என் மலர்
விளையாட்டு
கொல்கத்தா:
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அன்றாட கூலி தொழிலாளர்கள் உணவுக்கு வழி இல்லாமல் தவிக்கிறார்கள்.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி உதவி வருகிறார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த ‘இஸ்கான்’ அமைப்பிற்கு தினமும் 10,000 பேருக்கு உணவு வழங்க தேவையான நிதியை அளித்துள்ளார். இதற்காக கையில் கிளவுஸ் முகத்தில் மாஸ்க் அணிந்து முழு பாதுகாப்புடன் அந்த மையத்திற்கு அவர் சென்றார். அங்குள்ள உணவு கூடத்தையும் அவர் பார்வையிட்டார். கங்குலி ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் பேளூர் மடத்திற்கு 20,000 கிலோ அரிசியை வழங்கி இருந்தார்.
கொரோனா வைரஸ் குறித்து கங்குலி கூறியதாவது;-
வீட்டுக்கு உள்ளேயே இருங்கள். நோய் தடுப்பு சக்தியை பராமரியுங்கள். சமூக விலகல் என்பது புதிய ஒற்றுமை, புதிய நல்லிணக்கம் என்பதையும், கொரோனாவுக்கு எதிரான போரில் இது நமது தேசிய கடமை என்பதையும் உணர வேண்டும்.
உலகம் முழுவதும் இது கடினமான காலகட்டம். இந்தியாவிலும் , பல்வேறு மாநிலங்களிலும் நாம் நிமிர்ந்து நின்று அதை எதிர்கொள்வோம். பிரதமர், முதல்-மந்திரிகள், சுகாதாரத்துறையினர் முயற்சி செய்கிறார்கள். போலீசார் சிறப்பாக பணியை செய்கிறார்கள்.
ஆனால் நாம் தனிமையைத் தான் பராமரிக்க வேண்டும். உத்தரவுகளை மதித்து பாதுகாப்பாக இருப்போம். நாம் ஒன்றிணைந்து பொறுப்பாக இருந்தால் இதில் வெல்லலாம்.
கொரொனா ஒரு அபாயகரமான வைரஸ். இதுவரை உலகம் இப்படி ஒன்றை பார்த்ததில்லை. உலகம் இனி இப்படி ஒன்றை காணாமலும் இருக்க வாய்ப்பு உள்ளது.
இது தனித்துவமான விதிவிலக்கான காலகட்டமாகும். ஆகவே பொறுப்பாக இருப்போம். வீட்டுக்குள்ளேயே இருந்து ஆரோக்கியத்தை காப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான 13- வது ஐ.பி. எல்லை கடந்த 29-ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி வருகிற 15-ந் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டு ஐ.பி. எல். போட்டி ரத்து செய்யப்பட அதிகமான வாய்ப்பு இருக்கிறது. 15 -ந் தேதிக்கு பிறகு இது குறித்து முடிவு செய்யப்படும்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா இது தொடர்பாக அவர் கூறியதாவது;- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.பி.எல். தொடரை விட ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முக்கியமானது.
மீண்டும் இயல்புநிலை திரும்பும்போது ஐ.பி.எல் தொடர் குறித்து யோசிக்கலாம். தற்போது உயிர் சேதம் ஏற்படுகிறது. இதனால் நமது உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நெருக்கடியான கட்டத்தில் உள்ளோம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் நன்றாக இருந்தது. வலைப்பயிற்சியில் டோனி சிறப்பாக பேட்டிங் செய்தார். 3 மணி நேரம் பேட்டிங் செய்த அவர் இளம் வீரர் போல் துடிப்புடன் காணப்பட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ல் உலக கோப்பை வென்றதை கொண்டாடி வருகிறோம். இறுதிப்போட்டியில் ஜாகீர்கான் பந்துவீச்சு, காம்பீர், டோனியின் பேட் டிங், யுவராஜ் சிங்கின் ஆல் ரவுண்டர் செயல்பாடு கை கொடுத்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு பனி நிவாரணத்திற்கு ரெய்னா ரூ.52 லட்சம் நிதி வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவு கரம் நீட்டி வருகிறார்கள். பிரதமரின் நிவாரண நிதிக்கு அவர்கள் தாராளமாக உதவி செய்து வருகிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யு மான கவுதம் காம்பீர் தனது 2 வருட சம்பளத்தை நிவாரணத் தொகையாக வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரணத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ. 71 லட்சத்து 14 ஆயிரத்தை நிதி உதவியாக அளித்துள்ளது.
அனைத்து மாநில ஒலிம்பிக் சங்கம், தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் விளையாட்டு அமைப்புகள் அளித்த ஆதரவுடன் இந்த நிதி உதவியை இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கி உள்ளது.
சோனிப்பட்:
கொரோனா வைரசை ஒழிக்க ஒன்றுபடும் வகையில் நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீடுகளில் மின் விளக்கை அணைத்து விட்டு அகல் விளக்குகளை ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு பல விளையாட்டு நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா இது தொடர்பாக கூறியதாவது;-
வீடுகளில் மின் விளக்குகளை அனைத்து விட்டு அகல் விளக்குகளை 9 நிமிடங்கள் ஏற்றவேண்டும் என்று நமது பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 22-ந் தேதி மக்கள் ஊரடங்கை அனைவரும் ஒருங்கிணைந்து பின்பற்றியது போல் இதையும் கடைபிடிக்க வேண்டும். எனது குடும்பத்துடன் இணைந்து விளக்கு ஏற்ற உள்ளேன். நீங்களும் இதை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரியானாவைச் சேர்ந்த பஜ்ரங் புனியா 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இருந்தார். மேலும் உலக சாம்பியன் போட்டியில் 3 பதக்கம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேபிள் டென்னிஸ் வீரர் ஹர்மீத் தேசாய் கூறும்போது, ‘கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் இந்த நேரத்தில் பிரதமர் விடுத்த வேண்டுகோளை ஏற்று அனைவரும் ஒன்றிணைவோம். நாளை அகல் விளக்கு ஏற்றி நமது ஒற்றுமை வெளிப்படுத்துவோம்‘ என்றார்.
ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனுடன் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் ஜாலியாக கலந்துரையாடினார். அப்போது பீட்டர்சன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து விராட் கோலி கூறியதாவது:
கேள்வி: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்னும் ஏன் ஒரு ஐ.பி.எல். கோப்பையை கூட வெல்லவில்லை?
பதில்: எங்கள் அணியில் மிகப்பெரிய வீரர்கள் உள்ளனர். நட்சத்திர வீரர்கள் இருக்கும் போது அந்த அணி மீது எப்போதும் அதிக எதிர்பார்ப்பும், கவனமும் வந்து விடுகிறது. மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறோம். சிறந்த அணியாக இருந்த போதிலும் ஒரு முறை கூட வாகை சூடவில்லை. இதே போல் மூன்று முறை பிளே-ஆப் சுற்றுக்கு வந்துள்ளோம். கோப்பையை வெல்லாத வரை இவை எல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஐ.பி.எல். கோப்பையை வெல்வதே எங்களது குறிக்கோள். அதற்கு நாங்கள் தகுதியான அணி. சில சமயம் கோப்பையை பற்றி பேசியே கூடுதல் நெருக்கடி உருவாகி விடுகிறது. எனவே நெருக்கடியை எடுத்துக் கொள்ளாமல், உற்சாகமாக விளையாட வேண்டியது முக்கியம்.
கேள்வி: ஐ.பி.எல்.-ல் உங்களது ஜாலியான இன்னிங்ஸ் எது?
பதில்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஒரு ஆட்டம் (2016-ம் ஆண்டு) மழையால் பாதிக்கப்பட்டு 14 அல்லது 15 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்தது. அந்த ஆட்டத்தில் களம் இறங்கி 12-வது ஓவரிலேயே சதம் (50 பந்தில் 113 ரன்) அடித்து விட்டேன். பந்தை சிறந்த முறையில் விரட்டியடித்தேன். எல்லா பந்தும் பேட்டில் சரியாக ‘கிளிக்’ ஆனது. இதில் என்னை அவர்களால் அவுட் ஆக்க முடியாது என்பது போல் உணர்ந்தேன். இப்படியொரு எண்ணம் இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. எனக்கு பிடித்த மிகவும் ஜாலியான இன்னிங்சாக இதை கருதுகிறேன்.


