என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- சிவாஜிராவிடம் காணப்பட்ட கூர்மையான பார்வை அபூர்வராகங்கள் படப்பிடிப்பில் இருந்த ஒவ்வொருவரையும் முதல் நாளே கவர்ந்தது.
- நான் கேமராவைப் பார்த்தோ அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்தோ பயப்படவில்லை.
ராகவேந்திர சுவாமிகளின் அருள் ஆசி சிவாஜிராவுக்கு எப்போதுமே இருக்கிறது என்பதற்கு அவர் சினிமா உலகில் முதல் காலடி எடுத்து வைத்த நாள் வியாழக்கிழமையாக அமைந்ததை இன்றும் பலர் குறிப்பிட்டு சொல்கிறார்கள். ராகவேந்திர சுவாமிகளை நினைத்துக் கொண்டுதான் முதல் நாள் படப்பிடிப்பில் சிவாஜிராவ் சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தார்.
கறுப்பாக ஒரு இளைஞன் துறுதுறுவென அங்கும் இங்கும் செல்வதை ஸ்ரீவித்யாவும், நாகேசும் கவனித்துக் கொண்டே இருந்தனர். பாலச்சந்தர் பார்வை படாத நேரத்தில் மறைவிடத்துக்கு ஓடிச்சென்று சிவாஜிராவ் தம் அடித்து விட்டு வந்ததையும் அவர்கள் கவனிக்க தவறவில்லை.
சிவாஜிராவிடம் காணப்பட்ட கூர்மையான பார்வை அபூர்வராகங்கள் படப்பிடிப்பில் இருந்த ஒவ்வொருவரையும் முதல் நாளே கவர்ந்தது. ஆனால் சிவாஜிராவோ தெரியாத வேலை! ஏன்டா இந்தத் தொழிலுக்கு வந்தோம் என்று சலிப்பான மனநிலையுடன் காணப்பட்டார்.
சிவாஜிராவின் முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம் எப்படி இருந்தது என்பதை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.....
என் முகத்துக்கு முன்னால் கிளாப் வந்தது.
டைரக்டர் பாலச்சந்தர் சார், ''கிளாப்'' என்று கத்தினார். அந்த கிளாப் அடித்த சத்தத்தில் எனக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
சினிமாவில் நான் அறிமுகமாகும் முதல் காட்சி அதுவே. பேச வேண்டிய வசனம் 'பைரவி வீடு இதுதானா?' என்ற ஒரே ஒரு வரிதான். அதற்கு கமல் 'ஆமாம். நீங்க யாரு?' என்று கேள்வி கேட்பார். உடனே 'நான் பைரவியோட புருஷன்' என்று சொல்ல வேண்டும்.
காட்சி திரையில் ஓடும்போது சுருதி பேதம் என்கிற தனி டைட்டில் கார்டு தோன்றும். இந்த சின்ன சீனை எடுப்பதற்குள் கலாகேந்திரா யூனிட்டே தவித்து விட்டது. காலையில் தேநீர் நேரத்தில் ஆரம்பித்த வேலை 'லன்ச் பிரேக்' வரை இழுத்தது.
'என்னை நடிகனாக்கும் முயற்சியை கே.பாலச்சந்தர் ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டார்' என்றுதான் சொல்ல வேண்டும். 'பைரவி வீடு இதுதானா?', 'நான் பைரவியோட புருஷன்' இந்த டயலாக்குகளை ஆயிரம் தடவை சொல்லி இருப்பேன்.
லைட் பாயில் இருந்து அசிஸ்டென்ட் டைரக்டர் வரை, என்னை வசனம் சரியாகச் சொல்லச் சொல்லி வெறுத்துப் போயிட்டாங்க. தெரியாத, புரியாத வேலை. ஏன்டா இந்தத் தொழிலுக்கு வந்தோம்னுகூட ஒரு சலிப்பு. என் முகத்துக்கு முன்னாள் கிளாப் வந்தது. கிளாப் அடிச்ச சப்தத்திலே பேசத் தெரியாமல் டயலாக்கை உளறினேன்.
நான் கேமராவைப் பார்த்தோ அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்தோ பயப்படவில்லை. என்னுடைய பயமெல்லாம் பாலசந்தர் சார்தான், நான் சரியாக பேசி நடிக்கவில்லை என்று பாலச்சந்தர் சார் நினைத்தார். இதை நான் அவரது முகத்தைப் பார்த்து தெரிந்து கொண்டேன்.
பாலசந்தர் சார் எவ்வளவு முன்கோபக்காரர் என்பது அவரோடு பழகியவர்களுக்குத் தான் தெரியும். கூண்டுல இருக்கிற புலி மாதிரி வெளியே இருப்பார். கேமிரா வழியாப் பார்த்தார் என்றால் கூண்டை விட்டு வெளியே வந்த புலிதான். எப்படிப்பட்டவங்களுக்கும் அவர் முன்னாடி தொழில் பக்தி வந்து விடும், பயம் வந்து விடும். எனக்கும் அப்படித்தான் பயம் வந்தது.
சினிமா உலகில் கால் வைத்து விட்டோம். ஏதோ ஒரு சந்தோஷம், அங்கிருந்த சுவர் பக்கமாக ஓடிச்சென்று சிகரெட்டை எடுத்து வாயிலே வைத்து புகை புகையாய் ஊதினேன். அப்போது திடீரென்று "சிவாஜி" என்ற குரல் கேட்டது. முதல் காட்சியில் நடிக்க ஓடினேன்.
படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. கமல் மேலிருந்து மறுபடியும் என்னிடம் கேட்கிறார்.
"நீங்க யாருன்னு சொன்னீங்க?"
"பைரவியோட புருஷன்." அதே வசனத்தை சொன்னேன். உடனே கமல் என்னை இழுத்து மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு வெளியே அழைத்துப் போனார்.
அந்த காட்சியில் கமலின் நடிப்பைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். நாம் எப்போது இப்படி நடிகன் ஆவது என்று கனவு கண்டேன். அந்த ஒரு சீன் முடிந்தது.
நடித்து முடிந்த பிறகு நாகேஷ் சார் என் அருகில் வந்தார். "சிவாஜிராவ் இங்கே வாங்க. நடிக்கறது ஒண்ணும் பெரிய இதே கிடையாது. ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க. பாலு என்ன செய்யறாரோ, ெசால்றாரோ அதை அப்படியே நீங்க இமிடேட் செய்யுங்கள். அதைத்தான் நான் பண்ணிக்கிட்டு இருக்கேன் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு" என்று சொல்லி முதுகில் தட்டிவிட்டு சென்றார்.
நாகேஷ் சார் பேச... பேச... நான் வாய் விட்டு சிரித்தேன். அவரது அறிவுரை எனக்கு இப்பவும் அது ஒரு டானிக் மாதிரி தெம்பு தரும் வார்த்தைகள்தான். தப்புகள் பண்ணி பாலசந்தர் சார் கிட்டே திட்டு வாங்கி 'அபூர்வ ராகங்கள்' படத்தை முடித்தேன்.
மத்தியானம் ஆனந்த் சார் வந்தார்.
'தாடியை எடுத்துடுங்க. இன்னும் ஒரே ஒரு சீன்தான் என்று சொன்னார். ஏ.வி.எம். ஸ்டூடியோ பக்கத்திலே ஒரு வீடு. எனக்கும், ஸ்ரீவித்யாவுக்கும் ஒரு லவ் சீன். 2 பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் பிடிச்சுக்கிட்டு பேசிக்கிட்டே சிரிச்சுக்கிட்டே நடந்து வருகிற மாதிரி காட்சி அமைத்து இருந்தார்கள்.
வசனம் இல்லை. வெறும் உதடு அசைப்புதான். இஷ்டம் போல பேசுங்க என்று சொன்னார்கள். அந்தக் காட்சியில் ஸ்ரீவித்யா மலையாளத்தில் பேசிக் கொண்டே வந்தார். நான் கன்னடத்தில் ஏதோ பேசிக் கொண்டே வந்தேன். நாங்கள் இருவரும் ஒருத்தருக்கொருத்தர் என்ன பேசினோம் என்பது புரியாமல் பேசினோம். எப்படியோ அந்த காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்தது.
நீங்க வீட்டுக்குப் போகலாம் என்று என்னிடம் சொன்னார்கள். நான் மேக்கப்பை கலைத்து விட்டு வெளியே வந்தேன். அங்கே ஜெயசுதா உட்கார்ந்து இருந்தார்கள். எனக்கு ஒரே குஷி. முன்னால் இருந்த சேர், ெபஞ்ச் ஒன்றும் தெரியவில்லை.
ஜெயசுதாவைப் பார்த்துக்கிட்டே போயி, தடுக்கிப் பல்டி அடித்து விழுந்தேன். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து என்னைத் தூக்கி விட்டார்கள். நான் தடவிப் பார்த்துக்கிட்டேன். பின்னால் பேண்ட் கிழிஞ்சி போயிடுச்சு. ஜெயசுதா வேற என்னையே பார்த்துக்கிட்டிருந்தாங்க.
பின்னாலேயே திரும்பிப் போகலாம்னா பேண்ட் கிழிஞ்சு போயிருக்கு. டைரக்டர் சாருக்கு இங்கிருந்தே சொல்லிட்டுப் போயிடலாம்னா எங்க தப்பா நினைப்பாரோ என்று பயம் வந்தது.
எப்படியோ சமாளிச்சு கையை முன்னால், பின்னால் வச்சு மறைச்சுக்கிட்டு ஒரு வழியா வீட்டுக்கு வந்தேன். படமும் முடிஞ்சது.
அடுத்து டப்பிங் பேச அழைத்தார்கள். எனக்கு பதில் வேறு யாரையாவது வைத்து டப்பிங் பேச வைப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் பாலச்சந்தர் சார் என்னை பார்த்து, "நீ தான் டப்பிங் பேச வேண்டும். உன் குரல் நன்றாக இருக்கிறது. இதையே பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று சொல்லி விட்டு போய் விட்டார்.
எனக்கு வேறு வழி தெரியவில்லை. டப்பிங் பேசுவதற்காக அவர்கள் குறிப்பிட்ட தினத்தன்று ஜெமினி ஸ்டுடிேயாவுக்கு புறப்பட்டு சென்றேன். அங்கு எனக்கு முன்பாகவே வந்து ஸ்ரீவித்யா, கமல் இருவரும் டப்பிங்கில் வசனத்தைப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
என்னுடைய டப்பிங் பேசும் முறை எப்போது வரும் என்று ஆவலோடு காத்துக் கொண்டு இருந்தேன். ஒரு லோ ஆங்கிள் ஷாட் என்னுடையது.
ஒரு ஆள் தாடி, கோட் போட்டு பேசிகிட்டிருந்தார். என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியலை. அதன் பிறகுதான் தெரிந்தது அது நான் தான் என்று. என்னையே மறந்து பார்த்துக்கிட்டிருந்தேன். உடம்பு எல்லாம் சிலிர்த்தது.
டப்பிங்கில் வசனம் சொல்வதை நான் மறந்து போய் நின்று விட்டேன். அந்த காட்சி 20 தடவையாவது ஓடி இருக்கும். என்னையே நான் திரையில் பார்த்தபோது உடம்பெல்லாம் மீண்டும் மீண்டும் சிலிர்த்தது.
இப்படி திரையில் பார்ப்பதற்கு தானே இத்தனை ஆண்டுகளாக தவமாக காத்துக்கிட்டு இருந்தேன். இதற்காக எவ்வளவு குழப்பங்கள். சந்தேகங்கள், சிரமங்கள், எதிர்ப்புகள், கஷ்டங்கள் தாங்கி இருக்கிறேன். என் நினைவை திசை திருப்பும் வகையில் திடீரென பாலசந்தர் சார் குரல் கேட்டது.
'என்ன வசனம் பேசிடுவோமா?' என்றார்.
அப்போதுதான் நான் எங்கே இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சுயநினைவுக்கு வந்து உணர்ந்தேன்.
பாலசந்தர் சாருக்கு ரொம்ப பிடிவாதம். என் சொந்தக் குரலைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று என்னை திருத்தி மாத்தி, அடிக்கிறதைத் தவிர அன்பால் என்னைத் தட்டி வேலை வாங்கி சரி ெசய்தார். படம் ஆகஸ்ட் 15-ந்தேதி வெளிவரப் போகிறது என்றார்.
எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சி பூகம்பமே வெடித்து விடும் போல் இருந்தது. அதன் பிறகும் பாலச்சந்தர் சார் மூலம் எனக்குள் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.
என் வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த மாற்றம் பற்றி திங்கட்கிழமை (13-ந்தேதி) பார்க்கலாம்.
- காலப் போக்கில் வீட்டு விலை ஏறும்போது நம் சேமிப்பின் மதிப்பு பல மடங்கு உயர்கிறது.
- நமக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்தின் படிகளில் ஒவ்வொன்றாகப் பார்த்துவரும் நாம் இன்று வீடு என்னும் படியில் நிற்கிறோம். எலிவளையானாலும் தனக்கென்று ஒரு தனிவளை வேண்டும் என்று விரும்பாதவர் யார்? சொந்த வீடு என்பது சிலருக்கு வாழ்நாள் கனவாகவே இருக்கிறது.
நம் முன்னோர்கள் சுருக்கமாக "பணத்தை மண்ணில் போடு; இல்லை பொன்னில் போடு" என்று கூறிவிட்டார்கள். அறிஞர் மார்க் ட்வெயினோ "நிலம் வாங்குங்கள்; கடவுள் அதைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்" என்கிறார். மேலும் வீடு என்பது இருப்பிடம்; பாதுகாப்பு; முதலீடு; எனும் எல்லாவற்றையும் தாண்டி அன்றாடத் தேவையும் கூட. ஆனால் இன்று யூட்யூப் போன்ற சமூகத்தளங்களில், கடன் பெற்று வீடு வாங்குவதை விட பொருளாதாரச் சொத்துக்களில் முதலீடு செய்வது சரி என்பது போல செய்திகள் வருகின்றன. ஆனாலும் நம்மில் பலருக்கும் ரியல் எஸ்டேட் முதலீட்டின் மீது ஆசை வருவதன் காரணமென்ன?
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதில் பல நன்மைகள் உண்டு. நாம் தூங்கும்போதும் நமக்காக நம் பணம் வேலை செய்யவேண்டுமெனில் அதற்கான தளம் ரியல் எஸ்டேட். நாம் ஒரு சொத்தை வாங்கி வாடகைக்கு விட்டால், அது நமக்கு மாதாந்திர வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
காலப்போக்கில் கண்டிப்பாக விலை அதிகரிக்கக்கூடியவை என்று தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டை மட்டுமே கூறலாம். விலை சற்று குறைவாகக் கிடைக்கும்போது வாங்கிவைத்துவிட்டு, சிலகாலம் பொறுமையாக இருந்தால் ரியல் எஸ்டேட் விலைகள் கண்டிப்பாக அதிகரிக்கும். விலை மட்டுமல்லாது, அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் காலப்போக்கில் அதிகரிக்கிறது. ஆகவே இது பணவீக்கத்துக்கு எதிரான கேடயமாகவும் உள்ளது.
நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு வருமானமும் ஓரளவுக்கு வரிக்கு உட்பட்டது. ஆனால் பழைய வரிமுறையைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், ரியல் எஸ்டேட் வருமானம் நமக்கு அதிகபட்ச வரிச் சலுகையை அளிக்கிறது. குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், அரசு மானியம், வட்டிக்கும் அசலுக்கும் வரிவிலக்கு போன்ற சலுகைகள் உள்ளன.
ஆனால், ரியல் எஸ்டேட் முதலீட்டை நாடுபவர்கள் அதிலுள்ள அசௌகரியங்களையும் உணர்தல் நலம். வாங்கல், விற்றலில் உடனுக்குடன் ஈடுபட்டு, குறுகிய காலத்தில் லாபம் சம்பாதிப்பவர்களுக்கான இடம் இதுவல்ல.
இந்த முதலீட்டிற்கு அதிகப் பொறுமை தேவை. கைச்சொடுக்கில் பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்து விடலாம். ஆனால் ரியல் எஸ்டேட்டில் பொருத்தமான சொத்தைத் தேர்ந்தெடுப்பது, தேவையான நிதிகளைச் சேகரிப்பது, ரிஜிஸ்தர் செய்வது மற்றும் உரிமையை மாற்றுவது போன்ற அனைத்து நடவடிக்கைகளுமே நிறைய நேரம் எடுப்பவை. பலவிதமான ஆவணங்கள், சட்ட வல்லுநர்களுடனான தொடர்புகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அடிக்கடி வருகை ஆகியவை நம்மை சோர்வடைய வைக்கும். மேலும் ரியல் எஸ்டேட்டை சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான விலையில் வாங்குவது முக்கியம். கையில் பணம் இருக்கிறது அல்லது கடன் கிடைக்கிறது என்பதற்காக இதில் இறங்குவது தவறு.

சுந்தரி ஜகதீசன்
இன்று இந்தியாவில் விலை போகாமல் கிடக்கும் அபார்ட்மென்ட்களில் 20% சென்னையில் இருப்பதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். ஏர்போர்ட் அருகே ஒரு ஸிங்கிள் பெட்ரூம் அபார்ட்மென்ட் விலை ரூபாய் 60 லட்சம். அதில் வரக்கூடிய வாடகை ரூ.15000. ஆனால் வீட்டுக்கடனுக்குக் கட்ட வேண்டிய மாதாந்திர இன்ஸ்டால்மென்ட் ரூ.42000; அதுவும் 20 வருடங்களுக்கு. அடுத்த 20 வருடம் நாம் இதே ஊரில் இருப்போமா? நம் வேலை நிலைக்குமா? நிலைத்தாலும் 42000 ரூபாய் இன்ஸ்டால்மென்ட் கட்ட இயலுமா? இப்படியெல்லாம் நம் சிந்தனை செல்வது நியாயம்தானே? மேலும், சில பில்டர்கள் ஐந்தாறு வருடங்கள் இழுத்தடிப்பதும், முறையான பர்மிஷனோ, பத்திரங்களோ இன்றி செயல்படுவதும் நம்மை பயமுறுத்துகிறது. சரி, வீடு வேண்டாம்; நிலம் வாங்கிப் போடலாம் என்றால், நிலத்தின் விலை கைக்கெட்டாமல் பறக்கிறது; நில அபகரிப்பு வேறு அச்சுறுத்துகிறது.
