என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • சிவாஜிராவின் எதிர்காலத்துக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார்.
    • ஜோதிடர் தனது கண்களை மூடி அப்படியே அமர்ந்து விட்டார்.

    சென்னையில் இருந்து வந்த வேகத்தில் சிவாஜிராவ் திரும்பி சென்று விட்டதை கவனித்த தந்தை ரனோஜிராவ் மிகவும் கவலை அடைந்தார். நல்ல அரசு வேலையை மகன் இழந்து விட்டானே என்ற கவலை அவரை மிகவும் வாட்டியது. மகனின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறதோ? என்ற அச்சம் அவர் மனதில் ஆழமாக பதிந்து போனது.

    அதற்கு விடை காண நினைத்தார். சிவாஜிராவின் ஜாதகத்தை பார்த்து எதிர்காலத்தை தெரிந்துக் கொள்ளலாமா? என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. கண்டக்டர் வேலையையும் பறிகொடுத்து விட்டு சென்னையில் சினிமா பட வாய்ப்பும் கிடைக்காமல் மகன் தவிப்பதை பார்த்து ரனோஜிராவுக்கு ஏற்பட்ட வேதனை அடங்கவில்லை.

    சிவாஜிராவை மிக மிக உயர்ந்த அரசு பதவியில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பதுதான் அவரது தீராத ஆசையாக இருந்தது. அதற்காக அவர் எவ்வளவோ முயற்சிகள் செய்தார். ஆனால் வாலிப முறுக்கு காரணமாக சிவாஜிராவ் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.

    அதனால்தான் சிவாஜிராவ் பஸ் கண்டக்டர் வேலைக்கு வரவேண்டியது ஆகி விட்டது. அதை அரைகுறை மனதுடன் ஏற்றுக்கொண்ட ரனோஜிராவ் தனது மகன் அந்த வேலையிலும் மிக உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த ஆசையை அவர் அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.

    சிவாஜிராவ் மீது அவர் எந்த அளவுக்கு கண்டிப்பு காட்டினாரோ அதே அளவுக்கு பாசத்தையும் காட்டினார். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவர் அந்த பாசத்தை வெளிப்படையாக காட்டியது இல்லை. சிவாஜிராவ் மிக உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று அவர் ஒவ்வொரு நாளும் மனதார நினைத்து வழிபாடுகள் செய்வது உண்டு.

    இந்த அன்புதான் அவரை சிவாஜிராவுக்கு வேலை இல்லை என்றதும் நிலைகுலைய செய்து விட்டது. தனது மகன் எதிர்காலம் என்ன ஆகுமோ? என்று நண்பர்களிடம் வருத்தப்பட்டு சொல்லிக் கொண்டே இருந்தார். கண்டக்டர் வேலையும் கைநழுவி போய் விட்ட நிலையில் சினிமா வாய்ப்பும் கிடைக்காவிட்டால் மகன் என்ன செய்வான் என்று மிகவும் கவலைப்பட்டார்.

    அதற்கு விடை காண்பதற்காக தன்னுடன் 35 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய நண்பர் ஒருவரிடம் கருத்துக்கள் கேட்டார். சிவாஜிராவின் எதிர்காலத்துக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார். அதற்கு அந்த போலீஸ்காரர், "ஏன் கவலைப்படுகிறாய்? எனக்கு தெரிந்த ஒரு ஜோதிடர் இருக்கிறார். மிக துல்லியமாக அவர் ஜோதிடம் பார்ப்பார். அவரது வீடு என் வீட்டுக்கு பக்கத்தில்தான் இருக்கிறது. நாளை சிவாஜிராவ் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வா. அவரிடம் கொடுத்து பார்க்கலாம். அவர் நிச்சயமாக நல்ல வழிகாட்டுவார்" என்றார்.

    ரனோஜிராவுக்கு சற்று நம்பிக்கை வந்தது. மறுநாளே அவர் சிவாஜிராவ் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சென்றார். அவரும் அவரது நண்பரும் அந்த ஜோதிடர் வீட்டுக்கு சென்றனர்.

    அவரிடம் இருவரும் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டனர். அவர் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார். ரொம்ப யோசித்து அமைதியாக பேசினார். அவரது சாந்தமான முகம் ரனோஜிராவுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.

    அந்த நம்பிக்கையுடன் சிவாஜிராவின் ஜாதகத்தை எடுத்து கொடுத்தார். பிறகு சிவாஜிராவின் குணங்கள் பற்றி பேசத் தொடங்கினார். 9 வயதில் தாயை இழந்த சிவாஜிராவ் சிறுவயதில் இருந்தே மிகுந்த சுட்டித்தனத்துடன் இருந்ததை தெரிவித்தார். நல்ல வேலையை விட்டுவிட்டு சினிமா பயிற்சி பெற சென்று விட்டதை மிகவும் வருத்தத்துடன் கூறினார்.

    கண்டக்டர் வேலை பார்த்தாவது தனது கடைசி மகன் பிழைத்துக் கொள்வான் என்று நினைத்து இருந்த தனக்கு அவனது வேலை பறிபோனதை நினைக்கும்போது தாங்கிக் கொள்ள இயலவில்லை என்று கண்ணீர் விட்டார். அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த ஜோதிடர் சிவாஜிராவின் ஜாதக கட்டங்களை ஆய்வு செய்தார்.

    நிறைய ஏதோ ஏதோ எழுதி கூட்டி-கழித்து பார்த்தார். தனியாகவும் ஒரு சீட்டில் எழுதினார். சிவாஜிராவ் பற்றி அவர் என்ன எழுதுகிறார் என்பது ரனோஜிராவுக்கு புரியவில்லை. பிறகு திடீரென அந்த ஜோதிடர் தனது கண்களை மூடி அப்படியே அமர்ந்து விட்டார்.

    ஏதோ சித்தர்கள் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்து இருப்பது போல இருந்தார். சுமார் 30 நிமிடங்கள் அவர் அப்படியே இருந்துக் கொண்டிருந்தார். ரனோஜிராவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஜோதிடர் என்ன சொல்ல போகிறாரோ? என்று தவித்தபடியே இருந்தார்.

    சிறிது நேரம் கழித்து ஜோதிடர் கண்களை திறந்தார். சிவாஜிராவ் பற்றி மேலும் சில தகவல்களை கேட்டார். சிவாஜிராவ் பிறந்த நேரம், பிறந்த நாள், பிறந்த இடம், அப்பா பெயர், அம்மா பெயர், உடன் பிறந்தவர்கள் பெயர் என்று எல்லாவற்றையும் கேட்டு தனியாக ஒரு தாளில் எழுதிக் கொண்டார்.

    ஜோதிடர் என்ன சொல்லப் போகிறாரோ? என்ற தவிப்பு ரனோஜிராவ் மனதுக்குள் எழுந்தது. அப்போது அந்த ஜோதிடர் ஒரு தாளை எடுத்து அதில் கட்டம் போட்டு ஏதேதோ... எழுத ஆரம்பித்தார். அவர் எழுதியது ஒன்றும் ரனோஜிராவுக்கு புரியவில்லை. அவர் எழுதியதையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

    ஜோதிடர் ஏதாவது எதிர்மறையாக சொல்லி விடுவாரோ? என்ற பயம் அவருக்குள் ஏற்பட்டது. திடீரென அந்த ஜோதிடர் ஒரு தாளை எடுத்து ேகாடுகள் போட்டு ஏதேதோ... எழுதத் தொடங்கினார். கைவிரல்களை மடக்கி எண்ணி ஏதேதோ... எழுதினார்.

    அவரது வாய் சூரியன், சந்திரன், செவ்வாய், சனி என்று ஏதேதோ... முணுமுணுத்தது. அவரது செயல்பாடுகளை பார்த்து ரனோஜிராவ் சற்று பயப்பட்டார். ஜோதிடரின் முகத்தை பார்க்கவே அவருக்கு பயமாக இருந்தது. கடும் தவிப்புக்குள்ளானார்.

    அப்போது ஜோதிடர் ரனோஜிராவை பார்த்து பேசத் தொடங்கினார்.

    "உங்கள் மகன் சிம்ம லக்னம், மகர ராசியில் பிறந்து இருக்கிறார். இந்த ராசிக்காரர்கள் பொதுவாக நேர்மையாகவும், தைரியம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். தற்போது இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றமான காலம் ஆகும். அதன்படி பார்த்தால் உங்கள் மகனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

    பொதுவாகவே உங்களது மகன் மற்றவர்கள் சொல்வதை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார். தனது மனதில் என்ன தோன்றுகிறதோ? அதன்படி துணிச்சலாக செயல்படுவார். உங்கள் மகன் ஜாதகத்தில் சூரியனும், வியாழனும் ஒரு கட்ட அமைப்பில் உள்ளன.

    இத்தகைய கட்ட அமைப்பில் ஜாதகம் இருப்பது மிக மிக அபூர்வமானது. கோடியில் ஒருவருக்குத்தான் இந்த அமைப்பு கிடைக்கும். அந்த அருமையான ஜாதக அமைப்பு உங்களது மகன் ஜாதகத்தில் இருக்கிறது.

    உங்களது மகன் கண்டக்டர் வேலையில் இருந்து நடிப்பு பயிற்சிக்கு போனதாக சொல்கிறீர்கள். அங்கும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று சொல்கிறீர்கள். கவலைப்படாதீர்கள் உங்களது மகன் எந்த துறைக்கு சென்றாலும் அதில் முதன்மையாக ஒரு தலைவன் போல இருப்பார். அவரது ஜாதகத்தில் உள்ள ராசி அமைப்புகள் இதை தெள்ளதெளிவாக சொல்கின்றன.

    உங்களது மகன் நிச்சயமாக இன்னொருவருக்கு அடிமையாக இருந்து வேலை பார்க்க மாட்டார். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுக்கும் மிக மிக உயர்ந்த இடத்தில் இருப்பார். அவரது கை அசைவுக்கு பலரும் கட்டுப்படுவார்கள்.

    இவ்வாறு அந்த ஜோதிடர் சொன்னதைக் கேட்டதும் ரனோஜிராவுக்கு ஒரு பக்கம் ஆச்சரியமாகவும், மற்றொரு பக்கம் பிரமிப்பாகவும் இருந்தது. ஜோதிடர் சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை. படபடப்புடன் காணப்பட்டார். அவரது இருதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அந்த ஜோதிடரை ரனோஜிராவ் நம்பிக்கை இல்லா மல்தான் பார்த்தார். அவரது முகப்பாவனை மூலம் அர்த்தத்தை ஜோதிடர் புரிந்துக் கொண்டார். தொடர்ந்து அவர் பேசினார்.

    "நான் உங்கள் மகன் ஜாதகத்தை கணித்து பார்த்து விட்டு சொல்லும் தகவல்களை நீங்கள் நம்ப மறுக்கலாம். நான் பல ஆண்டுகளாக ஜாதகம் பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு ஜாதகத்தை கையில் எடுத்ததும் கிரக நிலைகளை வைத்து எளிதாக கணித்து விடுவேன்.

    ஆனால் உங்களது மகன் ஜாதகம் மிக மிக அற்புதமானது. என் வாழ்நாளில் இப்படி ஒரு ஜாதகத்தை நான் பார்த்தது இல்லை. இந்த ஜாதக அமைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ஜாதகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டமும் என்னை திணற வைத்து விட்டது.

    சில கட்ட அமைப்புகள் உண்மையில் என்னை உறுதியாக கணிக்க முடியாமல் திணற வைத்து விட்டன. அந்த அளவுக்கு இந்த ஜாதகக்காரர் மிக மிக உன்னதமாக இருக்கிறார். இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. இன்னும் சில ஆண்டுகளில் அவரது உச்சம் மிக வேகமாக இருக்கும்.

    இந்த ஜாதகக்காரரை பொறுத்தவரை என்னால் சில விஷயங்களை ஆணித்தரமாக சொல்ல முடியும். ஒன்று இந்த ஜாதகக்காரர் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறுவார். நாடே கொண்டாடும் அளவுக்கு அவருக்கு புகழ் கிடைக்கும். அவரது செயல்பாடுகள் அவரை அசைக்க முடியாத சக்தியாக மாற்றும்.

    நீண்ட நாட்களுக்கு அவர் மக்களால் விரும்பப்படும் ஒரு மாபெரும் சக்தியாக இருப்பார். நீண்ட நாட்களுக்கு அவரை பெயரும், புகழும், பணமும் தலைமை இடத்தில் வைத்துக் கொண்டே இருக்கும். நான் சொல்வது நிச்சயம் நடக்கும் பாருங்கள். அந்த அளவுக்கு இந்த ஜாதகக்காரர் மிக மிக புண்ணியம் செய்தவராக இருக்கிறார்" என்றார். ஜோதிடர் சொன்னதை கேட்க... கேட்க... ரனோஜிராவுக்கு பிரமிப்பாக இருந்தது. மற்றொரு பக்கம் மனதுக்குள் இனம் புரியாத பயம் வந்தது. ஜோதிடர் என்ன இப்படி சொல்கிறார் என்று அதிர்ச்சியோடு பார்த்தார்.

    அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை பார்க்கலாம்.

    • கோல்ட் இ.டி.எப். என்பது தங்கத்தை ஷேர் வடிவில் வாங்கும் முறையாகும்.
    • எல்லா ஆப்களும் உறுதியானவை அல்ல

    மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்தில் அமர ஆசைப்பட்டு, அதற்கான வழி, வகைகளைப் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று பார்ப்பது இந்தியர்களின் டார்லிங் என வர்ணிக்கப்படும் தங்கத்தின் மீதான முதலீடுகள்.

    நாற்பதாயிரம் வருடங்களுக்கு முந்தைய குகை ஓவியங்களில் தங்கம் பற்றிய குறிப்பு காணப்படுவது, தங்கத்துக்கும், நமக்குமான நீண்ட உறவைக் காட்டுகிறது. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று மனிதர்களின் மூவாசைகளில் ஒன்றான தங்கத்தை அழகுக்காக உபயோகித்தோம்; ஆபரணமாக அணிந்தோம்; பஸ்பமாகச் செய்து ஆரோக்கியத்தைக் காக்க உண்டோம். பண்டமாற்றாக, கரன்சியாக பலப்பல உருவங்கள் எடுத்து நம்முடன் பயணித்த தங்கம் இன்று ஒரு முதலீட்டு முறையாக - ஒருவரின் மொத்த முதலீட்டில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை இருக்கவேண்டிய பொருளாக – பார்க்கப்படுகிறது.

    தங்கத்தின் மீதான காதலில் முதல் இடத்தில் சீனா இருக்க, இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. இவ்வுலகில் உள்ள தங்கத்தில் இருபது சதவிகிதம் (சுமார் 25000 டன்) இந்தியாவின் வீடுகளிலும், கோவில்களிலும் தூங்குகிறது. ஆனாலும் நம் தங்க தாகம் தீராததால் வருடாவருடம் 600 டன் முதல் 1000 டன் வரை தங்கம் இறக்குமதி செய்கிறோம்.

    தங்கம் என்பது பெண் குழந்தைகளுக்கு சீதனமாகக் கொடுக்க வேண்டிய பொருள் என்னும் நமது எண்ணம் மாறி, கல்வியும், வேலையுமே அவர்கள் உயர்வுக்கு வழி என்ற விழிப்புணர்வு வந்தபின் தங்கத்தின் மீதான நம் மோகம் குறைந்துள்ளது. ஆனால் இன்று அது ஒரு நல்ல மாற்று முதலீடாக உருவெடுத்திருக்கிறது. ஏனெனில், போர், பயங்கரவாதம் போன்ற நேரங்களில் பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட் போன்ற முதலீடுகளின் மதிப்பு குறையும்; ஆனால் தங்கம் அமெரிக்க டாலருக்கு மாற்றாக நிற்பதால் அதன் மதிப்பு கூடும்.

    பொதுவாக நாம் தங்கத்தை விற்பதை விட அதன் மீது கடன் வாங்குவதையே பெரிதும் விரும்புகிறோம். கோவிட் காலத்தில் வருமானம் பாதிக்கப்பட்டதில் நமக்கு பெரிதும் கை கொடுத்தது, அவ்வப்போது ஆசையாக வாங்கி வைத்த கால் சவரன், அரை சவரன் நகைகள்தானே? ஆனால் பெரும்பாலானவர்கள் தங்கள் தங்கத்தை விற்கவில்லை; தங்களிடம் இருக்கும் தங்கத்தின் மீது கடன் பெறவே முற்பட்டனர்.

     

    வேறு எல்லாத் தொழில்களும் பாதிக்கப்பட்டாலும், தங்க அடமானக் கடன் தரும் தொழில் மட்டும் ஜரூராக நடைபெற்றது; இன்றும் நடைபெற்று வருகிறது. இது சாதாரண மக்களின் சேமிப்பை எந்த அளவு பாதிக்கிறது, தேவை ஏற்படும் போது தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுவது சரியா, அல்லது விற்பதுதான் சரியா என்பது பற்றி பலவிதக் கருத்துக்கள் நிலவுகின்றன.

    தங்கத்தை ஏன் அடகு வைக்கிறோம்? என்றாவது ஒரு நாள் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையின் காரணமாகத்தானே? இந்த நம்பிக்கைக்கு வலுவான அடித்தளமாக, போதுமான வருமானம் இருப்பவர்கள் நகையை அடகு வைக்கலாம். இப்போதைக்கு தினசரி வாழ்வை நடத்துவதற்கே வருமானம் போதாமல் இருப்பவர்கள் இன்னும் கடன் சுமையையும், வட்டிச் சுமையையும் ஏற்றிக் கொள்வதைத் தவிர்த்து, தங்கத்தை விற்றுவிட்டு ஒரு நல்ல நேரமும், வருமானமும் வரும்வரை காத்திருந்து மீண்டும் வாங்கலாம்.

    இதுவரை நகைக்கடன்களுக்கு வட்டியை மட்டும் கட்டி, கடனை மீண்டும் புதுப்பிக்கும் வசதி இருந்தது. இனி கடன் தொகை + வட்டி என முழுப்பணத்தையும் மொத்தமாகவோ, சில்லறையாகவோ கட்டி கடனை முடித்தபின்னரே மீண்டும் கடன் தரப்படும். தங்கத்தின் மீது கடன் பெற விரும்புவோர் இதனை நினைவுகொள்வது நல்லது.

    டிசம்பர் 1, 2016இல் சிபிடிடி (CBDT) அறிவிப்பின்படி ஒரு இந்தியர் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால் அதற்கு முறையான கணக்குகள் இருக்க வேண்டும். நம்மில் பலரிடமும் பாரம்பரியமாக வந்த நகைகள் இருக்கும்; ஆனால் அதற்கு கணக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதால் திருமணமான பெண்கள் 500 கிராம் வரைக்கும், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரைக்கும், ஆண்கள் 100 கிராம் வரைக்கும் கணக்குக் காட்டத் தேவையில்லை.

    இதற்கு மேல் தங்கம் இருக்கும் பட்சத்தில், அதை வாங்கிய ரசீது, அந்த வருடத்தின் வருமான வரித் தாக்கல் நகல் போன்றவற்றைக் காட்ட வேண்டும். பாரம்பரியமாக வந்த தங்கம் என்றால் உயில், செட்டில்மென்ட் பத்திரம், தானப் பத்திரம் போன்ற சான்றுகளைக் காட்ட வேண்டும். இதுவரை இந்த விதிமுறைகளை அரசாங்கம் நிர்ப்பந்திக்கவில்லை என்றாலும், வரக்கூடிய காலங்களில் கடுமை காட்டலாம்.

    ஆகவே, தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் முதலில் தங்களிடம் ஏற்கெனவே இருக்கும் தங்கத்தின் அளவை கணக்கெடுத்து பின் செயல்படுவது நல்லது. தங்கம் வாங்கிய ரசீதுகளை பத்திரப்படுத்தி வைப்பது அவசியம். நாம் வாங்கும் தங்கத்தின் அளவு நம் வருமானத்திற்கு உட்பட்டதாக இருப்பதும் மிக அவசியம்.

