என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்களில் இருந்து தனக்கு பிடித்தமான மிகச்சிறந்த இந்திய லெவன் அணியை ஷேன் வார்னே தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
    மும்பை:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்களில் இருந்து தனக்கு பிடித்தமான மிகச்சிறந்த இந்திய லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். இதில் சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கருக்கு அவர் இடம் கொடுக்கவில்லை. வார்னேவை கவர்ந்த இந்திய ஐ.பி.எல். அணி வருமாறு: ரோகித் சர்மா, ஷேவாக், விராட் கோலி, யுவராஜ்சிங், யூசுப் பதான், டோனி, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், சித்தார்த் திரிவேதி, முனாப் பட்டேல்.

    ‘நான் 2008-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை ஐ.பி.எல்.ல் விளையாடினேன். அதன் அடிப்படையில் இந்த அணியை தேர்வு செய்திருக்கிறேன்’ என்று வார்னே தெரிவித்தார். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனி அற்புதமானவர் என்று புகழாரம் சூட்டிய வார்னே, ‘யூசுப்பதான் மும்பை இந்தியன்சுக்கு எதிராக பிரமாதமாக சதம் அடித்தார். அத்துடன் 2008-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் அவர் அசத்தலாக ஆடினார். அதனால் அவருக்கு இடம் வழங்கினேன்’ என்றும் குறிப்பிட்டார்.

    இதே போல் தனக்கு எதிராக விளையாடிய அணிகளில் இருந்து 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான சிறந்த லெவன் அணியையும் வார்னே தேர்வு செய்துள்ளார். அந்த அணி வருமாறு: ஷேவாக், சனத் ஜெயசூர்யா, தெண்டுல்கர், பிரையன் லாரா, கெவின் பீட்டர்சன், சங்கக்கரா, ஆன்ட்ரூ பிளின்டாப், வாசிம் அக்ரம், டேனியல் வெட்டோரி, அக்தர், அம்புரோஸ்.
    கடந்த மாதம் நடக்கவிருந்த உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    லாசானே:

    உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தென்கொரியாவின் புசான் நகரில் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக இந்த போட்டி ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.
    கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் ஜூன் மாதமும் நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் டேபிள் டென்னிஸ் சம்மேளன நிர்வாக கமிட்டியின் ஆலோசனைக்கு பிறகு இந்த போட்டியை செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை நடத்துவது என்று நேற்று முடிவு செய்யப்பட்டது.

    விமான பயணத்தின் போது டோனி, விராட் கோலி ஆகியோர் எளிமையை கடைப்பிடிப்பவர்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.
    புதுடெல்லி:

    நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது கடினமான உழைப்பின் மூலம் கிரிக்கெட் உலகில் புகழின் உச்சத்தை எட்டிப்பிடித்ததுடன், வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையையும் தனதாக்கியவர் டோனி. கோடி கணக்கில் பணம் சம்பாதித்தாலும் டோனி எப்பொழுதும் எளிமையாகவும், இயல்பாகவும் செயல்படும் குணம் கொண்டவர். மைதான ஊழியர்கள், ஓட்டல் பணியாளர்கள், ரசிகர்கள் என எல்லா தரப்பினரிடமும் பந்தா எதுவுமின்றி பழகக்கூடியவர். விமானத்துக்காக காத்து இருக்கையில் அவர் சில சமயங்களில் விமான நிலையத்தில் வெறுந்தரையில் படுத்து உறங்கியதை கூட பலரும் பார்த்து இருக்க முடியும்.

    அமைதியின் இருப்பிடமாக விளங்கும் டோனி களத்தில் கோபமாக நடந்து கொள்வதை காண்பது அரிதான விஷயமாகும். அவர் கேப்டனாக இருந்தபோது கூட கேப்டனுக்கான தனிச்சலுகையை அனுபவிப்பதில் அதிக ஆர்வம் காட்டியது கிடையாது என்றும் விமான பயணத்தின் போது சக வீரர்களுக்காக உயர் வகுப்பு (பிசினஸ் கிளாஸ்) இருக்கைகளை உதறிவிட்டு, சாதாரண வகுப்பில் (எகானமி கிளாஸ்) பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்து இருந்தார் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அரிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் தங்களது நற்குணம் மற்றும் நல்ல கலாசாரத்தால் இந்திய கிரிக்கெட் அணியின் உத்வேகத்தை கட்டமைக்க முன்னாள் கேப்டன் டோனியும், இன்னாள் கேப்டன் விராட் கோலியும் உதவி இருக்கிறார்கள் என்றும் அவர் புகழ்ந்து இருக்கிறார்.