இந்தக் காரணங்களால் சமீப காலங்களில் இளைய தலைமுறையினர் வீட்டை ஒரு பாரமாக, ஒரு வேண்டாத முதலீடாகப் பார்க்கத் துவங்கியுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை நிலத்தின் விலை வானத்தின் உச்சிக்கே சென்றதில் வீடு என்பது பல மடங்கு பெருகும் ஒரு நல்ல முதலீடாக இருந்த காலம் மலையேறிவிட்டது. அதிலிருந்து கிடைக்கும் வருமானம் இரண்டு முதல் மூன்று சதவிகிதம் மட்டுமே. வீட்டுக் கடன் வாங்கும்போது டவுன் பேமென்ட்டுக்காக நம் மொத்த சேமிப்பையும் காலி செய்கிறோம். அடுத்த இருபது வருடங்கள் "வேலை நிரந்தரம்தானா; ஒவ்வொரு மாதமும் தவறாமல் இ.எம்.ஐ. கட்ட முடியுமா" என்ற கவலையுடனேயே வாழ்கிறோம்.
ஹோட்டல், சுற்றுலா போன்ற சிறு சந்தோஷங்களை தியாகம் செய்ய நேர்வதோடு, குழந்தைகள் மேற்படிப்பு, நம் ஓய்வுகாலம் போன்ற முக்கிய விஷயங்களுக்கு சேமிக்கவும் பணம் இருப்பதில்லை. ரூ. அறுபது லட்சம் கடன் வாங்கினால் இருபது வருடங்களில் நாம் கட்டும் வட்டியே இன்னொரு அறுபது லட்சத்தைத் தாண்டிவிடும் அபாயமும் உள்ளது. இன்று கட்டப்படும் பல அடுக்கு மாடி குடியிருப்புகள் 30 முதல் 40 வருடங்களே நிலைக்கும் என்று சில ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுவது உண்மைதானோ என்ற கவலை இருக்கிறது. நம் பட்ஜட்டுக்குள் வரும் வீடு அனேகமாக புறநகர் பகுதிகளிலேயே அமைவதால் ஆபீசுக்குப் போய் வருவதே பெரிய காரியம் என்றாகிவிடுகிறது. ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டால் வேறு ஊர்களிலோ, ஏன் வேறு ஏரியாவிலோ கூட வேலை தேட மனம் வருவதில்லை. இதனால் நம் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.
ஆனால் சென்ற தலைமுறையினர் கூறும் யதார்த்தம் வேறு. வருடா வருடம் வாடகை ஏறும் சூழ்நிலையில் எத்தனை காலம் வாடகை வீட்டில் காலம் தள்ள இயலும்? வாடகை என்பது அடுத்தவர் கைக்குச் செல்லும் பணம். ஆனால் கடன் வாங்கி வீடு கட்டினால், வாடகைக்கு பதில் நாம் கொடுக்கும் இ.எம்.ஐ. நமக்கு சொத்தாகச் சேர்கிறது. மேலும் காலப் போக்கில் வீட்டு விலை ஏறும்போது நம் சேமிப்பின் மதிப்பு பல மடங்கு உயர்கிறது.
இப்படி இரு தலைமுறையினரும் தத்தம் வாதங்களில் சரியாகவே இருக்கிறார்கள். அப்படியானால் என்ன செய்யலாம்? வீடு என்பது என்றுமே ஒரு அடிப்படை தேவைதான். ஒரு மனிதனுக்கு ஒரு வீடு தேவை என்று அரசு கூறுவதில் அர்த்தம் உள்ளது.
ஆனால் அதற்காக வேறு எல்லாவற்றையும் தியாகம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. புதிதாக வேலைக்கு சேர்பவர்கள் முதலில் வாடகை வீட்டில் இருந்து தேவையானபோது வீட்டை மாற்றுவது, ஆபீஸ் அருகே குடிபோவது, வாழ்வின் சிறு, சிறு சந்தோஷங்களை அனுபவிப்பது போன்றவற்றில் ஈடுபடலாம். எச்.ஆர்.ஏ. வரிவிலக்கும் பெறலாம். நிதானமாக டவுன் பேமென்டுக்கான பணத்தை சேமித்து, பேங்க்கில் கடன் வாங்கி வீடு வாங்கலாம். கூடியவரை வீட்டின் விலையில் 50 சதவிகித அளவு டவுன் பேமென்ட்டாக கொடுக்க முடிந்தால் இ.எம்.ஐ. சுமையாக இருக்காது.
"சென்னை, பெங்களூர் இங்கெல்லாம் விலை ஏறிவிட்டது; ஆனால் திருச்சி, மதுரை, நெல்லை போன்ற டவுன்களில் இன்னும் கைக்கெட்டும் அளவில் வீட்டு விலைகள் இருக்கின்றன. தற்சமயம் இவற்றில் ஒன்றில் முதலீடு செய்து, வாடகைக்கு விட்டு, வங்கிக் கடனைக் கட்டி விடுவேன். 20 வருடம் கழித்து நான் செட்டில் ஆகப் போகும் நிலையில் இதே வீட்டைப் பயன்படுத்தலாம்; அல்லது இந்த வீட்டை விற்று எனக்குத் தேவையான இடத்தில் வாங்கிக் கொள்ளலாம்" என்று எண்ணுபவர்களும் உண்டு.
நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகள் மீது நம்பிக்கையும், பிரியமும் உள்ளவர் என்றால், கடைகள், அலுவலகங்கள், கிட்டங்கிகள், இண்டஸ்ட்ரியல் ஷெட்கள் போன்ற வணிகச் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். இவை இருக்கும் இடம், தரும் வசதிகள் ஆகியவற்றைப் பொறுத்து ஆறு முதல் எட்டு சதவிகிதம் அளவு வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
"இந்த வணிகச் சொத்துக்கள் சாதாரண சிறு முதலீட்டாளர்களுக்கு எட்டாக்கனி" என்றிருந்த காலம் மாறி விட்டது; காரணம் –ஆர்.இ.ஐ.டி. – ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட்.
இது ஒரு புதிய முதலீட்டு வழி. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறப்பாக செயல்படும் இது, ஏறக்குறைய ஒரு மியூச்சுவல் பண்ட்தான்.
மியூச்சுவல் பண்டில் நாம் முதலீடு செய்யும் பணத்தை பண்ட் மேனேஜர் மொத்தமாக சில பல கம்பெனி ஷேர்களில் முதலீடு செய்கிறார். அதில் வரக்கூடிய டிவிடெண்ட், முதலீட்டு லாபம் போன்றவற்றை நம் முதலீட்டுக்கு தகுந்தாற்போல நமக்கு பிரித்துத் தருகிறார். ஆர்.இ.ஐ.டியில் நாம் முதலீடு செய்யும் பணத்தை அந்தக் கம்பெனி பலவிதமான ஹாஸ்பிடல்கள், ஆபீஸ் காம்ப்ளெக்ஸ், 5 ஸ்டார் ஹோட்டல், மால் போன்ற கமர்ஷியல் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்கிறது. வரக்கூடிய வாடகை வருமானத்தில் செலவுகள் போக மீதி இருக்கும் பணத்தில், 90% அளவு நமக்கு அந்தக் கம்பெனி கொடுக்கவேண்டும் என்று விதிமுறை உள்ளது. அதனால் ஒரு நிலையான வருமானம் நமக்குக் கிடைக்கும். மேலும் இந்த ஷேர்கள் சந்தையில் லிஸ்ட் ஆகின்றன. ஷேர் விலை ஏறினால் அதிலும் நமக்கு லாபம் வர வாய்ப்பு இருக்கிறது.
இந்த புதிய முதலீட்டு வழியால் நம் போன்ற சிறுமுதலீட்டாளர்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே, கம்ப்யூட்டரை க்ளிக் செய்து ஒரு பெரிய மாலில் கூட நாம் விரும்பும் கடையில் முதலீடு செய்ய முடியும். நாம் நெருங்கவே முடியாதபடி விலை உயர்ந்ததாக இருக்கும் வணிகச் சொத்தில் ஆர்.இ.ஐ.டி.யின் புண்ணியத்தில் வெறும் ரூ. பத்தாயிரம் முதலீட்டில் கூட உரிமை பெறலாம். தங்கத்தில் பேப்பர் கோல்ட் இருப்பது போல, ரியல் எஸ்டேட்டில் இது ஒரு பேப்பர் சொத்து.
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்பது போல் நிலம், வீடு, ப்ளாட், கமர்ஷியல் ரியல் எஸ்டேட், ஆர்.இ.ஐ.டி. என்று ரியல் எஸ்டேட் முதலீடுகள் பலவிதமாக உள்ளன. அவற்றில் நமக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
நீங்கள் எந்த ஊரில் வீடு வாங்க விரும்புகிறீர்கள்? அந்த வீடு என்ன விலை? அதற்காக எவ்வளவு சேமித்திருக்கிறீர்கள்?
- அபூர்வராகங்கள் படத்தில் என்னுடைய வேடம் என்ன என்பது பற்றி பாலச்சந்தர் சார் எனக்கு மிகவும் விளக்கமாக சொன்னார்.
- என்னுடைய கேரக்டர் எனக்கு புரிந்தது.
டைரக்டர் பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பு தளம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சிவாஜிராவ் அங்கு காரில் வந்து இறங்கியதும் அந்த பங்களாவையும், திரைப்பட தயாரிப்பு பணியாளர்களையும் சற்று மிரட்சியுடன் பார்த்தார்.
பாலச்சந்தர் சிரித்தபடியே வரவேற்ற பிறகுதான் அவருக்கு சற்று நிம்மதியும் உற்சாகமும் ஏற்பட்டது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பொம்மை சினிமா இதழில் சிவாஜிராவ் கொடுத்த பேட்டியைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். அந்த பேட்டி தொடர்கிறது.
அபூர்வராகங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஸ்ரீவித்யா, நாகேஷ் இருவரையும் பாலச்சந்தர் சார் அழைத்து என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் இருவருக்கும் நான் வணக்கம் தெரிவித்தேன்.
அதன் பிறகு அபூர்வராகங்கள் படத்தில் என்னுடைய வேடம் என்ன என்பது பற்றி பாலச்சந்தர் சார் எனக்கு மிகவும் விளக்கமாக சொன்னார். நான் அந்த படத்தின் கதையையும் என்னுடைய வேடத்தின் பொறுப்பையும் உன்னிப்பாக கவனித்து கேட்டேன்.
"நீங்க ஸ்ரீவித்யா புருஷன். முதல்லே நீங்க 2 பேரும் காதலர்கள். கதையை நாங்க பிளாஷ் பேக்கில் காண்பிக்கிறோம். உங்களுக்கு திடீரென பிளட் கான்சர் நோய் வந்து விடுகிறது. அந்த நோய் வந்திருக்கிறது என்பது காதலிக்கு தெரியக் கூடாது என்பதற்காக அவளை விட்டுவிட்டு நீங்க ஓடிப் போயிடறீங்க.
அதன் பிறகு கமலுக்கும், ஸ்ரீவித்யாவுக்கும் காதல் ஏற்படுகிறது. அவர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். அவர்கள் கல்யாணத்துக்கு தயாராகும் நேரத்தில் நீங்க வந்து விடுகிறீர்கள்.
தனது காதலி இன்னொரு வரை நேசிப்பதை தெரிந்துக் கொண்டு அவர்களை வாழ்த்தி இறந்து போறீங்க. இதுதான் உங்கள் கேரக்டர். அது தியாகமான கேரக்டர்.
இந்த வேடம் தமிழக ரசிகர்களின் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும். இந்த வேடத்தில் மிக அருமையாக எப்படி நடிப்பது என்பது பற்றி நீங்களே யோசியுங்கள். அதை என்னிடம் சொல்லுங்கள். சிறப்பாக நடிக்க வேண்டும்" என்று டைரக்டர் பாலச்சந்தர் சொன்னார்.
என்னுடைய கேரக்டர் எனக்கு புரிந்தது. என்றாலும் இவ்வளவு நாள் பல்வேறு விதமாக நடித்து பார்த்ததை முதல் படத்திலேயே அமல்படுத்தி பார்த்தால் எப்படி இருக்கும் என்று என் உள் மனது சொன்னது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாலச்சந்தர் சாரிடம் அதுபற்றி கேட்டேன்.
சிகரெட்டை வாயில் ஸ்டைலா தூக்கிப் போடறது... விதவிதமாய் தீப்பெட்டியில் இருந்து குச்சியை எடுத்துக் கொளுத்தறது... இதையெல்லாம் பாலச்சந்தர் சார்கிட்டே செய்து காட்டினேன். 'இந்த ஸ்டைலை இந்த படத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியுமா சார்?" என்று கேட்டேன்.
ஆனால் பாலச்சந்தர் சார் அதை ஏற்கவில்லை. பொறுமையாக என்னிடம், "அடுத்த படத்தில் உங்களது இந்த ஸ்டைலை பண்ணிக்கலாம். இந்தப் படத்தில் வேண்டாம். அபூர்வராகங்கள் படத்தில் நீங்கள் புற்று நோயாளியாக நடிக்கிறீர்கள். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் இந்த படத்தின் கேரக்டருக்கு சூட் ஆகாது" என்றார்.
அப்படி அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே 'ஷாட் ரெடி' என்று உள்ேள இருந்து அழைப்பு வந்தது. இதோ வர்றேன்' என்று சொல்லிக் கொண்டே பாலசந்தர் சார் உள்ளே வேகமாக எழுந்து சென்று விட்டார்.
அவர் போனதும் மேக்கப் கலைஞர் சுந்தரமூர்த்தி என்னை வந்து அழைத்தார். 'மேக்கப் போடலாம் வாங்க சார்' என்றார். அவர் முன் போய் உட்கார்ந்தேன்.
ஒரு புற்று நோயாளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப எனக்கு முதல் நாள் மேக்கப் போடப்பட்டது. என் முகத்தின் தோற்றத்தையே அன்று மேக்கப் கலைஞர் சுந்தரமூர்த்தி அருமையாக மாற்றி விட்டார்.
என் முகம் முழுவதும் பசை போட்டு தாடியை வலுவாக ஒட்ட வைத்தார். அப்படி வலுவாக தாடி ஒட்டிய பிறகு என்னால் சிரிக்கவும் முடியவில்லை. அழவும் முடியவில்லை. அந்த அளவுக்கு இறுக்கமாக இருந்தது.
அது மட்டுமல்ல ஒட்டு தாடியால் முகம் முழுவதும் ஒரே அரிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு சுமார் 20 கிலோ எடையுள்ள கோட்டு ஒன்றை எடுத்து வந்தனர். அந்த கோட்டில் ஒரே வியர்வை நாத்தம். துவைச்சு எத்தனை வருஷங்களாச்சோ? எனக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.
தமிழ் சினிமா உலகம் பேச ஆரம்பித்ததில் இருந்து யார்-யாரோ அணிந்த கப்பு கோட் அது. மேக்கப் கலைஞர் சுந்தரமூர்த்தி காட்டிய கண்ணாடியில் முகம் பார்த்தேன். என்னையே எனக்கு அடையாளம் தெரியாமல் ேபாய் விட்டது. எனக்கு செய்யப்பட்ட அரிதாரம் எனக்குள் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
என்றாலும் என்ன இது முதன் முதலாக நடிக்கப் போகிறோம். பிச்சைக்காரன் மாதிரி வேஷமா போடணும் என்று மனதுக்குள் சென்டிமென்ட் இடித்தது.
அந்த சமயத்தில் சென்னையில் சரியான வெய்யில் காய்த்து எடுத்துக் கொண்டு இருந்தது. சூடு தாங்க முடியவில்லை. இதனால் ரிப்ளக்டா்ஸ் வேறு ெநருப்பு மாதிரி கொதித்தது. அந்த சமயத்தில் என் முகத்துக்கு மட்டுமின்றி உடம்பு முழுவதும் மேக்கப் போட்டிருந்தாங்க.
"சார் உங்க ஷாட் ரெடி. வரலாம்" என்று குரல் கேட்டது. அதை கேட்டதும் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது. இன்னொரு பக்கம் நடுக்கமாகவும் இருந்தது. "நாம ஏன் நடிக்க வந்தோம்' என்று மனம் அலை பாய்ந்தது. எனக்குத் தெரியாமலே உடம்பெல்லாம் நடுங்கியது. அது மட்டுமல்ல இன்னொரு குறையும் என் மனதில் இருந்தது. அன்று திங்கட்கிழமை. ஆனால் எனக்கு பிடித்த புனித நாள் வியாழன். எனவே என் முதல் நாள் கன்னி நடிப்பை குருவாரமான வியாழக்கிழமை தினத்தன்று படம் எடுத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினேன்.
ஆனால் வெளியில் சொல்ல முடியாதே. ஸ்ரீ ராகவேந்திரரின் கருணையும், அருளும் இருக்குமானால் நான் நடிக்கும் முதல் நாள் படப்பிடிப்பு வியாழன் அன்றே தொடங்கட்டும் என்று மனதுக்குள்ளாக மந்திரம் ஜெபித்தேன்.
ஓம் சகனா பவது
சகநவ் புனக்து
சக வீர்யம் கரவா வகை
தேஜஸ்வினா வதீத வஸ்து
மாவித்விஷா வகை ஹி
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி.... என்று மனதுக்குள் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தேன். எனது உறுதியான நம்பிக்கைக்கு பலன் கிடைத்தது.
கோட்டில் இருந்த தூசி காரணமாக தாங்க முடியாத அரிப்பால் சொறிய ஆரம்பித்தேன். 'எங்கேப்பா அந்த புதுமுகம். ரெடியா?' என்று பாலச்சந்தர் சார் கேட்டதும் அவர் முன்பு என்னை கொண்டு போய் நிற்க வைத்தார்கள் 'குட், கரெக்டா இருக்கான்' என்றார் அவர்.
திங்கள், செவ்வாய், புதன் 3 நாட்களும் சொல்லி வைத்தது போல் டைரக்டர் பாலச்சந்தர் சார் என்னை நடிக்க அழைக்கவில்லை. வியாழன் அன்றுதான் என் நடிப்புக்கான பகுதியை அவர் விளக்கினார். வசனம் மிக மிகக் குறைவு. அதற்கே நான் படாதபாடு பட்டேன். முதல் காட்சியிலேயே கமலோடு நடிக்கும் கற்கண்டு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திக்கு முக்காடி விட்டேன்.
முற்பகல் 11 மணி, தை மாத வெயில், கமலை மணந்து கொள்ள சம்மதம் என்பதன் அடையாளமாக ஸ்ரீவித்யா தன் படம் போட்ட சாவியை கமலிடம் கொடுப்பார். கமல் பூரிப்பின் காரணமாக மாடியில் நின்று கொண்டே அந்த சாவியை தூக்கிப் போட்டு பிடித்து... பிடித்து... விளையாடுவார்.
