என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நோய் எதிர்ப்பு சக்தி கூட கர்ப்பத்தை பாதிக்கும் அபாயம்
    X

    நோய் எதிர்ப்பு சக்தி கூட கர்ப்பத்தை பாதிக்கும் அபாயம்

    • பைபுரோசிஸ் பாதிப்பானது பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.
    • சில நேரங்களில் இந்த நோய் பாதிப்பு தீவிரம் அடையும்போது கால் வீக்கம், கை வீக்கம் ஏற்படும்.

    இப்போதைய நவீன காலகட்டத்தில் பெண்கள் புதிதாக ஒரு நோய் தாக்கத்தை எதிர்கொள்கிறார்கள். சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் எனப்படும் இந்த நோயானது, சுருக்கமாக எஸ்.எல்.இ. என்று அழைக்கப்படுகிறது. இன்னும் எளிதாக புரியவேண்டும் என்றால் இதை லூபஸ் என்று அழைக்கிறார்கள். இது ஒருவகையான திசு குறைபாடு நோய் ஆகும்.

    சிஸ்டமிக் லூப்பஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் பாதிப்பு:

    தற்போது ஒரு லட்சம் பெண்களில் 20 முதல் 40 பெண்களுக்கு இந்த திசு குறைபாடு நோய் ஏற்படுகிறது. சிஸ்டமிக் லூப்பஸ் எரித்தமட்டோசிஸ் நோய்த்தாக்கம் கொண்ட பெண்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவர்களின் கை, கால்களில் சில நேரங்களில் அரிப்புகளுடன் கூடிய அலர்ஜி வரலாம்.

    பல நேரங்களில் அவர்களுக்கு முகத்தில் அலர்ஜி ஏற்பட்டு முகத்தின் தோலில் கருப்பு கருப்பாக மாறி நிறமிழப்பு (பிக்மன்டேஷன்) வரலாம். உடலின் தோல் பகுதியில் பாதிப்புகள் ஏற்படலாம். சிறுநீர்க்குழாயில் பிரச்சனைகள் உருவாகலாம். சிறுநீரகத்திலும் பிரச்சனை ஏற்பட்டு சிறுநீரக தொற்றுக்கள் ஏற்படலாம். இதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதால், சிறுநீரக செயல்பாடு குறைவாகலாம்.

    இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு பைபுரோசிஸ் ஏற்படும். அதாவது காயம் ஏற்பட்ட இடங்களில் உருவாகும் வடுவில் உள்ள இணைப்பு திசுக்களில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் சேரும் நிலையே பைபுரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. மேலும் நுரையீரல், வயிறு உள்ளிட்ட எல்லா இடங்களிலும் கூட இந்த பைபுரோசிஸ் ஏற்படலாம்.

    குறிப்பாக இந்த பைபுரோசிஸ் பாதிப்பானது பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. 15 வயது முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதேபோல் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் என்ற நோயும் பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. இது உடலில் உள்ள சிறுசிறு மூட்டு பகுதி இருக்கும் இடங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் ஆகிய 2 வகையான விஷயங்களிலும் ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், இவை இரண்டுமே நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் பாதிப்பால் ஏற்படுகிற நோய் ஆகும். வழக்கமாக நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான் நமது உடலை நோயில் இருந்தும், நோய்க்கிருமிகளிடம் இருந்தும் பாதுகாக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியே நமக்கு எதிராக திரும்பி, நமது உடலில் பாதிப்பை உருவாக்குகிறது.

    கருத்தரிப்பதிலும், கரு வளர்ச்சியிலும் ஏற்படும் சிக்கல்கள்:

    லூபஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பானது பாதிக்கப்பட்டு, உடலில் உள்ள செல்களுக்கே, இவை எதிரான எதிர்ப்பு உயிரியை உருவாக்கி விடும். அதனால் தான் இந்த லூபஸ் எரித்தமட்டோசிஸ் பாதிப்பின்போது செல்லுலர் நியூக்ளிக் அமிலத்துக்கு (செல்களின் உட்கரு அமிலம்), நியூக்ளியர் ஆன்டிபாடி (எதிர்ப்பு உயிரி) உருவாகிறது.

    இதுபோன்று நியூக்ளியர் ஆன்டிபாடி உருவாவதால், நியூக்ளியர் செல்களில் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பானது பாதிப்படைந்து, அதனால் அந்த செல்கள் சேதம் அடையும். அதன் காரணமாக தோல் நோய்கள், ரத்தக்குழாய் தொடர்புடைய பாதிப்புகள் மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதிலும் சரி, கரு உருவாகும்போது கரு வளர்ச்சியிலும் சரி, பிரசவத்திலும் சரி, எல்லா விஷயங்களிலுமே பல சிக்கல்கள் உருவாகின்றன.

    ஏனென்றால் இந்த பாதிப்பு கொண்டவர்களுக்கு நமது உடலில் உள்ள தோல், ரத்தக்குழாய்கள், நரம்பு செல்கள், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் இருக்கின்ற பல செல்களுக்கு எதிராக, நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே மாறுபாடு அடைந்து எதிர்ப்பு உயிரியாக உருமாறி அவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இந்த தன்னியக்க எதிர்ப்பு உயிரிகள், குறிப்பாக டி.என்.ஏ. ஆன்டிபாடி, ஸ்மித் ஆன்டிபாடி ஆகிய எதிர்ப்பு உயிரிகள் தோன்றி தோல், சிறுநீரகம், ரத்தக்குழாய்கள், மூட்டுகள், தசைநார்கள் ஆகியவற்றில் உள்ள செல்களை பழுதாக்கி அதில் வீக்கங்களை ஏற்படுத்தி, நோய்த்தாக்கத்தை உருவாக்கி பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

    இதன் காரணமாக தோலில் பல இடங்களில் ஆங்காங்கே அலர்ஜி போல ஏற்படும். தோலில் மாற்றங்கள் இருக்கும். இது சிறுநீரகத்தை தாக்கினால் சிறுநீரகம் பாதிப்படைந்து, அதில் சேதம் ஏற்பட்டு, அதனுடைய செயல்பாடு குறைந்து விடும். மேலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். இந்த தாக்கம் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டால் ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படும். அந்த வீக்கமானது ரத்தக்குழாய்களை பாதித்து அதனால் ரத்தக்குழாயில் ஆங்காங்கே ரத்த உறைவு ஏற்படும்.

    மூட்டுகளில் வலி, கை கால்களில் வீக்கம்:

    இந்த எதிர்ப்பு உயிரிகளால் குடலுக்கு போகின்ற ரத்தக் குழாய் பாதிக்கப்பட்டால் அந்த குழாயில் ரத்த உறைவு உருவாகலாம். காலில் ரத்த உறைவு ஏற்படலாம். இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு அந்த உறுப்புகள் பழுதடையவும் வாய்ப்பு இருக்கிறது. மூட்டு பகுதிகளில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டால் மூட்டழற்சி வரலாம். மூட்டுகளில் வலி ஏற்படலாம். கை, கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

    இதனால் நடக்க முடியாமல் போகும். வேலை செய்ய முடியாது. இந்த மாதிரி ஒவ்வொரு இடங்களிலும் உள்ள எல்லா இணைப்பு திசுக்களும் பழுதடைந்து பைபுரோசிஸ் உருவாகும். அதனால் தான் இந்த பாதிப்பு கொண்ட பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

    ஏனென்றால் ஒவ்வொரு செல்களையும் இணைக்கின்ற இணைப்பு திசுக்களில் தான் இந்த எதிர்ப்பு உயிரிகள் உருவாகிறது. அதனால்தான் இந்த எதிர்ப்பு உயிரியானது, ரத்தக் குழாய்கள், சிறுநீரகம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் உள்ள இணைப்பு திசுக்களை பாதிக்கும். இது பல உறுப்புகளிலும் பல பிரச்சனைகளை உருவாக்கும்.

    இந்த லூபஸ் நோயின் முக்கியமான விஷயமே, சில காலகட்டங்களில் இந்த நோயின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். சில நேரங்களில் இந்த நோயின் பாதிப்பு தானாக குறைந்து விடும். நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பில் ஏற்படுகிற சில மாறுபாடுகளை பொறுத்து இந்த விஷயங்களில் நிவாரணமும், குணமடைவதும் ஏற்படும்.

    சில நேரங்களில் இந்த நோய் பாதிப்பு தீவிரம் அடையும்போது கால் வீக்கம், கை வீக்கம் ஏற்படும். காய்ச்சல் பாதிப்பு இருக்கும். சில நேரங்களில் சிறுநீரக செயல்பாடு குறைவாகி சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். பல இணைப்பு திசுக்கள், தோல், ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, அது செல்கின்ற உறுப்புகள் எல்லாம் பழுதாகி பல பிரச்சனைகளை உருவாக்கலாம். பல நேரங்களில் இது உயிருக்கு ஆபத்தான நிலையை கூட ஏற்படுத்தலாம்.

    திரும்பத் திரும்ப ஏற்படும் கருச்சிதைவுக்கு காரணம்:

    இந்த மாதிரியான விஷயங்கள் இளம்பெண்களை பாதிப்பதால் அவர்கள் முக்கியமான பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த நோய்த்தாக்கம் என்பது பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஆகும். இதேபோல் தான் இன்னொரு பிரச்சனை ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ். நமது மூட்டு இணைப்புகளில் சைனோவியல் எனப்படும் ஜவ்வு பகுதி உள்ளது. இந்த ஜவ்வு பகுதிதான், மூட்டுகள் இயல்பாக இயங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

    அந்த பகுதிக்கு எதிரான எதிர்ப்பு உயிரி உருவாகி அந்த இணைப்புகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் கை கால்கள் எல்லாம் வீங்கிவிடும். மூட்டு ஜவ்வு இருக்கின்ற நிறைய சிறுசிறு இணைப்பு பகுதிகள் எல்லாம் பாதிப்படைந்து, அந்த பகுதிகளில் வீக்கம் உருவாகி, விறைப்புத்தன்மை ஏற்பட்டு வேலை செய்ய முடியாமல் போய் விடும். இதனால் கால்களை மடக்க முடியாது, நீட்ட முடியாது. வலி இருந்துகொண்டே இருக்கும். பல நேரங்களில் இந்த ஜவ்வு பகுதியானது சேதம் அடைந்து பழுதாகி கை, கால்களில் மாற்றங்களும் ஏற்படும். இது ஒரு முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

    தற்காலத்தில் தான் இந்தநோய் எதிர்ப்பு சக்தி அமைப்பில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. ஒரு பெண்ணின் கர்ப்பம் முதற்கொண்டு பலவிதமான பிரச்சனைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு தான் அடிப்படையான காரணமாக இருக்கிறது. கருத்தரிக்காமல் இருப்பது மற்றும் கருத்தரித்து திரும்பத் திரும்ப கருச்சிதைவு ஏற்படுவதற்கு கூட நோய் எதிர்ப்பு சக்தி பழுதாவது தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பு செய்யும்போது, அதில் கருவானது கருப்பையில் ஒட்டி வளரும் தன்மை குறைவதற்கும் இது ஒரு காரணமாக இருக்கிறது.

    இந்த வகையில் சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் கர்ப்ப காலத்திலும் இவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படலாம். அது என்னென்ன பிரச்சனைகள்? இந்த பாதிப்பு கொண்ட பெண்கள் பாதுகாப்பாக குழந்தைகளை பெற்றெடுப்பது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

    Next Story
    ×