என் மலர்tooltip icon

    விளையாட்டு

    21 நாள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிற்குள்ளேயே இருக்கும் இந்த நேரத்தில் ஒவ்வொருவருக்கும் மனவலிமை மிகமிக முக்கியமானது என ரகானே தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இத்தனை நாள் உத்தரவை இந்தியா ஏறக்குறைய சந்தித்ததே கிடையாது. இதனால் வீட்டிற்குள்ளேயே தங்கியிருக்க மக்கள் சிரமப்படுகிறார்கள்.

    அதேவேளையில் வீட்டிற்குள்ளேயே இருக்கும் மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலையும் உள்ளது. இந்நிலையில் இந்த இக்கட்டான நிலையில் மனவலிமை மிகமிக முக்கியமானது என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘இந்த லாக்டவுன் நேரத்தின்போது மனவலிமை மிகமிக முக்கியமானது. மனநலம் தொடர்புக்காக ஆலோசனை வழங்க உதவி எண் ஏற்பாடு செய்திருக்கும் மகாராஷ்டிரா அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது’’ எனத் தெரிவித்துள்ளார்.
    பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் கம்பிர் தனது இரண்டு வருட எம்.பி.க்கான சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கைக்கு பணம் சேகரிக்கும் வகையில் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

    அதனடிப்படையில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தற்போது எம்.பி.யாகவும் இருக்கும் கவுதம் கம்பிர் ஏற்கனவே தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியிருந்துார்.

    இந்நிலையில் தனது இரண்டு வருட சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இதுகுறித்து கவுதம் கம்பிர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மக்கள் தங்களுடைய நாடு அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உங்களுடைய நாட்டிற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? என்பதுதான் உண்மையான கேள்வி. நான் என்னுடைய இரண்டு வருடத்திற்கான எம்.பி. சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன். நீங்களும் முன்வர வேண்டும்!’’ எனத் தெரிவித்துள்ளார்.
    வார்விக்‌ஷைர் கவுன்ட்டி கிளப் ஏற்கனவே விட்டாலிட்டி பிளாஸ்ட் தொடரை தேசிய சுகாதார சேவையைச் சேர்ந்த ஸ்டாஃப்கள் இலவசமாக பார்க்கலாம் என அறிவித்துள்ளது.
    இங்கிலாந்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று எட்ஜ்பாஸ்டன். வார்விக்‌ஷைர் கவுன்ட்டி கிளப் அணி இந்த மைதானத்தை நிர்வகித்து வருகிறது.

    தற்போது இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின எண்ணிக்கை இங்கிலாந்தில் 34 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், 2921 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இங்கிலாந்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதமாக எடுக்காததால்தான் தொற்று அதிகரிக்க காரணம் எனக்கூறப்படுகிறது. அதேவேளையில் ஒரு நாளுக்கு 13 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவு எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இந்த மாதம் இறுதிக்குள் தினந்தோறும் ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யும் வகையில் மையங்கள் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மக்கள் பயன்படுத்தும் பொதுவான இடங்களை தற்காலிய மருத்துவமனையாக மாற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில்தான் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானமான எட்ஜ்பாஸ்டனை நிர்வகித்து வரும் வார்விக்‌ஷைர் கவுன்ட்டி கிளப் கார் பார்க்கிங் இடத்தை கொரோனா வைரஸ் பரிசோதனை மையமான மாற்றுவதற்கு முன்வந்துள்ளது.

    ‘‘எங்களுடைய கவுன்ட்டி கிரிக்கெட், ஆலோசனைக் கூட்டங்கள், வருத்தகம் தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்து 29 மே வரை தள்ளிவைக்கப்பட்டுள்ள. இந்த மோசமான நிலையில் உள்ளூர் மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என ஸ்டாஃப்கள் விரும்புகின்றனர். கிளப்பின் உறுப்பினர்கள், முன்னாள் வீரர்கள் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

    எங்களுடைய ஒரு சிறிய பங்களிப்பை செய்ய இருக்கிறோம். எங்களது மைதானம் இக்கட்டான நிலையில் மக்களுக்கு உதவ முடியும் என்பதால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என வார்விக்‌ஷைர் கவுன்ட்டி கிளப் தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் தள்ளி வைக்கப்பட்டுள்ள கால்பந்து லீக்குகள் முடிவு பெறாவிடில் இழப்பை சந்திக்க நேரிடும் என ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
    ஐரோப்பியாவில் உள்ள 29 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்பந்து கிளப் அணிகள் உள்ளன. இவைகள் ஐரோப்பியன் கிளப் அசோசியேசன் மற்றும் ஐரோப்பியன் லீக்குகள் அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது.