அப்போது திடீரென சாவிக் கொத்து கீழே விழுந்து விடும். மிக சரியாக அந்த சமயத்தில் நான் அந்த பங்களாவுக்குள் நுழைய வேண்டும். அதாவது அழுக்கான நாற்றம் தாங்க முடியாத கருப்பு கலர் கோட்டை சுமந்தபடி அந்த பங்களாவின் இரும்புக் கதவுகளைத் திறந்து கொண்டு நான் உள்ளே நுழைய வேண்டும்.
பிறகு கீழே விழுந்த சாவி கொத்தைக் குனிந்து எடுக்க வேண்டும். அப்போது கமல் என்னைப் பார்த்து விசாரிப்பார். அதற்கு நான் 'பைரவி வீடு இதுதானா? நான் பைரவியோட புருஷன்" என்று சொல்ல வேண்டும். இந்த டயலாக்கைதான் முதல் முதலாக எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.
என் சினிமா வாழ்க்கையின் முதல் டயலாக் அல்லவா? எனவே அந்த டயலாக்கை ஆயிரம் தடவைக்கு மேல் சொல்லி... சொல்லி... பயிற்சி எடுத்து பார்த்தேன். "டயலாக் ஓ.கே.யா" என்று ஆங்கிலத்தில் என்னிடம் கேட்டார்கள்.
அப்போது எல்லாம் என்னை சார் என்றுதான் கூப்பிடுவாங்க. நானும் அசட்டு சிரிப்பு சிரிச்சு ரெடி சார் என்று சொன்னேன். அந்த காட்சி எப்படி எடுக்கப்பட்டது என்பதை நாளை பார்க்கலாம்.
- சிறுவன் மனத்தில் அந்த நாடகத்தின் மூலம் விழுந்த விதை நன்றாக வேரூன்றி விட்டது.
- காந்திஜி பின்பற்றிய உண்மை என்ற தத்துவமே.
அன்று அதிகாலையில், அந்தச் சிறுவன் யோசனையோடு அமர்ந்திருந்தான். அவன் தலையைக் கோதிவிட்ட அவன் தாய் பரிவோடு அவனிடம் கேட்டாள்:
`மோகன்! என்னப்பா தீவிர யோசனையில் ஆழ்ந்திருக்கிறாய்?`
`அம்மா! நேற்று இரவு நான் ஒரு நாடகம் பார்த்தேன். அந்த நாடகம் பார்த்ததிலிருந்து என் மனத்தில் ஏதேதோ மாறுதல்கள். நான் நாடகம் முடிந்து இரவு வீடுவந்த பிறகும் சரியாகத் தூங்கக் கூட இல்லை. அந்த நாடகத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் ஒரு முடிவு செய்திருக்கிறேன் அம்மா!`
சிறுவனான மோகன் பெரியவர்களைப் போல் பேசுவதை எண்ணிக் கலகலவென்று நகைத்தாள் அவன் தாய்.
`நீ என்ன நாடகம் பார்த்தாய்? என்ன முடிவு செய்திருக்கிறாய்?`
`நான் பார்த்த நாடகம் உண்மையே பேசிய அரிச்சந்திர மகாராஜாவின் வரலாறு பற்றிய நாடகம். உள்ளத்தை உருக்கிய நாடகம் அம்மா அது. எத்தனை கஷ்டங்கள் வந்தன அரிச்சந்திர மகாராஜாவுக்கு! ஆனாலும் இறுதிவரை அவர் பொய் பேசவே இல்லை.
ஆசை காட்டினார்கள். வற்புறுத்தினார்கள். பயமுறுத்தினார்கள். என்றாலும் உண்மையை மட்டுமே பேசுவது என்ற விரதத்திலிருந்து அவர் மாறவே இல்லை. இனிமேல் நானும் பொய்யே பேசாமல் இருக்கப் போகிறேன். என்ன கஷ்டம் வந்தாலும் உண்மையை மட்டுமே பேசுவதாக முடிவு செய்திருக்கிறேன்!`
மோகனின் தாய் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
`அப்படியே நடந்துகொள். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்!` எனப் பாராட்டினாள்.
என்ன ஆச்சரியம்! சிறுவன் மனத்தில் அந்த நாடகத்தின் மூலம் விழுந்த விதை நன்றாக வேரூன்றி விட்டது. தான் சொன்னபடியே நடந்துகொண்டான். அவனின் சத்திய விரதத்திற்கு எத்தனை சோதனைகள் வந்தபோதும் பொய்யே பேசாதிருக்கப் பழகினான்.
பின்னாளில் `சத்திய சோதனை` எனத் தன்வரலாற்றை எழுதியபோதும் தன் பலவீனங்களை எல்லாம் மறைக்காமல் குறிப்பிட்டு எழுதினான். உலகம் அந்த நூலைப் படித்து வியந்தது.
மனிதனாக இருந்த மோகனை மகாத்மாவாக ஆக்கியது அரிச்சந்திரனின் கதைதான். அந்த மோகன்தான், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மகாத்மா காந்தி.

திருப்பூர் கிருஷ்ணன்
நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூர், காந்திஜிக்கு மகாத்மா என்ற அடைமொழி கொடுத்து முதன்முதலில் அழைத்தார். பின்னர் அந்த அடைமொழி பிரபலமாயிற்று. தாகூர் அவ்விதம் காந்தியை அழைக்கக் காரணம், காந்திஜி பின்பற்றிய உண்மை என்ற தத்துவமே.
*அரிச்சந்திரன் கதை சுவாரஸ்யமானது. விஸ்வாமித்திர முனிவர் ஏற்படுத்திய அத்தனை சங்கடங்களிலிருந்தும் அவன் இறுதியில் மீண்டான். மனைவியை அடிமையாக விற்க நேர்ந்தது. ஆனாலும் உண்மையே பேசினான். இறுதியில் அவனை வானகமும் வையகமும் போற்றியது என்கிறது அரிச்சந்திர புராணம்.
உண்மையே பேசுவது, முதலில் சோதனைகளைத் தந்தாலும் கடைசியில் அனைத்து நலங்களையும் வழங்கும் ஓர் உன்னதமான கோட்பாடு என்பதை அந்தப் புராணம் தெளிவாக்குகிறது.
பாரத தேசம் முழுமையிலும் தெரிந்த பெயர் அரிச்சந்திரன் என்பது. அரிச்சந்திரனைப் பற்றிய கதைகள் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன.
அரிச்சந்திரனின் கதையைச் சொல்லும் பழந்தமிழ் நூல் ஒன்று உண்டு. ஐந்நூறுக்கும் மேற்பட்ட நேரிசை வெண்பாக்களால் ஆன அந்நூல் `அரிச்சந்திர வெண்பா` என்றே வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் முன்பெல்லாம் அரிச்சந்திரன் கதை தெருக்கூத்தாகவும் நாடகமாகவும் நடிக்கப் பட்டுக் கொண்டிருந்தது.
உண்மையே பேசிய அரிச்சந்திரனை இந்திய மக்கள் பலர் தெய்வமாகவே கும்பிடத் தொடங்கினார்கள். நம் நாட்டில் பல இடங்களில் அரிச்சந்திரனுக்கு ஆலயங்கள் உண்டு.
அந்த ஆலயங்களில் காசியில் உள்ள ஆலயம் குறிப்பிடத்தக்கது. அரிச்சந்திரன் வரலாற்றில் காசிமாநகருக்கு ஒரு முக்கிய இடம் உண்டல்லவா? அவன் தன் மனைவியை விற்றது, மயானத்தில் வேலை பார்த்தது எல்லாமே காசியில் நிகழும் சம்பவங்கள் தானே?
தமிழகத்தில் காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் அரிச்சந்திர ஆலயங்கள் உள்ளன. மக்கள் அங்கெல்லாம் சென்று அரிச்சந்திரனுக்கும் அவன் மனைவி சந்திரமதிக்கும் வழிபாடு நடத்துகிறார்கள்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்தர் சுவாமி திருக்கோயில் அருகில் சக்கரவர்த்தி அரிச்சந்திரனுக்கு ஓர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல. தினமும் தவறாது பூஜைகளும் நடக்கின்றன.
இங்கு அரிச்சந்திரன் அரசராகவும் வெட்டியானாகவும் தன் மனைவி சந்திரமதியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
`சத்யமேவ ஜயதே!` என்பது இந்தியாவின் குறிக்கோள் வாசகம். இந்திய தேசியச் சின்னத்தில் இந்த வாசகம்தான் பொறிக்கப் பட்டுள்ளது.
முண்டக உபநிடதத்தில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற பல மந்திரங்களில் இதுவும் ஒன்று. தமிழக அரசு `வாய்மையே வெல்லும்` என இதைத் தமிழாக்கித் தன் இலச்சினையில் பெருமையோடு பொறித்துக் கொண்டுள்ளது. இந்தக் குறிக்கோளைத்தான் மனத்தில் கொண்டு சத்தியத்தைத் தவிர வேறு எதையும் பேசுவதில்லை என விரதம் பூண்டிருந்தான் அரிச்சந்திர மன்னன்.
அந்தக் கடும் விரதத்தால், ஒரு மனிதனுக்கு வரக்கூடிய துன்பங்களில் அதிக பட்ச துன்பத்தை அனுபவித்தான். ஆனாலும் இறுதிவரை சத்தியத்தையே பேசினான்.
அரிச்சந்திரன் கதை பெரும்புகழ் பெற்று விளங்குவதைக் கண்ட நாடக ஆசிரியரான பம்மல் சம்பந்த முதலியார், அந்தக் கதைக்கு நேர் எதிர்க் கதையாக சந்திரஹரி என்றொரு நாடகத்தை எழுதினார்.
அரிச்சந்திரன் உண்மையே பேசுபவன். சந்திரஹரியோ பொய் மட்டுமே பேசுபவன். மறந்தும் உண்மை பேசாதவன்.
நாடகம் முழுவதும் ஓர் உண்மையையாவது அவனைப் பேச வைக்க நாடகப் பாத்திரங்கள் எல்லோரும் முயல்வார்கள். ஆனால் ஓர் உண்மையேனும் அவன் நாவில் வராது.
நாடகப் பாத்திரங்களின் பெயர்களையெல்லாம் அரிச்சந்திரன் நாடகத்தில் உள்ளதிலிருந்து தலைகீழாக மாற்றியிருந்தார் முதலியார்.
அரிச்சந்திரன் சந்திரஹரி ஆனதைப் போல் அவன் மனைவி சந்திரமதி, மதிச்சந்திரா ஆனாள். விஸ்வாமித்திரரை மித்திரவிசு என்றும் வசிஷ்டரை சிஷ்டவசி என்றும் மாற்றினார்.
அரிச்சந்திரன் கதைக்கு எதிராக எழுதப்பட்ட இந்த எதிர்க்கதை நாடகம் கூட, மறைமுகமாக அரிச்சந்திரனுக்கே மேலும் புகழ் சேர்த்தது.
*உண்மை பேசுபவர்களுக்கு ஒரு பெரிய சவுகரியம் உண்டு. அவர்கள் எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை! பொய் பேசுபவர்கள் என்ன பேசினோம் என்பதைத் தெளிவாக ஞாபகம் வைத்துக் கொண்டால்தான் தொடர்ந்த பொய்களின் மூலம் முதலில் சொன்ன பொய்யைக் காப்பாற்ற இயலும்.
பொய் பேசுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. பொய்சொல்வதை ஆழ்மனம் உணர்ந்திருப்பதால் உடல் படபடக்கிறது. வியர்வை கொட்டுகிறது. மொத்தத்தில் ஆரோக்கியம் கெடுகிறது.
பழங்காலம் தொட்டே நீதிவிசாரணை நடக்கும் இடங்களில் பொய்ச் சாட்சி சொல்பவர்கள் இருந்திருக்கிறார்கள். தம் `மனுமுறை கண்ட வாசகம்` என்ற உரைநடை நூலில் பொய்ச்சாட்சி சொல்வது மகாபாவம் என்கிறார் வள்ளலார். அந்த நூலில் பல பாவங்களை அவர் பட்டியலிடுகிறார்.
`ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்` என்கிற வள்ளலார் பாடல் புகழ்பெற்றது. தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்தில் உறையும் கந்தவேளைக் குறித்துப் பாடப்பட்ட உயரிய பக்திப் பாடல் அது.
அந்தப் பாடலில், `உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!` என ஓர் அடி வருகிறது.
பொய் பேசுபவர்கள் உள்ளொன்று வைத்துப் புறம் வேறொன்று பேசுபவர்கள். பொய்பேசுபவர்களுடன் உறவு பாராட்டுவது மிகுந்த ஆபத்துகளை விளைவிக்கக் கூடியது என்பதை வள்ளலார் உணர்ந்திருக்கிறார்.
இந்த வரிகளால் வள்ளலார் காலத்திலேயே உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
வாய்மை என்பது ஓர் உயர்ந்த அறநெறி. அதைப் பற்றி வள்ளுவம் மிக உயர்வாகப் பேசுகிறது. (அதிகாரம் 30).
உண்மை என்பது சத்தியமே. சத்தியம் என்ற வடமொழிச் சொல்லுக்குத் தமிழில் மூன்று இணைச்சொற்கள் வழங்கப்படுகின்றன. `உண்மை, வாய்மை, மெய்ம்மை` என்பன அவை. உள்ளத்தில் சத்தியத்தோடு இருப்பது உண்மை. பேச்சில் சத்தியத்தையே பேசுவது வாய்மை. உடலால் உண்மை நெறிப்படி நடப்பது மெய்ம்மை.
பொதுவாக வாய்மை என்ற சொல்லை சத்தியத்திற்குச் சமமான சொல்லாக நாம் கொள்ளலாம்.
வாய்மை என்பது ஓர் அறம். அதாவது தர்ம நெறி. இந்த தர்ம நெறிப்படி நடந்தால் அந்த நெறி நம்மைக் காக்கும். தர்மத்திற்குச் சோதனைகள் வரலாம். ஆனால் இறுதியில் தர்மம்தான் வெல்லும்.
அதனால்தான் `சத்தியமேவ ஜயதே` என்ற கோட்பாட்டை `வாய்மையே வெல்லும்` என மொழிபெயர்த்துக் கொண்டாடுகிறோம். வாய்மை கட்டாயம் வெல்லும். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் வாய்மைதான் வெல்லும்.
அதில் சந்தேகமே தேவையில்லை. பொய்ம்மைக்குத் தற்காலிக வெற்றி கிட்டலாம். ஆனால் நிரந்தர வெற்றி வாய்மைக்கு மட்டுமே.
வாய்மை உள்ளிட்ட தரும நெறிகளே இறுதியில் வெல்லும் என்பதைப் புராணங்களில் மட்டுமல்ல, நடைமுறை வாழ்விலும் நாம் பரிசோதித்து உணரலாம். அதை அறியக் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் வாய்மை வெல்வது உறுதி.
பல துன்பங்கள் வந்தாலும் இறுதியில் வாய்மைதான் வெல்லும் என்ற தத்துவத்தை நடைமுறை வாழ்வில் சோதித்துப் பார்த்து வெற்றி கண்டவர்களில் முக்கியமானவர் நம் தேசப் பிதா காந்தியடிகள்.
அரிச்சந்திர புராணம் சொல்லும் வாய்மை வெல்லும் என்ற தத்துவம் நம்மாலும் பின்பற்றப் படுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.
தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com
- “என் பெயர் சிவாஜி ராவ், ஷூட்டிங் இருக்கு, வரச் சொன்னாங்கான்னு தடுமாறிக்கிட்டே சொன்னேன்.
- வண்டி அடையாறுகிட்டே ஒரு வீட்டுப் பக்கம் போய் நின்றது.
ஒரு புது நடிகர் முதல் படத்துக்கு முதல் நாள் நடிக்க சென்ற அனுபவம் எப்படி இருந்து இருக்கும்? இதுபற்றி சிவாஜிராவ் பிரபல சினிமா இதழான பொம்மை இதழில் சிறப்பு பேட்டியில் அழகாக சொல்லி இருந்தார். அந்த பேட்டியை படித்தால் அந்த சமயத்தில் சிவாஜிராவின் மன உணர்வு எப்படி இருந்து இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். இதோ அந்த பேட்டி....
காலை 5 மணிக்கெல்லாம் ரெடியாக இருக்கச் சொல்லியிருந்தாங்க. மறுபடியும் ராத்திரி ஒரு போன் வந்தது.
'5 மணிக்கு வண்டி வருது. ரெடியா இருக்கணும்.'
ரூமில் என் பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து எனக்கு ஒரு பார்ட்டி வெச்சிருந்தாங்க. எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். ஒரே அட்டகாசம்.
ஆனால் எனக்கு...? ஏதோ ஒரு பயம். ஒரு மாதிரி சங்கடம்.
நான் என்ன பண்ணப் போறேன்; எப்படிப் பண்ணப்போறேன்னு அன்னைக்கு நைட்டெல்லாம் எனக்குத் தூக்கம் இல்லை. 2 மணி நேரம் தூக்கம் வந்திருக்கும். அப்பவும் ஷூட்டிங் நடக்கிற மாதிரி கனவு காண்கிறேன்.
நான் ஸ்டேர்கேசிலிருந்து சிகரெட் பற்ற வெச்சுக்கிட்டு ஸ்டைலா இறங்கிவர்ேறன். கீழே ஸ்ரீவித்யா நிற்கிறாங்க. நான் இறங்கி வந்து மறுபடியும் சிகரெட் பத்த வெச்சேன். ஏதோ ஒரு டயலாக் ஸ்ரீவித்யா சொல்வாரு. எனக்கு அது சரியா ஞாபகமில்லை. அதுக்குள்ளே டைரக்டர் 'ஒ.கே. டேக்குக்குப் போகலாம் என்றார்.
சைலன்ஸ், டேக்னு சொன்னவுடனே புளோருக்கு வெளியே பெல் அடிக்குது. பெல் அடிக்கிறது நிக்கவே இல்லை. பாலசந்தர் சார் கோபத்தில் கத்திக் கிட்டிருக்கார், "போதும்! பெல் அடிச்சதை நிற்க வைங்க.' நான் ரெடியா ஸ்டோ்கேஸ்ல நின்னுக் கிட்டிருக்கேன். பெல் இன்னும் அடிச்சிக் கிட்டே இருக்கு.
கனவு இப்படி சென்று கொண்டிருந்த போது என்னை சிவாஜி, சிவாஜி என்று தட்டி எழுப்பிக்கிட்டிருந்தார் கிருஷ்ணசாமி. அட கடவுளே இது கனவா? என்று சிவாஜிராவ் படப்படப்பானார்.
