என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பிரான்சில் கால்பந்து அணிக்கு மருத்துவ ஆலோசகராக செயல்பட்டுவந்த டாக்டர் தனக்கு கொரோனா வைரஸ் பரவியதால் தற்கொலை செய்து கொண்டார்.
    பாரிஸ்:

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 202 நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    உலகம் முழுவதும் 13 லட்சத்து 42 ஆயிரத்து 235 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 74 ஆயிரத்து 554 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஐரோப்பிய நாடான பிரான்சிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்நாடில் இதுவரை 98 ஆயிரத்து 10 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

    மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 833 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 911 ஆக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே, அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவிய டாக்டர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

    பெர்னெட் ஹன்சலிஸ்( 60 வயது) என்ற டாக்டர் பிரான்ஸ் நாட்டின் ரிம்ஸ் மாகாணத்தை சேர்ந்த லீக் ஒன் சைட் ஸ்டெடி டி ரிம்ஸ் எனப்படும் கால்பந்து கிளப் அணிக்கு மருத்துவ ஆலோசகராக கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். 

    தற்கொலை செய்து கொண்ட பெர்னெட் ஹன்சலிஸ்

    மனைவியுடன் வசித்து வந்த டாக்டருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். 

    இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டிருந்த பெர்னெட் நேற்று அவரது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டார். 

    இந்த சம்பவம் ஸ்டெடி டி ரிம்ஸ் கிளப் கால்பந்து அணிக்கு மட்டுமல்லாமல் பிரான்ஸ் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் தெரிவித்து இருப்பது வேடிக்கையானது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. சர்வதேச மற்றும் உள்ளூர் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. வருகிற ஜூலை மாதம் தொடங்க திட்டமிடப்பட்டு இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. கடந்த மாதம் (மார்ச்) ஆரம்பிக்க இருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந் தேதி வரை தள்ளிபோடப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் முடிந்து உலக நாடுகள் சந்தித்துள்ள முடக்கம் மட்டுமின்றி, தடைபட்டுள்ள விளையாட்டு போட்டிகளும் சகஜ நிலைக்கு திரும்புவது எப்போது? என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

    எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இடர்பாட்டால் சர்வதேச விளையாட்டு போட்டிகள் தள்ளிபோடப்பட்டதாலும், ரத்து செய்யப்பட்டதாலும் விளையாட்டு அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களுக்கும், பல நாடுகளின் கால்பந்து சங்கங்கள் மற்றும் கிளப்புகளுக்கும், உலக டென்னிஸ் சங்கத்துக்கும் அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது. இதனால் தங்களது ஒப்பந்த வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்து வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பல்வேறு கால்பந்து கிளப்புகள் முடிவு செய்து இருக்கின்றன.

    இதற்கிடையில் கொரோனா தாக்கம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் அசோக் மல்கோத்ரா கருத்து தெரிவிக்கையில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பல ரத்து செய்யப்பட்டு இருப்பதால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவரின் இந்த கருத்துக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எழுதி இருக்கும் ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:

    ‘எந்தவொரு விளையாட்டிலும் நீங்கள் விளையாடாவிட்டால் உங்களுக்கு சம்பளம் கிடைக்காது. அதுபோல் தான் இந்த விஷயத்திலும் நடக்கும். இந்தியாவை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முதல் தர வீரர்களுக்கான சம்பளத்தை குறைத்து வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் கருத்து தெரிவித்து இருந்ததை பார்க்க வேடிக்கையாக இருந்தது.

    இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று அவர் முயற்சிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வீரர்கள் சம்பளம் குறைப்பு குறித்து பேச அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்பதே கேள்வியாகும். நடப்பு இந்திய சர்வதேச வீரர்கள் மற்றும் முதல் தர வீரர்கள் யாரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. எனவே வீரர்கள் சார்பில் அவரால் பேசமுடியாது. உங்களது சொந்த பணத்தில் பாதிப்பு ஏற்படாதபட்சத்தில் சம்பளம் குறைப்பு குறித்து பேசுவது என்பது எளிதான விஷயம் தான்’.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் ஏற்கனவே கருத்து தெரிவிக்கையில், ‘கொரோனா தாக்கத்தால் பெரிய பின்னடைவை சந்தித்து இருப்பது உண்மை தான். வீரர்களுக்கான சம்பளம் குறைப்பு குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாரும் சிந்திக்கவில்லை. எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்த பிறகு அனைத்து தரப்பினரின் நலனையும் கருத்தில் கொண்டு நியாயமான முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
    கிரிக்கெட் போட்டியின்போது நிதானத்தை கடைபிடிக்க செஸ் அறிவு கைக்கொடுக்கிறது என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹல். இக்கட்டான நிலையில் பந்து வீச அழைத்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி பந்து வீச தயாராக இருப்பார். கிரிக்கெட்டிற்கு முன் இவர் சிறந்த செஸ் வீரர். செஸ் போட்டியில் சாதிக்க நிதானம் தேவை.

    செஸ் போட்டியில் கற்றுக்கொண்டது கிரிக்கெட் போட்டியின்போது பயன்படுகிறது என சாஹல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘டெஸ்ட் போட்டிகளில் ஒருநாள் முழுவதும் (பந்து வீச்சாளர்கள்) நீங்கள் நன்றாக பந்து வீசினாலும் கூட சில நேரங்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் போகலாம். ஆனால், அடுத்த நாளும் பந்து வீச வரவேண்டும்.

    ஆகவே நிதானம் மிகவும் அவசியம். செஸ் இந்த விஷயத்தில் எனக்கு அதிக அளவில் கற்றுக் கொடுத்துள்ளது. நிதானத்தை கடைபிடித்து பேட்ஸ்மேன்களை அவுட்டாக்குவதை கற்றுள்ளேன்’’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக நிதி வழங்கலாம் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    அதன்படி பிரதமர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

    ஏற்கனவே ரெய்னா, ரோகித் சர்மா, சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி, தவான், ரகானே, கவுதம் கம்பிர் போன்றோர் நிதியுதவி அளித்துள்ளனர். யுவராஜ் சிங் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நாம் ஒருங்கிணைந்து நிற்கும்போது மிகவும் வலிமையடைவோம்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
    ஐபிஎல் போட்டியின் முடிவு சிறந்த பினிஷர் சிறந்த பந்து வீச்சாளரை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொறுத்துதான் அமையும் என ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் பரபரப்பானதாக காணப்படும். ஐபிஎல் போட்டியில் முக்கிய காரணியாக அமைவது சிறந்த பினிஷர் சிறந்த டெத் பவுலரை எப்படி கையாள்கிறார் என்பதுதான்.

    இதில் மும்பை இந்தியன்ஸ் மலிங்காவைவிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி சிறந்தவர் என ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ள நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

    ஸ்காட் ஸ்டைரிஸ் இதுகுறித்து கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டியில் முக்கியம்சம் சிறந்த பினிஷர் எப்படி சிறந்த டெத் பந்து வீச்சாளரை எதிர்கொள்கிறார் என்பதுதான். எம்எஸ் டோனி - மலிங்கா இடையிலான போட்டியில் மலிங்காவை விட எம்எஸ் டோனிதான் சிறந்தவர்.

    சிஎஸ்கே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை நாக்அவுட் சுற்றை தவறவிட்டது கிடையாது. அவர்கள் நாக்அவுட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றுள்ளனர். சிஎஸ்கே இந்திய அணிக்கான புதுமுக வீரர்களை தயார் செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் இந்திய வீரர்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் தொடர்ச்சியாக வீரர்களை உருவாக்குவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

    மும்பை இந்தியன்ஸ் நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதில் மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்துள்ளது.
    இந்திய டெஸ்ட் அணி பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரி தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர், சிறந்த கேப்டன் யார் என்பதை குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் உள்ளன. இந்த நேரத்தில் வீட்டிற்குள்ளேயே இருக்கும் கிரிக்கெட் வீரர் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

    அந்த வகையில் இந்தியா டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் ஹனுமா விஹாரி ‘‘அனைத்து காலக்கட்டத்திலும் பிடித்த கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர். மகேந்திர சிங் டோனி, விராட் கோலி ஆகியோர் சிறந்த கேப்டன்கள், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாதான் சிறந்த தொடக்க பேட்ஸ்மேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.


