என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரஞ்சி டிராபியில் சர்வீசஸ் அணிக்கெதிராக மோசமான தோல்வியை மும்பை அணி சந்தித்ததால் ஷ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே மீது முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    ரஞ்சி டிராபியில் மும்பை அணி சர்வீசஸ் அணியை எதிர்கொண்டது. பலமுறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி சர்வீசஸ் அணிக்கெதிராக திணறியது. முதல் இன்னிங்சில் 114 ரன்னில் சுருண்டதுடன், 2-வது இன்னிங்சிலும் 198 ரன்னில் சுருண்டது.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 46 ரன்களே முன்னிலைப் பெற்றிருந்ததால், சர்வீசஸ் அணி விக்கெட் ஏதும் இழக்காமல் எளிதில் சேசிங் செய்தது.

    10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி படுதோல்வியை சந்தித்ததை முன்னாள் வீரர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

    மும்பை அணியைச் சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். அவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினர்.

    அதன்பின் இந்திய அணி வரும் ஐந்தாம் தேதி இலங்கை அணியை எதிர்கொள்கிறது. சுமார் இரண்டு வார விடுமுறை இருந்தும் 25-ந்தேதி தொடங்கிய ரஞ்சி டிராபியை நிராகித்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதற்கு பதில் அளித்த மும்பை கிரிக்கெட் சங்கம் ‘‘இது மும்பை கிரிக்கெட்டிற்கு துரதிருஷ்டவசமானது. நாங்கள் இருவரிடமும் பேசினோம். அப்போது பிசிசிஐ எங்களை ஓய்வு எடுக்கச் சொல்லியுள்ளது என்று கூறினார்கள்.

    எனினும், நாங்கள் தேர்வுக்குழுவினருடன் பேசி உறுதி செய்தபோது, நாங்கள் அதுபோன்ற இந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்றனர். அப்படியென்றால் அவர்களை ஓய்வு எடுக்கச் சொன்னது யார்?. இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோவா? அல்லது டிரைனரா? அல்லது அவர்களே ஓய்வு எடுக்க முடிவு செய்தனரா? பிசிசிஐ பின்புறத்தில் இருந்து இப்படி செய்கிறார்களா?.

    தேர்வாளர்கள் உள்பட மும்பை கிரிக்கெட் சங்கம் இதை விரும்பவில்லை. அடுத்த உயர்மட்டக்குழுவில் இதுகுறித்து உறுதியாக விவாதிப்போம். முதல்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படலாம்’’ என விளக்கம் அளித்துள்ளது.
    இரண்டு டெஸ்டில் நான்கு முறையும் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தியதுடன், அதிவேகமாக 200 விக்கெட்டுக்களை வீழ்த்திய 2-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நீல் வாக்னர்.
    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த் மற்றும் மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

    என்றாலும் அந்த அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இரண்டு போட்டிகளின் நான்கு இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்கினார்.

    முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டும் வீழ்த்தினார். 2-வது போட்டியில் 6-வது விக்கெட்டை வீழ்த்தும்போது 200-வது விக்கெட்டை பதிவு செய்தார்.

    ஸ்டீவ் ஸ்மித்

    நீல் வாக்னர் 46-வது டெஸ்டில் 200-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் விரைவாக 200 விக்கெட்டுக்களை வீழ்த்திய 2-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ரிச்சார்ட் ஹெட்லீ 40 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுக்களை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

    டிரென்ட் போல்ட் 52 டெஸ்ட் போட்டிகளிலும், டிம் சவுத்தி 56 டெஸ்ட் போட்டிகளிலும் 200-வது விக்கெட்டை தொட்டனர்.
    நியூசிலாந்துக்கு எதிரான மெல்போர்ன் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியாவை நெருங்குகிறது.
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக்கை தொடங்கியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன்னணி 9 நாடுகளுக்கு இடையில் 72 போட்டிகள் நடைபெறும். இந்த போட்டிகள் 2019 முதல் 2021 வரை நடைபெறுகிறது. இதனடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

    இதற்கான புள்ளிகள் பட்டியலில் இந்தியா 7 போட்டிகளில் (3 தொடர்) வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் இருந்து ஆஸ்திரேலியா மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது.

    ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியதால் 120 புள்ளிகள் கிடைத்தது. தற்போது நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் 80 புள்ளிகள் கிடைத்துள்ளது.

    இதன்மூலம் ஆஸ்திரேலியா 256 புள்ளிகள் பெற்றுள்ளது. சிட்னியில் நடக்க இருக்கும் கடைசி போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தினால் 306 புள்ளிகள் பெற்றுவிடும். அப்போது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் 64 புள்ளிகள் மட்டுமே இடைவெளி இருக்கும்.

    இந்தியா பிப்ரவரி மாதம் நியூசிலாந்து சென்று இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா வங்காளதேசம் சென்று இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை இழந்தால் முதல் இடத்தை இழக்க நேரிடும்.