     

    சுந்தரி ஜகதீசன்

    தங்கத்தை ஆபரணமாக மாற்றும் போது செய்கூலி, சேதாரம் என்று ஒரு 20 சதவிகித செலவு; வாங்கிய பின்னும் அதை பத்திரமாகப் பாதுகாக்க லாக்கர் செலவு - இவை தவிர அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யமுடியாத நிலை - போன்ற காரணங்களால் இன்று முதலீட்டாளர்கள், தங்க நகைகள் வாங்குவதை விட பேப்பர் கோல்ட் வாங்குவதை விரும்புகிறார்கள்.

    பேப்பர் கோல்ட் என்று செல்லமாகக் குறிப்பிடப்படும் டிஜிட்டல் கோல்ட் மார்ச் 2003இல் அறிமுகமானது. 99.9 சதவீதம் சுத்தமான இந்தத் தங்கத்தின் விலை, உலகம் முழுவதும் ஒன்றாகவே இருப்பது அதன் கவர்ச்சி அம்சங்களில் ஒன்று. செய்கூலி, சேதாரத்தின் நஷ்டங்கள், பாதுகாக்கும் செலவு இவை இல்லாதிருப்பதும் ஒரு முக்கியமான பாஸிட்டிவ் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

    கோல்ட் இ.டி.எப். என்பது தங்கத்தை ஷேர் வடிவில் வாங்கும் முறையாகும். 99.9 சதவீதம் சுத்தமான தங்கத்தை உலகம் முழுவதும் உள்ள அதே விலையில் வாங்கி ஷேர்களாகப் பிரித்து விற்கின்றனர். இதனால் இதன் விலையில் வெளிப்படைத்தன்மை அதிகம். எஸ்.பி.ஐ., ஐ.டி.பி.ஐ. ஆக்சிஸ் போன்ற வங்கிகளும், இன்வெஸ்கோ, நிப்பான் போன்ற நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன. குறைந்த பட்சமாக ஒரு கிராம் வாங்கலாம். இதில் சிப் வசதி கிடையாது. என்ட்ரி லோட், எக்ஸிட் லோட் என்று எதுவும் கிடையாது. எக்ஸ்பென்ஸ் ரேஷியோவும் 0.5 சதவீதம் முதல் 1.25 சதவீதம் அளவே. இதற்கு ஒரு டீமேட் அக்கவுன்ட் தேவை. ஏற்கெனவே டீமேட் அக்கவுன்ட் துவங்கி பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள் இதை எளிதாக வாங்கலாம்.

    கோல்ட் மியூச்சுவல் பண்டுகளின் அடிப்படை முதலீடு தங்கம் அல்ல; தங்க வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களே. இதனால் இங்கு வெளிப்படைத்தன்மை குறைகிறது. குறைந்த பட்ச முதலீடு ரூ.1000/. இதற்கு டீமேட் அக்கவுன்ட் தேவை இல்லை. சிப் வசதி உண்டு. என்ட்ரி லோட் இல்லை; ஆனால் எக்ஸிட் லோட் உண்டு. எக்ஸ்பென்ஸ் ரேஷியோவும் அதிகம்.

    கோல்ட் இ.டி.எப். வாங்குவதா அல்லது கோல்ட் மியூச்சுவல் பண்டில் இறங்குவதா என்பது பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். இதில் முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம்தான். ஷேர் மார்க்கெட் முதலீட்டை விரும்புபவர்கள் இ.டி.எப்பிலும், மியூச்சுவல் பண்ட் முதலீடு சுலபம் என்று எண்ணுபவர்கள் கோல்ட் மியூச்சுவல் பண்டிலும் முதலீடு செய்யலாம்.

    டிஜிட்டல் கோல்டை எம்.எம்.டி.சி என்ற அரசு நிறுவனமும், பேம்ப் என்ற ஸ்விஸ் நிறுவனமும் சேர்ந்து அறிமுகப்படுத்தின. இன்று ஜிபே, தனிஷ்க் போன்றவற்றின் ஆப்களில் ஒரு மில்லிகிராம் 24 காரட் தங்கத்தின் விலை சுமார் ரூ.10. இருந்த இடத்தில் இருந்தபடியே ஒரு நொடியில் தங்கம் வாங்கும் வசதி இந்த ஆப்களில் உள்ளது. நமக்குப் பணம் தேவை என்றால் இங்கேயே விற்க முடியும். தங்க வடிவில் தேவை என்றாலும் உடனே கிராம் கணக்கில் தங்கம் நம் கையில் தரப்படும். இல்லாவிட்டால் சில அங்கீகரிக்கப்பட்ட நகைக்கடைகள் மூலம் நகையாகவும் வாங்கிக் கொள்ளலாம்.

    ஆனால் எல்லா ஆப்களும் உறுதியானவை அல்ல. சமீபத்தில் ஆதித்ய பிர்லா கேப்பிடல் நிறுவனம் வழங்கும் ஆப்பில் சைபர் தாக்குதல் ஏற்பட்டு, 435 பேர் அக்கவுன்ட்டுகளில் இருந்து தங்கம் மாயமானது. அந்த நிறுவனம் இதை சரிக்கட்டி விட்டாலும், ஆப்பில் தங்கம் வாங்குபவர்கள் ஸ்ட்ராங்கான பாஸ்வர்ட் உபயோகிப்பது, அடிக்கடி ஆப் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது போன்ற முன்ஜாக்கிரதை ஏற்பாடுகளைக் கைக்கொள்வது நலம்.

    தங்க இறக்குமதியைக் குறைக்க 2015இல் மோடி அரசு சில திட்டங்களை முன்வைத்தது. அதில் ஒன்று சாவரின் கோல்ட் பாண்ட். தற்போது இதனை வழங்குவதை அரசு நிறுத்தி வைத்துள்ளது என்றாலும் முன்பு வாங்கியவர்கள் சந்தையில் விற்பதால், தங்கம் விலை குறையும்போது வாங்கி வைக்கலாம்.

    தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ரூ. 86.720/ ஆக உள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பே கூறியது போல் நம் மொத்த முதலீட்டில் 5 முதல் 10 சதவிகிதம் தங்கம் நகை வடிவிலோ, அல்லது பேப்பர் உருவிலோ இருப்பது நல்லது.

    உங்களிடம் எவ்வளவு கிராம் தங்கம் உள்ளது? தற்போது வாங்க எண்ணினால் நகை அல்லது இ.டி.எப். அல்லது கோல்ட் பாண்ட் அல்லது டிஜிட்டல் கோல்ட் போன்றவற்றில் எதை வாங்க விரும்புவீர்கள்?

    • சிவாஜிராவை வித்தியாசமாக பார்த்த கண்டக்டர் ராஜ்,
    • டிஸ்மிஸ் ஆர்டரை வாங்கிக் கொண்டு கண்ணீர் மல்க சிவாஜிராவ் வெளியே வந்தார்.

    சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவாஜிராவ் ஏறி அமர்ந்தார். அவர் மனது முழுக்க நாகேஸ்வரராவ் அனுப்பிய தந்தி மீதே இருந்தது. எதற்காக அண்ணன் அவசரமாக வரச்சொன்னார்? என்று அவருக்கு புரியவில்லை.

    குடும்பத்தில் யாருக்காவது ஏதேனும் ஆகி இருக்குமோ? என்ற இனம்புரியாத பயம் அவருக்கு வந்தது. எதுவுமே புரியாத நிலையில் ரெயில் பெட்டி வாசல் பகுதியில் நின்று சிகரெட்டுகளை ஊதிக் கொண்டே இருந்தார். அவர் மனம் அவ்வளவு எளிதில் அமைதியாகவில்லை.

    அருண் ஓட்டல் அறையில் உடைகள், பொருட்கள் அனைத்தையும் போட்டது போட்டபடி கிளம்பி வந்திருந்த அவருக்கு சிந்தனைகள் பலவிதமாக தோன்றின. சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எண்ணமும் அவரது மனதுக்குள் வந்து... வந்து... போனது.

    தம் அடித்து முடிந்ததும் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தார். எதிர் இருக்கையில் இருந்தவர் சிவாஜிராவை நட்புடன் பார்த்து சிரித்தார். "நான் உங்களை பெங்களூரில் பார்த்து இருக்கிறேனே?" என்றார். ஆனால் சிவாஜிராவுக்கு அவரை தெரியவில்லை.

    என்றாலும் அந்த நபர் விடவில்லை. சிறிது நேரம் கழித்து மெல்லிய குரலில் நீங்கள் பெங்களூர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிகிறீர்களா? என்று கேட்டார். அதன் பிறகுதான் அவர் தன்னை பஸ்சில் கண்டக்டராக பார்த்து இருப்பார் என்பது சிவாஜிராவுக்கு புரிந்தது. அவருடன் பேசிக் கொண்டே இருந்தார்.

    அந்த நபர் தனது மகன் பி.எஸ்.சி. படித்து விட்டு 4 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருப்பதாகவும் கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் வேலைக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறினார். அதோடு அந்த கண்டக்டர் வேலை தன் மகனுக்கு விரைவில் கிடைப்பதற்காக திருப்பதி ஏழுமலையானை கண்டு வழிபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு ஆச்சரியமாக இருந்தது. கண்டக்டர் வேலையை நாம் எவ்வளவு சாதாரணமாக நினைத்து விட்டோம். அந்த வேலைக்கு படித்தவர்கள் மத்தியில் கூட இவ்வளவு ஆர்வம் இருக்கிறதா? என்று வியந்தார். நல்ல வேலை கண்டக்டர் வேலையை ராஜினாமா செய்யவில்லை என்று மனதுக்குள் சற்று ஆறுதல் பட்டுக் கொண்டார்.

    மேலும் சிறிது நேரம் அந்த நபரிடம் சிவாஜிராவ் பேசிக் கொண்டே இருந்தார். அவர் தூங்கச் சென்ற பிறகு சிவாஜிராவுக்கு தனிமையில் விடப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவருக்கு தூக்கம் வரவில்லை. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் என்ன செய்வது? என்று யோசித்தார். அப்போது அவருக்குள் ஒரு தீர்க்கமான முடிவு தோன்றியது. அதாவது சினிமாவில் நடிக்க தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். வாய்ப்பு கிடைக்காவிட்டால் கவலைப்படக் கூடாது.

    கண்டக்டர் வேலையை வைத்தே காலத்தை ஓட்டி விடவேண்டியதுதான் என்று ஒரு முடிவுக்கு வந்தார். குழம்பிய குட்டை போல் இருந்த அவரது மனநிலை தெளிந்த நீரோடைப் போல மாறி இருந்தது. சென்னையில் யாரும் நடிக்க வாய்ப்பு தராவிட்டால் சினிமா மோகத்தை மனதில் இருந்து அகற்றி விடவேண்டும் என்ற எண்ணம் அவரது மனதுக்குள் உறுதியானது. மேலும் திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டுகள் படித்ததை கெட்ட கனவு போல நினைத்து மறந்து விட வேண்டும் என்று தோன்றியது. அந்த நினைவிலேயே சிவாஜிராவ் தூங்கிப் போனார்.

    மறுநாள் அதிகாலை பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெங்களூர் ரெயில் நிலையத்தை சென்று அடைந்தது. ரெயில் நிலையத்தில் இருந்து வெளியில் வந்த சிவாஜிராவ் டவுன் பஸ்சில் ஏறி அனுமந்தராவ் நகருக்கு புறப்பட்டார். அந்த பஸ்சில் அவருக்கு நன்கு பழக்கமான ராஜ் என்பவர் கண்டக்டராக இருந்தார். அவருக்கு சிவாஜிராவை பார்த்ததும் கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டது. "என்ன சிவாஜி எப்போது வந்தாய்?" என்று கேட்டார். அதற்கு சிவாஜிராவ், "இப்போது தான் சென்னையில் இருந்து ரெயிலில் வந்து இறங்கினேன். வீட்டுக்கு போய்க் கொண்டு இருக்கிறேன்" என்றார்.

    சிவாஜிராவை வித்தியாசமாக பார்த்த கண்டக்டர் ராஜ், "சென்னையில் நடிப்பு பயிற்சி பெற சென்று இருந்தாயே? சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்து இருக்கிறதா?" என்று கேட்டார். அதற்கு சிவாஜிராவ், "இல்லை. படிப்பு முடிந்து விட்டது. ஆனால் இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை" என்று கூறினார்.

    இதை கேட்டதும் கண்டக்டர் ராஜ் முகம் மாறியது. அவர் சிவாஜிராவை பார்த்து, "உனக்கு பெங்களூரில் நமது போக்குவரத்து கழகத்தில் நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாதா?" என்றார். அதற்கு சிவாஜிராவ், "என்ன நடந்தது? எனக்கு எதுவும் தெரியாதே" என்றார். உடனே கண்டக்டர் ராஜ், "நமது போக்குவரத்து கழகத்தில் சரியாக வேலைக்கு வராத 12 கண்டக்டர்களை நிரந்தரமாக வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள். அந்த 12 கண்டக்டர்களில் உன் பெயரும் உள்ளது. உத்தரவும் போட்டு விட்டார்கள்.

    உனக்கு இந்த தகவலே தெரியாதா?" என்று கேட்டார். இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கண்டக்டர் வேலையைப் பார்த்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கையுடன் வந்த தனக்கு இப்படி ஒரு சோதனையா?" என்று நினைத்தார்.

    அவர் மனம் அவரிடம் இல்லை. உலகமே இருண்டு போனது போல இருந்தது. ராகவேந்திரரை நினைத்து மனதுக்குள் உருகினார். ராகவேந்திரர் நிச்சயமாக தன்னை கைவிட மாட்டார் என்று உறுதியாக நம்பினார். ஆனால் அவரையும் மீறி மனதுக்குள் அழுத்தம் ஏற்பட்டது.

    கண்டக்டர் வேலை பறிபோனதை அவரால் ஜீரணிக்க இயலவில்லை. தனது அண்ணன் இதற்காகதான் தன்னை அவசரமாக பெங்களூருக்கு வருமாறு தந்தி கொடுத்து அழைத்திருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டார்.

    அதற்குள் பஸ் அனுமந்தராவ் நகர் வந்து இருந்தது. பஸ்சில் இருந்து இறங்கிய சிவாஜிராவ் வீட்டை நோக்கி நடந்தார். அவரது மனம் சோர்வாகி போய் இருந்ததால் வழக்கமான துள்ளல் நடை இல்லாமல் தளர்ந்த நடையாக மாறி இருந்தது. கவலையோடு வீட்டுக்குள் நுழைந்தார்.

    அவரைப் பார்த்ததும் தந்தை ரனோஜிராவும், அண்ணன் நாகேஸ்வரராவும் சற்று வித்தியாசமாக நடந்துக் கொண்டனர். நல்ல கண்டக்டர் வேலையை அநியாயமாக பறி கொடுத்து விட்டதாக பேசத் தொடங்கினார்கள். தந்தை ரனோஜிராவ் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.

    "நான் எவ்வளவோ சொன்னேனே கேட்டாயா? சென்னைக்கு போய் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர வேண்டாம் என்று எத்தனை தடவை சொன்னேன். நீ இருக்கும் கறுப்புக்கு உன்னை எப்படி நடிகராக ஏற்றுக் கொள்வார்கள். இப்போது அங்கும் உனக்கு எதுவும் வேலை இல்லை. இங்கிருந்த வேலையும் போய்விட்டது. என்ன செய்ய போகிறாய்?" என்று சூடாக கேட்டார்.

    அண்ணன் நாகேஸ்வரராவ் சிறிது நேரம் புத்திமதி சொல்லி விட்டு, "போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளை உடனே போய் பார். எப்படியாவது வேலையை தக்க வைத்துக் கொள்" என்று கூறினார். சிவாஜிராவ் மனது மீண்டும் பயங்கரமாக படபடப்புக்குள்ளானது. குளித்து முடித்து விட்டு நேராக பெங்களூர் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு ஓடினார். அங்கிருந்த போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளிடம் கெஞ்சினார். ஆனால் எந்த அதிகாரியும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

    நீண்ட விடுமுறையில் சென்றதால் இனி வேலைக்கு வைத்துக் கொள்ள இயலாது. உன்னுடைய இடத்துக்கு புதிதாக ஆள் எடுத்து விட்டோம் என்றும் நீ போகலாம் என்றும் கறாராக சொன்னார்கள். அது மட்டுமின்றி சிவாஜிராவ் மீது போக்குவரத்து கழக அதிகாரிகள் பலருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை. ஒரு தடவை செக்கிங் இன்ஸ்பெக்டர் ஒருவரை சிவாஜிராவ் கடுமையாக தாக்கி காயப்படுத்தி இருந்தார். மற்றொரு தடவை போக்குவரத்து கழக அலுவலகத்துக்குள் மது குடித்து விட்டு கும்மாளம் போட்டதாக புகார் இருந்தது.

    இந்த புகார்களை எல்லாம் போக்குவரத்து கழக அதிகாரிகள் பட்டியல் போட்டு வாசித்தனர். அவர்களிடம் சிவாஜிராவ் எவ்வளவோ விளக்கம் அளித்தார். ஆனால் அதிகாரிகள் கேட்கவில்லை. வேலையில் இருந்து நீக்கியது நீக்கியதுதான். இனி ஒன்றும் செய்ய இயலாது என்று கை விரித்து விட்டனர். டிஸ்மிஸ் ஆர்டரை வாங்கிக் கொண்டு கண்ணீர் மல்க சிவாஜிராவ் வெளியே வந்தார்.

    பஸ் டெப்போவில் இருந்த ஊழியர்கள் அவரை பரிதாபமாக பார்த்தனர். இதை கண்டதும் சிவாஜிராவ் துடித்துப் போனார். சில ஊழியர்கள் நெருங்கி வந்து துக்கம் விசாரிப்பது போல விசாரித்தனர். சில ஊழியர்கள் இதுதான் சமயம் என்று சிவாஜிராவை ஏளனமாக பேசினார்கள். மெட்ராசுக்கு போய் சினிமாவில் நடிக்கப் போவதாக சொல்லிக் கொண்டு இருந்தான். இவன் மூஞ்சை சினிமாவில் யாரால் பார்க்க முடியும். அதனால்தான் விரட்டி இருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் இப்போது இங்கு வந்து இருக்கிறான் என்று ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டே பேசினார்கள்.

    சிவாஜிராவ் காதுகளில் அவர்கள் பேசிய ஏளனமான பேச்சு தெள்ளத் தெளிவாக கேட்டது. அதைக் கேட்டதும் சிவாஜிராவ் மனதுக்குள் ஆவேசம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. இதுபற்றி சிவாஜிராவ் அளித்த ஒரு பேட்டியில், "என்னை பஸ் டெப்போவில் அனைவரும் பரிதாபமாக பார்த்த பார்வை தாங்கிக் கொள்ள முடியாதபடி இருந்தது. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தால் கூட தாங்கிக் கொள்வேன். பரிதாப பார்வையை தாங்க முடியவில்லை. எனவே அன்றே சென்னைக்கு புறப்பட மனதில் உறுதிக் கொண்டேன்" என்று கூறி இருந்தார்.

    பஸ் டெப்போவில் இருந்து வீட்டுக்கு வந்த அவர் அன்று இரவே பெங்களூரில் இருந்து சென்னைக்கு ரெயில் ஏறி விட்டார்.

    அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை பார்க்கலாம்.

    • சில நிறுவனங்களில் சிவாஜிராவை யாருமே கண்டுகொள்ளவே இல்லை.
    • எல்லா நண்பர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் சென்று சினிமா வாய்ப்பு தேடினார்கள்.

    டைரக்டர் பாலச்சந்தர் ஆச்சரியத்தோடு சிவாஜிராவை தன் அருகில் வருமாறு அழைத்தார். தூரத்தில் பரபரப்பான மனநிலையுடன் நின்றுக் கொண்டிருந்த சிவாஜிராவுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. டைரக்டர் பாலச்சந்தர் அருகே சென்று மீண்டும் ஒருமுறை வணக்கம் தெரிவித்தார்.

    அவரை டைரக்டர் பாலச்சந்தர் ஆச்சரியத்தோடு பார்த்தார். அப்போது பேராசிரியர் கோபாலி சிரித்துக் கொண்டே சிவாஜிராவை சுட்டிக்காட்டி, "சார் இவன் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். உங்கள் படங்கள் அனைத்தையும் பார்த்து விட்டான். அரங்கேற்றம் படத்தை பார்த்து விட்டு அழுததாக என்னிடம் பல தடவை சொல்லி இருக்கிறான்.

    இப்போது வெளியாகி இருக்கும் அவள் ஒரு தொடர்கதை படத்தை 17 தடவை பார்த்து விட்டான். உங்களுடைய டைரக்ஷன் மீது மிகப்பெரிய மரியாதை வைத்து இருக்கிறான். உங்கள் படம் என்றால் அவனுக்கு உயிர். எனவே அவனுக்கு உங்களது படங்களில் நடிக்க நீங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.

    பேராசிரியர் கோபாலி இப்படி சொல்ல... சொல்ல... சிவாஜிராவுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மற்றொரு பக்கம் பயமாகவும் இருந்தது. ஏனெனில் அவள் ஒரு தொடர்கதை படத்தை 4 தடவைதான் பார்த்து இருந்தார். அதை மறைத்து பேராசிரியர் கோபாலி 17 தடவை பார்த்து இருப்பதாக சொல்லி அறிமுகப்படுத்தியது சற்று சங்கடமாக இருந்தது. என்றாலும் டைரக்டர் பாலச்சந்தர் கவனத்தை தனது பக்கம் திருப்ப இந்த அறிமுகம் கை கொடுத்ததால் அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

    டைரக்டர் பாலச்சந்தர் மீண்டும் ஒருமுறை சிவாஜிராவை உன்னிப்பாக பார்த்தார். தனது கையை சிவாஜிராவை நோக்கி சிரித்துக் கொண்டே நீட்டினார். சிவாஜிராவும் கையை நீட்டினார். அவரது கையை குலுக்கிக் கொண்டே டைரக்டர் பாலச்சந்தர், "உனக்குத் தமிழ் தெரியுமா?" என்று கேட்டார்.

    அதற்கு சிவாஜிராவ், "கொஞ்சம் கொஞ்சம் தெரியும்" என்று தமிழில் பதில் அளித்தார். அந்த தமிழில் கன்னட வாசனை ஒட்டிக் கொண்டு இருந்ததையும் சிவாஜிராவின் பேச்சு கொச்சை தமிழில் இருந்ததையும் டைரக்டர் பாலச்சந்தர் கண்டார். அடுத்த வினாடியே அவர், "உனக்குத் தமிழ் நன்றாகப் பேச தெரியவில்லை. நீ பேசுவதில் இருந்தே உனக்கு தமிழ் தெரியாது என்பதை நான் புரிந்து கொண்டு இருக்கிறேன்.

    தமிழில் நன்றாக பேச வேண்டும். அப்படி நீ பேசி பழகி விட்டால் உன்னை நான் எனது படத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறேன்" என்று கூறினார்.

    இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது. நடப்பது கனவா? நனவா? என்பது புரியாமல் சிவாஜிராவ் திகைத்தபடி சிலைப்போல அங்கு நின்று கொண்டிருந்தார். "சரி நான் போய் வருகிறேன்" என்று டைரக்டர் பாலச்சந்தர் மீண்டும் குரல் கொடுத்தபோதுதான் சிவாஜிராவ் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

    சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த தனது எம்.எஸ்.எல். 363 எண் கொண்ட காரை நோக்கி டைரக்டர் பாலச்சந்தர் நடந்தார். அவரை வழிஅனுப்ப பேராசிரியர் கோபாலியும் உடன் சென்றார். சில நிமிடங்களில் டைரக்டர் பாலச்சந்தர் கார் புறப்பட்டு சென்று விட்டது. இதையெல்லாம் சிவாஜிராவ் தூரத்தில் நின்றபடியே பவ்யமாக பார்த்துக் கொண்டு இருந்தார். பாலச்சந்தரை வழியனுப்பி விட்டு வந்த பேராசிரியர் கோபாலி சிரித்தபடியே சிவாஜிராவிடம், "உன்னை டைரக்டர் பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்து விட்டது. உன்னை மீண்டும் பார்க்க விரும்புகிறார். எப்போது வேண்டுமானாலும் அவரிடம் இருந்து அழைப்பு வரலாம். தயாராக இரு" என்று கூறினார்.

    சிவாஜிராவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. சினிமா நடிகன் ஆகி விடலாம் என்று அவர் மனது கும்மாளமிட்டது. அதே மகிழ்ச்சியுடன் அருண் ஓட்டல் அறைக்கு திரும்பினார். நண்பர்கள் அனைவரிடமும் டைரக்டர் பாலச்சந்தரிடம் பேசியதை மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்.

    அடுத்த சில தினங்களில் சிவாஜிராவின் திரைப்படக் கல்லூரி வாழ்க்கை நிறைவு பெற்றது. கல்லூரி தேர்வில் முதல் மாணவனாக வேணு தேர்வாகி இருந்தார். பேராசிரியர்கள் அனைவரும் அவரை பாராட்டினார்கள். அதே சமயத்தில் சிவாஜிராவையும், பேராசிரியர்கள் பாராட்டி உற்சாகம் கொடுத்தனர்.

    திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டுகள் படித்ததற்கான டிப்ளமோ சான்றிதழ் சிவாஜிராவுக்கு வழங்கப்பட்டது. பி.நாகிரெட்டி தனது பொற்கரங்களால் சிவாஜிராவுக்கு அந்த சான்றிதழை வழங்கினார். அதைப் பார்க்க பார்க்க சிவாஜிராவுக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

    ஆனால் திரையுலகில் யதார்த்த நிலை வேறுவிதமாக இருந்தது. திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து ஒருவர் படித்து பட்டம் பெற்று விட்டதால் மட்டுமே அவருக்கு எந்த தயாரிப்பு நிறுவனமும் உடனே அழைத்து நடிப்பதற்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை என்ற யதார்த்தத்தை சிவாஜிராவ் அடுத்த ஓரிரு நாட்களிலேயே புரிந்து கொண்டார். என்றாலும் அவர் மனதில் நம்பிக்கை குறையவில்லை.

    சினிமாவில் நடிப்பதற்காக ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக ஏறி-இறங்க தொடங்கினார். ஆனால் ஒருவர்கூட நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை.

    சில நிறுவனங்களில் சிவாஜிராவை யாருமே கண்டுகொள்ளவே இல்லை. சில தயாரிப்பு நிறுவனங்கள் சிவாஜிராவை அலுவலக வரவேற்பு அறைக்கு கூட அழைக்கவில்லை. வாசலிலேயே நிற்க வைத்து ஏதேதோ... சொல்லி திருப்பி அனுப்பி விட்டனர். அவ்வளவு எளிதில் நடிகனாகி விட முடியாது என்பதை சிவாஜிராவ் அன்று உணர்ந்தார்.

    எல்லா நண்பர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் சென்று சினிமா வாய்ப்பு தேடினார்கள். சில சமயம் சிவாஜிராவ் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு சினிமா வாய்ப்புக்காக அலைந்தார். 1974-ம் ஆண்டின் கடைசி மாதங்கள் சென்னையில் சினிமா வாய்ப்புக்காக சிவாஜிராவ் அலைந்த அலைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல... ஏராளம்... சென்ற இடத்தில் எல்லாம் அவருக்கு ஏமாற்றமும், அவமானமுமே பதிலாக கிடைத்தது.

    முதல் ஓரிரு வாரங்கள் சற்று தன்னம்பிக்கையோடு சிவாஜிராவ் வாய்ப்புகளை தேடி அலைந்தார். இடைஇடையே தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்தார். அந்த காலக்கட்டத்தில் திரைப்படக் கல்லூரியில் அடிக்கடி சினிமா படம் காட்டுவார்கள். பழைய மாணவர் என்ற உரிமையுடன் அந்த படங்களையும் அவர் சென்று பார்ப்பது உண்டு.

    இப்படியே 2 வாரங்கள் ஓடி விட்டது. சிவாஜிராவ் மனதில் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சம் தகர்ந்து போகத் தொடங்கியது. பாலச்சந்தர் சார் அழைப்பதாக சொன்னாரே, அவரும் நம்மை அழைக்கவில்லையே என்று சிவாஜிராவ் மனதில் கேள்விகள் அலைஅலையாக எழுந்தன.

    நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தன. சிவாஜிராவுக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதும் அவருக்கு புரியவில்லை. பெங்களூரில் கண்டக்டர் வேலையையே பார்த்துக் கொண்டு இருந்து இருக்கலாமோ என்று அவருக்குள் நினைப்பு வந்தது.

    சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தது தவறான முடிவோ? என்ற தவிப்பும் அவருக்குள் அடிக்கடி தோன்றியது. இந்த 2 ஆண்டுகளில் நண்பர்கள், குடும்பத்தினர் மூலம் நிறைய பணம் செலவு செய்து விட்டதை நினைத்துப் பார்த்தார். அவருக்குள் கவலையும், வேதனையும் பீறிட்டுக்கொண்டு வந்தது.

    திரைப்படக் கல்லூரி வாழ்க்கை வீணாகப் போய் விடுமோ? என்ற பயமும், தவிப்பும் மனதுக்குள் நிரந்தரமாக குடியேறி விட்டது. அவரால் ஒரு நல்ல முடிவுக்கு வர முடியவில்லை. டைரக்டர் பாலச்சந்தர் உறுதி அளித்தது கூட சும்மா பேச்சுக்குத் தானோ? என்று நினைத்தார். என்றாலும் நண்பர்கள் ஆலோசனைபடி தயாரிப்பாளர்களையும், டைரக்டர்களையும் சந்தித்து தனது புகைப்படத்தை கொடுத்து நடிக்க வாய்ப்பு தரும்படி கோரிக்கை விடுத்தார். அவரது போட்டோக்களை அவர் கண் எதிரிலேயே பலர் தூக்கி எறிந்து விட்டனர். சிலர் அவரது புகைப்படங்களை வேண்டாவெறுப்பாக வாங்கிக் கொண்டனர்.

    இதுபற்றி சிவாஜிராவ் அளித்த ஒரு பேட்டியில், "நாங்கள் 36 பேரும் பிலிம் சேம்பர் அலுவலகம், சபையர், புளு டைமண்ட் தியேட்டர்கள், அமெரிக்க தூதரகம், சோவியத் கல்சுரல் சென்டர், டிரைவ் இன் ஓட்டல்... இப்படி சுற்றிச் சுற்றி வந்தாலும், எங்களுக்கு என்று ஒரு தனி உலகம் இருந்தது. அதுதான் கனவு உலகம்.

    சுவாரசியமான வாழ்க்கை, வித்தியாசமான வாழ்க்கை, பொறுப்பு இருந்தும் பொறுப்பில்லாத மாதிரியான போலி வாழ்க்கை, கனவு வாழ்க்கை, ஓ... அந்தக் கனவில்தான் எத்தனை சுகம். காலை 10 மணிக்குக் கூடுகிறோம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு "ஹலோ... ஹாய்" என்கிறோம். நகரில் ஓடும் சினிமா படங்களை எல்லாம் பார்க்கிறோம். வீட்டில் இருந்து வரும் பணத்தை ஜாலியாக செலவு செய்கிறோம்.

    காலம் போனது தெரியவில்லை.

    இதோ, படிப்பும் முடிந்து விட்டது. வெகு தூரத்தில் ஒரு சொர்க்கம் தெரிகிறது. அந்த சொர்க்கம் எது? அதுதான் சினிமா உலகம். அங்கே புகுந்து விடவேண்டும். எப்படி சினிமா உலகில் சான்ஸ் பிடிப்பது? எல்லோருடைய முகத்திலும் எதிர்காலம் பற்றிய கவலை தெரிகிறது. வீட்டில் சொன்னதைக் கேட்காமல் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தோம். பயிற்சி பெற்றோம். ஆனால் வேலைக்கு என்ன உத்தரவாதம்? மனம் குழம்பியது" என்று கூறியிருந்தார்.

    சினிமா வாய்ப்பு கிடைக்க ஒவ்வொரு நாளும் அவர் ராகவேந்திரரை மனமுருக வழிபட்டார். அந்த நம்பிக்கையில்தான் அவரது ஒவ்வொரு நாளும் கழிந்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு கால கட்டத்துக்கு பிறகு நண்பர்களில் பெரும்பாலானவர்கள் பிரிந்து சென்ற நிலையில் சிவாஜிராவுக்கு தவிப்பு அதிகமானது. அப்போது பெங்களூரில் இருந்து அவரது அண்ணன் நாகேஸ்வரராவ் தந்தி கொடுத்து இருந்தார். "உடனே புறப்பட்டு வா..." என்று அதில் கூறப்பட்டு இருந்தது. சிவாஜிராவ் அதிர்ச்சி, குழப்பத்துடன் பெங்களூருக்கு புறப்பட்டார்.

    பெங்களூரில் என்ன நடந்தது என்பதை நாளை மறுநாள் (அக்டோபர்) 2-ந்தேதி பார்க்கலாம்.

    • பேராசிரியர் கோபாலி இன்னொரு தகவலையும் சிவாஜிராவிடம் தெரிவித்தார்.
    • கல்லூரி முதல்வர் ராஜாராம் அவசர அவசரமாக வகுப்பறைக்குள் நுழைந்தார்.

    டைரக்டர் பாலச்சந்தர் திரைப்பட கல்லூரிக்கு வருகிறார் என்று பேராசிரியர் கோபாலி சொன்னதும் சிவாஜிராவ் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாலச்சந்தர் படங்களை பார்த்த நினைவுகள் அவருக்குள் அலை அலையாக வந்தன.

    பெங்களூரில் இருக்கும்போதே சிவாஜிராவ் பல தடவை டைரக்டர் பாலச்சந்தரின் படங்களை பார்த்திருக்கிறார். மேஜர் சந்திர காந்த் படத்தை பார்த்தபிறகு பாலச்சந்தரின் தீவிர ரசிகராக அவர் மாறி இருந்தார். அன்றுமுதல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாலச்சந்தர் படங்களை அவர் பார்க்க தவறுவது இல்லை.

    1973-ம் ஆண்டு சென்னைக்கு வந்த போது தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரில் அரங்கேற்றம் படத்தை பல தடவை பார்த்தார். அந்த படத்தை பார்த்த போது ஒரு காட்சியில் சிரித்ததும், இன்னொரு காட்சியில் அழுததும் சிவாஜிராவுக்கு நினைவுக்கு வந்தது. அரங்கேற்றம் படம் சிவாஜி ராவ் மனதுக்குள் மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் சிவாஜிராவ் உணர்ச்சி வசப்பட்டு அழுதிருக்கிறார். அந்த படத்தின் காட்சிகளை அவர் நண்பர்களிடம் பேசி விவாதித்தது உண்டு.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அரங்கேற்றம் படத்தை பார்த்த பிறகு பாலச்சந்தர் மீது சிவாஜிராவுக்கு மரியாதையும், ஒருவித ஈர்ப்பும் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் 1974-ம் ஆண்டு திரைப்பட கல்லூரி வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருந்தபோது தீபாவளி தினத்தன்று ரிலீசான பாலச்சந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தையும் சிவாஜிராவ் தி.நகர் கிருஷ்ண வேணி தியேட்டரில் பார்த்தார்.

    அந்த படம் சிவாஜிராவுக்கு மிகவும் பிடித்துப்போனது. எனவே அடுத்தடுத்து மேலும் 3 தடவை பார்த்தார். 4 தடவை பார்த்த பிறகும் அவருக்குள் மீண்டும் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருந்தது. அந்த படம் பாலச்சந்தரின் மிகப்பெரிய ரசிகனாக சிவாஜி ராவை மாற்றி இருந்தது.

    இந்த நிலையில் பாலச்சந்தர் திரைப்பட கல்லூரிக்கு வருகிறார் என்பதை அறிந்ததும், சிவாஜிராவ் மனம் றெக்கை கட்டிப் பறந்தது. நாளை பாலச்சந்தர் சார் வரும்போது எப்படியாவது அவரிடம் பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் சிவாஜிராவ் மனதுக்குள் தோன்றியது.

    அப்போது பேராசிரியர் கோபாலி இன்னொரு தகவலையும் சிவாஜிராவிடம் தெரிவித்தார். நாளை பாலச்சந்தர் தமிழ் வகுப்புக்கு மட்டுமின்றி கன்னட வகுப்புக்கும் வருவார். சிறப்புரை ஆற்றுவார். எனவே அவரது கருத்துக்களை நன்றாக புரிந்து கொள் என்று கூறினார்.

    இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு படபடப்பு ஏற்பட்டு விட்டது. பாலச்சந்தரிடம் பேசி அவரது மனதில் எப்படியாவது இடம் பிடித்துவிட வேண்டும் என்று மனது சொல்லியது. எனவே அவர் பேராசிரியர் கோபாலியிடம், 'சார் நாளை எனக்கு எப்படியாவது பாலசந்தருடன் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்கி தந்துவிடுங்கள். அவரது படத்தில் நான் நடிக்க வேண்டும்' என்றார்.

    அதற்கு பேராசிரியர் கோபாலி, 'நிச்சயம் ஏற்பாடு செய்கிறேன். தயாராக இரு' என்று கூறினார். இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு படபடப்பு மீண்டும் அதிகமாகியது. அதே உணர்வுடன் அவர் அருண் ஓட்டல் தங்கும் அறைக்கு திரும்பினார். அன்று இரவு முழுவதும் அவருக்கு தவிப்பாகவே இருந்தது.

    மறுநாள் காலை சிவாஜிராவ் மற்ற மாணவர்கள் அனைவருக்கும் முன்பாக எழுந்து சுறுசுறுப்பாக குளித்து முடித்து கல்லூரிக்கு புறப்பட்டார். மற்ற மாணவர்கள் வருவதற்கு முன்பே முதல் ஆளாக திரைப்பட கல்லூரி வகுப்புக்குள் வந்து அமர்ந்தார். பாலச்சந்தரை பார்க்கும்போது என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்ற கேள்விகள் சிவாஜிராவ் மனதுக்குள் வந்து வந்து சென்றன. அதற்கு தன்னை தயார் படுத்துவதற்காக சிவாஜி ராவ் ஒத்திகை பார்க்க முடிவு செய்தார்.

    உடனடியாக திரைப்படக் கல்லூரி பாத்ரூமுக்குள் சென்று ஒத்திகை பார்த்தார். அந்த அறைக்குள் கண்ணாடி முன் நின்று கொண்டு பாலச்சந்தரிடம் பேசுவதுபோல பேசி ஒத்திகை பார்த்து தன்னை தயார்படுத்திக் கொண்டார். என்றாலும் மனதுக்குள் ஏற்பட்ட ஒருவித பயம் அவருக்குள் நெகிழ்ச்சியாக இருந்து கொண்டிருந்தது. அதில் இருந்து மீண்டு சகஜ நிலைக்கு வருவதற்காக சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தார். புகையை ஸ்டைலாக ஊதித் தள்ளிய சிவாஜிராவுக்குள் சற்று அமைதியான தன்மை உருவானது. எந்தவித நெருக்கடியும் இல்லாமல் பாலச்சந்தர் சாரிடம் தைரியமாக பேசிவிட வேண்டும் என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டார். வாயைத் திறந்து பேசும்போது சிகரெட் புகை வாசம் வந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட்டது.

    உடனடியாக வாயைக் கொப்பளித்தார். மீண்டும் படபடப்பு ஏற்பட்டது. உடனடியாக இன்னொரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். இப்படி 3, 4 சிகரெட்டுகளை ஊதித் தள்ளினார். கடைசியில் நன்றாக வாய்க் கொப்பளித்து விட்டு வகுப்பறைக்குள் வந்து அமர்ந்தார். அடுத்த சில நிமிடங்களில் பாலச்சந்தர் வந்துவிட்டார் என்று தகவல் வந்தது. சிவாஜிராவுக்கு அவரையும் அறியாமல் வியர்த்துக் கொட்டியது. ராகவேந்திரரை நினைத்துக் கொண்டார். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள அவர் தீவிரமாக முயற்சி செய்தார். அப்போது கல்லூரி முதல்வர் ராஜாராம் அவசர அவசரமாக வகுப்பறைக்குள் நுழைந்தார்.

    'உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி சொல்லப்போகிறேன். டைரக்டர் பாலச்சந்தர் தமிழ் வகுப்பை முடித்துவிட்டு வந்துகொண்டிருக்கிறார். உங்கள் வகுப்பில் 20 நிமிடங்கள் பேச உள்ளார். அவர் பேசி முடித்தபிறகு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்வார்.

    சினிமா தொடர்பாக மட்டும் கேள்விகளை கேளுங்கள். அதிலும், உங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை கேளுங்கள். நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் உங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயன் உள்ள வகையில் இருக்க வேண்டும். தயாராக இருங்கள்' என்றார்.

    இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு சிலிர்த்தது. அடுத்த நிமிடம் பாலச்சந்தர் அந்த வகுப்பறைக்குள் நுழைந்தார். இதுவரை நாளிதழ்களில் போட்டோவில் மட்டுமே பாலச்சந்தரை சிவாஜிராவ் பார்த்திருக்கிறார். அன்றுதான் முதல்முதலாக மிக அருகில் நின்று பாலச்சந்தரை சிவாஜிராவ் பார்க்கிறார்.

    பாலச்சந்தரை பார்க்க பார்க்க சிவாஜிராவுக்கு பிரமிப்பாக இருந்தது. என்ன இவ்வளவு சின்ன பையன் போல் இருக்கிறார்? என்று சிவாஜிராவ் மனதுக்குள் நினைத்துக் கொண்டார். பாலச்சந்தர் சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்ததும் சிவாஜிராவ் கண்கள் ஆச்சரியத்தில் மின்னியது. பிரமிப்பில் தன்னையும் மறந்து பாலச்சந்தரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

    பாலச்சந்தர் தனது திரைப்பட அனுபவங்களையும், நடிப்புப் பற்றியும் பேசப் பேச சிவாஜிராவ் சிலைபோல மாறிப் போனார். அவரது மனம் பாலச்சந்தர் இயக்கிய பல்வேறு படங்களையும் நினைத்து பார்த்துக் கொண்டே இருந்தது. திரையுலகில் எவ்வளவு வித்தியாசமான ஒரு மனிதரை நாம் சந்தித்து இருக்கிறோம் என்று ஒருவித ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தார். அடுத்த சிறிது நேரத்தில் பாலச்சந்தரின் பேச்சு நிறைவு பெற்றது. ஒவ்வொரு மாணவராக அழைத்து பெயரை கேட்டார். சிவாஜிராவிடம் கேட்டபோது முதலில் அவருக்கு எதுவும் புரியவில்லை. அந்தளவுக்கு அன்றைய தினம் பாலச்சந்தரை பார்த்து அவர் பிரமிப்பில் மூழ்கிக் கிடந்தார்.

    தன்னிடம் ஏதோ கேட்கிறார் என்ற உணர்வு வந்ததும், சுதாரித்துக்கொண்டு என் பெயர் சிவாஜிராவ் என்றார். மாணவர்கள் அறிமுகம் முடிந்ததும், பாலச்சந்தரிடம் கேள்விகள் கேட்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒவ்வொரு மாணவராக கேள்விகளை கேட்டனர்.

    அப்போது சிவாஜிராவ் மனதுக்குள், 'நாம் கேட்கும் கேள்வி மிகவும் வித்தியாசமாக இருக்கவேண்டும். அந்த கேள்வியை கேட்டு பாலச்சந்தர் கவனம் நம்மீது திரும்ப வேண்டும்' என்று நினைத்தார்.

    அடுத்த சில நிமிடங்களில் சிவாஜிராவுக்கு கேள்வி கேட்கும் வாய்ப்பு வந்தது. சிவாஜிராவ் எழுந்து, 'ஒரு நடிகனிடம் அவனது நடிப்பைத் தவிர வேறு எதை நீங்கள் முக்கியமானதாகக் கருதி எதிர்பார்க்கிறீர்கள்?' என்று கேட்டார். இந்த கேள்வியை சிவாஜிராவ் தனக்கே உரிய பாணியில் மிக மிக வேகமாக கேட்டார். அவரது வாயில் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள் யாருக்குமே புரியவில்லை. பாலச்சந்தருக்கும் அவர் என்ன கேட்டார் என்பது தெரியவில்லை. உடனே அவர், 'சாரி, புரியவில்லை. மீண்டும் ஒரு தடவை சொல்லுங்கள்' என்றார். உடனே சிவாஜிராவ் தனது கேள்வியை நிறுத்தி நிதானமாக கேட்டார். இதைக் கேட்டதும், பாலச்சந்தருக்கு சிரிப்பு வந்துவிட்டது.

    ஏனெனில் சிவாஜிராவ் அந்த கேள்வி கேட்கும்போது கையை ஆட்டி கொஞ்சம் நடிப்பது போலவே பேசினார். அவரது அந்த நடிப்பில் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருப்பது போல நடந்துகொண்டார். அதனால்தான் அவரைப் பார்த்து பாலச்சந்தர் சிரித்தார். ஒரு நடிகன் ஸ்டுடியோவுக்கு வெளியே நடிக்கக் கூடாது' என்று பாலச்சந்தர் நச்சென பதில் அளித்தார். அவரது இந்த ஒருவரி பதிலில் பல அர்த்தங்கள் பொதிந்து இருந்தன. அந்த பதில் சிவாஜிராவுக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

    அத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றதாக கூறப்பட்டது. இதனால் பாலச்சந்தர் புறப்படத் தொடங்கினார். அப்போது திடீரென நின்ற அவர் சிவாஜிராவை பார்த்து, 'உன்னுடைய பெயர் என்ன?' என்று கேட்டார். அவர் சிவாஜிராவ் என்று பதில் அளித்தார். பாலச்சந்தர் வகுப்பறையில் இருந்து வெளியேறி தனது கார் நிற்கும் இடம் நோக்கி நடக்கத் தொடங்கினார். பேராசிரியர் கோபாலி அவரை வழியனுப்புவதற்காக உடன் சென்றார். அந்த நேரத்தை பயன் படுத்தி சிவாஜிராவ் பற்றி டைரக்டர் பாலச்சந்தரிடம் பேராசிரியர் கோபாலி ஏதோ சொன்னார்.

    அதைக் கேட்டதும் பாலச்சந்தருக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படியே திரும்பி தூரத்தில் நின்ற சிவாஜிராவை பார்த்தார்.

    அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நாளை பார்க்கலாம்.

    • அறம் என்பதே மனிதர்க்கு ஒழுக்க நிலை சார்ந்த ஒழுகலாறு ஆகும்.
    • செல்வத்தைச் சேர்த்து வைத்திருந்தால் மட்டும் சொர்க்கத்தின் வாசல் திறக்காது

    அறம் என்னும் தர்மத்திற்கு எல்லையும் அளவீடும் உண்டா? என்பதை அறிந்து கொள்வதற்கு ஆர்வத்தோடு காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    'அறம்' என்கிற சொல் அடுத்தவர்க்கு நாம் செய்ய நினைக்கிற நல்ல எண்ணங்களையும், செய்து உதவுகிற நல்ல செயல்களையும் அடிப்படையாகக் குறிப்பிட்டு நிற்பதாகும். அறம் என்பதே மனிதர்க்கு ஒழுக்க நிலை சார்ந்த ஒழுகலாறு ஆகும். நம்முடைய சிந்தனைகளிலும் சொற்களிலும் செயல்களிலும் நன்மை மட்டுமே நிரம்பி வழியுமானால் அதுவே அற வாழ்வு ஆகும். மாணிக்க வாசகர், தமது சிவபுராணத்தில், மானுட உடம்பு ஒவ்வொன்றும் 'அறம், பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டப்பட்டிருப்பதாகத்' தெரிவிக்கிறார்.

    அறம் மட்டுமே செய்து இந்தப் பிறவியில் புண்ணியம் சேர்க்கப் போகிறோமா? அல்லது பாவம் மட்டுமே செய்து நரகப் படுகுழியில் உழலப் போகிறோமா? என்பது, இந்த உடம்பை எப்படி நாம் பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என்கின்றனர் தத்துவ ஞானிகள்.

    'அறம் செய்ய விரும்பு' எனும் ஆத்திசூடி, அறம் செய்வதால் மனித சமுதாயத்தில், செய்பவருக்கும் நன்மையே விளையும்; செய்யப்படுவோருக்கும் உதவிகளே பெருகும்! என்பதை வலியுறுத்துகிறது. உலக மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது நிலைமைக்கு ஏற்ப, அடுத்தவர்தம் நன்மையைப் பேணும் அறத்தின் வழி செயல்பட்டால் ஒட்டுமொத்தச் சமூகமும் அறச் சமூகமாகப் பெருமை பெறும்.

    "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

    இழுக்கா இயன்றது அறம்"

    என்னும் திருக்குறளில் திருவள்ளுவர் அறம் என்ற சொல்லுக்கு அற்புதமான பொருள் விளக்கம் தருகிறார். கொடை என்றும், ஈகை என்றும், தர்மம் என்றும் பல்வேறு நிலைகளில் அறம் வலியுறுத்தப்பட்டாலும் வள்ளுவர் குறிப்பிடும் அற விளக்கம் வாழ்வியல் விழுமியங்களை அடியொற்றியதாகத் திகழுகிறது. மனிதன் முதலில் தனது மனத்தளவில் தூய்மையான அறமனிதனாகத் திகழ வேண்டும் என்கிறார் வள்ளுவர். அதற்கு அடிப்படையில், நம் நெஞ்சத்தளவில் மாசுகளாகக் குவிந்துள்ள பொறாமை, பேராசை, கோபம், இவற்றின் காரணமாக வெளிப்படுகின்ற கடுஞ்சொற்கள் ஆகிய நான்கும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்தவர் வாழும் வளமான வாழ்க்கையைக் கண்டு, அவர்களை மகிழ்ச்சியோடு வாழ்த்தாமல், அவர்கள்மீது பொறாமை கொள்வது, நம்மை அறம்பிறழ்ந்த செயல்களைச் செய்வதற்கு வழி திறந்து விடும். இயல்பான விருப்பம் தவிர்த்து, தகுதிக்குமீறிய பேராசை வயப்பட்டால், அறம் தவறிய செயல்களைச் செய்து மனம் குறுகிப்போக நேர்ந்து விடும். கடுங்கோபமும், அதனால் உதிர்க்கப்படுகிற கடுஞ்சொற்களும்கூட ஒருமனிதனை அறமற்ற மனிதனாக ஆக்கிவிடும்.

    "நல்லது செய்தால் நல்லது நடக்கும்! அல்லது செய்தால் தீயதே நடக்கும்!" என்பது இடம் காலம் தாண்டி எப்போதாவது நடக்கலாம் என்று இருந்துவிடக் கூடாது; 'முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்' என்பது வள்ளுவர் குறிப்பிடும் உடனடி விளைவியல் தத்துவம். இது பிறவிகள் கடந்து பின்விளைவாகலாம்!; அல்லது செய்தவரைச் சாராமல் அவர்தம் வழித்தோன்றல்களுக்கு நேரலாம்! என்பதெல்லாம் வள்ளுவத் தத்துவத்தில் கிடையாது.

    "பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின்

    தமக்குஇன்னா

    பிற்பகல் தாமே வரும்"

    நல்வினையோ தீவினையோ!, அறமோ பாவமோ! காலையில் செய்தால் மாலையில் வரும்! உடனடியாக வரும்! உறுதியாக வரும்! அதுவும் செய்தவருக்கே வரும்! என்பதே சிந்திக்க வேண்டிய செய்தி.

    ஒவ்வொரு மனிதனுக்கும் மரணத்திற்குப் பின் என்ன? என்பது பெரும் கேள்விக்குறி. வாழும் காலத்தில் நல்லபடியாக வாழ்ந்து அறம் செய்திருந்தால் சொர்க்கமும். பாவம் செய்திருந்தால் நரகமும் கிட்டும் என்பது காலகாலமாக இருந்துவரும் மதம்சார்ந்த நம்பிக்கை. 'சாவின் தருணங்களுக்குப் பின் நேரப்போவதைப் பற்றி இப்போதே எதற்குக் கவலைப்பட வேண்டும்? அப்போது பார்த்துக் கொள்ளலாம்!; இளமையை மனத்திற்குத் தோன்றியபடி செயல்பட்டு அனுபவிப்போம்!; அறம் தர்மம் செய்வதைப் பற்றியெல்லாம் வயதானபிறகு யோசித்துக் கொள்வோம்!. இளமையில் செய்த தீங்குகளையெல்லாம் முதுமை வந்த பிறகு நன்மைகள் செய்து நேர் செய்துகொள்வோம்!' என்று சிந்திக்கக் கூடிய அதிபுத்திசாலிகளும் நம்மிடையே பெரும்பான்மையில் இருக்கிறார்கள். இவர்களுக்காகவே திருவள்ளுவர் ஓர் எச்சரிக்கைத் திருக்குறளை எழுதியிருக்கிறார்.

    "அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

    பொன்றுங்கால் பொன்றாத் துணை"

    முதுமை வரும்போது பார்த்துக்கொள்வோம் என்று நினைக்காமல் இளைஞராக இருக்கும் காலத்திலேயே அறம் செய்துவிடவேண்டும்; அப்படி இளமையிலேயே செய்கிற அறச் செயல்கள்தாம் நாம் மறைகிற காலத்தில் நமக்கு மறையாப் புகழ்தந்து காக்கின்ற உற்ற துணையாக இருக்கும். ஆனால் நாம் அப்படியா இருக்கிறோம்?.

    ஓர் ஊரில் ஓர் இளைஞர்; அயராது உழைப்பதில் கெட்டிக்காரர். உழைப்பதில் மட்டுமல்ல; உழைத்துப் பொருளீட்டுவதிலும் கெட்டிக்காரர். பொருளீட்டுவது மட்டுமல்ல; ஈட்டிய பொருளை எதற்கும் செலவு செய்யாமல் பாதுகாத்து வைப்பதிலும் அதிபுத்திசாலித் தனமாய் நடந்து கொள்பவர். அவரைப் பொறுத்தவரை நிதி மேலாண்மையில் வரவு மட்டுமே!; செலவு என்பது கைவிளங்கி நடைபெறாது. அரிதான முறையில் தனக்கும் தன் குடும்பத்தினருக்குமான செலவைக்கூட வெகு கஞ்சத்தனமாக மேற்கொள்பவர். பொதுக் காரியங்களுக்கும், சமூக நன்மைக்கும் என ஒரு காசுகூடச் செலவு செய்யாத கருமி. அடுத்தவர், தனது உறவினராக இருந்தாலும் எதுவுமே உதவ மாட்டாத சுயநலவாதி.

    அந்த ஊருக்கு ஒருநாள் ஒரு துறவி வந்திருந்தார். ஊர்மக்கள் அனைவரும் திரளாக வந்திருந்து அவரை வரவேற்று உபசரனைகள் செய்தனர். பிறகு மக்களுக்கான அருளாசிகளை அறிவுரைகளாக துறவி வழங்கினார். ஊர்மக்களில் பெரும்பாலோர் அவர்களது வாழ்வியல் சிக்கல்களை அவரிடம் கூறி, விளக்கங்கள் கேட்டனர்; துறவியும் உரியவாறு வழிமுறைகளைக் கூறினார். இதைக் கேள்விப்பட்ட நமது கஞ்சமகாப் பிரபு இளைஞரும் துறவியைப் பார்க்க வந்திருந்தார். "இவ்வளவு காலமும் இடைவிடாது உழைத்துப், பல தலைமுறைகளுக்கான சொத்துக்களைச் சேர்த்து வைத்திருக்கிற எனக்கு, என் மரணத்திற்குப் பிறகு சொர்க்கம் கிட்டுமா? சொர்க்கத்திற்குப் போக நான் என்ன செய்ய வேண்டும்?"- துறவியிடம் கேட்டார்.

    "செல்வத்தைச் சேர்த்து வைத்திருந்தால் மட்டும் சொர்க்கத்தின் வாசல் திறக்காது!; சொர்க்கம் கிடைக்க வேண்டுமென்றால் புண்ணியத்தைச் சேர்த்து வைத்திருக்க வேண்டும்" என்றார் துறவி. " புண்ணியத்தைச் சேர்க்க என்ன செய்ய வேண்டும் சாமி?" ஒன்றும் தெரியாததுபோல் கேட்டார் இளைஞர். "அதற்கு அன்றாடம் அறம் செய்ய வேண்டும்!. காசோ பணமோ உணவோ பொருளோ எதுவாயினும் தேவைப்படுவோருக்குக் கொடுத்து உதவ வேண்டும்!. அறம் செய்யச் செய்யப் புண்ணியம் வளரும். புண்ணியம் வளர வளரச் சொர்க்கத்தின் வாசல் உன்னை வரவேற்கத் தாமாகவே திறந்து கொள்ளும்" என்றார் துறவி.

    அன்று முதல் துறவி சொன்னதையே வேத வாக்காகக் கொண்டு, அன்றாடம் அறம் செய்வது என்று முடிவு செய்தார் இளைஞர். இப்போதெல்லாம் வணிகக் கணக்குப் போல, ஈட்டுகிற வருவாயில் இத்தனை சதவீதம் அறம் செய்வதற்கு! என்று ஒதுக்கீடு செய்து தர்மம் செய்கிறார்கள். இளைஞர் அப்படியெல்லாம் கணக்குப் பார்க்காமல், நாள்தோறும் ஒருவருக்கு, அவர் ஏழையா? பணக்காரரா?, உண்மையிலேயே உதவி தேவைப்படுபவரா? இல்லையா? என்றெல்லாம் பார்க்காமல் ஒரு 'கைப்பிடி' அரிசியை தானமாக வழங்கத் தொடங்கினார். நமது சொர்க்க நுழைவுக்கான புண்ணியக் கணக்குத் தொடங்கிவிட்டதாக நம்பவும் தொடங்கினார். இப்படியே ஏறத்தாழ ஓராண்டு கழிந்தது.

    ஓராண்டிற்குப்பின், பழைய துறவி அந்த இளைஞர் வாழும் ஊருக்கு வருகை தந்தார். ஊர்மக்களோடு சேர்ந்து அந்த இளைஞரும் சென்று வரவேற்றார். துறவி எல்லாருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருக்கும்போது, நம்முடைய இளைஞர் குறுக்கே புகுந்து, " சாமி! நீங்கள் கூறியபடியே, இந்த ஓராண்டாக அறம் செய்து கொண்டிருக்கிறேன்! எனக்கு சொர்க்கம் நிச்சயம் தானே?" என்று கேட்டார். " அறமாக என்ன செய்து கொண்டு வருகிறீர்?" இளைஞரிடம் துறவி கேட்டார்." சாமி! நாள்தோறும் ஒரு கைப்பிடி அரிசியை யாராவது ஒருவருக்கு வழங்கி வருகிறேன்!" என்று பெருமையாக இளைஞர் சொன்னார்.

    ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த துறவி, இந்த இளைஞருக்கு மறுமொழி கூறாமல், அருகிலிருந்த மரத்தின் அடிப்பகுதியைத் தனது கைவிரல் நகம்கொண்டு கீறத் தொடங்கி விட்டார். பொறுமையிழந்த இளைஞர் துறவியைப்பார்த்து, " என்ன சாமி! எனக்கு பதில் சொல்லாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். துறவி, " நான் இந்த மரத்தின் அடிப்பகுதியை வெட்டி வீழ்த்துவதற்கு முயன்று கொண்டிருக்கிறேன்!. அப்படியே உன்னுடைய வினாவிற்கு விடையும் பகர்ந்து கொண்டிருக்கிறேன்!" என்றார்.

    "மரத்தை யாராவது விரல் நகம்கொண்டு வெட்டிவீழ்த்த முடியுமா?. அதற்குக் கோடரி, ரம்பம் போன்ற பெரும்பெரும் ஆயுதங்கள் கொண்டு பெரிய அளவில் அல்லவா முயல வேண்டும்?. விரல்நகம் எப்படிப் பயன்தரும்?" துறவியிடம் கேட்டார் இளைஞர். சிரித்துக்கொண்டே பேசினார் துறவி, " அதே போலத்தான் நீ அறம் செய்கிற முறையும்!. நீ செய்கிற அறம் பயனுள்ள வகையில் இருந்தால் தான், அது உரிய புண்ணியத்தை உன்னிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும். போனால் போகிறது என்று ஏனோதானோ என்று நீ ஒரு கைப்பிடிஅரிசியைத் தானமாகக் கொடுப்பது என்பது, கைவிரல் நகம்கொண்டு மரம் வெட்டக் கிளம்புவது போன்றதுதான்!: பயன் தராது"என்றார்.

    தன் தவறை உணர்ந்து கொண்டார் இளைஞர். ஆம்!. அறம் செய்வதற்கு அளவீடு என்பது கிடையாது; கடவுளோடோ அல்லது செய்யும் வணிகத்தோடோ பேரம் பேசிக்கொள்வதோ, லாபத்தின் சதவீதக் கணக்கைப் பங்கீடு செய்துகொள்வதோ உண்மையான அறம் கிடையாது. கிடைக்கிற செல்வத்தை, உண்மையான உதவி தேவைப்படுவோருக்குப், பிரதிபலன் கருதாமல் வழங்குவதே உண்மையான அறம். அதன் பலனாக, இந்த வாழ்விற்குப் பிறகு சொர்க்கம் கிடைக்கிறதோ இல்லையோ, வாழும் காலத்திலேயே நிலைத்த வளத்தையும், எல்லை கடந்த மகிழ்ச்சியையும் நாம் செய்யும் அறம் நமக்குக் கொண்டுவந்து சேர்க்கும். மன நிம்மதிக்கு மீறிய சொர்க்கமும் வேறு தேவையுண்டோ?!.

    தொடர்புக்கு 9443190098

    • பேராசிரியர் கோபாலி வீட்டில் தயாரிக்கும் ஊறுகாய் சிவாஜிராவுக்கு மிக மிக பிடித்துப் போனது.
    • சென்னையில் உள்ள பல்வேறு ஸ்டூடியோக்களுக்கு சிவாஜிராவ் மற்றும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    சிவாஜிராவ் மீது பேராசிரியர் கோபாலி காட்டிய பாசமும், அக்கறையும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போனது. 1974-ம் ஆண்டின் முற்பகுதியில் சிவாஜிராவின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. அவரது லட்சியம் எல்லாம் விரைவில் நடிகனாகி விடவேண்டும் என்ற இலக்கை நோக்கியே இருந்தது.

    அதற்கு பேராசிரியர் கோபாலி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்து இருந்தார். ஒரு கட்டத்தில் பேராசிரியர் கோபாலி தனது வீட்டில் இருந்து எடுத்து வரும் சாப்பாட்டை சிவாஜிராவை அழைத்து பகிர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். சிவாஜிராவும் வெட்கப்படாமல் வாங்கி வயிறுநிறைய சாப்பிடுவார்.

    சில சமயங்களில் பேராசிரியர் கோபாலிக்கு எதுவும் இருக்காது. அவர் சாப்பாட்டில் பெரும்பகுதியை சிவாஜிராவ் சாப்பிட்டு முடித்து இருப்பார். பிறகு மனம் கேட்காமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு சென்று தோசை வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார். இப்படி பல நாட்கள் நடந்துள்ளது.

    நாளடைவில் பேராசிரியர் கோபாலியின் வீட்டுக்கு சிவாஜிராவ் செல்ல தொடங்கினார். பேராசிரியரின் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு விளையாடி விட்டு வருவார். சில நாட்கள் பேராசிரியர் வீட்டிலேயே சாப்பிடவும் செய்வார்.

    பேராசிரியர் கோபாலி வீட்டில் தயாரிக்கும் ஊறுகாய் சிவாஜிராவுக்கு மிக மிக பிடித்துப் போனது. எனவே அந்த ஊறுகாயை சாப்பிட வேண்டும் என்பதற்காகவே அவர் பேராசிரியர் கோபாலி வீட்டுக்கு செல்வது உண்டு. அப்போது எல்லாம் உணவுடன் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை பேராசிரியர் கோபாலி சொல்லிக் கொண்டே இருப்பார்.

    அவரது தொடர்ச்சியான அறிவுரைகள் காரணமாக சிவாஜிராவிடம் தன்னம்பிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. கூச்சத்தை மூட்டைக்கட்டி வைத்து விட்டு தைரியமாக பேசவும், செயல்படவும் தொடங்கினார். இதனால் திரைப்படக் கல்லூரி மாணவர்களில் சிவாஜிராவ் தனித்துவமாக தெரியத் தொடங்கினார்.

    அந்தக் காலக்கட்டத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்காக நிறைய திரைப்படங்களை காட்டுவார்கள். அவற்றை எல்லாம் பார்க்கும் சிவாஜிராவ் மேற்கொண்டு தனியாகவும் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்து வந்தார். முதலில் அமைந்தகரை லட்சுமி தியேட்டரில் மட்டுமே படம் பார்த்து வந்த அவர் பிறகு சென்னையில் உள்ள மற்ற தியேட்டர்களுக்கும் செல்ல தொடங்கினார்.

    குறிப்பாக தி.நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டருக்கு அடிக்கடி சென்று படம் பார்த்தார். தமிழ் புரிகிறதோ? இல்லையோ? தமிழில் வெளியாகும் படங்கள் அனைத்தையும் முதல் நாளே பார்த்து விடும் பழக்கத்தை உருவாக்கி இருந்தார். அப்படித்தான் அவர் நிறைய சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து இருந்தார்.

    திரைப்படக் கல்லூரியில் அளிக்கப்பட்ட பல்வேறு பயிற்சிகளில் ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று பிரபல நடிகர்கள், நடிகைகள் நடிப்பதை நேரில் காட்டுவதும் ஒன்றாகும். அந்த வகையில் சென்னையில் உள்ள பல்வேறு ஸ்டூடியோக்களுக்கு சிவாஜிராவ் மற்றும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கு நடிகர்-நடிகைகள், துணை நடிகர்-நடிகைகள் எப்படி நடிக்கிறார்கள்? என்பதை சிவாஜிராவ் உன்னிப்பாக கவனித்து மனதுக்குள் பதிய வைத்துக் கொண்டார். 2-ம் ஆண்டு படித்தபோது நடிப்பது மட்டுமின்றி பின்னணி பேசுவது, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது, சண்டைக் காட்சிகளில் நடிப்பது, பாடல் காட்சிகளில் நடிப்பது, வசனம் பேசுவது என்று நிறைய பயிற்சிகள் கொடுத்தனர்.

    ஒவ்வொரு பயிற்சியையும் சிவாஜிராவ் ஆர்வமுடன் செய்தார். டான்ஸ் ஆடுவது மட்டும்தான் அவருக்கு சற்று அலர்ஜியாக இருந்தது. எனவே டான்ஸ் கிளாசுக்கு மட்டும் வராமல் தப்பிச் சென்று விடுவார்.

    என்றாலும் நடிப்பு பயிற்சியில் மட்டும் அவர் குறைவைத்ததே இல்லை. கன்னட வகுப்பில் படித்தாலும் அவருக்கு சென்னையில் இருந்ததாலோ என்னவோ தமிழ் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. எனவே தமிழ் மொழி வகுப்பில் சொல்லிக் கொடுப்பதையும் ஆர்வமுடன் கேட்டு தெரிந்துக் கொள்வார்.

    ஒரு கட்டத்தில் தமிழ் மாணவர்களுடன் போட்டி போடும் வகையில் சிவாஜிராவின் செயல்பாடுகள் அமைந்தன. தமிழ் வகுப்பில் புதிதாக ஏதாவது செய்து விட்டால் அதை கன்னட வகுப்பிலும் செய்ய வேண்டும் என்று நினைப்பார். கன்னட வகுப்பில் அந்த மாதிரி பயிற்சி கிடைக்காவிட்டால் தமிழ் வகுப்பில் என்ன சொல்லி கொடுத்தார்கள்? என்று தெரிந்துக் கொள்வார்.

    தமிழ் வகுப்பில் படித்து வந்த நடராஜ், சதீஷ் இருவரிடமும் மிகுந்த நட்புடன் இருந்தார். அவர்கள் இருவரிடமும் தமிழ் பாடப்பிரிவில் என்னென்ன நடிப்பு பயிற்சி சொல்லிக் கொடுத்தார்கள். எப்படி சொல்லிக் கொடுத்தார்கள் என்பதையெல்லாம் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார். தமிழ் மொழி பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் தாங்களாகவே நாடகங்கள் எழுதி நடித்து வந்தனர்.

    ஆனால் கன்னட மொழி மாணவர்கள் அத்தகைய பயிற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. நாடகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிவாஜிராவ் தமிழ்ப் பிரிவு மாணவர்கள் என்ன நாடகம் நடத்துகிறார்கள் என்பதை கேட்டு தெரிந்துக் கொள்வார். அந்த நாடகத்தில் என்னென்ன கேரக்டர்கள் வருகிறது என்பதையெல்லாம் கேட்பார்.

    அதில் ஏதாவது ஒரு கேரக்டர் அவருக்கு பிடித்து விட்டால் அந்த கேரக்டரை எழுதி தரச்சொல்லி வாங்கி படித்துப் பார்த்து அதை நடித்து ஒத்திகைப் பார்ப்பார். இப்படி சிவாஜிராவ் ஒவ்வொரு நாளும் தனது நடிப்பு திறமையை பட்டைத் தீட்டிக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு மற்றொரு பயிற்சி தொடங்கப்பட்டது. அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் புகழ் பெற்ற நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், படத்தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து வந்து அவர்களது அனுபவங்களை நீண்ட உரையாடல் போல பேச வைப்பார்கள்.

    அவர்களது அனுபவம் புதிதாக நடிப்பு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் கை கொடுக்கும் என்று நினைத்தனர். அந்த வகையில் நிறைய நடிகர்-நடிகைகள் திரைப்படக் கல்லூரிக்கு வந்து வகுப்பு நடத்தினார்கள்.

    அவர்கள் பேச்சை சிவாஜிராவ் உன்னிப்பாக கவனித்து தனது மனதுக்குள் பதிய வைத்துக் கொண்டார். டைரக்டர்களிடம் மிகுந்த பணிவு காட்டி பழகினார். அந்தக் கால கட்டத்தில் திரைப்படக் கல்லூரியில் எழுதப்படாத ஒரு விதி இருந்தது. அதாவது கல்லூரியில் படிக்கும் 2 ஆண்டுகளிலும் டைரக்டர்களிடம் சென்று படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்கக் கூடாது என்பதுதான் அந்த விதியாகும்.

    ஆனால் சிவாஜிராவ் அதையெல்லாம் கண்டு கொண்டதே இல்லை. சினிமா தயாரிக்கப்படும் இடங்களுக்கு எல்லாம் சென்று சினிமா தொடர்புடையவர்களை பார்த்து பேச தொடங்கினார். ஆனால் ஒருவர் கூட அவரை கண்டு கொண்டதே கிடையாது. என்றாலும் மனம் தளராமல் சிவாஜிராவ் முயற்சி செய்து கொண்டே இருந்தார்.

    ஒரு சமயம் ஸ்ரீதர் வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அவரது அறிவுரைகள் சிவாஜிராவை வியக்க வைத்தது. அதுபோல நடிகை பானுமதி ஒரு தடவை வந்து நீண்ட நேரம் வகுப்பு நடத்தினார். நடிப்பிலும், டைரக்ஷனிலும் எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அதுபோல நடிகை சவுகார்ஜானகி திரைப்படக் கல்லூரிக்கு வந்து விதவிதமாக எப்படி நடிக்கலாம் என்று சொல்லிக் கொடுத்தார்.

    இவையெல்லாம் சிவாஜிராவுக்குள் தன்னம்பிக்கையை மேலும் மேலும் அதிகரிக்க செய்தது. ஒரு நடிகனாகவே மாறி விட்டது போன்று சிவாஜிராவ் உணரத் தொடங்கினார். அருண் ஓட்டல் அறைகளிலும், திரைப்படக் கல்லூரி அறைகளிலும் அவர் எப்போதும் வித்தியாசமாக ஸ்டைலை உருவாக்கி நடித்து காட்டிக் கொண்டே இருந்தார்.

    அதிலும் எங்காவது கண்ணாடியை பார்த்து விட்டால் ஒருதடவை அதன் முன்பு நின்று ஸ்டைல் காட்டாமல் போக மாட்டார். சாலையோர ஜவுளி கடை கண்ணாடி முன்பு நின்று கூட அவர் ஒரு தடவை ஸ்டைலாக நடித்து பார்த்தார் என்றால் அவரது மனதுக்குள் எந்த அளவுக்கு நடிப்பு மீது வெறி இருந்து இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

    இந்த நிலையில் திரைப்படக் கல்லூரியின் 2-ம் ஆண்டு வகுப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. இன்னும் 3 மாதங்களில் திரைப்படக் கல்லூரி வாழ்க்கை முடிந்து விடும் என்று தெரிய வந்ததும் சிவாஜிராவ் மனதுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

    திரைப்படக் கல்லூரி படிப்பு முடிந்ததும் தனக்கு சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்று அவர் மனதுக்குள் கேள்விக்குறிகள் கடல் அலைபோல வந்து கொண்டே இருந்தன. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் பெங்களூருக்கு திரும்பி போய் விட வேண்டியது இருக்குமோ என்று நினைத்த போது அவரது மனது கடும் பீதிக்குள்ளானது.

    கல்லூரி படிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்க... நெருங்க... சிவாஜிராவ் மனதுக்குள் பரபரப்பு மேலும் அதிகரித்தது. கல்லூரி முதல்வர் ராஜாராம் மற்றும் பேராசிரியர்கள் சிவாஜிராவிடம் எதிர்கால வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி வந்தனர்.

    இந்த நிலையில் திரைப்படக் கல்லூரியின் கடைசி மாதத்தில் சிவாஜிராவின் வாழ்க்கைைய மாற்றப்போகும் ஒரு முக்கிய சம்பவம் நடந்தது. அன்று சிவாஜிராவிடம் பேராசிரியர் கோபாலி கூறுகையில், "டேய் நாளைக்கு டைரக்டர் பாலச்சந்தர் வரப்போகிறார். நிறைய விஷயங்கள் சொல்வார். கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்" என்றார். டைரக்டர் பாலச்சந்தர் வருகிறார் என்றதும் சிவாஜிராவ் முகம் ஆயிரம் சூரியன்கள் கொண்ட பிரகாசம்போல மாறியது. பாலச்சந்தர் கவனத்தை தன் பக்கம் எப்படி திரும்ப செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

    சிவாஜிராவ் என்ன பேசினார்? எப்படி டைரக்டர் பாலச்சந்தர் மனதில் இடம் பிடித்தார் என்பதை திங்கட்கிழமை (29-ந்தேதி) பார்க்கலாம்.

    • முதலாவதாக நாம் போடும் முதலுக்கு மோசம் வராமல் இருக்குமா என்பதை உறுதி செய்யவேண்டும்.
    • முதலீட்டின் கால அளவைத் தீர்மானிக்க வேண்டும்.

    மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்தில் அமர பல படிகளைத் தாண்டி வருகிறோம். பர்சனல் பைனான்சில், முதலீடுகளை கடன் சார்ந்தவை, பங்கு சார்ந்தவை என இரண்டாகப் பிரிக்கலாம் என்று பார்த்தோம். கடன் சார்ந்த முதலீடுகளில் போஸ்ட் ஆ பீஸ் திட்டங்கள், பேங்க் சேமிப்புத் திட்டங்கள் ஆகியவை பற்றியும் பார்த்தோம். அடுத்து வருவது பாண்ட்ஸ் எனப்படும் பத்திரங்கள். பங்குச் சந்தை வருவதற்கு முன்பே பத்திரங்கள் பிரபலம் அடைந்திருந்தன.

    பத்திரங்கள் என்றால் என்ன? கடன் வாங்குபவர்கள், கடன் தருவோரின் பணத்தை என்றைக்கு எவ்வளவு வட்டியுடன் திருப்பித் தரமுடியும் என்று எழுத்துப்பூர்வமாக தரும் உத்தரவாதமே பத்திரங்கள் எனப்படும். பேங்க் எப்.டி. ரசீது கூட ஒரு பத்திரம்தான்.

    எனக்கு நஷ்டமே வரக்கூடாது என்று உறுதியாக எண்ணுபவர்கள், நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள இயலாத சீனியர் சிட்டிசன்கள், குறிப்பிட்ட இடைவெளியில் வருமானம் வந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற தேவை உள்ளவர்கள் ஆகியோருக்கு பத்திரங்கள் கைகொடுக்கும்.

    பத்திரங்களில் அரசுப் பத்திரங்கள், கம்பெனிகள் வெளியிடும் பத்திரங்கள் என்ற இரு வகை உண்டு. ரிஸ்க் குறைந்தால், வருமானமும் குறையும் என்னும் சூத்திரத்தின்படி கம்பெனிகள் வெளியிடும் பத்திரங்களை விட அரசுப் பத்திரங்களில் ரிஸ்க்கும் குறைவு; வருமானமும் குறைவு.

    அரசுப் பத்திரங்கள்

    "அரைக் காசென்றாலும் அரண்மனைக் காசு" என்பார்கள். அதிலுள்ள நம்பகத்தன்மை அப்படி. மத்திய, மாநில அரசுகள் மற்றும் என்.ஹெச்.ஏ.ஐ., ஹட்கோ என்.டி.பி.சி. போன்ற அரசு நிறுவனங்கள், நாட்டின் உள்கட்டமைப்பு செலவுகளுக்காகவும், வளர்ச்சித் தேவைகளுக்காகவும் பத்திரங்கள் வெளியிடுகின்றன. இவற்றின் முதலீட்டுக் காலம் ஐந்து முதல் நாற்பது வருடங்கள் வரை. முன்பெல்லாம் பெரிய கம்பெனிகளுக்கும், வங்கிகளுக்கும் மட்டுமே இவற்றில் முதலீடு செய்யும் பாக்கியம் கிட்டும். தற்போது சிறு முதலீட்டாளர்களும், கோஆப்பரேடிவ் பேங்குகளும் கூட இவற்றில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    தற்போது 8.05 சதவீதம் வட்டி தரும் ஆர்பிஐ ப்ளோட்டிங் ரேட் ஏழு வருட சேவிங்ஸ் பத்திரங்கள் நடப்பில் இருக்கின்றன. குறைந்த பட்ச முதலீடு ரூ. 1000/. உச்ச வரம்பு கிடையாது. இவற்றின் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றம் அடையும் வாய்ப்பு உண்டு. ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 தேதிகளில் வட்டி வழங்கப்படும். எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எப்.சி. போன்ற வங்கிகள் மூலமும், போஸ்ட் ஆ பீஸ் மூலமும் இந்தப் பத்திரங்களை வாங்க முடியும். அல்லது நேரடியாக ஆர்.பி.ஐ. ரீடெய்ல் டைரக்ட் போர்டல் மூலமும் வாங்கலாம்.

    சுந்தரி ஜகதீசன்


     

    சீரோ கூப்பன் பத்திரங்களில் வட்டி விகிதம் குறிப்பிடப்படாது. முகமதிப்பு மட்டுமே குறிப்பிடப்படும். உதாரணமாக ஆயிரம் ரூபாய் முகமதிப்புள்ள பத்திரங்கள் ரூ.800/க்கு விற்கப்படலாம். இவற்றுக்கு அவ்வப்போது வட்டி வழங்கப்படாது. முதிர்வு காலத்தில் முகமதிப்பான ஆயிரம் ரூபாய் தரப்படும்.

    ஆகவே அவ்வப்போது வட்டி தேவைப்படுவோருக்கு இது உதவாது.

    டேக்ஸ் ப்ரீ பத்திரங்களின் வட்டிக்கு வரி கிடையாது. இன்றைய தேதியில் 6 சதவீதம் வட்டி (வரி இல்லாதது) கிடைப்பது வங்கி வட்டி விகிதத்தை விடக் கவர்ச்சியானது அல்லவா? ஆனால் 2016க்குப் பின் இவை புதிதாக வெளியிடப்படவில்லை. அதற்கு முந்தைய பத்திரங்கள் சந்தையில் சற்று அதிக விலைக்குக் கிடைக்கின்றன.

    மத்திய அரசுப் பத்திரங்களின் முதிர்வுகாலம் நீண்டது; இடையில் அவசரத் தேவைக்காக க்ளோஸ் செய்ய முடியாது; தேவையென்றால் சந்தையில்தான் விற்கமுடியும் என்ற நெகடிவ் பாயின்ட்டாககுறைபாடு இருந்தாலும், அரசு பத்திரங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இவற்றில் முதலீடு செய்யலாம்.

    மாநில அரசுப் பத்திரங்கள்:

    தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஒரு என்.பி.எப்.சி. நிறுவனம். இது வெளியிடும் பாண்டுகளில் பத்திரங்கள் பிக்சட் டிபாசிட் வகையைச் சார்ந்தவை. மாநில அரசின் ஆதரவுடன் இந்தப் பத்திரங்கள் வெளியிடப்படுவதால் ஓரளவு உத்தரவாதம் உள்ளது என்று நம்பலாம். இவற்றில் முதலீட்டுக் காலம் 1 வருடம் முதல் 5 வருடங்கள் வரை. வட்டி விகிதம் 8.10 சதவீதம் முதல் 9.31 சதவீதம் வரை.

    வட்டியை குறிப்பிட்ட இடைவெளிகளில் வாங்கிக் கொள்ளலாம்; அல்லது முதல் + வட்டி என்று முதிர்வுகாலத்தில் மொத்தமாகவும் வாங்கிக் கொள்ளலாம். மினிமம் முதலீடு 50000 ரூபாய். பொர்ம்ரூ. ஒரு லட்சம். 15 ஜி அல்லது ஹெச் படிவம் கொடுத்தாசமர்ப்பித்தால் மூலவரிப்பிடித்தம் (Tax Deducteடிat Source) இருக்காது.

    முதல் போட்டு மூன்று மாதங்களுக்கு அப்புறம் ப்ரீமச்சூர் க்ளோஷர் அனுமதி பண்ணுவாங்க. ஆனால் பெனால்டி அதிகம். 2-3 பர்சன்ட். இந்த பாண்டுகளை மூன்று மாதங்களுக்குப் பிறகு அவசரத் தேவைக்கு க்ளோஸ் செய்யலாம். ஆனால் 2 சதவீதம் - 3 சதவீதம் அளவு பெனால்ட்டி இருக்கும். கடன் தேவை என்றாலும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்கிக்கலாம். என்.ஆர்.ஐ.கள் கூட இதில் முதலீடு செய்ய முடியும். ஆனால் முதிர்வுத் தொகையை வேற்று நாடுகளுக்கு அனுப்ப முடியாது. வங்கியின் விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்கும் இந்த முதலீடு, ஓரளவு பாதுகாப்புடன் நல்ல வருமானமும் தரும் என்பதால் பரிசீலிக்கத்தகுந்த ஒன்று.

    பெருநகர கார்ப்பரேஷன்கள் கூட குடிநீர் வழங்கல், தெருப் பராமரிப்பு, துப்புரவுப் பணிகள் போன்ற பணிகளுக்காக பத்திரங்கள் வெளியிடுகின்றன. சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், இந்தூர் போன்ற நகர முனிசிபாலிட்டிகள் இது போன்ற பத்திரங்களை வழங்கியுள்ளன. திருப்பூர், திருச்சி, கோவை போன்ற நகரங்களும் பத்திரங்கள் வெளியிட அனுமதி வேண்டிக் காத்திருக்கின்றன.

    கார்ப்பரேட் பாண்டுகள்:

    உற்பத்தி நிறுவனங்கள், பொருளாதார நிறுவனங்கள், என்.பி.எப்.சி. போன்ற எந்த நிறுவனமானாலும், ரூ. 100 கோடிக்கு மேல் நிகரமதிப்பு இருந்தால் சந்தையில் பத்திரங்களை விற்று, முதல் திரட்டலாம். பத்திரங்கள் வெளியிடும் முன்பு இக்ரா, கேர், க்ரிசில் போன்ற ரேட்டிங் நிறுவனங்களிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, ஒரு தரநிர்ணய சான்றிதழைப் பெற வேண்டும். அந்த நிறுவனங்கள் கம்பெனியின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து, கம்பெனியின் பிசினஸ் ரிஸ்க், பொருளாதார ரிஸ்க், மேலாண்மைத்தரம், பணத்தை திருப்பித் தரும் வலிமை இவற்றைப் பொறுத்து ஏஏஏ முதல் டிவரை தரச்சான்றிதழ் அளிக்கின்றன.

    ஏஏஏ நிறுவனங்களில் குறைந்த வட்டியும், டிநிறுவனங்களில் அதிக வட்டியும் கிடைக்கும். Aக்குக் குறைந்த கம்பெனிகளில் முதலீடு செய்வது ரிஸ்க்தான். வட்டி வருமானம் ஆண்டுக்கு ரூ. ஐயாயிரத்தை தாண்டுமெனில், 15 ஜி/ஹெச் படிவங்கள் சமர்ப்பித்து மூலவரிப்பிடித்தத்தை தவிர்க்கலாம். அவசரமாகப் பணம் தேவைப்பட்டால், சந்தையில் இவற்றை விற்க இயலும்.

    சில கம்பெனிகள் அவசரம் என்றால் முதிர்வு காலத்துக்கு முன்பு பணத்தைப் பெற அனுமதித்தாலும், பெனால்ட்டி விதிக்கும். ஆகவே நிறுவனப் பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்புவோர், தங்களால் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய இயலுமா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

    கம்பெனி பாண்டுகளில் முதலீடு செய்யும்போது பார்க்கவேண்டிய விஷயங்கள்:

    முதலாவதாக நாம் போடும் முதலுக்கு மோசம் வராமல் இருக்குமா என்பதை உறுதி செய்யவேண்டும். நிறுவனத்துக்கு ரேட்டிங் நிறுவனங்கள் கொடுத்த ரேட்டிங், ஒற்றை Aக்குக் கீழே இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பல்ல. முதலீடு செய்த பிறகும் அவ்வப்போது ரேட்டிங்கை செக் செய்வதுடன், சந்தையில் நிறுவனம் குறித்து ஏதாவது எதிர்மறைத் தகவல்கள் வருகிறதா என்றும் கவனிக்க வேண்டும். நிறுவனம் நஷ்டத்தை நோக்கிச் செல்வதாகத் தெரிந்தால் நம் முதலீட்டை வெளியே எடுத்துவிடுவது நல்லது.

    இரண்டாவதாக, நிறுவனம் தரும் வட்டி விகிதம் சந்தையின் போக்குக்கு ஒத்து வருகிறதா என்று பார்க்க வேண்டும். மற்ற நிறுவனங்கள் 8 சதவீதம் வட்டி தரும்போது ஒரு நிறுவனம் மட்டும் 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறினால், அது நமக்காக விரிக்கப்பட்ட வலை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

    பொதுவாக சீனியர் சிடிசன்களுக்கு 0.25 சதவீதம் பர்சென்ட், ஆன்லைனில் முதலீடு செய்தால் ஒரு 0.24 சதவீதம், ஒரு முறை செய்த முதலீட்டை அதே நிறுவனத்திலேயே புதுப்பித்தால் அதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு 0.10 சதவீதம் என்று கிட்டத்தட்ட பேங்க் வட்டியை விட 2 -3 பர்சென்ட் அதிக வருமானம் கிடைக்கும். வங்கிகள் முழுகினால் நம் டெபாசிட்டுக்கு ரூ. ஐந்து லட்சம் வரையிலான காப்பீடு உண்டு. அதுபோன்ற காப்பீடு இந்தப் பத்திரங்களுக்கு இல்லை. ஆகவே பேங்கை விட ரிஸ்க்கும் அதிகம்; வருமானமும் அதிகம்.

    மூன்றாவதாக, ஒரு வருடம் / மூன்று வருடம் / ஐந்து வருடம்/ பத்து வருடம் என்று தரப்படும் கால அளவுகளில் எதைத் தேர்வு செய்யலாம் என்று தீர ஆலோசிக்கவேண்டும். ஏனெனில், இந்த பத்திரங்களில் செய்த முதலீட்டை முதிர்ச்சிக்கு முன்பாக எடுத்தால் பெனால்டி அதிகம். ஆகவே நம்மால் எவ்வளவு வருடங்கள் அந்தப் பணத்தை அவசரத் தேவைக்குத் தொடாமல் இருக்கமுடியும் என்பதை முதலில் தெரிந்துகொண்டு, பின்னர்தான் முதலீட்டின் கால அளவைத் தீர்மானிக்க வேண்டும்.

    டாட்டா ஸ்டீல், டாட்டா ஹௌசிங் கேபிடல், ஹெச்.டி.எப்.சி., எல் அண்ட் டி பைனான்ஸ் போன்ற ஆரோக்கியமான நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களில், நம் மொத்த முதலீட்டில் பத்து சதவிகித அளவு முதலீடு செய்தால் பாதுகாப்புக்குப் பாதுகாப்பு; வருமானத்திற்கு வருமானம்.

    உங்களிடம் ஏற்கெனவே அரசு / நிறுவனப்பத்திரங்கள் உள்ளனவா? அவற்றில் கிடைக்கும் வட்டி விகிதங்கள் என்னென்ன?

    • பிரபாவதி கல்லூரிக்கு செல்லும்போது சிவாஜிராவ் பணிபுரியும் பஸ்சில் மட்டுமே ஏறுவார்.
    • சிவாஜிராவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவரது நண்பர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

    சிவாஜிராவுக்கு இளம்வயதில் கிடைத்த தோழி பிரபாவதி. இவர் கல்லூரியில் படித்து வந்ததையும் இவர்தான் சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்புக்கான பயிற்சி வகுப்புகள் 1973-ம் ஆண்டு தொடங்க இருப்பதையும் சிவாஜிராவிடம் தெரிவித்தார் என்பதையும் ஏற்கனவே நாம் பார்த்து இருக்கிறோம்.

    தோழி பிரபாவதியுடன் சிவாஜிராவ் கொண்டிருந்த நட்பு மிக மிக ஆத்மார்த்தமானது. வெளியில் யாருக்குமே தெரியாதது. சிவாஜிராவுடன் பஸ்சில் எப்போதும் டிரைவராக பயணித்த ராஜ்பகதூருக்கு கூட அவர்களது நட்பின் ஆழம் தெரியாமலேயே இருந்தது.

    பிரபாவதி கல்லூரிக்கு செல்லும்போது சிவாஜிராவ் பணிபுரியும் பஸ்சில் மட்டுமே ஏறுவார். சிவாஜிராவ் செய்யும் ஸ்டைல்களை பார்த்துக் கொண்டே இருப்பார். சிவாஜிராவ் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் வேகத்தை கண்டு ரசிப்பார். பஸ்சை நிறுத்தவும், பஸ்சை புறப்பட செய்யவும் சிவாஜிராவ் கொடுக்கும் விசில்களை கூட அவர் ரசித்தது உண்டு.

    அது மட்டுமல்ல பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்று விட்டு புறப்படும்போது சிவாஜிராவ் ஸ்டைலாக ஓடி வந்து ஏறும் காட்சிகளையும் பார்த்துக் கொண்டே இருப்பார். சில சமயங்களில் சிவாஜிராவ் ஸ்டைலாக புகை பிடிப்பதையும் பிரபாவதி கண்கொட்டாமல் பார்த்தது உண்டு. கல்லூரி மாணவியான பிரபாவதி மீது சிவாஜிராவ் இனம்புரியாத பாசத்துடன் பழகி வந்தார். சென்னையில் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்த பிறகு அடிக்கடி பிரபாவதியை நினைத்துப் பார்த்துக் கொள்வார். பெங்களூருக்கு திரும்பி வரும்போதெல்லாம் பிரபாவதியை மீண்டும் பார்த்து விடமாட்டோமா? என்று நினைப்பார். ஆனால் சூழ்நிலைகள் காரணமாக அவரால் பார்க்க முடியாமல் போனது.

    இந்த நிலையில்தான் முதல் ஆண்டு வகுப்பு முடிந்து நீண்டநாள் விடுமுறையுடன் பெங்களூருக்கு சிவாஜிராவ் வந்து இருந்தார். எனவே இந்த தடவை எப்படியாவது பிரபாவதியை பார்த்து விடவேண்டும் என்று அவர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். நண்பரை ஏற்றி பின்னால் வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் பிரபாவதியை தேடி சென்றார். பிரபாவதி வீட்டு முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்றார். ஆனால் பிரபாவதி குடும்பத்தினர் அந்த வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டனர் என்ற தகவல் மட்டுமே அவருக்கு தெரிய வந்தது. பிரபாவதி எங்கே போனார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை.

    இதனால் சிவாஜிராவ் மிகவும் வேதனைப்பட்டார். தன்னை வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திய தேவதையாக பிரபாவதியை நினைத்தார். அவரை பார்க்க முடியாமல் போனதை நீண்ட நாட்களுக்கு சிவாஜிராவால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. நாட்கள் செல்ல... செல்லதான் பிரபாவதியின் நினைவுகள் சிவாஜிராவ் மனதில் இருந்து குறைந்தன.

    1974-ம் ஆண்டு சிவாஜிராவ் மீண்டும் பெங்களூரில் இருந்து சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் 2-ம் ஆண்டு வகுப்பை தொடங்கினார். இனி பணம் விஷயத்தில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்ற திட்டத்துடன் அவர் படிப்பை தொடங்க ஆரம்பித்தார். அவரிடம் முன்பை விட தன் நடிப்பு மீதான தன்னம்பிக்கை அதிகரித்து இருந்தது.

    அவரது சிந்தனையெல்லாம் நாம் கருப்பாக இருக்கிறோமே எனவே நமக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது. எனவே வில்லன் வேடங்களை கேட்டு வாங்க வேண்டும் என்றே இருந்தது. அதை பிரதிபலிக்கும் வகையில் அவர் அடிக்கடி தன் நண்பர்களிடம் பேசும் போதெல்லாம் நான் வில்லனாக நடித்து புகழ் பெறுவேன் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

    அதற்காகவே அவர் அருண் ஓட்டல் அறையிலும், கல்லூரி வளாகத்தில் இருந்த அறையிலும் கண்ணாடிகளில் தன்னைப் பார்க்கும் போதெல்லாம் விதவிதமாக ஸ்டைல் செய்து பார்த்துக் கொள்வார். வில்லனாக இருப்பவர்கள் எப்படி ஸ்டைலாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒத்திகை பார்த்தார். இது அவருக்கு நடிப்பில் இருந்த தீராத ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

    ஆனால் அவரிடம் இருந்த ஒரே பலவீனம் நாம் கருப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் மட்டும்தான். அவரது அந்த எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்து வீசி விட்டு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் திரைப்படக் கல்லூரிக்கு நடிப்பு பயிற்சி சொல்லி கொடுக்க ஆசிரியராக கோபாலி வந்தார். இவர்தான் திரைப்படக் கல்லூரியில் சிவாஜிராவின் வாழ்க்கையை அப்படியே மாற்றி அமைத்தார்.

    திரைப்படக் கல்லூரியில் இவர் துணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்து இருந்தார். நடிப்பு தொடர்பாக அதிக அனுபவம் இவருக்கு இருந்தது. நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் நடிப்பு கலை பற்றிய பயிற்சியை இவர் பெற்று இருந்தார். இதனால் நடிப்பின் நுணுக்கங்கள் இவருக்குள் நிறைந்து இருந்தது.

    எந்த சூழ்நிலையில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்லும் வகையில் இவரது பயிற்சிகள் இருந்தன. 1974-ம் ஆண்டு திரைப்படக் கல்லூரியில் படித்த 36 பேருக்கும் இவரது பயிற்சி வகுப்புகள் மிகவும் கை கொடுத்தன.

    குறிப்பாக சிவாஜிராவுக்கு பேராசிரியர் கோபாலியின் வகுப்புகள் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தன. இதனால் பேராசிரியர் கோபாலியை சிவாஜிராவ் மிகவும் மரியாதையுடன் பார்த்தார். பேராசிரியர் கோபாலிக்கும் சிவாஜிராவை மிகவும் பிடித்துப் போனது. அதற்கு காரணம் சிவாஜிராவிடம் இருந்த நடிப்பு ஆர்வம்தான்.

    ஒரு தடவை பேராசிரியர் கோபாலி நடிப்பு பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஒரு தேர்வு நடத்தினார். 36 மாணவர்களிடம் உள்ள திறமைகளை முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் அவர் அந்த தேர்வை வடிவமைத்து இருந்தார். அதன்படி 36 மாணவர்களும் விமானத்தில் செல்கிறீர்கள். திடீரென அந்த விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து விடுகிறது. அதிர்ஷ்டவசமாக 36 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்புகிறார்கள். இதை நீங்கள் எப்படி நடித்து காட்டுவீர்கள் என்று தேர்வை வைத்தார்.

    இந்த கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவரும் மேடைக்கு அழைக்கப்பட்டு நடித்து காட்டும்படி சொல்லப்பட்டனர். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்கள். விமானத்தில் பயணம் செய்வதை நடித்து காட்ட பல மாணவர்களும் திணறினார்கள்.

    சிவாஜிராவ் முறை வந்தது. அவரை விமானத்துக்குள் இருக்கும் பயணி போல நடித்துக் காட்டும்படி பேராசிரியர் கோபாலி உத்தரவிட்டார். அடுத்த நிமிடமே சிவாஜிராவ் விமான பயணியை கற்பனையாக மனதுக்குள் நினைத்துக் கொண்டு அதை அப்படியே நடித்துக் காண்பித்தார். அவரது நடிப்பு பேராசிரியர் கோபாலிக்கு மிகவும் பிடித்துப் போனது.

    அடுத்து விமானத்தை ஓட்டுபவராக நடித்து காட்டச் சொன்னார். சிவாஜிராவ் அதையும் நடித்துக் காட்டினார். அடுத்து விமானம் விபத்துக்குள்ளாகி உயிர் தப்பும் காட்சிகளையும் நடித்து காட்டச் சொன்னார்கள். சிவாஜிராவ் அதையும் துடிப்போடு நடித்து காட்டினார். அவரது யதார்த்தமான நடிப்பில் பேராசிரியர் கோபாலி மனதை பறிகொடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

    அன்று முதல் சிவாஜிராவை பேராசிரியர் கோபாலிக்கும் பிடித்துப் போனது. மற்ற மாணவர்களை விட சிவாஜிராவிடம் கோபாலி அதிக அக்கறை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். குறிப்பாக சிவாஜிராவின் நடிப்பு திறமையை மேம்படுத்தும் வகையில் அறிவுரைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்.

    பேராசிரியர் கோபாலியை பொறுத்தவரை அவர் மாணவர்களை நடத்திய விதம் வித்தியாசமானது. தன்னை மெத்த படித்தவர் என்ற ரகத்தில் அவர் நடந்துக் கொண்டதே இல்லை. மாணவர்களிடம் நண்பனைப் போலவே பழகினார். மாணவர்களுக்கு அனைத்து விதமான சுதந்திரத்தையும் அவர் கொடுத்து இருந்தார். ஒரு போதும் தனக்கு இருந்த அதிகாரத்தை மாணவர்கள் மீது திணித்ததே இல்லை.

    இன்னும் சொல்லப்போனால் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடக்கூட அவர் தயங்கியது இல்லை. இது சிவாஜிராவுக்கு மிக மிக பிடித்துப் போனது. பெங்களூரில் கிடைக்காத புதுமையான ஒரு பாசம் சென்னை திரைப்படக் கல்லூரியில் தனக்கு கிடைத்து இருப்பதாக உணர்ந்தார். எனவே அவர் பேராசிரியர் கோபாலியிடம் மனம் விட்டு பேசத் தொடங்கினார்.

    இதனால் சிவாஜிராவை ஒவ்வொரு விஷயத்திலும் பேராசிரியர் கோபாலி திருத்தத் தொடங்கினார். முதலில் அவர் சிவாஜிராவின் உடல் அமைப்பை சுட்டிக்காட்டினார். மெல்லிய கால்கள் அதே சமயத்தில் திடகாத்திரமான உடல் அமைப்பை மேலும் மெருகு ஏற்ற வேண்டும் என்றார். குறிப்பாக அந்த இளம் வயதில் சிவாஜிராவிடம் காணப்பட்ட தொப்பையை பார்த்து கண்டித்தார்.

    குறிப்பிட்ட காலத்துக்குள் தொப்பை இல்லாமல் வாட்டசாட்டமான இளைஞராக மாற வேண்டும் என்று ஒரு தந்தையை போல சொல்லிக் கொடுத்தார். அதை ஏற்றுக் கொண்டு சிவாஜிராவ் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தார். பேராசிரியர் கோபாலி நிர்ணயித்த நாளுக்கு முன்பே அவர் தொப்பையை முழுமையாக குறைத்து விட்டார். சிவாஜிராவின் உருவ அமைப்பே மாறி இருந்தது.

    சிவாஜிராவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவரது நண்பர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. இதைத் தொடர்ந்து பேராசிரியர் கோபாலி சிவாஜிராவின் பழக்க வழக்கங்களையும் மாற்றினார். மற்றவர்களிடம் பேசும்போது வேகமாக பேசாமல் பொறுமையாக, நிதானமாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

    அந்தக் காலக்கட்டத்தில் சிவாஜிராவிடம் ஒரு பெரிய தாழ்வுமனப்பான்மை இருந்து கொண்டு இருந்தது. நாம் கறுப்பாக இருக்கிறோம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவார்களா? என்ற சந்தேகமும், தாழ்வுமனப்பான்மையும் சிவாஜிராவை வாட்டி வதைத்துக் கொண்டே இருந்தது. அதற்கும் பேராசிரியர் கோபாலி முற்றுப்புள்ளி வைத்தார்.

    "கறுப்பாக இருந்தால் கதாநாயகனாக நடிக்க முடியாது என்று சொன்னது யார்? கறுப்புதான் அழகு? கறுப்பு நிறம் என்பது புறக்கணிக்க வேண்டிய விஷயம் அல்ல. நீ தினமும் கண்ணாடி பார்க்கும்போது நம்முடைய கறுப்புதான் அழகு என்று சொல்லிப்பார். அந்த அழகான கறுப்பு நிறத்தில் இருக்கும் மகிமை உனக்கு தெரிய வரும்" என்று தொடங்கி நீண்ட அறிவுரையை சிவாஜிராவிடம் பேராசிரியர் கோபாலி சொன்னார். அவர் சொன்ன இந்த அறிவுரை சிவாஜிராவ் மனதில் ஆழமாக பதிந்தது.

    அடுத்து சிவாஜிராவுக்கு பேராசிரியர் கோபாலி சொன்ன ஒரு அறிவுரை மிகப்பெரிய மாற்றத்துக்கு வழிவகுத்தது. அதுபற்றி நாளை காணலாம்.

    • ரெயில் நிலையத்திற்கு இரவு நேரத்தில் வந்து சேர்ந்தாள் ஒரு பெண்மணி.
    • திருவண்ணாமலை குறித்து இன்னொரு சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

    திருவண்ணாமலையைத் தேடி வந்தவர். அங்கு தங்கி அங்கேயே தவம் செய்து வாழ்ந்தவர். அங்கேயே தம் உடலை உகுத்து இறைவனுடன் கலந்தார்.

    திருவண்ணாமலை என்னும் புனிதத் திருத்தலத்தின் மகிமையை ஸ்ரீரமணர் முழுமையாக உணர்ந்திருந்தார். திருவண்ணாமலையிலேயே அவர் தங்க அதுதான் காரணம். அந்தத் தலத்தின் அற்புதங்கள் பற்றிப் பல அன்பர்களிடம் அவர் சொன்னதுண்டு.

    ஸ்ரீரமணரின் அடியவர்களில் ஒருவர் தேவராஜ முதலியார். திருவண்ணாமலையின் மகிமை குறித்து ஸ்ரீரமணர் தம்மிடம் தெரிவித்த செய்தியொன்றை தேவராஜ முதலியார் பதிவு செய்திருக்கிறார். அந்தச் செய்தி இதுதான்:

    திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு இரவு நேரத்தில் வந்து சேர்ந்தாள் ஒரு பெண்மணி. திருவண்ணாமலை ஆலயத்தில் அண்ணாமலையானை தரிசிக்க வேண்டும் என்பதே அவள் வருகையின் நோக்கம். அவள் ஒரு சிவ பக்தை.

    கையில் கொஞ்சம் பணம் வைத்திருந்தாள். நகை நட்டுக்கள் வேறு அவள் உடலை அலங்கரித்தன.

    ஏதேனும் ஒரு நல்ல உணவு விடுதிக்குப் போய் அன்றிரவு அறை எடுத்துத் தங்க வேண்டும். பிறகு மறுநாள் காலை ஆலயத்திற்குச் சென்று அண்ணாமலையானைக் கண்ணார தரிசிக்க வேண்டும். இதுவே அவள் திட்டம். அவளுடைய நெடுங்காலக் கனவு இது.

    உணவு விடுதிக்குச் செல்வதற்குக் குதிரை வண்டி ஏதேனும் கிடைக்குமா என அவள் கண்கள் தேடிக் கொண்டிருந்தபோது, ஒரு ஜட்கா அவள் அருகில் வந்து நின்றது. எங்கே போக வேண்டும் எனக் கேட்டார் அந்தக் குதிரை வண்டி ஓட்டுநர்.

    அவள் பக்கத்தில் உள்ள ஏதேனும் ஒரு நல்ல உணவு விடுதியில் தன்னைக் கொண்டு விடுமாறு சொல்லி எவ்வளவு கட்டணம் என்பதையும் கேட்டுக் கொண்டு ஜட்காவில் ஏறினாள்.

    சிறிதுதூரம் சென்றதும் ஜட்கா யாருமில்லாத ஓர் ஒதுக்குப் புறமான இடத்தில் திடீரென நின்றது. ஜட்காவிலிருந்து குதித்துக் கீழே இறங்கினான் ஜட்காவை ஓட்டியவன்.

    அவள் முன் வந்துநின்ற அவன் அவளிடமுள்ள பணம், நகை போன்றவற்றைக் கொடுத்துவிடுமாறு கத்தியைக் காட்டி மிரட்டத் தொடங்கினான்.

    எங்கும் இருள். சுற்றிலும் யாருமில்லை. இப்போது என்ன செய்து எப்படித் தப்பிப்பது?

    அவள் கடும் பீதி அடைந்தாள். `அண்ணாமலையானே, என்னைக் கைவிட்டு விடாதே! உன்னை தரிசிக்கத் தானே ஓடோடி வந்தேன்? நடுவழியில் இப்படியொரு திருடன் வந்து என்னை மிரட்டுகிறானே? இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா? இந்தப் புனித பூமியில் இப்படி நடக்கலாமா?` என அச்சத்தில் கண்ணீர் விட்டுக் கதறி அழத் தொடங்கினாள்.

    மறுகணம் நடந்தது அந்த அற்புதம். அவள் குரலைக் கேட்டுத்தானோ என்னவோ டக் டக் என யாரோ நடந்துவரும் ஒலி கேட்டது. எங்கிருந்தோ இரு காவலர்கள் அங்கு வந்துசேர்ந்தார்கள்.

    அவர்கள் வண்டி ஓட்டியவனை அதட்டினார்கள். நாங்களும் வண்டியில் வருகிறோம், எங்களையும் சேர்த்து உணவு விடுதிக்கு அழைத்துச் செல் என உத்தரவிட்டார்கள்.

    காவலர்களைப் பார்த்ததும் அவளிடம் திருட நினைத்த வண்டியோட்டி பயந்துவிட்டான். மறுபேச்சுப் பேசாமல் தான் வண்டியில் ஏறி அவளையும் அந்தக் காவலர்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டான். அவர்களை உணவு விடுதியில் இறக்கி விட்டான். எதுவும் பேசாமல் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டான். அந்தக் காவலர்கள் இருவருக்கும் சமயத்தில் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி கூறினாள் அந்தப் பெண்மணி. அவள் படபடப்பு அப்போதுதான் கொஞ்சம் தணிந்திருந்தது.

    தன்னைச் சரியான தருணத்தில் வந்து காப்பாற்றிய அவர்களின் பெயர்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டாள். அவர்கள் அவளை ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்தி விட்டு இருளில் நடந்து மறைந்தார்கள்...

    திருப்பூர் கிருஷ்ணன்


     

    உணவு விடுதியில் அறை எடுத்துத் தங்கிய அவள், தகுந்த நேரத்தில் தன்னைக் காப்பாற்ற ஆள் அனுப்பிய அண்ணாமலையானை மனதில் வணங்கியவாறு, அந்த இரு காவலர்களை நெகிழ்ச்சியோடு நினைத்த படியே உறங்கினாள். மறுநாள் காலை எழுந்ததும் அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றிற்று. அந்தக் காவலர்களின் பெயர்களைத்தான் அவள் குறித்து வைத்திருக்கிறாளே? திருவண்ணாமலை காவல் நிலையத்திற்குப் போய் அவர்களுக்கு ஒரு சிறிய அன்பளிப்புத் தொகையைக் கொடுத்துவிட்டு அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தால் என்ன?

    இந்த எண்ணத்தோடு அவர்களைத் தேடிச் சென்றாள் அவள். அவள் அணிந்திருந்த தங்க நகைகளையெல்லாம் காப்பாற்றியவர்கள் அவர்களல்லவா?

    ஆனால் காவல் நிலையத்தில் விசாரித்தபோது அவள் தெரிந்துகொண்ட விவரம் அவளைத் திகைப்பில் ஆழ்த்தியது. அப்படிப்பட்ட பெயர்களிலோ அவள் சொன்ன ஜாடையிலோ அங்கே எந்தக் காவலரும் பணியாற்றவில்லை!

    இது என்ன வியப்பு! அப்படியானால் நேற்றிரவு தக்க தருணத்தில் வந்து தன்னைக் காப்பாற்றியவர்கள் யார்?

    அண்ணாமலை கோபுரத்தை நோக்கி அவள் கைகள் தானாய்க் குவிந்தன. திருவண்ணாமலைக்கு பக்தியோடு வருவோரின் பாதுகாப்பை அண்ணாமலையான் பார்த்துக் கொள்வான் என்பதைப் புரிந்துகொண்டாள் அவள்.

    இந்த சம்பவம் உண்மையாக நடந்ததுதான் என்றும் கற்பனைக் கலப்பில்லாதது என்றும் இந்த நிகழ்ச்சி பற்றி ஸ்ரீரமணரே தம்மிடம் விவரித்துச் சொன்னதாகவும் தேவராஜ முதலியார் பதிவு செய்துள்ளார்.

    திருவண்ணாமலை குறித்து இன்னொரு சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. சுந்தரேச ஐயர் தொடர்பான சம்பவம் அது.

    ஸ்ரீரமணரின் தத்துவங்களில் சரணடைந்து வாழ்ந்த ஒரு தீவிர ரமண பக்தர் சுந்தரேச ஐயர். அடிக்கடி ஸ்ரீரமணரைப் போய்ப் பார்ப்பதும் திருவண்ணாமலை ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசிப்பதும் அவரின் வழக்கம்.

    அவரது உறவினர் ஒருவருக்கு திடீரென்று காலில் அடிபட்டுக் கால் ஊனப்பட்டுவிட்டது. எவ்வளவோ சிகிச்சை செய்து பார்த்தும் பூரண குணம் கிட்டவில்லை.

    கையில் ஒரு கம்பு வைத்து ஊன்றிக் கொண்டுதான் அவரால் நடக்க முடியும். கம்பில்லாமல் ஓர் அடி கூட எடுத்துவைக்க இயலாது என்கிற நிலைமை.

    இப்படியாகி விட்டதே, இனி வாழ்நாள் முழுதும் தான் இப்படித்தான் வாழ வேண்டுமா என்று அவர் பெரிதும் மனம் புழுங்கினார். ஊன்று கோல் இல்லாமல் முன்போல் தன்னால் எப்போது இயல்பாக நடக்க முடியும் எனக் கவலையில் ஆழ்ந்தார்.

    திருவண்ணாமலையில் வாழும் பகவான் ரமணர் பற்றி அவர் கேள்விப் பட்டிருந்தார். உறவினர் சுந்தரேச ஐயர் அடிக்கடி ஸ்ரீரமணரின் பெருமைகள் பற்றி அவரிடம் சொல்வதுண்டு. அதனால் அவருக்கு பகவான் ஸ்ரீரமணரிடம் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது.

    திருவண்ணாமலையை வலம் வரலாம், பகவான் ரமணரைச் சரணடைந்து வாழலாம், காலப்போக்கில் கம்பில்லாமலே இயல்பாக நடக்கக் கூடிய நிலையை ஸ்ரீரமணர் கட்டாயம் அருள்வார் என அவர் மனதில் திடமான உறுதி ஏற்படுத்திக் கொண்டார்.

    தம் இருப்பிடத்தையே திருவண்ணாமலைக்கு மாற்றிக் கொண்டார் அவர். திருவண்ணாமலையிலேயே தொடர்ந்து வசிக்கலானார்.

    நாள்தோறும் கம்பை ஊன்றிக் கொண்டு கால் வலிக்க வலிக்க கிரிவலம் வந்தார். மகரிஷி ரமணரின் பாதாரவிந்தங்களை பக்தியோடு நாள்தோறும் நமஸ்கரித்தார். கம்பில்லாமல் நடக்க வேண்டும் கடவுளே என ஓயாமல் பிரார்த்தனை செய்தவாறிருந்தார்.

    இப்படியாகச் சிறிது காலம் சென்றது. ஆனால் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. நாட்கள் சென்றனவே தவிர, ஊன்றுகோலை எடுத்துவிட்டு இயல்பாக நடப்பதென்பது அவரால் இயலாததாகவே இருந்தது.

    நடக்க முடியும் என்று தான் நினைத்தது நடக்காததால், மெல்ல மெல்ல அவருக்குத் தம் திருவண்ணாமலை வாழ்வில் சலிப்பு ஏற்பட்டது. ஆனால் ஸ்ரீரமணரோ அவர் திருவண்ணாமலையில் வசிப்பதையும் நாள்தோறும் கிரிவலம் வருவதையும் ஊக்குவித்துக் கொண்டிருந்தார்.

    `இவ்வளவு நாள் ஆகிவிட்டது, இனி மேலும் திருவண்ணாமலையில் இருந்து என்ன பயன்?` என எண்ணத் தொடங்கினார் அவர். ஒருநாள் மனம் வெறுத்துப் போய் விரக்தியுடன் திருவண்ணாமலையை விட்டுப் புறப்பட்டார்.

    தளர்ந்த உடலோடும் தளர்ந்த மனத்தோடும் கம்பை ஊன்றிக் கொண்டு, ரமணாஸ்ரமத்திலிருந்து விடைபெற்று, மெல்ல திருவண்ணாமலையை விட்டு விலகிச் செல்லலானார். அப்போதுதான் அந்த விந்தையான சம்பவம் நடந்தது. அவர் முன்பின் பார்த்திராத, அவருக்கு அறிமுகமே இல்லாத யாரோ ஒருவர் திடீரென அங்கே வந்தார். சற்று நில் என அவரை கம்பீரமாக அதட்டினார். கட்டளைக்குக் கட்டுப்பட்டாற்போல் நின்றார் அவர். அவர் கம்பை ஊன்றிக் கொண்டு நடக்க முடியாமல் நடப்பதையே சற்றுநேரம் உற்றுப் பார்த்தார் வந்த புதியவர். பின் `அடேய்! இனி உனக்குக் கம்பு தேவையில்லை!` எனக் கூறி, கம்பை அவர் கையிலிருந்து சடாரென்று பிடுங்கி இரண்டாய் முறித்து வீசிவிட்டு விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

    இருந்த கம்பும் போயிற்றா, இனி என்ன செய்வது என்று எண்ணியவாறே கம்பில்லாமல் நடக்கத் தொடங்கினார் அந்த அன்பர். என்ன ஆச்சரியம்! கம்பில்லாமலேயே அவரால் முன்புபோல் இயல்பாக நடக்க முடிந்தது!

    அதை உணர்ந்ததும் அவர் மனத்தில் வியப்பும் பரவசமும் எழுந்தன. `அண்ணாமலை யாரைப் பிரார்த்தித்தால் ஆழ்மனம் வலிமை பெறுகிறது, நடக்காது என்று நாம் நினைத்ததையெல்லாம் வலிமை பெற்ற ஆழ்மனம் நடக்கச் செய்துவிடுகிறது!` என்னும் சூட்சுமத்தைப் புரிந்துகொண்ட அந்த அன்பரின் விழிகளில் கரகரவெனக் கண்ணீர் பெருகியது. அண்ணாமலை ஆலயத்தை நோக்கியும் ரமணாஸ்ரமம் இருந்த திசைநோக்கியும் அவரது இரு கரங்களும் குவிந்தன. திருவண்ணாமலை மேலும் ஸ்ரீரமணர்மேலும் வைக்கும் திடமான நம்பிக்கை அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது என்பதை அவர் மனம் உணர்ந்துகொண்டது.

    தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

    • சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பெரும்பாலும் 47-ம் நம்பர் பஸ்சில் வாசலில் தொங்கியபடிதான் பயணம் செய்தனர்.
    • திரைப்படக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் முடியும் நேரத்தில் நாடகங்கள் நடத்த ஆரம்பித்தனர்.

    ஒரு பாட்டில் வெனிகர் குடித்தால் ஒரு பாட்டில் பிராந்தி கிடைக்கும் என்று சொன்னதும் சிவாஜிராவால் ஆசையை அடக்க முடியவில்லை. தன் முன் சதீஷ் கொண்டு வந்து வைத்த வெனிகர் பாட்டிலை எடுத்தார். ஒரே மூச்சில் மடக்... மடக்... என்று குடித்து முடித்து விட்டார்.

    இதைக் கண்ட அவரது நண்பர்களுக்கு கடும் அதிர்ச்சியாகி விட்டது. சிவாஜி ராவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயப்பட்டனர். ஆனால் சிவாஜிராவ் ஸ்டைலாக தனது கையை வானத்தை நோக்கி உயர்த்தி காட்டினார். "கடவுள் என் பக்கம் இருக்கும் வரை எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது" என்றார். அவர் குரலில் ஒருவித உறுதி தெரிந்தது.

    அதே ஸ்டைலில் இருக்கையில் இருந்து வேக, வேகமாக எழுந்த சிவாஜி ராவ் குளியல் அறைக்குள் சென்று வாந்தி எடுத்தார். தான் குடித்த ஒரு பாட்டில் வெனிகரையும் வாந்தி எடுத்து வெளியில் கொண்டு வந்து விட்டார். சில நிமிடங்களில் மிக சகஜமாக மாறி நண்பர்கள் அருகில் வந்தார். சதீசை பார்த்தபடி, "டேய் போய் ஒரு பெரிய பாட்டில் பிராந்தி வாங்கிட்டு வாடா...?" என்றார்.

    வேறு வழி தெரியாத சதீஷ் ஒரு பாட்டில் பிராந்தி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். அந்த முழுப் பாட்டில் பிராந்தியையும் சிவாஜி ராவ் ஒரே ஆளாக குடித்து முடித்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு சிவாஜி ராவிடம் நண்பர்கள் சவால் விடவோ, பந்தயம் கட்டவோ பயப்பட்டனர்.

    அந்த சமயத்தில் பருவ மழை காரணமாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவி இருந்தது. அசோக் அந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடுமையாக அவதிப்பட்டார்.

    ஒரு வாரம் திரைப்படக் கல்லூரிக்கு வராமல் அறையிலேயே தங்கி ஓய்வெடுத்தார்.

    தனியாக இருந்ததால் அவருக்கு மிகவும் போர் அடித்தது. எனவே காய்ச்சல் சற்று குறைந்ததும் அவர் கல்லூரிக்கு புறப்பட்டார். அவரை ஓய்வெடுக்கும்படி சிவாஜி ராவ் எவ்வளவோ வலியுறுத்திக் கூறினார். ஆனால் அசோக் கேட்கவில்லை. நானும் உங்களுடன் பஸ்சில் வந்து விடுகிறேன் என்று சொல்லியபடி கல்லூரிக்குப் புறப்பட்டு விட்டார்.

    அமைந்தகரையில் இருந்து ஜெமினி பாலத்துக்கு அந்த காலத்தில் சென்னை அரசு போக்குவரத்து கழகம் 47-ம் எண் கொண்ட பஸ் சேவையை நடத்தி வந்தது. இந்த வழித் தடத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் அதிக பஸ்களை விட்டு இருந்தனர். என்றாலும் சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பெரும்பாலும் 47-ம் நம்பர் பஸ்சில் வாசலில் தொங்கியபடிதான் பயணம் செய்தனர்.

    அத்தகைய கூட்டத்தை மனதில் வைத்துதான் அசோக்கிடம் கல்லூரிக்கு வரவேண்டாம் என்று சிவாஜி ராவ் கூறியிருந்தார். ஆனால் அசோக் கேட்காததால் அவரை சிவாஜி ராவ் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்திருந்தார். வழக்கம் போல 47-ம் நம்பர் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சிவாஜிராவ், அசோக் மற்றும் நண்பர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடியே வந்தனர். உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்து விடலாம் என்று பல தடவை அவர்கள் முயற்சி செய்தபோதும் இடம் கிடைக்கவில்லை. இதனால் அசோக் மிகவும் தளர்ச்சி அடைந்தார்.

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தை பஸ் தாண்டிக் கொண்டிருந்தபோது அசோக்குக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. பஸ் படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த அவர் மயங்கி விழப்போவதை அதிர்ஷ்டவசமாக சிவாஜி ராவ் கவனித்து விட்டார். அடுத்த வினாடியே அசோக்கை அரவணைத்துப் பிடித்துக் கொண்டார்.

    உள்ளே ஏறுங்கள்... உள்ளே ஏறுங்கள்... என்று சிவாஜிராவ் அலறினார். இதனால் பயணிகள் பரபரப்பானார்கள். நிலைமையை புரிந்துக்கொண்ட கண்டக்டரும் உதவி செய்தார். ஒரு இருக்கையில் இருந்த பயணிகள் எழுந்து இடம் கொடுத்தனர்.

    அசோக்கை பஸ்சுக்குள் அழைத்து வந்த சிவாஜிராவ் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் மடி மீது அசோக்கை தலைசாய்த்து படுக்க வைத்துக் கொண்டார். ஜெமினி பாலம் வரை அவர்கள் நிம்மதியாக வந்தனர். இதனால் பஸ்சில் இருந்து இறங்கியதும் தெம்பாக கல்லூரிக்கு சென்றனர்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பஸ்சுக்குள் சென்று உட்கார வேண்டும் என்று நினைத்து விட்டால் யாராவது ஒருவர் மயங்கி விழுவது போல் நடித்து காரியத்தை சாதித்துக் கொண்டனர். அடிக்கடி அவர்கள் இப்படி நாடகம் நடத்தி மற்ற பயணிகளை ஏமாற்றி பயணம் செய்தது உண்டு.

    திரைப்படக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் முடியும் நேரத்தில் நாடகங்கள் நடத்த ஆரம்பித்தனர். அதில் சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் கலந்து கொண்டு நடித்தனர். அதுபோல சென்னையில் உள்ள கர்நாடகா என்ஜினீயர்கள் சங்கம் நடத்திய கன்னட நாடகங்களிலும் சிவாஜி ராவ், அசோக், சதீஷ், ரவீந்திரநாத் நால்வரும் நடித்தார்கள்.

    நாடகங்களின் ஒத்திகைகள் பெரும்பாலும் திரைப்படக் கல்லூரி வளாகத்திலேயே நடத்தப்பட்டது. திரைப்படக் கல்லூரியில் கன்னட பிரிவு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியை உஷா இந்த நாடக ஒத்திகைகளை முன்னின்று நடத்தினார். ஏற்கனவே பெங்களூரில் ஏராளமான நாடகங்களில் சிவாஜி ராவ் நடித்திருந்ததால் திரைப்படக் கல்லூரியில் நடந்த நாடக ஒத்திகை அவருக்கு சர்வ சாதாரணமாக இருந்தது.

    ஒரு நாடகத்தில் சிவாஜிராவ் சி.பி.ஐ. அதிகாரியாகவும், மற்றொரு நாடகத்தில் வெட்டியானாகவும் நடித்தார். அவரது நாடக நடிப்புத் திறமையைப் பார்த்து ஆசிரியை உஷா மிகவும் ஆச்சரியப்பட்டார். இவ்வளவு திறமை உள்ள உங்களுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று மனம் திறந்து பாராட்டினார்.

    நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிவாஜி ராவ் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாடகத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதில் அசோக் முதல் மாணவனாக தேர்வானார். என்றாலும் கன்னட பிரிவு மாணவர்களுக்கு ஒரு மனக்குறை இருந்து கொண்டே இருந்தது. அதாவது திரைப்படக் கல்லூரியில் தெலுங்கு மொழி மாணவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போல கன்னட மொழி மாணவர்களுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை என்று நினைத்தனர்.

    திரைப்படக் கல்லூரியில் படித்த 36 மாணவர்களில் தெலுங்கு மாணவர்கள் 20 பேர் இருந்தனர். இதன் காரணமாக பயிற்சி தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் தெலுங்கு மொழியில் அதிகம் மேற்கொள்ளப் பட்டது. பயிற்சிக்கான நாடகம் நடத்தப்பட்டா லும் தெலுங்கு மொழி நாடகம்தான் அதிகம் நடத்தப்பட்டது. அதுபோல நடிப்பை கற்றுக் கொள்வதற்கான திரைப்படங்கள் காண் பிக்கப்பட்ட விஷயத்திலும் தெலுங்கு படங்களே அதிகம் இருந்தன.

    இதற்கு கன்னட வகுப்பில் சிவாஜி ராவுடன் படித்த மாணவர் அசோக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரால் திரைப்படக் கல்லூரியில் சர்ச்சை உருவாகியது. இதையடுத்து கல்லூரி முதல்வர் ராஜாராம் அவரை அழைத்து விசாரணை நடத்தினார். மொழி ரீதியாக பிரச்சினை ஏற்படுத்தியதாக கூறி அசோக்கை ஒரு வாரம் சஸ்பெண்டு செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார்.

    இந்த நடவடிக்கை சிவாஜி ராவுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. இது தொடர்பாக அவருக்கும் தெலுங்கு மொழி பாடப் பிரிவில் படிக்கும் மாணவர் அனந்தராமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறுவயதிலேயே யாராவது தன் கண் பார்த்து கோபத்துடன் பேசினால் அது சிவாஜி ராவுக்கு பிடிக்கவே பிடிக்காது.

    தன்னை முறைத்து பார்ப்பவர்களை துவம்சம் செய்து விடுவார். குறிப்பாக தனது கழுத்தில் அணிந்திருந்த சைக்கிள் செயினை கழற்றி அடிப்பதை சிவாஜி ராவ் வழக்கத்தில் வைத்திருந்தார். சென்னைக்கு மாணவராக வந்து பக்குவப்பட்டு கொண்டிருந்த நிலையில் தெலுங்கு மாணவருடனான மோதல் அவருக்கு மீண்டும் அந்த பழைய குணத்தை எட்டிப் பார்க்க வைத்தது.

    தெலுங்கு மாணவர் அனந்தராமனை அடி பின்னி எடுத்து விட்டார். திரைப்படக் கல்லூரி முழுவதும் இது பரபரப்பாக பேசப்பட்டது. என்றாலும் அதிர்ஷ்டவசமாக சிவாஜி ராவ் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டது. இதனால் சிவாஜி ராவ் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

    எப்படியோ திரைப்படக் கல்லூரி வாழ்க்கையில் முதலாம் ஆண்டு படிப்பு நிறைவு பெற்றது. எல்லா மாணவர்களும் விடுமுறைக்காக தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்று இருந்தனர். சிவாஜி ராவும் பெங்களூருக்கு திரும்பினார்.

    அங்கு அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை தயார் செய்யும் வகையில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்யத் தொடங்கினார். அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கண்டக்டர் வேலை பார்த்து சம்பாதித்தார். அந்த பணத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குருவி சேர்ப்பது போல சேமித்தார்.

    அப்படி ஒரு நாள் அவர் பஸ்சில் கண்டக்டர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கல்லூரி நண்பர் சதீஷ் அதே பஸ்சில் பயணம் செய்ய நேரிட்டது. அவருக்கு சிவாஜி ராவை கண்டக்டர் கோலத்தில் பார்த்ததும் மிகவும் ஆச்சரியமாகி விட்டது. ஆங்கிலவார்த்தை கலக்காமல் சிவாஜி ராவ் ஒவ்வொரு பஸ் நிறுத்தத்தின் பெயரையும் அழகான கன்னடத்தில் உச்சரித்தது அவரை கவர்ந்தது.

    சதீசை கண்டதும் சிவாஜி ராவும் மகிழ்ச்சி அடைந்தார். இன்று என்னோடுதான் நீ சாப்பிட வேண்டும் என்று உரிமையோடு அழைத்து சென்று ஓட்டலில் சாப்பிட வைத்தார். இப்படி விடுமுறைைய கழித்த சிவாஜி ராவுக்கு தன் மனம் கவர்ந்த பஸ் தோழியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அவரால் அந்த தோழியை பார்க்க முடிந்ததா? என்பதை நாளை பார்க்கலாம்.

    • அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள்.
    • கிரகணம் தொடர்பாக கர்ப்பிணிகள் எல்லோருமே சில கேள்விகளை கேட்கிறார்கள்.

    பெண்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் சிறந்த தருணம் என்பது கர்ப்ப காலம் மற்றும் பிரசவ நேரம் ஆகியவை ஆகும். இந்த காலகட்டம் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு, வயதில் மூத்த பெண்கள் பலரும் பல்வேறு அறிவுரைகளை கூறுவார்கள். அவற்றில் எது நல்லது, எது கெட்டது என்பதை ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணி பெண்களுக்கு உணவு விஷயத்தில் ஏற்படுகிற சந்தேகங்கள்:

    மேலும் கர்ப்ப காலத்தின்போது என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்கிற சந்தேகங்களும் நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கிறது.

    வயதில் மூத்த பெண்கள் பலரும் அறிவியல் அடிப்படை இல்லாமல் தங்களின் அனுபவத்தில் ஏற்பட்ட ஏராளமான விஷயங்களை கர்ப்பிணி பெண்களிடம் சொல்வதால்தான், கர்ப்ப காலத்தின்போது கர்ப்பிணி பெண்கள் பல விஷயங்களையும் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இது அவர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக அமைகிறது. இதைப்பற்றி இன்னும் சில சுவையான விஷயங்களை பார்க்கலாம். ஏனென்றால் இதெல்லாம் கர்ப்பிணிகள் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய முக்கியமான விஷயங்கள் ஆகும்.

    பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மனதில் பலவிதமான குழப்பங்கள் இருக்கும். வயிற்றில் இருக்கும் குழந்தையை தான் கவனிப்பதற்கு கடைபிடிக்கும் விஷயங்கள் சரியா? தவறா? கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி பாதுகாப்பாக பார்க்க வேண்டும்? அதற்காக என்ன சாப்பிட வேண்டும் என்று பலவிதமான சந்தேகங்களும், எதிர்பார்ப்புகளும் இருக்கும்.

    பல நேரங்களில் இதுபோன்ற விஷயங்களால் கர்ப்பிணி பெண்களின் மனதில் பெரிய அளவிலான அழுத்தங்களும் ஏற்படும். மேலும் கர்ப்ப காலத்தின்போது அவ்வப்போது எதிர்கொள்ளும் அல்லது உணரும் விஷயங்களால் ஒவ்வொரு நாளுமே கர்ப்பிணிகளுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

    ஆனால் இதை யாரிடம் போய் கேட்பது என்று தான் அவர்களுக்கு தெரியாது. ஏனென்றால் எல்லாம் அறிந்தவர்கள் என்று நிறைய பேர் சொல்வதையெல்லாம் அவர்கள் சரி என்று நினைப்பார்கள். ஆனால் சில நேரங்களில் அதில் அறிவியல் அடிப்படை என்பது இருக்காது. இதனால் அவர்கள் சொல்வது சில நேரங்களில் தவறாக அமையும். இந்த வகையில் கர்ப்ப காலத்தை பற்றி பலவிதமான தவறான தகவல்கள் இன்றைக்கு உலா வந்து கொண்டுதான் இருக்கிறது.

    கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா?

    இதில் உணவு விஷயத்தில் கர்ப்பிணிகள் நிறைய பேருக்கு பலவிதமான சந்தேகங்கள் ஏற்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணவு விஷயத்தில் முதலில் என்னிடம் கேட்பது, 'டாக்டர்... கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிடலாமா? பப்பாளி சாப்பிடக்கூடாது என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நான் அது தெரியாமல் பப்பாளி சாப்பிட்டு விட்டேன், எனக்கு கருச்சிதைவு ஏற்படுமா?' என்று கேட்பார்கள்.

    அவர்களுக்கு நான் சொல்லும் பதில், கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாம். அதில் எந்த தவறும் இல்லை. பப்பாளி பழத்தில் உள்ள போலிக் அமிலம் குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கர்ப்ப காலத்தில் நன்மை பயக்கும்.

    ஆனால் அதில் ஒரே ஒரு விஷயம், பப்பாளி காயாக இருக்கும்போது கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது. அதேபோல் பாதி பழுத்த பப்பாளியையும் அவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் பப்பாளி காயாக இருக்கும்போது அதில் உள்ள லேடெக்ஸ் எனப்படும் பொருள் பல நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு வயிற்று வலியை உண்டாக்கலாம்.

    அது மென்மையான தசைகளை சுருங்கச் செய்யக்கூடிய தன்மை கொண்டது. இதனால் கர்ப்பப்பையில் எரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் வயிற்றுவலி ஏற்படலாம். மேலும் கருப்பையை சுருங்க வைத்து சில நேரங்களில் கருச்சிதைவையும் ஏற்படுத்தலாம். இதுவே நன்றாக பழுத்த பப்பாளியில் இந்த பொருள் எதுவுமே இருப்பதில்லை. எனவே பப்பாளி பழமாக இருக்கும்போது கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.

    இதேபோல் சிலர் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள். ஆனால் அன்னாசிப்பழம் எந்த வகையிலும் கருச்சிதைவை உருவாக்குவதில்லை. இதெல்லாம் தவறான கருத்துக்கள். ஆனால் கர்ப்பிணிகள் அன்னாசிப்பழத்தை மிதமான அளவிலேயே சாப்பிட வேண்டும்.

    பல நேரங்களில் 'பேரிச்சம்பழம் சாப்பிட்டால் குழந்தை கருப்பாக இருக்கும் என்று சொல்கிறார்களே டாக்டர்' என்பார்கள். அதுவும் தவறுதான். பேரிச்சம்பழத்தில் இரும்பு சத்து இருக்கிறது, புரோட்டீன் இருக்கிறது, நிறைய நுண் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தேவை. இதெல்லாம் அவர்கள் உட்கொள்கின்ற உணவுப் பழக்க வழக்க முறைகளில் தவறான கருத்துக்களாக சொல்லப்படுகின்றன. எனவே கர்ப்பிணி பெண்கள் இதில் தெளிவு பெற வேண்டும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    கர்ப்பிணிகளுக்கு வாந்தி அதிகம் ஏற்பட்டால் பெண் குழந்தை பிறக்குமா?

    மேலும் பெண்கள் கர்ப்பகாலத்தில் எதிர்நோக்குகின்ற பலவிதமான பிரச்சினைகளுக்கும் ஏதாவது அறிவியல் அடிப்படை இருக்கிறதா என்பதை பார்க்கலாம். பொதுவாக கர்ப்பிணி பெண்கள் பலரும் வாந்தி எடுப்பது வழக்கம். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அதிகாலையில், அதிக அளவில் வாந்தி எடுத்தால் அது பெண் குழந்தை என்று பலரும் கர்ப்பிணிகளிடம் சொல்கிறார்கள்.

    கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் தான் நிறைய வாந்தி வரும். அதிகமாக வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தால் அது பெண் குழந்தைகள் தான் என்று பலரும் சொல்லி விடுவார்கள். இது சரியா தவறா என்று பார்த்தால், இதுபற்றி கடந்த 2014-ம் ஆண்டு ஒரு ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வில் கருவில் பெண் குழந்தையை சுமக்கின்ற பெண்களுக்கு, சற்று அதிகமாக வாந்தி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்தார்கள்.

    அதற்காக ஆண் குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு வாந்தி வராது என்பது அர்த்தமல்ல. பொதுவாக பெண் குழந்தையை சுமந்தால் அதிகமாக வாந்தி வருகிறது என்பதை இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 2 ஆயிரம் கர்ப்பிணி பெண்களிடம் ஆராய்ச்சி செய்து இதை கண்டுபிடித்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    மேலும் கிரகணம் தொடர்பாக கர்ப்பிணிகள் எல்லோருமே சில கேள்விகளை கேட்கிறார்கள். 'டாக்டர்... சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் பலரும் பரிசோதனைக்கு வருவதில்லை. சூரிய கிரகணத்தின்போது பிரசவத்துக்கு கூட கர்ப்பிணிகள் பெரும்பாலும் வெளியே வருவதில்லையே ஏன்?' என்பார்கள்.

    கர்ப்பமாக இருப்பதற்கும், சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணத்திற்கும் ஏதாவது அறிவியல் ரீதியான அடிப்படை இருக்கிறதா என்பதை பார்த்தால், இன்றும் பலவிதமான விஞ்ஞான முறைகளில் ஆய்வு செய்த வரைக்கும், சூரிய கிரகணத்தினாலோ அல்லது சந்திர கிரகணத்தினாலோ எந்த விதமான பாதிப்பும் கர்ப்பத்துக்கு ஏற்பட்டது இல்லை, கர்ப்பிணிகளுக்கும் ஏற்பட்டது கிடையாது.

    கிரகணத்தின்போது கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவது, அதனால் கர்ப்பம் பாதிக்கப்படுவது என்பது தவறான கண்ணோட்டம் தான். இதற்கு எந்த விதமான விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லை. இதை நினைத்து யாரும் பயப்பட வேண்டியதில்லை.

    என்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு கர்ப்பிணி பெண், 'டாக்டர்... கிரகணத்தை கவனிக்காமல் நான் சிகிச்சைக்கு வந்து விட்டேன். எனது குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ?' என்று கேட்டார். கிரகணம் பற்றிய அவர்களின் பய உணர்வு தான் பிரச்சினைகளை உருவாக்கும். சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் கர்ப்பத்துக்கு கண்டிப்பாக எந்தவித பாதிப்பையும் உருவாக்காது.

     

    கர்ப்பிணி பெண்கள் 'ஹேர் டை' பயன்படுத்தலாமா?

    தற்காலத்தில் பெண்கள் கேட்கிற ஒரு முக்கியமான விஷயம், 'டாக்டர்... நான் கர்ப்பமாக இருக்கும்போது 'ஹேர் டை' பயன்படுத்தலாமா?' என்பார்கள். குறிப்பாக வயது அதிகமாக இருக்கும் பெண்கள் கர்ப்பமான பிறகு எங்களிடம் பரிசோதனைக்கு வருவார்கள். அவர்கள் கர்ப்ப காலத்தின்போது 'ஹேர் டை' போடுவதில்லை, ஆனால் ஹேர் டை போடலாமா என்று கேட்கிறார்கள்.

    அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள், அந்த கர்ப்பிணிகளிடம், 'நீ ஹேர் டை போடக்கூடாது, ஹேர் டை போட்டால் குழந்தைக்கு பிரச்சினை வரும், குழந்தை வயிற்றிலே இறந்துவிடும் அல்லது குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும்' என்று பயமுறுத்துகிறார்கள். இது சரியா, தவறா என்று பார்த்தால், பல ஹேர் டைகளில் இருக்கிற சில ரசாயனங்கள் சில நேரங்களில் கர்ப்பிணி பெண்களின் உடலில் சேரலாம். அவை ரத்தத்தில் கலந்தால் சில நேரங்களில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    அந்த வகையில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்தவுடன் முதல் 3 மாதங்களுக்கு 'ஹேர் டை' பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதன்பிறகு அவர்கள் 'ஹேர் டை' போடுவதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவது குறைவாகிறது. எனவே கர்ப்ப காலத்தில் 'ஹேர் டை' பயன்படுத்துவது என்பது தவறு என்கிற கருத்து கிடையாது. கர்ப்பிணிகள் 3 மாதங்களுக்கு பிறகு கண்டிப்பாக 'ஹேர் டை' போடலாம்.

    கர்ப்பிணிகளுக்கு இதுபோல இன்னும் பல விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் இருக்கிறது. அதாவது, உடற்பயிற்சி செய்யலாமா? 2 மடங்கு சாப்பிட வேண்டுமா? அடிக்கடி வரும் வயிற்றுவலி, எப்படி படுத்து தூங்க வேண்டும்? தாம்பத்திய உறவு கொள்ளலாமா? காபி குடிக்கலாமா என்பது போன்ற சந்தேகங்கள் ஏற்படுகிறது. அந்த சந்தேகங்களுக்கான விளக்கங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    ×