பாலச்சந்தர் அலுவலகத்தில் இருந்து படப்பிடிப்புக்கு வருமாறு அழைத்ததால் சிவாஜிராவ் மனதுக்குள் அந்த எண்ணம் மட்டுமே முழுமையாக நிறைந்து இருந்தது. அதனால்தான் தூங்கும் போது கூட அவருக்கு படப்பிடிப்பு பற்றிய கனவு வந்து இருந்தது. அடுத்த நாள் (திங்கட்கிழமை) காலை நண்பர்கள் தட்டி எழுப்பியதும் சிவாஜிராவ் பதறிப் போனார். மணியை பார்த்தார். 4 மணி ஆகி இருந்தது. அதன் பிறகு அவர் என்ன செய்தார் என்பதை அவர் கொடுத்த அந்த பேட்டியில் காணலாம்.
4 மணிக்கு வெச்சிருந்த அலாரம் மணி அடிச்சிக் கிட்டிருந்தது. என் வாழ்க்கையில் காலை 4 மணியைப் பார்த்த முதல் நாள் அது. போய் குளித்து பூஜை செய்து ராகவேந்திர சுவாமிகளை வணங்கினேன். பிறகு டிரஸ் செய்து கொண்டு ரெடியானேன். அரை மணிக்குள்ளே, சிகரெட் பத்த வைத்து கண்ணாடி முன்னால் நின்னேன்.
என்னையே நான் ஒரு தரம் அதில் பார்த்துக்கிட்டேன். எனக்கே தெரியாத உற்சாகம்! சந்தோஷம், உடம்பில் முகத்தில் தென்பட்டது. 5 மணியாச்சு. ரூமிலிருந்து அருண் ஓட்டல் மொட்டை மாடிக்கு வந்தேன்.
ஒரே குளிர், சைக்கிளில் பால்காரர்கள் போய்க்கிட்டிருக்காங்க. கீழே அப்பதான் பெட்டிக் கடையைத் திறந்துகிட்டிருக்கான். கீழே உள்ள ஓட்டலில் இருந்து சமையல் செய்யும் சத்தம் கேட்குது. பூந்தமல்லி ஐரோட்டில் லாரிகளும், பஸ்களும் ேபாய்க்கிட்டிருக்கு. 2 வருஷமா பார்த்து வரும் ஓட்டல்தான்; பார்க்கும் ரெஸ்டாரெண்ட். பார்த்த செடி மரங்கள்தான். அதே அமிஞ்சிக்கரை தான். ஆனா இன்னிக்கு அது எல்லாமே எனக்குப் புதுசா இருக்கு.
ஐந்தரை மணியாச்சு. வண்டி வரலை. என் உடம்பில் ரத்த வேகம் ஜாஸ்தியாச்சு. சிகரெட்டும் தீர்ந்துகிட்டே வருது. 6 மணியாச்சு, வண்டியைக் காணோம். பொழுது நல்லா விடிஞ்சு ஒரே வெளிச்சம். கீழே பேசிக்கிட்டிருக்கிறவங்க முகமெல்லாம் 'பளிச்'சென்று தெரியுது. அமிஞ்சிக்கரைக்கு ஒரு புது களை வந்தது.
தூரத்தில் இருந்து ஒரு கார் வரும் சத்தம். என் உடம்பில் ஒரு நடுக்கம். கார் வேகமாக வந்து அருண் ஓட்டலை தாண்டிப் போயிடுச்சு. மனசிலே ஒரு நிராசை, வேணு, ரவி 2 பேரும் மேலே வந்தாங்க, எக்சர்சைஸ் பண்ணுவதற்காக. என் முகம் வாடி இருந்தது. என்னை நண்பர்கள் எல்லாரும் விஷ் பண்ணினாங்க. இதற்குள் இன்னொரு கார் வந்து ஓட்டல் முன்னால் நின்றது. அம்பாசடர் வயலட் கலர் வண்டி.
"கார் வந்தாச்சு, நான் வர்றேன்"னு ரூமுக்கு ஓடினேன். கண்ணாடியில் இன்னொரு தரம் என்னைப் பார்த்துக்கிட்டு. ராகவேந்திர சாமியை மறுபடியும் கும்பிட்டு காரில் ஏறி உட்கார்ந்தேன்.
நான் தனியே காரில் போறதும் அதுதான் முதல் தடவை. என் மனசு மாதிரி காரும் வேகமாகப் பறக்குது. வழியில் வர்ற கோவில்களை எல்லாம் பார்த்துக் கும்பிட்டேன்.
"நாம் எங்கே போறோம்?"னு டிரைவரைக் கேட்டேன். திரும்பிப் பார்க்காமலேயே "ஆபீசுக்கு"ன்னு சீரியசா பதில் சொன்னார். எனக்கொரு பயம். பின்னால் உட்கார்ந்தது தப்போ என்று. ஏன்னா, டிரைவர் பேசின முறை அப்படி இருந்தது. "சிகரெட் பிடிக்கிறீங்களா?" என்று கேட்டேன் அவரை தாஜா பண்றதுக்கு, திரும்பிப் பார்க்காமலேயே கை நீட்டினார்.
சிகரெட் கொடுத்தேன். தேங்ஸ் கூட சொல்லலை. அவர் ஓட்டிக்கிட்டிருந்தார். நான் சிகரெட் பத்த வைக்கலாமா கூடாதான்னு ஒரு பயம். 'புதுமுகமாச்சே! காரிலே உட்கார்ந்து சிகரெட் பத்த வச்சிட்டான்'னு ஏதாவது தவறா நினைச்சிட்டா?
"எந்தப் படத்தில் ஆக்ட் பண்ணியிருக்கீங்கன்னு கொஞ்சம் முரட்டுத்தனமா கேட்டார்.
"இதுதான் முதல் படம்"னு மெல்லிய குரலில் பயந்துகிட்டே சொன்னேன்.
"தமிழ் சரியா தெரியாதா?"ன்னு கேட்டார்.
"இப்பத்தான் கத்துக்கிட்டிருக்கேன்"னு பதில் ெசான்ேனன்.
வண்டி ஒரு பில்டிங் முன்னால் வந்து நின்றது. முன்னால் 'கலாகேந்திரா'ன்னு ஒரு போர்டு, வெளியே இன்னொரு கார், சில சைக்கிள்கள், 10-15 பேர் உள்ளே நின்னுக்கிட்டிருந்தாங்க. நான் காரை விட்டு இறங்கி வந்தவுடனே அங்கிருந்தவங்க எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்த்தாங்க. வெள்ளைத் துணி போட்டவர்களுக்கெல்லாம் ஒரு கும்பிடு போட்டு, மேலே மாடிக்குப் போனேன்.
என் செருப்பை வெளியே கழற்றி விட்டு, உள்ளே நிற்கலாமா இல்லை அதில் உட்காரலாமான்னு யோசனையில் இருந்தேன். பேண்ட்-ஷா்ட் போட்ட, கறுப்பா இருந்த ஒருவர் வந்து, "யாரு சார். என்ன வேணும்னு கேட்டார்.
"என் பெயர் சிவாஜி ராவ், ஷூட்டிங் இருக்கு, வரச் சொன்னாங்கான்னு தடுமாறிக்கிட்டே சொன்னேன். அவர் என்னை உட்காரச் சொல்லி விட்டு உள்ளே போயிட்டார். அரை மணி நேரமாச்சு, யார் யாரோ வந்தாங்க... போனாங்க... என்னை யாரும் கவனிக்கல. 8 மணி இருக்கும். ஒரு லுங்கியை உடுத்திக் கொண்டு திடுதிடுன்னு மாடிப் படியிலே ஏறி வந்தார் கமல்ஹாசன். நான் எழுந்து நின்னு "வணக்கம்" போட்டேன். அவரும் "வணக்கம்"னு சொல்லி உள்ளே போயிட்டாரு.
"எவ்வளவு அழகா இருக்காரு"ன்னு மனசுக்குள்ளே நினைச்சிட்டு என் முகத்தையும் அங்கே உள்ள பீரோவின் கண்ணாடியில் பார்த்துக்கிட்டேன்.
பின்னாலே அனந்து சார் வந்து, என்னைக் குசலம் விசாரிச்சு,"ஏன் பயந்த மாதிரி இருக்கீங்க? தைரியமாக இருங்க லொகே ஷனுக்குப் போகலாமா"ன்னு கேட்டார். காரிலே போய் உட்கார வெச்சாரு. கொஞ்ச நேரமாச்சு. கமல்ஹாசன், மேக்கப்மேன் சுந்தரமூர்த்தி உட்கார்ந்தவுடனே வண்டி கிளம்பிடுச்சு.
"சொல்லத்தான் நினைக்கிறேன் படம் பார்த்தேன். அருமையா நடிச்சீருக்கீங்க என்றேன். கமல் சிரித்துக் கொண்டே "தேங்க்ஸ் என்றார். கமல்கிட்ட படம் பற்றியும் அவர் நடிப்பைப் பற்றியும் மீண்டும் பாராட்டினேன். கொஞ்ச தூரம் போனவுடனே அவர் தூங்கிட்டாரு. "நைட் ஷூட்டிங்ன்னு நினைக்கிறேன்.
வண்டி அடையாறுகிட்டே ஒரு வீட்டுப் பக்கம் போய் நின்றது. கீழே இறங்கி உள்ளே போனோம். வெளியே ஸ்ரீவித்யாவும், கமலும் ஏதோ பேசிக் கொண்டிருந்தாங்க.
பாலச்சந்தர் சார் உள்ளே டிராலியில் காமிராவை வைச்சுக்கிட்டு ஏதோ சொல்லிக் கிட்டிருந்தாரு. என்னைப் பார்த்தவுடனே "ஹலோ"ன்னு சொன்னார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
அப்போது ஒரு ருசிகர சம்பவம் நடந்தது. அதுபற்றி நாளை பார்க்கலாம்.
- நாம் அன்றாடம் உட்கொள்கிற உணவுகள் ஜீரணமாகி, அதில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் தனியாக பிரிக்கப்படுகிறது.
- பெண்கள் மற்றும் ஆண்கள் என எல்லோருக்குமே பொதுவாக பாக்டீரியாக்கள் என்பது குடல், வாய் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இருக்கிறது.
நமது உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று நல்ல பாக்டீரியாக்கள். இந்த நல்ல பாக்டீரியாக்கள் தான் நமது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. நமது உடலில் நோய்களை ஏற்படுத்தக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை இந்த நல்ல பாக்டீரியாக்கள் கட்டுப்படுத்தி அழிக்கின்றன. நமது உடலானது இயற்கையான முறையில் இயங்குவதற்கும் நல்ல பாக்டீரியாக்கள் மிகவும் உதவுகின்றன.
உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் உணவு பழக்க வழக்கம்:
நம்முடைய அன்றாட வாழ்க்கையானது மிகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கு குடலில் உள்ள இந்த நல்ல பாக்டீரியாக்கள் தான் காரணமாக அமைகின்றன. அதனால் தான் விஞ்ஞானிகள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளிலும், நமது குடலில் உள்ள பாக்டீரியாக்கள், நல்ல பாக்டீரியாக்களாக இருக்க வேண்டும், குடல் பாக்டீரியா தான் நமது ஆரோக்கியத்துக்கான அடிப்படை என்று ஏற்கனவே கண்டுபிடித்துள்ளார்கள்.
ஏனென்றால் நாம் தினமும் உட்கொள்கின்ற உணவுகள் தான் நமது உடலுக்கான ஆரோக்கியம் மற்றும் உடலின் நன்மை, தீமை ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைகிறது.
இன்றைக்கு நாம் அன்றாடம் உட்கொள்கிற உணவுகள் ஜீரணமாகி, அதில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் தனியாக பிரிக்கப்படுகிறது. அதில் இருக்கும் புரதம் தனியாக பிரிக்கப்படுகிறது. மேலும் அமினோ அமிலம் தனியாக பிரிக்கப்பட்டு உறிஞ்சப்படுகிறது. உணவில் உள்ள கொழுப்பும் தனியாக பிரிக்கப்படுகிறது.
இவ்வாறு நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், அமினோ அமிலம், கொழுப்பு ஆகியவை அதில் இருந்து பிரிக்கப்பட்டு அவை நமது உடலில் சேரும் வகையில் குடல் மூலம் உறிஞ்சப்படுவது தான் நமது உடலுக்கு மிகவும் தேவையான முக்கியமான செயலாகும். இந்த வகையில் நமது உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் முதல் முக்கியமான விஷயங்களாக, நம்முடைய உணவு பழக்க வழக்க முறைகளே அமைகிறது. நிறைய கார்போஹைட்ரேட் மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிட்டால் நீரிழிவு பாதிப்பு வருகிறது. உப்பு நிறைந்த உணவுகள் அதிகம் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது.
அதேபோல் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட்டால் நமது உடலிலும் கொழுப்பு அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது. இதெல்லாம் அடிப்படையாகவே எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படி என்றால் நமது உணவு பழக்க வழக்க முறைகளால் பலவிதமான பாதிப்புகளையும் நமது உடல் எதிர்நோக்குகிறது.
உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்கள்:
இப்படிப்பட்ட நிலையில் நமது குடலின் ஆரோக்கியம் ரொம்ப ரொம்ப முக்கியம் என்று மருத்துவர்கள் எதற்காக சொல்கிறார்கள் என்றால், இந்த குடல் பகுதியில் இருக்கின்ற சில கெட்ட பாக்டீரியாக்கள் தான் நமக்கு ஏற்படும் பலவிதமான வியாதிகளுக்கான அடிப்படையாக அமைகிறது. அதே நேரத்தில் இந்த குடல் பகுதியில் இருக்கிற நல்ல பாக்டீரியாக்கள் தான் பொதுவாக நமது உடலுக்கு பாதுகாப்பை கொடுக்கக்கூடியது ஆகும்.
நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளும், குறிப்பாக வெளியில் தெரிகிற உறுப்புகள் எல்லாமே அன்றாட சூழ்நிலையில் பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடுகிறது. அப்படி இருக்கும்போது நமது உடலை பாதுகாப்பதற்கு சில வழிமுறைகள் இயற்கையாகவே இருக்க வேண்டும். உதாரணத்துக்கு நமது உடலின் தோல் பகுதியை எடுத்துக் கொண்டால், அதில் தோல் பகுதியை பாதுகாக்கக்கூடிய பாக்டீரியாக்கள் நிறைய இருக்கிறது. இதில் நிறைய பாக்டீரியாக்கள் இழப்பு ஏற்படும் போது தான் நமக்கு நோய் தொற்றுக்கள் ஏற்படுகிறது. அதேபோல் தான் நமது குடல் பகுதியில் இருக்கிற சில நல்ல பாக்டீரியாக்கள் பலவிதமான நோய் தடுப்பு முறைகளுக்கான அடிப்படையாக அமைகிறது.
நமது உடலில் மட்டுமல்ல, பெண்ணுறுப்புகளிலும் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் முக்கியமான பல நோய் தடுப்புகளுக்கு வழிமுறையாக அமைகிறது. இதேபோல் நமது வாயில் உள்ள பாக்டீரியாக்களும் நோய்களை தடுக்க பயன்படுகிறது. இதேபோல் நமது உடலில் உள்ள எல்லா திறந்த வெளி உறுப்பு பகுதிகளிலும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.
நமது உடலில் வெளியே தெரியும் பகுதிகளில் இருந்து உள் நுழைவு பகுதிகளாக இருக்கும் வாய், கண், மூக்கு, காது, யோனிப்பகுதி, சிறுநீர்க்குழாய் ஆகிய எல்லா பகுதிகளிலுமே நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். அந்த பாக்டீரியாக்கள் நமது உடலுக்கு ரொம்ப ரொம்ப தேவையானது.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
பெண்களின் கர்ப்பப்பைக்குள் தொற்றுக்கள் செல்வதை தடுக்கும் பாக்டீரியாக்கள்:
ஏனென்றால் நமது உடலில் நோயை உருவாக்குகிற பல பாக்டீரியாக்கள் வெளியே இருக்கிறது. அந்த பாக்டீரியாக்கள் நமது உடலில் உள்ளே நுழைவதற்கு முதல் தடுப்பு புள்ளியே நமது உடல் உறுப்புகளின் நுழைவு பகுதிகளில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான். இந்த நல்ல பாக்டீரியாக்கள் அனைத்தும் நோய்க்கிருமிகளிடம் இருந்து நமது உடலுக்கு பாதுகாப்பை கொடுக்கின்றன.
பெண்கள் மற்றும் ஆண்கள் என எல்லோருக்குமே பொதுவாக பாக்டீரியாக்கள் என்பது குடல், வாய் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இருக்கிறது. இதற்காகத்தான் எப்போதும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். நமது வாய் பகுதியில் ஆரோக்கியமற்ற கெட்ட பாக்டீரியா வரக்கூடாது என்பதற்காகத் தான் தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும் என்று சொல்கிறோம். அதேபோல் பெண்களின் பெண் உறுப்புகளில் இருக்கிற சில நல்ல பாக்டீரியாக்கள் அவர்களின் ஆரோக்கியத்துக்கு ரொம்ப முக்கியமான ஒரு பங்கை வகிக்கிறது. அதாவது பெண்களின் கர்ப்பப்பைக்குள் செல்கிற எந்தவொரு தொற்றுக்களையும் உள்ளே செல்லாமல் தடுப்பதற்கு இந்த நல்ல பாக்டீரியாக்கள் முக்கியமான வேலைகளை செய்கிறது.
அது என்ன வேலைகளை செய்கிறது என்று பார்த்தால், பெண்ணுறுப்பில் உள்ள யோனி என்கிற குழாயில் தான் கர்ப்பப்பையின் வாய் திறக்கும். யோனிப்பகுதி குழாயின் மறுபுறமானது நமது உடலின் வெளிப்புற பகுதியில் திறக்கும். இந்த அமைப்புகள் இப்படி இருக்கும் நிலையில் கர்ப்பப்பை நேரடியாக உடலின் வெளிப்புற பகுதியில் திறப்பது கிடையாது.
யோனிப்பகுதியை பாதுகாக்கும் அமிலத் தன்மை நிறைந்த பாக்டீரியாக்கள்:
பெண்கள் நிறைய பேருக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் ஏற்படும். என்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்கள் பலரும் இதை கேட்பார்கள். 'டாக்டர் கர்ப்பப்பையில் நோயை உருவாக்குகின்ற தொற்றுகள் கர்ப்பப்பைக்குள் தானாகவே போய்விடுமா?' என்பார்கள்.