    அடுத்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா - இந்தியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
    மெல்போர்ன் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பீட்டர் சிடில் அறிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டில் சிடில். 35 வயதான இவர் நியூசிலாந்துக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்தார்.

    ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின்போது தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

    2008-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆன பீட்டர் சிடில் 67 டெஸ்டில் விளையாடி 221 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். கடைசியாக ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் விளையாடினார்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் சுவிட்சர்லாந்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடினார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் கடந்த 22-ந்தேதி நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்த போட்டிக்குப்பின் இந்தியா அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி இலங்கைக்கு எதிராக டி20 தொடரில் விளையாடுகிறது. இலங்கை தொடருக்கு முன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என வீரர்களுக்கு இரண்டு வாரங்கள் ஓய்வு கிடைத்தது.

    இதை பயன்படுத்தி இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் சுவிட்சர்லாந்து சென்று விடுமுறையை கொண்டாடினர். இருவரும் பனிப்படர்ந்த மலைப்பகுதியில் நின்று எடுத்த போட்டோவை விராட் கோலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில் அபாரமான பந்துவீச்சினால் நியூசிலாந்து அணியை 247 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்றது. ‘பாக்சிங் டே’ டெஸ்டான இதில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    டிராவிஸ் ஹெட் 114 ரன்னிலும், ஸ்டீவ் ஸமித் 85 ரன்னிலும், டிம் பெய்ன் 79 ரன்னிலும், மார்னஸ் லாபஸ்சாக்னே 63 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 155.1 ஓவரில் 467 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    நியூசிலாந்து அணி சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், டிம் சவுத்தி 3 விக்கெட்டும், கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அதன்பின், நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலிய வீரர்கள் அபாரமாக பந்து வீச நியூசிலாந்து 148 ரன்னில் ஆல் அவுட்டானது. டாம் லாதம் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஜேம்ஸ் பாட்டின்சன் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    319 ரன் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்துள்ளது

    இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    இதைத்தொடர்ந்து, 488 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் பிளெண்டல் இறுதிவரை தாக்குப் பிடித்தார். ஆனால் அவரது சதம் பயனளிக்கவில்லை. அவர் 121 ரன்னில் அவுட்டானார்.

    மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 71 ஓவரில் 240 ரன்களில் ஆல் அவுட்டானது. இதையடுத்து, 247 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியான் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் பாட்டின்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொட்ரை 2-0 என கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா. இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ஜனவரி 3ம் தேதி நடைபெறுகிறது.
    கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, கேரளா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.
    கொச்சி:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கேரளா மாநிலம் கொச்சியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் கேரளா அணியின் பர்தோலோமியூ ஆக்பெச்செ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என கேரளா முன்னிலை வகித்தது. 

    இரண்டாவது பாதியில் நார்த் ஈஸ்ட் அணியின் அசாமோ கியான் 50வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனிலைக்கு வந்தது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், கேரளா பிளாஸ்டர்ஸ், நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.

    இதன்மூலம் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தான் ஆடிய 10 போட்டிகளில் 1 வெற்றி, 4 தோல்வி மற்றும் 5 ஆட்டங்களில் டிரா செய்துள்ளதால் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.
    செஞ்சூரியனில் நடைபெற்று வரும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 376 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்கா அணி.
    செஞ்சூரியன்:

    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் ‘பாக்சிங் டே’ டெஸ்டாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்கா டி காக் (95), ஹம்சா (39), பிலாண்டர் (35), பிரிட்டோரியஸ் (33) ஆகியோரின் பங்களிப்பால் 284 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், சாம் கர்ரன் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது. ஜோ டென்லி மட்டும் அரைசதம் அடித்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பிலாண்டர் 4, விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும், அன்ரிச் நார்ஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    103 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. 2-ம் நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. வான் டெர் உசைன் 17 ரன்னும், அன்ரிச் நார்ஜ் 4 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. வான் டெர் டுசென் அரை சதமடித்தார். அவர் 51 ரன்னில் அவுட்டானார். பிளாண்டர் 46 ரன்னும், அன்ரிச் நார்ஜ் 40 ரன்னும், டி காக் 34 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 61.2 ஓவரில் 272 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 376 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடியது.
    தொடக்க ஆட்டக்காரர் சிப்லே 29 ரன்னில் அவுட்டானார்.

    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 41 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 77 ரன்னுடனும், ஜோ டென்லி 10 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

    2 நாள்கள் மீதமுள்ள நிலையில் இன்னும் 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து ஆடிவருகிறது. இதனால் ஆட்டத்தில் யார் வெற்றி பெறப்போவது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
    5 விக்கெட் வீழ்த்திய ஆர்ச்சரை பாராட்டும் வீரர்கள்
    மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டில் பாட் கம்மின்ஸ் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் எடுக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 148 ரன்களில் ஆல் அவுட்டானது.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘பாக்சிங் டே’ டெஸ்டான இதில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    டிராவிஸ் ஹெட் 114 ரன்னிலும், ஸ்டீவ் ஸமித் 85 ரன்னிலும், டிம் பெய்ன் 79 ரன்னிலும், மார்னஸ் லாபஸ்சாக்னே 63 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 155.1 ஓவரில் 467 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    நியூசிலாந்து அணி சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், டிம் சவுத்தி 3 விக்கெட்டும், கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அதன்பின், நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்து வீச்சில் சிக்கி நியூசிலாந்து வீரர்கள் திணறினர்.