    மேலும் ‘‘அவரது வேலையை சரியாக செய்வதில் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் விராட் கோலி உதாரணமாக திகழக்கூடியவர். வீரர்கள் அறையில் இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருப்பார். அவரை ரோல் மாடலாகவும், அவரை பின்பற்றக்கூடிய ஒருவராகவும் நாங்கள் பார்க்கிறோம்’’ என்றும் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்த ஆஸ்திரேலியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ'கீபே முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஸ்டீவ் ஓ'கீபே. 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து விளையாடும்போது ஒரு டெஸ்டில் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்தியாவை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார்.

    35 வயதாகும் இவர் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் சிறப்பாக விளையாடினார். ஆனால், நியூ சவுத் வேல்ஸ் அணி அவரை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது. இதனால் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இந்த முடிவு குறித்து ஸ்டீவ் ஓ'கீபே கூறுகையில் ‘‘நான் ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை என்று கூறும்போது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் முடிவுக்கு நான் மரியாதை கொடுத்து ஏற்றுக்கொள்கிறேன். ஆகவே, முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். நான் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய காலத்தைப் பற்றி நினைக்கும்போது, நான் பலவற்றை தவறவிட இருக்கிறேன்’’ என்றார்.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி, ஐபிஎல் போட்டி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டால் மிகப்பெரிய ஏமாற்றமாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் மிகமிக முக்கியமானது நாட்கள் என்று கருதப்படுகிறது.

    இதற்கிடையே ஏப்ரல் 14-ந்தேதியுடன் முடிவடையும் 21 நாட்கள் ஊடரங்கு உத்தவை நீட்டிக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இதனால் ஐபிஎல் போட்டியை தள்ளி வைப்பதோ? அல்லது ரத்து செய்வதோ? குறித்து பிசிசிஐ இன்னும் இறுதி முடிவு எடுக்கவி்ல்லை.

    ஏராளமான இளம் வீரர்களை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுத்துள்ளன. அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தன. கொரோனா வைரஸ் இந்த இளைஞர்களின் கண்ணில் மண்ணைத் தூவியுள்ளது.

    இந்நிலையில் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி ஐபிஎல் தொடர் மீண்டும் தள்ளிப்போனால் மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் நவ்தீப் சைனி இதுகுறித்து கூறுகையில் ‘‘ஐபிஎல் மிகப்பெரிய தொடர்களில் ஒன்று. ஆகவே, இந்தத் தொடர் நடைபெறாவிடில் மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், நாம் தற்போது சந்தித்து வரும் சூழ்நிலையில் உடல்நலம் மிக முக்கியமானது.

    கிரிக்கெட் வீரர்கள் என்பதற்கு முன்னர் நாம் எல்லோரும் மனிதர்கள். மனிதர்களை காப்பாற்றினால்தான், அதன்பின் கிரிக்கெட்டை பற்றி யோசிக்க முடியும். ஆகவே, தற்போது கிரிக்கெட் நடைபெறாவிட்டாலும், அது மிகப்பெரியதாக தெரியாது’’ என்றார்.
    கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பத்திற்கு உணவு வழங்க ஹர்பஜன்சிங் முடிவு செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அன்றாட கூலி தொழிலாளர்கள் உணவுக்கு வழி இல்லாமல் தவிக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பஞ்சாப்பை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உணவு வழங்குகிறார். ஜலந்தர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பத்திற்கு உணவு வழங்குவதாக அவர் உறுதி அளித்துள்ளார். விரைவில் அவர் உணவு வழங்குவார்.

    39 வயதான ஹர்பஜன் சிங் இது தொடர்பாக கூறும்போது ‘எனது உணவு வழங்கும் பணி தொடரும். வீடு இல்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள் ஆகியோருக்கு இயல்பு நிலை திரும்பும் வரை உணவு வழங்கப்படும்‘ என்றார்.

