என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- ரஜினியின் சபரிமலை அனுபவம்
    X

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- ரஜினியின் சபரிமலை அனுபவம்

    • நேரம்-காலம் பார்க்காமல் ரஜினி ஓடி...ஓடி... நடித்தார்.
    • திரை உலகில் உள்ள பெரும்பாலான அய்யப்ப பக்தர்களுக்கு குருசாமியாக இருந்து வழிகாட்டியவர் நம்பியார்தான்.

    1978-ம் ஆண்டு சிவாஜியுடன் நடிப்பதற்காக முதல் முதலாக "ஜஸ்டிஸ் கோபிநாத்" என்ற படத்தில் ரஜினி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தில் கே.ஆர்.விஜயா, சுமித்ரா, மேஜர் சுந்தரராஜன், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர்.

    1978-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படம் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதே டிசம்பர் மாதம் ரஜினி நடித்த ப்ரியா படம் வெளியானது. பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து பஞ்சு அருணாசலம் கதை, வசனம் எழுதி இந்த படம் தயாராகி இருந்தது.

    எஸ்.பி.முத்துராமன் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஸ்ரீதேவியும் முக்கிய வேடத்தில் நடித்தார். ஆனால் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவில்லை. ஒரு நடிகை வேடத்தில் அந்த படத்தில் அவர் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தார்.

    இந்த கதை லண்டனில் நடப்பது போல எழுத்தாளர் சுஜாதா எழுதி இருந்தார். ஆனால் ப்ரியா படத்தின் படப்பிடிப்புகள் சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் நடத்தப்பட்டன. இந்த படத்தில் ரஜினி நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது. இந்த படம் 25 வாரங்கள் ஓடி வெற்றிப் படமாக அமைந்தது.

    இந்த நிலையில்தான் ரஜினியிடம் அடுத்தடுத்த மாற்றங்கள் உருவாகத் தொடங்கின. முள்ளும் மலரும் படத்தில் தொடங்கிய அவரது இடைவிடாத படப்பிடிப்பு பணிகள் அதன் பிறகு அவரை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டன. நேரம்-காலம் பார்க்காமல் ரஜினி ஓடி...ஓடி... நடித்தார்.

    காலையில் ஒரு படப்பிடிப்பு, மதியம் ஒரு படப்பிடிப்பு, மாலையில் மற்றொரு படப்பிடிப்பு, இரவில் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பு என்று அவர் ஓடிக் கொண்டே இருந்தார். சிங்கப்பூருக்கு சென்று நினைத்தாலே இனிக்கும், ப்ரியா படக்காட்சிகளில் நடித்து விட்டு உடனே விமானத்தில் சென்னைக்கு திரும்பி வண்டலூரில் தாய் மீது சத்தியம் படப்பிடிப்பிலும், பெங்களூரில் தப்புத்தாளங்கள் படிப்பிடிப்பிலும் கலந்து கொண்டு படங்களில் நடித்துக் கொடுத்தார்.

    ஒரு கட்டத்தில் சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொச்சி, மும்பை என்று படப்பிடிப்புக்காக பறந்து கொண்டே இருந்தார். தூங்குவதற்கு கூட அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இது அவரது உடல்நலத்தை கடுமையாக பாதிக்கத் தொடங்கியது. மது, போதை வஸ்துகள் என்று ரஜினி வித்தியாசமான நடிகராக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் அவர் மீதே அவருக்கு வெறுப்பும், கோபமும் வந்தது.

    அந்த சமயத்தில் ரஜினியை சபரிமலை அய்யப்பன் ஆக்கிரமித்தான். அதற்கு காரணம் ரஜினி இடைவிடாமல் ஓடி, ஓடி உழைத்து அலுத்து போனதுதான். இறைவனை தேடிச் சென்று சில நாட்கள் நிம்மதியாக இருந்துவிட்டு வரவேண்டும் என்று அவரது மனம் ஏங்கியது.

    அப்போது அவருக்கு நடிகர் நம்பியார் தலைமையில் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் கடுமையான விரதம் இருந்து டிசம்பர், ஜனவரி மாதங்களில் காட்டு வழி பயணத்ைத மேற்கொண்டு சபரிமலை அய்யப்பனை தரிசித்து வருவது தெரிய வந்தது. நம்பியார் குழுவில் இடம் பெறுபவர்கள் கண்டிப்பாக 48 நாட்கள் கடுமையான விரதத்தை இருக்க வேண்டும் என்ற தகவலும் ரஜினிக்கு தெரிய வந்தது.

