என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- ரஜினியை போலீஸ் கைது செய்தது!
- ரஜினி முதல் தடவை சபரிமலைக்கு சென்று வந்ததை அவரால் நீண்ட நாட்களுக்கு மறக்க முடியவில்லை.
- அன்று முழுவதும் ரஜினி ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் “அன்னை ஓர் ஆலயம்” படப்பிடிப்பில் பங்கேற்றார்.
நம்பியார் சுவாமிகள் தலைமையில் சபரிமலை அய்யப்பனை வழிபாடு செய்து விட்டு திரும்பிய ரஜினி புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார். தொடர்ந்து நம்பியார் சுவாமிகள் தலைமையில் ஆண்டு தோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வரவேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
அதன்படி 9 தடவை அவர் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு சென்று அய்யப்பனை கண்டு வந்தார். 1984-ம் ஆண்டு அவருடன் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனும் மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று வந்தார்.
ஆனாலும் ரஜினி முதல் தடவை சபரிமலைக்கு சென்று வந்ததை அவரால் நீண்ட நாட்களுக்கு மறக்க முடியவில்லை. அதற்கு காரணம் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமான அதிரடி மாற்றம்தான்.
1978-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட ரஜினி நினைத்தது உண்டு. அந்த சமயத்தில் அவரது படங்கள் தமிழக தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன. ரசிகர்கள் திரண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்ததால் பிறகு தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.
1978-ம் ஆண்டு அவர் வேளச்சேரியில் சொந்தமாக ஒரு வீடு கட்ட தொடங்கினார். தனது சகோதரர் மற்றும் நண்பர்களை எல்லாம் அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் காண்பித்தார். ஆனால் அந்த வீட்டில் ரஜினியால் குடியேற முடியாமல் போய் விட்டது.
வாஸ்து குறைபாடு காரணமாக அந்த வீட்டில் குடியேறுவதை ரஜினி தவிர்த்தார். அப்போது சிலர் அவரிடம், "உங்களுக்கு சூனியம் வைத்து விட்டார்கள்" என்று தெரிவித்தனர். அதை ரஜினியும் உண்மை என்று அப்படியே நம்பினார். அவரது மனதில் கலக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையே வயது 30-ஐ நெருங்கிக் கொண்டிருந்ததால் திருமண ஆசையும் அவரது மனதுக்குள் உருவாகி இருந்தது. பெங்களூரில் கண்டக்டராக இருந்தபோது பழக்கமான பெண்ணை அவர் மிகவும் நேசித்தார். ஆனால் அவருடனான தொடர்பு துண்டித்துப் போனது.
அதை மறக்காமல் இருந்த ரஜினி தன்னுடன் நடித்த நடிகை ஒருவரை விரும்பினார். ஆனால் அந்த நடிகை பண ஆசைப் பிடித்தவர் என்பது தெரிய வந்ததும் அவரை விட்டுப் பிரிந்தார்.
அதன் பிறகு பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்துக் கொள்ள ரஜினி விரும்பினார். ஆனால் அந்த நடிகையிடம் இதுபற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. தனது காதலை அந்த பிரபல நடிகையிடம் சொல்ல அவருக்கு தைரியம் வரவில்லை. ஆனால் அந்த நடிகையின் தாயாரிடம் இதுபற்றி சொல்லி இருந்தார்.
அந்த நடிகையை பெண் கேட்பதற்காக ஒருநாள் ரஜினி அந்த நடிகையின் புதிய வீட்டுக்கு சென்றிருந்தார். திருமணம் தொடர்பான பேச்சை ஆரம்பிக்கலாம் என்று ரஜினி நினைத்தப் போது மிகச்சரியாக மின்சாரம் போய் விட்டது. அதை ரஜினி அபசகுணமாக நினைத்தார்.