    இது குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் எழுதி இருக்கும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதாவது:

    ‘குறிப்பாக உள்ளூரில் நடைபெறும் சர்வதேச போட்டிகளின் போது, இந்திய கிரிக்கெட் அணி தங்களது வீரர்களை பாராட்டும் வகையில் அருமையான ஒரு நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்திய மண்ணில் நடக்கும் போது இரு அணி வீரர்களும் ஒரு சிறப்பு விமானத்தின் மூலமே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வார்கள் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். அந்த விமானத்தில் போட்டியை ஒளிபரப்பக்கூடிய தொலைக்காட்சி குழுவினரும், அடுத்த போட்டிக்கு தேவையான கேபிள் வயர்களுடன் பயணிப்பார்கள்.

    உயர் வகுப்பில் குறிப்பிட்ட அளவுக்கு தான் இருக்கைகள் இருக்கும். அந்த இருக்கைகளில் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், மானேஜர்கள் உள்ளிட்டோர் அமர்வார்கள். அத்துடன் முந்தைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சாதாரண வகுப்புக்கு பதிலாக உயர் வகுப்பில் அமர வாய்ப்பு அளிக்கப்படும். டோனி கேப்டனாக இருந்த போது, இந்த விமானங்களில் உயர் வகுப்பு இருக்கையில் அமர்வது அபூர்வமான ஒன்றாகும். தொலைக்காட்சி ஒளிபரப்பின் உண்மையான சாம்பியன்களான கேமராமேன், சவுண்ட் என்ஜினீயர்கள் ஆகியோருடன் அமர்ந்து தான் பயணம் செய்வார்’.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் விராட் கோலி குறித்து கூறுகையில், ‘தற்போது முடிவடைந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பந்து வீச்சாளர்களுக்கு விமான பயணத்தின் போது தனது உயர் வகுப்பு இருக்கையை விட்டுக்கொடுத்து விட்டு கேப்டன் விராட் கோலி சாதாரண வகுப்பு இருக்கையில் தான் பயணம் செய்வார். இதுபோன்றவை சாதாரண செயலாக தெரியலாம். ஆனால் அது அணியின் உத்வேகத்தை வளர்க்க பெரிதும் உதவும்‘ என்று தெரிவித்துள்ளார்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் சுனில் கவாஸ்கர் ரூ.59 லட்சம் நிதியுதவி வழங்கி இருக்கிறார். இதில் அவர் ரூ.35 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கும், ரூ.24 லட்சத்தை மராட்டிய மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கும் வழங்கி இருப்பதாக அவரது மகன் ரோகன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாராவும் கொரோனா நிவாரண நிதி வழங்கி இருக்கிறார். அவர் வழங்கிய தொகை எவ்வளவு? என்பது வெளியிடப்படவில்லை. 
    சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே, ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியாவின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சமூக வலைத்தளங்கள் மூலம் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை இதன்மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

    ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு ஆலன் பார்டரை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

    ஷேன் வார்னே தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மார்க் வாக், 2. ஆடம் கில்கிறிஸ்ட், 3. ரிக்கி பாண்டிங், 4. டீன் ஜோன்ஸ், 5. மைக்கேல் கிளார்க், 6. ஆலன் பார்டன் (கேப்டன்), 7. மைக்கேல் பெவன், 8. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், 9. பிரெட் லீ, 10. கிரேக் மெக்டெர்மோட், 11. கிளென் மெக்ராத்.

    ‘‘மார்க் வாக் அல்லது மேத்யூ ஹெய்டன் ஆகியோரில் ஒருவர் என்று வரும்போது மார்க் வாக்கை தேர்வு செய்தேன். டீன் ஜோன்ஸ் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவதில் மிகவும் சிறந்தவர். இதனால் அவரை தேர்வு செய்தேன். மைக்கேல் பெவன் தலைசிறந்த மேட்ச் வின்னர். சைண்ட்ஸ் அடித்து ஆடும் பேட்ஸ்மேன். அதே சமயத்தில் பந்தும் வீசக்கூடியவர்’’ எனக் கூறினார்.
    ஜெர்மன் கால்பந்து லீக் அணியான பேயர்ன் முனிச்சுடன் மேலும் இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார் தாமஸ் முல்லர்.
    ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான அட்டாக்கிங் மிட்பீல்டர் கால்பந்து வீரரான தாமஸ் முல்லர் கடந்த 20 வருடங்களாக பேயர்ன் முனிச் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் விளையாடிய காலக்கட்டத்தில் பேயர்ன் முனிச் 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2013-ல் சாம்பியன்ஸ் லீக்கை கைப்பற்றியுள்ளது.

    2008-ல் இருந்து சீனியர் அணிக்காக வபிளையாடி வரும் முல்லரிடன் ஒப்பந்தம் அடுத்த வருடத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் மேலும் இரண்டு வருடத்திற்கு பேயர்ன் முனிச் அணி உடனான ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார்.
    ஐந்து வருடங்களாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் இருந்தாலும், உலக கோப்பையில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2006-ம் ஆண்டு அதிரடி பேட்ஸ்மேனாக களம் இறங்கியவர் ராபின் உத்தப்பா. 34 வயதாகும் உத்தப்பா தனது 20 வயதிலேயே இந்திய அணியில் அறிமுகம் ஆனாலும் தொடர்ந்து அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. அவ்வப்போது இடைவெளி விட்டுவிட்டு அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் கடைசியாக 2015 ஜூலை 19-ந்தேதிக்குப்பின் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.

    இருந்தாலும் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘தற்போது வரை நான் போட்டிக்குரிய நபராக இருக்க விரும்புகிறேன். இந்த எண்ணம் எனது மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கிறது. போட்டிக்குரிய நபராக இருந்து சிறப்பாக விளையாடுவேன். உண்மையிலேயே இன்னும் எனக்கு உலக கோப்பை இருப்பதாக நம்புகிறேன். குறிப்பாக டி20 வடிவிலான கிரிக்கெட்டில் இருக்கிறது’’ என்றார்.

    2007-ம் ஆண்டு எம்எஸ் டோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும்போது அணியில் இடம் பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணிக்காக 46 ஒருநாள் போட்டிகளிலும், 13 டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
    ஐபிஎல் தொடரில் அதிக அளவில் பணம் கிடைப்பதால் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட விரும்புவதில்லை என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது எதிரணி வீரர்களை மிகப்பெரிய அளவில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவார்கள். குறிப்பாக ஆஷஸ் தொடரின்போதும், இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போதும் இந்த ஸ்லெட்ஜிங் அதிக அளவில் இருக்கும்.

    இந்திய வீரர்களை சீண்டியே அவுட்டாக்கும் யுக்தியை கடைபிடிப்பார்கள். ஆனால் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக பதவி ஏற்றப்பிறகு, விராட் கோலி ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு இணையாக வார்த்தைப்போரில் ஈடுபட ஆரம்பித்தார். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் தற்போது மிகப்பெரிய அளவில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவது கிடையாது.

    இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைப்பதால்தான் ஆஸ்திரேலிய வீரர்கள் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்ய பயப்படுகிறார்கள் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில் ‘‘சர்வதேச அளவிலும், உள்ளூர் அளவிலும் பொருளாதார அடிப்படையில் இந்தியா எவ்வளவு வலுவானது என்பது நாம் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும்.

    ஆஸ்திரேலியா, மற்ற அணிகள் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அவர்களுக்கு உண்டான குணத்தில் இருந்து மாறுபட்டு இந்தியாவுக்கு சாதகமாக மாறிவிடுகின்றன. கோலி அல்லது மற்ற இந்திய அணி வீரர்களை அவர்கள் ஸ்லெட்ஜிங் செய்ய பயப்படுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டியுள்ளது.

    10 வீரர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால், அவர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை ஐபிஎல் அணிக்காக எடுக்கிறார்கள்.  விராட் கோலிக்கு எதிராக ஸ்லெட்ஜிங் செய்யக்கூடாது, கோலி தன்னை பெங்களூர் அணிக்காக எடுக்க வேண்டும், அதன்மூலம் ஆறு வாரங்களில் ஒரு மில்லியன் டாலர் பெறலாம் என அந்த வீரர்கள் விரும்புகிறாரக்ள். இதன்மூலம் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் இருந்து விலகி சாதுவான நிலைக்கு மாறிவிட்டார்கள் என்று உணர்கிறேன்’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்கள் கொண்ட ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுவதால் ஐபிஎல் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்தந்த மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒருவேளை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்காவிடில் போட்டி நடைபெறும் என கிரிக்கெட் வீரர்கள் நம்புகிறார்கள். அப்படி சாத்தியம் இருந்தால் போட்டியை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்கள் நடத்தலாம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘பார்வையாளர்கள் மிகவும் முக்கியமானதுதான். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அவர்கள் இல்லாமல் போட்டி நடைபெறும் என்ற மனநிலையில் நான் இல்லை. ஒரு வீரராக நான் இந்த உணர்வை பெற விரும்பமாட்டேன். ஒவ்வொரு வீரர்களும் ஐபிஎல் போட்டிகளை தொலைக்காட்சி மூலம் பார்க்க முடியும் என்பது உறுதி.

    அப்படி நடந்தாலும் வீரர்களின் பாதுகாப்பு போட்டிகள் நடைபெறும் இடத்திலும், அணிகள் ஓட்டல்களிலும், விமானத்திலும் உறுதிப்படுத்துவது அவசியம். ஏராளமான உயிர்கள் இருக்கின்றன. ஆகவே எல்லாம் சரியான நிலையில் இருக்கிறது என்பதை உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் நாம் ஐபிஎல் போட்டிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.
    கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்கும்போது இரண்டு சர்வதேச இங்கிலாந்து அணிகள் வெவ்வேறு இடத்தில் விளையாட வேண்டும் என்ற யோசனை சரியானதுதான் என ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரை எந்தவித விளையாட்டு போட்டிகளும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டி எப்போது ஆரம்பிக்கும் எனத்தெரியவில்லை. இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிராக விளையாட சென்றபோதுதான் கொரோனா தொற்று காரணமாக நாடு திரும்பியது. இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு எதிராக விளையாட வேண்டியுள்ளது.

    ஒருவேளை மீண்டும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் சில தொடர்களை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக இரண்டு சர்வதேச அணிகள் வெவ்வேறு இடத்தில் ஒரே நேரத்தில் விளையாட சாத்தியக்கூறு உள்ளதாக இங்கிலாந்து ஒயிட்பால் கிரிக்கெட் அணியின் கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லரும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில் ‘‘இயன் மோர்கன் கூறியதை நான் பார்த்தேன் அந்த வகையில் இதற்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன்.

    நிர்வாகம் அடிப்படையில் இது சாத்தியம் என்றால், ரசிகர்கள் போட்டியை ரசிப்பார்கள். ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற சாத்தியம் என்றால், வெவ்வேறு இடத்தில் நடத்தலாம். இது சரியானது. இதுகுறித்து ஆலோசிக்கலாம்’’ என்றார்.
    பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களான முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோர் ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா வலியுறுத்தியுள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்கள் முகமது ஹபீஸ், சோயிப் மாலிக். 40 வயதை தொட இருக்கும் இருவர்களும் பாகிஸ்தான் டி20 அணியில் இடம்பிடித்து விளையாடி வருகின்றன. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்குப்பின் ஓய்வு பெற விருப்பம் என முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இருவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மரியாதையாகவும், மனதாரவும் வெளியேற வேண்டும். இருவரும் பாகிஸ்தான் அணிக்காக நீண்ட ஆண்டுகள் விளையாடியுள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது அவர்கள் இருவரும் மனதார பாகிஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.

    அவர்கள் இருவரும் தற்போது ஓய்வு பெற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். நான் சிறந்த வீரர்களை தயார் செய்துள்ளோம். அவர்களை முன்னேற்ற வேண்டும்’’ என்றார்.

    இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடருக்குப்பின் இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் டி20 அணியில் விளையாடுவதற்காக அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    அடுத்த ஆண்டு நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்று இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் கூறினார்.
    புதுடெல்லி:

    இந்திய மூத்த மல்யுத்த வீரர் சுஷில்குமார், 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கம் வென்ற ஒரே இந்தியர் சுஷில்குமார் தான்.

    இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் 74 கிலோ உடல் எடைப்பிரிவில் அவர் தடுமாற்றம் கண்டார். அவருக்குரிய வாய்ப்பு வெகுவாக மங்கி போய் இருந்தது. இந்த சூழலில் கொரோனா அச்சத்தால் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் டோக்கியோவில் நடக்க இருந்த ஒலிம்பிக் திருவிழா அடுத்த ஆண்டுக்கு (2021) தள்ளிவைக்கப்பட்டது. இதனால் 36 வயதான சுஷில்குமாருக்கு மறுபடியும் ஒலிம்பிக் வாய்ப்பு துளிர்விட்டுள்ளது. இது தொடர்பாக அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

    மல்யுத்தத்தில் இனி சுஷில்குமார் கதை முடிந்தது, அவரால் ஜொலிக்க முடியாது என்று சொல்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அது என்னை எந்த வகையிலும் பாதிக்காது. இப்போதைக்கு நான் எங்கும் போகப்போவதில்லை. ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டதால் எனக்கு கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது. அதாவது இன்னும் சிறப்பாக தயாராக நேரம் கிடைத்திருக்கிறது.

    மல்யுத்த விளையாட்டை பொறுத்தவரை காயமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், நன்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி உழைக்க வேண்டும். இதை சரியாக செய்தால் இலக்கை அடைய முடியும். இப்போது நான் தினமும் வீட்டில் இரண்டு முறை பயிற்சியில் ஈடுபடுகிறேன்.

    மல்யுத்தத்திற்கு ஏற்ப என்னை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன். கடவுளின் கருணையோடு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு என்னால் தகுதி பெற முடியும். தகுதி சுற்றில் என்னால் வெற்றி பெற முடியுமா? என்று கேட்கிறீர்கள். 2011-ம் ஆண்டு இதே போல் தான் சொன்னார்கள். அப்போது சாதித்து காட்டினேன். எனவே இது போன்ற சூழலை எப்படி எதிர்கொள்வது என்பது எனக்கு தெரியும்.

    ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய சக வீரர் நார்சிங் யாதவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு கால தடை ஜூலை மாதத்துடன் நிறைவடைவதால், அவரை தகுதி சுற்றில் எதிர்கொள்ள வேண்டியது இருக்குமே என்று கேட்கிறீர்கள். அதற்குரிய நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். மீண்டும் தனது மல்யுத்த வாழ்க்கையை தொடங்க இருக்கும் அவருக்கு எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

    சக இந்திய வீரர்களைத் தான் நீங்கள் கடுமையான போட்டியாளராக கருதுகிறீர்களா என்று கேட்கிறீர்கள். எப்போதும் சிறிய அளவில் யோசித்தால் நீங்கள் எதுவும் சாதிக்க முடியாது. சர்வதேச அளவிலான வீரர்களைத் தான் நான் பிரதான எதிராளிகளாக பார்க்கிறேன். குறிப்பாக ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் வீரர் பெக்ஜோட் அப்துராக்மோனோவை வலுமிக்க எதிராளியாக கருதுகிறேன். அவர் சிறந்த வீரர். அவர் போன்ற வீரர்களை மனதில் வைத்து என்னை தயார்படுத்திக் கொள்கிறேன்.

    இவ்வாறு சுஷில்குமார் கூறினார்.
    பிரான்சில் கால்பந்து அணிக்கு மருத்துவ ஆலோசகராக செயல்பட்டுவந்த டாக்டர் தனக்கு கொரோனா வைரஸ் பரவியதால் தற்கொலை செய்து கொண்டார்.
    பாரிஸ்:

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 202 நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    உலகம் முழுவதும் 13 லட்சத்து 42 ஆயிரத்து 235 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 74 ஆயிரத்து 554 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஐரோப்பிய நாடான பிரான்சிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்நாடில் இதுவரை 98 ஆயிரத்து 10 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

    மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 833 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 911 ஆக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே, அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவிய டாக்டர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

    பெர்னெட் ஹன்சலிஸ்( 60 வயது) என்ற டாக்டர் பிரான்ஸ் நாட்டின் ரிம்ஸ் மாகாணத்தை சேர்ந்த லீக் ஒன் சைட் ஸ்டெடி டி ரிம்ஸ் எனப்படும் கால்பந்து கிளப் அணிக்கு மருத்துவ ஆலோசகராக கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். 

    தற்கொலை செய்து கொண்ட பெர்னெட் ஹன்சலிஸ்

    மனைவியுடன் வசித்து வந்த டாக்டருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். 

    இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டிருந்த பெர்னெட் நேற்று அவரது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டார். 

    இந்த சம்பவம் ஸ்டெடி டி ரிம்ஸ் கிளப் கால்பந்து அணிக்கு மட்டுமல்லாமல் பிரான்ஸ் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ×