என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- பட்டைத் தீட்டிய பாலச்சந்தர்!
    X

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- பட்டைத் தீட்டிய பாலச்சந்தர்!

    • ரஜினியுடன் அறையில் தங்கி இருந்த வேணு மற்றும் நண்பர்களும் புறப்பட்டு விட்டனர்.
    • சினிமா வாய்ப்புகள்தான் அவரை தேடி ஒன்றுகூட வரவில்லை.

    அபூர்வ ராகங்கள் படத்தை சென்னையில் திரைப்படக் கல்லூரி நண்பர்களுடனும், பெங்களூரில் கர்நாடகா அரசு போக்குவரத்துக் கழக நண்பர்களுடனும் சேர்ந்து பார்த்த திருப்தி ரஜினிக்கு ஏற்பட்டு இருந்தது. அந்த மகிழ்ச்சியுடன் அவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு திரும்பினார்.

    அப்போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது.... திரைப்படக் கல்லூரியில் படித்த நண்பர்களுடன் அமைந்தகரை அருண் ஓட்டலில் ரஜினி தங்கி இருந்தார். திரைப்படக் கல்லூரி படிப்பு நிறைவு பெற்றுவிட்டதால் அவரது நண்பர்கள் ஓட்டல் அறையை காலி செய்து விட்டு ஆளுக்கு ஒரு பக்கமாக பிரியத் தொடங்கினார்கள்.

    ரஜினியுடன் அறையில் தங்கி இருந்த வேணு மற்றும் நண்பர்களும் புறப்பட்டு விட்டனர். இதனால் ரஜினியும் அருண் ஓட்டல் அறையை காலி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அவருக்கு எங்கு செல்வது என்பது புரியவில்லை. இதுபற்றி நண்பர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இவை எல்லாவற்றையும் ரஜினியின் நண்பர்களில் ஒருவரான சதீஷ் கவனித்துக் கொண்டு இருந்தார். அவர் மற்றொரு நண்பரான தெலுங்கு வகுப்பில் படித்த விட்டல்ராவிடம், "சிவாஜி பாவம்டா.... அவன் இந்த அறையை காலி செய்து விட்டால் வேறு எங்கு போவான்? நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது. நாம்தான் அவனை இங்கு அழைத்து வந்தோம். இப்போது மீண்டும் அவன் வேறு இடம் தேட வேண்டியது இருக்கிறது. அவனுக்கு நாம் ஏதாவது உதவி செய்ய வேண்டும்.

    அவனுக்கு இப்போது பட வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கின்றன. நல்ல வசதியான இடமாக இருந்தால்தான் அவனுக்கு நன்றாக இருக்கும்" என்றார். அதோடு, "எனக்கு மட்டும் வசதி வாய்ப்புகள் இருந்தால் அவனுக்கு நிச்சயம் உதவி செய்து இருப்பேன்" என்றார்.

    இதைக் கேட்டுக் கொண்டிருந்தவிட்டல் ராவுக்கு மனம் இளகியது. விட்டல் ராவ் மிகப்பெரிய வசதி வாய்ப்புகளுடன் இல்லா விட்டாலும் சென்னை ராயப்பேட்டையில் அவர் குடும்பத்தினருக்கு ஓரளவு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டின் ஒரு பகுதியில் அறைகள் காலியாக இருந்தன.

    இதைப் பற்றி ஒரு நிமிடம் யோசித்த விட்டல்ராவ் அடுத்த நிமிடமே, "டேய் கவலைப்பட வேண்டாம். ரஜினி என் வீட்டில் வந்து தங்கிக் கொள்ளட்டும். அவனுக்கு எவ்வளவு வாடகை கொடுக்க முடியுமோ அதை மட்டும் கொடுத்தால் போதும். அவன் எதிர்பார்க்கும் வசதிகள் நிச்சயமாக அந்த வீட்டில் கிடைக்கும்" என்றார்.

    உடனே சதீஷ், டேய் ரொம்ப நன்றிடா... நீ செய்து இருக்கும் உதவி மிகப்பெரியது. நானும் ரஜினியுடன் வந்து தங்கி கொள்ளட்டுமா? என்று கேட்டார். அதற்கும் விட்டல்ராவ் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ரஜினி ஒரு நல்லநாள் பார்த்து விட்டல்ராவின் வீட்டுக்கு குடிபெயர்ந்தார்.