கண்டிப்பாக அப்படி தொற்றுக்கள் கர்ப்பப்பைக்குள் செல்ல முடியாது. ஏனென்றால் யோனி குழாயில் உள்ள பாதுகாப்பு அம்சமானது, எந்தவித நோய் தொற்றுக்களுமே கர்ப்பப்பையின் உள்ளே செல்ல விடாமல் தடுக்கும். இந்த யோனி பகுதியில் இருக்கிற நல்ல பாக்டீரியாக்கள் உருவாக்குகிற சில பாதுகாப்பு விஷயங்கள் தான் இந்த நோய் தாக்கும் கிருமிகள் நமது கர்ப்பப்பைக்குள் செல்ல விடாமல் தடுக்கிறது. நாம் ஆரோக்கியமாக இருக்க அந்த நல்ல பாக்டீரியாக்கள் தான் முக்கியம்.
அதனால் தான் யோனி பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் எப்போதுமே அமிலத்தன்மை பி.எச். நிறைந்த பாக்டீரியாக்களாக இருக்கும். அதன் அமிலத்தன்மையானது 4.5 என்ற அளவில் பராமரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த அமிலத்தன்மை பி.எச். அளவானது மாறுபட்டு காரத்தன்மை பி.எச். உருவானால் தொற்றுகள் பரவலாம்.
அதனால் தான் இந்த யோனிப்பகுதியில் உள்ள பாக்டீரியாவின் அமிலத்தன்மை பி.எச். அளவை மிகவும் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம். நமது உடலில் எப்போதும் இயற்கையாகவே நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இதனை லாக்டோபேசிலிஸ் என்று சொல்வோம். லாக்டோபேசிலிசில் கிரிஸ்பேக்டர்ஸ், கெசேரி, ஜென்சினி ஆகியவை மிகவும் பொதுவான லாக்டோபேசிலிஸ் ஆகும். இதனுடைய தன்மையே இந்த அமிலத்தன்மை பி.எச். அளவை 3.5 முதல் 4.5 ஆக வைத்துக் கொள்ளும். அப்படி இருந்தால் தான் எந்தவித தொற்றுக்களும் உள்ளே வர முடியாது.
நமது கர்ப்பப்பையின் பி.எச். ஆல்கலைன், இது கர்ப்ப வாயில் இருக்கும் பி.எச். ஆகும். இதன் அளவானது 7.4 ஆகும். நமது உடலில் உள்ள எல்லா திரவங்களும் 7.4 என்ற அளவில் தான் இருக்க வேண்டும். நமது உடலில் உள்ள ரத்தமே ஒரு ஆல்கலைன் தான். அதுவும் 7.4 என்ற அளவில் தான் இருக்கும். அதனால் தான் பல நேரங்களில் பல தொற்றுக்கள் வெளியில் இருந்து உள்ளே வராமல் தடுப்பதற்கு அமிலத்தன்மை அதிக மாக இருக்கின்ற பி.எச்., லாக்டோபேசிலிசில் உருவாகிறது. எனவே பெண்களை பொருத்த வரைக்கும் இந்த கர்ப்ப்பப்பை வாயில் இந்த பி.எச்.ஐ பராமரிப்பது இந்த லாக்டோபேசிலிஸ் தான். இதனால் கர்ப்பப்பையானது நோய் தொற்றுக்கள் பரவாமல் பாதுகாக்கப்படுகிறது.
ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் இந்த நல்ல பாக்டீரியா பழுதானாலோ அல்லது அழிக்கப்பட்டாலோ அல்லது குறைவானாலோ நமது உடலில் நோய்க்கிருமிகள் எளிதாக தொற்றிக்கொள்ளும். அது பல்வேறு பிரச்சி னைகளையும் ஏற்படுத்தும். நமது உடலில் அந்த நல்ல பாக்டீரியாக்கள் அழிவதற்கான காரணங்கள் என்ன? அடுத்த வாரம் பார்ப்போம்.
- சிவாஜிராவின் வாழ்க்கையில் அன்றைய தினம் மிகப் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது என்பதை யாருமே அறிந்திருக்க மாட்டார்கள்.
- கேடயங்களில் பொறிக்கப்பட்டு இருந்த சினிமா படங்களின் பெயரை சிவாஜிராவ் ஒவ்வொரு எழுத்தாக கூட்டி மெல்ல வாசித்தார்.
சிவாஜிராவ் காரில் ஏறி அமர்ந்ததும் விண்ணில் பறப்பது போன்று உணர்ந்தார். அந்த கார் அமைந்தகரை ஓட்டலில் இருந்து டைரக்டர் பாலச்சந்தரின் அலுவலகம் நோக்கி புறப்பட்டது. சிவாஜிராவின் வாழ்க்கையில் அன்றைய தினம் மிகப் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது என்பதை யாருமே அறிந்திருக்க மாட்டார்கள்.
கார் முக்கிய சாலைகள் வழியாக சென்று கொண்டிருக்க சிவாஜிராவுக்குள் படபடப்பு அதிகரித்தது. டைரக்டர் பாலச்சந்தரை பார்த்ததும் என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினார். பாலச்சந்தர் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டார்.
இடைஇடையே பாலச்சந்தர் உதவியாளர் சர்மாவிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசினார். எப்படியாவது பாலச்சந்தர் சாரிடம் கேட்டு படத்தில் நடிக்க வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்று அவரது மனம் துடியாய் துடித்தது. ஆனால் மனதுக்குள் ஒருவித பதற்றமும் இருந்தது.
அதேசமயத்தில் சிறுவயதில் அவர் பெற்றிருந்த ஆன்மீக யோகா பயிற்சி காரணமாக அடுத்த ஓரிரு நிமிடங்களில் மனதை சற்று அமைதிப்படுத்திக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் கார் கலாகேந்திரா என்று பெரிய அறிவிப்பு பலகையுடன் காணப்பட்ட ஒரு பங்களாவுக்குள் நுழைந்தது.
பாலச்சந்தர் இங்குதான் இருக்கிறாரா? என்று சிவாஜிராவ் வியப்போடு பார்த்தார். அவரை சர்மா உள்ளே அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றார். அலுவலகத்தின் வரவேற்பறையில் சிவாஜிராவ் உட்கார வைக்கப்பட்டார்.
அந்த அறையை சிவாஜிராவ் மெல்ல நோட்டமிட்டார். வரவேற்பறை மிகவும் சுத்தமாக இருந்தது. எல்லா பொருட்களும் மிக மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அறையின் எந்த இடத்திலும் தூசி இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் நேர்த்தியான தூய்மை காணப்பட்டது.
வரவேற்பறையின் பல்வேறு பகுதிகளிலும் டைரக்டர் பாலச்சந்தர் இயக்கிய படங்களின் வெற்றி விழா கேடயங்கள், பரிசுக் கோப்பைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. 'பூ வா தலையா', 'இருகோடுகள்', 'காவியத் தலைவி', 'அரங்கேற்றம்', 'அவள் ஒரு தொடர்கதை' என்று பலப்படங்களின் வெற்றிக் கேடயங்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்தன.
அந்த கேடயங்களில் பொறிக்கப்பட்டு இருந்த சினிமா படங்களின் பெயரை சிவாஜிராவ் ஒவ்வொரு எழுத்தாக கூட்டி மெல்ல வாசித்தார். எவ்வளவு பெரிய இயக்குனர். அவர் நம்மை அழைத்து இருப்பது கடவுள் நமக்கு போட்ட பிச்சை என்று சிவாஜிராவ் மனதுக்குள் தோன்றியது.
அருகில் பாலச்சந்தர் அறைக்குள் இருந்து சிரிப்பு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அவர் யாருடனோ பேசுவதும் கேட்டது. சிவாஜிராவ் அந்த பேச்சை கூர்மையாக கேட்டபடியே இருந்தார்.
அப்போது கலாகேந்திரா அலுவலக உதவியாளர் ஒருவர் அங்கு வந்தார். அவர் சிவாஜிராவிடம், 'காபி வேணுமா? டீ வேணுமா?' என்று கேட்டார். சிவாஜிராவுக்கு ஏதாவது ஒன்றை குடித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. ஆனால் சினிமா வாய்ப்பு தேடி வந்த இடத்தில் ஏதாவது நினைத்து விடுவார்களோ என்று பயந்தார்.
எனவே, 'எதுவும் வேண்டாம்' என்று மென்மையாக சொன்னார். என்றாலும் பாலச்சந்தர் உதவியாளர்கள் வலுக்கட்டாயமாக காபியை கொண்டு வந்து வைத்தனர். 'குடியுங்கள்' என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு சென்றனர். சிவாஜிராவ் பிரமிப்புடன் இருந்தார். நடப்பது கனவா, நனவா? என்பது கூட அவருக்கு சந்தேகம் ஆகிவிட்டது. காபியை குடிக்கலாமா என்று நினைத்த போது அவரது அந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில், 'சிவாஜிராவ் உங்களை டைரக்டர் சார் கூப்பிடுகிறார். உள்ளே செல்லுங்கள்' என்று சொன்னார்கள்.
மேஜையில் இருந்த காபியை அப்படியே வைத்து விட்டு அடுத்த நிமிடம் சிவாஜிராவ் மனதில் பரபரப்புடன் எழுந்தார். எப்படி பாலச்சந்தர் அறைக்குள் சென்றார் என்றே தெரியவில்லை. அவரது கால்கள் தானாக நடந்து பாலச்சந்தரின் அறைக்குள் சென்றன. பாலச்சந்தரை பார்த்ததும் சிவாஜிராவின் கைகள் தாமாக கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தன. 'வணக்கம் சார்' என்றார். அப்போது டைரக்டர் பாலச்சந்தர் தனது மூக்குக்கண்ணாடி வழியே கூர்மையாக ஊடுருவி பார்த்தார்.
சிவாஜிராவுக்கு அடுத்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அப்போது என்ன நடந்தது என்பதை சிவாஜிராவ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த பேட்டி வருமாறு:-
பாலச்சந்தர் சார் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இரு கை கூப்பி வணங்கினேன். அவர் கை நீட்டி, என்னுடன் கை குலுக்கினார்.
'உட்காருங்கள்' என்றார். நான் உட்காராமல் நின்று கொண்டே இருந்தேன். வற்புறுத்தி, உட்காரச் சொன்னார். நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்தேன்.
அவர் என்னைக் கூர்ந்து பார்த்தார். எனக்கு அப்போது தமிழும் சரியாகத் தெரியாது. ஆங்கிலமும் சரியாகத் தெரியாது. எந்த மொழியில் பேசுவது என்று எனக்குக் குழப்பம். கொஞ்ச நேரம் ஓடியது.
'என்ன படிச்சிருக்கீங்க?' என்று பாலச்சந்தர் கேட்டார்.
'எஸ்.எஸ்.எல்.சி. பாஸ்' என்றேன்.
இது மாதிரி வேறு சில கேள்விகள் கேட்ட பின். 'நான் இதுவரை உங்கள் நடிப்பைப் பார்த்ததில்லை. ஏதாவது நடித்துக் காட்டுங்கள்' என்றார்.
'எனக்குத் தமிழ் தெரியாதே' என்றேன்.
'பரவாயில்லை. கன்னடத்தில் பண்ணுங்க' என்றார்.
கிரீஷ்கர்னாட் எழுதிய 'துக்ளக்' நாடகத்தில் இருந்து ஒரு சீனை நடித்துக் காட்டினேன். பாலசந்தர் சாருக்கு மிகுந்த சந்தோஷம். 'ரொம்ப நல்லா இருக்கு' என்று பாராட்டினார்.
பிறகு பாலச்சந்தர் சார் சொன்னார். இப்போது, 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு ரோல். அது சின்ன ரோல். என்றாலும், ரொம்ப பவர்புல் ரோல். அந்த ரோலில் உங்களை அறிமுகம் செய்யப் போகிறேன். அடுத்து, 'அவள் ஒரு தொடர்கதை' படத்தை தெலுங்கில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் ஜெய்கணேஷ் நடித்த ரோல் உங்களுக்கு" இவ்வாறு கூறிய பாலசந்தர், 'உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?' என்று கேட்டார். எனக்கு அப்போது தெலுங்கில் சில வார்த்தைகள்தான் தெரியும். என்றாலும் துணிந்து, 'தெரியும்' என்றேன்.
பாலசந்தர் தொடர்ந்து, '3-வது ஒரு கதை இருக்கு. (மூன்று முடிச்சு). அதில் ஆன்டி ஹீரோ ரோலை உங்களுக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்' என்று கூறிவிட்டு, 'நீங்கள் மட்டும் தமிழை நன்றாகக் கற்றுக் கொண்டால், உங்களை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடுவேன்' என்று அழுத்தம் திருத்தமாய் சொன்னார்.
அதைக்கேட்டு மெய் சிலிர்த்துப் போனேன். ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி. 'சரி. நீங்கள் போகலாம். விலாசம், போன் நம்பர் எல்லாம் கொடுத்து விட்டுப் போங்கள். படப்பிடிப்பின்போது உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன்' என்றார் பாலசந்தர். அவர் சொல்ல சொல்ல எனக்கு கண்ணீர் வந்தது. அவர் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு வெளியில் வந்தேன். இவ்வாறு அந்த பேட்டியில் சிவாஜிராவ் கூறியிருந்தார்.
டைரக்டர் பாலச்சந்தர் அறையில் இருந்து வெளியில் வந்த சிவாஜிராவ் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி தவழ்ந்தது. ஒருவித புத்துணர்ச்சி தோன்றியது. தன்னை வழிநடத்தும் ராகவேந்திர சுவாமிகளை மனதிற்குள்ளேயே நினைத்து வணங்கினார். அப்போது அவரிடம் சர்மா வந்து சிரித்த படியே, 'டைரக்டரை பார்த்து விட்டீர்களா? என்ன சொன்னார்?' என்று கேட்டார். சிவாஜிராவ் நடந்ததை சொன்னார். அதை கேட்டு ஆச்சரியப்பட்ட சர்மா, சிவாஜிராவுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
பிறகு அவரிடம் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை வாங்கி டைரியில் குறித்துக் கொண்டு வழி அனுப்பி வைத்தார். காரில் ஏறிய சிவாஜிராவ் தன்னை ஜெமினி பாலம் அருகே இருக்கும் உட்லண்ட்ஸ் ஓட்டலில் இறக்கி விட்டு விடும்படி தெரிவித்தார். அவரது கையில் அப்போது 20 ரூபாய் மட்டுமே இருந்தது. அந்த 20 ரூபாயை வைத்துக் கொண்டு நண்பர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். சிறிது நேரத்தில் பாலச்சந்தர் அலுவலக கார் சிவாஜிராவை உட்லண்ட்ஸ் ஓட்டலில் இறக்கி விட்டது.
அந்த ஓட்டல் வரவேற்பறையை நோக்கி 'ரகு ரகு' என்று கத்திக் கொண்டே சிவாஜி ராவ் ஓடினார். அப்போது வரவேற்பறையில் ரகு வேறு யாருடனோ பேசிக் கொண்டு இருந்தார். சிவாஜிராவ் அலறிக் கொண்டு வருவதை பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சியாகி விட்டது.
'டேய் என்னடா? என்ன விஷயம்? சொல்லு' என்று ரகு கேட்டார். அதற்கு சிவாஜிராவ், 'டேய் எனக்கு மூச்சே நின்று விடும் போலிருக்கிறது. இன்று நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. பாலச்சந்தர் சார் என்னை அவரது படத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்து இருக்கிறார்' என்றார்.
இதைக் கேட்டதும் ரகு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சிவாஜிராவுக்கு கை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். பாலச்சந்தர் சார் ஒப்பந்தம் செய்து இருக்கும் படத்தின் பெயர் என்ன என்று ரகு கேட்டார். அதற்கு சிவாஜிராவ் 'டேய் ரகு என்னை அவர் ஒரு படத்தில் நடிக்க மட்டும் ஒப்பந்தம் செய்யவில்லை. 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார். இன்று ஒரே நாளில் 3 படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதில் 2 படங்கள் தமிழ் படங்கள், ஒன்று தெலுங்கு படம்' என்றார்.
இதைக் கேட்டதும் ரகுவுக்கு மிக மிக ஆச்சரியமாக இருந்தது. என்ன சொல்கிறாய். மூன்று படங்களா என்று மயக்கம் வராத குறையாக கேட்டார். சிவாஜிராவும் ஆமாம் என்று சொல்லியபடி நண்பர்களுக்கு விருந்து கொடுக்க முடிவு செய்தார். கையில் இருந்த 20 ரூபாய்க்கும் மசால் தோசை, இனிப்பு மற்றும் காபி, டீ ஆர்டர் செய்தார். நண்பர்கள் அனைவரும் சிவாஜிராவை கட்டிப்பிடித்து கொண்டாடினார்கள்.
அதன் பிறகு ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அது என்ன என்பதை நாளை பார்க்கலாம்.
- செல்களை காப்பாற்றும் உணவுகள் உள்ளது.
- பொட்டாசியம் நிறைந்தது வாழைப்பழம்.
நிறைய உணவுகள் ஆரோக்கியமாகவும் ருசியாகவும் இருக்கின்றன. இப்படி சத்தான உணவுகள், பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள், பால், பால் சார்ந்த உணவு, கிழங்கு வகைகள் என எத்தனையோ வகை உணவுகள், பிரிவுகள் உள்ளன.
நிறைந்த சத்து, புரதம் போன்றவை சாப்பிட்ட பிறகு வயிற்றினை நிறைவாக வைக்கின்றது.
*வைட்டமின்கள், தாது உப்புகள் வழங்குகின்றன.
* செல்களை காப்பாற்றும் உணவுகள் உள்ளது.
* ஆப்பிளின் சத்தினை எல்ேலாரும் அறிவர்.
* அவகோடா என்பது இன்று மிக பிரபலம் அடைந்து வரும் பழம்.
* பொட்டாசியம் நிறைந்தது வாழைப்பழம்.
* ஆரஞ்சு 'சி' சத்துக்கு பெயர் எடுத்தது.
* ஸ்ட்ராபெர்ரிஸ் வைட்டமின் 'டி' சத்து நிறைந்து, கலோரி சத்து குறைந்தது.
* முட்டை-புரதம் மற்றும் பல்வேறு நன்மைகளை கொண்டது.
* கொட்டை-விதை பிரிவுகள்
* பாதாம்-வைட்டமின் ஈ சத்து நிறைந்தது.
* சியா விதை அடர்சத்து கொண்டது. மங்கனீசு, மக்னீசியம், கால்சியம் சத்துக் கொண்டது.
* தேங்காய்-கற்பக விருட்சம் தான்

* வால்நட், பிரசிங் கொட்டை
* குடை மிளகாய்-வைட்டமின் 'சி' சத்து நிறைந்தது.
*புரகோலி-நார்சத்தும் வைட்டமின் 'சி' சத்தும் கொண்டது.