    நியூசிலாந்து அணியின் டாம் லாதம் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் அடித்தார். அவர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    மற்றவர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 54.5 ஓவரில் 148 ரன்னில் ஆல் அவுட்டானது. 

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஜேம்ஸ் பாட்டின்சன் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 319 ரன் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது.

    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூ வேட் 15 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
     
    இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், 456 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு மையம் விதித்த 4 ஆண்டு தடையை எதிர்த்து ரஷியா அப்பீல் செய்துள்ளது.

    மாஸ்கோ:

    ஊக்க மருந்து விவகாரத்தில் ரஷிய விளையாட்டு நட்சத்திரங்கள் சிக்கி இருந்தனர். அந்நாட்டு அரசே இதற்கு ஆதரவாக இருந்தது தெரிய வந்தது.

    இதனால் சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு 15 மாதம் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 2016-ம் ஆண்டு நியோடி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியவில்லை.

    இது குறித்து விசாரணை நடத்திய உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் (டபிள்யு.ஏ.டி.ஏ) ரஷியாவுக்கு 4 ஆண்டு தடை விதித்தது.

    இந்த தடையால் டோக்கியோ ஒலிம்பிக் (2020) பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் (2020), கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டி (2022) ஆகியவற்றில் ரஷியா பங்கேற்க முடியாது.

    தனிப்பட்ட முறையில் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்கலாம்.

    இந்த நிலையில் சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு மையம் விதித்த 4 ஆண்டு தடையை எதிர்த்து ரஷியா அப்பீல் செய்துள்ளது.

    அந்நாட்டு ஊக்க மருந்து தடுப்பு மையம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அப்பீல் மனு சுவிட்சர்லாந்தின் லுசானாவில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (சி.ஏ.எஸ்) விரைவில் விசாரிக்கப்படும்.

    ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான போட்டியின் முடிவில் நிகாத் ஜரீனுடன் கைகுலுக்காதது குறித்து மேரி கோம் விளக்கம் அளித்தார்.
    புதுடெல்லி:

    ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டி சீனாவில் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில், இன்று நடைபெற்ற 51 கிலோ உடல் எடைப் பிரிவினருக்கான இறுதி ரவுண்டில் மேரிகோம் வெற்றி பெற்று, ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த போட்டியின் முடிவில் மேரி கோம், தன்னை எதிர்த்து போட்டியட்ட நிகாத் ஜரீனுடன் கைகுலுக்காமல் சென்றுவிட்டார். இது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, நான் ஏன் அவருடன் கைகுலுக்க வேண்டும்? என எதிர்கேள்வி கேட்டார் மேரி கோம்.

    ‘பிறர் நம்மை மதிக்க வேண்டும் என விரும்பினால் நாம் மற்றவர்களை மதிக்க வேண்டும். அத்தகைய குணம் கொண்டவர்களை நான் விரும்பவில்லை. குத்துச்சண்டை வீராங்கனை தன் தகுதியை களத்தில்தான் நிரூபிக்க வேண்டும், வெளியே அல்ல’ என மேரி கோம் தெரிவித்தார்.

    மேரி கோமை நேரடியாக ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு அனுப்ப நிகாத் ஜரீன் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 
    டெல்லியில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் நிகாத் ஜரீனை தோற்கடித்த மேரி கோம், ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதி பெற்றார்.
    புதுடெல்லி:

    ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டி சீனாவில் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி டெல்லியில் நடைபெற்றது. 

    இதில், 51 கிலோ உடல் எடைப் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஜூனியர் உலக சாம்பியனான தெலுங்கானாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன், தேசிய சாம்பியன் ஜோதி குலியாவை தோற்கடித்தார். இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியனான மணிப்பூரைச் சேர்ந்த மேரிகோம், ரிது கிரிவாலை வீழ்த்தினார். 

    நிகாத் ஜரீன்

    அதன்பின்னர் தகுதி சுற்றின் இறுதி ரவுண்டு இன்று நடைபெற்றது. இதில் 36 வயதான மேரிகோம், 23 வயதான நிகாத் ஜரீனை எதிர்கொண்டார். போட்டியின் துவக்கத்தில் இருந்தே அனுபவம் நிறைந்த மேரி கோம் ஆதிக்கம் செலுத்தினார். அவரது தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஜரின் திணறினார். 

    இறுதியில் 9-1 என்ற புள்ளிக் கணக்கில் மேரி கோம் வெற்றி பெற்றார். இதன்மூலம், ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் விளையாட மேரி கேம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மேரி கோமை நேரடியாக ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு அனுப்ப நிகாத் ஜரீன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ×