர்வால், விஷால் மானே போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    நடப்பு சாம்பியனான பெங்களூர் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது.

    அந்த அணியில் நட்சத்திர வீரராக பவன்குமார் ஷெரவாத் உள்ளார். அவர் 321 ரெய்டு புள்ளிகள் உள்பட மொத்தம் 335 பாயிண்டுகள் பெற்றுள்ளார். இதுதவிர ரோகித்குமார் (89 புள்ளி), சுமித்சிங் (59 புள்ளி), மகேந்தர்சிங் (59 புள்ளி) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் மனீந்தர்சிங் தலைமையிலான பெங்கால் வாரியர்ஸ்- பசல் தலைமையிலான மும்பை அணிகள் மோதுகின்றன.

    பெங்கால் வாரியர்ஸ் 14 வெற்றி, 5 தோல்வி, 3 டையுடன் 83 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. நேரடியாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. அந்த அணி மும்பையை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்தப்போட்டி தொடரில் பெங்கால் வாரியர்ஸ் 2 முறையும், மும்பையை வீழ்த்தி இருந்தது. பாட்னாவில் நடந்த ஆட்டத்தில் 32-30 என்ற கணக்கிலும், கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் 29-26 என்ற கணக்கிலும் வென்று இருந்தது

    பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டன் மனீந்தர்சிங் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் 205 ரைடு புள்ளிகள் பெற்றுள்ளார். முகமது இஸ்மாயில் நபிபக்ஷ் (107 புள்ளி), தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் (101 புள்ளி), பல்தேவ்சிங் (62 புள்ளி) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளன.

    2015-ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி பெங்கால் வார்யர்சுக்கு பதிலடி கொடுத்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வேட்கையில் இருக்கிறது.

    மும்பை அணியில் அபிஷேக்சிங் (152 புள்ளி), கேப்டன் பசல் (83 புள்ளி), சந்தீப் நர்வால் (71 புள்ளி) அர்ஜூன் தேஷ்வால் அதுல், சுரேந்தர்சிங் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இறுதிப்போட்டியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும்.
    உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் கொல்கத்தாவில் இன்று மோதுகின்றன.
    கொல்கத்தா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகளும் என்று மொத்தம் 12 அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும்.

    இதில் ‘இ’ பிரிவில் இந்திய அணி இடம் பிடித்துள்ளது. ஓமன், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய அணிகள் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் தோல்வி கண்டது. 2-வது ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி ஆசிய சாம்பியனான கத்தாருடன் டிரா கண்டது.

    இந்த நிலையில் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    உலக தரவரிசையில் 187-வது இடத்தில் உள்ள வங்காளதேச அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், கத்தாரிடம் தோல்வி கண்டது. 104-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் சொதப்பியதால் ஓமனிடம் தோல்வி அடைந்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தாருக்கு சவால் அளித்து டிரா செய்ததன் மூலம் நம்பிக்கையை பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் சுனில் சேத்ரி இந்த போட்டியில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேச அணியை வீழ்த்தி தனது வெற்றி கணக்கை தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 15 முறையும், வங்காளதேச அணி 11 தடவையும் வென்று இருக்கின்றன. 2 ஆட்டம் டிராவில் முடிந்தன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இலங்கை அணித் தலைவரின் பாதுகாப்பு குறித்த விமர்சனம் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    இலங்கை அணி பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. சுமார் 10 வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றதால் வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

    அந்த பாதுகாப்பால் வீரர்கள் ஓட்டலிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் வீரர்கள் சோர்வடைந்தனர் என்ற இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்திருந்தார்.

    சில்வாவின் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கூறுகையில் ‘‘இலங்கை கிரிக்கெட் குழுவின் வற்புறுத்தலின் பேரில் இலங்கை அணிக்கு அதிபர் அளவிற்கான பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் காயப்படுத்தும் அளவிற்கான இலங்கை கிரிக்கெட் தலைவரின் கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளது. முடிந்த அளவிற்கு அவர்கள் வசதியாக தங்க வேண்டும் என்று விரும்பினோம்’’ என்று தெரிவித்துள்ளது.
    நான் கச்சிதமான ஆல்-ரவுண்டர், பந்து வீச்சு அல்லது பேட்டிங் என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அணிக்காக எனது பங்களிப்பு இருக்கும் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா. இவர் சிறந்த ஆல்-ரவுண்டர். முதல் தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்துள்ளார். ஆனால் இந்திய அணியில் இவரை முழுமையாக பந்து வீச்சில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். பேட்டிங்கில் முன்வரிசையில் களம் இறக்கப்படுவதில்லை.

    புனே டெஸ்டில் விஹாரிக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் 6-வது இடத்தில் களம் இறக்கப்பட்டார் ஜடேஜா. சிறப்பாக விளையாடிய அவர் 91 ரன்கள் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் இணைந்து 225 ரன்கள் குவித்தார்.

    டெஸ்ட் போட்டியில் ஒரு சதம், 12 அரைசதங்கள் அடித்துள்ள ஜடேஜாவின் சராசரி 34.42 ஆகும். ஆடும் லெவன் அணி பேலன்ஸ் அணியாக இருக்க ஜடேஜா முக்கிய காரணமாக இருக்கிறார்.

    இந்நிலையில் நான் ஒரு கச்சிதமான ஆல்-ரவுண்டர் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜடேஜா கூறுகையில் ‘‘நான் என்னை கச்சிதமான ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன். என்னால் எந்தவொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அது பேட்டிங்கா அல்லது பந்து வீச்சா என்பது ஒரு விஷயமே அல்ல.

    ஜடேஜா

    பந்து வீசினாலும், பேட்டிங் செய்தாலும் இரண்டிலும் என்னுடைய பங்களிப்பை கொடுப்பது அவசியம். பந்து வீசினால் விக்கெட்டுக்கள் வீழ்த்த வேண்டியது அவசியம். பேட்டிங் செய்தால் ஒவ்வொரு இன்னிங்சிலும் ரன்கள் அடிக்க வேண்டும். ஆனால் என்னை நான் பேட்டிங் ஆல்-ரவுண்டர் அல்லது பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் என்று பார்க்கவில்லை.

    நான் சிறந்த வாய்ப்பை பெற்றுக் கொண்டிருக்கிறேன் என என்னால் உறுதியாக கூற இயலும். 6-வது இடத்தில் களம் இறங்கினால் நீண்ட நேரம் ஆடுகளத்தில் நிற்க முடியும். நான் எப்போதெல்லாம் பேட்டிங் செய்ய செல்கின்றனோ, அப்போதெல்லாம் சற்று நேரம் ஆடுகளத்தில் நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். அதன்பின் எனது வழக்கமான ஷாட்டுகளை விளையாடுவேன். இது எனக்கு அதிக அளவில் உதவியாக இருக்கிறது’’ என்றார்.
    புனே டெஸ்டில் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் அடித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்று ஸ்மித்தை நெருங்கியுள்ளார் விராட் கோலி.
    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கடந்த ஒரு வருடமாக முதல் இடத்தில் இருந்தார். தடைக்குப்பின் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஆஷஸ் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இதனால் 937 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறினார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு இறங்கினார்.

    ஸ்டீவ் ஸ்மித்

    இந்நிலையில் புனேயில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் குவித்தார். இதனால் ஐசிசி தரவரிசையில் 37 புள்ளிகள் பெற்று 936 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் விராட் கோலி சிறப்பாக விளையாடினால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
    புனே டெஸ்டில் ஸ்டன்னிங் கேட்ச்கள் பிடித்த சகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன் என்று வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

    விராட் கோலியின் இரட்டை சதம், மயங்க் அகர்வாலின் சதம், இந்தியாவின் அபார வெற்றி ஆகியவற்றுடன் சகாவின் உலகத்தரம் வாய்ந்த விக்கெட் கீப்பிங் பணியும் சிறப்பாக பேசப்பட்டது.

    இரண்டு இன்னிங்சிலும் மூன்று கேட்ச்களை அபாரமாக பிடித்தார். முதல் இன்னிங்சில் ப்ரூயின் அடித்த பந்து முதல் ஸ்லிப்பையும் தாண்டி சென்றது. அதை அபாரமாக பாய்ந்து பிடித்தார். 2-வது இன்னிங்சில் ப்ரூயின் லெக் சைடில் அடித்த பந்தை இடது கையால் அபாரமாக பாய்ந்து பிடித்தார். அதன்பின் பிலாண்டர் அடித்த பந்தையும் சிறப்பாக பிடித்தார்.

    மூன்று முறையும் பந்து வீசியவர் உமேஷ் யாதவ். அபாரமான கேட்ச்களை பிடித்த அவருக்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன் என்று உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘லெக் சைடு சென்ற பந்துகளை அபாரமாக டைவ் அடித்து ஸ்டன்னிங் கேட்ச் பிடித்த சகாவிற்கு நான் கண்டிப்பாக ‘ட்ரீட்’ வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கடைசி இரண்டு விக்கெட்டும் சகாவின் விக்கெட்டுக்கள்தான்.

    பந்தை லெக் ஸ்டம்பிற்கு வெளியில் வீசும்போது, அது பவுண்டரியாகத்தான் இருக்கும் என்று நீங்கள் உறுதியாக நினைக்கலாம். ஆனால், அது கேட்ச்-யாக மாற சற்று வாய்ப்புள்ளது. வாய்ப்பு கிடைத்தால் சரியாக பயன்படுத்தி சகா கேட்ச் பிடித்து விடுவார் என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.
    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்த தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ், அனுபவம் இல்லாததால் தடுமாறுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
    புனே டெஸ்டில் படுதோல்வி அடைந்த பிறகு தென்ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில், ‘‘இந்திய துணை கண்டத்தில் விளையாடும்போது, முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டியது முக்கியம் என்பதை அறிவோம். அப்போதுதான் வெற்றி வாய்ப்பை பெற முடியும்.

    இந்த டெஸ்டில் நாங்கள் நன்றாக ஆடவில்லை. அடுத்த டெஸ்டில் முன்னேற்றம் காண முயற்சிப்போம். விராட் கோலியின் பேட்டிங் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. இந்த தொடரை வெல்வதற்கு இந்தியா தகுதியான அணி.

    உலகின் சிறந்த அணி என்றால், நிறைய அனுபவம் இருக்க வேண்டும். இப்போது நாங்கள் கிட்டத்தட்ட எல்லா அனுபவத்தையும் இழந்து விட்டோம். அனுபவம் வாய்ந்த ஸ்டெயின், மோர்னே மோர்கல், அம்லா, டி வில்லியர்ஸ் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டனர்.

    அவர்களது இடத்தை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது. இப்போது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில்தான் விளையாடி உள்ளனர். அவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள காலம் பிடிக்கும். அணியில் உள்ள சிறந்த வீரர்கள் வெளியேறும்போது, எந்த அணியும் இது போன்ற சவாலை (தடுமாற்றத்தை) சந்தித்துதான் ஆக வேண்டும்’’ என்றார்.
    பிசிசிஐ மீது கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்க எனக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்த கங்குலி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.  பிசிசிஐயின் தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில்,  கங்குலிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு காணப்படுகிறது. இதனால், கங்குலி அப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

    இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றாலும், வேறு யாரும் போட்டியிடாததால் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 47 வயதாகும் கங்குலி தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகிக்கிறார்.