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி பாதிக்கப்பட்டவர்களுக்காக தினமும் 10,000 பேருக்கு உணவு வழங்க தேவையான நிதியை அளித்து இருந்தார்.

    கொரோனாதடுப்பு பணிக்காக பிரதமர் நிவாரணத்துக்கு விளையாட்டு பிரபலங்கள் தாராளமாக நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

    அந்த வகையில் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் ரூ. 50 லட்சம் நிதி உதவியை அளித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் கிரிக்கெட் போட்டியை மட்டும் நிறுத்தவில்லை, ஆஸ்திரேலிய வீரர்களின் திருமண நிகழ்ச்சிகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் உள்ளன. ஜூலை மாதத்திற்குப் பிறகுதான் மீண்டும் கிரிக்கெட் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீரர்கள் ஊதியத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது.

    அதோடு மட்டுமல்ல ஆஸ்திரேலியா வீரர்களின் திருமண நிகழ்ச்சிகளும் தள்ளிப்போகியுள்ளன. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, பெண்கள் அணி இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜெஸ் ஜோனஸ்சன், ஜேக்சன் பேர்ட், மிட்செல் ஸ்வெப்சன், அண்ட்ரிவ் டை, டி'ஆர்கி ஷார்ட், கேட்லின் ஃபிரையெட், மெக்டேர்மோட் ஆகியோருக்கு எப்ரல் மற்றும் மே மாதங்களில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக திருமணங்கள் தள்ளிப்போகியுள்ளன. அதேவேளையில் மேக்ஸ்வெல், கேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து திருமண தேதிக்காக காத்திருக்கிறார்கள்.
    ஐபிஎல் போட்டி குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், கண்டிப்பாக நடைபெறும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 29-ந்தேதி நடைபெற இருந்த சூழ்நிலையில் வருகிற 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு 14-ந்தேதி வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அத்துடன் ஊரடங்கு உத்தரவு நிறைவு பெற்றால் மேற்கொண்டு தொடரை நடத்துவது குறித்து யோசிக்கலாம் என்ற எண்ணத்தில் பிசிசிஐ இருக்கிறது.

    ஆனால் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கினால் இது ஐபிஎல் தொடரில் இருந்துதான் ஆரம்பிக்கப்படும் என சிலர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என உறுதியாக நம்புகிறேன் என்ற கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘‘ஜூலை-ஆகஸ்டில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கலாம். ஐபிஎல் கட்டாயம் நடைபெறும் என உறுதியாக நம்புகிறேன். ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்படலாம்.

    ஐபிஎல் அணிகள் மிகப்பெரிய பொருளாதார சிக்கலை சந்திக்க நேரிடும். இதை சற்று சமாளிக்கும் வகையில் ரசிகர்கள் யாரையும் அனுமதிக்காமல் பூட்டிய மைதானத்திற்குள் மூன்று அல்லது நான்கு வாரங்களில் போட்டிகளை நடத்திட முடியும்.’’ என்றார்.
    டி20 கிரிக்கெட் போட்டியில் உலகின் தலைசிறந்த தொடக்க பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர்தான் என டாம் மூடி தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான டாம் மூடியிடம் ரசிகர்கள் ‘டுவிட்டர்’ வாயிலாக பல கேள்விகளை கேட்டனர். 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் யார் என்று கேட்ட போது, ‘‘இது கடினமான கேள்வி. ஆனால் டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ரோகித் சர்மா (இந்தியா) ஆகியோரின் பெயர்களை சொல்வதில் மகிழ்ச்சி அடைவேன்’’ என்றார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனக்கு பிடித்தமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ், பிடித்தமான கேப்டன் டோனி என்று மற்றொரு கேள்விக்கு பதிலை பதிவு செய்தார். இந்திய கிரிக்கெட்டில் மனம் கவர்ந்த வீரர் விராட் கோலி, பிடித்தமான பீல்டர் ரவீந்திர ஜடேஜா என்றும் கூறினார்.

    ×