கேள்வி: கிரிக்கெட்டில் உங்களுக்கு எந்த வடிவிலான போட்டி பிடிக்கும்?
பதில்: டெஸ்ட் கிரிக்கெட் தான். இதை பல தடவை சொல்வேன். என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. ரன் எடுக்காத போதிலும் ஓட்டலுக்கு திரும்பி விட்டு அடுத்த நாள் உடனடியாக போட்டிக்கு தயாராக இருக்க வேண்டும். இது தான் வாழ்க்கை. அது தான் என்னை சிறந்த மனிதராக மாற்றியது.
கேள்வி: உங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான தருணம்?
பதில்: 2014-ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர் மோசமான நாட்களாக அமைந்தது. இந்த தொடரில் நான் சோபிக்க (5 டெஸ்டில் 134 ரன்) தவறினேன். அணிக்கு என்ன தேவை என்பதை விட எனது தனிப்பட்ட ஆட்டத்தில் ரொம்ப கவனம் செலுத்தி விளையாடியதால் வந்த தடுமாற்றம் அது. என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கிய தொடர்.
கேள்வி: நீங்கள் திடீரென சைவத்துக்கு மாறியது ஏன்?
பதில்: 2018-ம் ஆண்டுக்கு முன்பு வரை அசைவப் பிரியராகத் தான் இருந்தேன். 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது கழுத்து எலும்பில் பிரச்சினை ஏற்பட்டது. இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்தேன். பரிசோதனையில் எனது உடல் யூரிக் அமிலத்தை அதிகமாக உற்பத்தி செய்தது தெரியவந்தது. உடலில் அளவுக்கு அதிகமாக அமிலத்தன்மை இருந்தது. மாத்திரை சாப்பிட்டும் உடனடியாக சீராகவில்லை. எலும்பில் உள்ள கால்சியத்தை உடல் எடுத்துக் கொள்ள தொடங்கியதால் எலும்பும் பலவீனமடைந்தது. இதனால் அடுத்து நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது இறைச்சி உள்ளிட்ட அசைவம் சாப்பிடுவதை முழுமையாக நிறுத்திக் கொண்டேன். அதற்குரிய பலன் உடனே தெரிந்தது. உடலில் யூரிக் அமிலம் பிரச்சினை தீர்ந்தது. உடலில் புதிய மாற்றத்தை உணர்ந்தேன். காலையில் எழும் போது முன்பை விட மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்ந்தேன். போட்டியில் ஆடி விட்டு சோர்வடையும் போது அதில் இருந்து விரைவாக மீள முடிகிறது. எனது வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவு இது. சொல்லப்போனால் சைவ உணவு பழக்கத்துக்கு ஏன் முன்பே மாறவில்லை என்று நினைப்பது உண்டு.
கேள்வி: இந்தியாவில் தற்போது எந்த மாதிரியான சூழல் உள்ளது?
பதில்: கொரோனா தடுப்பு பணியில் எங்களது பொறுப்புணர்வு நன்றாக உள்ளது. ஒரு சில நபர்கள் வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத வீடியோவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அது எப்படி நடந்தது என்பது தெரியாது. ஆனால் மக்கள் நிலைமையை புரிந்து கொண்டு வழிகாட்டுதல்களை கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தை கையாள்வதில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
இவ்வாறு கோலி கூறினார்.
மேலும் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த கோலி, ‘கால்பந்து உலகில் லயோனல் மெஸ்சியை விட கிறிஸ்டியானா ரொனால்டோவை ரொம்ப பிடிக்கும், தாடியை மழித்து விட்டால் முகம் அழகாக இருக்காது. அதனால் தாடியை ஒரு போதும் எடுக்க மாட்டேன், 2011-ம் ஆண்டு இந்தியாவில் உலக கோப்பையை வென்றது மறக்க முடியாது தருணம், இதுவரை நான் விளையாடாத விளையாட்டுகளில் கோல்ப்பும் ஒன்று’ என்றும் அவர் கூறினார்.