    மனுதாக்கல் செய்த பின்னர் கங்குலி கூறுகையில் ‘‘போட்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும், பிசிசிஐ உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய அமைப்பாக இருப்பதால் பொறுப்பு இருக்க வேண்டும். நிதி ரீதியாக, இந்தியா ஒரு கிரிக்கெட் அதிகார மையமாக இருக்கிறது. எனவே இது ஒரு சவாலாக இருக்கும்.

    நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்கு தலைமை தாங்குவது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த அமைப்பிற்கு ஏற்பட்ட கெட்டபெயரை  துடைக்க இந்த நேரத்தில் ஏதாவது செய்ய எனக்கு கிடைத்து இருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். கடந்த மூன்று ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. நல்ல நிலையில் இல்லாத நேரத்தில் நான் பொறுப்பேற்கிறேன்.

    நான் எந்த ஒரு முடிவை எடுக்கும்போதும் முதலில் எல்லோரிடமும் கலந்து  பேசுவேன். ஆனால் முதல் தர கிரிக்கெட் வீரர்களைக் கவனிப்பதே எனது மிகப்பெரிய முன்னுரிமை ஆகும்’’ என கூறினார்.
    கங்குலி, எம்எஸ் டோனி ஆகியோர் போட்டி டிராவில் முடிந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை கொண்டவர்கள். ஆனால் விராட் கோலி இதில் மாறுபட்டவர் என காம்பிர் தெரிவித்துள்ளார்.
    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றியதன் மூலம் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.

    விராட் கோலி கடந்த 2014-ம் ஆண்டு எம்எஸ் டோனியிடம் இருந்து கேப்டன் பதவியை பெற்றுக் கொண்டார். கேப்டனாக பொறுப்பேற்றதும் வெற்றி என்பது மட்டுமே எனது குறிக்கோள். முடியாத கட்டத்தில் மட்டுமே டிரா குறித்து யோசிப்பேன் என்று தெரிவித்தார்.

    அதனடிப்படையில் அணியைத் தேர்வு செய்து அபாரமாக செயல்பட்டு வருகிறார். வெளிநாட்டு மண்ணில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி அதிகமான வெற்றிகளை ருசித்துள்ளது.

    இந்தியாவின் வெற்றிக்கு கங்குலி, எம்எஸ் டோனி, ராகுல் டிராவிட் ஆகியோரின் அணுகுமுறையை காட்டிலும் விராட் கோலியில் மாறுபட்ட அணுகுமுறைதான் காரணம் என காம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து காம்பிர் கூறுகையில் ‘‘விராட் கோலியின் கேப்டன்ஷிப் திறன் கங்குலி, எம்எஸ் டோனி, ராகுல் டிராவிட் ஆகியோரிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அவரின் பயமில்லாத அணுகுமுறை மற்றும் மனநிலை  டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிகளை குவிக்க காரணமாக உள்ளது. வெளிநாட்டில் கூட அவர் தனிப்பட்டவராக திகழ்கிறார்.

    தோல்வியடைந்து விடுவோம் என்று பயந்தால், நீங்கள் வெற்றி பெறவே முடியாது. தோல்வி குறித்து விராட் கோலி பயந்ததே கிடையாது. இது அவருக்கு மிகப்பெரிய சாதகமாக உள்ளது. நாம் கங்குலி, எம்எஸ் டோனி, ராகுல் டிராவிட் குறித்து பேசுகிறோம். ஆனால், விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் அதிக அளவில் வெற்றி வாகை சூடியுள்ளது.

    மற்ற கேப்டன்களை விட கோலி அதிகமாக ரிஸ்க் எடுத்து வருகிறார். மற்றவர்கள் போட்டியில் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதற்காக கூடுதல் பேட்ஸ்மேனோடு விளையாடுவார்கள். விராட் கோலி மட்டும்தான் வெளிநாட்டு தொடரில் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் (ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை சேர்த்து) விளையாடுகிறார்.

    தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் நான்கு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் களம் இறங்கினார். இதை சவாலாக ஏற்று வெற்றி பெற்றுள்ளார்’’ என்றார்.
    ×