    29 நாடுகளிலும் உள்ள கிளப்புகள் தரம் பிரித்து லீக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அணிகள் ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட தகுதிபெறும்.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து லீக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் இருக்கிறது. இதனால் நிறுத்தப்பட்ட போட்டிகள் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை.

    இதனால் பெல்ஜியம் லீக் போட்டியின் அமைப்பாளர்கள் இத்துடன் தங்களுடைய லீக்கை முடித்துக் கொண்டு புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மற்ற லீக்குகளின் அமைப்புகளும் இதே முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுவாக போட்டிகள் அனைத்தும் முடிந்த பிறகு புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்து அணிகள் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான அட்டவணை தயாரிக்கப்படும்.

    ஒருவேளை பாதிலேயே லீக்குகளை முடித்துக்கொண்டால் முன்னணி அணிகள் சாம்பியன்ஸ் லீக்கை தவறவிட வேண்டிய நிலை ஏற்படும் என ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
    டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.
    ஜப்பானின் டோக்கியோவில் இந்த வருடம் ஜூலை 24-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 9-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகக்பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால் அடுத்த வருடம் ஜூலை 23-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடைபெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

    இந்த வருடம் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் வகையில் அதற்கான தகுதிச்சுற்றுகள் நடைபெற்று வந்தன. தற்போது அடுத்த வருடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்ப புதிய காலக்கெடுவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

    அதன்படி அடுத்த ஆண்டு ஜூன் 29-ந்தேதி வரை தகுச்சுற்றுகள் நடத்தி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என அறிவித்துள்ள ஐஓஏ, இந்த காலக்கட்டத்திற்குப் பிறகு தகுதி பெற முடியாது என்று தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கும் நியூசிலாந்து ‘ஏ’ அணி இதுவரை தனது திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று மூலம் கிரிக்கெட் போட்டிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. கடைசியாக இந்தியா - நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரும், தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரும் நடைபெற்றன.

    நியூசிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் மட்டுமே கோடைக்கால கிரிக்கெட்டை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கிரிக்கெட் போட்டி இனிமேல் எப்போது தொடங்கும் என்பது யாருக்கும் தெரியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் வீரர்களின் ஊதியத்தில் பிடித்தம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நியூசிலாந்து ‘ஏ’ அணி ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்து விளையாட இருக்கிறது. இந்தத் தொடரை தள்ளிப்போட விரும்பவில்லை என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    மேலும் நியூசிலாந்து கிரிககெட் போர்டின் தலைமை நிர்வாகி டேவிட் கூறுகையில் ‘‘உண்மையிலேயே இந்த சூழ்நிலை விளையாட்டு போட்டியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய அளவில் ஏமாற்றமாக இருக்கும். உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், நாம் விளையாட்டு வீரர்களை மட்டுமல்ல, மிகப்பெரிய அளவில் சமூகத்தின் நலத்தையும் பார்க்க வேண்டும்.

    நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு ஒரு அதிர்ஷ்டம். கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன் நாங்கள் கோடைக்காலத்தில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிவிட்டோம். எனினும், தற்போது நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. எங்களுடைய கிரிக்கெட் சமூகம் படும் கஷ்டத்தை புரிந்துள்ளோம்.

    நாங்கள் நியூசிலாந்து அரசின் ஊதிய மானிய திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளோம். இதனால் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த முடக்கத்தின்போது சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக ஜூன் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர்கள் நடப்பது சந்தேகம்தான். ஆனால் ஆகஸ்ட் மாதம் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான தொடரை இதுவரை ரத்து செய்யும் எண்ணம் ஏதும் இல்லை’’ என்றார்.
    இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனுடன் இன்ஸ்டாகிராமில் லைவ்-செசனில் கலந்துரையாடிய விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிதான் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. ஆகவே வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். முன்னணி வீரர்கள் லைவ்-சாட் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் ஆகியோர் இன்ஸ்டாகிராம் லைவ்-செசன் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

    அப்போது விராட் கோலி டெஸ்ட் போட்டிதான் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்டெ் என நான் ஐந்து முறை கூறுவேன். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டுதான் வாழ்க்கையின் பிரதிநித்துவம். நீங்கள் ரன்கள் அடிக்கலாம். அடிக்காமல் போகலாம். மற்றவர்கள் பேட்டிங் செய்யும்போது கைகளை தட்டலாம். நீங்கள் உங்களுடைய அறைக்கு செல்ல வேண்டும். அடுத்த நாள் விளையாட வரவேண்டும்.

    நீங்கள் ரன் அடித்தாலும், அடிக்காவிட்டாலும் இந்த வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் யாரிடமும் போட்டியிடாத வாழ்க்கை போன்றது. டெஸ்ட் கிரிக்கெட் என்னை சிறந்த மனிதனாக உருவாக்கியுள்ளது’’ என்றார்.