    அன்று முதல் ரஜினியின் புதிய முகவரியாக 36/1, புதுப்பேட்டை கார்டன் தெரு, ராயப்பேட்டை, சென்னை-14 என்று மாறியது. இந்த இடம் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய 3 முக்கிய பகுதிகளை இணைக்கும் மையப்புள்ளியில் இருந்தது. அதாவது மியூசிக் அகாடமியின் அருகில் அந்த வீடு அமைந்து இருந்தது.

    ரஜினிக்கு அந்த வீடு மிகவும் பிடித்துப் போனது. தன்னைத் தேடி வரும் படத் தயாரிப்பாளர்கள், நண்பர்களுடன் அமர்ந்து பேசுவதற்கு மிகவும் வசதியாக இருந்ததால் அங்கு அவர் சுதந்திரமாக நடமாட தொடங்கினார். மாத வாடகையாக அவர் 115 ரூபாய் கொடுத்தார்.

    இதனால் ரஜினி 3 அறைகள் மற்றும் ஒரு பெரிய கூடம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விட்டல்ராவ் குடும்பத்தினர் அனுமதி கொடுத்து இருந்தனர். அந்த வீட்டின் வெளியே இருந்த பரந்த முற்றமும் ரஜினிக்கு பயன் உள்ளதாக இருந்தது.

    ஆனால் சினிமா வாய்ப்புகள்தான் அவரை தேடி ஒன்றுகூட வரவில்லை. அபூர்வ ராகங்கள் படத்தின் படப்பிடிப்பு 1975-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவு பெற்று விட்ட நிலையில் அடுத்த சில மாதங்கள் அவர் சென்னையில் ஒவ்வொரு சினிமா கம்பெனியாக ஏறி-இறங்கி ஏமாற்றத்துக்குள்ளாகி இருந்தார்.

    ஒரு படத்தயாரிப்பாளர் ரஜினியை நடித்து காட்டும்படி சொன்னதால் அவருக்கு கோபமே வந்து விட்டது. பாலச்சந்தர் சார் படத்தில் நடித்து இருக்கிறேன் என்று சொன்ன பிறகும் என்னை நடித்துக் காட்ட சொல்லலாமா? என்று அவர் ஆவேசம் ஆனார். இதனால் அந்த பட நிறுவனம் ரஜினிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

    ரஜினி புகழ் பெற்ற பிறகு அதே நிறுவனம் தேடி வந்து வாய்ப்பு கொடுத்தது என்பது தனி கதை. பல மாதங்கள் வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் ரஜினிக்குள் ஒரு சோர்வு மனப்பான்மை வந்து இருந்தது. இதை எப்படியோ டைரக்டர் பாலச்சந்தர் தெரிந்து கொண்டார். அபூர்வ ராகங்கள் படத்தில் மிக சிறிய வேடம் கொடுத்ததால் ரஜினியின் முழுத் திறமையும் வெளியில் தெரியாமல் போய் விட்டது என்ற எண்ணம் பாலச்சந்தருக்கு ஏற்பட்டது.

    எனவே ரஜினியை மீண்டும் பட்டை தீட்ட டைரக்டர் பாலச்சந்தர் முடிவு செய்தார். ஏற்கனவே அவர் சொன்னது போல தமிழில் தயாரித்த அவள் ஒரு தொடர்கதை படத்தை தெலுங்கில் தயாரிக்க முடிவு செய்தார்.

    ரஜினியை அழைத்து உனக்கு தெலுங்கு பேச தெரியுமா? என்று கேட்டார். ரஜினிக்கு உண்மையில் தெலுங்கில் சில வார்த்தைகளை தவிர வேறு எதுவுமே தெரியாது. என்றாலும் வந்த வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஏதோ ஒரு தைரியத்துடன் தெலுங்கு தெரியும் என்று சொல்லி விட்டார்.

    உடனே அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஜெய்கணேஷ் நடித்த வேடத்தில் தெலுங்கில் ரஜினியை நடிக்க வைக்க டைரக்டர் பாலச்சந்தர் ஏற்பாடுகள் செய்தார். அதன்படி "அந்துலேனி கதா" என்ற பெயரில் அவள் ஒரு தொடர்கதை படம் தெலுங்கில் எடுக்கப்பட்டது. இந்த படம் தெலுங்கில் மிக பிரமாதமாக ஓடியது. முதல் தெலுங்கு படத்திலேயே ரஜினிக்கு ஆந்திர ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது. டைரக்டர் பாலச்சந்தரின் ஒவ்வொரு முத்திரையும் ரஜினியின் நடிப்பில் மேலும் மேலும் பட்டை தீட்டி மிளிர வைத்தன.