* காரட்டை தினமும் கழுவி தோல் சீவி சாப்பிடலாமே.
* வெள்ளரி-புத்துணர்ச்சி தரும்.
* பூண்டு-ஆண்டி ஆக்சிடன்ட் நிறைந்தது
* வெங்காயம், தக்காளி காய்கறி வகைகள்
* கடல் உணவுகள். * முழுதானியம்-அரிசி, தினை, ஓட்ஸ். *பருப்பு வகைகள், பீன்ஸ், வேர்கடலை. * பால், பால் சார்ந்த உணவுகள்
* ஆலிவ் எண்ணை, தேங் காய் எண்ணை, சர்க்கரை நோயை கடுப்படுத்த உதவும்.
இந்த அறிகுறிகள் இதனாலும் இருக்கலாம். இதனால் மட்டும் என்று கூறப்படவில்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மருத்துவ ஆலோசனை பெற வேண்டியதன் அவசியத்திற்காகவே இது எழுதப்படுகின்றது.
* காலில் தசை பிடிப்பு போல் ஏற்படுகின்றதா? மக்னீசியம் குறைவாக இருக்கலாம்.
* மூச்சு வாங்குகின்றதா? நடக்கும்போது அதிகம் மூச்சு வாங்குகின்றதா? ரத்த சோகை -இரும்பு சத்து குறைபாடாக இருக்கலாம்.
* கைகள் சில்லென இருக்கின்றதா? பி12, இரும்பு சத்து குறைபாடும் இத்தகு பாதிப்பின் வெளிப்பாடாக இருக்கலாம்.
* ஈறுகளில் ரத்த கசிவு என்பது அநேகமாக வைட்டமின் 'டி' சத்து குறைபாடு என்பதனை அநேகர் அறிவர்.
* கண் பார்வை இரவில் குறைவது போல் தெரிந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும். வைட்டமின் 'ஏ' சத்து குறைபாடும் இருக்கலாம்.
* பாதங்கள் மரப்பது போல் இருந்தால் வைட்டமின் 'பி', 'பி6' குறைபாடும் காரணமாக இருக்கலாம். நகங்களில் புள்ளிகள் இருந்தால் 'சிங்க்' சத்து தேவைப்படலாம்.

கமலி ஸ்ரீபால்
* வாயின் இரு ஓரத்திலும் வெடிப்புகள் இருந்தால் வைட்டமின் 'பி2' சத்து தேவைப் படுகின்றதா என பரிசோதித்துக் கொள்ளவும்.
* நாக்கு எரிகின்ற மாதிரி இருக்கின்றதா? வைட்டமின் 'பி' குறைபாடு இருக்கலாம்.
*வாயில் துர்நாற்றம்-பல், ஈறு பிரச்சினையோடு உணவுப் பாதையில் பிரச்சினையும் இருக்கலாம்.
* சர்க்கரை உணவு மீது அதிக ஈடுபாடு என்பதற்கு மக்னீசியம் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.
வாசனை தெரியவில்லை என்றால் மற்ற காரணங்களோடு சிங்க் குறைபாடும் இருக்கலாம்.
* காலில் வீக்கம் ஏற்பட்டால் சிறுநீரக பரிசோதனை அவசியம்.
* காதில் ஓங்காரம் போல் ஒலி இருந்தால் உயர் ரத்த அழுத்தம் இருக்கின்றதா என பரிசோதித்துக் கொள்ளவும்.
* தலைசுற்றல் இருந்தாலும் ரத்த அழுத்தத்தினை பரிசோதித்துக் கொள்ளவும். குறைந்த ரத்த அழுத்தம் கூட இருக்கலாம்.
புரதச்சத்து
புரதச் சத்து குறைபாடு என்பது அதிகமாக காணப்படும் ஒன்றாகத் தான் உள்ளது.
* வீக்கம், கொழுப்பு கல்லீரல், தசை வலுவின்மை, முடி, நகம், சரும குறைபாடு, எலும்பு ஆரோக்கியமின்மை, குறைவான வளர்ச்சியின்மை போன்றவை புரதச் சத்து குறைபாட்டின் வெளிப்பாடுகளில் சில முக்கியமானவை ஆகும். ஒரு கிலோ எடைக்கு 8 கிராம் புரதம் என ஒரு சாதாரண மனிதனுக்கு அளவீடாக கணக்கிடப்–படுகின்றது. ஒருவர் 60 கிலோ எடை இருக்கின்றார் என்றால் அவருக்கு 58.60 கிராம் புரதம்நாள் ஒன்றுக்கு தேவை என கணக்கிடப்படுகிறது.
புரதச்சத்து குறைபாடு உடையவர்கள்
* புரத உணவு, சர்க்கரை உணவு இவற்றில் அதிக விருப்பம் உள்ளவராக இருப்பார்கள்.
* பசி இவர்களுக்கு அதிகம் இருக்கும்.
* உடல் தசைகள் வலுவிழந்து இருக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
* காயங்கள் ஆறுவதில் கால தாமதம் ஆகும்.
* கொழுப்பு கல்லீரல் பாதிப்பு இருந்தால் எப்பொழுதும் சோர்வாகவும், பலமின்றியும் இருப்பர்.
* எலும்பு முறிவு எளிதில் ஏற்படும்.
* வீக்கம் இருக்கும்.
* சருமம், தலைமுடி, நகங்களில் பாதிப்பு இருக்கும்.
அன்றாட உணவில் முட்டை, பருப்பு, பன்னீர், சோயா, கொட்டை வகைகள், பால், தயிர் என புரத உணவுகளை சேர்த்துக் கொள்ள இப்பொழுதே ஆரம்பித்து விடுங்கள்.
- சென்னைதான் இனி நம் வீடு என்று அவர் மனதுக்குள் ஆழமாக பதிவு செய்துக் கொண்டார்.
- படம் முடிந்து வெளியில் வந்த போது அந்த படத்தின் டைரக்டர் சோமசேகர் வெளியில் நின்று கொண்டிருந்தார்.
பெங்களூருக்கு சென்ற வேகத்தில் சென்னைக்கு திரும்பி வந்த சிவாஜிராவுக்கு தனது தந்தை ரனோஜிராவ் ஜோதிடம் பார்த்த விவரம் எதுவும் தெரியாது. ஆனால் தனது தந்தை தனது எதிர்காலம் பற்றி மிகவும் கவலைப்பட்டது அவரது மனதை வாட்டியது. தந்தையின் இறுதி காலத்தில் அவரது மனம் குளிரும் வகையில் சினிமாவில் நடித்து பெயரும், புகழும் பெற வேண்டும் என்ற எண்ணம் சிவாஜிராவுக்குள் வந்து கொண்டே இருந்தது. பெங்களூரில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்த மறுநாளில் இருந்து அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேட தொடங்கினார்.
பெங்களூரில் பார்த்து வந்த கண்டக்டர் வேலை பறி போய் விட்டதால் இனி வாழ்க்கையில் நல்ல உயர்ந்த நிலைக்கு வரும் வரை பெங்களூருக்கு திரும்பி செல்லவேக் கூடாது என்று அவர் மனதில் தோன்றியது. இறை அருளால் அவரது அந்த எண்ணம் ஒருவித வைராக்கியமாகவே மாறிப் போனது.
சென்னைதான் இனி நம் வீடு என்று அவர் மனதுக்குள் ஆழமாக பதிவு செய்துக் கொண்டார். அடிக்கடி அவரது மனம் அதையே சொல்லிக் கொண்டு இருந்தது. அதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் அவர் சினிமா வாய்ப்பை தேடி அலைந்தார்.
சினிமா நிறுவனங்கள் அனைத்திலுமே அவர் ஏறி இறங்கி விட்டார். 99 சதவீதம் பேர் அவரை புறக்கணித்து திருப்பி அனுப்பினார்கள். அப்போதெல்லாம் அவருக்கு அவரது நண்பர்கள்தான் உற்சாகம் கொடுத்தனர்.
'கவலைப்படாதே. நம்பிக்கையோடு முயற்சி செய். கடவுள் கைவிட மாட்டார்' என்று நண்பர்கள் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தனர். அப்போதெல்லாம் சிவாஜிராவுக்கு அவரது இஷ்ட தெய்வமான ராகவேந்திரர் நினைவு வரும். ஒவ்வொரு நிமிடமும் ராகவேந்திரரை மனதுக்குள் வழிபட்டுக் கொண்டே சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார்.
சுமார் 1 மாதம் அலைந்து திரிந்தும் அவரை திரை உலகத்தினர் கண்டுகொள்ளவே இல்லை. எதற்காக நமக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு பொறித்தட்டியது போல ஒரு உண்மை தெரிய வந்தது. தமிழ்நாட்டில் வாழ்ந்து, தமிழ் படங்களில் நடித்து, தமிழர்களோடு ஒன்றிணைந்து வாழ வேண்டுமானால் முதலில் தமிழ்மொழியை பேசவும், எழுதவும் குறையின்றி நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பது சிவாஜிராவுக்கு புரிந்தது. திரைப்படக் கல்லூரியில் படித்த கடைசி மாதத்தில் டைரக்டர் பாலச்சந்தர் வந்திருந்த போதும் 'தமிழை நன்றாக கற்றுக் கொண்டு வா' என்று சொன்னதும் சிவாஜிராவுக்கு ஞாபகம் வந்தது.
அன்றே தமிழ் கற்கும் அதிரடியை தொடங்கினார். தன்னை சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் தமிழிலேயே தன்னிடம் பேசும்படி கேட்டுக் கொண்டார். அவரும் தமிழிலேயே பதில் சொல்ல ஆரம்பித்தார். பெங்களூரில் நிறைய தமிழர்களிடம் சிறுவயதில் இருந்தே சிவாஜிராவ் பழகி இருக்கிறார். கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தில் அவர் கண்டக்டராக இருந்த போது டிரைவராக இருந்த ராஜ்பகதூர் மூலம் நிறைய தமிழ் வார்த்தைகளை தெரிந்து வைத்து இருந்தார்.
அதனால்தான் பெங்களூரில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களை ஆர்வத்துடன் சென்று பார்த்தார். சென்னைக்கு நடிப்பு பயிற்சிக்காக வந்த போதும் நிறைய தமிழ் படங்களை பார்த்தார். தமிழ் புரிகிறதோ இல்லையோ, எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களை ஆர்வத்துடன் பார்த்து அர்த்தங்களை தெரிந்துக் கொண்டார்.
இவையெல்லாம் அவருக்கு தமிழ் மொழி கற்பதற்கு உறுதுணையாக இருந்தது. அவருடன் திரைப்படக் கல்லூரியில் படித்த சதீஷ், விட்டல் இருவரும் நன்கு தமிழ் பேசினார்கள். அவர்கள் மூலமும் சிவாஜிராவ் தமிழில் பேசுவதை மேம்படுத்தத் தொடங்கினார்.
தமிழ் பேச்சு பயிற்சியுடன் சென்னையில் உள்ள பல்வேறு இயக்குனர்களை சந்தித்து தனது புகைப்படங்களை கொடுக்கவும் ஆரம்பித்தார். அவருடன் அவரது திரைப்படக் கல்லூரி நண்பர்களும் சேர்ந்து சினிமா வாய்ப்பு தேடி அலைந்தனர். அவர்கள் தினமும் பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை சந்தித்து தங்களது போட்டோக்களை கொடுத்து வருவார்கள். அப்படி 20-க்கும் மேற்பட்ட இயக்குனர்களிடம் சிவாஜிராவும், அவரது நண்பர்களும் போட்டோக்களை கொடுத்து இருந்தனர்.
சினிமா வாய்ப்பு தேடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பிலிம் சேம்பரில் வெளியிடப்படும் படங்களை போய் அவர்கள் பார்ப்பது உண்டு. அழைப்பு இல்லாவிட்டாலும் திரைப்படக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்பதால் பிலிம்சேம்பருக்குள் மிக எளிதாக சென்று அவர்களால் படங்கள் பார்க்க முடிந்தது.
அதில் சிக்கல் வந்து விடக் கூடாது என்பதற்காக சிவாஜிராவும், அவரது நண்பர்களும் திரைப்படம் போட்ட பிறகு தியேட்டருக்குள் சென்று அமர்ந்து கொள்வார்கள். சில படங்கள் திரையிடப்படும் போது தியேட்டர் நிரம்பி வழியும். என்றாலும் சிவாஜிராவும், அவரது நண்பர்களும் கவலைப்பட்டதே இல்லை. சுவர் ஓரமாக நின்று கொண்டே படம் பார்த்து விடுவார்கள் அல்லது தியேட்டர் அரங்கு முன்பகுதியில் வெறும் தரையில் உட்கார்ந்து படம் பார்த்து விட்டு வருவார்கள். ஒரு நாள் அவர்கள் அப்படி 'பிரேமத காணிக்கை' என்று ஒரு கன்னட படத்தை பார்க்க சென்றனர்.
தியேட்டருக்குள் இடம் இல்லாததால் வழக்கம் போல முன்வரிசைக்கு அருகே தரையில் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்த படத்தில் போலீஸ் நிலையத்தில் குற்றவாளிகளின் புகைப்படத்தை இன்ஸ்பெக்டர் காட்டுவது போல ஒரு காட்சி இடம் பெற்று இருந்தது.
குற்றவாளிகள் படத்தை இன்ஸ்பெக்டர் மேஜை மீது ஒவ்வொன்றாக எடுத்து போடும் காட்சிகளை பார்த்து சிவாஜிராவும், அவரது நண்பர்களும் கடுமையாக அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அந்த புகைப்படங்கள் அனைத்தும் சிவாஜிராவும், அவரது நண்பர்களும் வாய்ப்பு தேடி கன்னட டைரக்டர் சோமசேகரிடம் கொடுத்தது ஆகும்.
ஆனால் அவர் சிவாஜிராவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதற்கு பதில் அவரது படத்தை பயன்படுத்தி இருப்பது தெரிந்தது. முதலில் அது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இப்படியாவது திரையில் தங்கள் முகம் தெரிய வாய்ப்பு வந்ததே என்று ஒருவருக்கொருவர் பேசி சிரித்துக் கொண்டனர்.
படம் முடிந்து வெளியில் வந்த போது அந்த படத்தின் டைரக்டர் சோமசேகர் வெளியில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சிவாஜிராவ் சென்று எங்களது போட்டோக்களை உங்கள் படத்தில் பயன்படுத்திக் காட்டியதற்கு ரொம்ப நன்றி என்றார். டைரக்டர் சோமசேகருக்கு ஒருமாதிரியாக ஆகி விட்டது.
இப்படி சென்னையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் சிவாஜிராவுக்கு மறக்க முடியாத பல சம்பவங்கள் நடந்தன. ஒவ்வொரு நாளும் நகர்ந்துக் கொண்டுதான் இருந்ததே தவிர யாரும் அவரை சினிமாவில் நடிக்க அழைக்கவில்லை.
பாலசந்தர் தனக்கு நிச்சயமாக வாய்ப்பு தருவார் என்று சிவாஜிராவ் மிக மிக நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் ஒரு கால கட்டத்திற்கு பிறகு அந்த நம்பிக்கையும் அவரிடம் குறையத் தொடங்கியது. பாலச்சந்தர் புதிதாக ஒரு படம் தொடங்கி இருக்கிறார் என்று அவர் கேள்விப்பட்ட போது தனக்கு அதில் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று மிகவும் ஏங்கிப் போனார்.
நாளடைவில் அவருக்கு சென்னை சினிமா ஸ்டூடியோக்களில் வாய்ப்பு தேடி அலைவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஸ்டூடியோ உள்ளே கூட அவரால் சாதாரணமாக செல்ல இயலவில்லை. துரத்தி விட்டனர். கண்ணீர் மல்க சிவாஜிராவ் நடந்தே அமைந்தகரை அருண் ஓட்டலுக்கு வந்து சேருவார்.
1974-ம் ஆண்டு கடைசியில் சிவாஜிராவ் வேதனையின் உச்சத்தில் இருந்தார். சென்னையில் சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. பெங்களூரில் இருந்த வேலையும் போய் விட்டது. தனது எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் கூட வந்து விட்டது. ஒரு கட்டத்தில் அவர் அருண் ஓட்டல் அறைக்குள்ளேயே முடங்கிப் போனார். நண்பர்கள் வாங்கிக் கொடுக்கும் உணவை சாப்பிட்டுக் கொண்டு, சிகரெட் புகையை ஊதிக் கொண்டு ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாக தள்ளினார்.
சோகத்தில் தாடி, மீசையை சரிசெய்யாமல் அப்படியே அவர் வளரவிட்டு இருந்தார். அடுத்து என்ன செய்வது என்றே அவருக்கு தெரியவும் இல்லை. புரியவும் இல்லை. கட்டிலில் படுத்தாலும் தூக்கம் வருவதில்லை. எதிர்காலத்தை நினைத்து புரண்டு புரண்டு படுத்து அவஸ்தையின் உச்சத்தில் இருந்தார்.
நாட்கள் இப்படி நகர்ந்துக் கொண்டு இருந்த போதுதான் ஒரு நாள் திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்தது. 'இங்கே சிவாஜிராவ் என்பது யார்? என்று கேட்டுக் கொண்டே ஒருவர் அருண் ஓட்டலுக்குள் நுழைந்தார். சிவாஜிராவின் நண்பர் சதீஷ் அவரை நிறுத்தி, 'நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள்? எதற்காக சிவாஜிராவை தேடுகிறீர்கள்?' என்றார்.
அதற்கு அந்த நபர், 'நான் டைரக்டர் பாலச்சந்தர் சாரின் உதவியாளர். என் பெயர் சர்மா. டைரக்டர் சார் தான் உடனடியாக சிவாஜிராவை அழைத்துக் கொண்டு வரும்படி கூறினார். சிவாஜிராவ் எங்கே இருக்கிறார்?' என்று கேட்டார். இதைக் கேட்டதும் சதீசுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
மின்னல் வேகத்தில் ஓடி சென்று படுக்கையில் விரக்தியான முகத்துடன் படுத்துக் கொண்டு இருந்த சிவாஜிராவை தட்டி எழுப்பி, 'டேய் உன்னை பாலச்சந்தர் சார் கூட்டிக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறாராம். புறப்படு' என்றார்.
இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்து தாக்கியது போல இருந்தது. ஒரு நிமிடம் அவராலேயே அவரை நம்ப முடியவில்லை. ஆச்சரியமும், அதிர்ச்சியும் சிவாஜிராவ் முகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தின. 'உண்மையாகவா சொல்கிறாய்?' என்றார். அப்போது அங்கு வந்த சர்மா, 'ஆமாங்க. டைரக்டர் பாலச்சந்தர் சார்தான் உங்களை அழைத்து வரச் சொன்னார். வெளியில் கார் தயாராக நிற்கிறது. வாருங்கள் போகலாம்' என்றார். சிவாஜிராவ் கண்கள் கலங்கின. ராகவேந்திர சுவாமிகளே கை நீட்டி அழைப்பது போல உணர்ந்தார்.
அடுத்த நிமிடம் மின்னல் வேகத்தில் புறப்படத் தொடங்கினார். நீண்ட நாள் தாடியை அகற்றி, குளித்து விட்டு புத்துணர்ச்சியுடன் புறப்பட்டார். நண்பர்கள் அவருக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பினார்கள். டைரக்டர் பாலச்சந்தரை பார்க்கப் போகும் இன்ப அதிர்ச்சியுடன் சிவாஜிராவ் காரில் ஏறினார்.
அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை பார்ப்போம்.
- பிரச்சினை என்று வந்துவிட்டால் முதலில் அது உண்மையிலேயே பிரச்சினை தானா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்
- பொதுவாகப் பிரச்சினைகள், நம்மைப் பலவீனப்படுத்துவதற்காக அல்ல; பலப்படுத்துவதற்காகவே வருகின்றன.
பிரச்சினைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை!; எனினும் அவற்றை எதிர்கொண்டு வாழ்வது எப்படி? என்பதை அறிந்து கொள்வதற்கு ஆவலோடு காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
நெல்லைத்தானே விதைத்தோம்! அதில் ஏன் புல்லும் முளைக்கிறது? என்று சலித்துக் கொண்டால் விவசாயம் பண்ணமுடியாது; பயிர்களோடு சேர்ந்து களைகளும் வளரும் என்பது இயற்கையின் விதி!; கூடவே அதிக மழை பெய்து பயிர்களை அழுகவும் வைக்கும்; மறுபுறம் மழையே பெய்யாமல் பயிர்கள் காய்ந்து கருகிடவும் நேரிடும்; எல்லா லாப நஷ்டக் கணக்குகளும் சேர்ந்ததுதான் வேளாண்மை; வணிகம் முதலான பிற தொழில்களும் அதைப் போன்றதுதான்.
வாழ்க்கையில் நல்லதையே நினைத்து, நல்லதையே திட்டமிட்டு, நல்லபடியாக நடக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலும், சில தடைகளும் தடங்கல்களும் நம்மையும் மீறி நமக்கு எதிராகக் கிளம்பும்!; நமது திறமைக்கும் உழைப்புக்கும் கடுமையான பரீட்சைகள் வைத்துப், போராடி ஜெயிப்பதற்கு நம்மைத் தயார்படுத்தும். நல்லவற்றை மட்டுமல்ல; தோல்விகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் எதிர்நோக்கி இருப்பதே வாழ்க்கை.
பிரச்சினைகள் என்றால் என்ன?. வாழ்க்கையின் போக்கில் நமக்குத் தொந்தரவாக, இடையூறாக அமைகின்ற அனைத்துமே பிரச்சினைகள் தாம்; நாம் நினைத்தபடி நடந்து மகிழ்ச்சி தராமல், தோல்விகளைத் தந்து துன்பத்தில் ஆழ்த்தி விடுபவையும் பிரச்சினைகள்தாம்.
விடியலில் விழித்து, இரவு உறங்கப்போகும் வரை நாள்முழுக்க, நாம் நினைத்தது நினைத்தபடி, வகுத்தது வகுத்தபடி நடக்காமல், நழுவல்களும், சறுக்கல்களும், தடங்கல்களும் சின்னஞ்சிறு அளவிலோ, அல்லது பெரிய அளவிலோ நடக்கும். அவை நம்மைத் திகைக்க வைக்கவும் வருந்த வைக்கவும் செய்தால் அவையும் பிரச்சினைகள்தாம். பிரச்சினைகள் பெரும்பாலும் வெளியிலிருந்து வருவதில்லை; 'தீதும் நன்றும் பிறர் தர வாரா!' என்பது புறநானூறு. ஆனாலும் வருகின்ற பிரச்சினைக்கான பழியை யார்மீது தூக்கிப் போடலாம் என்று வெளியாள்களைத்தான் ஒவ்வொரு மனமும் துடிதுடிப்புடன் தேடிக் கொண்டிருக்கும்.

சுந்தர ஆவுடையப்பன்
"நோய் நாடி! நோய் முதல்நாடி! அது தணிக்கும் வாய்நாடி!" என்று நோய்க்கான மருத்துவ முறையைத் திருவள்ளுவர் மூன்று கட்டங்களில் நிரல்படுத்திக் கூறுவார். இதையே நமக்கு வருகிற பிரச்சினைகளுக்கும் பொருத்திப் பார்த்து நிவர்த்தி செய்ய முயற்சிக்கலாம். நோயாக இருந்தாலும் பிரச்சினையாக இருந்தாலும் துன்பம் தருகிற வகையில் இரண்டும் ஒன்றுதானே!. நமக்குத் தொழில் ரீதியாகவோ அல்லது வேறு எதன் ரீதியாகவோ ஏதாவது பிரச்சினைகள் வந்தால், உண்மையிலேயே அவை பிரச்சினைகள் தானா? அவை பிரச்சினைகள் என்றால் என்ன வகைப்பட்டவை? என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.
பிறகு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யவேண்டும்; ஆணிவேரைப் பற்றித் தெரிந்து கொண்டால்தான், பிரச்சினையின் வீரியத்தைப் புரிந்துகொண்டு ஏற்றவாறு தீர்வுக்கான வழிமுறைகளைக் கண்டறியலாம். மூன்றாவதாக அந்தப் பிரச்சினைகளை எந்தெந்த வழிகளில் சென்று தீர்த்துவைக்க முடியும் என்னும் வழிமுறைகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே வருகின்ற பிரச்சினைகளுக்கும் சண்டைகளுக்குமான காரணங்களை எளிதில் கண்டறிந்துவிட முடியாது. சாப்பாட்டில் உப்புக்குறைவு என்று ஆரம்பிக்கும் சண்டைக்கு மூல காரணமாக, முப்பது வருடத்திற்கு முந்தி நடந்த திருமணத்தன்று வரதட்சணைப் பணம் ஆயிரம் ரூபாய் குறைவாகத் தந்ததாகக்கூட இருக்கலாம்.
குடும்பத்தில் கணவன்-மனைவியருக்கிடையே வருகின்ற சண்டைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு கண்டுவிடுவது நல்லது; இல்லையென்றால் அது கிளைவிட்டு வளர்ந்து, கொடிவிட்டுப் படர்ந்து ஏதேதோ பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணங்களாக வேர்விடக் கூடும். குடும்பச் சண்டைகளுக்கு வக்கீல் வைத்து வாதம் செய்து நீதிபதி வைத்துத் தீர்ப்புச் சொல்ல வேண்டும் என்பதெல்லாம் தேவையற்றது. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கணவனும் மனைவியும் எந்தவிதமான நிபந்தனையுமின்றிச் சமாதானமாகப் போய்விடுவதே ஆகச் சிறந்த நல்ல காரியம்.
மனிதர்கள் பொதுவாகவே விட்டுக் கொடுத்துப் போவதன் மூலமும் அனுசரித்துப் போவதன் மூலமும், பொதுவெளியில் பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுவிடலாம். சிலர் பிரச்சினைகளைப் பிரச்சினைகளாகவே பார்ப்பார்கள்; சில கெட்டிக்காரர்கள் பிரச்சினைகளைத் தீர்வுகளாகவே பார்ப்பார்கள். பிரச்சினைகளாகவே பார்ப்பவர்கள் எந்நேரமும் தீராத படபடப்புடனும் பரபரப்புடனுமே திரிவார்கள்; வெகுசீக்கிரத்தில் நோய்களுக்கும் மாத்திரைகளுக்கும் அடிமையாகிப் போவார்கள்; தீர்வுகளாகப் பார்க்கிறவர்கள் திசைகளுக்கே திசைகாட்டிகளாக வெற்றிமேல் வெற்றி குவிப்பார்கள்.
ஒரு குடும்பத்தில் ஒரு தந்தை, மகன். தந்தை எந்தவிதப் பரபரப்புக்கும் ஆளாகாமல் எப்போதும் அமைதியும் கனிவும் ததும்பத் திகழ்பவர்; மகன் எவ்வளவு பெரிய பிரச்சினை தனக்கு வந்தாலும் அப்பாவிடம் மனம் திறந்து சொல்லி அறிவுரைகளைப் பெற்றுக் கொள்பவன். மகன் வெளி வேலைகளுக்குச் செல்வதாலும், இளைய வயதினனாக இருப்பதாலும் அவனுக்கு அடிக்கடி பிரச்சினைகள் வரும்; அதுவும் பிரச்சினைகள் விதம்விதமாக வருவதும் உண்டு. சிறு குழந்தையாக இருக்கும் காலந்தொட்டே, பிரச்சினை என்று வந்துவிட்டால் மகன் மனக் கலக்கத்துடன் வந்து அப்பாவிடம் பிரச்சினை முழுவதையும் சொல்வான். எல்லாவற்றையும் முழுமையாகக் கேட்டுவிட்டு, தந்தை மகனிடம், " இவ்வளவுதானா பிரச்சினை?! வருத்தப்படாதே! விரைவில் தீர்ந்துபோகும்!" என்று ஆறுதலாகக் கூறுவார்; மகனும் எதிர்ப்பேச்சுப் பேசாமல் சென்றுவிடுவார்; பிரச்சினையும் அப்பா கூறியதுபோலவே சில நாள்களில் இல்லாமல் மறைந்து போய்விடும். தந்தை மகனிடையே இப்படித்தான் பிரச்சினைகள் குறித்த பேச்சு வார்த்தைகள் காலம் காலமாய் நடந்து கொண்டிருந்தன. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் தந்தை கூறுகிற ஒரே ஒரு சொல்.. "இவ்வளவுதானா பிரச்சினை? விரைவில் தீர்ந்து போகும்!" என்பது மட்டுமே.
மகனும் இப்போது வளர்ந்து பெரியவனாகி விட்டான்; அனுபவங்களும் பெருகிவிட்டன. இப்போதும்கூடப் பிரச்சினை என்று வந்து விட்டால் தந்தையிடம் அவற்றைக் கூறாமல் இருப்பதில்லை; தந்தையும் கேட்டுவிட்டு, தனது வழக்கமான வார்த்தைகளைத் தெரிவிக்காமல் இருப்பதில்லை. ஆனால் முன்பெல்லாம் தனக்கு வந்திருக்கிற பிரச்சினைகளை ஒருவிதப் பதற்றத்தோடும் மனக் கலக்கத்தோடும் தந்தையிடம் தெரிவித்து வந்த மகன், தற்போதெல்லாம் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் லேசான புன்னகையோடு தெரிவிக்கத் தொடங்கி விட்டான். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் தெரியுமா? மகனிடம் தந்தை கேட்டார். "நீங்களே சொல்லுங்கள்!" என்றான் மகன்.
"முன்பெல்லாம் பிரச்சினைகளைப் பிரச்சினைகளாகப் பார்த்தாய்!; அதனால் உனக்குப் பதற்றமும் வருத்தமும் மனசெல்லாம் பரவிக் கிடந்தது. நாளாக நாளாகப் பிரச்சினைகளின் தன்மைகளை உணரத் தொடங்கிவிட்டாய்!; கையாளவும் கற்றுக்கொண்டு விட்டாய்!. இப்போது நீ பிரச்சினைகளைத் தீர்வுகளாகக் காணத் தொடங்கி விட்டாய்!. அதனால் உன் முகத்தில் இப்போதெல்லாம் புன்னகை இழையோடத் தொடங்கி விட்டது. இனி எந்நாளும் வெற்றியே!" என்று வாழ்த்தினார் தந்தை.
அந்தத் தந்தையின் வார்த்தைகளில், 'இவ்வளவு தானா?!' என்கிற சொல்லுக்கு எவ்வளவோ மகத்துவம் இருக்கிறது. எதையும் பூதாகரம் பண்ணிப் பார்க்கும்போது பிரச்சினை பெரியது போலவும், தீர்ப்பதற்கு முடியாத பல சிக்கல்களை உடையதுபோலவும் தோன்றி விடுகிறது; மலைப்புத் தோன்றிவிட்டால் எப்போதுமே வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்க முடியாது. 'ஒரு நிமிடம்' என்பதை 'ஒரு நிமிடம்'தானே! என்று படக்கென்று தாண்டிச் சென்றுவிடவும் முடியும்; அல்லது 'அறுபது வினாடிகள்' இருக்கின்றனவே! என்று நீட்டிப் பகுத்து, உழன்று தவித்திடவும் கூடும்.
பிரச்சினை என்று வந்துவிட்டால் முதலில் அது உண்மையிலேயே பிரச்சினை தானா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்; பிறகு அது பிரச்சினைதான் என்று ஏற்றுக்கொண்டு துணிந்து எதிர்கொள்ளத் தயாராகிவிட வேண்டும். பிரச்சினை என்று வந்தவுடன் நம்மில் பலர் நமக்கு ஏன் வம்பு என்று அஞ்சி நழுவிவிடவே பார்ப்பார்கள்; பிரச்சினைகளை வெற்றிகொள்ளச் சிறந்த வழி, துணிச்சலுடன் எதிர்கொள்வது மட்டுமே!. பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி நாம் விலகிப்போக ஆரம்பித்தால் அந்தப் பிரச்சினைகள் மேலும் மேலும் வளருமேயொழிய தீர்ந்து போவதற்கு வாய்ப்பே கிடையாது.
ஒரு பிரச்சினையை மூன்று நாள்களில் தீர்க்க வேண்டும் என ஒரு நெருக்கடி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். சிலர் முதல் நாளிலிருந்து வேலையைத் தொடர்ந்து, மூன்று நாள்களுக்கும் சமமாகப் பகிர்மானம் செய்து, பணியை ஆற்றி முடிப்பார்கள். சிலரோ மூன்று நாள்களில் முதலிரண்டு நாள்களுக்கு எந்த வேலையையுமே செய்யாமல் வெறுமனே சும்மா இருந்துவிட்டு, மூன்றாவது நாளில் மட்டும் அவசர கதியில் ஈடுபட்டு அவதிப்படுவார்கள்; சில வேளைகளில் மூன்றாவது நாளில் கச்சிதமாகச் செய்தும் முடித்து விடுவார்கள். வேறு சிலரோ முதலிரண்டு நாள்களில் ஆராய்ந்து திட்டமிட்டுக், கடைசிநாளில் முழு வேகத்துடன் ஈடுபட்டுத் திட்டமிட்டபடி முடித்தும் காட்டுவார்கள். இந்த மூன்று விதமான அனுகுமுறையும் சரியானவையா? அல்லது தவறானவையா? என்று எளிதில் சொல்லிவிட முடியாது.
'12, 13, 14 ஆகிய மூன்று நாள்களில் ஒரு பிரச்சினக்குத் தீர்வினைக் கண்டுபிடித்து முடித்துவிட வேண்டும்!' என்று ஒரு காலக்கெடு நமக்கு விதிக்கப்பட்டிருந்தால், பொதுவாக இந்த மூன்று நாள்களையும் நாம் எப்படி அணுகுவோம்?. வழக்கம்போல, மற்ற எல்லாரையும் போலவே 12,13,14 ஆகிய ஏறுவரிசையிலேயே அணுகு வோம். ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு வித்தியாச மனிதரோ, " அந்தப் பிரச்சினையை 14,13,12 ஆகிய மூன்று நாள்களில் முடிக்க வேண்டும்!" என்று மேலிருந்து கீழாகச் சொல் வார். அதாவது தீர்த்து வைக்கப்பட வேண்டிய இலக்கு நாளான மூன்றாவது நாளை முதல் நாளாக வைத்துக்கொண்டு அதற்கடுத்த துணை நாள்களாக மற்ற இரண்டு நாள்களைக் குறிப்பிடுவார். இதுதான் தீர்வினை மையப் படுத்திக்கொண்டு, அல்லது தீர்வினை முதன்மைப் படுத்திக்கொண்டு பிரச்சினையை அணுகும் முறை.
சிலர் பிரச்சினையை ஆராய்கிறேன்பேர்வழி என்று கூறி, இல்லாததும் பொல்லாததுமாய்ப் பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதுபண்ணிப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். இவ்வகை அணுகுமுறை, தீர்வினை எட்டும் தொலைவை தூரப் படுத்திக்கொண்டே போகும். பொதுவாகப் பிரச்சினைகள், நம்மைப் பலவீனப்படுத்துவதற்காக அல்ல; பலப்படுத்துவதற்காகவே வருகின்றன. அவற்றை நேர்முறைச் சிந்தையோடு அணுகினால், தீர்வுகளும் சிக்கல்கள் ஏதுமின்றி நேர்முறையாகவே எளிதில் அகப்பட்டு விடும்.
தொடர்புக்கு- 9443190098
- நான் பார்த்த லட்சக்கணக்கான ஜாதகங்களில் உங்களது மகன் ஜாதகம் மிக மிக வித்தியாசமானது.
- ஜோதிடர் சொன்னதை முழுமையாக நம்ப முடியவில்லை.
சிவாஜிராவின் தந்தை ரனோஜிராவ் ஆச்சரியத்தின் உச்சத்தில் இருந்தார். தனது மகன் பற்றி ஜோதிடர் சொன்ன தகவல்களை அவரால் நம்ப முடியவில்லை. சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தனது மகன் எப்படி அதிசயம் நிகழ்த்தும் மனிதனாக மாறுவான் என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டார்.
அவரது முகத்தில் தோன்றிய சந்தேகத்தை ஜோதிடர் அந்த வினாடியே புரிந்துக் கொண்டார். அவர் சிரித்துக் கொண்டே, "நான் சொல்வது உங்களுக்கு இப்போது நம்பிக்கை தராது. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மகன் ஜாதகம் மிக மிக அபூர்வமான ஜாதகம் ஆகும். அதுவும் இன்னும் சில ஆண்டுகளில் அவரது புகழ் பல கோடி மக்களால் பேசப்படும் அளவுக்கு மாறும் பாருங்கள்" என்றார்.
ஜோதிடர் சொன்னதை கேட்டதும் ரனோஜிராவுக்கு சிரிப்பாக வந்தது. மெல்ல சிரித்துக் கொண்டே, "அவன் கைவசம் இருந்த வேலையை விட்டுவிட்டு தெருவில் நிற்கிறான். அடுத்த வேளை உணவுக்கு கூட வழி இல்லை. அது தெரியுமா உங்களுக்கு?" என்றார்.
இதை கேட்டதும் ஜோதிடர், "நீங்கள் நான் சொல்வதை நம்புகிறீர்களோ இல்லையோ ஆனால் எதிர்காலத்தில் இந்த ஜாதகக்காரர் கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் மாபெரும் மனிதராக இருப்பார். அவரது ஜாதகத்தில் சூரியனும், வியாழனும் அமைந்து இருக்கும் அமைப்பு மிக மிக தனித்துவம் ஆனது. ரொம்ப அபூர்வமானது. ரொம்ப நாட்களுக்கு பிறகுதான் அபூர்வமான மனிதர்களுக்கு இத்தகைய கட்ட அமைப்பு கிடைக்கும். உங்கள் மகன் ஜாதகத்தில் அது இருக்கிறது" என்றார்.
ஆனால் அதையும் ரனோஜிராவால் நம்ப முடியவில்லை. அவரது முகத்தை வைத்து அவர் திருப்தி அடையவில்லை என்பதை புரிந்துக் கொண்ட ஜோதிடர் தொடர்ந்து சில நிமிடம் கண்களை மூடி தியானத்தில் மூழ்கினார். பிறகு அவர் ரனோஜிராவை பார்த்து தீர்க்கமான குரலில் பேசத் தொடங்கினார்.
"உங்கள் மகன் ஜாதகம் மிகவும் தனித்துவம் ஆனது. எனது அனுபவத்தில் இத்தகைய உயர்ந்த சிறப்பான ஜாதகத்தை நான் பார்த்ததே இல்லை. இந்த ஜாதகக்காரர் நாடு முழுவதும் புகழ் பெற்றவராக மாறுவார். நிச்சயமாக எனது கணிப்பு தப்பாது" என்றார்.
இதை கேட்டதும் ரனோஜிராவ் சிரித்தார். "அவனுக்கு இருந்த வேலையும் போய் விட்டதே" என்றார். உடனே ஜோதிடர், "இந்த ஜாதக அமைப்பைக் கொண்டவர் யாருக்கும் கீழ் வேலை பார்க்க மாட்டார். மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் தலைவனாக இருப்பார். இதுதான் நடக்கும்" என்றார்.
ஆனால் ஜோதிடர் சொன்னதை ரனோஜிராவால் நம்ப முடியவில்லை. ஜோதிடர் ஏதோ சொல்கிறார் என்ற நினைப்புடன் புறப்பட்டு விடலாமா? என்ற மனநிலைக்கு அவர் வந்து இருந்தார். அவரது முகமாற்றத்தை பார்த்த ஜோதிடர் விடவில்லை. தொடர்ந்து பேசினார்.
"நான் பல ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருகிறேன். லட்சக்கணக்கானவர்களின் ஜாதகத்தை கணித்து அலசி ஆராய்ந்து பார்த்து பலன்கள் சொல்லி இருக்கிறேன். எனது ஜாதக பலன்கள் தப்பியதே இல்லை. அப்படியே நடந்து வருகின்றன. அதனால்தான் என்னைத் தேடி பலரும் வருகிறார்கள்.
இதுவரை நான் பார்த்த லட்சக்கணக்கான ஜாதகங்களில் உங்களது மகன் ஜாதகம் மிக மிக வித்தியாசமானது. இப்படிப்பட்ட ஒரு ஜாதக அமைப்பை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு சிறப்பான அமைப்புடன் இந்த ஜாதகம் அமைந்துள்ளது" என்றார்.
இதை கேட்டதும் ரனோஜிராவுக்கு கொஞ்சம் பிரமிப்பாக இருந்தது. ஜோதிடர் அடுத்து என்ன சொல்வார் என்று ஆவலோடு பார்த்தார். ஜோதிடர் தொடர்ந்து பேசினார்.
"உங்கள் மகன் ஜாதகம் பிரமிப்பு தருகிறது. உங்கள் மகன் ஜாதகத்தை பார்த்த உடனேயே நான் மிரண்டு போனேன். என்னால் சில விஷயங்களை கணிக்க முடியவில்லை. இப்போதும் கூட என் மனதில் அந்த குழப்பம் இருக்கிறது.
உங்கள் மகன் ஜாதகத்தை பொறுத்தவரை 2 விஷயங்கள்தான் நிச்சயமாக நடக்கும். ஒன்று உங்கள் மகன் இந்த நாட்டில் மிகப்பெரிய சக்தி வாய்ந்த மனிதராக மாறுவார். பணம், புகழ் எல்லாம் அவரிடம் கொட்டி கிடக்கும். அவரது வாழ்நாள் முழுக்க வெற்றிகளை பெற்றுக் கொண்டே இருப்பார். அவரது வெற்றிகளை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என்றார்.
இப்படி சொல்லி விட்டு ஜோதிடர் ஒரு நிமிடம் இடைவெளிவிட்டு அமைதியாக இருந்தார். பிறகு ''இந்த ஜாதகக்காரர் மிகப்பெரிய சக்தியாக மாறாவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியுமா?'' என்றார். அவரது இந்த கேள்வி ரனோஜிராவ் மனதுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிடர் தொடர்ந்து பேசினார்.
"உங்களது மகன் அதாவது இந்த ஜாதகக்காரர் உலகம் புகழும் வகையில் செல்வமும், செல்வாக்கும் பெற வேண்டும் என்பது விதிக்கப்பட்ட விதியாகும். ஒருவேளை அதில் மாற்றம் ஏற்படுமானால் இந்த ஜாதகக்காரர் தனக்கு சொந்தமான எல்லா சொத்துக்களையும் உதறித் தள்ளி விட்டு சன்னியாசியாக போய் விடுவார். அதற்காக காட்டுக்குள் போய்விடுவார் என்று அர்த்தமல்ல. சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்று அவரது குணமும் மாறும். இவர்கள் எல்லோரையும் சேர்த்து எடுத்தது போல ஒரு மிக பெரிய மகான் ஆக மாறுவார். அதில் மாற்றமே இல்லை. இந்த இரண்டில் ஒன்றுதான் நடக்கும்" என்றார்.
ஜோதிடரின் குரல் கடைசியில் முடிக்கும்போது கம்பீரமாக கணீர் என்று இருந்தது. ரனோஜிராவ் அதைக் கேட்டு ஆடிப் போய் விட்டார். தனது மகன் ஒன்று கோடீஸ்வரன் ஆவான் அல்லது சாமியாராக போய் விடுவான் என்று ஜோதிடர் சொன்னதை கேட்டதும் அவருக்குள் பிரளயமே வெடித்தது போல இருந்தது. அவரால் ஜோதிடர் சொன்னதை முழுமையாக நம்ப முடியவில்லை.
அவரது உணர்ச்சிகளை கண்டு ஜோதிடர் புரிந்து கொண்டார். அவர் கூறுகையில், "உங்களுக்கு இப்போது என் மீது நிச்சயமாக நம்பிக்கை வராது. நான் சொல்வது நடக்குமா? என்ற சந்தேகம் உங்களுக்கு ஆழமாக இருக்கிறது. ஏனெனில் உங்களது வாழ்க்கை சூழ்நிலை அப்படி இருக்கிறது. ஆனால் இந்த ஜாதக அமைப்புப்படி நான் என்ன கணித்து சொல்லி இருக்கிேறனோ அதுதான் நிச்சயமாக நடக்கும். வெகு விரைவில் அதை நீங்கள் பார்ப்பீர்கள்" என்றார்.
அவரது குரலில் இருந்த உறுதியைப் பார்த்து ரனோஜிராவ் ஆச்சரியப்பட்டார். மற்றொரு பக்கம் அவருக்கு அதிர்ச்சியாக கூட இருந்தது. சிவாஜிராவ் மது அருந்தி விட்டு புகை பிடித்துக் கொண்டு ஜாலியாக இருக்கும் காட்சிகள்தான் அவரது மனத்திரையில் ஓடின. இப்படிப்பட்ட மகன் எப்படி உலகமே புகழும் கோடீஸ்வரனாக மாறுவான் என்று அவர் மனதில் ஒரு ஓரத்தில் கேள்வி எழுந்தது.
ஜோதிடரை அவர் நம்ப முடியாமல்தான் பார்த்தார். ஜோதிடரை நம்பாமல் தட்டு தடுமாறி எழுந்தார். ஜோதிடருக்கு கொடுக்க வேண்டிய 2 ரூபாய் தட்சணையை தட்டில் வைத்து விட்டு எழுந்தார். அவரை வணங்கி விடைப்பெற்றார்.
அவர் விடைபெறும்போது ஜோதிடரை சந்தேக கண்ணுடன்தான் பார்த்தார். அதை ஜோதிடரும் புரிந்துக் கொண்டார். அவர் சிரித்துக் கொண்டே உங்கள் மகன் உலகம் புகழும் பணக்காரனாக, ஒரு மகான் ஆக மாறுவார் பாருங்கள் என்று சிரித்துக் கொண்டே மீண்டும் சொன்னார். ஆனால் ரனோஜிராவ் அதை நம்ப முடியாமல் ஜோதிடர் வீட்டில் இருந்து வேக வேகமாக வெளியே வந்தார்.
வெளியில் தெருவில் இருந்து நடக்க தொடங்கியதும் தனது போலீஸ்கார நண்பரிடம் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார். அவர் வாயில் இருந்து வார்த்தைகள் கோபத்தில் வெளியில் வந்து கொட்டின.
"நான் என் மகனின் எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்துக் கொண்டு இருக்கிறேன். கண்டக்டர் வேலை மீண்டும் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதுதான் என் கேள்வி. ஆனால் அதற்கு அவர் விடையே சொல்லவில்லை.
கண்ணை மூடி தியானம் செய்து விட்டு ஏதேதோ உளறுகிறார். என் மகன் கோடீஸ்வரன் ஆகிவிடுவான், உலகமே அவனை புகழும் என்று எல்லாம் சொல்கிறார். நம்பும்படியாகவா இருக்கிறது? அவர் எதற்காக இப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. ஜாதகத்தை நன்றாக பார்த்தாரா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
என் மகன் அடுத்த வேளை உணவுக்கே பிறரை நம்பி இருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறான். அவனை எப்படி வாழ வைக்கப்போகிறேன் என்றே எனக்கு தெரியவில்லை. எனக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது. விரைவில் அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும்.
ஒழுங்காக நான் சொல்வதை கேட்டுக் கொண்டு இந்த கண்டக்டர் வேலையில் இருந்து இருக்கலாம். அதையும் தொலைத்து விட்டான். மெட்ராசுக்கு போய் சினிமாவில் நடிக்கப் போவதாக கனவு காண்கிறான். இது எல்லாம் நடக்கிற காரியமா?
அவனால் இப்போது என் நேரமும், பணமும்தான் வீணாகி போய் விட்டது. உன் பேச்சை கேட்டு இந்த ஜோதிடரிடம் நான் வந்தது தப்பு. என்னவெல்லாமோ சொல்கிறார். அவர் சொல்வதை பார்த்தால் நம்பும்படியாகவா இருக்கிறது?
இந்த ஜோதிடர் என் மகன் ஒன்று கோடீஸ்வரனாக மாறுவான் அல்லது சாமியாராக போய் விடுவான் என்று சொல்கிறார். அவன் எங்கே சாமியாராக போவான். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. இந்த ஜோதிடர் என்னை பயம் காட்ட வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறாரோ என்னவோ? என்றார்.
ஆனால் சிவாஜிராவ் பற்றி வாழ்க்கையில் அந்த ஜோதிடர் கணித்தது நூறு சதவீதம் அப்படியே பலித்தது. சென்னைக்கு புறப்பட்டு வந்த சிவாஜிராவ் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் நடக்க ஆரம்பித்தன.
அதுபற்றி 6-ந்தேதி (திங்கட்கிழமை) பார்க்கலாம்.
- மருந்தை மற்ற ஆயுர்வேத மஹரிஷிகளும் பலவாறு கையாண்டுள்ளனர்.
- நான்கு மூல பொருட்கள் இம்மருந்தில் கலக்கப்படுகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையானவையை பற்றி ஆரோக்கிய திட்டம் என்ற தலைப்பில் தினமும் காலை பொழுதில் செய்யவேண்டிய கடமைகளைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் எலும்புகளை வலுவாக்கவும், தேய்மானத்தை தடுக்கவும் தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பார்த்தோம். அதிலும் மிக முக்கியமாக தலை, காது, பாதம் என்று மூன்று இடங்களில் கட்டாயம் எண்ணெய் தேய்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதை தனி தனி தலைப்புகளில் பார்த்தோம்.
அதில் மிக முக்கியமாக கால் வலியை தடுக்க தினமும் பாதத்தில் எண்ணெய் தேய்க்க வேண்டும். அதற்கு நல்லெண்ணெய் மிக நல்லது என்றாலும், சில மூலிகை மருந்துகள் கலந்த எண்ணெய் மிக மிக நல்லது. அவற்றை குறித்து தான் தற்போது பார்க்க இருக்கிறோம். மூலிகை மருந்துகள் கலந்து செறிவூட்டப்பட்ட எண்ணெய்கள் பல வகையில் இருக்கின்றன. அவற்றை ஆயுர்வேத மருத்துவர் நோயாளின் உடல்வாகிற்கு தக்க வண்ணம், நோயின் தாக்கத்திற்கு தக்க வண்ணம் மூலிகை எண்ணெய்களை தேர்வு செய்வார்.
மூட்டு வலி உடையவர்கள் வீட்டில் இருந்தாலும் சரி அல்லது கணுக்கால் வலி, பாத எரிச்சல், உணர்வு குறைவாக இருந்தாலும் சரி அல்லது நடைமுறை வாழ்க்கையில் அதிக அளவு வாகன பிரயாணம் செய்பவர்கள் இருந்தாலும் சரி, பாரம் தூக்கும் பணியாளர்கள், நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்கள் இருந்தாலும் சரி, உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய ஒரு அற்புத ஆயுர்வேத மூலிகை எண்ணெய் தான் பிண்ட தைலம் என்ற மருந்து. இந்திய முறை மருந்துகள் எடுத்துக்கொண்டவர்கள் அல்லது அதன் பால் ஆர்வம் கொண்டவர்கள் தெரிந்திருக்க அல்லது கேள்விபட்டுயிருக்க வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக தற்போது இருக்ககூடிய அனைத்து மருத்துவ முறைகளிலும் ஆயின்மெண்ட் என்ற மேற்பூச்சு பசை மருந்து மிக பிரபலம். பிண்ட தைலம் என்ற மருந்து தான் மருத்துவ துறையின் முதல் ஆயின்மெண்ட் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா... ஆம் இம்மருந்தை அக்காலத்தில் கூறியுள்ளது போல தயாரித்தால் அது ஆயின்மெண்ட் போல தான் இருக்கும். மேலும் இதனுடைய காரண பெயர் சொல்லே சுவாரஸ்யமாக இருக்கும்.
ஆம் பிண்டம் என்றால் உருண்டை என்ற பொருள். அதாவது இம்மருந்தை பிரயோகப்படுத்தும் போது உருட்டி எடுத்து தேய்க்க வேண்டுமாம். அதனால் தான் இதற்கு பிண்ட தைலம் என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நடைமுறையில் எளிதாக பயன்படுத்தும் வண்ணம் எண்ணெய் போலவே தயாரித்து கொடுக்கப்படுகிறது. இதனை முதல் முதலில் அறிமுகபடுத்தியவர் ஆயுர்வேத பொது மருத்துவத்தின் தந்தை என கருதக்கூடிய மஹரிஷி சரகர் என்பவர்தான்.

அவர் எழுதிய சரக சம்ஹிதை என்ற புத்தகத்தில் வாத சோணிதம் என்ற மூட்டுகளை பாதிக்கக்கூடிய சரவாங்கி நோய்பற்றிய சிகிட்சையில் இந்த தைலத்தை குறித்து பதிவு செய்துள்ளார். இந்த உன்னத மருந்தை மற்ற ஆயுர்வேத மஹரிஷிகளும் பலவாறு கையாண்டுள்ளனர். எப்படி எனில் காலத்திற்கு தக்க வண்ணம் இம்மருந்தின் மூலிகை கலவையில் ஒரு மருந்தை கூட்டியோ அல்லது குறைத்தோ, தயாரிக்கும் முறையில் சற்று வேறுபடுத்தி தயாரித்து பல வியாதிகளை குணப்படுத்தி உள்ளனர்.
ஆமா அப்படி என்ன தான் அந்த மருந்தில் உள்ளது... மொத்தம் நான்கு மூல பொருட்கள் இம்மருந்தில் கலக்கப்படுகிறது. அவை மஞ்சட்டி, நன்னாரி, தேன் மெழுகு, குங்கல்யம் ஆகும். இவற்றில் மஞ்சட்டி நன்னாரியை கஷாயமாக வைத்து நல்லெண்ணெய்யில் கலந்து காய்ச்சி தைல பாகம் வந்த பின்பு, குங்கல்யம், தேன் மெழுகு இவை இரண்டையும் வடிக்கட்டும் பாத்திரத்தில் கலந்து, எண்ணெயை பத்திரப்படுத்த வேண்டும். இவை மூட்டு வலியை ஆபாகம் செய்வதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

ரா. பாலமுருகன்
ஆபாகம் என்ற சொல்லுக்கு வலியை ஆசுவாசப்படுத்தி குறைத்தல் என்று அர்த்தம், ஆகையால் வலியால் அவதியுறுபவர்களுக்கு இம்மருந்து ஒரு வரப்பிரசாதம். இதனை எப்போது பயன்படுத்தலாம் என்றால் ஒரு நாளைக்கு இருவேளை காலையில் குளிக்கும் முன்பு பிண்ட தைலத்தை சூடு செய்து வலியுள்ள இடத்தில் தேய்த்து சுமார் 30 நிமிடம் கழித்து சூடு தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலை நேரத்தில் சிறிதளவு எண்ணெய்யை சூடு செய்து தேய்த்த பின்பு சூடு தண்ணீரை வலியுள்ள இடத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இம்மருந்தில் கலக்கப்படும் நல்லெண்ணெய்க்குப் பதிலாக தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், வேப்பெண்ணெய் போன்ற எண்ணெய்கள் கலந்தால் பயன்படும் விதமும் மாறுபடும். இம்மருந்து பயன்படுத்தும் போது உணவு கட்டுப்பாடுகளில் புளிப்பு, உப்பு, காரத்தை சற்று குறைத்து கொண்டால் பலன் விரைவில் கிடைக்கும். அதோடுமட்டுமில்லாமல் வியாதியின் தீவிரத்தை கட்டுப்படுத்தும். வரும் முன் காப்பது போல வலி அதிகரிக்கும் முன் தடுக்க இம்மருந்து மிகுந்த உதவியாகயிருக்கும் என்பதில் ஐயமில்லை.