    விராட் கோலி 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7240 ரன்களுடன் அடித்துள்ளார். சராசரி 53.63 ஆகும். 27 சதங்கள் விளாசியுள்ளார்.
    ஆஸ்திரேலியாவின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை தொடர்கள் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் ஏறக்குறைய அனைத்து விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அல்லது தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 2020 சீசன் வரும் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முழுமையான ஒத்திவைக்கப்படவில்லை. ஆனால் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருவதால் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஐபிஎல் நிர்வாகம் போட்டியை இன்னும் ரத்து செய்யவில்லை. ஆஸ்திரேலியாவில் ஆறு மாதங்களுக்கு எல்லையை மூடியுள்ளது. இதனால் அக்டோபர் மாதம் தொடங்கும் டி20 உலக கோப்பை தள்ளிப்போகலாம் எனத் தெரிகிறது.

    ஆனால் ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய கிரிக்கெட் தொடர்களும் நடைபெறும் என கொல்கத்தா அணியால் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘அவர்கள் உண்மையிலேயே இதுவரை போட்டி ரத்து செய்யவில்லை. அதுபோன்ற எண்ணமும் அவர்களுக்கு இதுவரை இல்லை. இன்னும் அந்த முடிவிலேயே இருப்பதால் நாங்கள் எங்கள் அணிகளுடன் சில நாட்களுக்கு ஒருமுறை தொடர்பில் இருந்து வருகிறோம்.

    ஒவ்வொருவரும் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில்தான இருக்கிறோம். ஆனால் வைரஸ் தொற்றின் பரவுதலை குறைப்பதற்கே முன்னுரிமை.

    டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் ஆறு முதல் ஏழு மாதங்கள் உள்ளன. மிகப்பெரிய தொடரான இந்தியா - ஆஸ்திரேலியா தொடருக்கு எட்டு முதல் ஒன்பது மாதங்கள் உள்ளன. அதற்குள் ஏராளமான விஷயங்கள் மாறலாம்’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் தொடரை ரத்து செய்து இந்தியாவில் இருந்து சொந்த நாடு திரும்பிய தென்ஆப்பிரிக்கா வீரர்களுக்கு நோய் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தென்ஆப்பிரிக்கா அணி கடந்த மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. மார்ச் 12-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை இந்தத் தொடர் நடைபெற இருந்தது. இமாச்சல பிரதேசம் தரம்சாலாவில் நடைபெற இருந்த முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் லக்னோவில் நடைபெற இருந்த 2-வது போட்டியும், கொல்கத்தாவில் நடைபெற 3-வது போட்டியும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. தென்ஆப்பிரிக்கா வீரர்கள் 18-ந்தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்டனர்.

    இந்தியாவில் அப்போது கொரோனா வைரஸ் பாதித்திருந்தது உறுதி செய்யப்பட்டதால் தென்ஆப்பிரிக்கா சென்ற வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். 14 நாட்கள் தனிமைப்பட்ட காலம் நிறைவு அடைந்த நிலையில் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடலாம். ஆனால், தற்போது தென்ஆப்பிரிக்காவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இன்னும் இரண்டு வாரத்திற்கு அவர்களால் வெளியில் செல்ல முடியாது.
    டோனியின் சிக்சர் மட்டும் காரணமல்ல. இந்திய அணியின் ஒருங்கிணைந்த முயற்சியால் தான் உலக கோப்பையை வென்றோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் டோனி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை உச்சி முகர்ந்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றியை தன்வசப்படுத்தியது. ஆட்டம் இழக்காமல் 91 ரன்கள் சேர்த்த டோனி சிக்சர் விளாசி அணி வெற்றி இலக்கை எட்ட உதவினார். யுவராஜ்சிங் 21 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். தொடக்க விக்கெட்டுகள் விரைவில் சரிந்த நிலையில் நிலைத்து நின்று விளையாடி 97 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த கவுதம் கம்பீர் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ஆட்டநாயகனாக டோனியும், தொடர் நாயகனாக யுவராஜ்சிங்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்திய அணி உலக கோப்பையை வென்றது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 1983-ம் ஆண்டில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக இங்கிலாந்தில் உலக கோப்பையை வென்று சாதித்து இருந்தது. சொந்த மண்ணில் இந்திய அணி உலக கோப்பையை வென்று 9 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று அந்த மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்கள் உள்பட பலரும் சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து கொண்டாடினார்கள்.

    இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் டோனி சிக்சர் அடித்த புகைப்படத்தை வெளியிட்ட கிரிக் இன்போ இணையதளம், ‘இந்த ஷாட் மில்லியன் இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது’ என்று குறிப்பிட்டு இருந்தது. டோனியின் சிக்சர் தான் வெற்றிக்கு காரணம் என்பது போல் வெளியிடப்பட்ட இந்த படத்தால் கவுதம் கம்பீர் கடும் கோபம் அடைந்துள்ளார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாரதீய ஜனதா கட்சி டெல்லி எம்.பி.யு.மான கவுதம் கம்பீர் காட்டமாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஒரு சிறிய நினைவூட்டல். 2011-ம் ஆண்டு உலக கோப்பையை ஒட்டுமொத்த இந்தியாவும், இந்திய அணியும், பயிற்சியாளர்களும் ஒருங்கிணைந்த முயற்சியால் வென்றார்கள். சிக்சர் மீதான உங்களின் அதீத விருப்பத்தை கைவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில் கம்பீர் தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், ‘நாடு நமக்கு என்ன செய்தது எனக் கேட்கிறார்கள். நிஜமான கேள்வி நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்பது தான். கொரோனா தடுப்பு பணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினருக்கான எனது 2 ஆண்டு சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல் மற்றவர்களும் தாராளமாக நிதியுதவி வழங்க முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். ஏற்கனவே அவர் தனது உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியை நிவாரண நிதிக்கு ஒதுக்கீடு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீட்டிற்குள்ளேயே இருப்பதால் வெப்-சீரியஸை பார்க்கும் ஸ்ட்ரீமிங் வெப்சைட்டுகள், நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட பலவற்றின் சந்தாதாரராகியுள்ளேன் என பும்ரா தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. ஆகவே வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வெப்-சீரியஸ் பார்த்து நேரத்தை கழித்து வருகின்றனர்.

    மேலும் முன்னணி வீரர்கள் லைவ்-சாட் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர். இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனும், முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான பும்ரா ஆகியோர் லைவ்-சாட்டின்போது பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

    21 நாள் லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும்போது வெப்-சீரிஸ் பார்த்து வருகிறேன் என்று பும்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘இந்த நேரத்தில் அம்மாவுக்கு உதவி செய்து கொடுக்கிறேன். மேலும் கார்டனில் வேலைகள் செய்கிறேன். இது முற்றிலும் மாறுபட்ட அனுபவம்.

    ஒவ்வொரும் நாளும் எழுந்த பிறகு, என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேன். தற்போது சில விஷேசமான செயலிகளை பார்த்து வருகிறேன். ஸ்ட்ரீமிங் வெப்சைட்டுகள், நெட்பிளிக்ஸ், அமேசான் போன்றவற்றில் தற்போது சந்தாதாரராகியுள்ளேன். தற்போது எல்லாவற்றையும் பார்க்க முயற்சி செய்து வருகிறேன்’’ என்றார்.
    மழையால் போட்டி பாதிக்கப்படும்போது கையாளப்படும் டக்வொர்த் லீவிஸ் விதியை உருவாக்கியவர்களில் ஒருவரான டோனி லீவிஸ் 78 வயதில் காலமானார்.
    ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி20 கிரிக்கெட் போட்டிகளில் மழையால் பாதிக்கப்பட்டால் ‘ரிசர்வ் டே’ என அழைக்கப்படும் அடுத்த நாள் போட்டி தொடர்ந்து நடைபெறும். இதனால் நேரம் வீணாகுவதோடு ரசிகர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

    இதை கருத்தில் கொண்டு டோனி லீவிஸ் - பிராங்க் டக்வொர்த்து ஆகியோர் ஒன்றிணைந்து ஒரு கணக்கு பார்முலாவை உருவாக்கினர். முதல் அணி எத்தனை ஓவர்கள் விளையாடுகிறது. எவ்வளவு ரன்கள் அடித்துள்ளது. எவ்வளவு விக்கெட்டுக்களை இழந்தது என்பதை கணக்கில் கொண்டு சேஸிங் அணிக்கு எவ்வளவு ரன்கள் இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கான பார்முலாவை இவர்கள் உருவாக்கினர்.

    இந்த பார்முலாவை ஐசிசி ஏற்றுக்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனர். இருவரின் பெயரையும் சேர்த்து டக்வொர்த் லீவிஸ் என அதற்கு பெயரிட்டுள்ளனர்.

    அதை உருவாக்கியவர்களில் ஒருவரான டோனி லீவிஸ் 78 வயதில் காலமாகியுள்ளார். 1997-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த விதி 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவரது மறைவுக்கு ஐசிசி இரங்கல் தெரிவித்துள்ளது.

    2014-ல் டி20-க்கும் சேர்த்து அந்த விதியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்டெர்னின் பெயரையும் சேர்த்து டக்வொர்த் லீவிஸ் ஸ்டெர்ன் விதி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
    ×