    1976-ம் ஆண்டு தெலுங்கில் "அந்துலேனி கதா", கன்னடத்தில் "கதா சங்கமம்", "பாலு ஜேனு" ஆகிய 3 படங்களில் ரஜினி நடித்து முடித்து இருந்தார். கன்னட படங்களும் அவருக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்து இருந்தன. இதன் தொடர்ச்சியாக ரஜினிக்கு ஏற்கனவே வாக்களித்தபடி டைரக்டர் பாலச்சந்தர் தனது "மூன்று முடிச்சு" படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தில் ரஜினிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வில்லன் வேடம் வழங்கப்பட்டது. கமல்ஹாசன் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் அவரை மூன்று முடிச்சு படத்தில் கவுரவ வேடத்தில் டைரக்டர் பாலச்சந்தர் நடிக்க வைத்திருந்தார்.

    அந்த படத்தில் ரஜினி கதாநாயகன். கதாநாயகியாக ஸ்ரீதேவி அறிமுகம் ஆனார். தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வந்த ஸ்ரீதேவிக்கும் "மூன்று முடிச்சு" படம்தான் முதல் முதலாக கதாநாயகியாக நடித்த படம் ஆகும். படத்தில் கமல்ஹாசனும், ரஜினியும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் ஸ்ரீதேவியை காதலிப்பார்கள். ஆனால் ஸ்ரீதேவிக்கு கமல்ஹாசனைதான் பிடித்து இருந்தது. எனவே அவர் கமல்ஹாசனை காதலித்தார்.

    இதை அறிந்ததும் ரஜினிக்கு கமல்ஹாசன் மீது கோபமும், ஆத்திரமும் வந்தது. கமல் மீது அவர் வெறுப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி மூன்று பேரும் ஒரு படகு பயணம் மேற்கொள்வார்கள். அப்போது கமல்ஹாசன் கால் தடுமாறி படகில் இருந்து தண்ணீருக்குள் விழுந்து விடுவார். நீச்சல் தெரியாததால் கமல் தத்தளிப்பார். அவரை காப்பாற்றும்படி ஸ்ரீதேவி கதறி கெஞ்சுவார். ஆனால் ரஜினி காப்பாற்ற மாட்டார்.

    காதலில் தனக்கு போட்டியாக இருக்கும் கமல்ஹாசன் தண்ணீரில் மூழ்கி சாகட்டும் என்று விட்டு விடுவார். இதனால் ரஜினி மீது ஸ்ரீதேவிக்கு மேலும் கோபம் ஏற்பட்டது. அவரை பழி வாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் ரஜினியின் தந்தையாக நடித்த கல்கத்தா விஸ்வநாதனை திருமணம் செய்து கொள்வார்.

    இதை ரஜினி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கடைசியில் அவர் மனம் திருந்துவார். இதுதான் மூன்று முடிச்சு படத்தின் கதை. இந்த படத்தில் ரஜினியை இரண்டு மாறுபட்ட கோணங்களில் டைரக்டர் பாலச்சந்தர் கையாண்டு இருந்தார். தமிழ் திரையுலக பிரபலங்கள் அனைவரும் இந்த மாறுபட்ட கோணம் நிச்சயமாக தோல்வியில் முடியும் என்றுதான் பாலச்சந்தரிடம் சொன்னார்கள்.

    ஆனால் பாலச்சந்தர் ரஜினியை முழுமையாக நம்பினார். அதற்கு காரணம் ரஜினியிடம் இருந்த வித்தியாசமான ஸ்டைஸ் தான். அந்த ஸ்டைலை மூன்று முடிச்சு படத்தில் டைரக்டர் பாலச்சந்தர் பயன்படுத்தி வெற்றி கண்டார். அதன் மூலம் தமிழகத்தில் ஒரு புதிய கலாச்சாரம் உருவானது.

    அது என்ன கலாச்சாரம் என்பதை நாளை காணலாம்.

    Next Story
    ×