என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஜெய்ஸ்வாலை பொருத்தவரை அவர் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடக்கூடிய தகுதியான ஒரு வீரர்.
    • இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு நடப்பதெல்லாம் ரொம்பவே அநியாயம்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக இடம் பிடித்து விளையாடி வருகின்றனர்.

    இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட தகுதியாக இருந்தும் ஒரு சில வீரர்களுக்கு இடம் கிடைக்காமல் போனது பலரது மத்தியிலும் பேசுபொருளானது.

    அந்த வகையில் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் நிச்சயம் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடியிருக்க வேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் மூன்று வகையான இந்திய அணியிலும் இடம்பெற்று விளையாட தகுதியானவர் ஜெய்ஸ்வால் என அவரை ஆதரித்தும், இந்திய அணியின் நிர்வாகத்தை விமர்சித்தும் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஜெய்ஸ்வாலை பொருத்தவரை அவர் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடக்கூடிய தகுதியான ஒரு வீரர். ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாட வைக்கப்பட்டு வருகிறார். இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு நடப்பதெல்லாம் ரொம்பவே அநியாயம்.

    ஏனெனில் அவரைப் போன்ற ஒரு திறமையான துவக்க வீரர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் இடம்பிடித்து விளையாட வேண்டிய ஒரு நபர். ஆனால் அவரை ஒரு வடிவத்தில் மட்டுமே இந்திய அணி பயன்படுத்தி வருகிறது. எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிப்பார்.

    அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியிலும் அவர் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் டி20 போட்டிகளை பொருத்தவரை ஏற்கனவே இந்திய அணிக்குள் பலத்த போட்டி நிலவுவதால் அவருக்கு அணியில் இடம் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அவர் விரைவாக தனது வாய்ப்பை எட்டிப்பிடிப்பார்.

    என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.

    • முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி 532 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • 3-ம் நாள் முடிவில் இந்தியா ஏ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 403 ரன்கள் குவித்தது.

    ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

    இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி 532 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    இதனையடுத்து இந்தியா ஏ அணி களமிறங்கியது. 3-ம் நாள் முடிவில் இந்தியா ஏ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 403 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 86 ரன்களுடனும் துருவ் ஜூரல் 113 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல்தர கிரிக்கெட்டில் துருவ் ஜூரல் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும்.

    • இந்தியா சார்பில் நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
    • இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் நீரஜ் சோப்ரா 84.03 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பெற்றனர்.

    டோக்கியோ:

    20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிகளில் 2021-ம் ஆண்டு (டோக்கியோ ஒலிம்பிக்ஸ்) தங்கப் பதக்கமும், 2024-ம் ஆண்டு (பாரிஸ் ஒலிம்பிக்ஸ்) வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 2022-ல் வெள்ளியும், 2023-ல் தங்கமும் வென்றிருந்தார். இதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

    இந்த இறுதிப்போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீம் (பாகிஸ்தான்) உலகின் முதல் நிலை வீரரான ஜூலியன் வெப்பர் (ஜெர்மனி), ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரேனடா), ஜேக்கப் வட்லெஜ் (செக்குடியரசு) ஜூலியஸ் (கென்யா) ஆகியோர் நீரஜ் சோப்ராவுக்கு கடும் போட்டியாளர்களாக இருந்தார்கள்.

    இறுதிப்போட்டி 6 த்ரோ முறையில் நடைபெற்றது. இதில் முதல் 3 த்ரோ முடிவில் இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருந்தார். இதுவே இவரது சிறப்பான த்ரோ ஆகும். மற்றொரு இந்திய வீரரான நீரஜ் சோப்ரா யாரும் எதிர்பார்க்காத வகையில் 8-வது இடத்தில் இருந்தார். முதல் 3 இடங்களில் வால்காட் 87.83, பீட்டர்ஸ் 87.38, தாம்சன் 86.6 ஆகியோர் இருந்தார்.

    இதனை தொடர்ந்து நடந்து மீதமுள்ள 3 த்ரோ வீசப்பட்டது. இதன் முடிவில் வால்காட் (டிரினிடாடியன்) 88.16 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த த்ரோ இந்த சீசனின் சிறந்த த்ரோ ஆகும். பீட்டர்ஸ் (கிரேனடா) 87.38 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். தாம்சன் (அமெரிக்கா) 86.67 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார்.

    இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் நீரஜ் சோப்ரா 84.03 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பிடித்தனர்.

    • சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.

    தமிழக கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான தினேஷ் கார்த்திக். ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இந்திய அணியின் டி20 உலக கோப்பைக்கான ஆல் டைம் லெவன் அணியை தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.

    அதில் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீருக்கு இடம் அளிக்கவில்லை.

    இந்த அணியின் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் எம் எஸ் தோனியை அவர் தேர்வு செய்துள்ளார்.

    தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து சூர்யகுமார் உள்ளார். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் யுவராஜ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோருக்கு இடம் வழங்கியுள்ளார்.

    மேலும் சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.

    தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த ஆல் டைம் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:-

    ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், எம்எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பும்ரா.

    • மலேசிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
    • சீன-தைபே ஜோடியை எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    சீனா மாஸ்டர் பேட்மிண்டனில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி நேர்செட் கேமில் வெற்றி பெற்று காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன-தைபேயின் சியு-வாங் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-13, 21-12 என எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    அதுபோல் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பி.வி. சிந்து தாய்லாந்தின் சோச்சுவாங்கை 21-15, 21-15 என வீழ்த்தினார். சோச்சுவாங்கிற்கு எதிராக பி.வி. சிந்துவின் வெற்றி 6-5 என உள்ளது.

    முன்னதாக, மலேசிய ஜோடியான ஜுனைதி ஆரிஃப்- ராய் கிங் யாப்பை 24-22, 21-13 என வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

    முதல் கேமில் இந்தியா- மலேசியா ஜோடிகள் மாறிமாறி புள்ளிகள் பெற்றன. இதனால் இறுதி வரை யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் சென்றது. இறுதியாக இந்திய ஜோடி 24-22 என முதல் கேமை வென்றது.

    2ஆவது கேமில் 5-5 என சமநிலையில் இருந்து நிலையில், இந்திய ஜோடி 11-6 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் மலேசிய ஜோடியால் இந்திய ஜோடியை முந்த முடியாமல் தோல்வியை சந்தித்தது.

    என்றபோதிலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    சாத்விக்- சிராஜ் ஜோடி கடந்த வாரம் நடைபெற்ற ஹாங்காங் ஓபனில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா- தனிஷா கிராஸ்ட்டோ ஜோடியும் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அடைந்தது.

    • குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்து, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
    • செப்டம்பர் 21 அன்று சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை மீண்டும் பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

    துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நேற்று பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொண்டது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து, 147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்து, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

    இதன்மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

    இப்போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போது பாகிஸ்தான் வீரர் வீசிய பந்து மைதான நடுவர் ருசிரா பல்லியகுருகேவின் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது .

    இதனை பார்த்து அதிர்ச்சியைடந்த பாகிஸ்தான் வீரர்கள் நடுவருக்கு உதவி தங்கள் அணியின் பிசியோவை அழைத்தனர். பின்னர் சிறுது நேர தாமதத்திற்கு பின்னர் அவருக்குப் பதிலாக ரிசர்வ் நடுவர் வந்ததால் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

    • அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 36 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
    • 147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி களமிறங்கியது.

    துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நேற்று பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொண்டது.

    முதலில் பேட் செய்த பாகிஸ்தான்  அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 36 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

    இறுதி நேரத்தில் ஷாஹீன் ஷா அப்ரிடி அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில், ஜுனைத் சித்திக் 3 விக்கெட்டுகளையும், சிம்ரன்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது.

    17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.

    பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி, அப்ரார் அகமது மற்றும் ஹாரிஸ் ரௌஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்து, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

    இதன்மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.  

    • முதலில் பேட் செய்த இந்தியா 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • ஸ்மிரிதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார்.

    சண்டிகர்:

    ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மந்தனா 117 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 293 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆனால் இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அன்னாபெல் சதர்லேண்ட் 45 ரன் எடுத்தார். இதன்மூலம் 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் கிராந்தி கவுட் 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
    • தெலுகு டைட்டன்ஸ் அணியை தபாங் டெல்லி அணி வீழ்த்தியது.

    ஜெய்ப்பூர்:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி, தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

    இறுதியில், சிறப்பாக ஆடிய தபாங் டெல்லி அணி 33-29 என்ற புள்ளிக்கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தபாங் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. டெல்லி தான் ஆடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் பைனல் தோஹாவில் நடைபெறுகிறது.
    • இந்தப் போட்டி டிசம்பர் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறும்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் பைனல் டிசம்பர் மாதம் தோஹாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி நான்காம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நடைபெறும்.

    இந்நிலையில், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் பைனல் போட்டிக்கு மானு பாக்கர் உள்ளிட்ட 8 இந்தியர்கள் தேர்வாகி உள்ளனர்.

    இவர்கள் மொத்தம் 12 பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.

    10 மீ ஏர் பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் என இரு பிரிவுகளில் மானு பாக்கர் கலந்து கொள்கிறார்.

    ஈஷா சிங், சிப்ட் கவுர் சம்ரா, சிம்ரன்பிரீத் கவுர் பிரார் உள்ளிட்ட 8 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு இதுவரை நடந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியா 9 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் உள்பட 22 பதக்கங்கள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்சென் நகரில் நடைபெறுகிறது.
    • இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 21-ம் தேதி வரை நடக்கிறது.

    இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் களம் காணுகிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் யாப் ராய் கிங்-ஜுனைத் ஆரிப் ஜோடி உடன் மோதியது.

    இதில் அதிரடியாக ஆடிய சாத்விக் - சிராக் ஜோடி 22-22, 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டி 42 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    • கை குலுக்க மறுத்த விவகாரம் தொடர்பாக தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலகுவதாக தகவல் வெளியாகியது.
    • அதனால் பாகிஸ்தான் வீரர்கள் ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு புறப்படவில்லை.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபாய், அபுதாபி) நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான், UAE அணிகள் மோதுகிறது.

    இரண்டு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இன்று இரு அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாடுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இந்தியாவுடன் சேர்ந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது இரு அணி வீரர்களும் கை குலுக்கவில்லை. குறிப்பாக இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கை குலுக்கி கொள்ள முன் வரவில்லை.

    டாஸின் போது இந்திய கேப்டன் சூர்யகுமாருடன் கைக் குலுக்க வேண்டாம் என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவிடம் நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் கூறியதாக பாகிஸ்தான் ஐசிசி-யிடம் குற்றம் சாட்டியது. மேலும் அவர் இந்த தொடரில் இருந்து நீக்கவும் வலியுறுத்தியது.

    பாகிஸ்தானின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ஐசிசி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

    இதனால் இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலகுவதாக தகவல் வெளியாகியது. அதனால் ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு புறப்படவில்லை என்ற தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் போட்டியில் விளையாடுவதற்காக மைதானத்திற்கு புறப்படுங்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் ஹோட்டலில் இருந்து தாமதமாக புறப்பட்டு மைதானத்திற்கு புறப்பட்டுள்ளனர். இதனால் போட்டி ஒருமணி நேரம் தாமதமாக தொடங்கும் என தெரிய வந்துள்ளது.

    ×