    நம்பியார் தலைமையில் மாலை போடும் ஒவ்வொரு பக்தனும், மது, மாமிசங்களை விலக்கி தினமும் அய்யப்பனை பூஜை செய்து வழிபட வேண்டும் என்ற விதிமுறையை வகுத்திருப்பதும் ரஜினிகாந்திடம் கூறப்பட்டது. இதைக் கேட்டதும், ரஜினிக்கு சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

    முதல் தடவை மலைக்கு சென்றபோது பக்தியால் அவருக்கு அந்த ஆசை உருவாகி இருக்கவில்லை. எதற்காக அவர் சபரிமலை செல்ல மாலை அணிந்தார் என்ற விவரத்தை 1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை தியாகராய நகரில் நடந்த அய்யப்ப மேளா விழாவில் பேசும்போது அவரே தெரிவித்தார்.

    'நான் முதன் முதலாக 1978-ம் ஆண்டு நம்பியார் சுவாமிகள் தலைமையில் சபரிமலைக்குச் சென்றேன். இதற்காக நம்பியார் சுவாமிகளை சந்தித்து பேசி ஒப்புதல் பெற்றேன். அவர் என்னை சபரிமலைக்கு அழைத்து செல்ல சம்மதித்தார்.

    நான் ஆன்மிகவாதிதான், கடவுள் உண்டு. அவருக்கு உருவமோ, பெயரோ கிடையாது என்று நம்புபவன். சிறு வயதில் இருந்தே நான் பெங்களூரில் அப்படி வளர்த்துவிட்டேன். சென்னைக்கு வந்தபிறகும் எனது ஆன்மிக ஆர்வத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

    ஆனால் முதல் முறையாக நான் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்றபோது பக்தி காரணமாக செல்லவில்லை. சபரிமலைக்கு செல்லக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விரதம் இருக்க வேண்டும். மது, மாமிசம் ஆகியவற்றை விலக்கி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு என்னை மிகவும் கவர்ந்தது.

    அப்படி இருந்தால் எனக்கு மனதில் நிம்மதி ஏற்படும் என்று நினைத்தேன். அதன்படி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினேன். 45 மைல் பெரிய பாதையில் நடந்து சென்று சாமியே சரணம்' என்று முழங்கியதைக் கேட்டபோது என் உடம்பு சிலிர்த்துப் போனது' என்றார் ரஜினிகாந்த்.

    திரை உலகில் உள்ள பெரும்பாலான அய்யப்ப பக்தர்களுக்கு குருசாமியாக இருந்து வழிகாட்டியவர் நம்பியார்தான். ரஜினிக்கும் அவர்தான் வழி காட்டினார். அவரது வழிகாட்டுதலின் பேரில் 1978-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந் தேதி காலை 3 பஸ்கள் மற்றும், ஒரு வேனில் 130 பக்தர்கள் கொண்ட குழு சபரிமலை நோக்கிப் பயணமானது. இதில் நடிகர்கள் முத்துராமன், ஸ்ரீகாந்த், கன்னட நடிகர் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், டைரக்டர் கே.சங்கர் மற்றும் பக்தர்களுடன் ரஜினிகாந்தும் முதல் முறையாகப் பயணமானார்.

    ரஜினி சபரிமலைக்குச் செல்ல மாலை போட்டுக் கொண்ட பின் அவரைப் பற்றி நம்பியாருக்கு ஒரு தகவல் போனது. ரஜினி விரத கட்டுப்பாடுகளை மீறி புகைப்பிடிக்கிறார் என்று நம்பியாரிடம் கூறினார்கள். ரஜினிக்கு விரத முறைகள் பற்றி முதலிலேயே தெளிவாகச் சொல்லியும் சிகரெட் புகைக்கிறாரே என்று குருசாமி நம்பியார் வேதனைப்பட்டார். உடனே ரஜினிக்குப் போன் செய்தார். அப்போது ரஜினி வீட்டில் இல்லை. அவரது செயலாளர் பேசினார்.

    அவரிடம் 'ரஜினி மாலை போட்ட பின்பும் சிகரெட் புகைக்கிறாராம். நீங்க பயணக் கட்டணமாக 500 ரூபாய் கொடுத்திருக்கீங்க. அந்தப் பணத்தோடு மேலே நான் 500 ரூபாய் சேர்த்து 1000 ரூபாயா தந்துடறேன் தயவு செய்து ரஜினி எங்களோடு வர வேண்டாமுன்னு சொல்லிடுங்க. உடனே வந்து 1000 ரூபாயை வாங்கிப் போங்கள்" என்றார்.

    இதை அறிந்த ரஜினி கடும் அதிர்ச்சி அடைந்தார். மறுநாள் படப்பிடிப்பு ஒன்றில் இருந்த நம்பியாரிடம் ரஜினி வந்தார். அவரைப் பார்த்ததும், "உங்க செயலாளரிடம் சொன்னதைக் கேள்விப்பட்டீங்களா? அது உண்மைதான். உங்களைச் சேர்த்தற்கு அபராதம் 500 ரூபாய் அதையும் சேர்த்து 1000 ரூபாய் தர்றேன்" என்று சொல்லியபடியே தனது உதவியாளரை அழைத்துப் பணத்தைக் கொண்டு வரும்படி சொன்னார். ரஜினி சங்கடத்துடன், என்னை மன்னிச்சிருங்க, இனி சிகரெட் குடிக்கமாட்டேன்" என்று உறுதி கூறியதும் நம்பியார் அதை ஏற்றுக் கொண்டு பயணத்தில் அவரையும் சேர்த்துக் கொண்டார்.

    குருசாமி நம்பியார் தலைமையில் பக்தர்கள் குழு எருமேலியை அடைந்து அங்கிருந்து பெரிய பாதையில் நடைபோட ஆரம்பித்தார்கள். அவர்கள் பல குழுக்களாகச் சென்றார்கள், முதலில் சென்ற குழு ரஜினியுடையதுதான் அவரது இயல்பான வேகம் அங்கும் கை கொடுத்தது.

    இந்த நடைப்பயணத்தில் ஸ்ரீகாந்த், பாவாத்மாக்கள் கிளப் ஒன்று ஆரம்பித்தார். ரஜினியோ, "என்ன இது சபரிமலைக்கு வந்து இப்படியொரு கிளப் ஆரம்பிக்கிறீங்க" என்று கேட்டார். அதற்கு ஸ்ரீகாந்த் "நாம் பாவங்கள் செய்துதான் மலைக்கு வருகிறோம். மலைக்குப் போய் வந்த பின்னும் நாம் பாவங்கள்தான் பண்ணுவோம்' என்று கூறினார். அதைக் கேட்டு அருகில் இருந்த பக்தர் ஒருவர், "ஏன் நிரந்தரமாக பாவம் செய்யாமல் இருக்க முடியாதா?" என்று கேட்டார். ரஜினியோ 'முடியாது' என்று சொல்லி கோட்டைத் தாண்டி பாவ ஆத்மா கிளப்பில் மெம்பரானார். அப்போது எழுந்த சிரிப்பொலி மலையெங்கும் எதிரொலித்தது.

    இப்படி கேலியும், கிண்டலுமாகத் தொடர்ந்த பயணத்திற்கு ரஜினி சொன்ன விளக்கம், "மாலை போட்டுக் கொண்டு எதையும் ரசிக்கக் கூடாது என்றல்ல மனது சுத்தமாக இருந்தால் போதும் என்பதுதான்.

    குழுவினர் பம்பை போய்ச் சேர்ந்ததும், குருசாமி நம்பியார், 'கன்னி சாமிகள் அனைவரும் 108 அடுப்புகளில் சாம்பல் எடுத்து வரவேண்டும்' என்றார். ரஜினிக்கு அது முதல் ஆண்டு பயணம் என்பதால் அவரும் ஒரு கன்னி சாமியாகக் கருதப்பட்டார். 108 அடுப்புகளில் சாம்பல் எடுத்துவர வேண்டும் என்பது ஓர் ஐதீகம்.

    ஆனால் ரஜினி அதை சீரியசாக எண்ணாமல், தனக்கே உரிய வேகத்தில் 10 அடுப்புகளில் மடமடவென்று சாம்பல் எடுத்து வந்துவிட்டு, 'நான் எல்லா அடுப்புகளிலும் சாம்பல் எடுத்து வந்துவிட்டேன்" என்றார்.

    ஸ்ரீகாந்த் அதை ஒப்புக் கொள்ளவில்லை 108 அடுப்புகளில் சாம்பல் எடுத்தாக வேண்டும் என்று கூறி அவருக்கு உதவி செய்தார்.

    அய்யப்ப தரிசனம், ஜோதி தரிசனம் முடிந்து அனைவரும் சென்னை திரும்பிய பின், ரஜினி நம்பியாருக்கு போன் செய்தார் "என்னைப் பார்த்தவர்கள் எல்லாம் என்னிடம் ரொம்ப மாற்றம் வந்திருக்குன்னு சொல்றாங்க" என்றார். நம்பியார் சுவாமிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ரஜினி எல்லாரையும் அடிக்க ஆரம்பித்தார். அவர் ஏன் அப்படி மாறினார் என்பதை நாளைப் பார்க்கலாம்.

    Next Story
    ×