இறையருள் மீது எந்த அளவுக்கு ரஜினிக்கு நம்பிக்கை இருக்கிறதோ அதே அளவுக்கு இதுபோன்ற விஷயங்களிலும் அவருக்கு நம்பிக்கை உண்டு. முக்கிய முடிவு எடுக்கும் நேரத்தில் மின்சாரம் தடைபட்டதை அவர் தனக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாக பார்த்தார். உடனே அந்த நிமிடமே அந்த நடிகையைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று முடிவு எடுத்து அங்கிருந்து வெளியே வந்து விட்டார்.
இதற்கிடையே போயஸ் கார்டனில் நிலம் வைத்திருந்த பாத்திமா அக்தர் அதை விற்பதற்கு முடிவு செய்தார். இதை அறிந்த ரஜினி அந்த காலி மனையை வாங்கி அழகான பங்களா கட்டினார். அனைவரையும் அழைத்து விமரிசையாக கிரகப்பிரவேசம் செய்தார். பங்களாவில் குருநாதர் பாலச்சந்தர் படத்தை பிரமாண்டமாக வைத்தார்.
இந்த நிலையில்தான் அவர் 1978-ம் ஆண்டு இறுதியில் சபரிமலைக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி சுமந்து அய்யப்பனை தரிசனம் செய்து விட்டு 1979-ம் ஆண்டு ஜனவரியில் திரும்பி வந்து இருந்தார். 1979-ம் ஆண்டு தனக்கு உற்சாகமான ஆண்டாக இருக்கும் என்று நம்பினார். ஆனால் அந்த ஆண்டு ரஜினிக்கு சோகமான, சோதனையான ஆண்டாக மாறி விட்டது.
ரஜினிக்கு தமிழக ரசிகர்களிடம் இருந்த வரவேற்பை கண்ட படத்தயாரிப்பாளர்கள் அவரை தங்கள் படத்தில் நடிக்க வைத்து விடவேண்டும் என்று படையெடுத்தனர். எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறோம். கால்ஷீட் தாருங்கள் என்று கேட்டனர்.
அந்த சமயத்தில் ரஜினி 2 ஆண்டுகளுக்கு படங்களில் நடிக்க ஏற்கனவே தேதி கொடுத்து இருந்தார். புதிய தயாரிப்பாளர்களை புறக்கணிக்கவும் அவருக்கு தயக்கமாக இருந்தது. எனவே தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் கற்பனைக்கும் எட்டாத வகையில் சம்பளத்தை அதிகரித்துக் கேட்டார்.
இதனால் அவரைத் தேடி வந்த தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்தது. என்றாலும் 1979-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் ஒருநாள் கூட ஓய்வு எடுக்காமல் இரவு-பகலாக நடித்தார். இதனால் அவர் மிகவும் சோர்வு அடைந்துப் போனார்.
அந்த சோர்வை போக்கிக் கொள்ள அவரையும் அறியாமலேயே மீண்டும் அவர் மதுபானத்தை கையில் எடுத்தார். குருநாதர் பாலச்சந்தருக்கு செய்து கொடுத்திருந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டுவிட்டு அவர் மதுபானங்களை இரவும், பகலும் குடித்துக் கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் அவரிடம் ஜர்தா பீடா போடும் பழக்கமும் சேர்ந்து கொண்டது. படப்பிடிப்பு சமயங்களிலும் அவர் மது அருந்தியதைப் பலரும் வெறுத்தனர். எப்போதும் ஒருவித போதையான மன நிலைக்கு தள்ளப்பட்டார். இதன் காரணமாக ரஜினியின் உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ரஜினியின் போதைப் பழக்கத்தால் அவரது நரம்பு மண்டலங்கள் பலவீனம் ஆகி விட்டது.
இத்தகைய உடல்நலம் பாதிப்பு இருப்பவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் எரிச்சலாக இருக்கும் என்பதே இதன் அறிகுறியாகும். ரஜினிக்கும் அந்த தாக்கம் ஏற்பட்டது. படப்பிடிப்பு தலங்களில் அல்லது தனது வாழ்க்கை தொடர்பாக யாராவது பேசினால் அவருக்குள் கோபமும், எரிச்சலும் அடக்க முடியாதபடி பொத்துக் கொண்டு வந்தது.
அந்த கோபம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே ரஜினி மற்றவர்களை அடிக்க ஆரம்பித்தார். சிறு வயதிலேயே தன்னை யாராவது முறைத்துப் பார்த்தால் ரஜினிக்கு பிடிக்காது. அந்த சிறு வயதில் விழுந்து இருந்த விதை அவர் மனதுக்குள் பதுங்கி இருந்ததோ, என்னவோ அவர் நடிகரான போது வளர்ந்து விருட்சமாகி இருந்தது.
தன்னிடம் யாராவது ஏடாகூடமாக பேசுவதாக நினைத்தால் அடுத்த நிமிடமே கோபத்தில் அடிக்க ஆரம்பித்து விடுவார். 1979-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் பஞ்சுஅருணாசலம், எஸ்.பி.முத்துராமன் கூட்டணியில் ஆறில் இருந்து அறுபது வரை என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்து இருந்தார். ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 1-ந்தேதி நடந்த போது மயங்கி விழுந்தார்.
ரஜினி மன அழுத்தம் காரணமாக படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்தது அதுவே முதல் முறையாகும். ரஜினி சுருண்டு விழுந்ததை கண்டதும் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பதறிப் போனார்கள். உடனடியாக டாக்டர்களை வரவழைத்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு ஓய்வு எடுத்தால் சரியாகி விடும் என்றனர்.
அதன்படி அன்று முழுவதும் ரஜினி ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் "அன்னை ஓர் ஆலயம்" படப்பிடிப்பில் பங்கேற்றார். என்றாலும் ரஜினிக்குள் ஏற்பட்டு இருந்த உடல்நல பாதிப்பும், மனநல பாதிப்பும் முழுமையாக நீங்கவில்லை. ரஜினி கதை இதோடு முடிந்து விட்டது என்று திரை உலகில் பலரும் பேச ஆரம்பித்தனர்.
அந்த சமயத்தில் ரஜினியின் கால்ஷீட்டுக்காக 18 படத்தயாரிப்பாளர்கள் தினமும் அவரை விரட்டியபடி இருந்தனர். ஏற்கனவே 13 படங்களில் ரஜினி நடித்துக் கொண்டு இருந்தார். மேலும் மேலும் படங்களை ஒப்பந்தம் செய்ததால் அவருக்குள் மேலும் மன அழுத்தம் ஏற்பட்டு இருந்தது.
குறிப்பாக பத்திரிகையாளர் ஒருவர் ரஜினியை தொடர்ந்து தாக்கி எழுதியது அவரை கடுமையாக பாதித்து இருந்தது. ஒருநாள் ரஜினி காரில் சென்று கொண்டிருந்த போது முன்னாள் அந்த பத்திரிகையாளர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை நிறுத்தி விளக்கம் கேட்க நினைத்த ரஜினி அவர் அருகில் தனது காரை கொண்டு சென்றார்.
இதனால் பயந்து போன அந்த பத்திரிகையாளர் போலீஸ் நிலையத்துக்கு சென்று ரஜினி தன்னை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்வதாக புகார் அளித்தார். ரஜினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மார்ச் 7-ந்தேதி ரஜினி அந்த வழக்கில் கைதாகி விடுவிக்கப்பட்டார்.
இது ரஜினியின் மனநிலையை மேலும் கடுமையாக பாதித்தது. கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடிக்க ஆரம்பித்தார். மதுரையில் "திரிசூலம்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவாஜிகணேசனுக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு சென்ற ரஜினி மிகப்பெரிய கலாட்டா செய்து விட்டார். நடிகர்-நடிகைகள் அலறினார்கள்.






